http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > தலையங்கம்
வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஆசிரியர் குழு
மலைப்பாக இருக்கிறது. பிரமிப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்ப முடியாததாக இருக்கிறது!

இப்படி எத்தனையோ வார்த்தைகளை உபயோகப்படுத்திச் சொன்னாலும் நம்முடைய உணர்வுகளை சரிவர வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை.

எத்தகைய பெரிய எதிர்பார்ப்புக்களையும் மனதில் கொள்ளாமல் திருக்கோயில்கள் சார்ந்த வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு துவங்கப்பட்ட இந்த மின்னிதழ் ஒன்பது வருடங்களையும் தொண்ணூற்றொன்பது இதழ்களையும் கடந்து நூறு என்ற இலக்கை எட்டியிருக்கிறது.

பல்வேறு நேர நெருக்கடிக்கிடையிலும் இந்த முயற்சி தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதற்கான காரணிகளாக நாம் கருதுபவை மூன்று.

1. எத்தனையோ கால தேச வர்த்தமானங்களைக் கடந்து பொதுமக்களின் தொடர் புறக்கணிப்புக்களையும் அலட்சியங்களையும் மீறி ஏதோ ஒரு ஆன்மசக்தியின் பாற்பட்டு ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிய பின்னரும் இன்னமும் முழு ஜீவசக்தியுடனும் உயிர்ப்புடனும் வரலாற்றுத் துடிப்புடனும் விளங்கும் நமது திருக்கோயில் வளாகங்கள்.

2. எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் நோக்கங்களுமின்றி கோயில்களின் மேல் கொண்ட அளவற்ற காதலால் அவற்றுடனுன் தன்னையும் தனது வாழ்வையும் மிக மிக இறுக்கமாகப் பின்னிப் பிணைத்துக் கொண்டுள்ள ஒரு வரலாற்றிஞரின் தொடர்ந்த வழிகாட்டல்.

3. பல்வேறு பணிச்சூழல்கள் மற்றும் குடும்பச் சூழல்களுக்கிடையே வரலாற்றுணர்வினால் உந்தப் பட்டு தொடர்ந்து இந்தத் தளத்தில் எழுதி வரும் கட்டுரையாளர்கள் மற்றும் படைப்புக்களைப் படித்து கருத்துக்கள் பறிமாறி உற்சாகப்படுத்தி வரும் உலகளாவிய வாசகர்கள்.

இறையருளினாலும் முன்னோர் ஆசிகளினாலும் இந்த மூன்று விசைகளும் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதினால்தான் இந்த முயற்சி தொய்வுறாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம்.

வரலாறு என்பதே கடந்து வந்த பாதையின் பரிணாமங்களைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்பதினால் நாம் கரம்கோர்த்துக் கடந்து வந்த பாதையையும் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

2004 ஆகஸ்ட் 15ல் முதல் இதழின் தலையங்கத்தில் (வாழ்வியலில் வரலாறு) இந்த இதழ் துவங்கப்பட்டதற்கான நோக்கத்தைத் தெளிவாக எழுதியிருந்தோம். ஆண்டுகள் பல கடந்த நிலையில் அந்த மைய நோக்கத்தில் நாம் சிறிதளவும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பது கவனத்திற்குரியது.

அமரர் கல்கியவர்களின் பொன்னியின் செல்வன் புதினமும் பொன்னியின் செல்வன் யாஹு குழுமமும் உருவாக்கிய தாக்கங்கள் வளர்ந்து எத்தகைய சூழலில் இந்த மின்னிதழாக மலர்ந்தன என்பதைப் பின்னாளில் சிறப்பிதழொன்றில் மிக விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

முதல் இதழ் துவங்கப்பட்டபோதே அதில் இடம்பெறப் போகும் பகுதிகள் இன்னின்னவை (தலையங்கம், கலையும் ஆய்வும், பயணப்பட்டோம் முதலியன) என்பதைத் திட்டமிட்டிருந்தோம். இன்றைய தேதிவரை அந்த அடிப்படை அமைப்பை மாற்றவேண்டிய சூழல் ஏற்படவில்லை. இதழின் வடிவமைப்பை மட்டும் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இருந்தது. இருக்கிறது.

துவங்கிய முதல் இதழிலிருந்தே முனைவர் கலைக்கோவன் அவர்கள் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட ‘கலைக்கோவன் பக்கம்’ எனும் பகுதியில் மிகச் செறிவான ஆய்வுக் கட்டுரைகளையும் அனுபவங்களையும் எழுதத் துவங்கினார். இந்தப் பகுதியில்தான் திரும்பிப் பார்க்கிறோம் எனும் நீண்ட அனுபவத் தொடரும் வாருணிக்கு எழுதிய வரலாற்று மடல்களும் குடைவரைகள் மற்றும் மாடக்கோயில்கள் பற்றிய பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் வெளியாயின. இவை அனைத்துமே பின்னாளில் புத்தக வடிவம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இதழிலேயே கலையும் ஆய்வும் பகுதியில் சீரீய ஆய்வுக் கட்டுரையொன்றைப் பதிவாக்கிய முனைவர் மு. நளினி தொய்வில்லாமல் அரியபல ஆய்வுக் கட்டுரைகளைப் தொடர்ந்து படைத்து வந்துள்ளார்கள். இவரது கட்டுரைகளின்றி எந்த இதழும் வெளியானதில்லை எனலாம். இவரது புதிய கண்டுபிடிப்புக்களையும் கல்வெட்டுக்களையும் உடனுக்குடன் பதிவாக்குவதற்காகவே சுடச்சுட என்கிற பகுதியை ஒரு கட்டத்தில் துவங்கினோம். தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்து பதிவாக்கிய பெருமையை சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளாத முனைவர் நளினி, கல்வெட்டுக் கலைச்செல்வி என்று அமரர் குன்றக்குடி அடிகளாரால் பட்டம் பெற்றவர். அவருடன் இணைந்து அன்னாரது உடன்பிறவா சகோதரியான முனைவர் அர. அகிலாவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நமது இதழில் எழுதி வருகிறார்கள்.

முதல் இதழில் கட்டிடக்கலை ஆய்வு பற்றிய அறிமுகத் தொடரை கமலக்கண்ணனும் கல்வெட்டாய்வு பற்றிய அறிமுகத் தொடரை இலாவண்யாவும் எழுதத் துவங்கினர். தொடர்ந்து பல மாதங்களுக்கு வெளியான அந்த இரு தொடர்களும் இன்றுவரை வாசகர்களுக்கு அந்த இரு இயல்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

முதல் இதழில் இசை தொடர்பான ஆலாபனை பகுதியில் எழுதத் துவங்கிய லலிதாராம் பின்வந்த காலங்களில் சென்ற நூற்றாண்டின் கர்னாடக இசைக் கலைஞர்கள் பற்றிய வரலாற்றாய்வில் தன்னைத் தீவிரமாகத் ஈடுபடுத்திக் கொண்டார். அமரர் ஜி.என்.பி, பழனி சுப்பிரமணியப் பிள்ளை முதலிய பல்வேறு கலைஞர்களின் வாழ்வையும் இசைப்புலமையையும் விளக்கிப் புத்தகங்கள் வடித்துள்ளார்.

இரண்டாவது இதழிலிருந்து இராஜகேசரி என்கிற வரலாற்று நாவலையும் கல்வெட்டு சொன்ன கதைகள் என்ற சிறுகதைத் தொடரையும் எழுதத் துவங்கிய கோகுல் சேஷாத்ரி அதற்குப் பின்வந்த வருடங்களில் பைசாசம் என்ற நாவலையும் சேரர் கோட்டை என்ற நீண்ட வரலாற்றுப் புதினத்தையும் இம்மின்னிதழில் படைத்தார். பரவலான வாசகர் வரவேற்பைப் பெற்ற இந்த அனைத்து படைப்புக்களும் பின்னாளில் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தாராலும் கமலம் புக்ஸ் நிறுவனத்தாராலும் புத்தகங்களாக வெளியிடப்பெற்றன. மதுரகவி என்கிற தலைப்பில் வெளியான கல்வெட்டுக் கதைகள் புத்தகம் திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விருதை வென்றது.

இதழ் துவங்கிய ஆறாவது மாதத்திலேயே முனைவர் கலைக்கோவனின் பெண் தெய்வ வழிபாடு என்கிற புதிய புத்தமொன்றை வெளியிடுவதற்காக சிறிய விழாவை தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்தோம். அந்த விழாவில் அமரர். கூரா. சீனிவாசன் நினைவுப் பொழிவை வழங்கும் அரிய வாய்ப்பை முனைவர் கலைக்கோவன் கோகுல் சேஷாத்ரி அவர்களுக்கு வழங்கினார். இந்த விழாவில் முனைவர் சு.இராஜவேலு வெளியிட்ட தஞ்சை பெரியகோயில் இராஜராஜேஸ்வரம் சிறப்பிதழ் இன்றுவரை பரவலாகப் படிக்கப்பட்டுவரும் இதழ்களுள் ஒன்று.

இதழ் 8ல் அழிவின் விளிம்பில் ஓர் அரிய வரலாற்றுப் பெட்டகம் என்கிற தலைப்பில் திருவலஞ்சுழி ஷேத்திரபாலர் திருக்கோயிலின் பரிதாபகரமான நிலைமையை எழுதியிருந்தோம். அதனைத் தொடர்ந்து அக்கோயிலின் வரலாற்றாய்விற்குத் தொழிலதிபர் திரு. சுந்தர் பரத்வாஜ் அவர்கள் உதவ முற்பட அது தொடர்ந்து பல பயணங்களுக்கு வித்திட்டது. வலஞ்சுழி தொடர்பாக முனைவர் கலைக்கோவன் மேற்கொண்ட இந்தப் பல்வேறு பயணங்களையும் வரலாறு டாட் காம் பெருமையுடன் பதிவாக்கியது. பின்னாளில் வலஞ்சுழி வாணர் என்ற பெயரில் இந்த ஆய்வு முடிவுகள் ஒரு புத்தகமாக வெளியாயின.

வலஞ்சுழியின் பங்கு இத்துடன் முடியவில்லை. அப்பயணங்கள் துவங்குவதற்கு சில காலம் முன்பே அறிமுகமாகியிருந்த நண்பர்களான திரு. சு. சீதாராமனையும் திரு. பால பத்மநாபனையும் வலஞ்சுழிப் பயணங்கள் நெருக்கமாக்கின. இருவரும் பின்னாளில் பல்வேறு கட்டுரைகளையும் வரலாறு டாட் காமிற்கு வழங்கியுள்ளனர். பத்மநாபன் மிக விரிவாக இம்மின்னிதழில் எழுதிய மானம்பாடி பற்றிய தொடர் கட்டுரை முக்கியமானது. இந்த வருடம் (2013) நெடுஞ்சாலைத் துறையால் இக்கோயில் அப்புறப்படுத்தப்பட இருந்தபோது அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அரசுக்கு உணர்த்த இக்கட்டுரையும் பெருமளவிற்கு உதவியது. மானம்பாடியை மறக்கவியலாத பாலா இந்த இதழுக்காக மீண்டும் அதே திருக்கோயிலின் கல்வெட்டுக்களைக் கொண்டு தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து எனும் மிகச் செறிய சிறப்புக் கட்டுரையொன்றை இவ்விதழில் படைத்துள்ளார்.

2006 அக்டோபர் இதழில் இமயத்திற்கே மகுடமா? என்று கல்வெட்டறிஞர் திரு ஐராவதம் அவர்களுக்குப் பணிப்பாராட்டு மலர் தயாரிக்கும் நோக்கத்தை வெளியிட்டோம். பல வருடங்களையும் பல மாத உழைப்பையும் பல்வேறு வரலாற்றஞர்களுடனான ஒருங்கிணைப்பையும் உள்வாங்கிய இந்தப் பெரும்பணி நமது ஐம்பதாவது இதழில்தான் நிறைவுற்றது. ஐராவதி என்ற தலைப்பில் வெளியான இவ்விதழின் வெளியீட்டு விழாவில் அனைத்து அறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இம்மலரின் உருவாக்கத்தின்போது அன்னாரது பல கட்டுரைகளையும் தாங்கி வரலாறு டாட் காம் பெருமையுற்றது.

2008ம் ஆண்டு ஏப்ரல் 21 முனைவர் இரா. கலைக்கோவனின் மணிவிழாவாக அமைந்ததால் அவர்பால் நாம் கொண்டிருந்த அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் பொருட்டு அவருக்கே தெரியாமல் ஒரு சிறப்பிதழ் தயாரித்து வெளியிட்டோம். பல்லோரது பாராட்டையும் பரந்த அளவிலான வாசிப்பையும் பெற்ற அவ்விதழ் இன்றுவரை நமக்கே ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது.

43வது இதழிலிருந்து புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகளைப் பற்றி எழுதத் துவங்கிய திருமதி சுமிதாவின் ஆய்வுக் கட்டுரைகள் இன்றுவரை தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இவரது ஆய்வுப் பயணத்தில் நாமும் சிறிதளவு பங்குபெற்றதை எண்ணி உவகை கொள்கிறோம். இவரது ஆய்வு நிறைவடைய வாழ்த்துகிறோம். அதேபோல் சங்கப் பாடல்கள் பற்றியும் வரலாற்று நாவல்கள் பற்றியும் 41ம் இதழிலிருந்து எழுதி வரும் செல்வி. ரிஷியாவின் புத்தகத் தெரு அலைச்சல்களும் பார்வைகளும் பதிவுகளும் வாசகர்களுக்கு உவப்பானவை.

துவக்க கால இதழ்களில் எழுதிய திரு. ம.இராம்நாத் அவர்களும் 53ம் இதழிலிருந்து எழுதத் துவங்கிய காஞ்சிப் பல்கலை முனைவர் திரு.க.சங்கரநாராயணன் அவர்களும் சில கட்டுரைகளே எழுதியிருந்தாலும் அவை செறிவான படைப்புக்களாக அமைந்தன. இவ்விருவரும் தொடர்ந்து இவ்விதழில் எழுதும் காலம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

73ம் இதழிலிருந்து தமிழகத் தொல்லியல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆய்வாளர்கள் திரு. கி.ஸ்ரீதரன் அவர்களும் ஸ்தபதி திரு.வே.இராமன் அவர்களும் செறிவு மிக்க கட்டுரைகளை நமது இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அத்தனை பரவலாக அறியப்படாத திருக்கோயில்களும் கல்வெட்டுக்களும் சிற்பங்களும் இவர்தம் உழைப்பால் வெளிச்சத்திற்கு வருகின்றன.

புதிய முகங்களையும் எழுத்துக்களையும் அறிமுகம் செய்வதை ஒரு கடமையாகவே கருதும் நாம் இதே இதழில் இரண்டு புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். வரலாறு டாட் காம் குடும்பத்துடன் பல காலமாகவே தொடர்பிலிருந்த அன்பர்கள் திரு. வே.ச.வேலாயுதம் அவர்களும் திரு.ச.சுந்தரேசன் அவர்களும் இவ்விதழ் வழி வாசகர்களுடன் உரையாடத் துவங்குகிறார்கள். அவர்தம் எழுத்துலக வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் நமது பணிகளை மதித்து அரசு அழைப்பிதழ் அனுப்பியது. திரு கமலக்கண்னும் திரு கோகுல் சேஷாத்ரியும் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தளித்தனர்.

பராந்தகர் திருக்கோயில்கள் பற்றிய முனைவர் பட்ட ஆய்வை அப்போது மேற்கொண்டிருந்த திரு. கோகுல் பின்னாளில் பராந்தகர் கால இராமாயணச் சிற்ப ஆய்வை தமது சிறப்பு இயலாகத் தேர்ந்தெடுத்து கடந்த பல வருடங்களாக அந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இதே காலகட்டத்தில் கும்பகோணத்தில் கட்டுமானத்தொழிலில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சியடைந்துவிட்ட திரு. சீதாராமனும் அதே பராந்தகர் காலத்தைத் தேர்ந்தெடுத்து கோயில் கட்டுமானக் கலையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவ்விருவரின் ஆய்வும் சிறக்க வரலாறு டாட் காம் வாழ்த்துகிறது.

முனைவர் திரு கலைக்கோவன் இயக்குனராக உள்ள டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையத்தின் பல மகத்தான கண்டுபிடிப்புக்கள் நமது இதழ் முதன் முதலில் வெளியிட்டுப் பெருமையுற்றுள்ளது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது திருப்பரங்குன்றம் குடைவரைக்கோயிலில் கண்டறியப்பட்ட இராவண அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தொகுதிதான். மதுரை மாவட்டக் குடைவரைகள் புத்தகத்தில் இச்சிற்பம் முழுமையாக ஆராயப்பட்டுள்ளது.

இவ்வாறாக இந்த ஒன்பது வருடங்களில் எத்தனையோ முக்கியச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டவை சிலவே. குறிப்பிடப்படாதவை பல.

ஒன்பது வருடங்களில் வரலாறுடன் சேர்ந்து நாமும் வளர்ந்தே வந்திருக்கிறோம்.

வரலாற்றுடன் நெருக்கமாகக் கைகோர்த்துக் கொண்டிருப்பதன் மூலம் நம் அனைவரின் வாழ்க்கையும் செறிவாகியிருக்கிறது.

வரலாற்றின் வடிவில் இந்த மண்ணில் வாழ்ந்த முன்னோரும் மூத்தோரும் அன்றாடம் நம்முடம் கரம்பிடித்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்தம் வாழ்வும் சிந்தனைகளும் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றன.

வாழ்வு இனிது. வரலாறு மிக இனிது.

வரலாற்றுணர்வுடன் கூடின் வாழ்வு மிக மிக இனியது.

வணக்கம்.
அன்புடன்
ஆசிரியர் குழு.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.