http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 75

இதழ் 75
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஏழாவது ஆண்டில்
ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்!
ஆவூர்க் குடைவரை
திரைக்கோயில் குடைவரை
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 1
இராஜராஜரின் ஆற்றல்கள்
தஞ்சைப் பெரியகோயில் - அதிட்டானம் - ஆய்வு
இராசராசனும் சோழமகாதேவியும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 3
தொறுத்த வயலும் பூத்த நெய்தலும்
இதழ் எண். 75 > கலையும் ஆய்வும்
இராசராசனும் சோழமகாதேவியும் - 3
கி.ஸ்ரீதரன்


(சென்ற இதழின் தொடர்ச்சி)

உவச்சர்கள்

5. (15 வது ஆட்சியாண்டு கி.பி. 1000) : இக்கல்வெட்டில் தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டுப் பிரம்மதேயம் ஸ்ரீசோழ மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்ற நாட்டுப்பிரிவு குறிப்பு கல்வெட்டில் காணப்படுகிறது. கோயில்களில் இசைக்கருவிகளை வாசிப்பவர் உவச்சர்கள் எனப்பட்டனர். இக்கோயிலில் உவச்சப்பணி செய்ய (1) இரண்டாயிரவன் கணத்தனான சோழமாதேவிப் பேருவச்சன் (2) இவன் தம்பி இரண்டாயிரவன் கடம்பனான காந்தருவப் பேருவச்சன் (3) இவன் தம்பி இரண்டாயிரவன் பல்லவராயன் (4) இவன் தம்பி இரண்டாயிரவன் திருவரங்கத்தேவன் என்ற பெயர்கள் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் நியமிக்கப்பட்டனர். உவச்சப் பணிக்காக அளிக்கப்பட்ட நிலம் 'உவச்சப்புறம்' எனப்பட்டது. இவர்களது பணி ஏதேனும் காரணத்தால் நடைபெறாது போனால் கோயிலில் விளக்கு எரிக்க எண்ணெய் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் தானம் 'இராசராசன்' என்ற பிரம்மஸ்தான மண்டபத்தில் ஊர்சபையினர் கூடி முடிவெடுத்தனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானம் எவ்வகையிலாவது கோயிலுக்கே செலவழிக்கப்படவேண்டும் என்ற நல்ல குறிக்கோளையும் உணர்த்துகிறது.

வீரசோழவிண்ணகர்

6. (15வது ஆட்சியாண்டு கி.பி. 1000) : காவிரியின் தென்கரை சோழமகாதேவி சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி மகாசபையார் 'இராசராசன்' என அழைக்கப்பட்ட பிரம்மஸ்தானத்தில் கூடி அவ்வூரில் உள்ள வீரசோழ விண்ணகர் ஆழ்வார் கோயில், பெருமாள் - ஸ்ரீதேவி - பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு அமுது படைக்க 12 கழஞ்சு பொன் தானமாக வைகானசர்களிடம் அளிக்கப்பட்டது. அதன் வட்டியாக 220 கலம் நெல் பெறப்பட்டது. இதனைக் கொண்டு அமுது அளிக்க நிவந்தம் செய்து தரப்பட்டது. அவ்வாறு அமுது படைக்கத் தவறினால் ஊர்வாரியப் பெருமக்கள் அவர்களிடம் தண்டம் வசூலிக்கலாம் என்று ஆணையிட்ட செய்தி கூறப்படுகிறது.

பஞ்சமகாசப்தம்

7. (26வது ஆட்சியாண்டு கி.பி. 1011) : சோழமகாதேவி சதுர்வேதிமங்கலத்து சபையார் இவ்வூரில் வடக்கில் இருந்த 'இராசராசன்' என்ற தண்ணீர்ப் பந்தலில் கூடி முடிவெடுத்தனர். சிவன் கோயிலான ஸ்ரீகைலாசமுடையார் கோயிலுக்கும் வீரசோழவிண்ணகர் என்ற பெருமாள் கோயிலிலும் உவச்சர்கள் 'பஞ்சமகாசப்தம்' என்ற ஐந்துவகை இசைக்கருவிகளை மீட்டும் உவச்சர்கள், இரண்டாயிரவன் மல்லன் - திருவரங்க நாராயணன் என்ற இருவருக்கு உவச்சப்புறமாக நிலம் அளிக்கப்பட்டது. இக்கோயிலில் கரடிகை - ஒன்று, மத்தளம் - இரண்டு, சங்கு - இரண்டு, காளம் - நான்கு ஆக ஒன்பது வாத்தியக் கருவிகள் கொண்டு பஞ்சமகாசப்தம் செய்ய தானம் அளிக்கப்பட்டது. தோல் - துளை - நரம்பு - கஞ்சம் - மிடறு போன்ற ஐந்து கருவிகளிலிருந்து தோன்றும் இசை பஞ்சமகாசப்தம் எனக்கூறப்படுகிறது (பஞ்சமரபுநூல்). சோழமகாதேவி கோயில்களில் நாள்தோறும் ஒன்பது இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதை அறியும்பொழுது இக்கோயிலில் எவ்வாறு சிறப்பு வழிபாடுகள் நடந்திருக்கவேண்டும் என்பதை நம்மால் உணரமுடிகிறது. இதுபோன்று பஞ்சமகாசப்தம் இசைக்கப்பட்ட செய்தியினை திருச்செந்துறை கோயில் கல்வெட்டும், திருச்செங்கோடு செப்பேடும் எடுத்துரைக்கின்றன.

இக்கோயிலில் காணப்படும் இராசராசன் கல்வெட்டுகளால் சோழமாதேவி ஊர்சபை 'இராசராசன்' என்று அழைக்கப்பட்ட மண்டபத்திலும், தண்ணீர்ப் பந்தலிலும் கூடி முடிவெடுத்ததைக் காணமுடிகிறது. மண்டபம் 'பிரம்மஸ்தானம்' என்று குறிக்கப்படுவதால் இராசராசசோழன் காலத்தில் இவ்வூர் அமைக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது. கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் தென்கரை பாண்டிகுலாசனி வளநாட்டுப் பிரம்மதேயம் ஸ்ரீசோழமகாதேவி சதுர்வேதிமங்கலம் என்ற நாட்டுப்பிரிவில் சேர்ந்தது எனக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சைப் பெரியகோயிலில் பணியாற்ற நியமிக்கப்பட்ட பரிசாரகரும் மெய்க்காப்பாளரும் இதே சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அறியமுடிகிறது. தஞ்சைப் பெரியகோயிலில் அரிய செப்புத் திருமேனிகளைச் செய்து அளித்த இராசராசனின் மனைவியான சோழமகாதேவி இப்பகுதியைச் சேர்ந்தவராகவும், இருக்குவேளிர் குலத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கக்கூடும். எனவேதான் அவர்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அழகிய திருக்கோயிலை இவ்வூர் எழுப்பி அதன் சிறப்பான வழிபாட்டிற்குரிய தானங்களை இராசராசசோழன் வழங்கினான் எனக் கொள்வதில் தவறில்லை!

அடிக்குறிப்புகள் :

1. தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி 2 - 42, 46

2. தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி 2 - 57. 69, 70

3. இக்கோயிலைப் பற்றித் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்குத் தகவல் அளித்தவர் இவ்வூரைச் சேர்ந்த G.லூயிஸ் என்பவர் ஆவார். அதன்பேரில் உடன் சோழமாதேவி கிராமம் சென்று ஆய்வு செய்து கல்வெட்டுக்களைப் படியெடுத்து வரலாற்றுச் சிறப்பினை இக்கட்டுரை ஆசிரியர் 1990ஆம் ஆண்டு வெளிப்படுத்தினார். இதற்கு உதவியாக ஸ்தபதி வே.இராமன், இளநிலைக் கல்வெட்டாய்வாளர் மே.சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். தமிழகத் தொல்லியல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டு இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பு மிகுதியினால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுப் போற்றிப் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.

4. சோழர் கல்வெட்டில் ஆதிசங்கரர் - இரா.நாகசாமி தினமணி 18-5-1991.

5. சோழமாதேவி கயிலாயமுடையார் கோயில் - மாசிமகம் சிறப்புமலர் - தொகுப்பு : குடவாயில் பாலசுப்ரமணியன் 1992.

6. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 - சோழமாதேவிக் கல்வெட்டுகள் பக்கம் 1 முதல் 33 வரை - தொகுப்பாசிரியர்கள் : கி.ஸ்ரீதரன், ஆ.பத்மாவதி, அர.வசந்தகல்யாணி - ஆசிரியர் : தி.ஸ்ரீ.ஸ்ரீதர், தொல்லியல் துறை வெளியீடு 2004.

7. திருச்செந்துறை கற்றளிப் பெருமானடிகள் கோயில் - தொல்லியல்துறை - ஆசிரியர் : இரா.கஸ்தூரி - பதிப்பாசிரியர் : தி.ஸ்ரீ.ஸ்ரீதர் - 2005.

(முற்றும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.