http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 62

இதழ் 62
[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

நன்றியும் சிறப்பும்
கல்வெட்டில் மருத்துவர்
கங்கைகொண்ட சோழீசுவரம் சிற்பங்கள் - புகைப்படத்தொகுப்பு
ஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை
திருமன்னிவளர...
சிபியும் நானும் - 1
தனிமையென்னும் தீவினிலே!
இதழ் எண். 62 > சிறப்பிதழ் பகுதி
திருமன்னிவளர...
மா. இலாவண்யா
இராஜேந்திரன் என்ற பெயரில் மூன்று சோழ மன்னர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் இருந்த பொழுதும், இராஜேந்திர சோழர் என்று குறிப்பிட்டாலே, இந்தச் சிறப்பிதழின் நாயகன் முதலாம் இராஜேந்திரன் தான் எல்லோர் மனதிலும் தோன்றுவார். அந்த அளவிற்குப் பெயர்பெற்ற மாமன்னரும், வீரருமான இராஜேந்திரரை, அவரின் பண்பு நலன்களை அவர் காலக் கல்வெட்டுகளின் வழி காணலாம்.

முதலாவது அவருடைய வீரம். அம்மன்னருடைய மெய்கீர்த்தியை ஆராய்ந்தாலே அவரின் வீரம் வெளிப்பட்டுவிடும். வெவ்வேறு ஆட்சியாண்டுகளில் இராஜேந்திரரின் மெய்கீர்த்தி எவ்வாறு இருந்தது என்று பார்க்கலாம்.

அவருடைய முதல் இரண்டு ஆட்சியாண்டு கல்வெட்டுகள் ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேஸரி பன்மர்கு யாண்டு என்று தான் தொடங்குகிறது. எழுத்தமைதி கொண்டு அக்கல்வெட்டுகளை இராஜேந்திரர் காலக் கல்வெட்டுகள் என்று அடையாளம் கண்டுள்ளனர். உதாரணத்திற்கு பாபநாசம் தாலுகாவில், கோயில் தேவராயன்பேட்டையில் மத்ஸ்யபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள கோப்பரகேஸரிபன்மரின் கல்வெட்டு. (SII 19 No.24)

அவரின் மூன்றாம் நான்காம் ஆண்டு கல்வெட்டுகளும் மெய்கீர்த்தியின்றி இருந்தாலும், இராஜேந்திர சோழர் கல்வெட்டுகள் தான் என்று உறுதிபடக் கூறும் வகையில் அவரின் பெயர் கொண்டு இருக்கின்றன. உதாரணத்திற்கு திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள். (SII 17 No. 738, 739, 741)

அவரின் ஐந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கீழ்கண்ட வகையில் சிறு மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது.

ஸ்வஸ்திஸ்ரீ பூர்வ தேசமும், கெங்கையும் கடாரமும் கொண்டருளின கோப்பரகேஸரிபம்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரசோள என்று வருகிறது.

தென் ஆற்காடு மாவட்டத்தில் கிராமார்தநாதர் கோயிலில் உள்ள அவரின் மற்றொரு ஐந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் கீழேயுள்ள மெய்கீர்த்தி வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடம் மெய்கீர்த்தி வரை மட்டுமே கீழே கொடுத்துள்ளேன். கோயிலுக்கு நிலம் வழங்கியதைப் பற்றிய செய்தியையுடைய கல்வெட்டின் முழுப்பாடத்தை கொடுக்கவில்லை.

ஸ்வஸ்திஸ்ரீ திருமன்நி வளர இருநிலமடந்தையும் பொ[ற்]செயப்
பாவையுஞ் சிர்த்தனிசெல்வியுன் தந் பெருந்தெவியராகி இ
ந்புற நெடிதியலூழியு ளிடைதுறைநாடுந் துடர்வனவெலி
படர் வனவாசியுஞ் சுள்ளிச்சூழ்மதிட் கொள்ளிப்பாக்கமு நண்ணற்கருமுரண் மண்ணை
க்கடக்கமும் பொருகடலிழத்தரைசர்த முடியு மாங்கவர் தெவிய ¦[ரா]ங்கெழில் முடியும் முந்[ந]
[வ]ந்பக்கல் தெந்னவந் வைத்த சுந்தரமுடியும் இந்திரநாரமும் ¦[த]ன்றிசை யிழமண்டலமு
ழுவதும் எறிபடைக் கெரளன் முறைமையிற் சூடுங் குலதனமாகிய பலர்புகழ் முடியு
ம் செங்கதிர்மாலையும் சங்கதிர்வெலைத் தொல்பெருங்காவல் பல பழந்திவும் மாப்பெருந் த
ண்டாற் [கொண்ட] கொப்பரகெஸரிபந்மரான ஸ்ரீராஜெந்திரசொழதெவற்க்கு யாண்டு [அ]ஞ்சா[வ]து மிலாடான
ஜெநநாதவளநாட்டுப் பானூற்கூற்றத்து பிரம்மதெயம் இறையானரையூர் ஊர்.....


எட்டாம், பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளின் மெய்கீர்த்தி இன்னும் நீளமாக உள்ளது.. இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் சிறிது கூட்டப்பட்டு அவரின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் கீழ்கண்டவாறு அமைந்துள்ளது.

விழுப்புரம் தாலுகாவில் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயில் மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மெய்கீர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ திருமன்நிவளர இருநிலமடந்தையும் பொர்செயப்பாவையும் சிர்த்தநிசெல்வெயும் தன்பெ
ரு தெவியராகி இன்புற நெடுதுயலுழ்நி உள் இடதுரை நாட்டும் துடர்வன வெல்விபடர்வன
வாசியும் சுள்ளிசூழ்னதிள் கொள்ளிப்பாகையும் நண்ணல்கருமுரண் மண்ணை கடக்கமும் பொருகடல் இழத்த
ரச தன்முடியும் ஆங்கவன் தெவியர் ஒங்கெழில் முடியும் முன்நவர் பக்கல் தென்நவந் வைத்த சுந்தரன்
முடியுமிந்திரந் ஆரம்மும் தென்திசை இழ்ழ மண்டலம் முழுவதும் எறிபடை கெராள்ளன்முறை
மையில் சுடுங்குலதனமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர்மாலை சங்கதிர் வெலைதொல்பெருங்
காவல் பலபழந்திவ்வும் செருவில் சினவில் இருபத்தொருகால் அரைசு களை கட்டபரசிராம்மன் மெல்
வரும் சாந்திமற்றிவமரண் கருதிருத்திய செம்பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முசங்கியில் முதுகிட்டொ
ளித்த ஜெயசிங்கன் அளப்பெரும் புகழ் ஓடும் பிடியி இலட்டபாடி எழ்ழரை இலக்கம் மும் அவநெதிகுல பெருமலைகள்ளு
ம் விக்கிரம வீரர் சக்கரகொட்டமும் முதுரைபடவல் மதுரை மண்டலமுங் காமிடைவளை நாமணை கொண்ணை
யும் வெங்சினவீரர் பங்ச பள்ளியும் பாசுடை பழந மாசுணி தெசமும் அயர்வில் வண்கித்தி ஆதிநகரவையிற் சந்திரன் தொ
ல் குலத்திந்திரதிலதனை விளையமாசுளத்துக் கிளையொடும் பிடித்து பலதனத்தொடு நிறைகுலதனசூவையும் கிட்
டருஞ்செறிமுளை ஒட்ட விஷயமு பூசுர செய்நல்க்கொசலைநாடும் தந்மபாலனை வெம்முனை அழித்து வண்டுறை சொலை
தண்டபுத்தியும் இரணசூரனை முரணுகத்தாசிக திக்கனை கீர்த்தி தக்கண இலாடமுங் கொலிதசந்த மாவழிந்தொ
ட வங்காரசாரல் கங்காளதெயமும் தொடுகழற்சங்கை ஒட்ட மஹிபாலனை வெஞ்சமவிளாகத் தஞ்சுவித்தருளி ஒண்டிற
ல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்திர நெடுங்கடல் லுத்திரலாடமும் வெறிமலர்த்திர்த்தது தெறிபுநற் கங்கையும்
அலைகடல் நடுவும் பலகலஞ்செலுத்திய சங்கிராம்மவிசையதுங்கபன்மன்நாகிய கிடாரத்தரயனை வாகைய
ம்பொருகடல் கும்பகரியொடும் அகபட பிடித்துரிமையில் பிறசி பெருநெதி பிறக்கமும் ஆந்தவர் நகர் நகபொர்த்தொழில் வாசனண் பிரநற்பன இ
ல்லில் விஜந்திர தொராணம்மும் பொர்சதொருரிர் பன்மணிப்புதவமும் கனமணிக்கதவமும் நிறைல் விஜையமுதுறை காவல் லில்லிலங்க.....
பங்கமு விளைப்பனூறுடை வளைப்பந்தூறும் கலைத்தங்கொர் புகழ் தலைதக்கொலமும் திதமாவல்வினை மாதாமலிங்கமும் கலாமுறி....லிலாமுரிதெசமும் தெனக்கவர் பொழில் மாநக்கவாரமும் தொடுகடற்காவல் கடுமுரட் கடாரமும் மாப்பொருத
ண்டாற்கொண்ட கொப்பரகெசரிபன்மரான உடையார் ஸ்ரீராஜெந்திரசொழ்ழதெவர்க்கு யாண்டு 19 ஆவது ஜயங்கொண்ட சொழமண்டலத்து..........................


அப்பாடி எவ்வளவு பெரிய மெய்கீர்த்தி. கல்வெட்டுச் செய்தியே இன்னும் வரவில்லை. மெய்கீர்த்தியில் இராஜேந்திர சோழன் போரிட்டு ஜெயித்த நாடுகளின் பட்டியல் இருக்கிறது. என்னென்ன நாடுகள் என்று தெரிந்துகொள்வதற்கே ஒரு ஆய்வு தேவை.. மேலும் இந்த மெய்கீர்த்தியில் இரண்டு இடத்தில் கடற்காவல் பற்றிய குறிப்புள்ளது. அலைகடல் நடுவும் பலகலஞ்செலுத்திய என்பதில் இராஜேந்திரசோழன் ஒரு கடற்படையையே கொண்டு பல கப்பல்கள் செலுத்திய செய்தி கிடைக்கிறது. இத்தகைய வீரம் பொருந்திய மாமன்னனை கடற்கொள்ளைக்காரன் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள் சில [அறி]வாளர்கள்.. தமிழ் வியாபாரிகள் கொள்ளைக்காரர்கள் பயமின்றி கடல் கடந்து சென்று வியாபாரம் செய்ய வகைசெய்து கொடுத்தவனை கொள்ளைக்காரன் என்று தானே கூறமுடியும்.

இந்த மெய்கீர்த்திகள் புகழ்பாடலாக இருப்பதனால் அவை கற்பனை என்று கருத இடமில்லை. ஒவ்வொரு ஆட்சியாண்டு மெய்கீர்த்திகளையும் ஆராய்ந்து அம்மன்னன் எந்த ஆட்சியாண்டில் எந்த நாட்டைக் கைப்பற்றினான் என்று கூட கூறமுடியும்.. கற்பனையென்றால் இப்படி ஒவ்வொரு ஆண்டும் மெய்கீர்த்தி வேறுபட தேவையில்லையே.

கல்வெட்டுகளின் மூலம் இராஜேந்திரரின் வீரம் மட்டுமா தெரிகிறது. திருவலஞ்சுழியில் உள்ள கல்வெட்டு மன்னர் இராஜேந்திரரின் ஒரு விருதுப்பெயரை வழங்குகிறது. அந்த விருதுப்பெயர் இந்த ஒரு கல்வெட்டில் மட்டுமே காணக்கிடைக்கிறது. முதலாம் இராஜராஜர் தம்மை சிவபாதசேகரன் என்று பெருமையுடன் அழைத்துக்கொண்டதை அவருடைய பல கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. அவரை பின்பற்றி இராஜேந்திரரும் தம்மை அதேபொருள் தரும்வகையில் சிவசரணசேகரன் என்று அழைத்துக் கொண்டதை இத்திருவலஞ்சுழிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இப்படி சிவனின் சரணங்களை பற்றியவன் பக்தியில்லாமலா இப்படி தன்னை அழைத்துக்கொண்டிருப்பான். இராஜேந்திரரின் பக்திக்கு சான்றாக அவர் கோயிலுக்கு வழங்கிய கொடைகள் ஏராளம். அவையும் திருவலஞ்சுழி மற்றும் இராஜராஜீஸ்வரத்துக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரரின் காதலும், அவரின் சிற்றன்னையிடம் கொண்ட அன்பும் பக்தியும் கூட கல்வெட்டுகளின் மூலம் தெரியவருகிறது. அவருக்கு பரவை நங்கையிடம் இருந்த காதல் திருவாரூர் கல்வெட்டுகளின் வழி அறியமுடிகிறது.

திருவாரூரில் வீதிவிடங்கதேவர் கோயிலை கற்றளியாக்கி அக்கோயில் விமானத்திற்கு பரவை நங்கையார் பொன்வேய்ந்ததைப் பற்றித் தெரிவிக்கும் கல்வெட்டு பின்வருமாறு தொடங்குகிறது.

உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு
இருபதாவது உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் அணுக்கியார்
பரவை நங்கையார் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டு
திருவாரூர் கூற்றத்து திருவாரூர் உடையார்
வீதிவிடங்க தேவர் திருக்கற்றளி எடுப்பித்து
உடையார் வீதிவிடங்க தேவர்
அணுக்கியார் பரவை நங்கையார் யாண்டு
18 வது நாள் 38 முதல்
நாள் 199 வரை உடையார்
வீதிவிடங்க தேவர் கோயிலில் குடத்திலும்
பத்மத்திலும் கம்பிலும் சிகரத்திலும் வாய்
மடையிலும் நாலு நாசியிலும் உள் குட்டத்தி
லும் ஆக பந்தயம் கழஞ்சோடு ஆயிரத்து
நானூற்றி ஒன்றினாலும் முக்கழஞ்சோடு
ஆயிரத்து நானூற்றி முப்பத்தெட்டினாலும்
இருகழஞ்சோடு இரண்டாயிரத்து ஒரு
நூற்று ஒருபத்தெட்டினாலும் தகடு
நூற்றம்பத்தெட்டினாலும் சீரிணி நூற்
றொருபத்தினாலும் குடிஞைக் கல்லால்
மேய்ந்த பொன் இருபதினாயிரத்து அறுநூற்று
நாற்பத்து முக்கழஞ்சே ஏழு மஞ்சாடியும்
................................................


இதில் கவனிக்கப்பட வேண்டிய சொல் அணுக்கியார் என்பது. அணுக்கி என்பது நண்பி, காதலி என்ற பொருள் படும். பரவை நங்கை இராஜேந்திரனின் மனைவியாக பெருந்தேவியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அணுக்கியார் என்ற சொல்லாட்சியும், அவர் ஒரு கோயிலுக்கு பொன் வேயும் அளவிற்கு நல்ல நிலைமையுடன் இருந்ததையும் அதை மிக்க முக்கியத்துவம் கொடுத்து கல்வெட்டில் பொறித்திருப்பதையும் பார்க்கும் பொழுது பரவை நங்கையார் மிக்க மரியாதையும் செல்வாக்கும் பெற்றிருந்திருப்பார் என்பது தெள்ளத் தெளிவு.

இராஜேந்திரர் தனது சிற்றன்னையான பஞ்சவன்மாதேவியின் நினைவாக ஒரு பள்ளிப்படைகோயில் எடுப்பித்திருக்கிறார். அதை மாதேவீச்சுரம் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. அவர் தன் சிற்றன்னையிடம் கொண்ட பெரும் அன்பிற்கு இந்த ஒரு கல்வெட்டுச் சான்று போதுமே.

இராஜேந்திரரின் பரந்த இதயத்தை கலையுணர்வை அவரின் கங்கைகொண்டசோழபுரம் கோயிலுக்குச் சென்று பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். அத்தகைய எழில் கொண்ட மாபெரும் கோயில் விமானம் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தை தவிர வேறு இல்லை என்றே கூட சொல்லலாம்.

இப்படி அன்பும் காதலும், கலையுணர்வும் வீரமும் ஒருங்கே கொண்டிருந்த, தமிழரின் கொடியை கடல் கடந்த நாடுகளிலும் படர விட்ட, மக்கள் போற்றும் சிறந்த மன்னராக விளங்கிய இராஜேந்திர சோழரை இச்சிறப்பிதழை படிக்கும் வாசகர்கள் ஒரு நிமிடம் பெருமையுடன் நினைத்து போற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.


this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.