http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > கலையும் ஆய்வும்
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
வீ.செல்வகுமார்
{தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் வீ. செல்வகுமார் தமிழகமெங்கிலும் விரிவான பல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முன்னணி ஆய்வாளர். தமிழ்ப்பல்கலை வளாகத்திலேயே கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தவர். கேரளத்தின் கடற்கரையில் அமைந்துள்ள பட்டிணம்தான் பண்டைய சங்க காலத் துறைமுகமான முசிரி என்பதை நிறுவிய ஆய்வுக் குழுவில் இவரும் ஒருவர். நமது வேண்டுகோளை ஏற்று வரலாறு டாட் காம் நூறாவது இதழுக்காக தனது பட்டிணம் ஆய்வின் ஒட்டுமொத்தப் பிழிவையும் ஒரே கட்டுரையில் அளித்திருக்கும் திரு, செல்வகுமாருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி. இவரது தொடர்பு முகவரி - முனைவர் வீ.செல்வகுமார், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை- தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர் 613010.}

சங்ககாலச் சேரநாட்டுத் துறைமுகமான முசிறி இந்திய-ரோமானிய வணிகத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள பழந்தமிழகத் துறைமுகங்களில் ஒன்றாகும். கேரளாவில், மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகத்தைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியப் பாடல்களிலும், கிரேக்க-ரோமானிய இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. இத் துறைமுகம் பெரியாறு கடலில் கலக்கும் இடத்தில் இருந்ததாகத் தமிழ் இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் பெரியாற்றுப் படுகையில் இத் துறைமுகம் குறிப்பாக எங்கிருந்தது என்று தெரியவில்லை. பொதுவாக முசிறி கொடுங்களூரில் இருந்ததாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் அங்கு நடத்தப்பெற்ற அகழாய்வில் ரோமானிய வணிகத்திற்கான தொல்லியல் சான்றுகள் எதுவும் கண்டுபிடிக்கப் பெறவில்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை இப்பகுதியில் ரோமானிய வணிகத்திற்கான, காசுகள் அல்லாத பிற தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பெற்றிருக்கவில்லை.

அண்மையில் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டணம் என்ற இடத்தில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் வெளிப்பட்டுள்ள சான்றுகளின் வழியாக பட்டணம் பழங்கால முசிறியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. பட்டணம் அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகளின் சிறப்பை இக்கட்டுரை விளக்குகின்றது.

கொடுங்களூர்-பரவூர் பகுதியின் வரலாற்றுச்சிறப்பு

கேரள மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கொடுங்களூர்-பரவூர் பகுதி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். சங்க கால முசிறி இப்பகுதியில் இருந்ததாக இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன. இங்கு இடைக்காலத்தில் சேரர்களின் தலைநகரமான திருவஞ்சிக்களம் இருந்தது. இங்குள்ள சிவன் கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. இங்கு பாடல்பெற்ற திருக்குலசேகரபுரம் என்ற வைணவத்தலம் உள்ளது. மேலும் இங்குள்ள மசூதி மிகப் பழையது என்று கருதப்படுகின்றது. இது சேரமான் நாயனருடன் தொடர்புபடுத்தப்படுகின்றது.

மேலும் யூதர்கள் இப்பகுதியில் தங்கி வணிகம் செய்துள்ளனர். இங்குள்ள சேந்தமங்கலத்தில் யூதர்களின் வழிபாட்டிடம் (சினகாக்) உள்ளது. கொடுங்களூரை அடுத்துள்ள கோட்டப்புரத்தில் போரத்துக்கீசியர்களின் கோட்டை உள்ளது. இவ்வாறாகப் பல வரலாற்று இடங்களும் தொல்லியல் சின்னங்களும், நம்பிக்கை தொடர்புடைய இடங்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இதனடிப்படையில் கேரள அரசு முசிறி மரபியல் திட்டத்தை (Muziris Heritage Project) செயல்படுத்தியது. இதன் விளைவாகப் பல மரபியல் சின்னங்கள பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முந்தைய ஆய்வுகள்

சங்க கால முசிறி எங்கு இருந்தது என்பது பற்றிய பல கருத்துக்களை அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். பொதுவாக முசிறி திருச்சூர் மாவட்டத்தின் தென் எல்லையில் அமைந்துள்ள பெரியாற்றின் தென்கரையில் உள்ள கொடுங்கோளூர் என்ற இடத்தில் இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதி வந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள சேரமான் பறம்பு என்ற இடத்தில் அனுஜன் அச்சன் அகழாய்வு நடத்தியுள்ளார் (Achan, 1946). மேலும் திருவஞ்சிக்களம் பகுதியில் கே.வி.இராமன் அகழாய்வு செய்துள்ளார். ஆனால் இங்கு குறிப்பிடத்தக்க தொல்லியல் சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக அரிக்கமேட்டில் கிடைத்தது போன்ற ரோமானியத் தொடர்பிர்கான சான்றுகள் கிடைக்கவேயில்லை. எனவே முசிறி எங்கிருந்தது? அதற்கான தொல்லியல் சான்றுகள் எங்கே என்கிற வினாக்கள் தொல்லியல் அறிஞர்கள் மத்தியில் இருந்து வந்துள்ளன. இச்சூழலில்தான் பட்டணத்தில் கிடைத்துள்ள சான்றுகள் சிறப்பிடம்பெறுகின்றன.

பட்டணம் அமைவிடம்

பட்டணம் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் பரவூருக்கு அருகில், சுமார் 2 கிமீ வடக்கே கொடுங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 17 ல் உள்ளது. இந்த இடத்தை திருச்சூர் எர்ணாகுளம் இரயில் தடத்தில் அமைந்துள்ள ஆலுவா இரயில் நிலையத்தில் இறங்கி, பரவூர் வழியாகச் சென்றடையலாம். இவ்வூருக்கு அருகில் பரவூர் தோடு என்ற பெரியாற்றின் கிளையாறு பாய்கின்றது. இவ்வூருக்கு மேற்கே 2 கிமீ தொலைவில் தத்தப்பள்ளி காயல் எனப்படும் உப்பங்கழிப்பகுதி உள்ளது. இதற்கு அப்பால் வைப்பின் தீவுப்பகுதி அமைந்துள்ளது. இதன் மேற்கே அரபிக்கடல் காணப்படுகின்றது. இங்கு சேராய் எனப்படும் கடற்கரை சுற்றுலாப்பகுதி உள்ளது.

கண்டுபிடிப்புகள்

பட்டணம் பற்றிய முதல் குறிப்பு கே.பி.ஷாஜன் தனது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வேட்டில் உள்ளது. அங்கு அவர் சேகரித்த சில பானை ஒடுகள் சிறப்பானவையாக இருந்தன (படம் எண் 1.). அவற்றை என்னிடம் அவர் 2003ல் காண்பித்தபோது என்னால் அவற்றை ஆம்போரா என்று தெளிவாக அடையாளம் காண முடிந்தது. பின்னர் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் உள்ள ரொபர்ட்டா டாம்பர் இந்தியாவில் ரோமனியச் சான்றுகளை ஆராய்ந்து வரும்போது நான் அவரிடம், ஷாஜனிடம் உள்ள பானை ஓடுகளைப்பற்றிக் கூறினேன். அவர் அவற்றைக் கண்டு, அவை நிச்சயமாக ஆம்போரா என்பதை உறுதிப்படுத்தினார். அதன் விளைவாகப் பட்டணம் முசிறியாக இருக்கலாம் என்ற கருதுகோள் முன்வைக்கப்பட்டது. பிறகு திருப்பூணித்துறையில் உள்ள மரபியல் ஆய்வு நிறுவனம் 2004ல் அங்கு ஒரு சோதனை அகழாய்வை நடத்தியது. இந்த அகழாய்வில் சேரர் நாணயங்களும், கட்டடப் பகுதிகளும், ஆம்போரா சாடித்துண்டுகளும், ரௌலட்டட் பானை ஓடுகளும் கிடைத்தன.


படம் எண் 1. கே.பி. ஷாஜன் 1990களில் பட்டணத்தில் கண்டுபிடித்த முதல் ஆம்போரா பானை ஓடு


இதனடிப்படையில் கேரள வரலாற்றாய்வுக்கழகத்தின் இயக்குனர் பி.ஜெ.செரியான் அவர்களுடன் இணைந்து நாங்கள் 2007 ல் பெரிய அளவிலான அகழாய்வை நடத்தினோம். இதற்கு முன்பு கேரள அரசு முசிறி மரபியல் திட்டம் என்ற மரபு வளங்களைப் பாதுகாக்கும் திட்டத்தைத் தொடங்கியது அப்போதைய கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அவர்களின் முயற்சி இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இது பட்டணம் அகழாய்விற்குத் தேவையான நிதியை அளித்தது. பட்டணத்தில 2007 முதல் 2013 வரை 7 பருவங்கள் கேரள வரலாற்றாய்வுக் கழகத்தால் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல் வகையான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன (Cherianm P.J. et al. 2007).

இங்கு, தமிழகத்தின் சங்ககால வாழ்விடங்களில் கிடைக்கும் செங்கற்களின் அளவை ஒத்த செங்கற்கள், கூறை ஓடுகள், இரும்பு, ஆடி மணிகள் (பாசி), செம்புப் பொருட்கள், தங்கத்தினால் ஆன அணிகலன்கள், கார்னேலியன், படிகம் மற்றும் பெரைல் (பச்சைநிறக்கல்) ஆகிய உயர்வகைக் கற்களால் ஆன அணிகலன்கள் (படம் எண் 2 மற்றும்3 ) பல்லாயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. பட்டணத்தில், பொ.ஆ.மு. 300 முதல் பொ.ஆ 1000 வரையும் பின்னர் பொ.ஆ 1500-லிருந்து தற்காலம் வரையும் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை இந்த அகழாய்வுகள் புலப்படுத்துகின்றன.


படம் எண் 2. பட்டணத்தில் கிடைத்த சிங்க உருவம் பொறித்த உயர்வகைக் கல்



படம் எண் 3. தங்க அணிகலனின் பகுதி


கட்டிடங்கள்

இங்கு பல செங்கற் கட்டிடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (படம் எண் 4). குறிப்பாகப் படகுதுறைக்கு அருகில் சேமிப்புக் கிடங்கு என்று கருதப்படும் கட்டடப்பகுதி குறிப்பிடத்தக்கதாகும். இதன் மீது குச்சிகள் நடுவதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் காண்ப்படுகின்றன. மேலும் அகழாய்வுக் குழி இரண்டில் ஒரு கட்டடத்தின் பகுதி கிடைத்துள்ளது. இங்குள்ள சுவரின் கீழே இரண்டு மண்சாடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரும்பாலான கட்டடப் பகுதிகள் பெரிதும் சேதமடைந்து காணப்படுகின்றன. இவற்றைச் செங்கற்களுக்காக பிற்கால மக்கள் தோண்டிப் பயன்படுத்தியுள்ளனர்.


படம் எண் 4. ஒரு கட்டடத்தின் பகுதி


படகு துறை

இங்கு கிடைத்துள்ள செங்கற்கள் மற்றும் செம்புறாங்கற் துகள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படகு துறை குறிப்பிடத்தக்கதாகும் (படம் எண் 5). இப்படகு துறையினை அடுத்து ஒரு மரப்படகின் பகுதியும், படகைக் கட்டிவைக்கப் பயன்படுத்தப்பட்ட தேக்கு மரத்தூண்களின் அடிப்பகுதியும் கிடைத்துள்ளது சிறப்பானதாகும். இப்படகு காலக்கணிப்பின் வழியாக பொ.ஆ.மு முதல் நூற்றாண்டு (பொது ஆண்டு முதல் நூற்றாண்டு) என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


படம் எண் 5 படகு துறை


சேரர் காசுகள்

சேரர்களின் செப்பு மற்றும் ஈயக் காசுகள் பலவும் இங்கு கிடைத்துள்ளன. இவை சங்க காலத்தைச் சேர்ந்தவையாகும். இவற்றின் ஒரு பக்கம் யானையும் மங்கலச்சின்னங்களும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பும், அங்குசமும் காணப்படுகின்றன. இக்காசுகள் சேரர் ஆட்சி இப்பகுதியில் நிலவியதைப் புலப்படுத்துகின்றன.


படம் எண் 6 சேரர் காசு


பட்டணத்தில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள்

பட்டணத்தில் சுமார் 10 ஒடுகளில் பிராமி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தள்ளன. ஆனால் தமிழகத்தில் உள்ள சங்ககால இடங்களில் கிடைத்தது போல இங்கு இவை அதிக அளவில் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் இங்கு கிடைத்த பானை ஒடுகளின் மேற்பரப்பு மழை மற்றும் ஈரமான மண்ணில் நீண்ட காலம் புதைந்து இருந்ததன் விளைவாக சேதமடைந்ததாகலாம்.

ஒரு பானை ஓட்டில் ..ஊர் பா வே ஓ .. என்ற எழுத்துடன் காணப்படுகின்றது. இது 2004ல் திருப்பூணித்துறை மரபியல் ஆய்வு நிறுவனம் நடத்திய அகழாய்வில் வெளிப்பட்டது. இதை ஐராவதம் மகாதேவன் அவர்கள் வாசித்துள்ளார். ஒரு பானை ஓட்டில் ‘அமண’ என்ற எழுத்துப் பொறிப்பு காணப்படுகின்றது. இதையும் ஐராவதம் மகாதேவன் அவர்கள் படித்துள்ளார்.


படம் எண் 7. தமிழ் பிராமி ‘அமண’


ஆம்போரா சாடிகள்

ஆம்போரா என்பது மதுவைச் சேமித்து வைக்கவும், எடுத்துச் செல்லவும் பயன்படும் ஒரு சுடுமண் சாடியாகும். இது புதியகற்காலத்திலிருந்து மேலை நாடுகளில் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது.

'ஆம்போரா' என்ற சொல் கிரேக்க நாட்டில் வெண்கலக் காலத்திலிருந்து பயன்பாட்டில் உள்ளது. 'ஆம்போரா' என்பதற்கு 'இருபுறமும் கைப்பிடிகளைக் கொண்ட' கலம் என்பது பொருளாகும். ஆம்போரா சாடித்துண்டுகள் பல பட்டணத்தில் கிடைத்துள்ளன. இந்தச் சாடிகள் ரோமானிய மற்றும் கிரேக்க நாடுகளிலிருந்து கொண்டுவரப் பட்டவையாகும். இவை திராட்சைப் பழத்திலிருந்து உருவாக்கபட்ட மது (தேறல்), 'கரும்' எனப்படும் ஒருவகை மீன் ஊறுகாய், மற்றும் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை இறக்குமதி செய்யப் பயன்பட்டன. இந்த சாடிகள் பொதுவாக இரண்டு கைப்பிடிகளுடன் காணப்படுகின்றன. இந்த வகைச் சாடிகளின் துண்டுகள் அதிகமாக பட்டணத்தில் கிடைக்கின்றன. ஆம்போராவின் சாடித் துண்டுகள் தமிழகத்தில் அரிக்கமேடு, குடிக்காடு, வசவசமுத்திரம், கரூர், அழகன்குளம், கொற்கை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இப்பட்டணத்தில் கிடைத்த ஆம்போரா சாடிகளின் துண்டுகள் ரோமானியப் பகுதியில் உள்ள நேப்பில்ஸ் வளைகுடாவில் உருவாக்கப்பட்ட ஆம்போராக்களைச் சேர்ந்தவை (Tomber 2008). மேலும் எகிப்து மற்றும், கிரேக்க நாட்டுத் தீவுகள் ஆகிய இடங்களிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட ஆம்போரா சாடிகளின் துண்டுகளும் இங்கு கிடைக்கின்றன.

அரிட்டைன்/டெர்ரா சிகிலாட்டா

டெர்ரா சிகிலாட்டா என்பது சிவப்பு நிறமுள்ள உயர் தரப் பானை வகையாகும். இது ஒரு ரோமானியப் பானை வகையாகும். இவற்றில் பல வகைகள் உள்ளன. இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்டவை அரிட்டைன் என்று அழைக்கப்படுகின்றன்; ஸ்பெயினின் 'கால்' (Gaul) பகுதியில் உற்பத்தியான இவ்வகைப்பானைகள் சாமியன் பானை வகை என்று அழைக்கப்படுகின்றன. வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ரோமானியப் பேரரசின் கிழக்குப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டவை 'ஆப்பிரிக்க சிவப்பு நிறக் கலவை பூசப்பட்டவை' என அழைக்கப்படுகின்றன.

அழகன்குளத்தில் கிடைத்த சில சிவப்பு நிற ரூலட்டட் தட்டுக்களின் துண்டுகள் முதலில் தவறாக 'ஆப்பிரிக்க சிவப்பு நிறக் கலவை பூசப்பட்டவை' என அடையாளப்படுத்தப்பட்டன (Nagasamy 1991). இந்தப் பானை வகையை மார்ட்டிமர் வீலர் அரிக்கமேட்டில் கண்டுபிடித்து அடையாளப்படுத்தியுள்ளார் (Wheeler et al. 1946). இதில் கிண்ணங்கள் மற்றும் தட்டுகள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் அரிக்கமேட்டில் கிடைத்த, வரலாற்றுத் தொடக்க காலச் சான்றுகளின் காலம் மார்ட்டிமர் வீலரால் நிர்ணயிக்கப்பட்டது.

ரோமானியக் கண்ணாடி வகைக் கிண்ணங்கள்

ரோமானியர்களின் கண்ணாடி வகைக் கிண்ணங்களின் துண்டுகள் பட்டணத்தில் கிடைத்துள்ளன. இக் கிண்ணங்களின் வெளிப்புறத்தில் புடைத்த, நேரான நரம்புகள் போன்ற பகுதிகள் செங்குத்தாக விளிம்புக்கு சற்று கீழ்ப் பகுதி வரை அரைத் தூண்கள் போல அமைக்கப்பட்டுள்ளன. எனவே அவை ஆங்கலத்தில் "Pillared Bowl" எனப்படுகின்றன. இவை பச்சை, நீலம் மற்றும் பிற நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் பல கண்ணாடிக் குடுவைகளின் துண்டுகளும் பட்டணத்தில் கிடைத்துள்ளன.

மேற்காசியப் பானைவகைகள்

பொதுவாகச் சங்க காலத்தைப் பற்றிப் பேசும் போது ரோமானியத் தொடர்புகளையே நாம் மையப்படுத்தகிறோம். ஆனால் மேற்காசியாவிற்கும் பழந்தமிழகத்திற்குமான தொடர்புகள் வரலாற்று முந்தைய காலத்திலிருந்தே தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது. மேலும் யவனர் என்ற சொல் ரோமானியர் மற்றம் மேற்குத் திசையைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சங்க காலத் தொல்லியல் இடங்களில் பல மேற்காசியப் பானை வகைகளும் கிடைக்கின்றன. மேலும் இப்பகுதியிலிருந்து வந்த கண்ணாடிக் குடுவைகளும் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் எனத் தெரிகின்றது.

நீலப்பச்சை வண்ணக் கண்ணாடிப் பூச்சுள்ள பானைவகைகள்

நீலப்பச்சை வண்ணக் கண்ணாடிப் பூச்சுள்ள பானைவகைகள் மேற்காசியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. இவை பார்த்திய-சசானியப் பானை வகைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மென்மையான நுண்ணிய துகளைமைவைக் கொண்ட களிமண்ணால் செய்யப்பட்டவை. இவற்றின் கண்ணாடிப்பூச்சு இல்லாத பகுதியைத் தொடும் போது மண் துகள்கள் பொடிபோன்று கையில் ஒட்டும். இவற்றின் மேல் நீலம், பச்சை, நீலப்பச்சை, வெள்ளை நிறங்களில் கண்ணாடிப் பூச்சு பூசப்பட்டு காணப்படும். இவை இரான் மற்றும் இராக் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டவை. இவற்றின் சில துண்டுகள் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. அதைவிட அதிகமான எண்ணிக்கையிலான துண்டுகள் பட்டணத்தில் காணப்படுகின்றன. மேற்காசியப்பானை ஒடுகள் பட்டணத்தில் அதிகமாகக் காணப்படுவது மேற்குக் கடற்கரைக்கும் மேற்காசியாவிற்கும் கிழக்குக் கடற்கரையை விட அதிகமான தொடர்புகள் இருந்தமையைப் புலப்படுத்துகின்றன.

டர்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெரக் கென்னட் பட்டணத்தில் கிடைக்கும் இவ் வகைப் பானைகள் பொ.ஆமு. 3ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ 9ம் ஆம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்தவை என்று கருதுகின்றார். இங்கு கிடைத்த பார்த்திய மீன் தட்டுக்கள் பொ.ஆமு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கருதுகிறார்.

மெசபடோமிய டர்பிடோ பானை வகைகள்

மெசபடோமியா எனப்படும் யூப்ரிஸ் மற்றும் டைக்கிரிஸ் ஆற்றிடைப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட பானை வகைகள் 'டர்பிடோ' எனப்படும் பானை வகைகளின் துண்டுகள் பட்டணத்தில் கிடைத்துள்ளன. இவை மேற்கு ஈரான் மற்றும் ஈராக் பகுதியைச் சேர்ந்தவை. இந்த சாடிகளின் உருளை வடிவத்தால் இவை டர்பிடோ எனப்படுகின்றன. இவை டர்பிடோ எனப்படும் நீர் மூழ்கு ஏவுகணைகளின் அமைப்பை ஒத்துக்காணப்படுகின்றன. இவற்றின் உள்ளே கருப்பு நிறத் தார்க்கலவை பூசப்பட்டிருக்கும். இவை அழகன்குளத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நல்லெண்ணை, பேரிச்சை சாறு மற்றும் இப்பகுதியல் உற்பத்தியான பொருட்களைச் சேமிக்கப் பயன்பட்டிருக்கலாம் என டெரக் கருதுகின்றார்.

விவாதங்கள்

பட்டணத்தில் கிடைத்துள்ள தொல்பொருள்கள், அரிக்கமேட்டில் கிடைக்கும் தொல்பொருள்களின் அளவை ஒத்தும், ஏன் அவற்றை விட அதிகமாகவும் காணப்படுகின்றன. இந்தச்சூழ்நிலையில் இவ்விடம் சங்ககாலத்தின் முசிறியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூற்றை உறுதிப்படுதிதுகின்றன. மேலும் இந்த இடம் கொடுங்களூரிலிருந்து அதிக தொலைவில் இல்லை (சுமார் 8 கீமீ). எனவே முசிறி என்ற பெயர் இப்பகுதி முழுவதிற்கும் பயன்படுத்தப் பெற்றிருக்கவேண்டும்

தற்போது அங்கு ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படவிருக்கின்றது. அரிக்கமேடு ஒரு சிறப்பான தொல்லியல் இடமாக இருந்தபோதிலும், அங்கு இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆல்பன்ஸ் மற்றும் பாத் போன்ற இடங்களில் உள்ளது போன்ற ஒரு பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். நமது பண்பாடுசார் மற்றும் இயற்கைசார் மரபியல் வளங்களை நன்கு பாதுகாத்து காட்சிப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

மேற்கோள்நூல் பட்டியல்

* Achan, A.P. 1946. Annual Report of the Archaeological Department Cochin State for the Year 1121 M. E. (1945-46). Ernakulam: Cochin Government Press
* Begley, V. 1988. Rouletted Ware at Arikamedu: A New Approach. American Journal of Archaeology 6: 93-108.
* Begley, V. 2004. Critique of V.D. Gogte’s Interpretations of X-Ray Diffraction Analyses of Arikamedu Pottery, in The Ancient Port of Arikamedu: New Excavations and Researches 1989-1992. Vol 2. (Begley et al eds.), pp. 631-642. Paris: Ecole Francaize D’Extreme-Orient.
* Begley, V. et al. 1996. Pottery from the Northern Sector, 1989-1992, in The Ancient port of Arikamedu: New Excavations and Researches 1989-1992. (Begley et al eds.), pp.115-286. Pondicherry: Ecole Francaize D’Extreme-Orient.
* Begley, V. et al. 2004. The Ancient Port of Arikamedu: New Excavations and Researches 1989-1992. Vol 2. (Begley et al eds.), pp. 631-642. Paris: Ecole Francaize D’Extreme-Orient.
* Cherian, P.J. ,V. Selvakumar and. K.P. Shajan 2007. The Muziris Heritage Project: Excavations at Pattanam, Journal of Indian Ocean Archaeology 4, pp.1-10.
* Gogte, V.D. 1997. The Chandraketugarh-Tamluk region of Bengal: Source of the Early Historic Rouletted Ware from India and Southeast Asia. Man and Environment 22(1):69-85.
* Gogte, V.D. 2002. Ancient Maritime Trade in the Indian Ocean: Evaluation by Scientific Studies of Pottery. Man and Environment 27(1):57-67.
* Mahadevan, I. 2003. Early Tamil Epigraphy- From the earliest times to the sixth century AD. Harvard Oriental Series, 62. Cre-A: Chennai.
* Nagaswamy, R. 1991. Azhakankulam: An Indo-Roman Trading Port, in Indian Archaeological Heritage, K. V. Soundara Rajan Felicitation Volume. (C. Margabandhu et al. eds.), pp 247-254. New Delhi, Agam Kala Prakashan.
* Raman, K.V. 1976. “Archaeological Excavations in Kerala,” Souvenir of the Indian Historical Congress, held at Calicut University, Dec. 29-31. Calicut: Calicut University. pp.6-10.
* Shajan, K.P., R. Tomber, and P. J. Cherian 2004. Locating the Ancient Port of Muziris: Fresh Findings from Pattanam. Journal of Roman Archaeology 17: 312-320..
* Shajan, K.P., R. Tomber, P.J. Cherian, 2008. The external connections of Early Historic Pattanam, India: the ceramic evidence Antiquity Online 82(315) March 2008, http://antiquity.ac.uk/Projgall/tomber/index.html
* Shanmugam, P 2010. Indian and Southeast Asian: South Indian Cultural Links with Indonesia, in Nagapattinam To Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia, (Kulke, Hermann, K. Kesavapany and Vijay Sakhuja (eds.). pp.208-226. Singapore: Institute of Southeast Asian Studies.
* Sidebotham, S.E. and W. Wendrich eds. Berenike 2007. 1999/2000 Report on the Excavations at Berenike Including Excavations in Wadi Kalalat and Siket, and the Survey of the Mons Smaragdus Region. Los Angeles, Cotsen Institute of Archaeology.
* Tomber, R. 2008. Indo-Roman trade: from pots to Pepper. London: Duckworth.
* Wheeler, R.E.M., A.Ghosh and Krishna Deva 1946. Arikamedu: An Indo-Roman Trading Station on the East Coast of India. Ancient India 2:17-124.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.