http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 63

இதழ் 63
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பார்வைகளைப் பண்படுத்தும் பயணங்கள்
மதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்
மதுரகவி நந்தவனம் அழித்தொழிப்பு - ஒரு வேண்டுகோள்
கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள்
திருநந்திக்கரைக் குடைவரை
கழுகுமலைப் பயணக்கடிதம் - 4
அன்பே! நீயின்றி
இதழ் எண். 63 > சுடச்சுட
மதுரகவி நந்தவனம் அழித்தொழிப்பு - ஒரு வேண்டுகோள்
கோகுல் சேஷாத்ரி
(மாண்புமிகு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சருக்கும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும் மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சருக்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையருக்கும் அருள்மிகு அரங்கநாதர் கோயில் தேவஸ்தானத்தாருக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் நகல், வரலாறு டாட் காம் வாசகர்களின் பார்வைக்கு. இக்கடிதம் தொடர்பாக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையருக்கு எழுத விழைவோர் அடியிற்காணும் முகவரிக்கு எழுதலாம் அல்லது endowments@sancharnet.in என்கிற ஈமெயில் விலாசத்திற்கு மின்னஞ்சல் செய்யலாம்.)


Update 1: மதுரகவி நந்தவனம் - காவிரிக்கரையில் களர்நிலமா?
Update 2: மதுரகவி நந்தவனம் - திருக்கோயில் நிர்வாகம் விளக்கம்
Update 3: மதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்


பெறுநர் / To

Thiru. P.R.Shampath IAS
Commisionar
The Hindu Religious & Charitable Endowments Department
119, Uthamar Gandhi Salai,
Nungambakkam, Chennai - 600 034.
Phone : +91-44-28334811, 12
Fax : +91-44-28334816
E-mail : endowments@sancharnet.in

பொருள் - திருவரங்கத்தில் அமைந்துள்ள மதுரகவி நந்தவனம் எனும் நூற்று நாற்பது ஆண்டுகள் பழமையான நந்தவனத்தை ஆக்கிரமித்து அங்கு விருந்தினர் விடுதியும் பணியாளர் குடியிருப்புக்களும் கட்டும் அரங்கநாதர் திருக்கோயில் தேவஸ்தானத்தார் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இது தொடர்பாக மதுரகவி நந்தவன நிலங்கள் தேவஸ்தானத்தாருக்கே உரியன என்று தாங்கள் அனுப்பியுள்ள அரசு ஆணை எண்.48273/2006 ஆர்3-1 / தேதி.31-07-2009 யை திரும்பப் பெறக்கோரியும் உலகத்தமிழர்கள் சார்பிலும் வரலாற்று நேயர்கள் சார்பிலும் வைக்கப்படும் வேண்டுகோள்

மதிப்பிற்குரிய இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் அவர்களுக்கு

வணக்கம்.

ஐயா, பண்டைய மன்னர்களால் பாரம்பரியச் சின்னங்களாக - வரலாற்றுப் பொக்கிஷங்களாக - தமிழகமெங்கிலும் கட்டப்பட்டுள்ள பழங்கோயில்கள் மட்டும் ஏறக்குறைய முப்பத்து மூவாயிரத்திற்கும் மேல் இருக்கும். இப்பழந்திருக்கோயில்களின் கல்வெட்டுக்களையும் இதர வரலாற்றுத் தரவுகளையும் படிக்குங்கால், இவை அனைத்துமே ஒரு காலத்தில் நல்ல நிலையில் நிலபுலன்களுடனும் அணிமணிகளுடனும் குளம் குட்டைகளுடனும் வேறு பல வசதிகளுடனும் திகழ்ந்தன என்பது தெரியவருகிறது. திருக்கோயில்களை உருவாக்கிய மன்னர்களும் சிற்றரசர்களும் அவற்றைப் புரந்த ஊரவையும் சபைகளும் தனிமனிதர்களும் திருக்கோயில் எனும் இயக்கம் நாளாவட்டத்தில் அழிந்துபட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான நிவந்தங்களைக் கொடுத்து அவற்றைப் பிற்காலச் சந்ததியர் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பதற்காக அவ்விபரங்களைத் தெளிவாகக் கல்லிலும் வடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.



மதுரகவி நந்தவனத்தில் உள்ள அவரது திருவுருவம்.


இக்கல்வெட்டுக்களினால் தெரியவரும் பல்வேறு செய்திகளுள் முக்கியமான ஒன்று, இக்கோயில்கள் ஒவ்வொன்றும் தத்தமக்குரிய பிரத்யேகத் திருநந்தவனத்துடன் திகழ்ந்தன என்பதுதான். கடவுட் பூசனையிலும் வழிபாட்டிலும் முக்கிய அங்கமாகத் திகழும் மலர்களைத் தமக்குரிய நந்தவனத்திலிருந்தே கோயில்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவும் இறைவழிபாட்டிற்குரிய மலர்களை வியாபார ரீதியில் சந்தையிலிருந்து தருவிக்கக்கூடாது என்பதற்காகவும் மிகுந்த முனைப்புடன் இவை அமைக்கப்பெற்றன. நந்தவனம் அமைந்திருந்த இடம் திருமாலைப்புறம் என்றழைக்கப்பட்டது. நந்தவனத்தில் பணிபுரிந்த பெருமக்கள் திருநந்தவனக்குடிகள் என்றும் நந்தவனத் திருத்துவார் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களது வாழ்வூதியத்திற்காகப் பிரத்யேக நிலங்களும் பொற்காசுகளும் நிவந்தமாக அளிக்கப்பட்டன. அவை அடுத்தடுத்த தலைமுறையினரால் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன. மேல் விபரங்களுக்கு இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள "கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள்" எனும் கட்டுரையைக் காண்க.

பலப்பல நூற்றாண்டுகளைத் தாண்டி நாயக்கர் - மராத்தியர் காலம்வரைகூடக் காப்பாற்றப்பட்ட நந்தவனங்களுள் பல, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பின்வந்த சுதந்திர இந்தியாவிலும் பல்வேறு சக்திகளால் அழித்தொழிக்கப்பட்டன. நமது ஊர் - நம் கோயில் - நம் இறைவன் - நம்மூர் நந்தவனம் எனும் எண்ணமும் அக்கறையும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அழிந்தொழிந்து போய் "யார் என்ன செய்தால் என்ன? ஊர்க் கோயில் நிலத்தையும் குளத்தையும் எவன் அபகரித்தால் எனக்கென்ன? என் குடும்பம் - என் நிலம் - என் வாழ்வு - என் சொந்தங்கள் பாதிக்கப்படாத வரையில் வேறு யார் எதைச் சுரண்டினாலும் நான் கவலைப்படமாட்டேன் !" எனும் அருவருக்கத்தக்க மிக அசிங்கமான சுயநலப் போக்கு ஒவ்வொருவர் மனதிலும் நாளாவட்டத்தில் வேரூன்றிப் போய் விட்டதே இத்தகைய திருக்கோயில் சொத்துக்களின் அழிவிற்குக் காரணம் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது.

இவ்வாறு அழிந்துபோன சொத்துக்கள் பலவகையின என்றாலும் இவற்றுள் திருநந்தவனம் என்பதைப் பற்றி மட்டும் இக்கடிதத்தில் பேசுவோம்.

இன்றைய தேதியில், தங்கள் துறையின் நிர்வாகத்தின் கீழ் வரும் முப்பத்து எட்டாயிரம் (38000) திருக்கோயில்களில் எத்தனை கோயில்கள் உண்மையாகவே நந்தவனம் எனும் அங்கத்துடன் திகழ்கின்றன? பெயருக்குக் கோயில் வளாகத்தின் நடுவே நந்தவனம் எனும் பெயர்ப்பலகையுடன் முட்செடிகள் காடாக முளைத்து ஒருவரும் நுழையவே முடியாத வகையில் மக்களின் மலங்களை ஏந்திப் பாழ்பட்டுக் கிடக்கும் பாழிடங்களைப் பற்றி நாம் கேட்கவில்லை. நிஜமாகவே மலர்கள் பூத்துக் குலுங்க நன்முறையில் நீர் விட்டுப் பராமரிக்கப்பட்டு அன்றாடம் இறைவழிபாட்டிற்குரிய மலர்களைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள நந்தவனங்களைப் பற்றித்தான் நாம் இங்கு கேட்கிறோம்.

இந்தப் பின்புலத்தில்தான் நாம் திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலுடன் தொடர்புடைய மதுரகவி நந்தவனம் எனும் திருநந்தவனத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏறக்குறைய நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன் இதனை அமைத்த திரு. மதுரகவிப் பிள்ளை எனும் அசாதாரணமான மனிதர் பற்றி அரங்கநாதர் திருக்கோயில் கல்வெட்டொன்றின் மூலம் தெரிந்து கொண்டோம். இந்த மகானைப் பற்றியும் அவரது அரும்பணிகள் பற்றியும் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மதுரகவி எனும் தலைப்பில் கல்வெட்டுச் சிறுகதை எழுதி வரலாறு டாட் காம் மாத இதழில் வெளியிட்டோம்.

அதுவரை திருவரங்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பெருமக்கள்கூட அவரையும் நந்தவனத்தையும் பற்றி அறிந்திராத நிலையில் நமது சிறுகதை உலகெங்கிலுமுள்ள பல்வேறு தமிழன்பர்களாலும் விரும்பி வாசிக்கபட்டது. பண்டைய மரபு மாறாமல் இன்றளவும் நல்நிலையில் செயல்படும் நந்தவனம் தமிழகத்தின் முக்கியமான திருக்கோயில்களுள் ஒன்றான திருவரங்கம் திருக்கோயிலோடு தொடர்புடையது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது என்பதை எங்களுக்கு வந்த பின்னூட்டங்களால் (Feedbacks) புரிந்து கொண்டோம். இக் கதையின் நகல் தங்களின் பார்வைக்காக இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மதுரகவி நந்தவனத்தின் பிரத்யேகச் சிறப்ப்பம்சங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.

- நூற்று நாற்பது ஆண்டுகள் கடந்தும் பண்டைய திருநந்தவன மரபு மாறாமல் இன்று வரை நல்நிலையில் பேணிக்காக்கப்படும் நந்தவனம்.

- பண்டைய திருநந்தவனக்குடி மரபின் எச்சமாக, இன்றுவரை ஏகாங்கிகள் எனப்படும் மரபினரால் பராமரிக்கப்படும் ஒரே நந்தவனம். இவர்கள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடாமல் இறைப்பணியில் தம்மை ஒப்புவித்து அன்றாடம் இறைவழிபாட்டிற்கான மாலைகளையும் மலர்களையும் தொடுப்பதிலேயே வாழ்வை அர்பணிக்கிறார்கள்.

- ஒரு பெருங்கோயிலுக்குரிய அத்தனை மலர் மாலைகளையும் சந்தையில் வாங்க வேண்டிய தேவையிராமல் நேரடியாக வருடம் முழுவதும் கொடுக்கும் ஒரே நந்தவனம். திருவரங்கப் பெருமானுக்கும் தாயாருக்கும் சக்கரத்து ஆழ்வாருக்கும் வருடம் முழுவதும் தேவைப்படும் மாலைகள் மதுரகவி நந்தவனத்திலிருந்தே வருகின்றன. தங்கள் துறையின் கீழ்வரும் வேறு பலப்பல கோயில்களிலும் பப்ளிக் டெண்டரின் மூலம் - அதாவது வியாபார ரீதியான பல்வேறு செயல்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் ஆட்பட்டே - திருமாலைகள் இறைவனை வந்தடைகின்றன.

- மிகப் பிரத்யேகமான அழகுடனும் நேர்த்தியுடனும் மாலைகளை அளிக்கும் ஒரே நந்தவனம். பெருமானுக்கு முதல்நாள் சார்த்தப்பட்ட மாலைகள் ஒவ்வொரு மறுநாளும் நல்ல விலையில் விற்பனை செய்யப்படுவது இதன் நேர்த்திக்கு ஒரு சான்று.

- நந்தவனத்தை உருவாக்கிய ஸ்ரீ மதுரகவிப்பிள்ளை அவர்களின் சமாதித் திருக்கோயில் அமைந்துள்ள இடம். தமிழகத்திலேயே திருநந்தவனக்குடி ஒருவருக்காக அவர் அமைத்த நந்தவன வளாகத்திலேயே எழுப்பப்பட்டுள்ள ஒரே சமாதித் திருக்கோயில் இதுதான்.



மதுரகவி நந்தவனத்தில் உள்ள அவரது சமாதித் திருக்கோயில்.


காலங்கள் எத்தனையோ மாறிய பின்பும் இந்த நந்தவனம் மட்டும் இன்றுவரை பண்டைய மரபு மாறாமல் நல்நிலையில் செயல்படுவதற்குக் காரணம், அதனை அன்றாடம் பராமரிக்கும் ஏகாங்கிகளும் நந்தவனத்து டிரஸ்டின் நிர்வாகிகளும்தாம் என்பதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. மதுரகவிப்பிள்ளையவர்களே தமது காலத்திற்குப் பிறகும் நந்தவனம் தொடர்ந்து நல்நிலையில் செயல்படவேண்டும் என்பதற்காக ஒரு பிரத்யேக டிரஸ்ட் அமைத்து அதில் நிர்வாகிகளாக இருக்க வேண்டியவர்களையும் குறிப்பிட்டுவிட்டுச் சென்றிருப்பது கல்வெட்டில் மிகத் தெளிவாக உள்ளது (பார்க்க - கல்வெட்டுப் பதிவின் இணைப்பு). நூறாண்டுகள் கழிந்தும் இந்த நந்தவனம் அதன் பாரம்பரியமும் ஒழுக்கமும் சிறிதும் கெடாமல் மதுரகவிப்பிள்ளையவர்களின் எண்ணம் போலவே செயல்படுவது ஒன்றே அது நன்முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவதற்குச் சான்று.

இந்தப் பின்னணியில், அரசு ஆணை எண்.48273/2006 ஆர்3-1 / தேதி.31-07-2009 மூலம் தாங்கள் சில சட்ட விதிகளைக் காட்டி இந்த நந்தவனம் முழுவதும் திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது என்றும் அதனை தேவஸ்தானம் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளுமென்றும் தாங்கள் குறிப்பிட்டுள்ளது தமிழக வரலாற்றிலும் பாரம்பரியத்திலும் அக்கறை கொண்டுள்ள உலகத்தமிழர்கள் பலரையும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய தமிழருள் நானும் ஒருவன்.

இந்த விவகாரம் பற்றி மேலும் அறியவேண்டி திருவரங்கம் திருக்கோயிலோடு தொடர்புடைய சில நண்பர்களை விசாரித்ததில் அடுக்கடுக்காக மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் காத்திருந்தன. மதுரகவி நந்தவனம் தற்போது அமைந்திருக்கும் இடத்தில் ரூ. 27 இலட்சம் செலவில் யாத்ரி நிவாஸ் எனும் விருந்தினர் விடுதியும் ரூ. 66 இலட்சம் செலவில் பணியாளர் விடுதியும் அமைக்க தேவஸ்தானத்தார் உத்தேசித்திருப்பதாகத் தெரிய வந்தது. இதற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட செய்திகளைச் சுட்டலாம்.


- 29/08/2004 தேதியிட்ட இந்து நாழிதழில் திரு எஸ்.வேதாந்தம் என்பவர் அம்மா மண்டபத்திற்கருகில் யாத்ரி நிவாஸ் கட்டப்படப்போவதாகத் தெரிவித்துள்ள செய்தி. சுட்டி - http://www.thehindu.com/2004/08/29/stories/2004082912990300.htm
- 23/04/2007 தேதியிட்ட இந்து நாளிதழில் அரங்கநாதர் திருக்கோயில் தேவஸ்தான போர்டின் சேர்மேன் திரு எம். வெங்கடாசலம் அளித்துள்ள பேட்டி. இப்பேட்டியில் மிகத் தெளிவாக மதுரகவி நந்தவனம் அமைந்துள்ள இடத்தில்தான் ரூ. 27 இலட்சம் செலவில் யாத்ரி நிவாஸும் ரூ. 66 இலட்சம் செலவில் பணியாளர் விடுதியும் கட்டப்படப் போகிறது என்பதை அவர் தெரிவித்துள்ளார். சுட்டி - http://www.thehindu.com/2007/04/23/stories/2007042315820500.htm
-06/07/2007 தேதியிட்ட சென்னை ஆன்லைன் இணைய சஞ்சிகையில் அரங்கநாதர் திருக்கோயில் தேவஸ்தான போர்டின் சேர்மேன் திரு எம். வெங்கடாசலம் அளித்துள்ள பேட்டி.

நந்தவன வளாகத்தில் யாத்ரி நிவாஸ் மற்றும் பணியாளர் விடுதிகள் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் தங்களின் அரசு ஆணை அமைந்திருக்கிறது என்று கருத இடமுள்ளது. மேலும், தங்களின் அரசு ஆணை தேதி 31 ஜுலை- 2009 அன்றே வெளியிடப்பட்டிருக்க, ஏப்ரல்-2007லேயே தேவஸ்தான போர்டின் சேர்மன் தனியார் வசமுள்ள மதுரகவி நந்தவனத்தில் இன்னின்ன கட்டிடங்கள் வரப்போகின்றன என்று எப்படி முன்கூட்டியே பேட்டியளித்திருக்கிறார் என்பது புரியவில்லை.


நூற்று நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருமாலைப் பணி பற்றியும் அங்கு தன்னலமின்றி பணிபுரிந்துகொண்டிருந்த ஏகாங்கிகள் பற்றியோ அதனைத் தன் உதிரத்தைச் சிந்தி ஸ்தாபித்த ஸ்ரீ மதுரகவிப் பிள்ளையவர்கள் பற்றியும் அவரது சமாதித் திருக்கோயில் பற்றியும் தேவஸ்தானத்தார் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாரம்பரியம் மிக்க திருக்கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்தானம் சற்று பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டாமா? இதில் மிகுந்த வேதனையளிக்கும் ஒரு செய்தி, மதுரகவியவர்களைப் பற்றியும் அவர்களது திருப்பணிகள் பற்றியும் விளக்கும் மிக நீண்ட கல்வெட்டு தேவஸ்தான அலுவலகத்திற்கு மிக அருகில்தான் அமைந்துள்ளது.



மதுரகவி பிள்ளையவர்களின் பணியை விளக்கும் கல்வெட்டு, தேவஸ்தான அலுவலகத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. தமிழகத்திலேயே திருநந்தவனக்குடி ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் ஒரே கல்வெட்டு இதுதான்.


ஐயா, தமிழகத்துடன் தொடர்புடைய பண்டைய நந்தவனங்களும் அது தொடர்பான பழைமையான பாரம்பரியங்களும் வரலாற்றுச் சொத்துக்களும் முழுவதும் அழிந்து போய்விட்ட நிலையில் நல்ல நிலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே நந்தவனத்தையும் ஆக்கிரமிப்பதும் அழித்தொழிப்பதும் நமது வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

யாத்ரி நிவாஸும் விருந்தினர் விடுதியையும் அமைப்பதற்குக் கோயிலுக்கு அருகிலேயே தேவஸ்தானத்தாருக்குச் சொந்தமான பல இடங்கள் உள்ளனவே? அவற்றை விடுத்துக் கோயிலிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருக்கும் மதுரகவி நந்தவனம்தானா அகப்பட்டது? அனுமதியின்றிக் கோயிலின் அனைத்து பக்கங்களிலும் எழும்பியுள்ள அத்துமீறிய கட்டுமானங்களை ஓரளவிற்கு அகற்றினாலே யாத்ரி நிவாஸ் போன்று பல விடுதிகள் கட்ட முடியுமே? அதனைச் செய்ய இயலாவிட்டாலும் தேவஸ்தானத்தார் வசம் இருக்கும் வேறு பல நிலங்களை இதற்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாமே? அதனை விடுத்துத் திருக்கோயில்களுக்கு மலர்களைத் தூய்மையான முறையில் வருடம் முழுவதும் அளித்துக்கொண்டிருக்கும் நந்தவனத்திலா கையை வைப்பது?

கடந்த நூற்று நாற்பது வருடங்களில்....

- எந்த ஒரு வருடமாவது எந்த ஒரு மாதமாவது எந்த ஒரு நாளாவது (பூச்சாற்று உற்சவம் நடக்கும் ஒரு நாள் நீங்கலாக) திருக்கோயிலுக்கு மாலை கட்டித்தரும் பணியிலிருந்து மதுரகவி நந்தவனத்தின் ஏகாங்கிகள் தவறியிருக்கிறார்களா?

- இத்தனை வருடங்களில் மதுரகவி நந்தவனம் அமைந்துள்ள நிலத்தில் தூய்மையற்ற ஒழுக்கக்கேடான காரியங்கள் எவையாவது எப்போதாவது நடந்ததுண்டா?

- இத்தனை வருடங்களில் மதுரகவி நந்தவனத்தோடு தொடர்புடைய டிரஸ்டிகள் எவராவது அந்த நந்தவனத்தின் நிலத்தையோ சொத்துக்களையோ தவறான வழியில் பயன்படுத்தியதுண்டா?

மேற்குறிப்பிட்ட மூன்று கேள்விகளுக்கும் இல்லை என்று பதில் வரும் பட்சத்தில் எதற்காக இந்த அழித்தொழிப்பு வேலை? எதையுமே அழிப்பது எளிது - ஆக்குவதுதான் கடினமான பணி. அதிலும் நூற்று நாற்பது வருடப் பாரம்பரியத்தை மீண்டும் உருவாக்குவதென்பது இயலாத காரியம்.


ஐயா, மதுரகவி நந்தவனம் என்பது குறிப்பிட்ட டிரஸ்டிக்களுக்கோ, தேவஸ்தானத்தாருக்கோ மட்டும் உரிய சொத்து அல்ல. அது தமிழர்களின் பாரம்பரியச் சொத்து. வரலாற்றின் சொத்து. திருவரங்கத்து அரங்கனின் சொத்து. இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த மகான் ஒருவர் பின்னாளைய தலைமுறைக்காக விட்டுச் சென்றுள்ள சொத்து. அதனைப் பராமரிக்கும் உரிமை மட்டும்தான் டிரஸ்டிக்களுக்கு உண்டே தவிர விற்கும் உரிமை தார்மீக ரீதியாக யாருக்கும் கிடையாது.


ஐயா, இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளின் பின்னணியில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உலகத் தமிழர்களின் சார்பிலும் வரலாற்று நேயர்களின் சார்பிலும் உங்களின் முன் வைக்கிறேன்.

- மதுரகவி நந்தவனத்தை தேவஸ்தானத்தார் வசம் ஒப்படைக்க வேண்டும் எனும் தங்களது முன்குறிப்பிட்ட அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

- நூற்று நாற்பது வருடப் பாரம்பரியத்தினை தாங்கி நிற்கும் மதுரகவி நந்தவனத்தின் பெருமையையும் உலகத் தமிழர்கள் அதன்பால் கொண்டுள்ள அக்கறையும் நன்கு விளங்கும்படி தேவஸ்தானத்தாருக்குத் தாங்கள் எடுத்துரைத்து யாத்ரி நிவாஸ் மற்றும் பணியாளர் விடுதிக் கட்டிடங்களை வேறு இடத்தில் கட்டிக்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்
- மதுரகவி நந்தவனத்தைத் தொடர்ந்து நந்தவனப்பணியில் ஈடுபடுத்துமாறு தற்போதைய நந்தவன டிரஸ்டிக்களுக்குத் தாங்கள் எடுத்துரைக்க வேண்டும். தங்களுக்குச் சொந்தமான நந்தவன நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பப்படப்போகின்றன என்பதை அறிந்தும் அவர்கள் உரிய முறையில் எதிர்ப்புத் தெரிவிக்காதது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.

- இனிவரும் காலங்களில் இப்பணி தொய்வின்றி நடந்திட உரியபடி அறிஞர்களையும் வரலாற்றாய்வாளர்களையும் டிரஸ்டில் மெம்பர்களாக இணைக்க வேண்டும்
- மதுரகவி நந்தவனம் கடந்த நூற்றி நாற்பது வருடங்களாப் புரிந்து வந்த திருப்பணி இனிவரும் காலங்களிலும் தொய்வின்றி நடந்திட உரிய ஒத்துழைப்பு நல்கும்படி அனைத்துத் தரப்பினருக்கும் தாங்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
- மதுரகவி நந்தவனத்தில் உள்ள திருநந்தவனக்குடி பாரம்பரியம் தொய்வின்றித் தொடர்ந்திட அடுத்த தலைமுறை ஏகாங்கிகளை உருவாக்க உரிய முறையில் முயற்சியெடுக்க வேண்டும்.

ஐயா, திருக்கோயில்களிலும் அதன் பண்பாட்டிலும் அக்கறை கொண்டுள்ள தங்களைப் போன்ற உயர் அதிகாரிகளால்தான் இது போன்ற பண்டைய சொத்துக்களை உரிய முறையில் காப்பாற்ற முடியுமென்று நாங்கள் இன்னமும் நம்புவதால்தான் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் தங்களின் முன்பு முறையிடுகிறோம். இது தொடர்பாக உலகத் தமிழர்களுக்குத் தாங்கள் தெரிவிக்க விரும்பும் மறுமொழியைக் கடித வாயிலாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தால் மகிழ்ச்சியுடன் பிரசுரம் செய்வோம்.

அன்புடனும் நன்றிகளுடனும்
உலகத் தமிழ்ச் சமுதாயத்தின் சார்பிலும் வரலாற்றுலகின் சார்பிலும்,

கோகுல். சே.

இணைப்புக்கள்
1. மதுரகவி - வரலாறு டாட் காம் கல்வெட்டுக் கதை.
2. திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ள மதுரகவியவர்கள் பற்றிய கல்வெட்டு.
3. கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள் எனும் ஆய்வுக் கட்டுரை.
3. நாளிதழ்களில் யாத்ரி நிவாஸ் மற்றும் பணியாளர் விடுதிகள் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள்.

நகல் / Copies To :

Thiru. K.R. Periyakaruppan
Honourable Minister for Hindu Religious & Charitable Endowments Department
Thamiraparani, No.15,
P.S. Kumarasamy Raja Salai
Chennai - 600028
Phone: 91-44-24957203

Thiru. K.N. Nehru
Honourable Minister for Transportation
Roja, No.11,
P.S. Kumarasamy Raja Salai,
Chennai - 600 028.
Phone: 91-44-24993595, 24938566, 25671386

Thiru. Thangam Tennarasu
Honourable Minister for Archaeology
Vaigai, No.18, Judges Quarters,
P.S. Kumarasamy Raja Salai,
Chennai - 600 028.
Phone: 91-44-24617641, 25670203

The Joint Commissionar / Executive Officer
Arulmigu Ranganathaswamy Temple Devasthanam
Srirangam
Tiruchirapalli - 620006
Phone: 91-431-2432246
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.