![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 119
![]() இதழ் 119 [ மே 2015 ] டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார் பெயரில் அவர் மகன் கண் மருத்துவர் இரா. கலைக்கோவனால் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்.
![]() டாக்டர் மா.இராசமாணிக்கனார் தோற்றம்: 1982 முகவரி : சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. இயக்குநர் : முனைவர் இரா. கலைக்கோவன் மதிப்புறு இணை இயக்குநர் : முனைவர் மு. நளினி மதிப்புறு உதவி இயக்குநர் : முனைவர் அர. அகிலா மையத்தின் ஆண்டு ஆய்விதழ் : வரலாறு நோக்கம் 1. பதிவு செய்யப்படாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்தல். 2. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றை முழுமையுற உருவாக்கல். 3. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய தரவுகளை வழங்கும் ஆண்டு ஆய்விதழ் வெளியிடல். 4. களஆய்வில் நம்பிக்கையுடைய இளம் ஆய்வாளர்களை வழிநடத்தல். 5. உலகளாவிய தமிழர்களுக்கு இலக்கியம், வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆய்வு நோக்கையும் விதைத்தல். 6. கோயில்கள் வரலாற்றுக் களங்கள் என்பதால் அது குறித்த விழிப்புணர்வைச் சமுதாயத்தில் பரவச் செய்தல். ![]() தொடக்கக் காலப் பணிகள்: 1. 1982-85இல் செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், மெய்கண்டார், மாலைமுரசு, திருக்கோயில், தினமணி முதலிய இதழ்களில் பல்வேறு கோயில்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள். 2. சோழன் கோச்செங்கணான் பற்றியும் அவரால் எழுப்பப்பட்ட மாடக்கோயில்கள் குறித்தும் விரிவான ஆய்வு. 3. நாட்டிய சாத்திரம் பேசும் ஆடல் கரணங்கள் குறித்த களஆய்வுகள், கட்டுரைகள். 4. 1985இல் இருந்து ஆய்வு மாணவர்கள் இணைவு. முள்ளிக்கரும்பூர், அழுந்தூர் முதலிய புதிய வரலாற்றுக் களங்கள் அறிமுகம். பழங்கோயில்கள் விரிவான கல்வெட்டு, கலை ஆய்வுகளுக்கு உட்படல். 5. முதல் ஆய்வு நூல் 1985இல்கலை வளர்த்த திருக்கோயில்கள் என்ற தலைப்பில் கழக வெளியீடாக மலர்ந்து தமிழ்நாட்டரசின் முதல் பரிசைப் பெற்றது. 6. 1985-87க்கு இடைப்பட்ட காலத்தில் காட்டுக்குள் ஒரு கலைக்கோயில் (தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசு), சுவடழிந்த கோயில்கள் (தமிழ்நாட்டரசின் பரிசு), எழில் கொஞ்சும் எறும்பியூர் ஆகிய மூன்று ஆய்வு நூல்கள் வெளியாயின. 7. 1989இல் பழுவேட்டரையர்கள் பற்றிய முழுமையான ஆய்வுநூலாகப் பழுவூர்ப் புதையல்கள் கழக வெளியீடாகப் பதிவானது. 8. 1991இல் கோயிற்கலைகளில் பட்டயக் கல்வி வகுப்புகள் தொடக்கம். 9. கோயில்களை எப்படி, ஏன் காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கத் திருச்சிராப்பள்ளி வானொலியில் 12 வாரங்கள் கோயில்களை நோக்கி என்ற தலைப்பில் விழிப்புணர்வுத் தொடர். உரைச்சித்திரங்கள், பேருரைகள் வடிவில் கோயிற் கலைகள், கல்வெட்டுச் செய்திகள் தொடர்ந்து ஒலிபரப்பு. 10. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் பல புதிய உண்மைகள் வெளிப்படுத்தப் பட்டன. பல தவறான செய்திகள் சான்றுகளுடன் மறுக்கப்பட்டன. இவை தொடர்பான ஆய்வுக்கட்டுரை பாரதியார் பல்கலைக்கழகம் நிகழ்த்திய வரலாற்றாசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சியின் நிறைவுரையாக வழங்கப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறை நிகழ்த்திய கருத்தரங்கிலும் இவை குறித்த ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றது. 11. தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் பேராசிரியர் எ. சுப்பராயலுவுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் 1991இல் தோற்றுவிக்கப்பட்டது. அதன் சார்பில் வெளியான ஆவணம் முதல் இரண்டு இதழ்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் வெளியிடப்பட்டன. ![]() 1992-2002க்கு இடைப்பட்ட காலப் பணிகள் 1. பழுவேட்டரையர்கள் பற்றிய ஆய்வு அவர்தம் கலைப் படைப்புகளையும் விரிவான அளவில் பெற்றுப் பழுவூர் அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தலைப்பில் நூலாக வெளிப்பட்டது. 2. கல்வெட்டுகள், சிற்பங்கள், இலக்கியங்கள் வழங்கும் தரவுகள் கொண்டு சோழர் கால ஆடற்கலை ஆய்வு நிறைவு. அது குறித்த நூல் தமிழ்நாட்டரசின் பரிசு பெற்றது. 3. 1993இல் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் ஆய்விதழாக வரலாறு அறிமுகம். 4. களப்பிரர் காலமாகவும் இருண்ட காலமாகவும் அடையாளப்படும் பொதுக்காலம் 300க்கும் 600க்கும் இடைப்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றைக் கல்வெட்டு, இலக்கியம், தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கல். 5. பல்லவர், சோழர் காலக் கட்டடக்கலை, சிற்பக்கலை பற்றிய விரிவான ஆய்வுகள். இலங்கை கலாச்சாரத் திணைக்களப் பன்னாட்டுக் கருத்தரங்கில் அவை குறித்த உரை. அவர்தம் வெளியீடாகக் கட்டுரைகள். 6. மாமல்லபுரம் தருமராஜரதம் குறித்த முழுமையான ஆய்வுநூலாக அத்யந்தகாமம் வெளியிடல். 7. திருமுறைகளில் ஆடற்கலை தொடர்பான புதிய ஆய்வுகள். உலக சைவ மாநாட்டில் கட்டுரைகள். 8. தமிழ்நாட்டுக் கோயில்களில் 1982-2002க்கு இடைப்பட்ட 20 ஆண்டுக் காலத்தில் ஏறத்தாழ 600 புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதுடன், ஏற்கனவே பிறரால் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகளின் விட்டுப்போன தொடர்ச்சிகள் அறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. 9. சுருக்கங்கள் மட்டுமே வெளியாகிப் பாடங்கள் வெளிவராத பல தமிழ்நாட்டுக் கோயில்களின் கல்வெட்டுகள் ‘பதிப்பிக்கப்படாத பாடங்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன. 2003-2015க்கு இடைப்பட்ட காலப் பணிகள் 1. தமிழ்நாட்டிலுள்ள 105 குடைவரைகளிலும் முறையான களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மகேந்திரர் குடைவரைகள், தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், மதுரை மாவட்டக் குடைவரைகள், தென்மாவட்டக் குடைவரைகள், புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், மாமல்லபுரம் குடைவரைகள், பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள் எனும் ஏழு விரிவான ஆய்வுத் தொகுதிகள் வெளியிடல். இதன் வழிப் புதிய சிற்பத்தொகுதிகள், கல்வெட்டுகள், கருத்துருக்கள் வெளிப்படல். 2. 60க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்கள் முழுமையான அளவில் ஆய்வு செய்யப்பட்டு ஆய்வேடுகள் உருவாக்கம். அவற்றுள் சில நூல்களாகவும் வெளியாகியுள்ளன. 3. தமிழ்நாட்டுக் கோயில்களில் இக்காலகட்டக் களப்பணிகளின் போது மேலும் 400 புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதுடன், ஏற்கனவே பிறரால் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகளின் விட்டுப்போன தொடர்ச்சிகள் அறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. 4. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றைத் தொகுக்கும் பணியின் ஒருபடியாகக் காவிரிக் கரையோரக் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஆடற்கலை, வார்ப்புக்கலை, கல்வெட்டுகள் குறித்த விரிவான ஆய்வுகள். 5. கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு பொ. கா. 600க்கும் 1300க்கும் இடைப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்ட வரலாறு உருவாக்கம். 6. வரலாறு ஆய்விதழின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ஆய்வு மையம் கண்டறிந்த புதிய கல்வெட்டுப் பாடங்களின் முதற் தொகுதி தயாரிப்பு. 7. வரலாற்று நோக்குடைய கணினி, பொறியியல் இளைஞர்களின் மேலாண்மையில் வரலாறு டாட் காம் திங்கள் மின்னிதழ் உருவாகி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகள் இணைய தளத்தில் உள்ளமை. 8. தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் தோற்றம், வளர்ச்சி, கொடுக்கல், வாங்கல் பற்றிய புரிதல்களுக்காக இந்திய, கீழ்த்திசை நாட்டுக் கலைப் படைப்புகள் பற்றிய களஆய்வு. 9. வரலாற்றுச் சிறப்புடைய சிலரின் ஆளுமை ஆய்வுகள் (மகேந்திரர், அப்பர்). எதிர்கால நோக்குகள் 1. தமிழ்நாட்டுக் கலைவரலாற்றை முழுமை செய்தல். 2. ஆய்வு மையத்தால் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளின் இரண்டாம் தொகுதி வெளியிடல். 3. இந்தியப் பார்வையில் தமிழ்நாட்டுக் குடைவரைகள் பற்றிய தெளிவான சிந்தனைகளை நூலாகப் பதிவுசெய்தல். 4. பதிப்பிக்கப்படாமல் இருக்கும் மையத்தின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக்கல். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |