![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 119
![]() இதழ் 119 [ மே 2015 ] டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அது ஒரு பொன்மாலைப் பொழுது. ஆம். டாக்டர் இரா.கலைக்கோவனை முதன்முதலாகச் சந்திக்கப் பெற்ற பொன்மாலைப் பொழுது. டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தில் நானும் இணைந்த தோர் மாலைப் பொழுது. நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் எனும் பாரதிதாசனின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் உன்னதமானதோர் ஆய்வுக் குடும்பமெனும் பல்கலையில் நானும் ஓர் அங்கமானேன். இன்று அந்த மாலைப் பொழுதையும் ஆய்வுக் குடும்பத்தில் இணைய நேர்ந்த சூழலையும் மீண்டும் நினைக்கையில் என்ன பேறு பெற்றேன் அன்று! என்று பூரிக்கிறேன். நதி கடலில் சங்கமித்துவிட்டதைப் போன்றதொரு எண்ணம் அன்றும் இன்றும் ஏற்படுகிறது. அறிமுக நாட்கள் முதன்முதலில் இந்து சமய அறநிலையத்துறை வெளியீடான ‘திருக்கோயில்’ மாத இதழில் படித்த கட்டுரைகளின் வழிதான் டாக்டர் இரா.கலைக்கோவன் எனும் பெயர் அறிமுகமானது. டாக்டர் மா.இராசமாணிக்கனார் - திருமதி.கண்ணம்மாள் ஆகிய இணையரின் புதல்வர் அவர் என்றறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டன. அப்போது நான் பணிபுரிந்த முத்துப்பேட்டை கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கான நூல்கள் வாங்கவும் மாணவியருக்கான பரிசு நூல்கள் வாங்கவும் கும்பகோணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அங்கே திரு.கலைக்கோவன் அவர்களின் வரலாற்றாய்வு நூல்கள் நிறைந்திருப்பதைக் காணப் பெற்றேன். அந்தப் பெயர் மீண்டும் மனதில் பதிந்தது. திருச்சிராப்பள்ளி சென்றிருந்தபோது மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புத்தூருக்குச் செல்லும்போது ஜன்னல் வழியாக வெளிக்காட்சிகளை பார்த்துக்கொண்டே வருகையில் ‘டாக்டர் இரா.கலைக்கோவன்’ என்று அவர் செயல்படும் மருத்துவ மையத்தின் அறிவிப்புப் பலகை தற்செயலாகக் கண்ணில் பட்டது. அட! இங்குதார் இருக்கிறாரா இவர் என்று அந்த இடமும் மனதில் பதிவானது. ![]() கள ஆய்வில் மைய மாணவர்கள் மையத்துடன் இணைந்த நாட்கள் ஒரு ஜனவரி மாதத்தின் கடைசி வாரம். செய்தித்தாள்களில் ‘டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கோயிற்கலை வகுப்பு துவக்க விழா’ எனும் நிகழ்ச்சி பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. உடனே அதில் கண்ட முகவரிக்குக் கடிதம் எழுதினேன். மறுநாளே பிப்ரவரி முதல் வார இறுதி நாளில் நேரில் வரச்சொல்லி அறிவுறுத்திய கடிதம் கிடைக்கப் பெற்றேன். மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. குறிப்பிட்ட தேதியில் திருச்சிக்குச் சென்று மையத்தை அடைத்தேன். வாயிலில் வரவேற்றவரிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு ‘கலைக்கோவனை’ கண்களால் தேடினேன். வரவேற்ற நண்பரைத் தவிர வேறு எவரும் தென்படவில்லையாதலால் அவரையே விசாரித்தேன். இறுதியில் அவர்தான் டாக்டர் கலைக்கோவன் என்றறிந்தேன். பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. அவரது எளிமை என்னை வியப்புறச் செய்தது. வகுப்பு அன்று துவங்க வேண்டுமாதலால் வகுப்பிற்கான இருக்கை தயாரிப்பு, வருகை புரிந்தோரை கவனித்தல் என்று சுறுசுறுப்பாக தானே முன்னின்று அனைத்து பணிகளையும் கவனித்துக் கொண்டிருந்தார். அன்று முதல் மையத்தில் கோயிற்கலை வகுப்புக்கள் துவங்கின. அகவை அப்போது ஐம்பதைக் கடந்திருந்தாலும் மனதளவில் இளமையானவளாக சோர்வில்லாதவளாக ஆர்வத்துடனே செயல்பட்டேன். ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் சுமார் 150 கி.மீ. பயணம் செய்து சிராப்பள்ளியை அடைய வேண்டியிருந்த து. ஆனால் தவறாமல் வகுப்புக்கு வருகை தந்து கோயிற்கலை கற்பதில் உறுதியாக இருந்தேன். உள்ளத்தில் உறுதியும் ஆர்வமும் இருந்ததனால் உடல் தளர்வடையவில்லை. கோயில்களுடன் இணைந்த நாட்கள் நான் இசையாசிரியையாகப் பணிபுரிந்த மகளிர் கல்லூரி அமைந்துள்ள கோவிலூர் திருவுச்சாத்தனம் என்கிற பெயரில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற பதியாகும். அந்தப் பதியிலேயே வாழிடமும் அமைந்த து என் பெரும் பேறே. அங்கு பணிபுரிந்த முப்பத்து மூன்று ஆண்டுகளும் நாள்தோறும் திருக்கோயிலுக்குச் செல்வேன். திருச்சுற்றில் வலம் வருவேன். இறைவனை வணங்கி விடைபெற்றுவிட்டு நேரே திரும்பி விடுவேன். மற்ற எதிலும் என் பார்வை செல்லாது. ஆனால் கோயிற்கலை வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கிய பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக என் கண்ணோட்டத்தில் மாற்றங்கள் எற்படத் துவங்கின. அங்குள்ள கல்வெட்டுக்களும் கட்டுமானங்களும் பார்வையில் படத்துவங்கின. திருவுச்சாத்தனம் திருக்கோயிலே என் ஆய்வுப் பயிற்சிக் களமாயிற்று. தட்டுத் தடுமாறி முயன்று பயின்றேன். பார்வையில் பட்ட அனைத்தையும் கோயிற்கலை வகுப்புகளில் கற்ற பாடத்தின் வழி ஆய்விற்குட்படுத்த முயன்றேன். பார்வை நோக்கானது. நோக்கம் சீரானது. பயிற்சி தொடர்ந்தது. பாடம் புரிந்தது. மையத்திற்கும் மைய ஆய்வாளர்களுக்கும் எனக்குமிடையேயான உறவு காலம் செல்லச் செல்லக் கனிந்துகொண்டே வந்தது. வாரந்தோறும் வகுப்புகள், மாதந்தோறும் பல்துறை சார்ந்த சான்றோரின் சொற்பொழிவுகள், களப்பயணங்கள், கருத்தரங்குகள் என்று மையத்துடன் இணைந்த என் கலைப்பயணம் முன்னேறிச் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே கோயிற்கலை வகுப்புக்களின் ஒரு பகுதியாக அங்கு பயின்ற அத்தனை மாணவர்களும் தத்தம் ஆய்விற்கென்று ஒவ்வொரு கோயிலை எடுத்துக் கொள்வது என்று முடிவானது. மாணவர்களின் வசதிக்காக சிராப்பள்ளியின் அருகாமையில் அமைந்திருந்த கோயில்களே எடுத்துக்கொள்ளப்பட்டன. எனக்கு உய்யக்கொண்டான் திருமலையில் அமைந்திருந்த உஜ்ஜீவநாதர் கோயில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் என்னால் தொலைவு காரணமாக அடிக்கடி ஆய்வுப்பயணம் மேற்கொள்ள முடியாதாகையால் மைய இயக்குனரின் அனுமதியுடன் திருவுச்சாத்தனம் திருக்கோயிலையே ஆய்வுக்களமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஆய்வுப்பாதை காட்டிய திருவுச்சாத்தனம் திருக்கோயில் கோயிற்கலை வகுப்புக்களில் சேர்வதற்குச் சில காலங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கில் ‘சீருடைச் சேடர் வாழ் திருவுச்சாத்தனமே’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியிருக்கிறேன். அந்த உரை திருக்கோயில் தலவரலாறு மற்றும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் வெளியீடான திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டுக்கள் எனும் நூல் ஆகிய இரு புத்தகங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. கோயில் சார்ந்த வரலாற்றுப் பார்வை அப்போது சிறிதும் இல்லை. கோயிற்கலை வகுப்புப் பயிற்சியின் திறனால் நாளடைவில் துணிவு பெற்றேன். சாதாரணப் பார்வை நோக்காக மாறியது. கோயில் வளாகத்தினுள் பார்வையில் பட்ட அனைத்தும் ஆய்விற்குட்பட்டன. நல்லோர் கட்டுரை உருவானது. அக்கட்டுரை அன்றிலிருந்து இன்றுவரை திருவுச்சாத்தனம் திருக்கோயிலை ஆய்வு செய்ய முனையும் இளங்கலை, முதுகலை, முதுமுனைவர் மற்றும் முனைவர் பட்டய மாணவற்க்கு உதவுவதைக் கண்டு ஈன்ற பொழுதிற் பெரிதுவந்து மகிழ்கிறேன். ஆய்வுப்பாதையும் ஆய்வு மையமும் வரலாற்று மையம் உருவாக்கிய முனைவர்கள் என்று அகிலா, நளினி, வேணி, கீதா, சுமிதா என்று பலரையும் சுட்டலாம். அந்தப் பணி கோகுல், சீதாராமன் என்று இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ‘உதார சரிதானாம் து வஸுதைவ குடும்பகம்’ - பரந்து விரிந்த சிந்தனையுள்ள பண்பாளர்களுக்கு உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் என்ற ஆன்றோர் வாக்கினை மெய்ப்படுத்துமாறு கணிணிப் பின்புலமுள்ள இளைஞர்களுடன் இணைந்து வரலாற்று மையம் வரலாறு டாட் காம் இணைய மின்னிதழ் வழியே உலகளாவிய அரவணைப்பைப் பெற்றுள்ளது. அழுந்தோறும் எடுத்து அரவணைக்கும் அன்னையாய் அறிவூட்ட முன்வரும் தந்தையாய் உயர் கல்வி நல்கும் நல்லாசிரியனாய் எங்கிருந்தோ வந்து யாதுமாகி நின்ற வரலாற்று மையத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர், உடன் நின்று உதவும் முனைவர்கள் நளினி-அகிலா மற்றும் அதனைக் கைப்பற்றி அரவணைக்கும் அன்புக் கரங்கள் ஆகிய அனைத்தும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நல்வாழ்வு பெற்று வாழ்க என்று இறையருளை நாடி வாழ்த்தி வணங்கி அமைகிறேன். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |