http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 75

இதழ் 75
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஏழாவது ஆண்டில்
ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்!
ஆவூர்க் குடைவரை
திரைக்கோயில் குடைவரை
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 1
இராஜராஜரின் ஆற்றல்கள்
தஞ்சைப் பெரியகோயில் - அதிட்டானம் - ஆய்வு
இராசராசனும் சோழமகாதேவியும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 3
தொறுத்த வயலும் பூத்த நெய்தலும்
இதழ் எண். 75 > தலையங்கம்
ஏழாவது ஆண்டில்
ஆசிரியர் குழு

வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த இதழின் தலையங்கத்தில் வெளியாகியிருந்த ஒருவேளை பூஜைத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க விரும்பிப் பல வாசகர்கள் முகவரியைக் கேட்டிருந்தார்கள். அவர்களைக் கீழ்க்கண்ட முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

The Commissioner,
Hindu Religious & Charitable Endowments Department,
Government of Tamilnadu,
119, Uthamar Gandhi Salai,
Nungambakkam,
Chennai - 34.

Phone : +91-44-28334811
Fax : +91-44-28334816
Email : endowments@sancharnet.in

வரலாறு.காம் மின்னிதழ் தொடங்கப்பெற்று ஆறு ஆண்டுகளை நிறைவு செய்து, இப்பொழுது 75வது இதழை உங்கள்முன் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். முதல் இதழை வெளியிட்டபோது நாங்கள் கொண்டிருந்த மனநிலையைச் சற்று நினைத்துப் பார்க்கிறோம். 15 ஆகஸ்ட் 2004 அதிகாலையில் முதலாவது இதழை வெளியிட்டுவிட்டுச் சற்று ஓய்ந்திருந்த நேரத்தில், முனைவர் கலைக்கோவன் அவர்களிடமிருந்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் வந்தது.

This is the first step towards providing true History to people to whom it belongs to.
I think we are proceeding in the right track.
Let us wait for the response and share.
My hearty congratulations for all the contributors.
Hope that next issue provides much more interesting information.

கலப்படமற்ற வரலாற்றை அதற்குரிய மக்களுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற வேட்கையில் தொடங்கப்பட்ட இந்த வரலாறு.காம் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தப் பாதையை எத்தனை தூரம் கடந்திருக்கிறது என்பதை அளவிட வேண்டியது அவசியம். இடையில் எங்காவது பாதை மாறிப் போயிருக்கிறோமா என்றால், 'இல்லை' என்ற பதில் மனதுக்குத் திருப்தியை அளிக்கிறது. இங்கே கலப்படம் என்றால், வரலாற்று ஆய்வு முடிவுகளில் ஆய்வாளர் தான்சார்ந்த சமூக, மத, அரசியல் இயக்கங்களின் நோக்கங்களைக் கலப்பது. ஆசிரியர் குழுவில் உள்ளவர்களுக்கு இத்தகைய சார்புகள் ஏதும் இல்லை என்பதால் எங்களது கட்டுரைகளில் இத்தகைய கலப்படங்கள் இல்லை என்பதுடன், தற்செயலாக அவ்வாறு ஏதேனும் கலக்க நேரிட்டாலும், மற்ற ஆசிரியர்களின் அறிவுரையின்பேரில் அவை திருத்தப்பட்டுவிடும். எனவே உண்மையான வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் செல்லுதல் என்ற நோக்கில் நாங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சொல்லலாம். ஏன் ஓரளவுக்கு? இன்னும் முழுவதுமாக வெற்றியடையவில்லை என்பதற்குக் காரணம், இது ஒரு தொடர்ந்த பயணம் என்பதால்தான். பயணம் முடியும்போதுதான் முழுமையான பயனைக் கணக்கிட முடியும்.

இம்மின்னிதழில் வெளியாகும் செய்திகள் மக்களை எந்த அளவுக்குச் சென்றடைகிறது என்று பார்த்தால், அதுவும் மனதுக்கு நிறைவளிப்பதாகவே இருக்கிறது. தொடக்கத்தில் சராசரியாக மாதத்திற்கு 4000 வாசிப்புகள் என்றிருந்த நிலை இந்த ஆண்டு சராசரியாக 82000 வாசிப்புகள் என்று பன்மடங்கு உயர்ந்திருப்பதைக் கீழ்க்கண்ட தகவல் படத்திலிருந்து அறியலாம்.



நாங்கள் பங்கேற்கும் மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுகளின்போது சந்திக்கும் அறிஞர்கள் தெரிவிக்கும் பாராட்டுக்களும் உரிய மக்களுக்குச் செய்திகள் சென்றடைகின்றன என்பதற்குச் சான்று பகர்கின்றன. இதைவிட, கோயிலாய்வுகளுக்கு நாங்கள் செல்லும் சிற்றூர்களிலும்கூட, 'வரலாறு.காம் என்றொரு மின்னிதழ் அரிய வரலாற்றுத் தகவல்களை வெளியிடுகிறது. வாசித்துப் பாருங்கள்' என்று எங்களுக்கே பரிந்துரை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. இம்மின்னிதழின் வீச்சுக்கு இதுவே மிகப்பெரிய ஆதாரம்.

பொதுவாகவே இதழ்கள் என்றால், நாள் அல்லது வாரம் அல்லது மாதத்துடன் அவ்விதழின் ஆயுளும் முடிந்துவிடும். பின்னர் அவற்றைத் திரும்பிப் பார்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால் இம்மின்னிதழில் எந்தவொரு மாதத்தின் இதழையும் எப்போது வேண்டுமானாலும் படித்துத் துய்க்கலாம். புதிதாகப் படிப்பவருக்கு எல்லாமே புதிதாகவே இருக்கும். திரும்பத் திரும்பப் படிப்பவருக்கும் புதிய கோணங்கள் தென்பட்டுக்கொண்டே இருக்கும். அதுதான் வரலாற்றின் சிறப்பு.

வரலாறு.காம் மீதான விமர்சனங்கள் ஏதும் இதுவரை எழுந்ததில்லையா? எழுந்திருக்கிறது. ’சிறப்பிதழ்கள் என்ற பெயரில் தனிமனித வழிபாடு செய்கிறீர்கள்’ என்பது சில வாசகர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. உண்மைதான். எங்களை வரலாற்றின்பால் சுண்டியிழுத்த சரித்திர நாயகர்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அவர்களைச் சிறப்பிக்க வேண்டியதும், அவர்கள் எங்களுக்குச் செய்த உதவிகளை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்துவதற்குத் தருணம் அமைத்துக் கொள்ளவேண்டியதும் எங்களின் கடமையல்லவா? எங்கள் மூலமாக மறைமுகப் பயனைப்பெறும் வாசகர்களின் கடமையும் அதுதானே? அது எப்படித் தனிமனிதத் துதியாகும்? பல்லவ மகேந்திரவர்மர் இல்லையென்றால் கருங்கற்களில் காவியங்கள் படைக்கப்படாமலே போயிருக்குமே? 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுக்காகத் தொல்லியல் அகழாய்வுகளை மட்டுமே நம்பியிருக்கவேண்டுமே? சிற்பக்கலை, கல்வெட்டு, கட்டடக்கலை போன்ற துறைகள் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காதே? அவரது சிறப்புகளை எடுத்துரைப்பது தவறா? முனைவர் கலைக்கோவன் அவர்கள் இல்லையென்றால் இப்படியொரு குழுவே உருவாகாமல் போய், வாசகர்களுக்கு வரலாறு.காம் என்றொரு மின்னிதழே கிடைக்காமல் போயிருக்குமே? அவருக்கு நன்றி செலுத்துவது தவறா? இவற்றைச் செய்வது தவறு என்றால், அத்தவற்றைத் தொடர்ந்து செய்வதில் மிகவும் பெருமையே கொள்கிறோம்.

சமீபத்திய இதழ்கள் தாமதமாக வருகின்றன என்ற குறையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். வயிற்றுப்பசியைப் போக்கத் தொழிலில் ஒரு காலையும் அறிவுப்பசியைப் போக்கத் தமிழ் - வரலாற்றுத் துறையில் ஒரு காலையும் வைத்திருக்கும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்ற இன்னும் பல தளங்களிலும் கால் வைக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது தாமதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இம்மின்னிதழில் எழுதும் ஆய்வாளர்கள் முனைவர் மு.நளினி, தி.சுமிதா, கி.ஸ்ரீதரன் போன்ற ஒரு சிலர் மட்டுமே வரலாறு மற்றும் தொல்லியலைத் தொழிலாகத் தேர்ந்து கொண்டவர்கள். இருப்பினும், தாமதமானாலும் மாதந்தவறாமல் வெளியிட்டுவிடவேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். சூழ்நிலைகள் சரியானவுடன் குறித்த நேரத்துக்கு வெளிவரும் என்று உறுதியளிக்கிறோம்.

அடுத்துச் சமீபமாக எழுந்திருக்கும் இன்னொரு குற்றச்சாட்டு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சேஷாத்ரி கோகுலின் ‘சேரர் கோட்டை’ புதினத்தை இன்னும் தொடரவில்லை என்பது. தொடர்கதை நிறுத்தப்பட்டபோது உரிய காரணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. 2 அல்லது 3 பக்கங்களுக்கு மேல் எழுதும்பொழுது மணிக்கட்டில் வலி ஏற்பட்டு, மற்ற வேலைகளையும் பாதிக்கிறது என்பதால் இன்னும் தொடர முடியவில்லை. கோகுல் வாயால் கதையைச் சொல்லச்சொல்ல இன்னொருவர் தட்டச்சு செய்யலாமே என்றும் தாமே தட்டச்சு செய்து தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் பல வாசகர்களிடமிருந்து கருத்துக்கள் வந்திருக்கின்றன. திரு.வி.க அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தாம் எழுத விரும்பியவற்றைச் சொல்லச்சொல்ல அவரது மகள் எழுதித் தந்ததாக ஒரு செய்தி உண்டு. சொல்பவர் சொல்ல நினைக்கும் கருத்துக்களை அப்படியே எழுத்தில் கொணரும் அளவுக்கு எழுதுபவருக்கும் சொல்பவருக்கும் இடையே அலைவரிசை ஒத்துப்போக வேண்டும். கட்டுரைகளை எழுதுவதற்கே இத்தகைய எழுதுபவர் கிடைப்பது கடினம் எனும்போது, கதையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? தான் சொல்ல நினைத்தது சரியாக எழுத்தில் வந்திருக்கிறது என்ற திருப்தி வரும் வரைக்கும் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டுதான் இருக்கவேண்டும். சொல்பவரைவிட எழுதுபவருக்குப் பொறுமை மிகவும் வேண்டும். ஒருவர் செய்யவேண்டிய வேலையை இரண்டு மடங்கு நேரம் செலவழித்து இருவர் செய்வதற்கு இன்றைய அவசர உலகத்தில் யாருக்கும் நேரமும் இல்லை.

இதைத்தவிர, இன்னொரு பிரச்சினையும் கோகுலைச் சோர்வடைய வைத்துள்ளது. எழுதுபவர் யாருக்கும் தன்னுடைய எழுத்தை இன்னொருவர் திருடித் தன் பெயரிலோ அல்லது புத்தகத்திலோ போட்டுக்கொள்வது என்பது வருத்தத்தை அளிக்கக்கூடிய செயலே. அப்படி வெளியிட்டதை ஒத்துக்கொண்டு கீழே பின்குறிப்பில் மூலக்கட்டுரையின் விவரங்களை வெளியிட்டிருந்தாலாவது சற்று ஆறுதல் ஏற்படும். சேரர் கோட்டை கதையையும் சிலர் தங்களது இணையத்தளங்களில் ஆசிரியர் பெயர் இல்லாமலும் வெவ்வேறு பெயர்களிலும் வெளியிட்டிருக்கின்றனர். தொடர்ச்சியான எச்சரிக்கைகளாலேயே இவற்றில் சில நீக்கப்பட்டுள்ளன. எங்களுக்குத் தெரிந்தே இத்தனை என்றால் இன்னும் தெரியாத வலைத்தளங்களில் வெளியிடப்பட்டவை எத்தனையோ? இத்தனையையும் தாண்டிச் சேரர் கோட்டையைத் தொடரவேண்டுமா என்று கோகுலை இப்பிரச்சினை யோசிக்க வைத்துள்ளது. புத்தகமாக வெளியிடுவது இத்திருட்டுக்கு ஒரு தீர்வு என்றாலும், நேரம் வாய்க்கும்போது புதினத்தைத் தொடர்வது என்ற எண்ணம் இன்னும் நிராகரிக்கப்படவில்லை என்பது வாசகர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி.

75 இதழ்களையும் தாண்டித் தொடர்ந்து வரலாறு.காம் மின்னிதழ் வருவதற்கு உந்துசக்தியாக இருக்கும் வாசகர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.