![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 100
![]() இதழ் 100 [ அக்டோபர் 2013] நூறாவது இதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சிதையும் சிங்காரக் கோயில்கள்
ஓரறிவு பெற்ற உயிரிலிருந்து பரிணாம வளர்ச்சி மூலம் ஆற றிவு பெற்ற மனிதன் தோன்றினான் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு தோன்றிய மனிதன் ஆதியில் நிர்வாணமாய் நாடோடியாய் வாழத்தொடங்கி பின் அறிவின் வழி வளர்ச்சியுற்று நதிக்கரையில் தங்கி வேளாண்மை செய்து கால்நடைகளை வளர்த்து மனித இனத்தையும் பெருக்கி நாகரீக வளர்ச்சியையும் தொடங்கினான். அன்று தொடங்கிய வளர்ச்சி விரல் நுனியில் வலைத்தளம் மூலம் உலகம் விரியும் இக்காலக் கணிப்பொறி வரை எங்கும் நிற்கவில்லை. இந்த வளர்ச்சிக்கு முடிவு என்பதும் இல்லை.
பெருகி வரும் மக்கள் பெருக்கம், நெருக்கம் இவற்றுக்கிடையே மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவைகளுக்கு வாழும் வாழ்க்கையை இலகுவாக்க இந்த நாகரீக வளர்ச்சி அவசியமாகின்றது. சில சமயங்களில் இந்த நாகரீக வளர்ச்சி தான் கடந்து வந்த பாதையில் உள்ள வரலாற்றுப் பதிவுகளின் மீதே தாக்குதல் தொடுத்து விடுகிறது. இத்தாக்குதல்களினால் நமது கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி, வரலாறு போன்றவைகளைப் பிரதிபலிக்கும் வரலாற்றுப் பதிவுகள் அழிந்துள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள அணைக்கரை என்னுமிடத்தில் கொள்ளிடம் ஆற்றின் மேல் பாலம் கட்ட ஆங்கிலேயர்களால் அருகிலுள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள முதலாம் இராஜேந்திர சோழனின் கலைப்படைப்பான கங்கை கொண்ட சோழீச்சுவரர் ஆலயத்தின் மதிற்சுவர், திருச்சுற்று மாளிகை ஆகியவைகளை வெடிவைத்துத் தகர்த்து கருங்கற்களைக் கொண்டுவந்து உபயோகப்படுத்தியுள்ளனர். இதனால் பல கல்வெட்டுக்கள் அழிந்துபோயின. அத்துடன் பல வரலாற்றுத் தகவல்களும் மறைந்து போயின. சிற்சில சமயங்களில் இவ்வரலாற்றுப் பதிவுகள் முன்னோர் செய்த தவப்பயனால் இத்தாக்குதல்களிலிருந்து தப்பிப்பிழைத்துள்ளன. இப்படித் தப்பிப் பிழைத்ததோர் வரலாற்றுப் பதிவைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். மானம்பாடி கும்பகோணம்-சென்னை செல்லும் பாதையில் சுமார் 13 கிமீ. தொலைவில் அமைந்துள்ள சோழபுரம் எனும் கிராமத்தை ஒட்டி வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது மானம்பாடி எனும் சிறு கிராமம். இச்சிறிய கிராமத்தின் வழியே செல்லும் சென்னைச் சாலையை ஒட்டி நாகநாத சுவாமி கோயில் என்ற பெயரில் ஒரு சிவன் கோயில் நிலை குலைந்து களையிழந்து தனது பரிவாரத் தெய்வங்களெல்லாம் போன திசை தெரியாமல் காலச் சக்கரத்தின் பிடியில் நசுங்கி, சிக்குண்டு, சிதறுண்டு தன் வாழ்நாளை எண்ணி ஏங்கி அசைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. ![]() சாலையையொட்டி அமைந்துள்ள நாகநாத சுவாமி திருக்கோயில். ![]() தற்போதுள்ள கோயிலின் தோற்றம்.. சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கிட இச்சாலையை விரிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இச்சாலையை விரிவுபடுத்தினால், சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் அப்புறப்படுத்தப்படும் என்ற உணர்வினால் வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் பக்தர்களும் இவ்வூர் மக்களும் கோயிலை அப்புறப்படுத்தாமல் சாலையை விரிவுபடுத்துமாறு நெடுஞ்சாலைத்துறையைக் கோரினர். இக்கோரிக்கைகளை ஏற்று அரசும் கோயிலை அப்புறப்படுத்தாமல் மாற்று வழியில் சாலையை விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இக்கோயில் அப்புறப்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் டாக்டர் எம்.இராஜேந்திரன் IAS அவர்கள் ஆவார். இவர் எடுத்த சீரிய முயற்சிகளின் காரணமாகவே கோயில் அப்புறப்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளும் தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக க் கருதப்படும் இக்கோயில் இதே மன்னரின் பெயரைக்கொண்ட ஒரு அதிகாரியால் காப்பாற்றப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். இக்கோயில் தற்சமயம் மக்கள் போக்குவரத்து அதிகமின்றி ஒரு சிலர் அவ்வப்போது வந்து போகும் நிலையில் பழுதடைந்து காட்சியளிக்கிறது. ![]() கோயிலின் தெற்குப் பக்கத் தோற்றம். ![]() கோயிலின் வடமேற்குத் தோற்றம் பழைய இடிந்த கோயில்தானே! பூஜை இல்லாத கோயில்தானே! மக்கள் வரத்து இல்லாத கோயில்தானே! இதனை அப்புறப்படுத்தினால் என்ன தவறு? என்று சிலர் நினைக்கின்றனர். இவர்கள் கண்ணோட்டத்தில் கோயில் என்பது பக்தியை மட்டும் வெளிப்படுத்தும் ஓரிடம். அவ்வளவுதான். இது தவறான எண்ணமாகும். பண்டைய கோயில்கள் - குறிப்பாக மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பெரும்பாலும் பக்தியை மட்டும் வெளிப்படுத்தாமல் அதைத்தவிர நமது கலை, கலாச்சாரம் பண்பாடு மொழி வரலாறு போன்றவைகளை வெளிப்படுத்தும் இடங்களாகவும் இருந்துள்ளன என்பதை சற்று நெருங்கிப் பார்த்தாலே உணரலாம். பேப்பர், பேனா, செல்போன், வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி போன்ற உபகரணங்கள் இருக்கும் இக்கால மக்களின் கருத்துக்கள், நடைமுறைகள், நிகழ்வுகள் முதலியவற்றைப் பதிவுசெய்யப் பல ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் இவை எவையும் இல்லாத.. செல்லரிக்கும் சுவடியும் எழுத்தாணியும் இருந்த அக்காலத்தில் இவைகளைப் பதிவுசெய்யக் கோயில்களே களமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில்கள் தமிழ் மக்களின் நாகரீக வளர்ச்சியைப் பறைசாற்றும் இடங்களாகவும் கலைவளர்த்த களங்களாகவும் காட்சியளிக்கின்றன. இவ்வகை வெளிப்பாடுகளை உள்ளடக்கிய மானம்பாடித் திருக்கோயிலின் வரலாற்றுப் பதிவுகளை இனிக் கல்வெட்டுக்களின் வழிக் காண்போம். கல்வெட்டுக்கள் காட்டும் மானம்பாடி இக்கோயிலிலிருந்து 1931ம் ஆண்டில் கல்வெட்டுத்துறையால் 9 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு அதன் வரிக்கு வரியான பாடங்கள் வெளியிடப்படாமல் கல்வெட்டுச் செய்தியின் சுருக்கம் மட்டும் Annual Report of Epigraphy 1931-32 என்கிற தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த 9 கல்வெட்டுக்களில் 3 முதலாம் இராஜேந்திர சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் 6 கல்வெட்டுக்கள் முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் உள்ளன. முதலாம் இராஜேந்திரர் காலத்திய 3 கல்வெட்டுக்களில் ஒரு கல்வெட்டு இராஜேந்திர சோழரின் மெய்க்கீர்த்தியை மட்டும் தெரிவிக்கின்றது. மற்ற இரு கல்வெட்டுக்கள் அவரது 4 மற்றும் 5ம் ஆட்சியாண்டுகளைக் கொண்டுள்ளது. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் காலத்தால் முந்தையவை முதலாம் இராஜேந்திரர் காலத்தனவாக உள்ளதால் இக்கோயிலும் அதே காலத்தைச் சார்ந்ததாகக் கருதலாம். முதலாம் இராஜேந்திர சோழர் கி.பி. 1012 முதல் 1044 வரை சோழநாட்டை ஆண்டதால் இக்கோயில் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்த தாக க் கருதவேண்டியுள்ளது. மேலும் இக்கோயிலின் ஒரு சிற்பத் தொகுதி இவரது தந்தை முதலாம் இராஜராஜர் படைத்திட்ட தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஓவியத்தை ஒத்துக் காணப்படுவது இக்கருத்துக்கு வலுவூட்டுகிறது. ![]() தஞ்சை பெரியகோயில் இராஜராஜன் ஓவியம். ![]() இக்கோயிலில் உள்ள சிற்பத் தொகுதி. கல்வெட்டு எண்.1 ARE 98/1931-32 இக்கோயிலின் தெற்கு முகமண்டபத் தாங்குதளத்தில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு முதலாம் இராஜேந்திர சோழரின் 4ம் ஆட்சியாண்டைக் கொண்டுள்ளது. இக்கல்வெட்டு இவ்வூரை காவிரியின் வடகரையில் இருக்கும் இராஜேந்திர சிம்ம வளநாட்டில் உள்ள மிழிலை நாட்டில் அடங்கிய இஞ்சிக்குடியான வீரநாராயணபுரம் என்று சுட்டுகிறது. இவ்வூரின் பழைய பெயர் இஞ்சிக்குடி. புதிய பெயர் வீரநாராயணபுரம் ஆகும். வீரநாராயணன் என்பது முதலாம் பராந்தகரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். எனவே இவ்வூருக்கு முதலாம் பராந்தகர் காலத்தில் வீரநாராயணபுரம் எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் மிழிலை நாடு என்பது தற்போது இவ்வூருக்கு (அதாவது மானம்பாடிக்குத்) தென்மேற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோவிலாச்சேரி என்ற கிராமத்தின் உட்கிராமமாக [Hamlet] மிழிலை என்ற பெயரில் சுமார் 50 குடியிருப்புக்கள் அடங்கிய சிறு கிராமமாக உள்ளது. இது சங்க கால ஊராகும். இது பழங்காலத்தில் தற்போது வட்டம் [Taluk] என்று அழைக்கப்படும் பகுதி உள்ள பரப்புடைய நாட்டிற்குத் தலைமையிடமாக இருந்துள்ளது. இவ்வூரில்தான் 63 நாயன்மார்களுள் ஒருவரான மிழிலைக்குறும்ப நாயனார்' அவதரித்ததாகக் கூறப்படுகிறது. முதலாம் இராஜராஜர் நாட்டினை அளந்து ஆறுகளை எல்லைகளாளக் கொண்டு வளநாடு என்ற பெயரில் பகுதிகளாகப் பிரித்தார். வளநாடு என்பது தற்போது மாவட்டத்திற்குக் சமமான நிலப்பரப்பு உடையதாக க் கருதலாம். காவிரியின் வடகரையில் உள்ள பகுதி முதலாம் இராஜேந்திரர் காலத்தில் இராஜேந்திர சிம்ம வளநாடு என்றழைக்கப்பட்டது. நாகநாத சுவாமி கோயில் என்றழைக்கப்படும் இவ்வூர்க் கோயில் இராஜேந்திர சோழர் காலத்தில் கையிலாயநாதர் கோயில் என்று குறிப்பிடப்பட்டது. இக்கல்வெட்டு இவ்வூரில் உள்ள நகரத்தார்கள் (வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள்) இக்கோயில் நிர்வாகத்தில் பங்காற்றியுள்ளதைக் கூறுகிறது. இந்நகரத்தார் இக்கோயில் இறைவனுக்கு 3 சந்தி வேளைக்கும் பூக்கள் பறித்து சார்த்தி அருள ஏற்கனவே உள்ள நந்தவனத்திற்குக் கூடுதலாக நிலம் கொடுத்து அதை மன்னர் பெயரால் இராஜேந்திர சோழன் ந ந்தவனம் என அழைத்துக் கோயிலுக்குக் கொடையாக்கியுள்ளனர். மேலும் இந்நிலத்திற்குச் செலுத்த வேண்டிய வரி, எச்சோறு (அதாவது அரசாங்க அதிகாரிகள் அலுவல் நிமித்தமாய் ஊருக்கு வரும்போது அவர்களை உபசரிக்கும் பணிக்காக வசூல் செய்யப்படும் வரி) போன்ற வரிகளை நகரத்தாரால் கட்டப்பட்டு இறையிலி (அரசால் வழக்கமாக வசூல் செய்யப்படும் வரி எதுவம் வசூல் செய்யப்படாத இடமாக) நிலமாகக் கோயிலுக்கு வழங்கியுள்ளனர். மேலும் இந்நிலத்தின் எல்லைகளாக க் கிழக்கில் திருக்குளமும் தெற்கே பிடாரி கோயிலும் ஏற்கனவே உள்ள நந்தவனமும் மேற்கிலும் வடக்கிலும் திருக்குளமும் உள்ளதாகச் சுட்டுகின்றது. ![]() கல்வெட்டின்படி நகரத்தார் அமைத்த புதிய நந்தவனத்தின் எல்லைகள். இன்று இக்கோயிலின் நேர்க் கிழக்கே சுமார் 600 மீ தொலைவில் 'ந ந்தவனம்' என்றழைக்கப்படும் பகுதி உள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வரை இப்பகுதியிலிருந்து பூக்கள் பறித்து இறைவனுக்கு அணிவிப்பார்கள் என்று இப்பகுதியில் வசிக்கும் வயது முதிர்ந்த பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்றைய தேதியில் இந்ந ந்தவனத்தில் குடிசை வீடுகள் சில ஆக்கிரமித்துள்ளன. இந்ந ந்தவனத்தின் வடக்கில் ஒரு குளமும் கிழக்கில் ஒரு முனியனார் கோயிலும் உள்ளன. பிடாரி கோயில் தற்போது இல்லை. ![]() நந்தவனமும் குளமும் முனியனார் கோயிலும். ![]() குளம். கல்வெட்டு எண். 2: ARE 97/1931-32 இக்கல்வெட்டு முதலாம் இராஜேந்திர சோழரின் 5ம் ஆட்சியாண்டைக் குறிப்பதாகும். இக்கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்தியில் முதலாம் இராஜேந்திர ர் வனவாசி, கொள்ளிப்பாகை, மண்ணைக்கடகம் முதலிய நாடுகளை வென்றைதைக் குறிப்பிடுகிறது. வடகரை இராஜேந்திர சிம்ம வளநாட்டில் மிழிலை நாட்டில் அமைந்துள்ள இலைஞ்சிக்குடியான வீரநாராயணபுரத்து ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் உள்ள ஆறு சிவப்பிராமணர்கள் மேற்கொள்வதாக ஏற்றுக்கொண்ட பணியினைக் குறிப்பிடுகிறது. இவர்களின் பெயர்கள் 1. கௌசிகன் சேந்தன் திருவெண்காட்டு அடிகள் பட்டனும் 2.கௌசிகன் தெக்ஷிணாமூர்த்தியும் 3. கௌசிகன் சேந்தபிரான் பட்டன் 4. கௌசிகன் சந்திரசேகரன் கூத்தாடி 5. கௌசிகன் சந்திரசேகரன் மறைக்காட்டடிகள் 6. கௌசிகன் சந்திரசேகரன் சகலசிவன் இந்த ஆறு சிவபிராமணர்களும் சேர்ந்து ஸ்ரீஇராஜேந்திர சோழரின் 'தேவார நாயகம்' (அதாவது முதல் மூவர் பாடிய தேவாரப் பதிகங்களைக் கோயில்களில் பாடுபவர்களை மேற்பார்வையிடுபவர்) பணி செய்கின்ற நாங்கூர் நாட்டைச் சேர்ந்த மறைக்காடன் பதஞ்சலி பிடாரர் என்பவரிடமிருந்து 60 காசுகளை முதலீடாகப் பெற்றுக்கொண்டு அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு சந்திரன் சூரியன் உள்ளவரை 3 நொந்தா விளக்குகள் (பகல் மற்றும் இரவு நேரங்களில் இடைவிடாமல் எரியும் விளக்குகள்) இக்கோயிலில் எரிக்க ஒப்புக்கொண்டுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டின் இறுதியில் இந்த அறுவர் மற்றும் இவ்வூர் கரணத்தாரும் (கிராம நிர்வாக அலுவலர்) கையெழுத்திட்டுள்ளனர். திருக்கோயில்களில் தேவாரப் பதிகங்கள் பாடப்படுவதை பிற்காலப் பல்லவர் கல்வெட்டுக்கள் சுட்டினாலும் இப்பதிகங்களைப் பாடுபவர்களை மேற்பார்வையிடுகின்ற அதிகாரியாக 'தேவார நாயகம்' என்ற பெயரில் ஒரு அதிகாரி இருந்துள்ளார் என்பது இதுபோன்ற சோழர்காலக் கல்வெட்டுக்களின் வழி வெளிச்சத்திற்கு வருகின்றது. தற்போது கோயில்களில் ஓதுவார் என்கிற பெயரில் தேவாரம் திருப்புகழ் பாடுபவர்கள் இருந்தாலும் இவர்களை மேற்பார்வையிடுபவர்களாக எவரும் இல்லை. ஆனால் 1000 வருடங்களுக்கு முன்னர் இப்பணி நடத்த தனியொரு அதிகாரி இருந்துள்ளார் என்பது சோழர்களின் நிர்வாகத் திறனுக்கோர் எடுத்துக்காட்டாகும். கல்வெட்டு எண். 3: ARE 90/1931-32 (தமிழ்க்கூத்துக் கல்வெட்டு) இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழரின் 18ம் ஆட்சியாண்டைக் குறிப்பதாகும். முதலாம் இராஜேந்திர சோழரின் காலத்தில் இராஜேந்திர சிம்ம வளநாடாகத் திகழ்ந்த இப்பகுதி இப்போது விருதராஜ பயங்கர வளநாடு என்று பெயர் மாற்றம் பெற்றது. இக்கையிலாயமுடையார் கோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா உற்சவத்தில் இக்கோயில் இறைவன் திருவோலக்கத்தில் (கோயில் மண்டபத்தில்) எ.ழுந்தருளியிருக்கும்போது விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராஜ பயங்கர ஆச்சாரியன் என்பவர் 'தமிழ்க்கூத்து' நடத்தினார். இக்கூத்து இவ்விழாவில் 5 முறை நிகழ்த்தப்பெற்றது. ![]() தமிழ்க்கூத்து கல்வெட்டு. இக்கூத்து நிகழ்த்தியவருக்கும் அவரது சந்ததியினருக்கும் கூத்தாட்டு காணியாக நிலம் ஒன்றினை இவ்வூர் நகரத்தாரும் இக்கோயில் தேவகன்மிகளாலும் வழங்கப்பட்டது. (தேவகன்மிகள் என்பவர்கள் கோயிலை இன்றைய தேதியில் நிர்வகிக்கும் அறங்காவலர் போன்றவர்கள். இவர்கள் வருடந்தோறும் மாறிக்கொண்டேயிருப்பர்). (வளரும்)this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |