![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 75
![]() இதழ் 75 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
திருவண்ணாமலை விழுப்புரம் சாலையில் 19 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆவூர். இவ்வூரிலுள்ள பாறை ஒன்றில் கருவறைக் குடைவரை அகழப்பட்டுள்ளது.1 தற்போது இப்பாறையை உள்ளடக்கிச் செங்கல் கட்டுமானமாக ஒருதள வேசர விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இவ்விமானத்தின் மேற்குமுகத் தாங்குதளப் பகுதியில் காட்டப்பட்டுள்ள திறப்பே கருவறைக்கான வாயிலாக அமைந்துள்ளது. அதன் மேல் இருக்குமாறு விமானச் சுவர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திறப்பு கருவறை அமைந்துள்ள பாறையின் மேற்பகுதியைக் காண வாய்ப்புத் தருகிறது. இப்பாறையின் தென்பகுதியில் உச்சியிலிருந்து கீழிறங்குமாறு பிற்சோழர் கல்வெட்டொன்று கட்டம் கட்டிக் கோடுகள் வெட்டிப் பொறிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டுமானத்தால் பெரிதும் சிதைந்திருக்கும் இக்கல்வெட்டு ஆவூரை வெண்பா நாடான செங்குன்ற நாட்டின் கீழிருந்த ஊராகக் குறிக்கிறது. அம்பை தேவன் இறைவனுக்களித்த நிலக்கொடை சுட்டும் இக்கல்வெட்டில் இறைவன் கருமாணிக்கத்தாழ்வார் என்று அழைக்கப்பட்டுள்ளார். 1. 12 மீ. உயரம், 91 செ. மீ. அகலமுடைய வாயில், மேல் நிலை சற்று முன்தள்ளிய நிலையில் நிலையமைப்புப் பெற்றுள்ளது. தென்வடலாக 1. 47 மீ. நீளம், கிழக்குமேற்காக 72 செ. மீ. அகலம், 1. 31 மீ. உயரம் பெற்றுள்ள கருவறையின் பின்சுவரில் சமபங்கத்தில் நடுநாயகமாக விஷ்ணுவும் அவரின் வலப்புறம் கருடனும் இடப்புறம் இளமுனிவராக மார்க்கண்டேயரும் கருடாசனத்தில் சிற்பமாகியுள்ளனர். கருவறையின் பக்கச்சுவர்களும் கூரையும் தரையும் வெறுமையாக உள்ளன. நன்கு மலர்ந்த தாமரையில் திருவடிகள் இருத்திக் காட்சிதரும் விஷ்ணுவின் இடையை அரைக்கச்சும் இடைக்கட்டும் பெற்ற கச்சம் வைத்த பட்டாடை அலங்கரிக்கிறது. மார்பில் நிவீத முப்புரிநூல். மேற்கைகளில் சக்கரமும் சங்கும் அமைய, முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் உள்ளன.2 தலைச்சக்கரத்துடனான கிரீடமகுடம்,3 மகரகுண்டலங்கள், செவிப்பூக்கள், சரப்பளி கொண்டிலங்கும் பெருமானின் கைகளில் தோள், கை வளைகள். ![]() விஷ்ணுவின் வலப்புறம் தனித்தளத்தில் கரண்டமகுடம், அதை மீறிய சடைக்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, அலங்கார முப்புரிநூல், தோள், கை வளைகள் அணிந்து, கோரைப்பற்களுடன் காட்சிதரும் கருடனின் இருபுறத்து இறக்கைகளும் சற்றே விரிந்துள்ளன. வலக்கையில் மலர்; இடக்கை தொடைமீதுள்ளது. அரைக்கச்சு, இடைக்கட்டு இவற்றுடனான சிற்றாடை அணிந்துள்ள கருடனின் வலத்தோளில் பாம்பொன்று படமெடுத்த நிலையில் சுருண்டுள்ளது. மகுடம் மீறிய சடைக்குழல் வலப்புறத்தே சடைக்கற்றைவரை நெகிழ்ந்துள்ளது. விஷ்ணுவின் இடப்புறம் தனித்தளத்திலுள்ள மார்க்கண்டேயர் சடைமகுடம், முத்துமாலைகள், கைவளைகள், அரைக்கச்சு, இடைக்கட்டு இவற்றுடனான சிற்றாடை, நிவீதமாய் வஸ்திர முப்புரிநூல் அணிந்து நீள்செவிகளுடன் காட்சிதருகிறார். இடக்கையில் மலர்; வலக்கை தொடைமீதுள்ளது. சிற்பங்களின் தோற்றம், ஆடை, அணிகள் கொண்டு இக்குடைவரையின் காலத்தைக் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.4 குறிப்புகள் 1. ஆய்வு நாட்கள்: 3. 9. 1990, 3. 10. 2010. மீளாய்வுக்குத் துணைநின்ற வேலூர் ஆவின் பாலக மேலாண் இயக்குநர் மருத்துவர் திரு. எஸ். சுந்தரேசன், கோயில் அறங்காவலர் திரு. க. இராதாகிருஷ்ணன் இவர்கட்கு உளமார்ந்த நன்றி. 2. சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் கடி முத்திரை என்கின்றனர். தமிழ் நாட்டுக் குடைவரைக் கோயில்கள், ப. 91. 3. சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் சடைமகுடம் என்கின்றனர். மு. கு. நூல், ப. 91. 4. கி. பி. எட்டாம் நூற்றாண்டாகக் கருதுகின்றனர் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும். மு. கு. நூல், ப. 91. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |