http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 51
இதழ் 51 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
சிதையும் சிங்காரக் கோயில்கள்
காடுகளிலும் மலைகளிலும் திரிந்து விலங்குகளை வேட்டையாடிய மனிதன் நாகரிகத்தின் வளர்ச்சி பெற்று நாளடைவில் நதிக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் நிரந்தரமாக தங்கி இனிதே வாழத் தொடங்கினான். இனப்பெருக்கத்தால் பெருகிய மக்கள் கூட்டத்தால், நதிக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் கிராமங்களும் நகர்களும் பல தோன்றின. தனி மனித வாழ்க்கை சமுதாய வாழ்க்கையாக மாறத் தொடங்கியது. இவற்றின் பயனாக மதங்கள், சமயங்கள் தோன்றின. பல ஆலயங்களும் ஏற்படுத்தப்பட்டன. இப்படி தோன்றிய சமயங்களில் வைதீக சமயம் என்ற பெயரில் ஒரு சமயம் பழங்கால இந்தியாவில் இருந்து வந்தது. கி.மு. 5ம் நூற்றாண்டில் தோன்றிய மகாவீரரும், கௌதம புத்தரும் முறையே சமண மதத்தையும் புத்த மதத்தையும் தோற்றுவித்து அவற்றை நாடெங்கும் பரப்பினர். இவ்விரு மதங்களும் இந்தியா முழுவதும் வேகமாய்ப் பரவத் தொடங்கின. முடிதாங்கிய மன்னரும் குடிமக்களிடம் இம்மதங்கள் பரவ வழிவகை செய்தனர். தமிழ்நாட்டிலும் இந்த நிலைதான் நீடித்திருந்தது. கி.பி. 5 மற்றும் 6ம் நூற்றாண்டில் தோன்றிய நாயன்மார்களும், கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரும், திருஞானசம்பந்தரும் வீறுகொண்டு எழுந்து சமண, பௌத்த மதங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினர். மன்னர்களும் மதம் மாறினர். வட தமிழகத்தை ஆண்ட பல்லவனும் தென் தமிழகத்தை ஆண்ட பாண்டியனும் சமண மதத்திலிருந்து விடுபட்டு இப்பக்தி இயக்கம் வளர வழிவகை செய்தனர். நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களிலுள்ள ஆலயங்கள் சிறப்பு பெற்றன. தேவார மூவர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் அப்பர், திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகியோர் ஊர்தோறும் சென்று அங்குள்ள ஆண்டவனை வழிபட்டு ஏராளமான பாக்கள் பாடினர். இவர்களின் பாடல்களில் பரவசமாகி மக்களும் இப்பாடல்களை பாடத் தொடங்கினர். இம்மூவரும் பாடிய பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்ற பாடல்கள் பெற்ற கோயில்கள் "பாடல் பெற்ற தலங்கள்" என்றும் பாடல் கிடைக்காமல் இம்மூவர் பாடலில் தலக்குறிப்பு மட்டும் பெற்ற தலங்கள் "வைப்புத் தலங்கள்" என்றும் அழைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் ஆற்றோரங்களில் உள்ள பல கோயில்கள் "மூவர் முதலிகள்" என்று சிறப்பு கொடுக்கப்பட்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் அப்பர், திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்றன. குறிப்பாகக் காவிரியின் இரு கரைகளிலும் உள்ள பெரும்பாலான கோயில்கள் இம்மூவரால் பாடப்பெற்றன. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் வடகாவிரி என்றும் கொள்ளிடம் என்றும் அழைக்கப்படும் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள 'சடைமுடிநாதர்' என்ற கோயில் ஆகும். தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலடி என்ற ஊரின் அருகில் உள்ள திருச்சென்னம்பூண்டி என்ற கிராமத்தில் தான் இச்சடைமுடிநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலடி கிராமம் சங்ககாலத்திலிருந்து கி.பி. 16ம் நூற்றாண்டு வரை 'திருப்பேர் நகர்' என்ற பெயரில் அழைக்கப்பட்ட வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த ஊராகும். இக்கோவிலடியிலிருந்து வடக்கில் சுமார் 0.8 கி.மீ. தூரம் சென்று கொள்ளிடக்கரை மீது ஏறி சரியாக 1 கி.மீ. தூரம் கிழக்கில் சென்றால் சடைமுடிநாதர் கோயிலை அடையலாம். அருகே ஆறும் சுற்றிலும் வயல்களும் தோப்புமாய் மனித சந்தடியற்றுப் பறவைகளின் கீச்சொலி மட்டும் கேட்கும் வனாந்திரச் சூழ்நிலையில், இவ்வூர் மக்களால் 'சடையார் கோயில்' என்று அழைக்கப்படும் இக்கோயில் மக்களால் கைவிடப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. இக்கோயிலை அடைய சரியான ஒற்றையடிப்பாதை கூட ஏதும் கிடையாது. கொள்ளிடக் கரையிலிருந்து இறங்கி சுமார் 1 அடி அகலம் மட்டும் உள்ள வயல் வரப்பு மீது கழைக்கூத்தாடி போல் நடந்து, சிறு வாய்க்காலில் இறங்கி, உடல் மற்றும் முகம் மீது படும் மரக்கிளைகள், முட்கொடிகள் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுச் சிறிது தூரம் (சுமார் 200 மீட்டர்) நடந்து சென்றால் இக்கோயில் கண்பார்வைக்குத் தென்படும். 'இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க' என்று பாடிய கம்பர் இப்பாதைமீது நடந்துவந்தால் என்ன பாடியிருப்பார் என்று நினைத்துக்கொண்டு நீங்கள் வந்தால் பூமித்தாயிடம் சரணாகதியடைய வேண்டியிருக்கும். கண்ணில் தென்பட்ட இக்கோயிலை நெருங்கி பார்க்கும்பொழுது மனம் கனக்கத்தான் செய்கிறது. தினம் வந்து போகும் மக்கள் இவ்விடத்திலோ அல்லது இதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ இல்லை. அடிச்சுவடு மட்டும் காட்டும் மகாமண்டபம், சிதறிய கருவறை, சிகரம் இல்லா விமானம், புல் பூண்டு முட்செடிகள் முளைத்த திருச்சுற்று, மரம் படர்ந்திருக்கும் அம்மன் திருமுன், புற்களில் மறைந்து போன நந்தி, சிதறிய சிற்றாலயங்கள், கீழே விழுந்து கிடக்கும் கல்வெட்டு கொண்ட தூண்கள் இவைகளைப் பார்க்கும்போது, சண்டை முடிந்த போர்களத்தில் ஏராளமான காயங்களைப் பெற்றுத் தனியாய் நின்று உயிருக்குப் போராடும் ஒரு போர்வீரனின் நினைவுதான் வருகிறது. கி.பி. 7ம் நூற்றாண்டில் (சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர்) வாழ்ந்த அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோர் காலடி பட்டும் அவர்தம் நாவிலிருந்து வெளிவந்த அற்புதப் பாக்களில் இடம்பெற்றும், கி.பி. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த "தெள்ளாறு எறிந்த" மூன்றாம் நந்திவர்ம பல்லவன், நிருபதுங்கவர்ம பல்லவன், தஞ்சையை ஆண்ட முத்தரையர் மற்றும் கி.பி. 10ம் நூற்றாண்டு முற்கால சோழரான முதற்பராந்தக சோழன் ஆகியோரின் கல்வெட்டுகள் பெற்றும் மூன்றாம் நந்திவர்மபல்லவ மன்னனின் நாயகி 'கண்டன் மாறன் பாவை' மற்றும் முதற் பராந்தக சோழனின் பட்டத்தரசி 'அருள்மொழிநங்கை' ஆகியோரின் தானங்களைப் பெற்றும் வளர்ந்த இக்கோயில் இன்று வருவோர் யாருமில்லாததாலும் புரப்போர் எவருமில்லாததாலும் இடிபாடுகளுடன் கட்டுமானக் கற்கள் கலையப்பெற்று சிகரம் இல்லா விமானமாய், கடவுள் இல்லாக் கருவறையாய், அறம் வளர்த்த மன்னர்களும் மக்களும் இல்லாததால் மரம் வளந்ர்த காடாய் மண்மேடு கொண்டு மங்கிக் காட்சியளிக்கின்றது. மருளோடு வந்து அருள் வேண்டி நிற்கும் பக்தர்கள் எவரும் இல்லாததால் இருள் சூழ்ந்த இருப்பிடத்தை விட்டு இடம் பெயர்ந்து விட்டார் இறைவன். ஆம் கருவறையில் மூலவர் இல்லை. விடை ஏறிச்சென்றுவிட்டார் போலும் இச்சடைமுடிநாதர். எங்கே தேடுவது என்று வினா எழுந்த உடன் விடையும் கிடைத்தது. இச்சடைமுடிநாதர் பக்கத்தில் செடி கொடி மரம் படர்ந்திருக்கும் அம்மன் திருமுன்னில் தற்சமயம் 'சித்தேஸ்வரர்' என்ற புதுநாமத்துடன் அடைக்கலம் புகுந்து வழிபாடு இல்லாமல் இடர்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று. அப்பர், திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலமான 7ம் நூற்றாண்டிலிருந்து முதற் பராந்தக சோழனின் ஆட்சியாண்டு தொடங்கும் முன்னர் வரை (கி.பி. 10ம் நூற்றாண்டின் முற்பகுதி) இக்கோயில் செங்கல் தளியாய் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் மூன்றாம் நந்திவர்ம பல்லவன், நிருபதுங்கவர்ம பல்லவன் மற்றும் முத்தரையர் ஆகியோரின் கல்வெட்டுகள் கல்தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறை மற்றும் முகமண்டப சுவர்களில் பொறிக்கப்பட்டிருக்கும் முதற் பராந்தக சோழரின் கல்வெட்டுகள், இக்கோயில் முதற்பராந்தக சோழனால் கற்றளியாக்கப்பட்டிருக்கலாம் என கருத இடமளிக்கின்றன. இக்கோயிலின் வடபுறம் கொள்ளிடமும் மற்ற மூன்று பக்கங்களிலும் சுமார் 1 கி.மீ. தூரம் வரை வயல்களும் சூழ்ந்திருக்கின்றன. அதற்கு அப்பால்தான் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் வசிக்காத பகுதியில் வனாந்திர சூழ்நிலையில் இச்சடைமுடிநாதர் கோயில் ஏன் கட்டப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு இக்கோயில்கல்வெட்டுகள் விடையளிக்கின்றன. இக்கல்வெட்டுகள் கூறும் செய்தியிலிருந்துன் கி.பி. 16ம் நூற்றாண்டு வரை இக்கோயிலைச் சுற்றி மக்கள் வசித்த கிராமம் ஒன்று இருந்து வந்துள்ளது என்பதும் அதன் பெயர் 'திருச்சடைமுடி' என்றும் தெரியவருகிறது. இத்திருச்சடைமுடி கிராமம் கோவிலடி என்று தற்போது அழைக்கப்படும் தெருப்பேர் நகருக்கு உட்கிராமமாக இருந்து வந்துள்ளது. திருச்சடைமுடி என்ற கிராமத்தில் வசித்த மக்கள் எங்கு குடிபெயர்ந்தனரோ அல்லது அழிந்தனரோ தெரியவில்லை. இன்று இச்சடைமுடிநாதர் கோயில்தான் இக்கிராமத்தின் எச்சமாய் அச்சம் தரும் சூழ்நிலையில் உள்ளது. இக்கோயில் மதில்சுவர் மறைந்துவிட்டது. பலிபீடம் இல்லை. கோபுரம் இவ்விடத்தில் இருந்திருக்கலாம் என்று நினைக்கும் இடத்தில் இப்பொழுது நெல் பயிரிடப்படுகின்றது. வாய்க்கால் ஓரத்தில் கரைந்துபோன சண்டிகேசுவரர் சிற்பம் கவிழ்ந்து கிடக்கின்றது. இக்கோவிலின் இறைவனின் பெயர் கல்வெட்டுகளில் கடைமுடிநாதர் என்றும் சடைமுடிநாதர் என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அறிஞர் மு. இராகவையங்கார் என்பவர் பாடல்பெற்ற கடைமுடித்தலம் இதுதான் என்று கூறியுள்ளார். ஆனால் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கீழையூர் என்ற கிராமத்தில் உள்ள கடைமுடிநாதர் கோயிலே கடைமுடி என்ற பாடல்பெற்ற தலமாக வழக்கத்தில் இருந்துவருகின்றது. இச்சடைமுடிநாதர் கோயில் இறைவனின் பெயர் சடைமுடிநாதரா அல்லது கடைமுடிநாதரா? மற்றும் இக்கோயில் பாடல்பெற்ற தலமா அல்லது வைப்புத் தலமா என்பது பற்றி இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் ஆராய்வோம். அதுவரை இக்கோயிலை சடைமுடிநாதர் கோயில் என்றே அழைப்போம். இனி இக்கோயிலின் கட்டக்கலை மற்றும் சிற்பக்கலை பற்றி ஆராய்வோம். (வளரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |