http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 62
இதழ் 62 [ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். ஆண்டுமலரான இச்சிறப்பிதழும் தாமதமாக மலர்வதற்குப் பொருத்தருள வேண்டுகிறோம். ஆசிரியர் குழுவினர் மட்டுமின்றி, கட்டுரையாளர்களும் வேலைப்பளுவில் சிக்கிக் கொண்டதால், சமீபத்திய இதழ்கள் சற்றுத் தாமதமாக மலர்கின்றன. இருப்பினும், மாதந்தவறாமல் இதழ் வெளிவருவதில் நிறைவு கொள்கிறோம். ஐந்து ஆண்டுகள். ஐந்து நிமிடங்களைப்போல் ஓடிவிட்டன. 62 இதழ்கள், தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் வெளிவந்துவிட்டன. ஆகஸ்ட் 15, 2004 அன்று சென்னை பல்லாவரத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள், இரண்டு பகல்கள் இரண்டு இளைஞர்கள், ஓர் இளைஞி, பெங்களூர் மற்றும் சிங்கப்பூரில் தலா ஓர் இளைஞர் என்று ஐந்து இருபதின்ம வயதினரால் இணையத்தில் தொடங்கப்பட்ட மாத இதழ், இன்று சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறப்பிதழ்கள், மாதந்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசிப்புகள் என்று விரிவடைந்து இருக்கிறது. இந்த ஐந்தாயிரம் வாசிப்புகள் என்பது, வரலாறு என்பது என்ன என்று அறிந்துகொள்ள முயலும் அறிமுக வாசகர் முதல், வரலாற்றாய்வுகளில் பழந்தின்று கொட்டைபோட்ட அறிஞர்கள் வரை உள்ளடக்கியது. ஏற்கனவே பல கட்டுரைகளிலும் தலையங்கங்களிலும் கூறியுள்ளபடி, எங்கள் குழுவினர் கற்றுக்கொள்ளும் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் காலத்திலேயே பதிவு செய்து வைத்துக்கொண்டால், பின்னர் திருப்பிப் பார்க்க வசதியாகவும் இருக்கும்; எதிர்காலத்தில் கற்றுக்கொள்ள விழைபவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் என்ற நோக்கத்தில் நாங்கள் எடுத்த சில ஒளிப்(ப/பா)டங்களையும் வாசகர்களுடன் முதல்முறையாகப் பகிர்ந்து கொள்கிறோம். பல பக்கங்களுக்கு விரியும் கட்டுரைகளால் விளக்க முடியாததை, ஒரு நிமிட ஒளிப்படம் விளங்க வைத்துவிடும். இதுவரை வெளிவந்த கட்டடக்கலைத் தொடர், கல்வெட்டாய்வு, சிற்பக்கலை போன்ற பல கட்டுரைகளின் சுருக்கமாக இவ்வொளிப்படங்கள் இந்த இதழை அலங்கரிக்கின்றன. எங்கள் முயற்சிகளுக்கு இதுவரை ஊக்கப்படுத்திய மற்றும் இனிமேலும் ஊக்கப்படுத்தவிருக்கும் வாசகர்களுக்கு நன்றிக் காணிக்கையாக இவற்றைச் சமர்ப்பிக்கிறோம். சென்ற ஆண்டு இதேநேரம் எங்கள் முயற்சியில் விளைந்த நல்முத்து ஐராவதி வெளியிடப்பட்டது. இடைப்பட்ட இந்த ஓராண்டில் ஐராவதி தொடர்பான இரண்டு நல்ல நிகழ்வுகள் நடந்தேறி, எங்களைப் பேருவகை கொள்ள வைத்தன. வரலாறு என்னும் துறையைத் துச்சமாக நினைத்துப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள் நிரம்பிய இந்தக்காலத்தில், முழுமையான வரலாற்றாய்வு நூல்கள் நூறு அல்லது இருநூறு பிரதிகள் விற்றாலே அதிகம். எந்தவொரு வரலாற்றாசிரியரின் மற்றும் பதிப்பாசிரியரின் விற்பனை எதிர்பார்ப்பும் இந்த எண்ணிக்கைதான். உலகளாவிய அறிஞர்களின் தரமான கட்டுரைகளைத் தொகுத்தளித்த நாங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓரிரு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், எங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி, ஆயிரம் பிரதிகளுக்கும்மேல் விற்றுச் சாதனை புரிந்தது ஐராவதி. இதற்கு ஒரே காரணம், 'ஐராவதம் மகாதேவன்' என்ற மந்திரச்சொல்தான். அவர்தான் இச்சாதனையின் உரிமையாளர். அடுத்த இனிய நிகழ்வு, பாரதக் குடியரசுத் தலைவரின் தாமரை விருதுகள். ஐராவதி நூல் வெளியீட்டு விழாவில் அரசுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. அறிஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கௌரவிப்பது என்பது இன்று அருகிவரும் ஒரு செயல். பிராமி மற்றும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் தனிமுத்திரை பதித்த அறிஞர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அரசு விருதுக்கான கோரிக்கை ஒன்று தீர்மானமாக முன்மொழியப்பட்டது. அவ்வேண்டுகோளைச் செவிமடுத்த நல்ல இதயம் ஒன்று, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, குடியரசுத் தலைவரின் தாமரை விருதினைப் பெற்றுத்தந்தது. ஏற்கனவே பிப்ரவரி மாதத் தலையங்கத்தில் நன்றி தெரிவித்திருந்தாலும், மீண்டும் அவருக்கு வரலாறு.காமின் மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு முக்கியமான தருணத்தின்போதும் சிறப்பிதழை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது வரலாறு டாட் காம் மின்னிதழ். ஐந்தாண்டுகளைக் கடந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நல்லோரையில், மாபெரும் வீரரான முதலாம் இராஜேந்திரரைப் பற்றிய சிறப்பிதழாக இவ்விதழ் மலர்கிறது. கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பெருங்கோயிலையும், சோழகங்கம் என்னும் ஈடுஇணையற்ற சமுதாயப் பணியையும் மேற்கொண்டு, இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக விளங்கும் மாவீரர் ஒருவரைப் பற்றிய சிறப்புகளைத் தாங்கி வருகிறது இவ்விதழ். தனது இறுதிக்காலத்தில் சிவபாதசேகரன் என்று தந்தை பெயர்சூட்டிக்கொண்ட வேளையில், இளம் வயதிலேயே சிவசரணசேகரன் என்று தன்னை அழைத்துக்கொண்ட மாபெரும் தன்னம்பிக்கையாளரைச் சிறப்பிக்கிறது இச்சிறப்பிதழ். பெரிதினும் பெரிதுகேள் என்ற பாரதியின் வரிகளுக்கு வடிவம் கொடுத்த மகாவீரர்களில் ஒருவரான இராஜராஜரின் அடியொற்றி, மரபுப் பெருமையையும் காத்து, சோழர்குலப் பெருமையையும் வளர்த்த இராஜேந்திரரைச் சிறப்பிக்கிறது இம்மாத மின்னிதழ். வழக்கம்போல வாசகர்களின் ஆதரவை நாடுகிறது வரலாறு.காம். அன்புடன் ஆசிரியர் குழு. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |