http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > கலையும் ஆய்வும்
இராமனை அறிதல்
கோகுல் சேஷாத்ரி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி வளர்ந்து வந்திருக்கும் மானுடப் பண்பாட்டை ஒரு மாபெரும் நிலப்பரப்பாக நம்மால் உருவகிக்க முடியுமானால்... அந்நிலப்பரப்பை ஊடுருவிச் சென்று வளப்படுத்தும் மகாநதிகளாக நாம் எவற்றைக் குறிப்பிட முடியும்?

கலைகளைக் குறிப்பிடலாம். குறிப்பாக இலக்கியங்களைச் சுட்டலாம்.

பாரதப் பண்பாட்டுவெளியில் இரு மாபெரும் இலக்கிய மகாநதிகள் இவ்வாறு தொன்றுதொட்டே பயணப்பட்டு வந்துள்ளன.

ஒன்று இராமாயணம். மற்றொன்று பாரதம்.

இரண்டின் மூலத்தையுமே அறிவது கடினம். இரண்டுமே பாரத வர்ஷத்தின் அகண்ட தூரங்களை அளந்தபடி அதன் மூலை முடுக்குகளிலெல்லாம் பயணித்து மண்ணின் சாரங்களை உறிஞ்சி அவற்றைத் தனதாக்கிக் கொண்டபடி சஞ்சரித்துள்ளன. இங்கு வாழ்ந்து மடிந்த பல்வேறு மானுடத் தரப்புகளின் இருப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் தொல்பழங்குடி நாகரீகத்தின் எச்சங்களையும் இவை கதைகளாகவும் பாத்திரங்களாகவும் சம்பவங்களாகவும் தொன்மங்களாகவும் இரகசியமாக உருமாற்றி காலங்காலமாகச் சுமந்து சென்றுகொண்டேயிருக்கின்றன.

குறிப்பிட நிலப்பரப்பின் நாகரீக சாரத்தை இந்த அளவிற்கு உள்வாங்கிப் பிரதிபலிக்கும் தொன்மையான இலக்கிய உருவாக்கங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

மானுட மனம் தனது ஆழமான விழுமியங்களையும் சிந்தனைகளையும் பாதுகாக்க நினைக்கும் தொல்நினைவுகளையும் பத்திரப்படுத்தி வைக்க ஏன் கதைப்பரப்பை.. இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏனெனில் இலக்கியங்களும் மானுடத்தைப் போலவே தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் கொண்டவை. அவை சிற்பங்களைப் போல் கட்டிடங்களைப் போல் ஸ்திரப்படுத்தப்பட்டவை அல்ல. செல்லும் இடத்திற்கு ஏற்ப அதன் தட்பவெட்பத்திற்கு ஏற்ப அவை தம்மைத்தாமே வளர்த்து உருமாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவை.




இதுவே அவற்றின் பலம். இதுவே அவற்றின் பலவீனமும் கூட. ஏனெனில் சற்று எச்சரிக்கையாக இல்லாவிடில் இந்த மாறுதல்கள் அவற்றின் மூலப்போக்கையும் மூல உருவத்தையுமே முற்றாக அழித்து விடலாம். அல்லது மறைத்துவிடலாம். முலசாரத்தை இழக்காமல் மாற்றங்களை எதிர்கொண்டு உள்வாங்கும் சாகசம் தெரிந்த இலக்கிய ஆக்கங்களே காலத்தை வென்று நிற்கும் வல்லமை பெறுகின்றன. நாம் குறிப்பிட்ட இரண்டு இலக்கியங்களுமே இத்தன்மையுடன் திகழ்வதைக் காணலாம்.

இராமாயணம். பாரதம்.

இரு ஆக்கங்களும் தொன்மையானவை என்பதைத் தவிர இவற்றுக்கிடையே பெரிய ஒற்றுமை கிடையாது. இரண்டின் தோற்றுவாய்களும் வேறு. காலங்கள் வேறு. கதைகள் வேறு.

இராமாயணத்தின் மையக்கரு என்று சொல்லத்தக்க நிகழ்வுகள் ஏறக்குறைய கி.மு. 3000 அல்லது அதற்கு முன்பாக நிகழ்ந்திருக்கலாம். அந்தக் கரு மெல்ல வளர்ந்து பாணர்களாலும் விறலியர்களாலும் சூதர்களாலும் கதைப்பாடலாக உருமாறி பல்வேறு சபைகளிலும் மன்றங்களிலும் அரங்கேறி நாளடைவில் பிராந்தியத் தாங்கங்களை உள்வாங்கி இன்றைக்கு நாம் பரவலாக அறியும் வடிவத்தை அடைவதற்குப் பல நூறு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்க வேண்டும்.

மானுடம் காட்டையும் வேட்டையையும் மிருகங்களையும் பறவைகளையும் மறக்காமல் அண்மையாக உணர்ந்த கால கட்டத்தை இராமாயணம் முழுமையாகப் பிரதிபலிப்பதைக் காணலாம். அதனால்தான் கதையின் நாயகன் வில்லேந்தி நிற்கிறான். கதை நெடுகிலும் ஏதோ ஒரு வேட்டை அவ்வப்போது நிகழ்ந்தபடி இருக்கிறது. இராமனே பலமுறை பலவிதமான வேட்டைகளில் ஈடுபடுகிறான். விலங்குகளும் பட்சிகளும் கதை மாந்தர்களுடன் நெருக்கமாகவும் நட்பாகவும் உரையாடுகின்றன. ஒரு கட்டத்தில் அவையும் கதாபாத்திரங்களாக வளர்ச்சியடைகின்றன.

கதை நெடுகிலும் காடு ஒரு முக்கியக் களமாகக் காட்சியளிக்கிறது. கதாநாயகனுக்குரிய அரசை நகரம் சூறையாடி ஒன்றுமில்லாதவனாக்கிக் காட்டுக்கு விரட்ட, காடு அவனை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்கிறது. ஆற்றுப்படுத்துகிறது. ஆறுதலும் அடைக்கலமும் அளிக்கிறது.

பதினான்கு வருட வனவாசத்தில் பத்து வருடங்கள் முழுவதுமாக வனத்தில்தான் கழிகின்றன. காடு இராமனையும் இராமன் காட்டையும் உள்வாங்கிகொண்ட முக்கியமான இந்தக் காலகட்டம் வெளிப்படையான நிகழ்வுகள் எவையுமின்றிக் கழிவதால் இலக்கியங்கள் இதனை விஸ்தரிப்பதில்லை.

ஒரு கட்டத்தில் நாயகனின் தேவி கடத்தப்பட, அவளைக் காப்பாற்றக் காட்டின் அத்தனை சக்திகளும் முன்வருகின்றன. அந்தப் போரில் ஒரு வீரமிகு பறவை பிராணத்தியாகமே செய்கிறது. அந்தப் பறவையின் தியாகத்தால் மனம் நெகிழும் இராமன், அதனை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் பாவித்து அதற்குரிய இறுதிக் கடன்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறான். இராமாயணத்தில் ஐந்தறிவு-ஆறறிவு என்கிற செயற்கையான பேதம் முற்றிலுமாக மறைந்து போய்விடும் பல அழகிய தருணங்களுள் இதுவுமொன்று.




இலங்கையில் சிறை வைக்கப்படும் தேவியைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு குரங்கு சேனை முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. இராமனின் மகத்தான துணைவனாக முன்னிறுத்தப்படும் அனுமன் ஒரு வானரமே. ஜாம்பவான் என்கிற ஒரு கரடி நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனாய் கதையின் பிற்பாதியெங்கிலும் வளைய வருகிறது.

இவ்வாறு கண்ணுக்குத் தெரியாமல் காட்டின் செடிகளும் கொடிகளும் இராமாயணக் கருவுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளன. காட்டுக்கும் மனிதனுக்குமான உறவு கதை நெடுகிலும் ஒரு அடிநாதமாக வலியுறுத்தப்பட்டபடி வந்து கொண்டேயிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி. பெண்ணாசை கொண்டவன் எத்தனை பெரிய வித்தகனாக இருந்தாலும் அழிவான். நேருக்கு நேர் மோதலே வீரனுக்கு அழகு என்பன போன்ற எளிய விழுமியங்களை இராமாயணம் நேரடியாக முன்வைத்துப் பேசுகிறது.
அரசுரிமை பற்றிய போட்டிகளும் கவலைகளும் கதையின் ஆரம்பத்தில் தலைகாட்டினாலும் பரதனின் தியாகத்தால் உடனடியாக அவை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. தந்தையின் ஒரு சொல்லுக்காக இராஜ்ஜியமாளும் உரிமைகளை சட்டென்று உதறி விட்டு நாயகன் வனம் மேவுகிறான்.
அரசுரிமைகளும் வாரிசுப் போர்களும் இராமாயணத்தின் - இராமாயண காலத்தின் - பிரதான பேசுபொருட்கள் அல்ல. அவை கதைக்குரிய பின்னணியை அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

* * * * * * *


இதனுடன் ஒப்பிடுகையில் பாரதம் உருவான காலம் வேறு. சூழ்நிலைகள் வேறு. ஆகவே இதில் முன்னிறுத்தும் விழுமியங்களும் வேறானவை.

இது உலோகம் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்ட இரும்பு காலத்தைச் (Iron Age) சேர்ந்தது. ஆதலால் அம்புகளின் முனையில் இரும்புத்துண்டுகள் பொருத்தப்பட்டு விட்டன. கண்ணனின் கரங்களில் வில்லுக்கு பதில் உலோகத்தினாலான சக்ராயுதம் கொடுக்கப்பட்டுவிட்டது.

இக்காலத்தில் முடியரசுகள் பல கங்கைக் கரையெங்கிலும் முளைக்கத் துவங்கின. அதனால் வாரிசுரிமைப் பிரச்சனைகள் கடுமையாகிவிட்டன. பெண்ணாசையுடன் இப்போது மண்ணாசையும் இணைந்துகொண்டு விட்டது. ஆகவேதான் பாரதக் கதையின் முக்கியமான பேசுபொருளாக கதாநாயகர்களின் அரசியல் உரிமை மீட்புப் போராட்டம் விரித்துரைக்கப்படுகிறது.

பாரதத்தின் மிக முக்கியத் திருப்புமுனை என்று வர்ணிக்கத்தக்க நிகழ்வு ஒரு சூதாட்டமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாண்டவர்கள் தங்களின் சொத்து சுகம் மனைவி மக்கள் என்று அத்தனை விஷயங்களையும் ஒரே சூதாட்டத்தில் இழந்து விடுவதாகப் பாரதம் சித்தரிப்பதன் பின்னணியில் அக்காலத்தைய கவலைகளைக் காணமுடிகிறது. சூதாடுதல் ஒரு பெரும் சமூகப் பிரச்சனையாக அப்போது கருதப்பட்டிருக்க வேண்டும். இராமாயணத்தில் எவருமே சூதாடுவது கிடையாது. இராவணன் உட்பட.

பாரதத்திலும் வனம் உண்டு. வனவாசம் உண்டு. ஆனால் காட்டின் விலங்குகளும் பட்சிகளும் இப்போது மௌனமாகி விடுகின்றன. அவை மானுடர்களுடன் உரையாடுவதில்லை. அவர்களுக்கு உதவி செய்வதில்லை. காட்டின் சக்திகள் இப்போது அந்நியமாகி விட்டன. மானுடம் விலங்குகளையும் பறவைகளையும் இப்போது விலக்கி வைத்து விட்டது. காண்டவ வனம் கண்ணனின் ஆசீர்வாதங்களுடன் அர்ச்சுனனால் முற்றாக எரித்து அழிக்கப்படுகிறது. காடழித்து நாடாக்குதல் பாரத காலத்தின் ஒரு கூறு.

நேர்வழியின் மூலமே வெற்றியை அடையவேண்டும் என்கிற இராமாயணத் தத்துவத்திலிருந்து முற்றிலும் விலகி நேர்வழியில் சென்றால் வெற்றி கிட்டாது. காலம் மாறிவிட்டது. ஆகவே குறுக்கு வழியில் தந்திரங்களையும் உபாயங்களைக் கடை பிடித்தாவது வெற்றியை அடையவேண்டும் என்கிற தத்துவத்தை பாரதம் வலிமையுடன் முன்மொழிகிறது. இதற்காகக் கண்ணனை முற்றிலுமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இரண்டு இலக்கியங்களும் பெண்களைக் கையாளும் போக்கில் மகத்தான மாற்றங்கள் தென்படுகின்றன. இராமாயணத்தின் வில்லனால் தேவியைத் தீண்டவே முடியாது போக இங்கோ தேவி பல்லோர் முன்னிலையில்லும் தொட்டுத் துகிலுரியப்படுகிறாள்.
அங்கு ஒருவனுக்கு ஒருத்தி. இங்கு பலருக்கு ஒருத்தி. ஒருத்திக்குப் பலர்.

* * * * * * *


இராமனின் கதை வால்மீகியின் காலத்திற்கு முன்னரே நாடெங்கிலும் பரவலாக அறியப்பட்டிருந்ததை பல்வேறு சான்றுகளால் அறிய முடிகிறது. கால தேச பிராந்திய வர்த்தமானங்களுக்கேற்ப வெவ்வேறு வடிவங்களை இராம கதை ஏற்றது. இவற்றுள் நாட்டார் வாய்மொழி வழக்குகள் உண்டு. கதைப்பாடல் வடிவங்கள் உண்டு. இலக்கிய வடிவங்கள் உண்டு. சிற்ப வடிவங்கள் உண்டு. ஓவிய வடிவங்களும் உண்டு.

இப்படி நாடெங்கிலும் பரவலாக அறியப்பட்டிருந்த ஒரு கதையைத்தான் வால்மீகி தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட நிகழ்வுகளையும் களங்களையும் பாத்திரங்களையும் புகுத்தி அதனை ஒரு செறிவான வீரகாவியமாக விரித்துரைத்தார். ஆகவே வால்மீகியின் இராமாயணம் என்பது பரவலாகப் பல்வேறு வடிவங்களில் அறியப்பட்ட இராம கதையின் குறிப்பிட்ட இலக்கிய வடிவம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.




வால்மீகி தனது காவியத்தை ஏறக்குறைய கி.மு.300 அளவில் உருவாக்கியிருக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது புத்தரின் காலத்திற்குப் (கி.பி. 600) பிறகு.

சம்ஸ்கிருதத்தின் ஆதி காவியம் என்று அழைக்கப்படும் தொன்மையான இலக்கியத்தின் காலம் ஏன் இத்தனை பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும்? என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. இராமாயணத்தின் சீரான மொழிக் கட்டமைப்பை ஒரு காரணமாக ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். பாணிணியின் அஷ்டாத்யாயியில் பேசப்படும் அடிப்படை சம்ஸ்கிருத இலக்கணத்தை வால்மீகம் பெரிதும் பின்பற்றுகிறது. ஆகவே இது பாணிணியின் காலத்திற்குப் பிந்தியது என்றெல்லாம் வாதங்கள் வளர்கின்றன.

இந்த மொழிக்கட்டமைப்பு நோக்கில் வைத்துப் பார்க்கும்போது வியாச பாரதம் வால்மீகத்தினும் தொன்மையாது என்பது ஒரு முக்கியமான தரவு. ஏனெனில் பாரதத்தில் வால்மீகத்தின் அளவிற்குக் கட்டமைப்புக் கிடையாது. வடிவம் கிடையாது. ஏகப்பட்ட கதைகள் உபகதைகள் என்று பரந்த வடிவம் அதற்கு. அதாவது இராம கதை பஞ்ச பாண்டவர் கதையினும் தொன்மையானது. என்றாலும் இலக்கிய வடிவில் முதலில் உருவானது பாரதமே! இராமாயணமல்ல.

* * * * * * *


வால்மீகியின் காலத்திற்கு முன்பே இராம கதை நாடு முழுவதும் பரவியிருந்தது என்று குறிப்பிட்டோம். அதற்கான சில சான்றுகளை இப்போது காண்போம்.

புத்த ஜாதகக் கதைகளுள் ஒன்றாக இராம கதை இடம் பெற்றுள்ளது. இதில் இராமன் புத்தரின் முற்பிறப்பான போதிசத்துவர்களில் ஒருவன். சீதையும் இலக்குவனும் அவன் உடன் பிறப்புக்கள். கதையில் இராவணனே கிடையாது. அதனால் சீதை அபகரிப்பு - குரங்கு சேனை - இலங்கையில் சண்டை - ஒன்றுமே கிடையாது. ‘சிற்றன்னை கோபிக்கிறாள். காட்டுக்குப் போ அப்பா!’ என்று தயரதன் ஆணையிட 14 வருடங்களைக் காட்டில் கழித்துவிட்டு நல்லபடியாய் இராமன் வந்து சேர்ந்து அரசுரிமை ஏற்பதுடன் கதை சப்பென்று முடிந்துவிடுகிறது. இதே போன்று ஜைன இராமாயணமும் உண்டு.

தமிழகத்தில் இராமாயணம் வால்மீகத்திற்கு முன்னரே அறியப் பட்டிருந்ததா?

நிச்சயமாக அறியப்பட்டிருந்தது என்பதற்கான சான்று சங்க இலக்கியங்களில் வெளிப்படுகிறது. சங்க நூல்களுள் தொன்மையானவையாக அறியப்படும் அகநானுற்றின் 70ம் பாடலில் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனாரும் புறநானுற்றின் 378ம் பாடலில் ஊன்பொதிப் பசுங்குடையாரும் சில அரிய இராமாயணச் செய்திகளைப் பாடிச் செல்கின்றனர்.




தலைவன் தலைவியின் காதலை ஊர்ப்பெண்கள் அலர் (வம்பு) பேசித் திரிகின்றனர். ஆனால் திருமணம் நடந்தபின் ஊர்வாய் சட்டென்று மூடிக்கொண்டுவிட்டது. இது எப்படி இருக்கிறதாம்? வெற்றி பொருந்திய வேல் கொண்ட கௌரியர்க்கு (பாண்டியர்க்கு?) உரிய தென்முது கோடியில் (தனுஷ்கோடியில்?) கடலோசை முழங்கும் துறைமுகத்தினருகேயிருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து இராமன் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தான். அவன் அமரந்திருந்த ஆலின் கிளைகளில் அமர்ந்திருந்த பட்சிகள் ஏராளமான ஓசையெழுப்பிக் கொண்டிருந்தன. மந்திராலோசனைக்குத் தொந்தரவாக இருந்ததால் இராமன் (கரம் உயர்த்தி அல்லது கைசொடுக்கி?) சட்டென்று அவற்றை அடக்கி விட்டான். ஊர் வாயும் இதுபோல சடக்கென்று மூடிக்கொண்டு விட்டது.

ஓயாமல் ஓசையெழுப்பும் கடல். அக்கடலினருகே அமைந்திருக்கும் துறைமுகம். துறைமுகத்தில் அடர்ந்த பல விழுதுகளுடன் கிளை பரப்பி நிற்கும் ஆலமரம். அந்த ஆலமரத்தில் விடாமல் கீச் கீச்சென்று குரலெழுப்பும் பட்சிகள். கீழே நடைபெறும் தீவிர மந்திராலோசனை. சட்டென்று கைசொடுக்கில் மௌனமாகும் மரக்கிளைகள். மௌனமாகாத கடல் என்று கவித்துவம் மிகுந்த இந்தக் காட்சியை மனக்கண்ணில் விரித்துக்கொண்டே செல்லலாம். இக்காட்சி வால்மீகத்தில் இல்லை.

அடுத்து புறநானூறு. மன்னன் அள்ளிக்கொடுத்த அணிகலன்களைப் பாணர்களும் புலவர்களும் வகை தொகை தெரியாமல் கண்ட இடங்களிலும் அணிந்து கொண்டது எப்படி இருந்ததாம்? அரக்கன் இராமனின் மனைவியாகிய சீதையைக் கவர்ந்து சென்ற போது சீதை நிலத்தில் விட்டெறிந்த நகைகளைக் கண்ட குரங்குகள் வகை தொகை தெரியாமல் அணிந்து கொண்டதைப்போல் இருந்ததாம்! இந்தக் குரங்கு வேலையும் வால்மீகத்தில் இல்லை.

இவ்வாறு இராமாயணத்தில் இல்லாத காட்சிகள் அகம் புறம் பேசும் இலக்கியங்களில் இடம்பெற்றிருப்பதால் வால்மீகத்திற்கு முன்னரே இராம கதை தமிழகத்தில் அறியப்பட்டிருக்கவேண்டும் என்பதை உணரலாம்.

அப்படியெனில் சங்க காலத்தில் இராம கதை தமிழில் ஏன் எழுதப்படவில்லை? பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் போல் இராமகாதை பாடிய புலவரை ஏன் சங்க நூல்களில் காண முடிவதில்லை? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கூறுவது கடினம். இராமயணம் பாடுவதற்குரிய இலக்கியச் சூழல் அப்போது தமிழகத்தில் முழுமையாக இருந்தது. அப்படியொரு நூல் ஆக்கப்பட்டு பிற்காலத்தில் அழிந்துபோயிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

* * * * * * *


சங்க காலத்திற்குப் பின்வரும் சங்கம் மருவிய காலத்தில் இராமாயணச் செய்திகள் தொடர்ந்து இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. இராமனைத் திருமாலின் அவதாரமாகக் கருதும் போக்கு முதன்முறையாக சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் இடம்பெறுகிறது.


மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேர்ப்பத் தம்பியுடன் கான் போந்து
சோபரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே?


பக்தி இலக்கிய காலத்தில் இராமனும் கண்ணனும் திருமாலின் அவதாரங்களாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்ட்டு நிலை பெறுகின்றனர். இவ்விருவரையும் மாற்றி மாற்றி இணைத்துப் பாடும் பெரியாழ்வாரின் தும்பி பற பாசுரங்களில் இரு அவதாரங்களை இணைத்துப் பார்க்கும் நோக்கம் முதன் முதலில் பதிவாகிறது. இதன் மாறுபட்ட முழக்கம்தான் இன்றுவரை நாம் கேட்கும் ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா.

* * * * * * *


இலக்கிய வடிவில் இத்தனை பரவலாக தமிழகத்தில் அறியப்பட்ட இராம கதை சிற்ப வடிவில் திருக்கோயில்களில் பல காலங்களுக்கு வடிக்கப்படவேயில்லை என்பது ஒரு முரண்பாடாவே இருக்கிறது. பல்லவர் திருக்கோயில்களிலும் இராமனுக்குப் பெரிய இடமில்லை. தெய்வமாக.. திருமால் அவதாரமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டாலும் இராமனுக்கென்று தனிக்கோயில்கள் 9ம் நூற்றாண்டு வரை அமைக்கப்படவில்லை. அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

இதற்கு நேர் மாறாகக் கண்ணன் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் பல்லவர் திருக்கோயில்களில் காட்சியளிக்கிறான். வைணவத் திருக்கோயில்கள் மட்டுமல்லாது சைவத் திருக் கோயில்களிலும் அவனுக்கு இடமளித்திருப்பது கவனத்திற்குரியது. (உதாரணம் மாமல்லபுரத்தின் தருமராஜ இரதம் என்றழைக்கப்படும் அத்யந்த காமம்).

மாமல்லபுரத்தின் கோவர்தனக் குடைவரைச் சிற்பத்தொகுதி (கிருஷ்ண மண்டபம்) கண்ணனுக்கென்று அமைந்த தொன்மையான சிற்பத் தொகுதிகளுள் அளவில் பெரியது. சமூகத்தில் பரவலான முக்கியத்துவமும் செல்வாக்கும் பெற்றிருந்தாலன்றி இத்தனை பெரிய சிற்பத் தொகுதி கண்ணனுக்கு அமைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனலாம்.

கண்ணனுக்கென்று தனிக்கோயில்களும் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

* * * * * * *


பத்தாம் நூற்றாண்டின் முற்பாதியில் சோழ மன்னர்களான முதலாம் ஆதித்தர் மற்றும் முதலாம் பராந்தகர் காலத்தில்தான் இராமன் கதை முதன் முறையாக சிற்ப வடிவில் ஒரு கதைத் தொகுதியாகக் காணக் கிடைக்கிறது. இராமபிரானுக்கென்று தனிக்கோயில்கள் பரவலாக அமைக்கப்பட்டதும் இந்தக் காலத்தில்தான். ‘திரு அயோத்திப் பெருமாள்’ என்று சோழர் கல்வெட்டுக்கள் இராகவனைச் சிறப்பிக்கின்றன.

இராமன் கதை பேசும் முற்சோழர் தொகுதிகள் கீழ்க்கண்ட திருக்கோயில்களில் குறுஞ்சிற்பங்களாக விமானம் மற்றும் முகமண்டபத் தாங்குதளத்தின் கண்டபாதங்களிலும் வேதிபாதங்களிலும் செதுக்கப் பெற்றுள்ளன.

1. குடந்தை நாகேஸ்வரர் திருக்கோயில்
2. புள்ளமங்கை பிரம்ம்புரீசுவரர் திருக்கோயில்
3. திருச்சென்னம்பூண்டி திருச்சடைமுடியாதர் திருக்கோயில்
4. பொன்செய் நற்துணை ஈசுவரம்
5. திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோயில்

இவ்வாறு சோழர்கால இராம கதைச் சிற்பங்கள் கொண்ட திருக்கோயில்கள் அனைத்துமே சைவத் திருக் கோயில்களாகவே விளங்குகின்றன. சோழர்கால வைணவத் திருக்கோயில்கள் ஒன்றிலேனும் இராமாயணக் கதைத்தொகுப்பைக் காண முடிவதில்லை.

இத்தொகுதிகள் இராமன் கதையை சித்தரிப்பதில் பல்வேறு வேறுபாடுகளைக் காட்டி நிற்கின்றன. எந்த ஒரு தொகுதியும் மற்றொரு தொகுதிபோல் அமைக்கப்படவில்லை. கதையமைப்பு, சித்தரிப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் காட்சிகள், முன்னிலை பெறும் பாத்திரங்கள், முன்னிலைப்படுத்தப்படாத நிகழ்வுகள் என்று ஒவ்வொரு கோணங்களிலும் இவை தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இவற்றுள் பல அக்காலத்தில் நிகழ்ந்த இராம கதை தழுவிய கூத்துக்களின் தாக்கத்தையும் கணிசமாக வெளிப்படுத்துகின்றன.

இத்தொகுதிகளைப் பரவலாக நோக்கும்போது இக்காலத்தில் இராம கதை ஒரு பெரிய எழுச்சி பெற்றதை அறிய முடிகிறது. முதலாம் ஆதித்தர் மற்றும் இராஜாதித்தர் பூண்ட பட்டப் பெயரான கோதண்ட இராமன், முதலாம் பராந்தகர் பூண்ட சங்கிராம இராகவன் என்கிற பெயர் முதலியவற்றை நோக்கும் போது இந்த எழுச்சிக்கும் அக்கால சோழமன்னர்களுக்கும் இருந்த தொடர்பை அறியமுடிகிறது.

* * * * * * *


பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இராம கதைக்குக் கிடைத்த இந்த முக்கியத்துவம் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிடைக்கவில்லை. உத்தம் சோழர் காலம் முதல் இராம கதை இடம்பெற்ற கண்ட வேதி பாதங்களில் சிவபுராணக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறத் துவங்க, இராமன் கதை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது செதுக்கப் பெற்றுள்ளது.

இக்காலகட்டத்தில் செதுக்கப்பெற்ற ஒரே இராமகதை சிற்பத் தொகுதியாக கோபுரப்பட்டி அமலீசுவரர் திருக்கோயில் குறுஞ்சிற்பங்களைக் குறிப்பிடலாம்.
பிற்சோழர் காலத்தில் இத்தகைய காட்சிகளும் முற்றிலுமாக மறைந்துவிட, இராமாயணத்தின் இடத்தைத் திருத்தொண்டர் புராணம் பிடித்துக் கொள்கிறது.

12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்பெறும் மாபெரும் இலக்கியமான கம்ப இராமாயணம் சமகால மக்களின் மத்தியில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது ஆய்விற்குரியது. ஏனெனில் பிற்சோழர் திருக்கோயில் சிற்பங்களில் இதன் தாக்கத்தைக் காணமுடிவதில்லை.

* * * * * * *


மீண்டும் இராம கதை தமிழகத்தில் எழுச்சிபெறும் காலகட்டமாக விஜயநகர - நாயக்கர் காலத்தைச் சுட்டலாம். இக்காலத்தில்தான் பல்வேறு திருக்கோயில்களிலும் இராம கதை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் பரவலாக இடம்பெறத் துவங்கியது. இராமபிரானுக்குப் புதிய திருக்கோயில்களும் கட்டப்பெற்றன. இராம கதையுடன் பல திருக்கோயில் தலவரலாறுகள் பிணைக்கப்படுவதும் இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.

* * * * * * *


இவ்வாறு இராம கதையும் இராமாயண இலக்கியமும் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தின் பண்பாட்டுடன் பயணப்பட்டு வந்துள்ளன. காலந்தோறும் நிகழ்ந்த இராமகதையின் தாக்கங்களை நாடெங்கிலுமுள்ள திருக்கோயில்கள் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் பத்திரப்படுத்தி வைத்துள்ளன.

இராமகதை இன்றுவரை தொடர்ந்து நம்மை பாதித்து வருகிறது. சிந்தனைக்குள்ளாக்குகிறது. ஆய்வுப் பொருளாகின்றது. அரசியலாகின்றது.

திறந்த மனதுடன் அணுகுவோர்க்கு அது முடிவேயில்லாமல் புதிய புதிய பரிணாமங்களைக் காட்டிக் கொண்டேயிருக்கிறது.

இராமன் என்பவன் காலப்போக்கில் பரிபூரணப்படுத்தப்பட்ட மானுடத்தின் ஒரு எச்சம்.

ஒரு காலத்தில் அவன் வீர யுகத்தின் பிரதிநிதி.

இன்னொரு காலத்தில் அவன் ஒரு அவதாரம்.

மற்றொரு காலத்தில் அவன் தெய்வம். புலவர்களின் பாடுபொருளாகிவிட்ட பரம்பொருள்.

இராமனை அறிபவன் மானுடத்தை அறிகிறான்.

இராமனை அடைபவன் இறைவனை அடைகிறான்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.