http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 6

இதழ் 6
[ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

சுனாமி
சுனாமி
கதை 4 - கபிலன்
தஞ்சையில் முப்பெரும் வரலாற்றுப் பெருவிழா - ஒரு அறிவிப்பு
மத்தவிலாசப் பிரகசனம் - 4
மன்றத்துப் புன்னையும் மாமனிதர் அப்பரும்
தமிழ்மொழி வளர்ச்சியில் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பங்களிப்பு
கல்வெட்டாய்வு - 5
கட்டடக்கலை ஆய்வு - 6
இராஜசிம்மன் இரதம்
Architectural traditions and innovations of Tamils
திருவையாறு தியாகராஜ உத்சவம்
சங்கச்சாரல் - 6
இதழ் எண். 6 > பயணப்பட்டோம்
இராஜசிம்மன் இரதம்
கோகுல் சேஷாத்ரி
மாமல்லபுரம் பயண அனுபவங்கள் - பகுதி 3


இரண்டாவது தளத்தில் பலப்பல வடிவங்களில் சிவ மூர்த்தங்கள். பக்தர்களை இரட்சிக்கும் அனுக்கிரக மூர்த்தங்கள் - பகைவரை அழிக்கும் சம்ஹார மூர்த்தங்கள் - என்று எத்தனை வகை ! பிற்காலத்தில் தமிழகமெங்கும் பல்வேறு திருக்கோயில்களில் பல தேவகோஷ்டங்களில் வகைவகையாய் இடம்பெறப்போகும் மூர்த்தங்கள் பலவும் இங்குதான் முதன்முதலில் அறிமுகம் ஆவதாக டாக்டர் கலைக்கோவன் பின்னர் தெரிவித்தார். இதில் ஒரு சில வடிவங்கள் பிற்கால சோழர் கலையிலும் தொடர வேறு சில வடிவங்கள் பல்லவர்களுடன் முடிவுக்கு வந்துவிடுகின்றன.





கருணையும் அன்பும் பொங்கும் ரிஷபாரூடர்


கங்காதர மூர்த்தி, காலரி மூர்த்தி, வீணாதர மூர்த்தி, ரிஷபாரூடர், தண்டு மூர்த்தி - எத்தனையெத்தனை படிவங்கள், வடிவங்கள் ! ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் தலைமுடியமைப்பு - அட, ஜடாமகுடத்தில்கூட இத்தனை வகை இருக்கிறதா என்ன ?

மாதிரிக்கு ஒரே ஒரு சிற்பத்தைப் பார்ப்போம்.





ஆடவல்லானிடமே ஆடிக்காட்டுகிறார் தண்டுமுனி


பரத சாத்திரத்தின் பிதாமகரான தண்டு முனி சிவனாருக்கு ஒருசில கரணங்களை ஆடிக் காண்பிக்க இறைவன் அதை இரசித்து நோக்குகிறார். தண்டு முனியின் ஆட்டத்தை ஒரு காலை லேசாக உயர்த்திக் காண்பிப்பதன் மூலம் தெரிவித்துவிடுகிறான் சிற்பி. பக்கத்தில் நிற்பது இறைவனாயிற்றே - அதனால் காலை எக்கச்சக்கமாய் தூக்கி நடராஜ நடனமெல்லாம் ஆட முடியாது என்பதால் அடக்கமான ஒரு கரணம் காண்பிக்கப்படுகிறது.

சிவபிரான் மெலிதான புன்னகையுடன் இடக்கரத்தை நெஞ்சில் வைத்திருப்பது முனியின் ஆட்டத்தில் அவருக்கு ஏற்படும் மனநிறைவை எத்தனை அழகாய் தெரிவித்து விடுகிறது ? தண்டு முனியின் மொத்த இடக்கரமும் சற்றே பெண்மை கலந்த சாயலுடன் மிக மெல்லிய வளைவுகளுடன் காட்டப்பட்டிருப்பதையும் கவனிக்கவும். நாட்டியத்தில் பெண்மை அதிகமாக சோபிக்கும் போலும். பெம்மானின் இடையன் போன்ற தலையலங்காரத்தையும் கவனிக்கவும். பின்னாளில் திருமழபாடி ரிஷபாரூடர் வெண்கலச் சிற்பமாக இந்தத் தலையலங்காரம் சில மாறுதல்களுடன் உலகப்புகழ்பெறப்போகிறது. முனியில் தலையலங்காரமும் நமது கவனத்திற்குரியதே.

பிரானின் கைகளில் தெரியும் சற்றே வித்தியாசமான - கொஞ்சம் பயமுறுத்தும் திரிசூலம், மழு என்று சொல்லிக்கொண்டே போகலாம். அற்புதமான படைப்பு.

இத்தனை நட்பாய் அடியவர்முன் தெரியும் பிரான், அழிவு என்று வந்துவிட்டால் எத்தனை ஆவேசப்பட்டுவிடுகிறார் ? காலசம்ஹாரரை கவனியுங்கள் - கைகளையும் கால்களையும் வைத்திருக்கும் பாங்கே அவருடைய ஆவேசத்தை தெளிவுபடுத்திவிடுகிறதல்லவா ? கொஞ்சம் உற்றுக் கேட்டால் அந்த சிற்பத்தற்கு அருகில் செல்லும் காற்றுகூட "அதம்! அதம்!" என்று முணுமுணுக்கும் போலிருக்கிறதே ?





காலசம்ஹாரர் - அழிப்பிலும் உண்டு அழகு


ஓரிடத்தில் கருட பகவானுடன் கூடிய திருமால் கூட உண்டு. கருடன் தன் ஆள்காட்டிவிரலை மரியாதையாக வாயில்வைத்து கால் மடங்கி நின்றிருக்க திருமால் ஒரு சினேகித பாவத்துடன் ஒரு கையை அவர் மேல் ஆதரவாக போட்டு நிற்கிறார். திருமால் அத்தனை நட்போடு தெரிந்தாலும் கருடனிடம் கொஞ்சம் பயம் கலந்த மரிதாதைதான் !





தோழமை பூண்ட இறைவன் - விஷ்ணுவும் கருடனும்


இதில் கவனிக்க வேண்டிய அம்சம் கருடனின் அடக்கத்தைக் காண்பிக்க அவனுடைய கால்களை மடக்கி திருமாலைவிட உயரம் குறைந்தவனாகக் காண்பித்திருப்பதுதான். அதாவது உண்மையில் கருடனின் உயரம் திருமாலுக்கு ஒப்பானது - ஆனால் அதை அவன் தற்போது காண்பிக்க விரும்பவில்லை. அவரின் கை உயரத்திற்கு தன் தோள் தந்தாலே போதுமானது - அல்லவா ?எங்கிருந்துதான் வருமோ இப்படிப்பட்ட கற்பனைகள் ?





மிக அரிய சண்டேச அனுக்கிரக மூர்த்தி


இதே போல் சிவபெருமானும் நட்போடு காட்சிதரும் சிற்பம் ஒன்றுண்டு. வடிவ அழகில் இது கருட மூர்த்தியையும் விஞ்சி நிற்கிறது என்றுதான் குறிப்பிட வேண்டும். வழக்கமாக சண்டேசருக்கு அருளும் பெருமானைக் காண்பிக்கும்போது தலையில் கொன்றைமாலை அணிவிக்கும் காட்சிதான் இடம்பெறும். ஆனால் இங்கு மிக அரிய வடிவமாக தன் அணுக்கனின் தோளில் கைகளை போட்டுக்கொண்டு மிகுந்த வாத்சல்யத்துடன் காணப்படும் பிரானை வெறெங்கும் காண்பது அரிது. சண்டேசர் முகத்தில் தெரியும் மரியாதையையும் தோற்றத்தில் தெரியும் அடக்கத்தையும் பெருமானின் முகத்தின் மந்தகாசத்தையும் விளக்க - கேவலம், வார்த்தைகளால் முடியுமா ? சிவபெருமானின் கால்கள் அமைந்த பாங்கும் மிக அழகு...

இப்படி பல வகைகளில் விரியும் சிவபெருமானின் கோலங்களில் மிக மிக அரிதானது என்று குறிப்பிடத்தக்க ஒரு சிற்பமும் உண்டு. இரு கைகளில் முத்திரைகள் துலங்க ஒரு காலை மடக்கி ஒற்றைக்காலில் நின்றபடி காட்சியளிக்கிறார் ஈசன். ஏறக்குறைய தவம்புரியும் திருக்கோலம்போல் தெரிகிறது. வரம் கொடும்கும் ஈசனே தவம் செய்வது அரிய காட்சியல்லவா ? இந்தக் கோலத்தை பின்னர் வரும் காலகட்டங்களில் காணமுடிவதில்லை என்பதோடு இது எந்தத் திருக்கோலத்தைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும் அறியக்கூடவில்லை. சதியை இழந்த துக்கத்தில் தவம் செய்யப்போய்விடும் திருக்கோலமா இது ? அல்லது வரங்கொடுக்கும் வள்ளலும் ஆன்ம சுத்தியில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்தும் தியான மூர்த்தமா ?





தவம் புரியும் சிவபெருமான் - அரிதான தோற்றம். ஒரு காலை மடங்கி ஒற்றைக்காலில் நிற்பதை கவனிக்க


இந்தச் சிற்பத்தை முழுமையாய் படம் பிடிப்பதற்குள் மூச்சுத்திணறி விட்டது - நேராக நின்று கேமராவின் வழியாகப் பார்த்தால் ஒன்று தலையிலிருந்து இடுப்புவரை தெரியும். அல்லது இடுப்பிலிருந்து பாதம்வரை தெரியும். ஏனெனில் சுற்றுப்பாதையில் அகலம் அத்தனை குறைவு. இத்தனை சிறிய அகலத்துக்குள் என்ன கணக்கை வைத்துக்கொண்டு அத்தனை சிற்பங்களையும் படைத்தார்கள் என்று மீண்டும் மீண்டும் ஒரு பிரமிப்பு தட்டுகிறது. முதலில் சுற்றுப்பாதையை குடைந்துவிட்டு பின்னர் சிற்பத்தை செதுக்கினார்களா ? (அப்படியானால் சிற்பத்தை படைப்பதற்குமுன் சுற்றுப்பாதையின் அகலம் இன்னமும் சிறியதாய் இருந்திருக்கும்) அல்லது சிற்பமும் சுற்றுப்பாதையும் ஒன்றாகக் குடையப்பட்டனவா ?ஒன்றுமே புரியவில்லை ஐயா !

கடைசியில் வேறு வழியில்லாமல் இருபடங்களாய் எடுத்து கொஞ்சம் கிராபிக்ஸ் ஒட்டுவேலையெல்லாம் செய்து....ஹூம், அந்த சிற்பத்தின் அழகை முழுமையாக தரிசிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது !

பாறையின் இயல்பு காரணமாக அனைத்து சிற்பங்களுமே மழுமழுப்பாகக் காணப்படாமல் பொளிந்து காணப்படுகின்றன. ஒருவேளை உப்பங்காற்று செய்த வேலையாகக்கூட இருக்கலாம். பல சிற்பங்கள் மூக்கிழந்துபோய் தொல்பொருள் இலாகாவினர் தயவில் ஒட்டு மூக்குடன் காணப்படுகின்றன. அதென்னவோ சிற்பங்களில் முதல்பாதிப்பு மூக்குக்குத்தான் எப்போதுமே நேர்கிறது !





பல்லவ கிரந்தத்தில் பட்டப் பெயர்கள்


பல சிற்பங்களுக்குமேல் இராஜசிம்ம பல்லவனின் பல்வேறு பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துக்களில் காணப்படுகின்றன. மகேந்திரவர்மனுக்குப் பிறகு மிக அதிகமான பெயர்கள் வைத்துக்கொண்ட பல்லவன் இந்த அரசன்தான்.

சற்று நேரமாகிவிட்டதால் சுற்றுலா பயணிகள் பலரும் இரதங்களுக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் பலருக்கு நாங்கள் கூரைமேலே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து கொள்வதில் அத்தனை ஆவல். எங்களுடன் வந்திருந்த தொல்பொருள் துறை ஊழியர் அவர்களுக்கெல்லாம் மேலிருந்தபடியே பொறுமையாக பதில்சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரே பொறுமையிழந்து கீழே வைக்கப்பட்டிருந்த ஏணியை மேலே இழுத்துக்கொண்டுவிட்டார்.

சரி இனி தொடர்ந்தால் அன்புத் தொல்லைகள்தான் அதிகமாகும் - ஆகவே நமது மகத்தான ஆய்வுப் பணியை இத்துடன் முடித்துக்கொள்வோம் என குழு முடிவு செய்தது. கோயிலைப் பற்றி முன்பு குறிப்பிட்ட டாக்டர் கலைக்கோவன் என்னால் எந்த சிற்பத்தையும் முழுமையாக ஒரே புகைப்படமாக எடுக்க முடியவில்லை - இடைச்சுற்றின் அகலம் அத்தனை குறைவு - உங்களால் முடிகிறதா பாருங்கள் என்று சொல்லியிருந்தார். அதனால் நான் மட்டும் தொல்பொருள் துறை ஊழியரை என்னை பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு தளத்தின் வெளிப்புறத்திலிருந்து - ஏறக்குறைய தொங்கியபடி - எல்லா மூர்த்திகளையும் முடிந்தவரை கேமராவில் பத்திரப்படுத்திக் கொண்டேன். இந்தக் குரங்காட்டம் மல்லைச் சிற்பங்களைவிட
அதிக சுவாரஸ்யமாக சிலருக்கு இருக்கவே கீழே ஒரு கூட்டம் சேர்ந்துவிட்டது. விழுந்தால் உங்கள்மேல்தான் நேராக விழுவேன் என்று பயமுறுத்தியபிறகே அவர்கள் கலைந்து போனார்கள்.





இரதத்தின் கீழ் பயணக்குழு

இடமிருந்து வலமாக - கமல், கோகுல், சுந்தர் பரத்வாஜ், முனைவர் அகிலா, பூங்குழலி, அனு


ஓய்ந்து போயிருந்த எல்லோரும் ஒருவழியாய் கீழே இறங்கினோம். கீழே தெரிந்த முடிவுறாத மண்டபப் பகுதி இந்தப் பாறைக்குன்றை செதுக்குவது எத்தனை கடினமானது என்பதை உணரச்செய்தது. இந்த மொட்டைக் குன்றுகளுக்குள் கோயில்களையும் மூர்த்தங்களையும் ஒருவன் ஆயிரத்தி நானுறு ஆண்டுகளுக்கு முன் மனக்கண்ணால் கற்பனை செய்து அதற்கு செயல் வடிவமும் கொடுத்திருக்கிறான் என்பது சாதாரண விஷயமா என்ன ? இன்று தொழில்நுட்ப ரீதியாக நாம் வளர்ந்திருக்கலாம் - ஆனால் கலாரீதியாக ? நமது இரசனைகளெல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றன என்பது பல சமயங்களில் வியப்பாக இருக்கிறது...

நமக்கு ஆயிரமாண்டுகளுக்குப் பின்வரும் மனிதனை பிரமிக்கச்செய்யும் படைப்பு ஒன்றை இன்று நம்மால் சமைக்க முடியுமா ?

பலப்பல நூற்றாண்டுகளுக்குமுன் அந்த சிற்பிகள் கூட்டத்தை செலுத்திய சக்தி எது ? இரசனைமிக்கதொரு மனதிலிருந்து பொங்கிப் வழிந்திருக்கும் இந்த ஜீவாதாரம் மிக்க கலைப் பிரவாகத்தின் காரணி எது ? இத்தனை பெரிய உழைப்பிற்கு மூலமாய் இருந்த உந்து சக்தி எது ?

எத்தனை கைகள் சேர்ந்து இந்தக் காவியத்தை எழுதின ? தலைமைச்சிற்பியின் கீழ் எத்தனை முதன்மை சிற்பிகள் ? எத்தனை இரண்டாம் தலைச் சிற்பிகள் ? எத்தனை புதியவர்கள் ? காலையும் மாலையுமாய் - எத்தனை எத்தனை நாட்கள் உழைத்த அயராத உழைப்பு ? வெறும் சிற்பிகளை மட்டும் மனதில் கொண்டால் போதுமா ? சிற்பிகளுக்கு உதவியாக கல்சுமந்தவன், பாதை போட மண்சுமந்தவன், தாகத்திற்கு நீர் வார்த்த பெண்கள்... அத்தனை சிற்பிகளுக்கும் சோறாக்கியவர்கள்... அப்படி சோறாக்குவதற்கு நெல்லும் காய்கறிகளும் சுமந்தவர்கள்.... அப்பப்பா ! எத்தனை பெரிய பேரியக்கம் ?

இவர்கள் அத்தனை பேரையும் செலுத்தியது வெறும் கூலிதானா ? சம்பளத்திற்காக மட்டும் உழைத்து இப்படிப்பட்ட அற்புத படைப்புக்களை உருவாக்க முடியுமா ? நிச்சயம் முடியாது. அக்கால மனிதர்களை வேறுசில சக்திகள் செலுத்தியிருக்க வேண்டும். காசுக்கு அப்பாற்பட்டு, காலத்திற்கு அப்பாற்பட்டு - ஏதோ ஒன்று அவர்கள் மனதில் நீருற்றாய் ஊறி ஆறாய்ப் பெருகியிருக்கவேண்டும்.

அதுதான் அவர்களை உந்திற்று. அதுதான் அவர்களை காந்தக் கயிறாய் கட்டிற்று. அதுதான் அந்த மய சிற்பிகளின் கைகளில் சிற்பமாகவும், நீர்ப்பெண்டிரின் கை நீராகவும், கல்சுமப்பவரின் வியர்வையாகவும் பெருக்கெடுத்தது.

சற்று நுணுக்கமாய் கவனித்தால் காலங்கடந்த அந்த நீரோட்டம் அந்த இடத்தில் இன்னமும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதை கவனிக்கலாம்.

மன அழுக்குகளெல்லாம் அந்த மாய நீருற்றில் கம்மிக் கரைந்து போகின்றன.

அந்த தேவ ஆற்றில் குளிப்பவன் இறையின் சன்னிதானத்தில் கரையேறுகிறான்.


(மாமல்லபுரம் பயணம் நிறைந்தது)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.