http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 49

இதழ் 49
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாம் ஆண்டை நோக்கி...
வாள் நிறுத்தி வணங்கும் இணையர்
திரும்பிப் பார்க்கிறோம் - 21
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 3
காதல் எதிரிகள் - சில நிகழ்வுகள்
Virtual Tour On Kundrandar Koil - 1
Airavati - Preview of Mahadevan Section
Airavati - Preview of Tamil Section
Airavati - Preview of English Section
அவர் - மூன்றாம் பாகம்
Silpis Corner (Series)
Silpi's Corner-05
திருமணம் = இராமன்?!
இதழ் எண். 49 > ஐராவதி சிறப்புப் பகுதி
Airavati - Preview of Tamil Section
ஆசிரியர் குழு
திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் Felicitation Volume இன் 'தமிழ்க் கட்டுரைகள்' பகுதியில் வெளிவரும் கட்டுரைகளின் முன்னோட்டம்.

கட்டுரை : மறக்க முடியாத ஆசிரியர்
ஆசிரியர் : திருப்பூர் கிருஷ்ணன்


நான் தினமணியில் (அதாவது தினமணியோடு தனி இதழாகவும் பின் இலவச இணைப்பாகவும் வெளிவந்த தினமணிகதிரில்) பணிபுரிந்த நாட்கள் அவை. சுமார் கால் நூற்றாண்டுக் காலம் தினமணியுடன்தான் என் பணிவாழ்வு இணைந்திருந்தது.

என்னையும் உள்ளிட்டு தினமணியில் பணிபுரிந்த அனைவருக்கும் ஏ.என். சிவராமன் தந்தைபோல் விளங்கினார். அவரது அன்பில் திளைத்தபடி நாங்கள் ஈடுபாட்டோடு பணிபுரிந்து வந்தோம். அப்போதே அவர் எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தார். தொண்ணூற்றெட்டு வயது நிறைவாழ்வு வாழ்ந்த மேதை.

தினமணி முழுவதற்குமாகச் சேர்த்து ஏ.என்.எஸ்.தான் ஆசிரியர் என்றாலும் தினமணிகதிருக்கு அடுத்தடுத்து வேறுவேறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதழியலில் சாதனை படைத்த சாவி, அன்பே வடிவான ஆன்மீகவாதி கே.ஆர்.வாசுதேவன், என் ஞானகுருவான தீபம் நா.பார்த்தசாரதி, கணையாழி இதழ் மூலம் தமிழில் தடம் பதித்த கி.கஸ்தூரிரங்கன் எனப் பலர் தினமணிகதிருக்கு ஆசிரியரானார்கள்.

‘தினமணி நாளிதழுக்கு எப்போதும் ஒரே ஆசிரியர்தான். அவர் ஏ.என்.எஸ்.தான்’ என்ற நிலையே இருந்தது. அவருக்கு வயதாகிறது என்பதையும் இன்னோர் ஆசிரியர் தினமணிக்கு வரக்கூடும் என்பதையும் நாங்கள் யாரும் நினைத்தே பார்த்ததில்லை.

திடீரென்று ஒருநாள் அந்தத் தகவல் வந்தது. ஐராவதம் மகாதேவன் தினமணிக்கு ஆசிரியராய் நியமிக்கப்பட்டிருக்கிறாராம். ஐராவதம் அவர்களை அதற்கு முன் நான் பார்த்தது கூட இல்லை. தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் என்ற வகையில் நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். அவ்வளவே. நான் தமிழ் எம்.ஏ படித்தபோது அவர் ஆய்வு செய்த கல்வெட்டுகள் எனக்குப் பாடமாக இருந்தன.

Rest in the Felicitation Volume.




கட்டுரை : ஐராவதம் என்ற சிற்பி
ஆசிரியர் : என்.ராமதுரை


தமிழ்க் கல்வெட்டு ஆராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற நிபுணரான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களை ஒரு சிற்பி என்றும் வருணிக்கலாம். ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நுணுக்கமான ஒன்றைப் படைப்பவரைச் சிற்பி என்று வருணித்தல் தகும். திரு. ஐராவதம் அவர்களிடம் மறைந்து நின்ற சிற்பியை நான் தினமணியில் அவரிடம் பணியாற்றியபோது கண்டேன்.

திரு. ஐராவதம் மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக 27 ஆண்டுகாலம் உயர்ந்த பதவிகளை வகித்தவர். அந்த முறையில் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். சிந்து சமவெளி எழுத்துகள் பற்றி அவர் எழுதிய நூல் உலகப் புகழ்பெற்றது. இது போன்று மேலும் பல ஆராய்ச்சி நூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றைப் பற்றி எல்லாம் விமர்சிக்க எனக்குத் தகுதி இல்லை என்று கூறுவேன். அவர் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியிருந்தாலும் தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திரு. ஐராவதம் அவர்கள் 1987 முதல் 1991 வரை தினமணி நாளேட்டின் ஆசிரியராக இருந்தார். தினமணியில் பணியாற்றி வந்த எனக்கு அப்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

தினமணி ஆசிரியராகப் பதவி ஏற்ற சில மாதங்களில் அவர் தமிழில் அறிவியலை வளர்க்க ஏதாவது செய்ய விரும்பினார். அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் தினமணி நாளிதழ் நீண்ட பாரம்பரியம் கொண்டது. வாரத்தில் ஒருநாள் அறிவியல் கட்டுரை ஒன்று தினமணி நாளேட்டின் ஒரு பகுதியாக வெளிவரும். திரு. ஐராவதம் அவர்கள் இந்த அளவில் நிறுத்திக் கொள்ளாமல் (இலவச இணைப்பாக) அறிவியலுக்கென்றே தனி வார இதழைத் தொடங்க விரும்பினார். நான் ஏற்கனவே அறிவியல் நூல்களை எழுதி அந்த நூல்களுக்குப் பரிசு பெற்றவன் என்பதை அறிந்த அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பி இதழ் தொடங்குவது பற்றிப் பேசினார்.

திரு. ஐராவதம் எந்த ஒரு விஷயமானாலும் நன்கு திட்டமிட்டு, விரிவாக விவாதித்து மிக நுணுக்கமாகக் கவனித்து அப்பணியை மேற்கொள்பவர் என்பதை அப்போது நான் கவனித்தேன். சுடர் இதழின் லே-அவுட் எப்படி இருக்க வேண்டும், அச்சாகிற கட்டுரைகள், அவற்றின் தலைப்புகள் சுடர் இதழில் எந்தவிதமாக அமையவேண்டும், ஒவ்வொரு வரிக்கும் நடுவே எந்த அளவுக்கு இடைவெளி இருக்கவேண்டும் என்பன போன்ற அடிப்படை விஷயங்களில் முதலில் தர அளவுகள் நிர்ணயிக்கப்பட்டன. தினமணியில் அப்போது அச்சுக் கோக்க கம்ப்யூட்டர் முறை வந்துவிட்டது என்றாலும் அச்சுக் கோக்கப்பட்ட எதுவும் மெல்லிய போட்டோ பிலிம் வடிவில் வரும். பிறகு அவற்றைத் தனித்தனியே கத்தரித்து கெட்டியான தாளில் ஒட்டி அதை அச்சிடுவதற்கு அனுப்பவேண்டும்.

Rest in the Felicitation Volume.




கட்டுரை : இதழா...? இயக்கமா...?
ஆசிரியர் : மா.இரா.அரசு


"தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கான களனை அமைப்பதில் சில சிறு பத்திரிகைகள் லாபநோக்கம் கருதாது தம்மை அர்ப்பணித்துப் பணிபுரிந்து வருகின்றன. அவற்றில் திறனாய்வு நோக்கிலான அம்சங்கள் மிகக்குறைவு என்றே சொல்லலாம். எனவே, தமிழ் இலக்கியத்தின் திறனாய்வுத் துறைக்கு ஒரு களனாகத் திகழ்வதையே தமிழ்மணி தன் பிரதான குறிக்கோளாகக் கொண்டு இயங்கும்."

'தமிழ்மணி' என்ற தலைப்பில், 'தமிழால் முடியும்' என்ற நம்பிக்கைத் தொடரோடு 9-ஆகஸ்ட்-1989 தினமணி இதழில் (பக்கம் 6) நெடிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பின் ஒரு பகுதிதான் மேலே தரப்பெற்றுள்ளது.

"1934 ஆம் ஆண்டு என்பது இந்திய விடுதலைப் போரில் ஒரு முக்கியமான ஆண்டு. மத்திய சட்டசபைக்குத் தேர்தல் நடந்த ஆண்டு அது.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குப் பிரசாரம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு சதானந்த் தினமணியை ஆரம்பித்தார்.

(ஏ.என்.சிவராமன், 'சுதந்திரம் கிட்டுவதற்கு அஸ்திவாரமாக அமைந்த காலம்' தினமணி - சுதந்திரப் பொன்விழா மலர், ஆகஸ்டு 1997, ப. 44)


என்னும் திரு. ஏ.என்.சிவராமனின் குறிப்பு, தினமணியின் தொடக்கத்திற்கான நோக்கத்தைத் தௌ¤வுபடுத்தும். 1934இல் அரசியலை முதன்மையாகக் கொண்டு வெளிவரத் தொடங்கிய தினமணி நாளிதழில் 1989இல் வெளிவந்த தமிழ்மணி பற்றிய அறிவிப்பும் அதன் நோக்கமும் தமிழ் ஆர்வலர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தின. அரசியலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தொடங்கிய நாளிதழான தினமணியில் அரை நூற்றாண்டுக்குப்பிறகு வெளிவந்த 'தமிழ்மணி' பற்றிய அறிவிப்பு வாசகர் மனங்களில் ஏற்படுத்திய தாக்கம் அறியவேண்டிய ஒன்றாகும்.

Rest in the Felicitation Volume.




கட்டுரை : இருதளத் திராவிட ஒருகல் தளி
ஆசிரியர் : அர. அகிலா


மாமல்லபுரத்தின் தென்பகுதியில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள பல்லவர் கால ஒருகல் தளிகள் ஐந்தனுள், ‘அருச்சுனரதம்’ என்றழைக்கப்படும் இருதளத் திராவிடத் தளியும் ஒன்று. குடிசை போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் முதல் தளியான கொற்றவைத்தளியும் அதையடுத்து அமைந்திருக்கும் அருச்சுனர் தளியும் ஒரே துணைத்தளத்தைப் பகிர்ந்துகொண்டு எழுந்த இருவேறு கட்டமைப்புகளிலான எழிலார்ந்த ஒருகல் தளிகளாகும். மாமல்லபுரத்தில் காணக் கிடைக்கும் ஒருகல் தளிகள் ஒன்பதனுள், சிற்பங்களால் இழைக்கப்பட்டிருப்பவை இரண்டே. தென்கோடியில் அமைந்த அத்யந்தகாமத்தைச் சிற்பச் சிறப்பில் வெல்லமுடியாமல் போனமைககு அருச்சுனரதத்தின் இருதள அமைப்பும் இரண்டாம் தளச் சிறுமையுமே காரணம் எனலாம்.

வடக்குத் தெற்காகச் சரிந்திருந்த சிறியதொரு குன்றினைப் பயன்படுத்தி ஒரே வரிசையில் அமையுமாறு உருவாக்கிய நான்கு ஒருகல் தளிகளுள், இரண்டாவதாக நிற்கும் அருச்சுனர் தளியின் துணைத்தளத்தை அடைய, தரையிலிருந்து, இருபுறத்தும் பிடிச்சுவர் பெற்ற படிகள் நான்கு உள்ளன. கீழ்ப்படி அரைநிலா வடிவத்தில் அமைய, பிடிச்சுவர்கள் துணைத்தளப் பெருவாஜன அளவில் முடிகின்றன. மூன்றாவது படிக்கும் நான்காவது படிக்கும் இடையே உள்ள உயரமே நான்காவது படிக்கும் துணைத்தள மேற்பரப்பிற்கும் இடையில் காட்டப்பட்டுள்ளது. தென்பிடிச்சுவர் துளைக்கை வடிவத்துடன் அமைய, வடசுவர் சிதைந்துள்ளது.

Rest in the Felicitation Volume.




கட்டுரை : பரமேசுவர மகா வராக விஷ்ணுகிருகம்
ஆசிரியர் : நளினி.மு


மாமல்லபுரத்தின் மேற்கில் வடக்குத் தெற்காக நீண்டு சரிந்திருக்கும் குன்றின் தென்கோடியில் மேற்குப் பார்வையாக வெட்டப்பட்டிருக்கும் பரமேசுவர மகா வராக விஷ்ணு கிருகம் மாமல்லபுரத்தின் சிற்ப அற்புதங்களுள் ஒன்றாகும். தனியார் பொறுப்பில் இருப்பதாலும், பெரும்பாலும் பூட்டப்பட்டு இருப்பதாலும் இங்குப் பார்வையாளர் வரத்து மிகவும் குறைவு. பல்லவர் வரலாற்றிலும் தமிழர் கலை, பண்பாடு இவற்றிலும் ஆர்வம், தௌ¤வு உடையவர்கள் மட்டுமே தேடிவந்து பார்த்துச் செல்லும் இந்தக் குடைவரையின் முன்னால், நாயக்கர் கால மண்டபமொன்றும் 160 ஆறு தூண்கள் தாங்கும் கூரை பெற்ற நடைபாதை ஒன்றும் உள்ளன. இப்பாதையின் முன் சிறிய அளவிலான பலித்தளம் ஒன்றும் தூண் ஒன்றும் உள்ளன.

நாகபந்தம், தாமரைவரி பெற்ற நிலைக்கால்களும் கதவுகளும் பெற்றுள்ள வாயிலை அடுத்து விரியும் நாயக்கர் கால மண்டபம் வரிசைக்கு மூன்று தூண்கள் எனப் பன்னிரண்டு தூண்கள் பெற்றுள்ளது. ஒவ்வொரு தூணும் நாகபந்தம் பெற்ற செவ்வகம், பதினாறு பட்டை பெற்ற இந்திரகாந்த உடல், சிறு சதுரம் என வடிவம் பெற்றுள்ளன. இந்திரகாந்த உடலின் கீழ், மேல் பகுதிகள் கட்டுப் பெற்றுள்ளன. தூண்களின் மேலுள்ள போதிகைகள் பூமொட்டு நாணுதல்களுடன் மதலைகளால் உத்திரம் தாங்க, மேலே கூரை. தூண்களின் செவ்வகங்கள் தாமரைப்பதக்கம், கொடிக்கருக்கு, பலவகையான சிற்பங்கள் பெற்றுள்ளன. மண்டபத்தின் வடபுறத்தே நான்கு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுவர் எழுப்பித் திருமுன்னாக்கியுள்ளனர். உள்ளே அஞ்சலியில் அனுமார் நிற்கிறார்.

Rest in the Felicitation Volume.




கட்டுரை : ஒற்றைக்கல் தளிகள் ஒன்பது - ஓர் ஒப்பாய்வு
ஆசிரியர் : இரா.கலைக்கோவன்


குடைவரைகளும் கற்றளிகளும் பல மரபுப் பேரரசர் காலப் படைப்புகளாய்த் தமிழ்நாடெங்கும் பரவித் திகழ்ந்தபோதும் ஒருகல் தளிகள் பல்லவ, பாண்டியச் சிந்தனைகளின் நிழலில் மட்டுமே உருவாகி இன்றளவும் அவர்தம் ஆற்றல், கலைத்திறன், கற்பனை வளம், உளிச் செம்மை, உருவாக்க மேலாண்மை இவற்றிற்கு உலகம் போற்றும் உன்னதச் சான்றுகளாக வரலாற்றுப் பண் பாடி, நம் பெருமை போற்றி நிற்கின்றன. பாண்டியர் பங்களிப்பாய்க் கழுகுமலை வெட்டுவான்கோயில் ஒன்று மட்டுமே இருந்தபோதும் அதன் சிற்பச் செழுமை வானளாவியது. இன்றுவரை அந்தக் கலைக்கோயிலின் அனைத்துப் பரிமாணங்களையும் வெளிச்சப்படுத்தும் வகையில் கட்டுரைகளோ, நூல்களோ வரவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.

மாமல்லபுரத்து மணல்வெளியைப் புகழ் மணக்கச் செய்திருக்கும் பல்லவக் கைகளின் பேராற்றல் வெளிப்பாடுகளாய் விளைந்திருக்கும் ஒருகல் தளிகள் ஒன்பதுள் ஒன்றுகூட நூறு விழுக்காடு முழுமையுறவில்லை. ஒன்பதும் உருவாக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் கைவிடப்பட்டவை. என்றாலும், அவை வெளிப்படுத்தும் தமிழரின் கட்டுமானத் திறன், கலைநோக்கு, பண்பாட்டுப் பரவல் இவற்றை ஒப்பீட்டின் வழி அறியநேரும்போது, உண்மைகளை உணர்ந்துகொள்ளவும் தௌ¤ந்து கொள்ளவும் முழுமை தேவையில்லை என்றே தோன்றுகிறது.

மாமல்லபுரத்தின் தெற்கில் கடற்கரைக்கு அருகில் ஐந்து தளிகளும் மேற்கில் ஒரு தளியும் தென்மேற்கில் மூன்று தளிகளும் என இவ்வொருகல் தளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடற்கரைக்கு அருகிலுள்ள தளிகள் பாண்டவர் - திரௌபதி பெயர்களை ஏற்க, மேற்குத் தளி உள்ளிருக்கும் கணேசரின் பெயரைக் கொண்டுள்ளது. தென்மேற்குத் தளிகளுள் இரட்டைத் தளிகளாய் அருகருகே அமைந்திருப்பவை பக்கத்திலுள்ள பிடாரிக் கோயிலின் நெருக்கத்தால் வடபிடாரி, கீழ்ப்பிடாரித் தளிகளாயின.

Rest in the Felicitation Volume.




கட்டுரை : மன்னார்கோயில் - அய்யனார்குளம் குன்றுப் பள்ளிகள்
ஆசிரியர் : வேதாசலம்.வெ


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் அம்பாசமுத்திரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அய்யனார்குளம் என்ற சிற்றூர் உள்ளது. இவ்வூரின் அருகில் உள்ள இராசாப்பாறைக் குன்றிலும் அதன் அருகிலுள்ள நிலாப்பாறை என்றழைக்கப்படும் வட்டப்பாறையிலும் அமைந்துள்ள இயற்கையான குகைத்தளங்களில் இருந்து தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை, பாண்டிய நாட்டின் தென்பகுதியில் மறுகால்தலைக் கல்வெட்டைத் தொடர்ந்து கண்டறியப்பட்ட தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் ஆகும்.

இராசாப்பாறைக் குகைப்பள்ளி

இராசாப்பாறையில், வடமேற்குப் பார்வையிலுள்ள இயற்கையான குகைத்தளத்தின் உட்புறம் இரண்டு சிறிய புடவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று, ஒருவர் தங்குவதற்கு ஏற்றமுறையில் மிகச் சிறியதாக உள்ளது. அதன் அருகிலுள்ள மற்றொரு புடவு சற்றுப் பெரியதாகும். அதன் தரைப் பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு சிறிய கற்படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் சமணமுனிவர்கள் உறையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பள்ளி அமைந்துள்ள குகைத்தளத்தின் முகப்பில் மேலிருந்து வழியும் மழைநீர் நுழையாதவாறு நீண்ட புருவம் (காடி) வெட்டப்பட்டுக் கூரை சீரமைக்கப்பட்டுள்ளது. கூரையில் காணப்படும் ஐந்திற்கும் மேற்பட்ட துளைகள் பந்தல்கால்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டவையாகலாம். பாண்டிய நாட்டில் மதுரையைச் சுற்றியுள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் உள்ள குகைத்தளங்களின் வாயில்களில் இத்தகு பந்தல்கால் நடுகுழிகள் காணப்படுகின்றன. அய்யனார்குளம் குகைத்தளத்தில் பந்தல்காலின் மேற்பகுதியையும் நிறுத்துமாறு கூரையில் செருகு குழிகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்குகைத்தளத்திலிருந்து பொதியமலையின் எழில்மிக்க தோற்றத்தைக் காணலாம்.

Rest in the Felicitation Volume.




கட்டுரை : பல்லவர் காசுகளில் கோயில்கள்
ஆசிரியர் : ஆறுமுக சீதாராமன்


முற்காலப் பல்லவ மன்னர்கள் வெளியிட்ட கோயில்கள் உள்ள கலப்பு உலோகத்தினாலான பலவகைக் காசுகள் (வகை - 1-10) கும்பகோணம், பட்டீஸ்வரத்தில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இந்த வகைக் காசுகள் வேறு எங்கும் கிடைக்கவில்லை. பட்டீஸ்வரத்தில் குடிசை வடிவக் கோயில்கள் அதிகமாக இருந்துள்ளன என்பதற்கு இங்குக் கிடைத்துள்ள காசுகளே முக்கியச் சான்றுகளாக விளங்குகின்றன. கோயில் தரைத்தள வடிவம் உள்ள காசு (வகை- 9) இப்பொழுதுதான் முதன் முதலாகக் கிடைத்துள்ளது.

வகை - 1

காசின் முன்பக்கத்தில் இடதுபக்கம், நிற்கும் காளை உள்ளது. பின்பக்கத்தில், அலங்கா¤க்கப்பட்ட வட்டத்திற்குள் இரண்டு தூண்கள் உள்ள குடிசை வடிவக் கோயில் உள்ளது.

எடை : 0.8 கிராம்

வகை - 2

காசின் முன்பக்கத்தில் இடதுபக்கம், நிற்கும் காளை உள்ளது. பின்பக்கத்தில், அலங்கரிக்கப்பட்ட வட்டத்திற்குள் மூன்று தூண்கள் உள்ள குடிசை வடிவக் கோயில் உள்ளது.

எடை : 0.9 கிராம்

Rest in the Felicitation Volume.




this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.