http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 62

இதழ் 62
[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

நன்றியும் சிறப்பும்
கல்வெட்டில் மருத்துவர்
கங்கைகொண்ட சோழீசுவரம் சிற்பங்கள் - புகைப்படத்தொகுப்பு
ஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை
திருமன்னிவளர...
சிபியும் நானும் - 1
தனிமையென்னும் தீவினிலே!
இதழ் எண். 62 > சிறப்பிதழ் பகுதி
ஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை
இரா. கலைக்கோவன்


அன்புள்ள வாருணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உனக்கு எழுதுவதில் உள்ளம் மகிழ்கிறது. அன்பானவர்களோடு சிந்தனைகளையும் கனவுகளையும் நினைவுப் பதிவுகளையும் பகிர்ந்துகொள்வதே ஒரு சுகம்தான். தம்பி கமலிடமிருந்து வந்த ஒரு வேண்டுகோள்தான், 'பல பணி நிவந்தக்காரனாய்' மாறியிருந்த என்னை உன் பக்கம் திருப்பியுள்ளது. வரலாறு இணையதள இதழ் இந்தத் திங்கள் இராஜேந்திர சோழர் சிறப்பிதழை வெளிக்கொணர்வதால் அப்பெருந்தகை பற்றி என்னையும் அவ்விதழிற்கு ஒரு கட்டுரை எழுதுமாறு கமல் கேட்டிருந்தார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் வெளிவராமல் இருந்திருக்குமானால், தமிழ்நாட்டு மக்கள் வெள்ளம் முதல் இராஜராஜரை இந்த அளவிற்குக் கொண்டாடிக் கூத்திடாது. கல்கியின் சொல்வளமும் கதையோட்டமும் தமிழ்நாட்டு மக்களுள் என்றென்றும் மறக்கமுடியாத மாமன்னராய் இராஜராஜரைச் செதுக்கிவிட்டன. கல்கி வெளிப்படுத்திய இராஜராஜரை மீறித் தமிழ்நாட்டின் எந்த மன்னரும் அவர் எவ்வளவுதான் சிறப்புக்குரியவராக வாழ்ந்திருந்தபோதும் இந்தத் தலைமுறைத் தமிழர்கள் மீது ஆட்சிசெலுத்த முடியாது. அடுத்த தலைமுறை, அல்லது அதற்கடுத்த தலைமுறை வேண்டுமானல், அதுவும் அவர்கள்மீது, 'பொன்னியின் செல்வன்' பார்வைகள் விழாமல் போகுமானால் தமிழ்நாட்டு மன்னர்களில் சிறந்தவர் யார் யார் என்பது குறித்துத் திறந்த பார்வையுடன் ஒரு தேடல் நிகழ்த்தக்கூடும்.

பொன்னியின் செல்வனைப் படித்திருந்தாலும், அத்தொடரின் வரலாற்று இழைகள் தெரியும் என்பதால், அந்தக் கற்பனைக் களஞ்சியத்திற்குள் உண்மைகளைக் காணமுடிந்த எனக்கு, இராஜேந்திரரின் பேருரு புரியாமல் இல்லை. இராஜராஜர், இராஜேந்திரர் எனும் இந்த இரண்டு பெரும் மேருகளின் உண்மையான வடிவங்களைச் சரியாக வரைந்து காட்ட அவர்தம் காலக் கல்வெட்டுகளும் கலைப்படைப்புகளுமே உதவமுடியும். அவர்களின் கலைப்படைப்புகளை ஓரளவு கண்ணுற்றிருந்தபோதும், அந்தப் படைப்புகளில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் சிந்தனை வளங்களை அள்ளிப்பருகி அநுபவித்திருந்தபோதும் கல்வெட்டுகளை முழுமையாகப் படிக்காமல் கருத்துக் கூறிவிடுவது எளிதன்று. காலம் அதற்கு வாய்ப்புத்தரும் என்ற நம்பிக்கையோடு, இராஜேந்திரரைப் பற்றிய படப்பிடிப்பைப் பின்னொரு நாளுக்குத் தள்ளிவைத்து, அந்தப் பெருமகன் தன் தாய் நினைவாக எழுப்பிய திருக்கோயிலொன்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இந்தத் தங்கத் தமிழ்நாட்டில் என்ன பாடுபட்டிருக்கிறது என்பதை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீசுவரத்திற்கு அருகிலுள்ள தோப்பொன்றின் பின்னால் மறைந்து கிடந்தது அந்தக் கோயில். எனக்கு அதை அறிமுகப்படுத்தியவர் தமிழ்நாட்டின் சோழர் காலக் கோயில்களையெல்லாம் வரலாறாகப் பதிவு செய்து நான்கு அற்புத நூல்களை மட்டும் படைத்தளித்த ஒரு பள்ளித் தலைமையாசிரியரான திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம். 'பஞ்சவன்மாதேவீசுவரம்' என்று அறியப்பட்ட அந்தப் பள்ளிப்படைக் கோயிலைக் காண நானும் என் துணைவியும் பிள்ளைகளும் திரு. ஆறுமுகமும் சென்றபோது, யாராலும் அந்தக் கோயில் எங்கிருக்கிறது என்பதைக் கூறக்கூடவில்லை.

பட்டீசுவரத்தில் சிவாச்சாரியம் செய்துகொண்டிருந்த திரு. சித்தநாதன்தான் எங்களை அங்கு அழைத்துச் சென்றார். 'இராமநாதன் கோயில்' என்று எந்தத் தொடர்புமற்ற ஒரு பெயரால் அக்கோயிலை அழைத்துக்கொண்டிருந்தனர் அங்கிருந்த மக்கள். மேற்றளி செல்லும் பாதையில் தனியார் தோப்பொன்றில் நுழைந்து, அதன் உரிமையாளர் அநுமதி பெற்று, அவர்கள் எல்லையாகப் போட்டிருந்த முட்புதர்களைத் தாண்டி, வயல்வெளிகளுக்கு நடுவில் வரம்பொன்றின் மீது ஏறி வெளிவந்த எங்கள் கண்களில், கசக்கி எறியப்பட்ட குப்பையைப் போல் படமாகியது பஞ்சவன்மாதேவீசுவரம்.

கோயில் சீரழிந்திருந்தது. பெருமண்டபச் சுவரோ விரிசல் விட்டுச் சிதறியிருந்தது. சண்டேசுவரர் திருமுன் அடித்தளம் கலங்கிச் சாய்ந்திருந்தது. திருச்சுற்று முழுவதும் முட்செடிகளும் காட்டுக்கொடிகளும். ஆங்காங்கே ஆடுகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. விமானத்தில் இரண்டு மரங்கள் கிளைத்திருந்தன. கோட்டச் சிற்பங்கள் எங்களைப் பார்த்துக் கதறத் தொடங்கின. கல்வெட்டைத் தேடினோம். காணவே முடியாதபடி செடிகொடிகளின் பின்னல்.

சித்தநாத குருக்களின் உதவியுடன் ஊருக்குள் அரிவாள் பெற்று அரை மணிநேர உழைப்பில் செடிகொடிகளை ஓரளவிற்கு அகற்றியபோது முதல் இராஜேந்திரரின் அந்த ஒப்பற்ற கல்வெட்டு கண்களில் படமானது. 'இராஜேந்திரா' என்று உள்ளம் கூவியது. தமிழ்நாட்டு வரலாற்றில் எத்தனையோ பெண்ணரசிகள் அருஞ்செயல் மடந்தையராய் வலம் வருகின்றனர். அவர்கள் யாருக்கும் கிடைக்காத பேறு பஞ்சவன் மாதேவிக்குக் கிடைத்தது. இராஜராஜரின் மனைவியருள் ஒருவரான அவரிடம் வானவன் மாதேவியின் மகன் இராஜேந்திரனுக்கு ஏன் இத்தனை ஈர்ப்பு! தம்மைப் பெற்றவளைவிட இந்தச் சிற்றன்னையை அந்தக் கோமகன் ஏன் பெரிதாகக் கருதினார்?

தமிழ்நாட்டின் நெடிய வரலாற்றில் கோயிலாகக் குடியிருக்கும் ஒரே பெண்ணுயிர் பஞ்சவன்மாதேவிதான். தாய்க்கு ஒரு மகன் செய்து வைத்த மிகப் பெரிய வரலாற்றுப் படையல் அந்தக் கோயில். நானும் உடன் வந்தோரும் அந்தக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் ஆர்வத்தோடும் கவலையோடும் பார்த்தோம். உள்ளே நுழைய முடியாத அளவிற்கு இருட்டு. துணிந்து நுழைந்தபோது வெளவால்களின் விரட்டு. மீண்டும் சித்தநாதனே உதவினார்.

அவர் கொண்டுவந்த ஒளிவிளக்கு கருவறையில் தனித்திருந்த சிவலிங்கத்தின்மீது பட்டபோது என்னால் அங்கு இராஜேந்திரரைத்தான் பார்க்கமுடிந்தது. உலகளந்த பெருமாளைப் போல் அந்த மனிதரின் உயரமும் வளர்ந்து கொண்டே போனது. 'தாய்' என்ற சிந்தனைக்கும் உறவுக்கும் இராஜேந்திரர் அளித்திருந்த இணையற்ற மதிப்பும் உயரமும் என்னை அழவைத்தன. மெளனமாக அழுதேன். அன்பை அநுபவித்தவர்களுக்குத்தான் அன்பு அடையாளப்படும்.

பஞ்சவன்மாதேவீசுவரத்தைப் பார்த்தபிறகு வேறெந்தக் கோயிலுக்கும் எங்களால் செல்லக்கூடவில்லை. அந்தக் கோயில் எந்த நிருவாகத்தின் கீழ் வருகிறது, அதன் இன்றைய நிலைக்குக் காரணங்கள் யாவை, எத்தனை காலமாக இந்த நிலை உள்ளது என ஏராளமான கேள்விகளைச் சிந்தநாதனிடம் கேட்டு விடைகளை வாங்கிக் கொண்டேன். கோயில் அறநிலையத்துறையின் கீழிருப்பதும் பட்டீசுவரம் கோயில் நிருவாக அலுவலரே அதற்குப் பொறுப்பாளர் என்பதும் தெரியவந்ததால் பட்டீசுவரம் கோயில் சென்றோம். நிருவாக அதிகாரி அன்று கோயிலில் இல்லை. அலுவலகத்திலிருந்த கணக்கருக்கு அப்படி ஒரு கோயில் இருப்பதே தெரியவில்லை. சித்தநாதன் விளக்கிய பிறகு ஏதோ புரிந்துவிட்டது போல் அந்தக் கணக்கர் தலையை ஆட்டியபோது என் உள்ளத்தில் எங்கோ நெருடியது.

சிராப்பள்ளி மீண்டதும் அறநிலையத்துறை ஆணையருக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அந்தக் கோயிலின் பெருமை, தனித்தன்மை, சிறப்புகள், இன்றைய நிலைமை என அனைத்தும் எழுதி உரியன செய்யுமாறு வேண்டி மடல்கள் பதிவஞ்சலில் அனுப்பினேன். மூன்று மாதங்கள் காத்திருந்தும் மறுமொழியில்லை. மீண்டும் நினைவூட்டல் மடல்கள் எழுதினேன். பதிலில்லை. அந்த சமயம் தேர்தல் நடந்து முடிந்து மாண்புமிகு முதல்வராகக் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்தார். மக்கள் குறை தீர்க்கும் பிரிவாக, 'ஊஆ ஊந்ட்ட்' ஒன்று அப்போது திறக்கப்பட்டது. அந்தப் பிரிவின் அலுவலருக்குப் பஞ்சவன்மாதேவீசுரத்தின் நிலைமை பற்றி எழுதினேன். முதல் மடலுக்கு எந்த மறுமொழியும் இல்லை. மூன்று மாதங்கள் பொறுத்திருந்து மீண்டும் ஒரு மடல் எழுதினேன். பதில் இல்லை. அறநிலையத்துறை ஆணையரை நேரில் பார்க்க வாய்ப்பளிக்குமாறு கேட்டு எழுதிய மடலுக்கும் பதில் இல்லை.

1985ல் நானும் வாணியும் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். பஞ்சவன்மாதேவீசுவரம் அன்றிருந்த நிலைமை எங்களை ஆழ்ந்த துயரத்திற்கு ஆளாக்கியது. கோயில் அழிவதற்கு முன்னால் கல்வெட்டையாவது பதிவுசெய்துவிடக் கருதினேன். நடுவணரசின் கல்வெட்டுத்துறை அந்தக் கல்வெட்டைப் பதிவுசெய்திருந்தபோதும் பாடம் வெளியாகவில்லை. திரு. மஜீதிடம் கேட்டபோது தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை அந்தக் கல்வெட்டைப் படியெடுக்கவில்லை என்பது தெரியவந்தது. மஜீது, நான், நண்பர் கி. ஸ்ரீதரன், வாணி, ஆறுமுகம் ஆகிய ஐவரும் பஞ்சவன்மாதேவீசுவரம் சென்று அந்தக் கல்வெட்டைப் பட்ித்துப் படியெடுத்தோம். அந்த மகத்தான பணியை இன்று நினைத்தாலும் உள்ளம் நிறைவுகொள்கிறது. மஜீதும் ஸ்ரீதரனும் அந்தப் பணியில் பெரும் பங்காற்றினர். அந்தக் கல்வெட்டின் பாடத்தைப் படித்த பிறகு அந்தக் கோயிலை எப்படியாகிலும் காப்பாற்றவேண்டும் என்ற முனைப்பு மிகுதியானது. தொடர்ந்து பல முயற்சிகள்.

'ஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை' என்ற தலைப்பில் அந்தக் கோயிலைப் பற்றி கட்டுரை எழுதி சிராப்பள்ளி வானெhலியில் உரைச்சித்திரமாக ஒலிபரப்பச் செய்தேன். 'எழில் கொஞ்சும் எறும்பியூர்' எனும் என் நூலிலும் அக்கட்டுரை இடம்பெற்றது. பலர் உளம் உருகி எழுதியிருந்தபோதும் தொலைப்பேசி வழிக் கருத்துக்களையும் ஆதரவையும் பகிர்ந்துகொண்ட போதும் செயல் வடிவம் எதுவும் உருவாகவில்லை.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணியிலிருந்த பேராசிரியர் முனைவர் ச.முத்துக்குமரன் புள்ளமங்கை கோயிலைப் பார்க்க விழைந்தபோது அவரைப் பஞ்சவன்மாதேவீசுவரத்திற்கும் அழைத்துச்சென்றேன். அப்போது புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. ப. அறவாணனும் உடன் வந்திருந்தார். கோயிலின் நிலையைப் பார்த்த இருவருமே ஆழ வருந்தினர். தமிழ் உணர்வு மிக்கிருந்த காரணத்தால் அவர்கள் வருத்தமும் மடல்களாக மாறி அரசைச் சென்றடைந்தன.

பேராசிரியர் அறவாணன் வார இதழ் ஒன்றில் இக்கோயில் பற்றி மிகுந்த கவலையுடன் எடுத்துச் சொல்லியிருந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்தக் குறிப்பையும் இணைத்து மீண்டும் ஒரு மடலை முதல்வரின் மக்கள் குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்பினேன். பதினைந்து நாட்களில் மறுமொழி அனுப்பினார்கள். ஓர் அஞ்சலட்டையில் வந்த மறுமொழி, என் கடிதம் அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் மேற்கொண்டு வேண்டுவன செய்ய அத்துறையைத் தொடர்பு கொள்ளும்படியும் கூறியது.

பலமுறை எழுதியும் அறநிலையத்துறையிடமிடந்து எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை. சிராப்பள்ளியிலிருந்த அறநிலையத்துறை நண்பர்களின் வழி முயன்றும் பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. 1990களில் கும்பகோணம் செல்லும் வாய்ப்பமைந்தது. அப்போது பட்டீசுவரம் சென்று நிருவாக அலுவலரைச் சந்தித்தேன். அரசிடமிருந்து கடிதம் வந்திருப்பதாகவும் பஞ்சவன்மாதேவீசுவரம் பற்றி விரிவான அளவில் தகவல்கள் சேகரித்து வருவதாகவும் விரைவில் எல்லாம் இனிதே நிகழும் என்றும் அவர் கூறியபோது அதை நம்பி உளம் நெகிழ்ந்தேன். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அங்குச் செல்ல வாய்த்தது. அப்போது நிருவாக அலுவலர் மாறியிருந்தார். புதிதாக வந்திருந்தவரிடம் தகவல் கேட்டபோது தமக்கு அது பற்றி ஏதும் தெரியாது என்றும் தொடர்புடைய கோப்புகளைப் பார்த்த பிறகு என்னுடன் தொடர்புகொள்வதாகவும் கூறினார். ஓராண்டிற்கு மேல் காத்திருந்தும் பலனில்லை.

மீண்டும் அறநிலையத்துறைக்கும் முதல்வரின் மக்கள் குறை தீர்க்கும் பிரிவிற்கும் மடல்கள் எழுதினேன். ஒவ்வொரு முறையும் பின்னிணைப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போயிற்று. கும்பகோணம் போக நேர்ந்தபோதெல்லாம் பட்டீசுவரம் சென்று நிருவாக அதிகாரியைக் கண்டு பேசிவந்தேன். என்னுடைய தொடரம்புகளால் தொல்லைக்கு ஆளான அவர் ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதுநாள்வரை திறந்த வீடாக இருந்த பஞ்சவன்மாதேவீசுவரத்தை மூங்கில் கதவுகள் பொருத்திப் பூட்டிவைத்தார். கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக இருந்த அந்தக் கோயில் பூட்டப்பட்ட பழைய வீடாயிற்று. அது ஒருவகையில் பாதுகாப்பே என்றாலும், கோயிலுக்குள் வந்து சென்று கொண்டிருந்த ஒரு சிலரும் அந்த வாய்ப்பை இழந்தனர். அதன் விளைவாகக் கோயில் மேலும் பாழடைந்து போயிற்று.

அந்தச் சூழலில்தான் நானும் நளினியும் அகிலாவும் அங்குச் சென்றோம். பட்டீசுவரம் சென்று சாவி பெற்று வந்து கோயிலை அடைந்தபோது அதிர்ந்து போனோம். கோயிலைச் சூழ வீடுகள் பெருகியிருந்தன. கோயிலுக்கு முன்னாலிருந்த இடம் நிலமாக மாறிப் பயிர்கள் வளர்ந்திருந்தன. நடப்பதற்குக் கூடவழியில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் கோயில் நாற்புறத்தும் நெருக்குதலுக்கு ஆளாகியிருந்தது. ஆக்கிரமிப்பின் உச்சத்தை அன்று பார்த்தோம். மனச் சான்றில்லாத மக்களே கோயிலைச் சூழ்ந்திருந்தனர்.. மனமே இல்லாதவர்களிடம் பொறுப்புகள் இருந்தன. கதவைத் திறந்து உள்நுழைந்தால் திருச்சுற்று வரமுடியாதபடி புதர்கள் மண்டியிருந்தன. புதிதாகச் சுவர்கள் சரிந்து செங்கற்கள் சிதறியிருந்தன. புயலடித்துவிட்டுப் போன ஊரைப் போலக் கோயில் களையிழந்திருந்து. வேதனையுடன் பட்டீசுவரம் திரும்பிய நாங்கள் நிருவாக அதிகாரியைச் சந்திக்க முயன்றோம். முடியவில்லை. அலுவலகத்தில் இருந்தவர்களிடம் தகவல்களைத் தந்து சென்றோம்.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் எழுத்தாளர் திரு. பாலகுமாரன் பஞ்சவன்மாதேவீசுவரத்தைப் பார்த்துவிட்டுக் குமுதம் வார இதழில் எழுதியிருந்த கட்டுரை என் நம்பிக்கையை வளர்த்தது. மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் எழுதிய கட்டுரை என்பதுடன், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் படிக்கும் வார இதழில் அது வெளியான சூழல் எனக்கு ஊக்கமளித்தது. உடனடியாக நடவடிக்கைகள் தொடங்கும் என்ற ஆவலுடன் நாளிதழ்களில் செய்தி நோக்கிக் காத்திருந்தேன். எந்தப் பயனுமில்லை. எழுதுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் எதுபற்றி எழுதினாலும் அதில் தினையளவேனும் தங்கட்குப் பயனிருந்தால்தான் அரசியல்வாதிகள் ஆர்வம் கொள்வார்கள் என்ற உண்மையைக் 'குமுதம்' கட்டுரை எனக்குள் ஆழப் பதியச் செய்தது. இனி எது செய்தும் பஞ்சவன்மாதேவீசுவரத்தைக் காப்பாற்ற முடியாது என்ற எண்ணம் உள்ளத்தில் உருக்கொண்டது.

அந்த சமயத்தில்தான் மீண்டும் தேர்தல் வந்து தி. மு. க. அரசு அமைந்தது. மருங்காபுரிச் சட்டப்பேரவை உறுப்பினர் புலவர் ம. செங்குட்டுவன் அறநிலையத்துறை அமைச்சரானார். அவர் 'புலவர்' என்ற தகுதிப்பாடே, எனக்குப் பெரு மகிழ்வு தந்தது. அமைச்சர் பொறுப்பேற்றதும் சிராப்பள்ளி வந்த அவரைச் சந்திக்கச் சென்றேன். அன்புடனும் மதிப்புடனும் வரவேற்றவர் என் தந்தையாரையும் என்னையும் நன்கறிந்திருப்பதாகக் கூறியதும் மகிழ்ந்தேன். அவரிடம் பஞ்சவன்மாதேவீசுவரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் தந்து அதன் துயரம் தோய்ந்த சூழலை எடுத்துரைத்தேன். தாம் இப்போதுதான் அமைச்சர் பொறுப்பேற்றிருப்பதாகவும் விரைந்து இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். பஞ்சவன்மாதேவீசுவரம் இனி வாழ்வு பெற்றுவிடும் என்ற களிப்பில் திரும்பினேன்.

சில மாதங்கள் சென்றன களஆய்விற்காகக் கும்பகோணம் சென்றிருந்த போது பஞ்சவன்மாதேவீசுவரம் சென்று வந்தேன். மூங்கில் கதவுகள் சிதைந்திருந்தன. அதனால் பழையபடி கோயில் தொழுவமாக மாறியிருந்தது. வெளவால்கள் பெருகியிருந்தன. ஆடு, மாடுகளுக்காக கோயில் சுற்று மேய்ச்சல் நிலமாகச் செழித்திருந்தது. அருகில் விசாரித்ததில் எப்போதாவது பட்டீசுவரத்திலிருந்து சிவாச்சாரியார் வந்து பூசை செய்வதாகச் சொன்னார்கள். துன்பம் சூழத் திரும்பினோம். அறநிலையத்துறை அமைச்சருக்கு நினைவூட்டல் மடல் எழுதினேன். மறுமொழி இல்லை.

தமிழ்நாட்டு வரலாற்றை முறையாக எழுதும் பணியைத் தொடரக் கருதிய தமிழ்நாடு அரசு அதற்கான குழுவில் ஒருவனாக என்னைச் சேர்த்திருந்தது. தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் இப்பணி இருந்ததால், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு. தமிழ்க்குடிமகனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவரிடம் பஞ்சவன்மாதேவீசுவரம் பற்றி எடுத்துரைத்து அறநிலையத்துறை அமைச்சர் வழிக் கோயிலைக் காப்பாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டேன். சில மாதங்கள் சென்றன.

ஒரு நாள் திடீரெனப் புலவர் செங்குட்டுவன் அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தமிழ்க்குடிமகன் அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார். அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சிராப்பள்ளி வந்த முதல் வருகையின்போதே தமிழ்க்குடிமகனைச் சந்தித்தேன். கல்லூரி முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிந்தவன் என்பதால் உரிமையோடு அவரிடம் முறையிட்டேன். 'இதைக்கூடச் செய்யாவிட்டால் தமிழ்நாட்டு வரலாறு பற்றிப் பேச நமக்குத் தகுதியில்லாது போய்விடும்' என்றுரைத்தேன். ஒரு தாய்க்கு மகன் எடுத்த பள்ளிப்படை, தமிழ்நாட்டில் இது போன்ற கோயில் வேறொன்றில்லை என்பதையெல்லாம் அவர் நெஞ்சில் ஆழப் பதியுமாறு உணர்த்தினேன். அன்று பகல் முழுவதும் அவருடன் இருந்ததால், பலமுறை இது குறித்து அவருடன் உரையாட முடிந்தது. உடனிருந்த அறநிலையத்துறை உயர் அலுவலர்களிடம் தாம் கும்பகோணம் வரும்போது அக்கோயிலைப் பார்வையிட ஆவன செய்யுமாறு உத்தரவிட்டார். அவர் கும்பகோணம் வரும்போது தெரிவித்தால் நானும் அங்கு வந்து உடனிருப்பதாகக் கூறினேன்.

ஓரிரு மாதங்களில் அமைச்சர் தமிழ்க்குடிமகனைச் சென்னையில் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. பஞ்சவன்மாதேவீசுவரத்தைத் தாம் பார்த்துவிட்டதாகவும் உடனே அக்கோயிலைச் சீரமைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பணி தொடங்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார். அதற்குப் பிறகு அவர் பதவியிலிருந்த காலம்வரை நான்கைந்து முறை அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஒவ்வொரு முறையும் நம்பிக்கையூட்டும் தகவல் தருவார். ஆனால், கோயில் அப்படியேதான் இருந்தது. அடுத்த தேர்தலும் வந்து தமிழ்க்குடிமகன் கட்சி விலகிப் பின் அமரரானார். பஞ்சவன்மாதேவீசுரம் இருந்த நிலையில் எள்ளத்தனை மாற்றமும் இல்லை.

ஆண்டுகள் உருண்டோடின. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தத் திருக்கோயிலுக்கு எதுவும் செய்ய முடியாத மனிதனானேன்.. ஆனால், அங்குப் போகும்போதெல்லாம் உள்ளூர் ஆட்களின் உதவியோடு இயன்றவரை கோயிலைத் தூய்மை செய்து வந்தோம். இராஜேந்திரரின் பாசத்தைப் புரிந்து கொள்ளவோ, பஞ்சவன்மாதேவி எனும் அந்த மகத்தான தாயின் அன்புணர்வை விளங்கிக் கொள்ளவோ நம்மவர்கள் எவருக்கும் நேரமில்லை. ஆர்வமும் இல்லை. அன்னை, பாசம், தாய்நாடு, வரலாறு, மன்னர்கள், தமிழர் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் எந்த ஜீவனும் அந்த மண்ணையோ அதில் உறங்கிக் கிடக்கும் உணர்வுகளையோ புரிந்துகொள்ள விழையவில்லை.

மூன்றாண்டுகளுக்கு முன் திடீரென்று பஞ்சவன்மாதேவீசுவரத்திற்கு அதிர்ஷ்டம் அடித்தது. தமிழ்க்குடிமகன் போட்ட விதை முளைத்தெழ அத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அரசு வழி ஒரு செயல் நடைபெற அதிகபட்சம் எவ்வளவு காலம் ஆகும் என்பதை இது எனக்கு உணர்த்தியது.. எப்படியோ, பொறுப்பில் உள்ளவர்களின் திருநோக்கு இந்தப் பாழடைந்த கோயில் நோக்கியும் திரும்பியது. திருப்பணி பற்றிக் கருத்துக் கேட்டறிய கோயில் நிருவாகம் என்னை அழைத்திருந்தது. மகிழ்ச்சியோடு சென்று, கோயிலை அறிவியல் முறைப்படி திருப்பணி செய்யும் வழிகளைக் கூறிவந்தேன். கும்பகோணம் செல்ல ஓராண்டுக்கு மேல் வாய்ப்பமையவில்லை. இடையில் ஒரு முறை சென்றபோத கற்கள் பிரிக்கப்பட்டுத் திருப்பணி நடந்துகொண்டிருந்தது.

குடமுழுக்கு அழைப்பிதழ் வந்தபோதுதான் திருப்பணி முடிந்ததை அறிந்தேன். குடமுழுக்கு நிகழ்ச்சிக்குச் செல்லமுடியாமையால், பிறகொரு நாள் சென்றேன். சரிந்திருந்த சுவர்கள் நிமிர்ந்திருந்தன. சிதறியிருந்த சுவர்ப்பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தன. சிகரம், கிரீவம் இவை வண்ணப்பூச்சில் மினுமினுத்தன. சிற்பங்கள் வண்ணம் கொண்டு அழகிழந்திருந்தன. கருவறையில் வெளவால்கள் குறைந்திருந்தன. பிடிக்காத பெண்ணை விருப்பமில்லாதவர்கள் அழகூட்டினாற் போன்ற நிலையில்தான் கோயில் இருந்தது. பஞ்சவன்மாதேவீசுவரம் பள்ளிப்படைக் கல்வெட்டின் ஒரு பகுதி தென்திசைக்கடவுள் சிற்பத்திற்கு முன் எடுக்கப்பட்டிருந்த கட்டமைப்பால் மறைபட்டிருந்தது. செடிகொடிகள் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டிருந்தன. கோயில் ஆளரவமின்றி இருந்தது. வாய்ப்பமையும் போதெல்லாம் வழிபாடு நிகழ்வதாகக் கூறினார்கள்.

பள்ளிப்படைக் கல்வெட்டை முழுவதும் படிக்க வாய்ப்பாகத் தென்திசைக்கடவுள் முன் எழுப்பப்பட்டிருந்த பிற்காலக் கட்டமைப்பை அகற்றும் வழி தேடினோம். ஐம்பதாயிரம் செலவாகும் என்று அறிவுறுத்தப்பட்டது. துறை அலுவலர்களுடன் பலமுறை பேசி அந்தத் தொகை இருபத்தைந்தாயிரமாகக் குறைக்கப்பட்டது. வரலாறு இணையதள இதழில் இந்தப் பணிக்கான நன்கொடை கேட்டு வேண்டுகோள் வைத்தபோது கரூர் ஏர்வில் எக்ஸ்போர்ட்ஸ் திரு. கே. என். பாலுசாமி தாமே முழுத் தொகையையும் தருவதாக முன்வந்து பணி நிறைவேறத் துணையிருந்தார். திருவாளர்கள் சு. சீதாராமன், பால. பத்மநாபன் துணையுடன் பேராசிரியர் மு.நளினி கல்வெட்டின் விட்டுப்போன பகுதியைப் படித்துத் தந்தார். முதன்முறையாக அக்கல்வெட்டின் முழுப்பாடமும் வரலாறு இணையதள இதழில் வெளியானது.

இன்று அந்தக் கோயில் அழிவிலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்! உரியவாறு அந்தக் 'காப்பாற்றல்' நிகழவில்லை என்றாலும், நிகழ்ந்தவரை மகிழ்வே. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் காப்பில் சீரமைக்கப்பட்டு வாழும் பெருங் கோயில்கள் போல் பஞ்சவன்மாதேவீசுவரமும் பண்பாட்டுப் பலகணியாய்ப் பொலியவேண்டும். அறநிலையத்துறை அதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு பொதுமக்கள் வற்புறுத்தவேண்டும். ஆனால், இவையெல்லாம் இந்தத் திருநாட்டில் நடக்கக் கூடியவையா?

இருபதாண்டுத் தொடர்ப் போராட்டத்தால் அந்தக் கோயிலைச் சிதைந்துவிடாமல் காப்பாற்ற முடிந்திருக்கிறது அவ்வளவுதான். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' என்ற பாரதியின் பாடலடிகளே புரியாத நமக்கு, இராஜேந்திரரின் தாய்ப்பாசமோ பஞ்சவன்மாதேவியின் மாண்புகளோ எங்கே விளங்கப்போகிறது! அன்பில் விளைந்த அருங்கோயிலாம் பஞ்சவன்மாதேவீசுவரத்தை உரியவாறு சிறப்பிக்க முடியாமை ஆழ்ந்த துன்பம் தந்தாலும், அதன் பெருமையை இந்த நாடு என்றேனும் ஒரு நாள் உணரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காலத்தின் நடை விசித்திரமானதுதான். ஆனால், அது விழுதுகளைத் தாங்கவும் வேர்களைக் காக்கவும் தவறுவதே இல்லை.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.