http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > கலைக்கோவன் பக்கம்
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
இரா. கலைக்கோவன்
சிலப்பதிகாரப் பாடல் அடிகள் வழி அறிமுகமாகும் திருவரங்கும் கோயில் சோழர்கள் காலத்தில் செழிப்புற்றது. முதலாம் ஆதித்தரில் தொடங்கி, மூன்றாம் இராஜேந்திரர் வரை தொடர்ந்த சோழ மன்னர்களுள் அரிஞ்சயர், இரண்டாம் இராஜேந்திரர், வீரராஜேந்திரர் தவிர்த்த ஏனைய அனைத்து அரசர்களின் காலத்திலும் அரங்கம் கல்வெட்டுகள் பெற்றது. அரசர்களை அடையாளப்படுத்துவனவாய் 172 கல்வெட்டுகளும் சோழர் தொடர்புடையனவாய் 19 கல்வெட்டுகளும் இங்கு அறியப்பட்டுள்ளன.


18ம் நூற்றாண்டு ஓவியத்தில் திருவரங்கம் இராயகோபுரம்


அவற்றுள் பேரளவிலான பதிவுகள் முதற் குலோத்துங்கர் காலத்தவை. திருக்கோயிலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் சுற்றுகளில் இடம் பெற்றுள்ள அக்கல்வெட்டுகள் 83இல் 72, மூன்றாம் சுற்றின் நாற்றிசைச் சுவர்களிலும் (கிழக்கு 13, தெற்கு 15, மேற்கு 23, வடக்கு 21) ஆட்சி செலுத்துவதன் வாயிலாய், அச்சுற்றைக் குலோத்துங்கர் சுற்றாகவே மாற்றியுள்ளன. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் வேறெதிலும் காணமுடியாத அதிசயம் இது. எஞ்சிய 11இல் நாழிகேட்டான் வாயிலில் ஆறும் இரண்டாம் சுற்றில் இரண்டும் நான்காம் சுற்றில் இரண்டும் அமைய, ஒன்று யாகசாலையில் இடம்பிடித்துள்ளது.

இந்த 83 கல்வெட்டுகளுள் மன்னரின் ஆட்சியாண்டை இழந்துள்ளவை 28. ஆட்சியாண்டு பெற்றுள்ள முதல் கல்வெட்டு மன்னரின் பத்தாம் ஆட்சியாண்டான பொதுக்காலம் 1080இல் பதிவாகியுள்ளது. பத்தாம் ஆட்சியாண்டிலிருந்து 20ஆம் ஆட்சியாண்டிற்குள் 15 கல்வெட்டுகளும் 20இல் இருந்து 30க்குள் 8 கல்வெட்டுகளும் 30இல் இருந்து 40க்குள் 14 கல்வெட்டுகளும் 40இல் இருந்து 48க்குள்ளாக 18 கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் அதிகஅளவிலான கல்வெட்டுகள் 15ஆம் ஆட்சியாண்டையும் 41ஆம் ஆட்சியாண்டையும் சுட்டுகின்றன.


திருவரங்கம் கல்வெட்டுக்களைப் படித்தறியும் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய ஆய்வாளர்கள் மு.நளினி, அர.அகிலா. பட உதவி - தி இந்து


குலோத்துங்கரின் ‘புகழ்மாது விளங்க’, ‘புகழ் சூழ்ந்த புணரி’ எனத் தொடங்கும் இரண்டு மெய்க்கீர்த்திகளுமே கல்வெட்டுகளில் பயின்று வந்தபோதும் புகழ் சூழ்ந்த புணரியே பெரும்பான்மைக் கல்வெட்டுகளைத் தொடங்கி வைக்கிறது. இம்மெய்க்கீர்த்தி, வீரசிம்மாசனத்து வீற்றிருந்தருளிய குலோத்துங்க சோழருடன் இருபுறத்தும் இருந்த அரசியர்களையும் அடையாளப்படுத்துகிறது. வீரராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியிலேயே அரசருடன் அரசியும் வீற்றிருந்த காட்சி புலப்படுத்தப்பட்ட போதும் குலோத்துங்கரின் மெய்க்கீர்த்தியே மன்னருடன் இரண்டு தேவியர்
அமர்ந்திருந்தமையை முதல்முறையாக வெளிப்படுத்தவதுடன், குலோத்துங்கரை சிவபெருமானாகவும் அரசி தியாகவல்லியை உமையாகவும் மற்றோர் அரசி ஏழிசை வல்லபியை கங்கையாகவும் காட்டி மகிழ்கிறது. மூன்று உலகங்களின் அரசராகச் (திரிபுவன சக்கரவர்த்தி) சோழ அரசர் ஒருவர் மெய்க்கீர்த்திகளில் போற்றப்படுவதும் புகழ்சூழ்ந்த புணரியில்தான். சுங்கம் தவிர்த்த சோழராகக் கல்வெட்டொன்றில் சுட்டப்படும் குலோத்துங்கரின் இரண்டு அரசு மடல்கள் (திருமுகங்கள்) இந்த 83 கல்வெட்டுகளில் அடக்கம்.

சபை நடவடிக்கைகளாகச் சிலவும் கோயிலுக்களிக்கப்பட்ட விளக்குக் கொடைகள் கழறுவனவாகச் சிலவும் தனியருக்கான நில விற்பனைகள் பேசுவனவாகப் பலவும் எனத் தரவுத் திரட்டல்களாக அமைந்துள்ள குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகள், அரங்கன் கோயிலின் நிருவாகம் ஸ்ரீரங்கத்து சபையிடமிருந்து கைமாறிக் கோயில் நிருவாகக் குழுவிடம் அடைக்கலமானதை வெளிச்சப்படுத்துகின்றன. வைணவ வாரியம், பண்டார வாரியம், முதல் கணக்கு, சபைக் கணக்கு, வைணவக் கணக்கு எனக் கோயில் நிருவாகம் ஸ்ரீகார்யம் தலைமையில் விரிவடைவதும், இக்குழுவினர் ‘ஆழ்வார் கன்மிகள்’ என்ற சொல்லாட்சியால் சுட்டப் பெறுவதும் குலோத்துங்கர் காலந்தொட்டே.



முற்சோழர் காலத்தில் திருவரங்கத்துப் பெருமானடிகளாக அறியப்படும் இறைவன், ஆழ்வார் திருவரங்க தேவராகவும் திருவங்கத்தில் பள்ளி கொண்டருளுகிற அனந்த நாராயணசுவாமியாகவும் மாறுவதுடன், உற்சவர் வடிவில் அழகிய மாணவாளராக உலாவரத் தொடங்குவதும் குலோத்துங்கர் கல்வெட்டுகளிலேயே பதிவாகியுள்ளன.

அரங்கம் கோயிலின் முதல் ஸ்ரீகார்யமாக (இன்றைய நிருவாக அதிகாரிக்கு இணையான பொறுப்பு) முதற் பராந்தக சோழரின் முப்பதாம் ஆட்சியாண்டிலேயே நாராயணன் தென்னவன் பிரம்மாதிராஜர் அறிமுகமானாலும், அடுத்த ஸ்ரீகார்ய அலுவலரைக் குலோத்துங்கர் காலத்திலேயே காணமுடிகிறது. குலோத்துங்கரின் ஆட்சிக்காலம் முழுவதும் இக்கோயிலில் பல ஸ்ரீகார்ய அலுவலர்கள் பணியாற்றியுள்ளனர். அதிகாரிகள், நடுவிருக்கைகள் என அரசு சார் அலுவலர்கள் பலர் ஸ்ரீகார்யப் பொறுப்பு வகித்துள்ளனர்.

சங்கரநாராயணபட்டர், நிஷதராஜர், முடிகொண்டசோழ வேளார், மூவேந்த வேளார், வீரவிச்சாதிர மூவேந்த வேளார், சீரிளங்கோ பட்டர், அனந்த நாராயண பட்டர், சோழசிகாமணி மூவேந்த வேளார், ஈசுவர குலகால பிரும்மாராயர், வீரசோழ மூவேந்த வேளார், ஆலத்தூருடையார் என அந்தணர்களும் வேளார்களும் அடுத்தடுத்து இக்கோயிலின் நிருவாகத் தலைமையராக இருந்து ஆட்சி செலுத்தியுள்ளனர். இவர்தம் கண்காணிப்பிலும் ஏவலிலுமே கோயிலின் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்துள்ளன.

திருவரங்கம் கோயிலில் இடம்பெற்றுள்ள தமிழ் தவிர்த்த பிறமொழிக் கல்வெட்டுகளில் முழுமையும் சம்ஸ்கிருதத்திலும் கன்னடத்திலும் அமைந்த முதற் கல்வெட்டுகள் குலோத்துங்கர் காலத்திலேயே பதிவாகியுள்ளன. குலோத்துங்கர் காலக் குறுநில மன்னர்களுள் ஒருவரான வாணாதிராஜரின் திருப்பணி பற்றிய தரவே இங்குள்ள காலத்தாற் முற்பட்ட சம்ஸ்கிருதக் கல்வெட்டாக அமைந்துள்ளது. திருவரங்கம் கோயிலின் கட்டுமானம் பற்றிப் பேசும் முதல் கல்வெட்டும் இதுதான்.

திரிபுவனமல்ல தேவரான ஆறாம் விக்கிரமாதித்தரின் படைத்தலைவர்களுள் ஒருவரும் கன்னட சந்திவிக்கிரகியும்(?) இணைந்து இக்கோயிலில் விளக்கேற்றவும் விஷ்வக்சேனர் திருமுன்னைப் பூசவும் செய்த ஏற்பாட்டைத் தெரிவிக்கும் இக்கல்வெட்டு, குலோத்துங்கர் காலத்தில் இக்கோயில் வெளிமாநிலத்தவர் தழுவலையும் பெறத் தொடங்கியமையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். காஷ்மீரத்து அனிஷ்தானம் பகுதியைச் சேர்ந்த ஆரியர் வாசுதேவபட்டனான ராஜராஜ பிரும்மராயனுக்குக் கோயில் ஸ்ரீகாரியம் நாராயண மூவேந்த வேளார் ஓலைப்படி அரங்கத்து நிருவாகம் நிலக்கொடையளித்துச் சிறப்புச் செய்திருப்பதும் குலோத்துங்கர்
காலத்தில்தான். கோயில் நிலம் வழங்கிச் சிறப்பிக்குமளவு வாசுதேவன் செய்த செயற்கருஞ் செயலை அறியக்கூடவில்லை.

குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை அரங்கர் கோயில் திருமடைப்பள்ளிப்புறமான தண்டுறை-காரைக்குடி பற்றியே பேசுகின்றன. விளத்தூர் நாட்டைச் சேர்ந்த இவ்விரண்டு ஊர்களும் காவிரிக் கரையில் அடுத்தடுத்து இருந்தவை. காவிரியின் வெள்ளப் பெருக்கால் இவ்வூர்களின் நிலங்கள் மணலடித்து விளையாதிருந்தன. சில நிலத்துண்டுகள் நூறாண்டுகளும் சில 40 ஆண்டுகளும் விளையாதவையாகச் சுட்டப்படுவது நோக்க, காவிரியின் வெள்ளத் தாண்டவம் நன்கு புலனாகிறது. நெடுங்காலம் தரிசாகக் கிடந்த இவ்விரு ஊர்களின் நிலங்களை விளைச்சலுக்குக் கொணரும் பணி குலோத்துங்கர் காலத்தில் மிகுந்த முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. அரசியரும் அரசு உயர் அலுவலர்களும் படைத்தலைவர்களும் அரசு சார் பணிப்பெண்களும் பணிமகன்களும் நிலக்கிழார்களும் இப்பணியில் கையிணைத்தனர்.

ஒரு வேலி நிலம் ஒரு காசு என மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட இந்நிலத்துண்டுகளின் மீதான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டன. நீர்நிலைகளுக்கான ஆளுழைப்புத் தந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. பயிர் விளையுங் காலத்து ஒரு வேலி விளைச்சலுக்கு வரியாக 8 கலம் நெல் கோயில் மரக்காலான பள்ளி கொண்டானால் அளந்து கோயிற் பண்டாரத்தில் சேர்ப்பித்தால் போதுமானது. வரி விலக்குடன் குறைவான விலையில் பெறப்பட்ட இத்தகு நிலத்துண்டுகள் பூந்தோட்டங்களாக்கப்பட்டு மீண்டும் இறைவனுக்கே வழங்கப்பட்டன. மணலடித்த நிலத்தைத் திருத்தி, அதைப் பூந்தோட்டமாக்க உழைப்பாளிகளை அமர்த்தவும் அவர்களுக்கு வாழ்வூதியம் வழங்கவும் நிலம் பெற்றவர்கள் பொறுப்பேற்றனர். பொதுவாக இத்தகு நிலந்திருத்தலுக்கு இரண்டு ஆட்களே போதுமான நிலையில் ஆளொன்றுக்கு நாளும் குறுணி நெல் கூலியாகவும் உடைக்கு என காசு இரண்டும் அளிக்கப்பட்டன.

விலைக்குப் பெறப்பட்டுத் திருத்தப்பட நிலங்கள் பொதுவில் ‘விளாகம்’, ‘நந்தவனம்’ எனப் போற்றப்பட்டாலும் ஒவ்வொன்றுக்கும் சிறப்புப் பெயர் இருந்தது. சில துண்டுகள் விலைக்குப் பெற்றவர் பெயரை ஏற்க, இன்னுஞ் சில அரங்கன் தொடர்பான பெயர்களைக் கொண்டன. அப்படிப் பெயரேற்று அமைந்த நந்தவனங்களுள் காலத்தால் பழைமையான புகழாலையன், வாணாதிராயரால் அமைக்கப்பட்டது.

இந்நந்தவனங்களில் எத்தகு மரங்கள், செடிகள் பயிராயின? ‘கமுகும் பலாவும் உள்ளிட்ட மரம் இட்டு ஆக்கி, செண்பகமும் சதபத்தியும் கருமுகையும் உள்ளிட்ட திருப்பூமரமும் இட்டு ஆக்கி’ எனக் கல்வெட்டொன்றே இந்தக் கேள்விக்கு விடை தருகிறது.

மணலடித்துப் பல்லாண்டுகள் பயிர் விளையாதிருந்த நிலங்களை விலைக்குப் பெற்று விளை நிலங்களாக்கிய இந்நந்தவன வேள்வியில் பங்கேற்றவர்களின் பட்டியல் மிக நீளமானது.

அருமொழி ராஜாதிராஜனான வாணாதிராஜர், ஆதித்தன் வேதவனமுடையானான நெரியன் மூவேந்த வேளான், சோழப் பல்லவரையர் (பெயர் சிதைந்துள்ளது), ராஜேந்திரசோழ மகாபலி வாணாதிராஜர், இராஜராஜன் மதுராந்தகனான வற்சராஜர், அரையன் ஆதிநாதனான காராணை விழுப்பரையன், அரையன் கருடவாகனனான காலிங்கராயர், நாராயணன் மலைக்கினிய நின்றானான மும்முடிசோழ விழுப்பரையர்,
மழவரையர் (பெயர் சிதைந்துள்ளது),சீராளன் திருச்சிற்றம்பலமுடையானான வீரவிச்சாதிர மூவேந்த வேளார், ஆதித்தன் திருவரங்கதேவனான விருதராஜ பயங்கர விஜயபாலர் (இப்பெருமகன் நான்கு கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள பெருங் கொடையாளி), கண்ணகன் கருமாணிக்கமான வளவ விச்சாதிரப் பல்லவரையர், பள்ளிகொண்டான் கூத்தனாரான விழிஞத்தரையர், கருமாணிக்கன் ஆதித்த தேவனான சேதிராயர், வளவன் விழுப்பரையன், ராஜவல்லபப் பல்லவரையர், மாதவன் திருவரங்க தேவனான அதளையூர் நாடாள்வான், அரையன் சேந்தனான ராஜேந்திரசோழ அதிகமானார் (மூன்று கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள கொடையாளி) எனப் பதினேழு அரசு அதிகாரிகள் இந்நந்தவன வேள்வியில் ஆர்வத்துடன் பங்கேற்றுக் கோயில் நிலங்களைக் காப்பாற்றியுள்ளனர்.

‘சேனாபதிகள்’ என்றழைக்கப்பட்ட சோழர் படைத்தலைவர்களான இளங்கோவேளார், வீரராஜேந்திர அதியமான், செய்யபாதம், தளியில் மதுராந்தகனான ராஜேந்திர சோழக் கிடாரத்தரையன், ராஜேந்திர சோழனான கங்கைகொண்ட சோழ முனையதரையர், வீரசோழ முனையதரையர் எனும் அறுவரும் அதிகாரிகளைப் போலவே இந்நந்தவன வேள்வியில் பங்கேற்று மணலடித்த நிலங்களை விளை நிலங்களாக மாற்ற உதவியுள்ளனர்.

குலோத்துங்கரின் அரசியரான ராஜராஜ அருமொழியாரான தென்னவன் மாதேவி, வளவன் மாதேவி, உலகமாதேவி ஆகியோரும் இப்பணியில் பங்கேற்றனர். அரசியர், அதிகாரிகள், படைத்தலைவர்கள் இவர்தம் பணிப்பெண்களான (பெண்டாட்டி) குணவல்லி, ராஜகேசரிவல்லி, ராஜமாணிக்கம் ஆகியோரும் தங்களால் இயன்ற அளவில் இவ்வேள்விக்குத் துணைநின்றனர்.

சோழர் காலத்தில் இந்நிலந் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது எனினும், ஒரு தவம் போல ஒரு மன்னர் காலத்தில் அரசு சார்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்டிருப்பது திருவரங்கத்தில்தான், அதுவும் குலோத்துங்கர் ஆட்சியில்தான் என்பது வரலாற்று உண்மையாகும்.

மணலடித்த நிலப்பகுதிகளைத் திருத்தி விளைவுக்குக் கொணர்ந்த குலோத்துங்கரின் ஐம்பதாண்டு ஆட்சிக்காலத்தில் காவிரி, கொள்ளிடம் சார் ஊர்கள் எத்தகு நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றிருந்தன என்பதையும் குலோத்துங்கரின் 83 கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது. ஆற்றிலிருந்து தலைவாய் மதகு வழி வெளிப்பட்ட நீர் அதற்bகன அமைந்த நீரோடு கால்களில் ஓடிப் பெருவாய்க்கால்களை அடைய, அவை அந்தந்த ஊர்களுக்கான வாய்க்கால்களுக்கு நீர் பிரிக்க, உள் வாய்க்கால்களும் உட்சிறு வாய்க்கால்களும் ஊரின் உள்ளார்ந்த நிலத்துண்டுகளுக்குப் பாய்ந்தன. நாட்டுக்குப் பாய்ந்தது நாட்டு வாய்க்காலாகவும் ஊருக்குப் பொதுவாக நீரெடுத்துச் சென்றது ஊர்ப் பொது வாய்க்காலாகவும் அமைய, வேளாளர் ஊர்களுக்குச் சென்றவை அவை ஓடிய திசையின் பெயர் பெற்றன (கிழக்கோடிய வாய்க்கால், தெற்கோடிய வாய்க்கால்).

அந்தண ஊர்களுக்கு வெட்டப்பட்ட வாய்க்கால்கள் அரசர், அரசியர், கடவுளர் பெயர்கள் கொள்ள, (கேரளாந்தக வாய்க்கால், திரிபுவனமாதேவி வாய்க்கால், திருமார்பிடங் கொண்டான் வாய்க்கால்) அங்கமைந்த வதி, கண்ணாறு எனும் சில வாய்க்கால்கள் உள் நிலங்களை ஈரப்படுத்தின. வதிகள் சிறப்புப் பெயர்களுடன் விளங்க (வீரசோழ வதி, லோகமாதேவி வதி, சந்திரசேகர வதி), கண்ணாறுகள் எண் வரிசையேற்றன. என்றாலும் சிறப்புப் பெயருடன் குறிக்கப்பட்ட கண்ணாறுகளும் இருந்தன.

திருவரங்கம் கோயில் சார்ந்த நிலங்களை அளக்க ‘பெரிய திருக்கோபுரத்துக் கீழைக்கோல் ’என்றழைக்கப்பட்ட சிறப்பு அளவுகோல் பயன்படுத்தப்பட்டாற் போலக் கோயிலுக்கு வரும் நெல்லையளக்க இறைவன் திருப்பெயர் கொண்ட ‘பள்ளிகொண்டான் மரக்கால்’ உதவியது.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் குலசேகர ஆழ்வாரின் தேட்டருந்திறலும் இறைவன் திருமுன் விண்ணப்பிக்கப்பட்டமை குலோத்துங்கர் ஆட்சிக் காலத்தில்தான்.

ஆயர் கொழுந்து சக்கரபாணியான சேனாபதிகள் வீரசோழ முனையதரையர் கோயில் நிவந்தக்காரர்களான திருவரங்க நம்பியிடமும் அவரது நான்கு மகன்களிடமும் ஐம்பது கழஞ்சுப் பொன்னளித்துப் பள்ளி எழுச்சியும் வாய்மொழியும் விண்ணப்பிக்கச் செய்தார். அரையன் கருடவாகனான காலிங்கராயர் கொடை பேசும் கல்வெட்டே அழகிய மணவாளப் பெருமாள் தேட்டருந்திறல் கேட்டு மகிழ்ந்த வரலாற்றை முன்வைக்கிறது.

இக்கல்வெட்டின் வழிதான் பொ. கா. 1085ஆம் ஆண்டிலேயே திருவரங்கத்தில் தேரோடிய நிகழ்வும் வெளிச்சத்திற்கு வருகிறது. ஐப்பசியில் நிகழ்ந்த அத்தேர்த் திருநாளின்போதும் பங்குனித் திருநாளிலும் தீர்த்தம் பிரசாதித்த அழகிய மணவாளர் அந்நாட்களின் இராப்போதுகளில் கோயில் புன்னை மரத்தின் கீழ் எழுந்தருளித் தேட்டருந்திறல் கேட்டாராம். அவ்விரு நாட்களிலும் அமுதுண்ண வாய்ப்பாக அவருக்கு நாளும் 100 அப்பம் செய்து வழங்க வாய்ப்பாகவே கருடவாகனர் கோயில் நிருவாகத்திடம் 6 1/4 காசு அளித்தார்.

இந்தக் கல்வெட்டு அந்நாளில் அப்பம் எவை கொண்டு செய்யப்பட்டது என்பதையும் படம் பிடிக்கிறது. பழவரிசி, பருப்பு, நெய், சர்க்கரை, மிளகு, சீரகம், உப்பு, வாழைப்பழம், தேங்காய், இளநீர் கொண்டு அப்பம் தயாரானது. இத்தகு அப்பஅமுது வழங்கக் கொடையளித்தவர்கள் அப்பத்திற்கான மாவிடிப்பாருக்கும் நீர் கொணருவாருக்கும் விறகு இடுவாருக்கும் அப்பம் சுடுவாருக்கும் உரிய ஊதியத்தையும் கொடைப் பொருளில் சேர்த்தளித்தனர். குலோத்துங்கர் காலத்தில் அழகிய மணவாளரின் விருப்பமான உணவாக அப்பமே அமைந்ததாகக் கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன.

- வளரும் this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.