http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 75

இதழ் 75
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஏழாவது ஆண்டில்
ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்!
ஆவூர்க் குடைவரை
திரைக்கோயில் குடைவரை
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 1
இராஜராஜரின் ஆற்றல்கள்
தஞ்சைப் பெரியகோயில் - அதிட்டானம் - ஆய்வு
இராசராசனும் சோழமகாதேவியும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 3
தொறுத்த வயலும் பூத்த நெய்தலும்
இதழ் எண். 75 > கலைக்கோவன் பக்கம்
ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்!
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

நலந்தானே. நெடிய இடைவேளைக்குப் பிறகு எழுதுவதற்காகப் பொறுத்துக்கொள். பல எழுத விழையினும் பல போதுகளில் அந்த விழைவு துளிர்விடினும் பணிச்சூழல் தடையாகிவிடுகிறது. இப்போதும்கூட மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள் முற்றுகையிட்டுள்ளன. எனினும், வரலாறு மின்னிதழிற்கு எழுதுமாறு தம்பி கமலக்கண்ணன் கேட்டபோது, வாருணியே கேட்பது போல் உணர்ந்தேன். உன் பெயர் முன் நிற்கும்போது பணியாவது, சூழலாவது! எழுத எவ்வளவோ இருந்தபோதும் அந்த வரிசையில் முதலாக நிற்பது தளிச்சேரிக் கல்வெட்டுதான். 23. 4. 2010 அன்று வெளியான இந்து நாளிதழில் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி, 'Voyage of Discovery' என்ற தலைப்பில், 'Rajarajechcharam is Kudavayil Balasubramanian's Tribute to Rajaraja Chola' என்ற குறிப்புடன் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். 'The book is the result of his 40 year obsession with the big temple' என்றும் சுகந்தி குறிப்பிட்டுள்ளார். முனைவர் அவ்வை நடராசனுடன் நிகழ்த்திய உரையாடலின்போது நண்பர் பாலசுப்ரமணியனே, இந்த நூல் தம்முடைய இருபதாண்டுக் கால உழைப்பு என்றும் தஞ்சைப் பெரிய கோயிலை அங்குலம் அங்குலமாகத் தாம் ஆய்ந்துள்ளதாகவும் 110 கல்வெட்டுகளையும் முப்பது துண்டுக் கல்வெட்டுகளையும் இந்நூலின் ஆய்வுக்காகத் தாம் எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தினமணியின் 2010 தீபாவளி மலரின் படப்பிடிப்புக் காட்டுகிறது.

சுகந்தி கிருஷ்ணமாச்சாரியின் கட்டுரையைப் படித்ததும் நண்பர் பாலசுப்ரமணியனுடன் தொலைபேசி நூலை விலைக்குப் பெற்றேன். நண்பரின் இருபதாண்டு உழைப்பு 518 பக்கங்களாக மலர்ந்துள்ளது. இந்த இருபதாண்டுகள் அவருடைய பார்வையில், பரிமாணத்தில், ஆய்வு நுட்பத்தில் வளர்நிலைகளை உருவாக்கியிருக்கும் என்ற தளராத நம்பிக்கையுடன் நூலிற்குள் நுழைந்தேன். பல இடங்களில் தடுமாறி நின்றாலும் பக்கம் 306ல் தொடங்கும், 'நாட்டியக்கலை' அதை முடித்த நிலையில், மேற்கொண்டு தொடரமுடியாதபடி என்னை நிறுத்திவிட்டது.

முதலாம் இராஜராஜர் தஞ்சாவூரில் தாம் எடுப்பித்த கற்றளியாம் இராஜராஜீசுவரத்தில் பணியாற்றச் சோழமண்டலத்துத் தளிச்சேரிகளில் இருந்து கொணர்ந்து தஞ்சாவூர்த் தளிச்சேரிகளில் குடியேற்றிய பெண்டுகளின் எண்ணிக்கை 400. 1995ல் வெளியாகியுள்ள தம்முடைய 'தஞ்சாவூர்' (திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, ப. 269) எனும் நூலிலும் பாலசுப்ரமணியன் இதே எண்ணையே குறிப்பிட்டுள்ளார். ஆனால், தம்முடைய புதிய நூலில் இந்த எண்ணிக்கையை மாற்றி 407 என்று குறிப்பிட்டுள்ளார். 'நானூற்று ஏழு நாட்டிய நங்கையர்களும்' என்று நூலின் பக்கம் 307ல் தொடங்கும் நாட்டியக்கலை பற்றிய அவருடைய தொடர், அந்நங்கையர்களுடன் இராஜராஜீசுவரத்திற்கு நிவந்தக்காரர்களாய் இராஜராஜரால் வழங்கப்பெற்ற இசைக்கலைஞர்களாக 132 பேரை இணைத்து, 'ஐநூற்று முப்பத்து ஒன்பது (539) பேர் இணைந்து இக்கலையைப் போற்றி வளர்த்தனர் என்பதை மாமன்னன் இராஜராஜனின் கல்வெட்டு பட்டியலிட்டுக் கூறுகின்றது' என மன்னர் பெயரிலேயே எண்ணிக்கையின் பொறுப்பைச் சுமத்தி முடிகிறது.மாமன்னர் இராஜராஜரின் இந்தக் கல்வெட்டு முழுமையும் 1994-95ல் எங்களால் மறுபடிப்புச் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் 27 திருத்தங்களுடன் வரலாறு ஆய்விதழ் ஐந்தாம் தொகுதியில் (ஆகஸ்டு 1995) 55 பக்கக் கட்டுரையாக வெளியிடப்பட்டது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் இரண்டாம் தொகுதியில் 66ம் எண்ணிட்டுப் பதிவாகியுள்ள இக்கல்வெட்டின் பாடத்திற்கும் எங்கள் படிப்பிற்கும் இடையில் இருந்த திருத்தங்களைத் தனியே அட்டவணைப்படுத்தி வரலாறு இதழில் தந்திருப்பதுடன், 'கானபாடி' என்று படிக்கப்பட்ட 'காண பாட', 'மெ . . வியம்' என்று படிக்கப்பட்ட 'மெராவியம்', 'வடுகக் காலவரில்' என்று படிக்கப்பட்ட 'வடுகக் காந்தர்வ்வரில்' போன்ற சில முதன்மையான திருத்தங்களை மசிப்படியுடன் வெளியிட்டு எங்கள் மறுபடிப்பின் உண்மைத் தன்மையை உணர்த்தியுள்ளோம்.நானும் பேராசிரியர் முனைவர் மு. நளினியும் 2002ல் எழுதிய 'தளிச்சேரிக் கல்வெட்டு' எனும் நூலிலும் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. நூலுக்காக மீண்டும் ஒருமுறை வரலாறு இதழில் வெளியான கட்டுரையைப் படித்துச் செப்பம் செய்து இணைத்தோம். களத்திற்கே சென்று கல்வெட்டு முழுமையையும் மறுபடிப்புச் செய்து பதிப்பித்த இந்த உழைப்பு, தளிச்சேரிக் கல்வெட்டை உள்ளத்தில் ஆழப் பதியச் செய்துள்ளது. அதனால்தான், பாலசுப்ரமணியனின் நூலில் இடம்பெற்றுள்ள 407 என்ற எண்ணிக்கையும் 539 என்ற கூட்டுத்தொகையும் அவர் தந்திருக்கும் பெயர்ப் பட்டியலில் உள்ள விடுபடல்களும் மீளவரும் எண்களும் வரைபடத்தில் செய்யப்பட்டிருக்கும் எண்ணிக்கைத் திருத்தங்களும் பிற இசைக்கலைஞர்களின் பட்டியலில் நேர்ந்துள்ள குழப்பங்களும் என்னை மிகவும் வருத்தின. நண்பரின் இருபதாண்டு உழைப்பு வீணாகிவிடக்கூடாது என்ற அக்கறையுடன் அவருக்குத் தொலைபேசினேன். பிழைகளைச் சுட்டிக் காட்டினேன். சரிபார்த்துவிட்டுப் பேசுவதாகக் கூறினார். திங்கள்கள் பல சென்றும் நண்பரிடமிருந்து மறுமொழி இல்லை.

இந்நிலையில் பாலசுப்ரமணியனின் 407 வைரஸ் நோய் போல நான்கு பக்கமும் பரவுவதைக் கண்டேன். கல்கி இதழில் வெளியான நேர்முகம் ஒன்றில் ஆடற்கலைஞர் ஒருவர் இராஜராஜீசுவரத் தளிப்பெண்டுகளின் எண்ணிக்கையை 407 என்று குறித்திருந்தார். 17. 9. 2010 அன்று வெளியான இந்து நாளிதழில் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி, 'Legal Document in Stone' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில், '407 dancers appointed by Rajaraja in the big temple' என்று குறிப்பிட்டுள்ளார். அதே கட்டுரையில் நாகசாமி, 'Rajaraja's Inscriptional Document on His Endowment for 400 Dancers at the Thanjavur Temple' என்ற தலைப்பில் பரதமுனி பவுண்டேஷனில் பேசுவதாகவும் சுகந்தி குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரை வெளியான அன்றே, 'சுகந்தியின் எண்ணிக்கை, நாகசாமியின் எண்ணிக்கை இவற்றிலுள்ள முரணைச் சுட்டிச் சரியான எண்ணிக்கை எது என்பதையும் விளக்கி இந்துவுக்கு மடலெழுதி இருந்தேன். இராஜராஜீசுவரம் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்ட 'இந்தியா டுடே' இதழிலும் 407 இடம்பிடித்திருந்தது. இனியும் பொறுமையுடன் இருந்தால் 407 நானிலமெங்கும் பரவிவிடுமோ எனத் தோன்றியது. விளைவுதான் வாருணி, 'ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்'.

தினமணி நாளிதழில் பாலசுப்ரமணியனின் நூலைப் பற்றி வெளியாகி இருந்த ஒரு கட்டுரையின் தலைப்புதான், 'ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம்'. அந்தக் கட்டுரையை எழுதியவர் பாலுவின் புத்தகம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். நூல் பற்றிய கட்டுரைக்கு அவர் தந்திருந்த தலைப்புடன் சிறு தொடராக 'ஒரே குழப்பம்' என்பதை இணைத்துக் கொள்ள, என் கட்டுரைக்குத் தலைப்புப் பிறந்துவிட்டது.

இனி, 306-324 வரையிலான பக்கங்களில் தளிச்சேரிக் கல்வெட்டு பட்டிருக்கும் பாடுகளை விரிவாகப் பார்ப்போம். முதலாம் இராஜராஜர் கோயிலுக்களித்த தளிப்பெண்டுகளின் எண்ணிக்கையை ஆறு இடங்களில் 407 என்று நண்பர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கல்வெட்டில் 400 பெண்களே இடம்பெற்றுள்ளனர். அந்தப் பெண்களின் ஊர், பணியாற்றிய இடம், தஞ்சாவூரில் அவர்கள் பெற்ற வீட்டு எண், அது இருந்த சிறகு (பிரிவு), அச்சிறகு இடம்பெற்றிருந்த தளிச்சேரியின் திசை என அனைத்தும் உள்ளடங்க பாலு தயாரித்திருக்கும் அட்டவணை பக்கம் 307 தொடங்கி, 319 வரை நீளுகிறது. 1, 2 எனத் தொடரும் எண்களின் எண்ணிக்கை பக்கம் 309ல் 59க்குப் பிறகு 87க்குத் தாவியுள்ளது.இடையிலுள்ள 60-86 எண்களும் (17 பெண்கள்) அவற்றிற்குரிய பெண்களின் பெயர்களும் தொடர்பான பிற தரவுகளும் விடுபட்டுள்ளன. அதே பக்கத்தில் 92, 93 எனும் இரண்டு எண்களும் இருமுறை இடம்பெற்றுள்ளன. அதனால், 94ம் பெண்ணும் 95ம் பெண்ணும் 92, 93 எண்களில் தேங்க, தொடரெண் குழப்பம் தொடர்கிறது.

எண்களில் ஏற்பட்ட இக்குழப்பம் வீடுகளின் எண்ணிக்கையில் இடம்பெறவில்லை. கல்வெட்டுப் பாடத்தில் இருக்குமாறு போலவே 92ம் பெண்ணின் வீடு தெற்குத் தளிச்சேரித் தென்சிறகின் 92ம் வீடாக முற்றுகிறது. 93ம் பெண்ணின் வீடு தெற்குத் தளிச்சேரி வடசிறகின் தலைவீடாகத் தொடங்குகிறது.

பக்கம் 311ல் உள்ள எண் வரிசையில் 129க்குப் பிறகு 140 இடம்பெற்றுள்ளது. 130-139 எண்களும் (10 பெண்கள்) அவற்றிற்குரிய தரவுகளும் விடுபட்டுள்ளன.ஆனால், வீட்டு எண் வரிசை மாறவில்லை. பக்கம் 312ல் தெற்குத் தளிச்சேரியின் வடசிறகு கல்வெட்டுப் பாடத்தில் உள்ளவாறே 92 வீடுகளுடன் முற்றுப் பெறுகிறது. வீட்டு எண்ணிக்கையின்படி பார்த்தால் தெற்குத் தளிச்சேரியின் இந்த வடசிறகு 92ம் வீட்டில் குடியேறியவர் 184ம் (தென்சிறகு 92+ வடசிறகு 92 = 184) பெண்ணாக இருக்கவேண்டும். ஆனால், எண் வரிசை 192 ஆக உள்ளது.

அதே பக்கத்தில் (312) 194ம் எண் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. 193ம் எண்ணிற்கு நேராக வடக்குத் தளிச்சேரித் தென்சிறகின் முதல் வீடு தொடங்குகிறது.பக்கம் 315ல் 272ம் எண் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது.பக்கம் 316ல் கல்வெட்டுப் பாடத்தில் இருக்குமாறே வடக்குத் தளிச்சேரியின் தென்சிறகு 95ம் வீட்டுடன் நிறைவு பெறுகிறது. தெற்குத் தளிச்சேரியின் இரண்டு சிறகுகள், வடக்குத் தளிச்சேரியின் தென்சிறகு இவற்றில் அமைந்திருந்த வீடுகள் கல்வெட்டுப் பாடத்தின் படியும் பாலு தந்திருக்கும் வீட்டு எண் வரிசைப்படியும் 279 (92+92+95 = 279). ஆனால், 279ம் வீட்டிற்குரிய பெண்ணின் எண்ணாக 279 இருக்கவேண்டிய இடத்தில் 285 இடம்பெற்றுள்ளது.

பக்கம் 317ல், 343ம் எண்ணை அடுத்து 345 உள்ளது. 344 விடுபட்டுள்ளது.ஆனால், வீட்டு எண் வரிசை மாறவில்லை. அது தொடர்கிறது. பக்கம் 319ல் வடக்குத் தளிச்சேரியின் வடசிறகு 96 வீடுகள் எனும் எண்ணைக் கல்வெட்டுப் பாடத்தில் உள்ளாற் போலவே தந்து நிறைவுபெறுகிறது.279+96=375. 375ம் வீடாக எண்ணிக்கை பெறும் இவ்வீட்டிற்கு உரிய பெண் 375ம் எண்ணிற்குரியவராக இருக்கவேண்டும். ஆனால், பாலுவின் பட்டியலில் 382 என்றுள்ளது.

கல்வெட்டுப் பாடத்தில் எழுத்துக்கள் சிதைந்திருப்பதால் அதன் இறுதிப் பகுதியில் இடம் பெற்றுள்ள 25 பெண்கள் குடியேறிய 25 வீடுகளும் எந்த இடத்தில், என்ன பெயருடன் இருந்தன என்பதை அறியக்கூடவில்லை. ஆனால், பாலசுப்ரமணியன் அதைக் குறுக்குத் தெருவாக ஊகித்துள்ளார்.'குறுக்குத் தெரு' 8 எழுத்துக்கள் கொண்ட சொல். ஆனால், கல்வெட்டுப் பாடத்தில் 5 எழுத்துக்களுக்குரிய இடமே உள்ளது. அதனால், பாலுவின் ஊகம் சரியன்று என்பது தெளிவு. இங்கும் பாலுவின் பட்டியலில் வீட்டு எண்ணிக்கை 25 என்று சரியாகவே முடிகிறது. அதனால், அந்த வீட்டில் குடியேறிய பெண் 400ம் எண்ணுக்கு (375 + 25 = 400) உரியவராக இருக்கவேண்டும். ஆனால், பாலு அதை 407 ஆகக் குறித்துள்ளார்.

பாலசுப்ரமணியன் பக்கம் 320ல், 'தஞ்சைப் பெருங்கோயிலும் தளிச்சேரிகளும்' என்ற தலைப்பில் ஒரு வரைபடம் தந்துள்ளார். அந்த வரைபடத்தில் வீடுகளின் எண்ணிக்கை பட்டியலில் உள்ளாற் போல் இல்லாமல் மாற்றித் தரப்பட்டுள்ளது.தளிச்சேரி
சிறகு
கல்வெட்டுப் பாடத்திலும் பாலுவின் அட்டவணையிலும் இடம்பெற்றுள்ள எண்ணிக்கை
பாலுவின் வரைபடத்தில் உள்ள எண்ணிக்கை
வடக்கு
வடக்கு
96
96
வடக்கு
தெற்கு
95
96
தெற்கு
வடக்கு
92
95
தெற்கு
தெற்கு
92
95
தனிக்குடியிருப்பு
25
25
மொத்தம்
400
407


அட்டவணையில் சரியாக இடம்பெற்றிருக்கும் வீட்டு எண்ணிக்கை வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளது. 407 என்ற எண்ணிக்கை பாலசுப்ரமணியனுக்கு எப்படிக் கிடைத்தது? கல்வெட்டில் அவர் புதிதாக ஏழு பெண்களின் பெயர்களைக் கண்டறிந்திருந்தால் நூலில் அதைக் குறிப்பிட்டுப் பெண்களின் பெயர்களைத் தந்திருக்கவேண்டும். தரவில்லை. கல்வெட்டில் இருக்கும் 400 பாலசுப்ரமணியனுக்கு 407 ஆகக் காட்சி தந்திருக்கும் அதிசயத்தை அறியக்கூடவில்லை.

குடியிருப்பு வரைபடத்தின் கீழ் தளிப்பெண்டுகள் கல்வெட்டிருக்கும் இடம் சுட்டியும் பாலு ஒரு வரைபடம் தந்துள்ளார். அப்படத்தில் திருக்கோயிலின் பெயரை இராஜராஜீச்சரம் என்று எழுதியுள்ளார். ஆனால், அவருடைய நூலின் பெயர் இராஜராஜேச்சரம். இராஜராஜரின் கல்வெட்டுகளிலோ கோயிலின் பெயர் இராஜராஜீசுவரம். இருபதாண்டுகள் பழகிய ஒரு கோயிலின் பெயரில்கூடவா குழப்பம்?

இனி, இசையோடு தொடர்புடைய நிவந்தக்காரர்களை பாலசுப்ரமணியன் அட்டவணைப்படுத்தியிருக்கும் முறை பார்ப்போம். அவர் கணக்குப்படி இராஜராஜீசுவரத்தில் 407 நாட்டிய நங்கையருடன் இணைந்து நாட்டியக் கலையைப் போற்றி வளர்த்தவர்களின் எண்ணிக்கை 132. இந்த எண்ணிக்கையை மாமன்னர் இராஜராஜர் கல்வெட்டு பட்டியலிட்டுக் கூறுவதாக எழுதிப் பட்டியலையும் பாலு தந்திருக்கிறார். ஆனால், கல்வெட்டு 138 பேரை அடையாளப்படுத்துகிறது. பாலுவின் கணக்கிற்கும் கல்வெட்டின் கணக்கிற்கும் இடையிலுள்ள வேறுபாடு 6.

இந்தக் குழப்பம் எப்படி நேர்ந்தது? பாலுவின் அட்டவணையைப் பார்ப்போம். பக்கம் 321ல் உடன் பாட்டுப் பாடுவோர் நால்வர் என்ற தலைப்பில் நான்கு ஆடவர் பெயர்கள் தரப்பட்டுள்ளன.கல்வெட்டின் எந்தப் பகுதியிலும் 'உடன்பாட்டுப் பாடுவோர்' என்ற சொல்லாட்சி இடம்பெறவில்லை. பாலு சுட்டியுள்ள இந்த நான்கு ஆடவர்களும் பாட்டிற்காகப் பணியமர்த்தப்பட்டவர்கள். இந்தப் பாட்டின் வகையும் தன்மையும் அறிய முடியாதபடி கல்வெட்டெழுத்துக்கள் சிதைந்துள்ளன. ஐந்து எழுத்துக்கள் மட்டுமே இடம்பெறக்கூடிய இச்சிதைவுப்பகுதியில் முதலெழுத்தாக '¦' என்ற எழுத்துத் தெளிவாக உள்ளது. அடுத்தாற் போல் உள்ள மூன்று எழுத்துக்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன. ஐந்தாம் எழுத்து 'ட அல்லது டு' என ஊகிக்குமாறு பாதி சிதைந்த நிலையில் உள்ளது. நாங்கள் விட்டுப்போன எழுத்துக்களாக, 'கொட்டு' என்பதைக் கொண்டு இசைத்தமிழ் அறிஞர் வீ.ப.கா.சுந்தரத்துடன் கலந்துரையாடி இப்பாடகர்களைக் கொட்டுப் பாடகர்களாகக் கொண்டோம். பாலசுப்ரமணியன் இதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், உடன்பாட்டுப் பாடுவோர்களாக இப்பாடகர்களை அவர் கொண்டுள்ளமை முற்றிலும் பிழையானது. கல்வெட்டில் இந்தச் சொல்லாட்சிக்கு வாய்ப்பே இல்லை.

பாலுவின் பட்டியலில் கானம்பாடி இருவர் என்ற தலைப்பில் இரண்டு பெயர்கள் இடம்பெற்றுள்ளன.கானம்பாடி என்ற சொல்லாட்சி கல்வெட்டில் இல்லை. 'காண பாட' என்ற தொடரே உள்ளது. இதை நாங்கள் மசிப்படி எடுத்துப் படம் வெளியிட்டு நிறுவியுள்ளோம். எது உண்மையோ அது நிலைக்கவேண்டும். ஆனால், ஹூல்ஷ் படிப்பையே ஏற்றுள்ள பாலசுப்ரமணியன் அதிலாவது ஒன்றியிருக்கவேண்டும். 'காணபாட மூவர்க்கு முண்டகாரி அணுக்கனுக்குப் பங்கு நாலரையும் மேற்படி இரண்டுக்கு ஆச்சன் கீர்த்தி பூஷணனான அறிஞ்சிகை காமரப் பேரையனுக்குப் பங்கு மூன்றும்' என்று ஐவரைச் சுட்டுகிறது கல்வெட்டு. ஆனால், பாலு இருவரை மட்டுமே சுட்டியுள்ளார். எஞ்சியுள்ள மூவர் பட்டியலில் இடம்பெறவில்லை.

நாங்கள் காந்தர்வராகக் கொண்ட இருபது பேரை நண்பர் பாலசுப்ரமணியம் காந்தர்வர் மூவர் என்றும் உவச்சர் இருபதின்மர் என்றும் இரண்டு பிரிவுகளாக்கிக் கூட்டுத்தொகையையும் இருபத்து மூன்றாகக் காட்டியுள்ளார்.கல்வெட்டில் இருபது பெயர்களே இருக்கும்போது இவர் எப்படி மூவரை அதிகரிக்கச் செய்திருக்கிறார் என்று பார்த்தபோதுதான் இறந்தவர்களாகக் கல்வெட்டுக் குறிக்கும் கீர்த்திநாதனையும் நூற்றெண்மன் சூற்றியையும் பாலு எண்ணிக்கையில் சேர்த்துக் கொண்டமை விளங்கியது. 'பராந்தகக் கொங்கவாளில் கீர்த்திநாதனுக்குப் பங்கு முக்காலும் இவன் செத்தமையில் இவன் தம்பி கீர்த்திகிளைதாங்கிக்குக் காணியாகவும்' என்று கல்வெட்டு மிகத்தெளிவாகக் கீர்த்திநாதன் இறந்தமையால் கிளைதாங்கி பணிப்பொறுப்புப் பெற்றமையைச் சுட்டியபோதும் எண்ணிக்கையில் பாலு இறந்தவரையும் கொண்டிருக்கிறார். இதே நிலைதான் சூற்றிக்கும் நேர்ந்துள்ளது. 'அரிதுர்க்கலங்கனத் தெரிந்த வலங்கை வேளைக்காறரில் நூற்றெண்மன் சூற்றிக்குப் பங்கு முக்காலும் இவன் செத்தமையில் இவன் தம்பி நூற்றெண்மனுக்குக் காணியாக' எனத் தெளிவாக உள்ளது கல்வெட்டு. இறந்தவர்களுக்கு மாற்றாகப் பணிசேர்ந்தவர்களை மட்டும் கொள்ளாது இறந்தவர்களையும் பணியாளர் எண்ணிக்கையில் பாலு இணைத்துள்ளார்.

உவச்சர் இருபதின்மர் என்ற தலைப்பின் கீழ் பாலு தந்திருப்பது 19 பெயர்களே. ஆனால், எண்ணிக்கையை இருபதாக்கியுள்ளார். இந்தப் பிழை எண் வரிசையிடும்போது நடந்துள்ளது. பத்திற்குப் பிறகு பதினொன்றைக் குறிப்பிடாமல் பன்னிரண்டுக்கு வந்துவிட்டார். அதன் விளைவே எண்ணிக்கை ஏற்றம். ஆக, பாலுவின் இருபத்துமூவரில் இருவர் இறந்தவர்கள். ஒருவர் பட்டியலில் இல்லை.

பாலசுப்ரமணியன் இருபது பேரை உவச்சர்களாகப் பட்டியலிட்டுள்ளார். உவச்சர் என்ற கல்வெட்டுச் சொல் இசைக்கலைஞர் எனப் பொருள்தரும் (தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, தொகுதி 1, சாந்தி சாதனா, சென்னை, 2002, ப. 98). உவச்சக்காணி என்பது இசைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் நிலக்கொடையாகும். அதன்படி பார்த்தால் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள இசைக்கலைஞர்கள் அனைவருமே உவச்சர்கள்தான். பாலசுப்ரமணியன் பட்டியலில் உள்ள பதினெழுவரும் உவச்சர்கள் என்றால் அவர்களுள் இருவர் மட்டுமே கல்வெட்டில் உவைச்சர் என்ற முன்னொட்டுடன் பெயர் கொள்ளவேண்டிய அவசியம் என்ன? இவ்விருவரைத் தவிர்த்த ஏனைய பதினைந்து பேர்களுள் நால்வர் வீரசோழ அணுக்கர்கள். வலங்கை வேளைக்காறர்கள் ஒன்பதின்மர். கொங்கவாள் பணியாளர் ஒருவர். தெரிந்த பரிக்காறர் பிரிவிலிருந்து வந்தவர் ஒருவர். இப்பதினைந்து பேரும் இசையறிவு பெற்றவர்களாக இருந்த காரணத்தினால் கோயிற்பணிக்கு மாற்றப்பட்டனர். இருவர் உவைச்சுப் பணியிலேயே இருந்தமையினால் கல்வெட்டு அவர்களை மட்டும் உவைச்சன் என்ற முன்னொட்டுத் தந்து சிறப்பித்துள்ளது.

வீணை வாசிப்பவர் இருவர் என்ற தலைப்பின் கீழ் பாலு தந்திருக்கும் இரண்டு பெயர்களுள் முதலாவதாகக் காணப்படும் சுப்ரமண்யன் கூத்தனான செம்பியன் வீணை ஆதித்தன் இறந்தமையினால்தான் அவருடைய சிற்றப்பன் மகனான அரையன் சதாசிவன் அப்பொறுப்பேற்றார். பாலு இறந்தவர் பெயரையும் சதாசிவனுடன் இணைத்துள்ளார். கல்வெட்டுப் பொறிக்கப்பட்டபோது பணியில் இருந்த இருவருள் ஒருவர் சதாசிவன். மற்றொரு வீணைக் கலைஞரின் பெயர் கல்வெட்டில் சுட்டப்பெறவில்லை.

கல்வெட்டில் பாணர்கள் நால்வர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் யாரையுமே கலைவளர்த்தவர்களாகத் தம் பட்டியலில் பாலசுப்ரமணியன் கொள்ளாமை ஏனென்று தெரியவில்லை. பாடுவதற்கும் பாட்டைப் பயிற்றுவிக்கவுமே பணியமர்த்தப்பட்ட இப்பெருமக்கள் கலைவளர்க்காமல் வேறு எதை வளர்த்திருக்கமுடியும்?

'தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் காந்தர்ப்பர்களுக்கும் நாயகஞ் செய்யச் சாவூர் பரஞ்சோதி கோவிந்தன் சோமநாதன்' எனும் இருவரும் பணியில் இருந்ததாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. நாயகம் செய்தல் எனில் தலைமைப் பொறுப்பு வகிப்பவர் என்பது பொருள் (தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, தொகுதி 2, 2003, ப. 355). எனில், இவ்விருவரும் வழிகாட்டாமல், மேற்பார்வையிடாமல் மற்றவர்கள் எங்ஙனம் கலைவளர்த்திருக்க முடியும்? நாயகம் செய்த இவ்விரு பெருமக்களும் நண்பர் பாலுவின் கலைவளர்த்தவர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

518 பக்க நூலில் கலைவளர்ப்புப் பேசும் பதின்மூன்று பக்கங்களில் மட்டுமே இத்தனை குழப்பங்கள் எனில், பஞ்சபூதத்தலம், உருவச் சிற்ப அடையாளங்கள் எனத் தொடரும் நூலின் பிற பகுதிகளில் எவை எவை காத்திருக்கின்றனவோ! நம்மைப் பொறுத்தமட்டில் முன் நிற்கும் பேரச்சம் இதுதான். ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் என்ற தலைப்பை நம்பி இன்றைய, நாளைய ஆய்வாளர்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ள தரவுகளை ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் உண்மைத் தன்மையைக் காணாமல், தங்கள் ஆய்வுகளுக்கான வழிகாட்டல்களாகவும் அடிக்குறிப்புகளாகவும் கொண்டுவிடக்கூடும். இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் இந்தப் பதின்மூன்று பக்கக் குழப்பங்களுக்கும் இராஜராஜன் கல்வெட்டையே பொறுப்பாக்கியிருக்கும் பாலசுப்ரமணியனின் செயல் சரியானதன்று என்பதைச் சுட்டவேண்டும் என்ற பொறுப்புணர்வும் 407 நாடெங்கும் பரவி நிலை கொண்டுவிடக்கூடாதே என்ற நல்லெண்ணமும் மட்டுமே இக்கட்டுரைக்கான காரணங்கள்.

வாருணி, பஞ்சபூதங்களையும், 'தஞ்சைப் பெரிய கோயில் ஒருவகையில் கலிங்கக் கட்டடக்கலையை ஒட்டியிருப்பதாக இருக்கிறது' என்னும் முனைவர் அவ்வை நடராசனின் கருத்தை ஏற்று 'நீங்கள் சொல்வது உண்மைதான்' என மறுமொழி தந்திருக்கும் நண்பரின் தினமணி நேர்முகத்தையும் வாய்ப்பமையும்போது பார்க்கலாம்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.