http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 49

இதழ் 49
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாம் ஆண்டை நோக்கி...
வாள் நிறுத்தி வணங்கும் இணையர்
திரும்பிப் பார்க்கிறோம் - 21
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 3
காதல் எதிரிகள் - சில நிகழ்வுகள்
Virtual Tour On Kundrandar Koil - 1
Airavati - Preview of Mahadevan Section
Airavati - Preview of Tamil Section
Airavati - Preview of English Section
அவர் - மூன்றாம் பாகம்
Silpis Corner (Series)
Silpi's Corner-05
திருமணம் = இராமன்?!
இதழ் எண். 49 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 21
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

அக்டோபர் 1987ல் முதலாண்டு முதுகலைத் தாள்கள் இரண்டினை எழுதினேன். 63 மதிப்பெண்களைப் பெற்றுத் தந்த இலக்கியக் கொள்கைகள்தான் என்னை மிகவும் சிந்திக்கவைத்து. அமரர் இராம. சண்முகத்துடன் நிகழ்த்திய உரையாடல்கள் இலக்கியக் கொள்கைகள் பற்றிய பல மேனாட்டு அறிஞர்களின் நோக்குகளை எனக்கு அறிமுகப்படுத்தின. அவர் தந்த அரிய நூல்கள் இலக்கியங்களைப் பற்றி ஏற்கனவே எனக்குள் இருந்த மதிப்பீடுகளைப் பன்மடங்காக உயர்த்தின. இலக்கியக் கொள்கைகள் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை ஆராயவேண்டும் என்ற தணியாத ஆவல் ஏற்பட்டது. சிலப்பதிகாரம் நான் நேசித்துப் படித்த இலக்கியம். சங்க இலக்கியங்களை அடுத்து என்னைக் கலங்க வைத்த அந்த ஒப்பற்ற நூலை நான் இன்றளவும் முழுமையாக அநுபவித்துப் படிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இளங்கோவடிகள் எனும் இணையற்ற கலையறிஞரை இந்த நாடு சரியான தளங்களில் விளங்கிக் கொள்ளவேயில்லை என்பது ஆழ்ந்த துன்பம் தரும் உண்மையாகும். கம்பரைப் போற்றத் தெரிந்த தமிழறிஞர்களுக்கு இளங்கோ புரியாமல் போய்விட்டாரோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்திரா பார்த்தசாரதி போன்ற ஓரிரு அறிஞர்களே சிலப்பதிகாரத்தை நுட்பமாக அணுகியிருப்பதாக நினைக்கிறேன்.

இடைக்கால இலக்கியம் தாளில் 58 மதிப்பெண்கள்தான் கிடைத்தன. இத்தாளால் பல சிற்றிலக்கியங்களின் அறிமுகம் கிடைத்தது. தேர்வு நன்றாகவே எழுதியிருந்தேன். இருந்தபோதும் மதிப்பீடு செய்தவர் 58 போதுமென்று நினைத்துவிட்டார் போலும். என்னுடைய தேர்வு அநுபவங்கள் தேர்வாளர்கள் மீது எனக்கிருந்த மதிப்பை முற்றிலுமாய்ச் சிதைத்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். என்னுடைய உழைப்பும் எழுத்தும் எனக்குத் தெரியும். இலக்கிய இளவலும் முதுகலைத் தமிழும் தனிப்பட்ட முறையிலும் அஞ்சல் வழிக் கல்வியிலும் பயின்றவைதான் என்றாலும் இரண்டின் பாடங்களுக்காகவும் நான் தேடிப் படித்த நூல்கள் எண்ணிக்கையில் அடங்கா. முனைவர் இரா. சண்முகம், முனைவர் மா. ரா. அரசு எனப் பல அறிஞர்களுடனும் கலந்துரையாடித் தெளிவு பெற்றே தேர்வுகளை அணுகினேன். எனினும், எவ்வளவு உழைத்து எழுதியிருந்தபோதும் மதிப்பெண் குறைந்த அளவிலேயே வந்தது. இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்த, "ஆய்வுக் கட்டுரைகளும் படைப்பிலக்கியமும்" தாளில் எனக்கு 56 மதிப்பெண்தான் தரப்பட்டது. அந்தத் தாளை எழுதி முடித்த மே 1988 ல் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை நான் பதிப்பித்திருந்தேன். தேசிய அளவிலான கருத்தரங்குகளில் அமர்வுத் தலைவராக இருந்திருக்கிறேன். முப்பத்து மூன்று சிறுகதைகளும் ஐந்து நாடகங்களும் எண்ணற்ற கவிதைகளும் படைத்திருந்தேன். இருந்தபோதும், என் "ஆய்வுக் கட்டுரைகளும் படைப்பிலக்கியமும்" தாளைத் திருத்திய ஆசிரியப் பெருமகனாருக்கு எனக்கு 56க்கு மேல் தர உள்ளம் வரவில்லை.

தாள் திருத்தும் ஆசிரியர்களின் மனப்போக்கு அதிசயமானது என்பதை உணர்ந்தபிறகு தேர்வுகளுக்காக உழைப்பதைப் பெருமளவு குறைத்துக் கொண்டேன். அறிவிற்காகப் படித்தேன். ஆனால், தேர்வெழுதியபோது திருத்துவோரைக் கருத்தில் இருத்தி, அவர்கள் படிநிலையிலேயே எழுதினேன். ஆழ, அகல உழைத்து அனுபவித்து எழுதிய தாள்களுக்குக் கிடைத்ததைவிட இந்தப் பிதற்றல்களுக்கு என் தேர்வாளர்களாய் விளங்கிய பேராசிரியப் பெருந்தகைகள் மதிப்பெண்களை அள்ளித் தந்து மகிழ்வித்தனர். எனக்குக் கண்ணதாசனின் பாடல்தான் நினைவுக்கு வந்தது. "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை. காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி!"

1987 அமுதசுரபி தீபாவளி மலரில், "கரணக் காவியங்கள்" என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியானது. அதே ஆண்டு மாலை முரசு தீபாவளி மலரில், "தாய்க்குக் கோயில் கட்டிய மாமன்னர் இராஜேந்திரர்" எனும் கட்டுரை வெளியிடப்பட்டது. 1988 என்னுடைய வாழ்க்கையில் பல புதிய வாய்ப்புகளை அமைத்துத் தந்தது. சாகித்ய அகாதெமியைப் பற்றி நான் அறிந்திருந்தபோதும், அந்நிறுவனத்துடன் யாதொரு தொடர்பும் எனக்கு இருந்ததில்லை. 1988 மேத் திங்களில் அந்நிறுவனத்தின் செயலராக இருந்த பேராசிரியர் இந்திரஜித்திடமிருந்து எனக்கு ஒரு மடல் வந்திருந்தது. 1988ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதிற்குத் தேர்வு செய்யத் தகுதியுடைய ஐந்து தமிழ் நூல்களைப் பரிந்துரைக்குமாறு அக்கடிதத்தில் திரு. இந்திரஜித் கேட்டிருந்தார். 1980கள் வரை எனக்கிருந்த படைப்பிலக்கியத் தொடர்பு, 1990க்குப் பிறகு பெரிதும் குறைந்துவிட்டதென்றுதான் கூறவேண்டும். நல்லவேளையாக மடல் வந்த 1988ல் நான் நிறையவே படித்திருந்தேன். மடல் வந்த தகவல் தெரிவிக்காமல் நண்பர்கள் சந்திரன், இராஜேந்திரன், பேராசிரியர்கள் இராம. சண்முகம், மா. ரா. அரசு, க. ப. அறவாணன், அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் இவர்களுடன் 1988ல் வெளிவந்த படைப்பிலக்கியங்கள் பற்றி விரிவாக உரையாடினேன்.

பிஷப் ஈபர் கல்லூரி இலக்கியத்துறையில் பேராசிரியராக இருந்த திரு. க. பூரணச்சந்திரன் என் இளவல் வழி எனக்கு அறிமுகமான இனிய நண்பர். தமிழிலும் ஆங்கிலத்திலும் தெளிவான அறிவுபெற்றவர். நிறையப் படிப்பவர். நல்ல சிந்தனையாளர். நான், சந்திரன், பூரணச்சந்திரன், இராஜேந்திரன் நால்வரும் இணைந்து நாளும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த காலம் அது. நாளும் இலக்கியங்களையும் நாட்டு நடப்புகளையும் அவர்கள் மூவரும் நாராய்க் கிழிப்பார்கள். அந்த ஆவேசப் பேச்சுக்களைச் செவிமடுத்தவாறே நான் நடப்பேன். "நடைப் பயிற்சியின் போது பேசக்கூடாது" என்பது என் கொள்கை. எவ்வளவு தூண்டுலாக அவர்கள் பேசினாலும், நான் ஓரிரு சொற்றொடர்களுடன் அமைதியாவேன். பூரணச்சந்திரன் எளிதில் சினவயப்படுவார். ஆனால், அந்தச் சினம் வழி வெளிப்படும் கருத்துக்கள் மிக மிக வளமானவையாகவே இருக்கும். அதனால் எங்களில் யாருமே அந்தச் சினத்தை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.

வாய்விட்டுச் சிரிப்பதிலும் அவருக்கு நிகரான இன்னொருவர் நான் கண்டதில்லை. பயங்கரமாகச் சிரிப்பார். அவருடைய நட்பாலும், சினத்தாலும், நடையுரைகளாலும் நான் பெரும் பயன் பெற்றேன். அதுவரை கேள்விப்பட்டிராத பல இலக்கியவாதிகளை, படைப்பிலக்கிய அறிஞர்களை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். இராம. சண்முகத்திற்கு இணையான அறிவு படைத்தவராக விளங்கிய பூரணச்சந்திரன் அவரைப் போலவே நேரியவரும்கூட. இன்றளவும் என்னிடம் அன்பு பாராட்டிப் பழகும் பூரணச்சந்திரனே திரு. இந்திரஜித்துக்கு நான் சரியான நூல்களின் பெயர்களைத் தரப் பெரிதும் உதவினார். எதற்கு என்று தெரியாமலேயே அவர் செய்த அந்த உதவிக்கு இன்றளவும் நான் கடமைப்பட்டுள்ளேன். அவர் எனக்களித்த நூல்களை நன்கு படித்து, என் உள்ளத்திலும் அவை தகுதியானவையே என்ற எண்ணம் விளைந்த பிறகே திரு. இந்திரஜித்துக்கு என் பரிந்துரையை அனுப்பிவைத்தேன். சாகித்ய அகாதெமியில் எனக்கு ஏற்பட்ட அந்த முதல் தொடர்பு பயனுறவே தொடர்ந்தது.

சென்னையிலிருந்து வெளியான Sun Flash 5. 3. 1988 அன்று, "Legends in Stone" எனும் என் ஆங்கிலக் கட்டுரையைக் கேட்டுப் பெற்று வெளியிட்டது. ஏப்ரல் இரண்டாம் நாள் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் "New Light On Hero-Stones" எனும் என் கட்டுரையை வெளியிட்டிருந்தது. நளினி, வளர்மதி இவர்தம் ஆய்விற்காகப் பலமுறை கீழையூர்ச் சென்ற நிலையில், அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருக வளாகத்திலிருந்த கரணச் சிற்பங்களைப் பொருளாக்கி நான் எழுதியிருந்த, "Karana Sculptures of Kilaiyur" எனும் கட்டுரை 1. 7. 1988 இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியானது. பழனித் திருக்கோயில் பற்றிய மேலோட்டமான கட்டுரையைத் தினமணி நாளிதழ் "ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்ற தலைப்பில் 27. 6. 1988ல் வெளியிட்டு மகிழ்ந்தது.

6. 5. 1988 அன்று பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத் தேர்வாணையரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அப்பல்கலையின் தமிழ்த்துறையில் முதுநிறைஞர் பட்டப்படிப்பிற்கான பாடங்களுள் "தென்கிழக்கு ஆசியாவிற்குத் தமிழ்ப் பண்பாட்டின் பங்களிப்பு" என்ற தலைப்பில் அமைந்திருந்த பாடத்திற்குக் கேள்வித்தாள் தயாரித்து அனுப்பமுடியுமா என்று தேர்வாணையர் அம்மடலில் கேட்டிருந்தார். உடன் ஒப்புக்கொண்டு மறுமொழி தந்தேன். பாடத்திட்டமும் மாதிரி வினாத்தாளும் அனுப்பியிருந்தார்கள். என் வாழ்நாளில் ஒரு பல்கலைக்கழகத்திற்காக நான் தயாரித்த முதல் வினாத்தாள் அதுதான். அவர்கள் அனுப்பியிருந்த பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் தேடிப்படித்து, வினாத்தாள் தயாரித்திருந்தேன். அந்த வாய்ப்பின் வழி தென்கிழக்கு ஆசியத் தமிழ்ப் பண்பாடு பற்றிப் பலவும் அறிய வாய்ப்பானது. போரோபுதூர், பெரம்பனான் முதலிய கோயில் தொகுப்புகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளமுடிந்தது. 1998 தாய்லாந்து சென்றிருந்த அநுபவமும் உதவியது.

கேள்வித்தாள் ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தேர்வும் நடந்து முடிந்தது. 1. 7. 1988ல் தேர்வாணையரிடமிருந்து வந்த மடல், தேர்வுத்தாள்களைத் திருத்தும் பணிக்குத் துணைவேந்தர் என்னைத் தேர்வு செய்திருப்பதாக அறிவித்து, என் ஒப்புதலைக் கேட்டிருந்தது. மகிழ்வுடன் அந்தப் பொறுப்பை ஏற்றேன். தேர்வுத்தாள்கள் வந்தன. பதினெட்டு மாணவர்கள் எழுதியிருந்தனர். ஒவ்வொரு தாளையும் பொறுமையாகவும் விரிவாகவும் படித்தேன். எட்டு மாணவர்களே தேர்ச்சி பெறுமளவு எழுதியிருந்தார்கள். ஒருவர்கூடச் சிறப்பாக எழுதவில்லை.

முதல் இராஜேந்திரரின் கடற்படை தென்கிழக்கு ஆசியாவில் விளைவித்த தாக்கங்கள் தொடர்பான என் கேள்விக்குச் சில மாணவர்கள் எழுதியிருந்த விடை இப்போது நினைத்தாலும் குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைக்கும். நான்கு பக்க அளவிற்கு விடையளிக்க வேண்டிய கட்டுரைக் கேள்வி அது. ஒரு மாணவர் "இராஜேந்திரன்", "கடற்படை" எனும் இரண்டு சொற்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆங்காங்கே தென்கிழக்கு ஆசியாவைப் பயன்படுத்திக் கொண்டு நான்கு பக்கங்களை நிரப்பியிருந்தார்.

"சோழப் பெருவேந்தரான முதலாம் இராஜேந்திரர் மற்றொரு சோழப் பெருவேந்தரான முதலாம் இராஜராஜரின் மகன். முதலாம் இராஜேந்திரன் தந்தையான முதலாம் இராஜராஜரைப் போலவே முதலாம் இராஜேந்திரரும் மிகப் பெரிய வீரர். சோழநாடு அவர் ஆட்சியில் இருந்ததால் அவர் சோழப் பேரரசர் என்று அறியப்பட்டார். சோழப் பேரரசை ஆண்ட முதலாம் இராஜேந்திரர் அவர் தந்தை முதலாம் இராஜராஜரைப் போலவே பெரியதொரு கடற்படை வைத்திருந்தார். சோழநாட்டைச் சூழக் கடல் இருந்ததால் அவர்களிடம் கடற்படை இருந்தது அவசியமானது. அந்தப் பெரும்படையை அவர்கள் கடலின் மேல் நிறுத்தியிருந்தார்கள். கடற்படை என்பதால் அதில் கப்பல்கள், படகுகள், பாய்மரங்கள் இருந்தன. அந்தக் கலங்களில் வீரர்கள் ஏறிக் கடலின் மீது சென்று, பக்கத்து நாடுகளில் படையெடுத்தனர்" என்பது போலெல்லாம் அந்த மாணவர் எழுதியிருந்த நிலையை இப்போது நினைத்தாலும் வருத்தம் வருகிறது. முதுநிறைஞர் தகுதியே இதுதான் என்றால் முதுகலை, இளங்கலைத் தகுதிகளை நினைத்துப் பார்க்க வேண்டும். மிக முயன்று எட்டு மாணவர்களுக்குத் தேர்ச்சி தந்திருந்தேன். ஆனால், மற்றொரு தேர்வாளரான துறைப் பேராசிரியர் மதிப்பீட்டில் அநேகமாக அனைத்து மாணவர்களும் தேறியிருந்தமையால், என் தேர்வு முடிவுகளைத் தேர்வாணையம் ஏற்கவில்லை. இரண்டு மதிப்பீடுகளுக்கிடையில் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கருதியதுடன் மிகக் குறைந்த அளவில் தேர்ச்சியிருந்தால், அடுத்த ஆண்டு முதுநிறைஞர் படிப்பிற்கு மாணவர் வருகை குறைந்துவிடும் எனக் கருதிய தேர்வாணையம் மூன்றாம் மதிப்பீட்டிற்கு ஏற்பாடு செய்தது. அதில் ஓரிருவர் தவிர பிற அனைவரும் தேறினர். "மாணவர்கள் என்ன எழுதியிருந்தாலும், அது சரியோ, தவறோ, பெரும்பாலானவர்களைத் தேறவைத்துவிட வேண்டும்" என்ற உயரிய கல்விக் கொள்கை அன்று தொட்டு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவதைப் பல பேராசிரியர்கள் வழி நான் அறிவேன். அதனாலேயே ஓரளவிற்கு நன்கு படித்துத் திருத்தும் பேராசிரியர்கள் கூட மேற்போக்காகப் பார்த்துத் தாள்களை மதிப்பிடுவதுடன் நின்று விடுகிறார்கள்.

1988 ஜூன் 22ம் நாளன்று பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து எனக்கு ஒரு மடல் வந்தது. அதில் 1988ல் இருந்து பாண்டிச்சேரிப் பல்கலையின் சார்பில் நாடகம், அரங்கக் கலைகள் இவற்றிற்காகச் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் பள்ளியொன்று தொடங்கியிருப்பதாகவும் அப்பள்ளியின் சார்பில் ஓராண்டு முதுகலைப் பட்டயக் கல்வி செயற்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பட்டயக் கல்விக்கான பாடத்திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவில் என்னையும் ஓர் உறுப்பினராக நியமித்திருப்பதாகவும் 20. 7. 1988 அன்று சென்னையிலுள்ள புதிய உட்லண்டஸ் ஓட்டலில் கூடவிருக்கும் குழுவின் முதற் கூட்டத்திற்கு வருகை தரவேண்டும் எனவும் பதிவாளர் எழுதியிருந்தார். இம்மடலை நான் பெற்றபோது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன் இருந்தார். தமிழ்த்துறையின் இணைவாகத் தொடங்கப்பட்ட இப்பள்ளி பின்னாளில் தனித்தியங்கியது. முதுநிறைஞர் பாடத்திற்கான தேர்வாளராகவும் இக்குழுவின் ஓர் உறுப்பினராகவும் நான் அழைக்கப்பட்டமைக்குப் பேராசிரியர் க. ப. அறவாணன்தான் காரணர் என்பதை நான் அறிந்திருந்தேன். என் ஆய்வுகளின் மீது நம்பிக்கையும் என் பணியிலும் உழைப்பிலும் மதிப்பும் கொண்டிருந்த அப்பெருந்தகை தாம் பாண்டிச்சேரிப் பல்கலையில் பணியாற்றிய காலம் முழுவதும் ஏதாவது ஒரு வகையில் என்னைப் பயன்படுத்திக் கொள்வதில் மகிழ்ந்தார்.

பாடத்திட்டக் குழுக் கூட்டம் என்பதும் அதில் பங்கேற்றல் என்பதும் எனக்கு மிகவும் புதிய அனுபவங்கள். என்றாலும் துணிந்து சென்றேன். அக்கூட்டத்தில்தான் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி கூத்துப்பட்டறை திரு. ந. முத்துசாமி, தமிழ்ப் பல்கலையின் நாடகத்துறைப் பேராசிரியராக இருந்த பேராசிரியர் முனைவர் இராமாநுஜம் இவர்களைச் சந்தித்துப் பழக முடிந்தது. மூவருள் இந்திரா பார்த்தசாரதி எனக்கு மிகவும் நெருக்கமானார். தமிழ்ப் பேராசிரியராகத் தில்லிப் பல்கலையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த அவரது ஆங்கில அறிவும் இலக்கிய நோக்கும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. பழகிக் கற்றுக்கொள்ள வேண்டியன அவரிடம் குவிந்திருப்பதாக உணர்ந்தேன்.

அந்தக் கூட்டத்திற்குத் துணைவேந்தர் தலைமை வகித்துத் தொடக்கவுரை ஆற்றிச் சென்றார். பிறகு நாள் முழுவதும் நாங்கள் பாடத்திட்டத்தை அமைப்பதில் ச்ிந்தனை செலுத்தினோம். இந்திய மருத்துவ மன்றத்தில் சிராப்பள்ளிக் கிளையில் ஆண்டுதோறும் வரலாற்று நாடகங்களை நடத்திவந்த அனுபவம் எனக்குக் கை கொடுத்தது. பள்ளி, கல்லூரி வாழ்க்கையிலும் நிறைய நாடகங்களில் நடித்தும் சில நாடகங்களை உருவாக்கி நடத்தியும் இருந்தமையால் "அரங்கக் கலை" எனக்குப் புதியதாக இல்லை. கரணங்களுக்காக நான் பயின்றிருந்த ஆடற்கலை நூல்கள், குறிப்பாக நாட்டிய சாத்திரம் என்னை அக்குழுவினரின் விருப்பத்திற்குரிய உறுப்பினனாகவே மாற்றியது. அக்குழுவில் வேறு யாரும் கரணங்களில் என்னளவிற்கு அநுபவம் பெற்றிருக்கவில்லை.

1. 2. 1988 அன்று பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடமிருந்து வந்த மடல் என்னை மூன்றாண்டுகள் நாடகப்பள்ளியின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பொறுப்பேற்கச் செய்தது.

அந்த மூன்றாண்டு காலத்தில் இந்திரா பார்த்தசாரதி, இராமாநுஜம், முத்துசாமி இவர்களுடன் நன்கு பழக முடிந்தது. நாடக அறிஞர் திரு. இராமாநுஜம் நெடுங்காலம் என்னுடன் தொடர்பிலிருந்தார். வடமொழி நாடகங்களிலும் பயிற்சி பெற்றிருந்த அவருடைய தொடர்பு வடமொழி இலக்கியங்களைப் பற்றிய ஆழமான அறிமுகத்தை எனக்குப் பெற்றுத் தந்தது. பாடத்திட்டக் குழுக் கூட்டங்களுக்காகப் பாண்டிச்சேரி சென்ற காலங்களில் அவரும் நானும் ஒரே அறையில் தங்க நேர்ந்தமை எங்களுக்குள் நட்பை வளர்த்தது. அவரிடம் நிறைய விவாதிப்பேன். இந்திரா பார்த்தசாரதி அளவிற்கு விரிவாகப் பேசாவிட்டாலும் என் கேள்விகளுக்கு நான் மகிழும் அளவில் அவர் மறுமொழிகள் தந்ததாகவே நினைவு. சிலப்பதிகாரத்தின் நாடகத் தன்மை குறித்து நானும் அவரும் நிறையப் பேசியிருக்கிறோம். பாடத்திட்டக்குழுப் பொறுப்பு முடிந்த பிறகும்கூட அவருடன் தொடர்பிலிருந்தேன். நவீன நாடகங்கள் பற்றிய என் பார்வையை அவர் இரசிப்பார். திரு. க. பூரணச்சந்திரன் வழி வீதி நாடகங்களின் அறிமுகம் கிடைத்திருந்தமையால் இராமாநுஜத்துடன் பேச எனக்குச் செய்திகள் இருந்தன.

திரு. ந. முத்துசாமியுடன் நெருக்கமாய் பழகும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. என்றாலும் ஒரு கண் மருத்துவர் இந்த அளவிற்கு அரங்கக் கலையில் ஆர்வம் கொண்டிருப்பதை அவர் மகிழ்ந்து வரவேற்றார். கண் அசைவுகள் எந்த அளவிற்குக் கூத்திற்கு முக்கியமானவை என்பதைப் பற்றிப்பேசும் போதெல்லாம் என்னைச் சுட்டிப் பேசி மகிழ்வார். அரங்கக் கலைப் பாடத்திட்டக் குழுவில் கண் மருத்துவன் ஒருவன் உறுப்பினனாக இருப்பது சாலப் பொருத்தமே என்று அவர் கருதியதை வெளிப்படக் கூறிப் பாடத்திட்டக்குழு அமைந்தவர்களைப் பாராட்டியிருக்கிறார்.

பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி சிறந்த அறிஞர். அவரது துணைவியாரும் அருமையானவர். அன்பானவர். இருவரும் என் இல்லம் வந்து தங்கியுள்ளனர். பேராசிரியருடன் பழகிய அநுபவங்கள் மறக்கமுடியாதவை. ஆழப் படித்திருந்தவர் என்பதால், அவருடன் உரையாடுவது பெரும் பயனளித்தது. என் கேள்விகளை அவர் விரும்புவார். தம்மைச் சூழக் கேட்பவர்களே இல்லை என்று பலமுறை அவர் வருந்தியுள்ளார். அது உண்மைதான். கேள்விகள் இல்லையென்றால் அறிவு வளர்ச்சிக்கு இடமில்லை. தேக்கம் நேர்ந்துவிடும். வைணவ இலக்கியங்களிலும் கோயிற்கலைகளிலும் அவருக்கிருந்த ஈடுபாடு எங்களுக்குள் நட்பை வளர்த்தது. கோயிற் கலைகள் பற்றிய என்னுடைய விளக்கங்களை இரசிப்பார். நாடகப்பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் தங்கியிருந்தார். அப்போதும் அவருடன் தொடர்பிருந்தது. நான் பின்னாளில் தொடங்கிய "வரலாறு" ஆய்விதழின் உறுப்பினர்களுள் அவரும் ஒருவராக இருந்தார்.

அந்த மூன்றாண்டுகள் பாண்டிச்சேரிப் பயணங்கள் பல நிகழ்ந்தன. அவற்றுள் முதற் பயணம் அங்கிருந்த கோயில்களையெல்லாம் பார்க்கும் வாய்ப்பமைத்துத் தந்தது. மதகடிப்பட்டு, திருவாண்டார் கோயில், திரிபுவனை, வில்லியனூர், பாகூர் எனப் பல கோயில்களைப் பார்த்தேன். மதகடிப்பட்டுக் கோயில் முதலாம் இராஜராஜர் காலத்தது. திரிபுவனைப் பெருமாள் கோயில் கல்விக்கூடமாகத் திகழ்ந்த திருக்கோயில். பாகூர் விமானத்தில் காணக்கிடைக்கும் ஆடற்சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாகும். வில்லியனூர் கோயிலில் பால்வினைச் சிற்பங்கள் மிக்குள்ளன.

இந்தக் கோயில்களை எல்லாம் விரிவான ஆய்விற்கு உட்படுத்தப் பின்னாளில் வாய்ப்புகள் அமைந்தன. நான், நளினி, அகிலா, கல்பகம் நால்வரும் இக்கோயில்களை 1991ல் பார்வையிட்டபோது பல அரிய தகவல்களைக் கண்டறிந்தோம். பாகூர் ஆடற்சிற்பங்களும் வகைப்படுத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. கல்பகம் பாகூர்ச் சிற்பங்களோடுதாமே ஐக்கியமாகி, அந்தக் கோலங்களை எல்லாம் தம் ஆடல் திறனால் நிகழ்த்திக் காட்டி மகிழ்வித்ததும் நினைவிலுள்ளது.

1988 முழுவதும் பழுவூர் ஆய்வுகளில் சென்றது. பழுவேட்டரையர்களின் மரபுவழியைச் சரியான தளங்களில் தொகுக்க வேண்டியிருந்தமையால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். பேராசிரியர்கள் முனைவர் திருமதி வெ. பாலாம்பாள், திரு. எம். எஸ். கோவிந்தசாமி, திரு. இல. தியாகராஜன், திரு நீலகண்டசாஸ்திரி இவர்கள் தந்திருந்த மரபுவழிகளையெல்லாம் கல்வெட்டுச் சான்றுகளுடன் ஒப்பிட்டபோது பொருந்திவரவில்லை. புதிதாக அறியப்பட்ட பழுவேட்டரையர் குமரன் மதுராந்தகனை எங்கு, எப்படி இணைப்பது என்பதிலும் குழப்பம் இருந்தது. செப்பேடுகள் ஓரளவிற்கு உதவினாலும், அனைத்துக் கல்வெட்டுகளையும் படித்தறிந்தால்தான் மரபுவழி அமைப்பு எளிதாகும் போல் தோன்றியது.

மேலப்பழுவூர் சுந்தரேசுவரர் கோயில் பல கேள்விகளை முன் வைத்தது. விமானத்தின் தாங்குதளத்திலும் சுற்றுச் சுவர்களிலும் நாங்கள் கண்டறிந்த புதிய கல்வெட்டுகள் அவற்றுள் சில கேள்விகளுக்கு விடையளித்தன. கண்டன் மறவனின் திருத்தோற்றமுடையார் கோயிலே பின்னாளில் சுந்தரேசுவரர் கோயிலாக உருமாற்றம் பெற்றதை முதற் குலோத்துங்கர் கல்வெட்டுகளால் அறியமுடிந்தது. கீழையூர்க் கல்வெட்டுகள் சுட்டிய பகைவிடை ஈசுவரத்தைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியபோது, மேலப்பழுவூர் விமானமே அது என்பதை அறிந்து பேருவகையுற்றோம். ஆய்வில், புதிர்கள் எழுவதும், முனைப்பான தேடலில் அப்புதிர்கள் அவிழ்வதும் மிகமிகச் சுவையான நிகழ்வுகள் ஆகும். ஒரு துப்பறிவாளனைப் போல் ஓர் ஆய்வாளன் செயற்படவேண்டும். சற்றும் சார்பின்றித் தேடும்போது உண்மைகள் வரிசையில் நின்று வரவேற்றுச் சரணாகும். அந்த இன்பமான அநுபவத்தை என் ஆய்வுகளில் பலமுறை அநுபவித்துக் களித்திருக்கிறேன். பழுவூர் அத்தகு அநுபவங்ளைப் பெருக்கியது.




வடவாயில் ஸ்ரீகோயில்



தென்வாயில் ஸ்ரீகோயில் யானையை அழித்தமூர்த்தி சிற்றுருவச் சிற்பம்



மேலப்பழுவூர்ச் சாமுண்டி



தென்வாயில் ஸ்ரீகோயில் இலிங்க சிவன்


நளினிக்கும் வளர்மதிக்கும் இவை புதியவை என்பதால் அவர்கள் மகிழ்விற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. கிடைத்திருக்கும் உண்மைகளின்அடிப்படையில் பழுவேட்டரையர் மரபுவழியை உரியவாறு திருத்தியமைத்தபோது, அனைத்தும் சரியாக வந்தது. "புதிய பார்வையில் பழுவூர் உண்மைகள்" என்ற தலைப்பில் அமைந்த மரபுவழி பேசும் கட்டுரையை முதலில் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர் அருமை நண்பர் மஜீதுதான். அந்தக் கட்டுரையை அவர் வாசித்தபோது அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். மஜீதிற்கு உணர்வுகளை ஒளிக்கத் தெரியாது. ஒரு குழந்தையைப் போல அநுபவிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தி மகிழும் நட்புள்ளம் அவருக்கு. பல இடங்களில் மெலிதான புன்னகையும், சில இடங்களில் வாய்விட்டு எழுந்த சிரிப்பும் அவர் கட்டுரையை இரசித்துப் படித்தமையை உணர்த்தின. கட்டுரையை முடித்தபோது முகமெல்லாம் மலரப் பாராட்டி மகிழ்ந்தார். பின்னாளில் அக்கட்டுரை எழுத்தாளர்கள் திரு. பாலகுமாரன், திரு. பிரபஞ்சன் இவர்கள் அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது.

செந்தமிழ்ச் செல்வியில் மார்ச்சு 1989 முதல் மார்ச்சு 1990 வரையில் அந்தக் கட்டுரை ஓராண்டிற்குத் தொடர்ந்து வெளியானது. கட்டுரையைச் செல்வியில் படித்த சஷ்டி திங்களிதழின் ஆசிரியர் அதை எங்கள் அனுமதியுடன் தம் இதழிலும் தொடர்ந்து வெளியிட்டார். அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் தம்முடைய தீபாவளி மலரில் அக்கட்டுரையைப் பதிப்பித்து எங்களைச் சிறப்பித்தார். மிக உழைத்துச் செதுக்கிய என் கட்டுரைகளுள் அதுவும் ஒன்றாகும். பின்னாளில் "பழுவூர்ப் புதையல்கள்" நூல் வெளிட்டபோது அக்கட்டுரைதான் நூலின் முதல் இயலாக அமைந்தது.

1988 ஜூலை இரண்டாம் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், "Rare Sculptures of Ananda Tandava" எனும் கட்டுரை வெளியானது. 1988ல் அறிவியல் சுடர் என்னும் இணைப்பிதழைத் தினமணி வெளியிடத் தொடங்கியது. அறிஞர் ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியரான பிறகு நேர்ந்த இந்தப் புதிய விளைவு தமிழ்நாட்டையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அறிவியல் தமிழில் ஆர்வம் கொண்ட என் போன்ற பலரை வளப்படுத்திய பெருமை சுடருக்கு உண்டு. திரு.மகாதேவனால் தொடங்கப்பட்ட தமிழ்மணியும் அப்படித்தான். மொழியின் பல்வேறு பரிமாணங்களுக்கு அவ்விணைப்பு வளர்ச்சியூட்டியது. சுடரின் "சொல்லாக்க மேடை", "அறிவியில் மன்றம்", "கேள்வி-பதில்" என அனைத்திலும் என் எழுத்துக்கள் இடம்பெற்றன. "குளிப்பதற்கு நேரமில்லை" போன்ற என்னுடைய அறிவியல் கட்டுரைகளும் சுடரில் வெளியாயின. சிராப்பள்ளி வானொலிக்கென்று எழுதப்பட்ட கட்டுரைகளைப் புத்தாக்கம் செய்து தொடர்ந்து சுருடக்கு அனுப்பினேன். உழைப்பையும் எழுத்தையும் மதிக்கும் ஆசிரியராக மகாதேவன் இருந்தமையால் என்னுடைய அனைத்துப் படைப்புகளுமே சுடரிலும் கதிரிலும் தொடர்ந்து வெளியாயின.

தினமணியில் என்னை ஊக்கி வளர்த்தவர்களுள் திரு. கி. கஸ்தூரிரங்கனும் ஒருவர். அவரால்தான் எனக்குத் திரு. ஐராவதம் மகாதேவன் அறிமுகமானார். ஒரு முறை சென்னையிலுள்ள தினமணி அலுவலகம் சென்றிருந்தபோது, "புதிய ஆசிரியர் வந்திருக்கிறார் பார்க்கிறீர்களா?" என்று கேட்ட அப்பெருந்தகைதான், மகாதேவனுடன் தொலைப்பேசி அவருடைய அறைக்கு என்னை அனுப்பிவைத்தார். திரு.மகாதேவனுடன் அன்று எனக்கு நேர்ந்த அறிமுகம் என்னைத் தொடர்ந்து வளப்படுத்திவருகிறது. என் எழுத்துக்களை நேசிக்கும் அப்பெருந்தகை அவருக்கும் தெரியாமலேயே என்னை வளர்த்து வந்திருக்கிறார். எனக்கு அவரை நிரம்பப் பிடிக்கும். ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சியடையும் அவருடைய உள்ளம் என்னைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. அவருடைய ஒழுங்குணர்வும் அர்ப்பணிப்பும் ஒவ்வோர் ஆய்வாளருக்கும் இருந்தே தீரவேண்டிய இரண்டு தலையாய பண்புகள். நான் கொடுத்து வைத்தவன். அருமையான மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை இறைவன் எனக்குத் தந்திருக்கிறான். அப்படிநான் விழைந்து பழகி வருபவர்களுள் ஐராவதம் மகாதேவனும் ஒருவர்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.