http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 63

இதழ் 63
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பார்வைகளைப் பண்படுத்தும் பயணங்கள்
மதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்
மதுரகவி நந்தவனம் அழித்தொழிப்பு - ஒரு வேண்டுகோள்
கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள்
திருநந்திக்கரைக் குடைவரை
கழுகுமலைப் பயணக்கடிதம் - 4
அன்பே! நீயின்றி
இதழ் எண். 63 > தலையங்கம்
பார்வைகளைப் பண்படுத்தும் பயணங்கள்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம். அனைவரும் நலந்தானே?

இணையத் திங்களிதழான வரலாறு டாட் காம் ஐந்தாண்டுகளை முடித்துக்கொண்டு ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொழுதில் நமது குழுவினர் பலருக்கும் வரிசையாகப் பல வரலாற்றுப் பயணங்கள் வாய்த்தன. தென்னக வரலாற்றின் வேர்கள் தேடிப் பயணப்படும் நமது குழு உருவானதும் வரலாறு டாட் காமுக்கான விதை விழுந்ததும் வேறு பல முக்கிய நிகழ்வுகள் நிறைவேறியதும் நாங்கள் மேற்கொண்ட பல்வேறு வரலாற்றுப் பயணங்களின்போதுதான் என்பதால் இம்முறையும் எதிர்பார்ப்புக்கள் மிகுதியாகவே இருந்தன.

வழிதேடி வருபவரை வரலாறு ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. நாம் எத்தனை எதிர்பார்ப்புக்களோடு சென்றாலும் அந்த எதிர்பார்ப்புக்களையெல்லாம் பூர்த்தி செய்து அதற்கும் மேற்பட்டு ஏதேனும் சில வித்தியாசமான பரிசுகளையும் அனுபவங்களையும் அளித்துத் திருப்தியுடன் ஊருக்குத் திருப்பி அனுப்பி வைத்து "அடுத்த முறை எப்போது வரப்போகிறாய்?" என்று ஏக்கத்துடன் வினவும் ஒரு பாசம் மிகுந்த பாட்டியின் பரிவைத்தான் வரலாறு எப்போதும் வழங்கி வந்திருக்கிறது. இம்முறை மேற்கொண்ட பயணங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

குடும்பத்தாரின் கடுமையான அதிருப்தியையும் சில நேரங்களில் வசவுகளையும் கோபங்களையும் கூடச் சம்பாதித்துக்கொண்டு உச்சி வெய்யில் நேரங்களில் கட்டாந்தரைகளிலும் சுடுமண் ஓடுகளிலும் கால்கள் கொப்பளிக்க கால் மாற்றி மாற்றி வைத்து நடனமாடியபடிதான் வரலாற்றைத் தேடியாக வேண்டும் என்றாலும் ஏகாந்தமாகக் கோயில்களோடும் கோயில்களின் வழி பண்டைய மனிதர்களோடும் கலைகளோடும் கல்வெட்டுக்களோடும் சிற்பங்களோடும் ஐக்கியமாவதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. இந்தச் சுகத்திற்காக வேறு எத்தனை துன்பங்களை வேண்டுமானாலும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று ஒரு வைராக்கியமும் பிறந்து விடுகிறது.

ஒவ்வொரு முறையும் புதுப்புதுப் பாடங்களைப் பயிற்றுவிக்கும் வரலாறு இம்முறையும் சில முக்கியமான பாடங்களை நாங்கள் வருமுன்பே தயாராக எடுத்து வைத்திருந்தது. இம்முறை அது உணர்த்திய அனுபவங்களுள் தலையாயது நமது பார்வை பற்றிய உண்மை.

கடந்த ஆறு வருடங்களாக நாம் வரலாற்றுப் பயணங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறோம். பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். சில சமயங்களில் ஒரே கோயிலுக்குப் பல முறை சென்றிருக்கிறோம். தஞ்சை இராஜராஜேஸ்வரத்திற்கு மட்டும் எண்ணிக்கையிலடங்காத முறை சென்றிருக்கிறோம். ஆனால் இந்தப் பயணங்களைப் பல கட்டங்களாகப் பிரித்தறியும் மனப்பாங்கு இப்போதுதான் வாய்த்திருக்கிறது.

ஒரு திருக்கோயிலை எவ்வாறு அணுகுவது - புரிந்துகொள்வது என்பதைப் பற்றிய அடிப்படைக் கண்ணோட்டமோ தெளிவோ இன்றி வரலாறு அறிமுகமான புதிதில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டப் பயணங்கள். இந்தக் கட்டத்தில் கட்டுமானம் என்று ஒன்று பார்வையிலேயே படாது. வெறும் சிற்பங்களை மட்டும்தான் இரசிக்க முடியும். இவைதான் வரலாற்றை மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தின.

ஒரு திருக்கோயில் என்றால் அதற்குக் கட்டுமானம் என்று ஒன்று உண்டு. கல்வெட்டு உண்டு. சிற்பத்திற்குப் பின் சிற்ப இலக்கணங்கள் உண்டு என்று தெரிந்துகொண்டு அதன்வழி திருக்கோயில்களைப் பார்க்க முயன்ற பயணங்கள். இவை இரண்டாம் கட்டப் பயணங்களாயின.

எந்தத் திருக்கோயிலும் தனித் தீவல்ல. கால வெள்ளத்தில் அடித்துக்கொண்டு செல்லும் கலாப் பிரவாகத்தினூடே அதுவும் ஒரு படி. ஒரு துளி. தன் முன்னோர் செய்துள்ள தவத்தின் சாரத்தை உறிஞ்சிக்கொண்டு அதனை ஒரு படி உயர்த்த - அல்லது அதிலேயே ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டத்தான் ஒவ்வொரு சிற்பியும் மன்னனும் முயன்றிருக்கிறான் என்று புரிந்துகொண்டு பொங்கிப் பெருகும் அப்பிரவாகத்தில் இந்தக் கோயிலின் தனியிடம் என்னவாக இருந்துவிட முடியும்? என்று யோசிக்கும் மூன்றாவது கட்டம். இந்தப் பிரவாகத்தில்தான் பல்லவர்காலக் கட்டிடக் கலையின் கூறுகளைச் சோழர்களிடத்திலும் சோழர்காலச் சிற்பக் கூறுகளை நாயக்கர்களிடத்திலும் காணும் துணிவு ஏற்படும். எந்தக் கோயிலையுமே தனித்து நோக்காமல் அதன் காலகட்டத்தைச் சேர்ந்த அனைத்துக் கோயில்களுடனும் தொடர்புபடுத்தி அதற்கு முந்தைய - சமகால - பிற்காலக் கூறுகளை ஆராய்ந்து அவற்றுள் நாம் நிற்கும் இந்தத் திருக்கோயில் எந்த வகையில் பிரத்யேக அழகுகளைக் காண்பிக்கிறது? என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஏற்கனவே பல முறை பார்த்து முடித்த திருக்கோயில்கள்கூட இந்தக் கண்ணோட்டத்தில் நோக்கும்போது முன்பு புலப்படாத பல பரிமாணங்களை வெளிப்படுத்தும்.

நாம் கிட்டத்தட்ட இந்தக் கட்டத்தில்தான் நிற்க முயன்றுகொண்டிருக்கிறோம். இம்முறை நாம் மேற்கொண்ட இரு மாதப் பயணங்களும் இந்த வகையினதாகவே அமைந்திருந்தன.

முற்சோழர்களுள் மூத்தவரான முதலாம் பராந்தகச் சோழர் காலத்துக் கோயில்களை இனங்காணவும் தமிழ்நாட்டின் கலைவரலாற்றில் முற்சோழர் காலக் கலையின் துல்லியமான இடம் எது? என்பதை அறிந்துணரவும் மேற்கொள்ளப்பட்ட ஆகஸ்ட் மாதப் பயணங்கள் பல புதிய செய்திகளைச் சுமந்து நின்றன. அவற்றை உரியபடி இனங்காணவும் புரிந்துகொள்ளவும் இனிவரும் காலங்கள் தேவைப்படும். அதேபோல, செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மாடக்கோயிற் பயணங்கள், தமிழ்நாட்டின் வரலாற்றில் முழுவதுமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட கோச்செங்கட் சோழர் காலத்தைய கலைக்கூறுகளை அறிமுகம் செய்தன. தமிழ்நாட்டின் இருண்ட காலமாக வர்ணிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இத்தனை பெரிய பேரியக்கமா? என்று வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.





இந்த வரலாற்றுப் பயணங்களும் பயணங்களின் வழி பெறப்படும் தரவுகளும் முடிவுகளும் இனி வரும் காலங்களில் வரலாறு டாட் காமில் பதிவாகும் என்று நம்புவோம்.

திருக்கோயில் ஆய்வில் நாம் குறிப்பிடாத நான்காவது கட்டம் ஒன்றுண்டு. இதனைப் பற்றி யோசிக்க முடிகிறதே தவிர இன்னது என்று உணர முடியவில்லை. ஏனெனில் இந்தக் கட்டத்திலிருந்து நாம் வெகுதூரம் தள்ளி நிற்கிறோம். இந்த இடத்தில் காண்பவன் காட்சிப் பொருளுடன் ஒன்றாகி விடுகிறான். ஒரே ஒரு திருக்கோயிலுடன், ஏன் - ஒரே ஒரு சிற்பத்துடன்கூட ஒட்டுமொத்தமாக ஐக்கியமாகி விடுகிறான். அந்தக் கட்டத்தில் அத்திருக்கோயிலின் ஒட்டுமொத்த அழகுகளும் இரகசியங்களும் "என்னைப் பற்றி எழுதேன்? என்னை வந்து பாரேன்? என்னையும் கொஞ்சம் புரிந்து கொள்ளேன்?" என்று கூறியபடி வரிசை கட்டிக்கொண்டு நிற்கும். இதுவரை எவர் கண்களுக்கும் அகப்படாத அத்தனை விஷயங்களும் இயல்பாகப் புரிந்து போகும். ஆனால் இந்தக் கட்டத்தில் கண்டுபிடிப்பு எனும் எண்ணம் மறைந்துபோய் ஒரு மெல்லிய நெகிழ்ச்சியை மட்டுமே மனதில் தேக்கி நிறுத்த முடியும். "அடடா, இத்தனை இரகசியங்களை மறைத்துக்கொண்டா ஒன்றும் தெரியாததுபோல் இத்தனை காலம் நின்றாய்? உன்னைப் பற்றி எழுத நான் யார்?" எனும் எண்ணம் மட்டும்தான் மிஞ்சும். இந்தக் கட்டம் நாம் நிற்குமிடத்திலிருந்து கண்ணுக்கெட்டாத வெகு தூரத்திலிருக்கிறது. இத்தனை தூரமா? என்று மலைப்புத்தட்டினாலும் அடிமேல் அடி எடுத்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அடிவானச் சூரியனை அடையலாம் என்று நம்பிக்கையும் இருக்கிறது.

நண்பர்களே, திருக்கோயில் ஆய்வு என்பது உண்மையில் ஒரு தவம். அந்தத் தவத்தில் ஈடுபடுவதற்கு நிறைய மனோதிடம் தேவை. விடா முயற்சி தேவை. மனத்திட்பம் தேவை. உற்ற உறவுகளின் - நட்பின் உதவி தேவை. இந்தப் பயணத்தின் கடுமையையும் இலக்கையும் புரிந்து கொண்டு தட்டிக் கொடுக்கும் உங்களைப் போன்ற வாசகர்களின் சுற்றம் தேவை. எல்லாவற்றுக்கும் மேலாகப் பயணப்படவேண்டிய கால்களுக்குரிய பலத்தை அளிக்கும் இறையருள் தேவை.

இவையனைத்தையும் உரியபடி நல்குமாறு இறையை இறைஞ்சி வான் நோக்கி வணங்கி நிற்கிறோம்.

வணக்கம்.

அன்புடன்
ஆசிரியர் குழு.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.