![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 119
![]() இதழ் 119 [ மே 2015 ] டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தமிழ்நாட்டு அரசு தொல்லியல்துறையில் 1974ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.
முதன்முதலில் தஞ்சைப் பகுதியில் தொல்லியல் கள ஆய்வினை மேற்கொண்டபோதுதான் மருத்துவர் இரா.கலைக்கோவன் அவர்களது வரலாற்றாய்வுப் பணிகள் பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்த து. என்றாலும் நேரில் சந்திக்க இயலவில்லை. தொல்லியல்துறை 1976-80 ஆண்டுகளில் மாவட்டங்கள் தோறும் கருத்தரங்குகள் மற்றும் வரலாற்றுக் கண்காட்சிகளை நடத்தியது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு தில்லைநகர் குறிஞ்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போதுதான் முதன்முறையாக அவரைச் சந்தித்தேன். திருச்சியில் பதிவு அலுவலராகப் பணியாற்றிய திரு.அப்துல் மஜீத் (மேனாள் தொல்லியல்துறை இயக்குனர்) அவர்களின் வழி இந்த அறிமுகம் கிடைத்தது. சிறிது நேரம் உரையாடியதாக ஞாபகம். ![]() கருத்தரங்கு பற்றிய செய்தி அந்தக் காலகட்டத்தில் அமுதசுரபி, கலைமகள் போன்ற இதழ்களின் தீபாவளி மலர்களில் வரலாறு சார்ந்த கட்டுரைகளை நான் எழுதுவது வழக்கம். அதே இதழ்களில் திரு.கலைக்கோவன் அவர்களின் கட்டுரைகளும் வெளிவரும். எனது கட்டுரைகளைப் படித்துப் பாராட்டுவார். இன்னும் நிறைய எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்துவார். தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் அப்போது மாதந்தோறும் சொற்பொழிவுகள் நடக்கும். ஒரு முறை அந்தப் பொழிவுத் தொடரில் ‘வரலாறு காட்டும் திருக்கோயில் திருப்பணிகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். பின்னர் டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் இயங்கிய மருத்துவமனை வளாகத்திலும் பல அறிஞர்கள் சொற்பொழிவாற்றியுள்ளனர். 7.09.1991 அன்று ‘கை நழுவிய கச்சத்தீவு’ என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் புலவர் செ.இராசு அவர்கள் உரையாற்றினார்கள். அந்நிகழ்ச்சிக்கு நான் தலைமை தாங்கினேன். ![]() மைய சொற்பொழிவு அழைப்பிதழ் 1984ல் தஞ்சையில் பதிவு அலுவலராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது டாக்டரும் மைய ஆய்வாளர்களும் பழையாறையில் உள்ள பள்ளிப்படைக் கோயிலை ஆய்வு செய்யச் சென்றபோது நானும் உடன்செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த ஆய்வுப் பயணம் அனைவருக்குமே பயனுடைய பயணமாய் அமைந்தது. திருச்சி வானொலி நிலையத்தாருக்காக தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் பற்றி மைய ஆய்வாளர்களால் ‘உரைச்சித்திரம்’ தயாரிக்கப்பட்ட பொழுது நானும் உடனிருந்து விவாதங்களில் பங்குபெற்றதும் நினைவில் உள்ளது. அதே வானொலியில் ‘கோயில்கள் வளர்த்த கலைகள்’ என்கிற தலைப்பில் அறிஞர்களில் தொடர் உரைகள் ஒலிபரப்பப்பட்டபோது ‘இசைக்கலை’ பற்றிய உரையை நான் தயாரித்தளித்தேன். என்னுடைய உரையை டாக்டர். கலைக்கோவன் செம்மைப்படுத்தித் தந்து உதவினார். எனது இந்த இசைக்கலை உரையின் சிறப்பைத் தனது எழில் கொஞ்சும் எறும்பியூர் என்ற நூலில் (பக்கம்-9) குறிப்பிட்டுள்ளார். ஆய்வு மையம் வெளியிடும் ‘வரலாறு’ இதழ் 8ல் (1988)ல் நான் ஆய்வு மேற்கொண்டு எழுதிய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ‘சிலட்டூர் பொன்னம்பலநாத சுவாமி திருக்கோயில்’ பற்றிய கட்டுரை வெளியானது. 1990ஆம் ஆண்டு முதல் திருச்சியில் தொல்லியல் துறை பதிவு அலுவலராகப் பணியாற்றினேன். அக்காலத்தில் திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களம் என்ற பாடல் பெற்ற கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் குறித்த கட்டுரைகளை திரு. கலைக்கோவன் அவர்களுடன் இணைந்து அக்கோயில் கும்பாபிஷேக மலரில் வெளியிட்டோம். 1990-91 ஆண்டுகளில் திருவெறும்பூருக்கு அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலை ஆய்வு செய்து கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டன. டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் இணைந்து இக்கோயிலில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் S.R.C. மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவிகளால் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. அக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வு மையத்தில் ஒரு சொற்பொழிவாற்றினேன். அந்நிகழ்ச்சிக்கு கல்வெட்டறிஞர் திரு.எ.சுப்பராயுலு அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்கள். தற்பொழுது சோழமாதேவி திருக்கோயில் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. டாக்டர் இரா.கலைக்கோவனின் உரையாற்றலும் எழுத்தாற்றலும் சிறப்பானவை. அது அவருக்கு இறைவன் அளித்த கொடை எனலாம். சந்தேகம் என்று வந்தால் அதனைக் குறித்து தயக்கமின்றி அவரிடம் உரையாடலாம். அதைப்போலவே ஆய்வில் தவறுகள் இருப்பதாகக் கருதினால் சுட்டிக்காட்டுவதில் தயக்கம் இல்லாதவர். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தமது தந்தையாரின் பெயரால் அவர் நடத்தி வரும் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் தொய்வுறாமல் தமிழக வரலாற்றுக்கு அரிய பெரிய தொண்டாற்றி வருகிறதெனில் மிகையில்லை. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |