http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 51
இதழ் 51 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, 1988ம் ஆண்டு மேத்திங்களில் நிகழ்ந்த முதுகலைத் தேர்வில் சங்க இலக்கியம், ஆய்வுக்கட்டுரைகளும் படைப்பிலக்கியமும், சங்ககாலம் எனும் மூன்று தாள்களை எழுதித் தேறினேன். சங்க இலக்கியம் 65 மதிப்பெண்ணும் சங்க காலம் 69 மதிப்பெண்ணும் பெற்றுத்தந்தன. சங்க இலக்கியப் படிப்பின்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. வாழ்க்கையில் முதன் முறையாகச் சங்க இலக்கியப் பதிவுகளின் உண்மையான மதிப்பீடுகளை உணர்ந்து மகிழ்ந்தேன். ஒவ்வோர் இலக்கியத்தையும் ஆழ்ந்து படித்தேன். நிறைய குறிப்புகள் எடுத்தேன். அப்படி எடுத்த வரலாற்றுக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து ஆராய்ந்தபோது அவற்றுள் பெரும்பான்மையன, புதிய கண்டறிதல்களாக இருப்பதை உணரமுடிந்தது. பின்னாளில் நாங்கள் தொடங்கிய 'வரலாறு' ஆய்விதழில் பல்வேறு தலைப்புகளின் கீழ் அக்குறிப்புகளைப் பதிப்பித்தோம். அரசி மேரி கல்லூரியிலும் பிறகு காயிதேமில்லத் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் மா. ரா. சிவஅரசி, பேராசிரியர் முனைவர் க. ப. அறவாணன் எனப் பல தமிழறிஞர்கள் இப்பதிவுகளை வியந்து பாராட்டியுள்ளனர். 'கள்ளூர்த் தண்டனை' என்ற தலைப்பில் வரலாறு இரண்டாம் தொகுதியில் நாங்கள் வெளியிட்டிருந்த சங்க இலக்கியச் செய்தியைத் தாம் அதுவரை அறிந்ததில்லை என்று மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார் பேராசிரியர் சிவஅரசி. 1988ல் படித்த இச்சங்க இலக்கியத் தொகுதிகளை 1991ல் மீண்டும் ஒருமுறை படிக்க வாய்ப்பமைந்தபோதுதான் அவை மணிமேகலை பெற்ற அமுதசுரபி ஒத்தவை என்பதை அறியமுடிந்தது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அவற்றிலிருந்து புதிய புதிய செய்திகளைப் பெறமுடிவது அவ்விலக்கியங்களின் செழுமையையும் வளமையையும் நன்கு புலப்படுத்துகின்றன. படிப்பாரின் தேடலுக்கும் தெளிவிற்கும் ஏற்ப வற்றாது தரவுகளை வழங்கும் வள்ளல்கள் அவை. அவற்றை முற்ற ஆராய்ந்து தமிழர் வரலாறு தொகுக்கவேண்டும் என்பது என் நீண்டநாள் அவா. காலம் கனியுமா என்று பார்ப்போம். அக்டோபர் 1988ல் ஒப்பிலக்கியத் தாளை எழுதி முடித்தேன். தொல்காப்பியம் எழுத்து, சொல் எனும் இரண்டு தாள்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. நேரமின்மை காரணமாகப் படிக்க முடியவில்லை. 1989 மேத்திங்கள் தேர்வில் எப்படியும் இரண்டு தாள்களையும் எழுதி முடித்துவிடவேண்டுமெனக் கருதினேன். சிராப்பள்ளி தஞ்சாவூர்ச் சாலையில் சிராப்பள்ளியிலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநெடுங்களத்தில் பாடல் பெற்ற கோயில் உள்ளது. நானும் வாழ்வரசியும் என் பள்ளிப்பருவத் தோழர் திரு. மெ. சீனிவாசனும் அக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். சீனிவாசனை மூன்றாம் படிவத்திலிருந்து அறிவேன். எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். உழைப்பாற்றல் நிரம்பியவர். பின்னாளில் மின்னாளராக வளர்ந்து பெரம்பூர்த் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலையில் பணியாற்றியவர். பள்ளிப்பருவத்தில் என் உற்ற தோழராக விளங்கிய அவர் உடல்நலம் குன்றி வீட்டோடு இருக்கும் இன்றைய நிலையிலும் உற்ற தோழரே. நம்பிக்கைக்குரிய அவரது துணை பல களப்பயணங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அவரும் திரு. ஆறுமுகமும் இனிய நண்பர்கள். ஆறுமுகமும் சீனிவாசனும் இருந்துவிட்டால் என் களப் பயணங்கள் சிறக்க அமைந்துவிடும். நெடுங்களம் முற்சோழர் காலக் கோயில். நாங்கள் முதன் முதல் அங்குச் சென்றபோது கோயில் மனித வரத்தற்ற நிலையில் தனிமையிலும் இருளிலும் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தது. முதன்மைக் கோபுரம் முதல் நிலை மட்டும் எஞ்சிய நிலையில் சிதைந்திருந்தது. அக்கோபுர வாயிலில் இருந்த காவலர் சிற்பங்களே கோயில் சோழர் காலத்தது என்பதை உணர்த்திக் கொண்டிருந்தன. நாங்கள் மாலை மங்கும் நேரத்தில்தான் அங்குச் செல்ல வாய்த்தது. அதனால் அவசரம் அவசரமாகக் கோயிலை வலம் வந்தோம். முன் மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் இருந்த ஒரு சிற்பம் என் கவனத்தைக் கவர்ந்தது. நானும் சீனிவாசனும் உடன் அங்குச் சென்று விளக்கொளியில் அதை ஆராய்ந்தபோதுதான் அது சிற்பவடிவம் பெற்ற உரல் என்பதை அறியமுடிந்தது. நாயக்கர் காலக் கலைவடிப்புகளுடன் அமைந்திருந்த அந்த உரலைப் படமெடுத்து அதன் சிறப்பை விவரித்துக் கட்டுரையும் எழுதி நண்பர் கோபாலனிடம் தர, அவர் அதை 13. 2. 1988ம் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிட்டார். நெடுங்களம் விரிவான ஆய்வுக்குரிய கோயிலென்பதைப் பறவைப் பார்வையிலேயே உணரமுடிந்தது. அங்கிருக்கும் எழுவர் அன்னையர் சிற்பங்கள் சிற்பப் புதையல்களாகும். நான் இதுநாள்வரை பார்த்திருக்கும் எழுவர் அன்னையர் சிற்பங்களுள் பழுவூர்க் கோயில்களுக்கு அடுத்து நெடுங்களத்துத் திருமேனிகளைத்தான் கலையெழில் ததும்பம் படைப்புகளாகக் குறிப்பிடமுடியும். சாமுண்டியின் முக எழிலும் அவர் செவிகளை அலங்கரிக்கும் பிணக்குண்டலங்களும் அற்புதமானவை. இங்குள்ள தென்திசைக்கடவுள் சிற்பத்தின் அமர்நிலையும் சற்று மாறுபட்ட அமைப்புடையதாகும். பின்னாளில் சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறையைச் சேர்ந்த முத்துலட்சுமி எனும் முதுகலை இரண்டாமாண்டு மாணவி, பேராசிரியர் மு. நளினியின் வழிகாட்டலில் இக்கோயிலை முழுமையாக ஆய்வுசெய்து பல அரிய கல்வெட்டுகளைக் கண்டறிந்தார். கல்லணைக்கருகில் உள்ள வேங்கூரைச் சேர்ந்த அம்மாணவியின் உழைப்பு மதிக்கத்தக்கது மட்டுமன்று மறக்கமுடியாததும்கூட. 1988 ஆக்டோபர்த் திங்களில் சிராப்பள்ளி தென்னூர் நெடுஞ்சாலையில் சாய்க்கடைப் பணி நடந்துகொண்டிருந்தது. சாய்க்கடை விரிவுபடுத்தும் பணியில் சாலையைத் தோண்டியபோது ஒரு சிற்பம் கிடைத்திருப்பதாகவும் அதைப் பார்த்து ஆராய்ந்து தகவல் கூறுமாறும் தினமணி அலுவலகத்திலிருந்து கேட்டிருந்தார்கள். உடன் தென்னூர் சென்றேன். என்னுடன் என் உதவியாளர் திரு. மருதநாயகம் வந்தார். தோண்டியபோது கிடைத்த சிற்பத்தை மண் சரிவில் சாய்த்து வைத்திருந்தார்கள். அழகான அமர்நிலைச் சிம்மமாக அது இருந்தது. பல்லவர் காலச் செழுமை இல்லையாயினும் காலத்தால் முற்பட்ட சிற்பமாகவே அது பொலிந்தது. அதைப்பற்றிய தரவுகளுடன் சிம்மச் சிற்பங்களின் வரலாறு பற்றிய குறிப்பும் எழுதி தினமணிக்குத் தந்தேன். 27. 10. 1988ம் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையின் சார்பில் மரபுரிமை வார விழாக் கொண்டாடுமாறு தலைமை அலுவலகத்திலிருந்து திரு. மஜீதிற்கு மடல் வந்திருந்தது. அவர் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். இருவரும் அமர்ந்து ஒரு வாரம் விழாக் கொண்டாடத் திட்டமிட்டோம். சிராப்பள்ளிக் கல்லூரி, பள்ளி மாணவர்களை இணைத்து நாளும் ஒரு திருக்கோயிலைத் தூய்மை செய்யலாமென முடிவு செய்தோம். நண்பர் இராஜேந்திரனும் பேராசிரியர் கீதாவும் துணையிருப்பதாக உறுதியளித்தனர். அந்த ஏழு நாட்களும் பணிசெய்து ஏழு திருக்கோயில்களைத் தூய்மை செய்தோம். அவற்றுள் ஒன்றுதான் கொற்றமங்கலம். இலால்குடிக்கு அருகிலுள்ள சிறிய ஊர்களுள் கொற்றமங்கலமும் ஒன்று. அங்கிருக்கும் சிவன்கோயில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் பாதுகாப்பில் இருந்தது. திரு. மஜீதின் வேண்டுகோளை ஏற்று அந்த ஊருக்குச் சென்றோம். அங்குச் சென்ற பிறகுதான் அது கோயிலன்று, சிதைந்த கோயில் ஒன்றின் அடித்தளம் மட்டுமே என்பதை அறியமுடிந்தது. காடு போல் மாறிப்போயிருந்த அந்த இடத்தை மாணவர்கள் அரும்பாடுபட்டு உழைத்து நன்னிலமாக மாற்றினர். நான்கு மணி நேரப் பணிக்குப் பிறகே அங்கிருந்த சிவன்கோயில் அடித்தளத்தை எங்களால் வெளிக்கொணரமுடிந்தது. பணியின்போது மணல்மேடுகளிலிருந்து சண்டேசுவரர் சிற்பமும் சிதைந்துபோன அம்மன் சிற்பமும் கிடைத்தன. எங்கள் பணியில் ஈடுபாடு கொண்டு உடனிருந்து உழைத்த உள்ளூர் அன்பர் ஒருவர், அதே ஊரில் சற்றுத் தொலைவில் இடிந்த நிலையில் ஒரு கோயில் இருப்பதாகத் தகவல் தந்தார். நான், நளினி, அகிலா, மஜீது நால்வரும் அவருடன் சென்றோம். திரு. மஜீது தாம் ஏற்கனவே அக்கோயிலைப் பார்த்திருப்பதாகவும் அதையும் தொல்லியல்துறையின் பாதுகாப்பில் கொணர முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் கூறினார். ஏறத்தாழ அரைக் கிலோமீட்டர் தொலைவு நடந்தபோது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் காடு போல் செடிகளும் கொடிகளும் பின்னிப் பிணைந்திருந்த ஒரு கட்டுமானம் தென்பட்டது. புதர்கள் மண்டிக்கிடந்த அந்த இடத்தை நெருங்க முடியவில்லை. கொற்றமங்கலத்து மக்கள் அந்தப் பகுதியைத்தான் ஊர்க் கழிப்பிடமாகக் கொண்டிருந்தனர். உள்ளூர்க்காரர் கம்பரை நினைவூட்டியவாறே இட்ட அடி எடுத்த அடி இரண்டையும் மிகுந்த எச்சரிக்கையோடு மண் பார்த்து ஊன்றி முன் நடக்க, மூக்கைப் பிடித்துக்கொண்டு நாங்களும் ஒருவர் பின் ஒருவராகப் பின் தொடர்ந்தோம். ஒரு கோயில் இருக்கிறது என்ற எண்ணமே இல்லாமல் அந்த இடத்தைக் கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த ஊர்மக்களைப் பற்றி அந்த ஊள்ளூர்க்காரர் கூறிய வசவுகளை இங்கு எழுதமுடியாது. நல்லவேளையாகக் கோயிலைச் சுற்றிப் பல இடங்களில் முள் புதர் மண்டியிருந்ததால் அங்கு மக்கள் ஒதுங்கவில்லை. அதனால், நாங்கள் கோயிலைச் சுற்றிப் பார்க்க முடிந்தது. உள்ளூர்க்காரர் தாம் தயாராய்க் கொண்டு வந்திருந்த அரிவாளால் புதர்களைச் செதுக்கி வழியமைத்துத் தந்தார். கோயிலை நெருங்கியதும் என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்வழிந்தது. கல்கி தம் பொன்னியின் செல்வனில் கோடியக்கரைக் குழகரைப் பற்றி எழுதியிருக்கும் உணர்ச்சிகரமான வரிகள்தான் நினைவில் நிழலாடின. கோயில் வாயிற்படியில் காலை வைத்ததுமே எங்கள் கண்களில் பட்டது உத்தமசோழரின் கல்வெட்டுதான். நளினியும் அகிலாவும் கல்வெட்டைப் படிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நானும் மஜீதும் இடிந்து சரிந்திருந்த முன்மண்டபத்திற்குள் நுழைந்தோம். ஒருகொடிவளைவுக்குள் சிறைப்பட்டிருந்த சிற்றுருவச் சிற்பங்கள் வரவேற்றன. அதில் ஒன்று ஒருபெண் ஆடுமாறு அமைந்த குடக்கூத்துச் சிற்பம். சற்றுத் தள்ளிச் சுவரில் இருந்த மற்றொரு சிற்பத்தொகுதி காளியின் நாடகமாய்ச் சிரித்தது. முற்சோழர் காலத்தனவான அந்தச் சிற்பங்களைப் படமெடுத்துக் கொண்டேன். அதுநாள்வரை நாடகத்தைச் சுட்டும் சிற்பத்தொகுதிகளை நான் பார்த்ததில்லை. அதுதான் முதல் காட்சியாக அமைந்தது. பின்னாளில் அதே போன்றதொரு சிற்பத்தொகுதியைப் பொன்செய் நல்துணை ஈசுவரம், திருச்சின்னம்பூண்டிச் சிவன் கோயில் இவற்றில் பார்க்கமுடிந்தது. கொற்றமங்கலம் பற்றிய விரிவான தகவல்களை நாளிதழ்களுக்குத் தந்தேன். 24. 2. 1989 அன்று மாலைமுரசு இதழில் வெளியாகியிருந்த அதே செய்தியைத் தினமணி 2. 3. 1989 அன்று வெளியிட்டது. அந்தக் கோயிலைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். உள்ளூர்க்காரர்களில் செல்வாக்கு மிக்கவர்களைச் சந்தித்து அந்த இடத்தைச் சுற்றி வேலியமைத்துக் காப்பாற்றுமாறு வேண்டினோம். திரு. மஜீது உதவியுடன் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறைக்கு அக்கோயிலைப் பாதுகாக்கப்பட்ட இடமாகக் கொள்ளுமாறு வேண்டுகோள் கடிதம் எழுதினோம். மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து அவரிடமும் இது பற்றி விளக்கினோம். அவர் தம்முடைய உதவியாளரை அழைத்து உடன் செயற்படுமாறு கூறினார். ஏறத்தாழ ஒரு மாதம் இதற்காக அலைந்தோம். இருந்தபோதும், ஊர்மக்களின் முறையான ஒத்துழைப்புக் கிடைக்காமையால் முன்னேற்றமே இல்லாமல் இருந்தது. நாங்கள் சென்றபோதெல்லாம் நன்றாகப் பேசி ஒத்துழைப்பதாக வாக்குத் தந்த பொதுமக்கள், அக்கோயிலைச் சுற்றியிருந்த நிலஉரிமை காரணமாகப் பல குழுக்களாகப் பிளவுபட்டிருந்தததால், எங்கள் எண்ணம் ஈடேறாமலேயே போய்விட்டது. தொடர்ந்து பல கோயில்களுக்குச் செல்லவேண்டியிருந்தமையாலும் மருத்துவமனைப் பணிகளாலும் ஆய்வுப் பணிகளாலும் ஒன்றிரண்டு மாதங்களில் என் முயற்சி குறைந்து போயிற்று. இயல்பாகவே இது போன்ற விஷயங்களில் தொல்லியல்துறை முனைந்து பணிசெய்வதில்லை. என்னுடைய முயற்சி தொய்வுற்றதால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமும் ஆர்வமிழந்தது. தொடர்ந்து முயற்சித்தால் தவிர, அரசு வழி ஏதும் சாதிக்கமுடியாது என்பது எனக்குத் தெரியும். என்றாலும், சூழல்கள் கொற்றமங்கலம் விஷ்ணு கோயிலைக் காப்பாற்ற முடியாதபடி எங்களைக் கட்டிப்போட்டன. முயற்சி எடுத்தும் காப்பாற்ற முடியாமல் போன கோயில்களுள் கொற்றமங்கலம் விஷ்ணு கோயில் தலையாயது. இந்த உறுத்தல் பல ஆண்டுகள் எனக்குள் இருந்து வாட்டியபோதும் ஒன்றும் செய்யமுடியாமல் போனமை துன்பமானதே. இரண்டு செப்பேடுகளை ஆராயும் வாய்ப்பு அடுத்தடுத்துக் கிடைத்தது. 1987 ஜுன் மாதம் எட்டரைக்கு அருகிலுள்ள போச்சம்பட்டியைச் சேர்ந்த கருவன் என்னும் பெயருடைய ஒருவர் ஒரு செப்பேட்டைக் கொணர்ந்து படித்துத் தருமாறு வேண்டினார். ஆயர் குலத்துச் செப்பேடாக விளங்கிய அதில் இரண்டு ஏடுகள் இருந்தன. 22 செ. மீ. நீளமும் 9. 5 செ. மீ. அகலமும் உடைய அவ்விரண்டு ஏடுகளும் வலப்புறத்தே துளையிடப்பட்டிருந்தன. இரண்டனுள் எது முதல், எது இரண்டாவது என்பதை அறிய வாய்ப்பாக துளையின் அருகே தமிழ் எண்கள் தரப்பட்டிருந்தன. இரண்டு ஏடுகளுமே இருபுறத்தும் எழுதப்பட்டிருந்தன. இரண்டாவது ஏட்டின் பின்புறத்தே செய்தி முடிந்து எஞ்சியிருந்த கீழ்ப்பகுதியில் மூன்று வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. ஒன்று கயிறு. மற்றொன்று ஆடு, மாடுகளுக்கான பட்டி வாசல். மூன்றாவது குடம். 1895ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் செப்பேடு கொண்டிருந்தது. விக்கிரம பாண்டிய தேவகுமாரனான செவந்தியப்ப சோழ இராசாவைய்யன் ஆட்சிக் காலத்தில் செப்பேடு வெட்டப்பட்டிருந்தது. திருவேங்கடக்கோன் என்பவரின் கால்நடைகளைக் கள்ளர்கள் திருடிச் சென்றமையால் அவற்றை மீட்கும் பொருட்டு திருவேங்கடக்கோன் தம் மனைவி நாச்சியாரைச் சொக்கம்பலம் மகன் கூத்தப்பெருமாளிடம் அடைக்கலமாய் விட்டுச் சென்றார். பல நாட்கள் கழித்துத் திரும்பி வந்த கோன், கூத்தப் பெருமாளை அடைந்து மனைவியைக் கேட்க, அவள் காணாமல் போன செய்தி கிடைக்கிறது. கூத்தப்பெருமாள் தம்மிடம் அடைக்கலமாகத் தரப்பட்ட பெண்ணைத் தேடித் திருப்பித் தருவது தம் கடமை எனக் கருதி, தம் இருப்பிடத்தில் சின்னக் கூத்தன், சாத்தன் என்பாரை இருக்கச் சொல்லித் தவசி வேடம் பூண்டு நாச்சியாரைத் தேடிச் சென்றார். பல இடங்களில் தேடிக் கடைசியில் கொங்கு நாட்டுத் திருமுக்கூடலில் நாச்சியாரைத் தண்ணீர்த் துறை ஒன்றில் கூத்தப்பெருமாள் சந்திக்க, அவரைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார் நாச்சியார். தண்டல் சேவகம் செய்யும் பெத்தண்ண நாயக்கன் சொக்குப்பொடி போட்டுத் தம்மை மயக்கி அழைத்துவந்துவிட்டதாக நாச்சியார் கூற, கூத்தப்பெருமாள் பதினைந்து நாட்கள் அங்குத் தங்கி, விவரங்களை அறிந்து, உண்மை தெளிந்து நாச்சியாரையும் பெத்தண்ண நாயக்கனையும் கொன்று அவர்தம் கைகளை வெட்டியெடுத்துக் கொண்டு திருச்சிராப்பள்ளி வருகிறார். சிராப்பள்ளிச் சாவடியில் பல வகுப்புகளைச் சேர்ந்த பெரியவர்கள் கூடியிருந்து பேசும் காலத்தே அங்கு வந்த கூத்தப்பெருமாள் தாம் வெட்டிக் கொண்டுவந்திருந்த கைகளையும் பெத்தண்ண நாயக்கனின் ஆயுதத்தையும் சபை நடுவே போட்டு விவரம் சொல்ல, அவரது செயலைப் பாராட்டிய சாவடிப் பெரியவர்கள் அவருக்கு முப்பது பொன், முன்னூறு கூலத் தவசம், முப்பது கிடா கொடுத்து மரியாதை செய்தார்கள். இது கண்ட யாதவப் பெருமக்கள் அரசனான சோழராசாவைய்யனிடம் தங்கள் பெண்ணுக்கு அவமானம் நேர்ந்ததென்று முறையிட, அரசன் விசாரித்து கூத்தப்பெருமாளுக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தார். சாவடியாரும் மற்றவரும் கூத்தப்பெருமாளுக்கு, 'ஆயப்பாடி' என்று பட்டம் கொடுத்ததுடன் குதிரை, குடை கொடுத்து, கடுக்கன், சரப்பளி அணிவித்து யானைமீதேற்றி நகரை வலம் வரச் செய்து அரசனின் பாதங்களை வணங்கச் செய்தனர். யாதவர்கள் கூடிக் கூத்தப்பெருமாளுக்காகத் தரப்பட்ட நிலத்தில் தீர்வை நிர்ணயிக்கப்படாத நிலத்திற்கு ஒரு பசுங்கன்றும் குடாப்புக்கு ஓர் ஆட்டுக்குட்டியும் ஒரு குடம் பாலும் பெரிய விறகுக்கட்டு ஒன்றும் நல்ல காரியங்களுக்கு ஐந்து பணமும் தீயகாரியங்களுக்கு இரண்டு பணமும் பெற்றுக் கொள்ளவும் வருடத்துக்குச் சிற்றூருக்கு ஐந்து பணம் பேரூருக்குப் பத்துப் பணம் என வரி வசூலித்துக்கொள்ளவும் உரிமை தந்து உத்தரவிட்டனர். இவ்வுரிமையைச் சூரியனும் சந்திரனும் உள்ளவரை கூத்தப்பெருமாளின் வழித்தோன்றல்கள் அனுபவித்துக் கொள்ளலாம். இந்த உத்தரவுக்குச் சான்றாளர்களாகச் சிவந்தியப்பப்பிள்ளை, சொக்கநாதபிள்ளை, அம்மையப்பப்பிள்ளை, சூடாமணி செட்டியார், தவத்துறைநாத செட்டியார், செவந்தி சேர்வைக்காரன், கண்டியதேவன், கருங்கண்டியதேவன், நாட்டரையன், சொக்கம்பலக்காரன், கோபாலசெட்டியார், பெத்து செட்டியார், மூர்த்தி அடப்பனார், தாண்டவ அடப்பனார் ஆகியோர் அமைந்தனர். கொடைக்குத் தீங்கு செய்பவர்கள் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தைப் பெறுவர் என்று கூறும் செப்பேடு தாயுமானவர் அறத்தைக் காப்பாற்ற வேண்டும் எனும் வேண்டுகோளை வைத்து முடிகிறது. இச்செப்பேடு பற்றிய தகவல் விரிவான செய்திகளுடன் 1987ஜுன் 29ம் நாள் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இடம்பெற்றது. அதே செய்தியைத் தினமணி ஏடு 1987 ஜூலை இரண்டாம் நாள் இதழில் வெளியிட்டிருந்தது. சிராப்பள்ளித் தோகைமலைச் சாலையில் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இராச்சாண்டார்திருமலை. இங்குள்ள சிறிய குன்றின் மேல் காணப்படும் விரையாச்சிலைநாதர் கோயிலை அதன் அறங்காவலர் மருத்துவர் பாலகிருஷ்ணன் வேண்டுகோளை ஏற்று ஆராயச் சென்றிருந்தபோதுதான் அங்குள்ள கல்வெட்டுகள் படியெடுக்கப்படாமல் விடப்பட்டிருந்தமையை அறியமுடிந்தது. அவற்றைப் படித்துப் படியெடுத்ததுடன் மைசூரிலிருந்த கல்வெட்டு நிறுவனத்திற்கும் தகவல் தந்தோம். முனைவர் மு. து. சம்பத் வந்து அக்கல்வெட்டுகளைப் படியெடுத்துச் சென்றார். அச்சமயம் அவ்வூரிலிருந்த செப்பேடு ஒன்றையும் அறியமுடிந்தது. 22 செ. மீ. நீளமும் 18 செ. மீ. அகலமும் உடைய இச்செப்பேட்டின் இரண்டு பக்கங்களிலும் செய்தி வெட்டப்பட்டிருந்தது. முதல் பக்கத்தில் 46 வரிகளும் இரண்டாம் பக்கத்தில் 29 வரிகளும் காணப்பட்டன. தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள இச்செப்பேட்டில் பல இடங்களில் கூட்டெழுத்துக்கள் உள்ளன. சில குறியீடுகளும் எண்களும் இடையிடையே காணப்படுகின்றன. பிழைகள் மலிந்துள்ள இச்செப்பேடு மகாமண்டலேசுவரன் என்று தொடங்கி மன்னருக்குப் பல பாராட்டுரைகளை வழங்கி அரசர் பெயரை ஸ்ரீகரிகால சோழ உக்கிர வீரபாண்டியராசன் என அறிவிக்கிறது. பிரபவ ஆண்டு ஆவணி மாதம் ஏழாம் நாள் வெட்டப்பட்டுள்ள இச்செப்பேடு, இராஜகம்பீர வளநாட்டுக் குன்னாநிறைந்த நல்லூரைச் சேர்ந்த கார்காத்த வேளாளப் பெருமக்களான ஏழு பட்டையக்காரரும் இராயமானியத்துறை என்பவரும் சிற்றரசர் உக்கிரவீரபாண்டியராசரும் கூடியிருந்து இராச்சாண்டார் திருமலைக் கோயில் இறைவனான விரையாச்சிலைநாதர் திருமலை சமுத்திர ஈசுவரருக்கும் அம்மன் பெரிய நாயகிக்கும் நிலக்கொடையாக இருபது மா நிலம் வழங்கியதைத் தெரிவிக்கிறது. குன்னாநிறைந்த நல்லூரைச் செப்பேடு கோனாடு என்றும் வடசேரி என்றும் அழைக்கிறது. வடசேரி இராச்சாண்டார் திருமலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலங்கள் உள்ள இடங்களும்அவற்றின் எல்லைகளும் செப்பேட்டில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. செப்பேட்டுச் செய்தி இராச்சாண்டார் திருமலைக் கோயிலிலும் நரசிங்கப் பெருமாள் கோயிலிலும் வரகனேரியிலுள்ள செவிட்டு மாரியம்மன் கோயிலிலும் கல்வெட்டாக வெட்டப்பட்டிருப்பதாகச் செப்பேட்டில் குறிப்புள்ளது. செப்பேட்டை எழுதியவராக நாட்டுக் கணக்கு மூவேந்திர வேளானான திருப்பூர் அழகிய பெரியவன் அறிமுகமாகிறார். செப்பேடு முடியுமிடத்தில் விரையாச்சிலை நாதர், பெரிய நாயகி துணை என்ற காப்புவரி காணப்படுகிறது. செப்பேடு பற்றிய விரிவான செய்தியை 12. 11. 1988ல் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவு செய்திருந்தது. சமயபுரத்திற்கு அருகிலிருந்த வேங்கடத்தான் துறையூரில் பாழடைந்த கோயில் ஒன்று இருப்பதாக ஈரோடு வாசவி கல்லூரி நூலகர் திரு. சி. மூக்கரெட்டி தெரிவித்தார். அவர் தந்த தகவலைத் திரு. மஜீதிடம் பகிர்ந்துகொண்டேன். 1989 மார்ச்சு 12ம் நாள் அந்தப் பகுதிக்குச் சென்றோம். நண்பர் ராஜேந்திரன், நளினி, அகிலா இவர்கள் உடன் வந்தனர். வாலீசுவரம், சோழீசுவரம் என்னும் பெயர்களுடன் ஒரே வளாகத்தில் இரண்டு கோயில்கள் இருந்தன. வழக்கம்போல் மரம், செடி, கொடிகளின் அசுரத்தனமான வளர்ச்சியால் கோயில்கள் இரண்டுமே விரிசல்விட்டுச் சிதைந்திருந்தன. கோயில்களை நெருங்கவே அச்சமாக இருந்தது. நான் அங்கு வந்திருப்பதை ஊர்மக்கள் வழி அறிந்துகொண்ட சமயபுரம் மாரியம்மன் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. ப. இராமதாசு எங்கள் தேவை தெரிந்தவர் போல் மாணவர்கள் சிலருடன் வந்தார். அந்த இனிமையான மனிதரின் ஒத்துழைப்பால் கோயில்களை மூடியிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிய பாம்புகள் விரட்டப்பட்டன. ஓடத் தயங்கிய ஒரு பாம்பு களப்பலியானது. மாணவர்கள் மிகுந்த ஆற்றலுடன் நாள் முழுவதும் உடனிருந்து உதவினர். திரு. ப. இராமதாசை அதற்கு முன் நானறியேன். செய்தி இதழ்கள் வாயிலாக எங்கள் பணிகளைக் கேள்விப்பட்டிருந்த அப்பெருந்தகை, நான் வந்திருப்பது அறிந்ததுமே உதவி தேவைப்படும் என்று கருதித் தம் வீட்டிற்கு அருகிருந்த மாணவர் படையைத் திரட்டி வந்து உதவியமை எந்நாளும் மறக்கமுடியாத தொண்டாகும். இந்த நிகழ்விற்குப் பிறகு எங்கள் ஆய்வுக் குடும்பத்தில் அவரும் ஒருவரானார். சோழீசுவரம், வாலீசுவரம் இரண்டு கோயில்களிலும் பல சோழர் கல்வெட்டுகளைப் படியெடுத்தோம். அவை அனைத்துமே அதுநாள்வரை அறியப்படாதிருந்த கல்வெட்டுகளாகும். இந்தப் பணி ஒரு நாளில் முடியவில்லை. இரண்டாம் முறையும் அங்குச் செல்லும்படியாயிற்று. அப்போது மதிய உணவு திரு. ப. இராமதாசின் இல்லத்தில் அமைந்தமையைக் குறிப்பிடவேண்டும். இக்கோயிலில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் தினமலர், 29. 3. 1989ம் நாள் இதழில் வெளியாயின. திரு. இராமதாசு அதே பகுதியில் ஒரு காளி கோயில் இருப்பதாகவும் அதையும் நாங்கள் பார்ப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டதால், சில மாதங்களுக்குப் பிறகு மூன்றாம் முறையாக அங்குச் சென்றோம். மதுரகாளியம்மன் கோயில் என்ற பெயரில் திகழ்ந்த அக்கோயில் பிற்காலக் கட்டமைப்புக் கொண்டிருந்தபோதும், அதன் தாங்குதளத்தில் இருந்த சிற்பங்கள் பிற்சோழர் கலைமுறையில் இருந்தமை கண்டு ஆராய்ந்தோம். அவற்றுள் பெரும்பான்மையன கரணச் சிற்பங்கள். வைசாகரேசிதம் உட்படப் பதிணெட்டுக் கரணச் சிற்பங்களை அர. அகிலா அடையாளம் கண்டு குறிப்பெடுத்தார். நளினி சோழீசுவரம் கல்வெட்டுகளைச் சரிபார்த்தார். வேங்கடத்தான் துறையூர் கல்வெட்டுகளுடன் கரணச் சிற்பங்களையும் தந்தமை பெருமகிழ்வளித்தது. முனைவர் சி. மூக்கரெட்டியும் புலவர் ப. இராமதாசும் இந்த அருங்கொடைக்குக் காரணர்களாய் அமைந்தனர். 'இரட்டைப் புதையல்' என்ற தலைப்பில் இக்கோயில்களைப் பற்றிய என் விரிவான கட்டுரை அமுதசுரபி தீபாவளிமலரில் வெளியானது. புதிய சிற்பங்களின் கண்டுபிடிப்புப் பற்றிய தகவல் 5. 6. 1990 மாலை மலர் நாளிதழில் வெளியானது. அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |