http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 148

இதழ் 148
[ மார்ச் 2020 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்புரம் எரித்தவர்
உடையாளூர் உண்மைகள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 1
உறையூர்த் தான்தோன்றீசுவரம் கல்வெட்டுகள்
மதுரை சோமு – காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
இதழ் எண். 148 > கலையும் ஆய்வும்
உறையூர்த் தான்தோன்றீசுவரம் கல்வெட்டுகள்
மு.நளினி, அர.அகிலா
சிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களுள் ஒன்றான உறையூரில் மூன்று பழங்கோயில்கள் உள்ளன. உறையூரின் வடபகுதியில் சம்பந்தரால் பாடப்பெற்ற திருமுக்கீசுவரமும்1 மேற்கில் திருமங்கையாழ்வாரால் குறிக்கப்பெற்ற நாச்சியார் கோயிலும்2 கிழக்கில் பொ. கா. 9ஆம் நூற்றாண்டுத் திருப்பணியான தான்தோன்றீசுவரமும்3 அமைந் துள்ளன. இம்மூன்றுமே இன்று வளமான நிலையில் வழிபாட்டிலுள்ளன.

உறையூர்ச் சாலைவீதியில் உள்ளடங்கி நிற்கும் தான்தோன்றீசுவரர் கோயிலின் கருவறை, முகமண்டபம் ஆகியவற்றின் புற, அகச்சுவர்களில் பல கல்வெட்டுச் சிதறல்கள் உள்ளன. 1972 - 73ஆம் ஆண்டு இந்தியக் கல்வெட் டறிக்கையில் இங்கிருந்து படியெடுக்கப்பட்ட 16 கல்வெட்டுகளின் சுருக்கம் வெளியாகியுள்ளது.4 அவற்றின் பாடங்களைப் படித்தறிய முயன்றபோது பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டு புதிதாகக் கண்டறியப்பட்டன. 5

அவற்றுள், முற்பாண்டிய மன்னரான வரகுணமகாராஜரின் கொடை சுட்டும் கல்வெட்டு முகமண்டப வாயில்நிலைகளிலும் கொடும்பாளூர் வேளிரான மறவம் பூதியின் தேவி அனந்தஞ் சந்திரமதியின் பொற்கொடை சுட்டும் கல்வெட்டு முகமண்டபத் தென்புறச் சுவரிலும் பதிவாகியுள்ளன. ஆங்காங்கே சிதைந்துள்ள முதல் கல்வெட்டில் தரப்பட்டுள்ள வரகுண மகாராஜரின் ஆட்சியாண்டு தொடர்பான வானியல் குறிப்புகள் அம்மன்னரை இரண்டாம் வரகுணராக அடையாளப்படுத்தத் துணைநிற்பதால் இக்கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது. 6



கொடும்பாளூர் அரசமரபின் தான்தோன்றீசுவரத் தொடர்பினை வெளிப்படுத்தும் இரண்டாம் கல்வெட்டின் இறுதிவரிகள் சிதைந்துள்ளன. கல்வெட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள முதலாம் ஆதித்தருடையதாகக் கொள்ளத்தக்க இராஜகேசரிவர்மரின் 18ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இப்பகுதியிலிருந்த ஏகாதசருத்ரப் பெருமக்களைக் குறிக்கிறது.7

இக்கோயிலில் முதல் பராந்தகராகக் கொள்ளத்தக்க பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் மூன்றும் ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் கண்டராதித்தராகக் கொள்ளத்தக்க இராஜகேசரிவர்மரின் ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் முதல் இராஜராஜரின் ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் முதல் இராஜேந்திரரின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் மன்னர் பெயர், ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் களஆய்வின்போது படித்துப் படியெடுக்கப்பட்டன. அவற்றுடன், முதல் இராஜேந்திரர் மெய்க்கீர்த்தி உரைக்கும் துண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் இரண்டாம் குலோத்துங்கர் மெய்க்கீர்த்தி பேசும் துண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் இங்குள்ளன. இவை எவற்றுடனும் இணைக்க முடியாத நிலையில் நிலவிற்பனை பேசும் துண்டுக் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.

பரகேசரிவர்மரின் கல்வெட்டுகள்

முகமண்டப வடநிலையில் 28 வரிகளும் தென்நிலையில் 41 வரிகளும் கொண்டுள்ள பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சி யாண்டுக்குரியதாகக் கொள்ளத்தக்க சிதைந்த கல்வெட்டு, வரகுணமகாராஜன் தம் 13ஆம் ஆட்சியாண்டில் தனுஞாயிற்று வியாழக்கிழமை மூலமீன் முதலாக இருந்த ஞான்று (பொ. கா. 875 டிசம்பர் 1) நந்திவர்ம மங்கலத்திலுள்ள திருத்தான்தோன்றிப் பெருமானடிகள் திருமுன் நாளும் விளக்குகளேற்ற அண்டநாட்டு வேளானிடம் 120 நல்பழங்காசுகளை வழங்கியதாகவும் அதைப் பெற்றுக்கொண்ட நந்திவர்ம மங்கலத்துப் பெருங்குறி மகாசபை உறுப்பினர்கள், அதை முதலாகக் கொண்டு அதன் வட்டியால் அவ்வறத்தை நிறைவேற்றினர் என்றும் கூறுவதுடன், இவ்வட்டியைத் 'திருவிளக்குப் பலிசை' என்று சிறப்புச் செய்கிறது.



இவ்அறக்கட்டளைக்குக் கோயில் நிருவாகம் பொறுப்பேற்றபோது அதைத் தொடர்ந்து நடத்த ஏதுவாகத் திருக்கோயில், குளம், நந்தவனம் இடம்பெற்றிருந்த ஒரு வேலியும் பெருமாளுக்கு அகமனையாக அளிக்கப்பட்டிருந்த ஒரு வேலியுமாக இரண்டு வேலி நிலம் நீக்கிய எஞ்சிய நிலப்பகுதியையும் (இந்நிலப்பகுதி நந்திவர்ம மங்கலத்தின் ஒரு பகுதியாகலாம்) நந்திவர்ம மங்கலப் பிடாகையான வரகூரையும் சபையாரிடம் விலைக்குப் பெற்றது. இவ்விற்பனை சோழஅரசர் பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டின்போது நிகழ்ந்தது.

வரகுணர் அளித்த 120 காசு வழிக் கிடைத்த வட்டியில் விளக்கேற்றிய செலவு போக எஞ்சியிருந்த தொகையில், விற்பனைக்குட்பட்ட நிலத்திற்கான அவ்வாண்டு வரியை நேர் செய்த சபை, எஞ்சிய வட்டி, மன்னர் அளித்த 120 காசு, வரகூரை ஒற்றிக்கு எடுத்திருந்தவரிடம் பெற்ற பொன் 15 கழஞ்சு ஆகியவற்றை ஒன்றிணைத்து மூன்று கூறாக்கி, இரண்டு கூறுகளை நிலத்திற்கான விலைத்தொகையாகவும் ஒருகூறினை இறைக்காவலாகவும் கொண்டது. மென்செய், புன்செய், குளம், குளவாய், புற்று, தெற்றி, ஊர் நத்தம் என அனைத்தும் உட்பட்ட நிலத்தொகுதியாக வரகூர் கோயிலுக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்விலையாவணத்தை நந்திவர்ம மங்கல சபை பணிக்க சபை மத்யஸ்தன் எழுதியுள்ளார். 8

பொ. கா. 600லிருந்து 900வரை தென்தமிழகத்தை ஆண்ட முற்பாண்டியர் களில் வரகுணன் என்ற பெயருடன் இருவர் இருந்துள்ளனர். ஒருவர் இரண்டாம் இராஜசிம்மரின் மகன் (பொ. கா. 792 - 835), மற்றொருவர் சீமாற சீவல்லபன் மகன் (பொ. கா. 862 - 895). இக்கல்வெட்டிலுள்ள வானவியல் குறிப்புகள் பொ. கா. 875 ஆம் ஆண்டைக் குறிப்பதால்9 இதில் இடம்பெற்றுள்ள கோமாறஞ்சடையரான பாண்டியாதிபதி வரகுணமகாராஜர் இரண்டாம் வரகுணர் என்பது தெளிவு. இதே காலக்கட்டத்தில் அண்டநாட்டு வேளான் வழி இம்மன்னர் செய்த கொடைகளைச் சிராப்பள்ளி மலைக்கோட்டை மேல்குடைவரைக் கல்வெட்டும் திருவெள்ளறைத் திருவானைக்கா பெருமானடிகள் கோயில் கல்வெட்டும் திருத்தவத்துறைப் பெருமானடிகள் கோயில் கல்வெட்டும் பகிர்ந்துகொள்கின்றன. 10

பரகேசரிவர்மரின் மற்றொரு நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, குறுநாகநாட்டு பிரமதேயமான வலிவதமங்கலத்து நக்கச்சிங்கன் கோவிந்தன் பிராமணி கடம்பதேவி, நந்திவர்ம மங்கலத்து இறைவன் உச்சம்போது உணவருந்துகையில் வேதம் வல்ல பிராமணருக்கு உணவு வழங்கச் செய்த அறத்தைச் சுட்டுகிறது. கல்வெட்டின் தொடர்ச்சியின்மையால் பிற செய்திகளை அறியக்கூடவில்லை. 11

இக்கோயில் இறைவனுக்கு 38 கழஞ்சுப் பொன் கொடையளித்த தென்னவன் இளங்கோவேளார் மறவம் பூதியாரின்12 தேவியார் அனந்தஞ் சந்திரமதியார்13 அம்முதல் கெடாமல் அதன் வட்டி கொண்டு சில அறங்களை நிறைவேற்ற வகை செய்தமையைப் பரகேசரிவர்மரின் மற்றொரு நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு நாலாயிரவன் எனும் முகத்தலளவையால் அளக்கப்பட்ட ஒரு கலம் நெல் வட்டி என, 38 கழஞ்சுப் பொன்னுக்கு 38 கலம் நெல் பெறப்பட்டது. இதில் 10 கலம், கோயில் திருமஞ்சணக் குளத்தை ஆண்டுதோறும் கல்லிச் செப்பனிடவும்14 எஞ்சிய 28 கலம் சங்கராந்திகளில் இறைவனுக்கு நெய்யால் திருமுழுக்குச் செய்து திருவிளக்குகளேற்றிப் படையல் அளிக்கவும் ஒதுக்கப்பட்டது. 15

இரண்டு துண்டுகளாகக் கிடைத்துள்ள பரகேசரிவர்மரின் ஆட்சியாண்டற்ற சிதைந்த கல்வெட்டு, இக்கோயில் இறைவனுக்குப் பத்து மா நிலம் கொடையாகத் தரப்பட்டதையும் அதன் விளைவு கொண்டு தட்டழி, எக்காளம் முழங்கத் திருவிழா நடத்தப்பட்டதையும் அவ்விழாவில் இராஜாச்ரய சதுர்வேதிமங்கலத்தில் நிலப்பங்குடைய வேதம் வல்லார் தங்களை அடையாளப்படுத்தி அவரவர் திறனுக்கேற்ப வேதம் ஓதி உரிய சிறப்புகள் பெற்றதையும் கூறுகிறது.

தங்களை முன் காட்டி ஒரு வேதம் படியோதியவர்கள் அரைக்கழஞ்சுப் பொன்னும் பிரமரதமாகக் குறிக்கப்படும் சிறப்புப் பல்லக்கும் பெற, இரண்டு வேதம் படியோதியவர்கள் பல்லக்குடன் கழஞ்சுப் பொன் பெற்றனர். மூன்று வேதங்களில் வல்லமை காட்ட முன் நின்றவர்கள் அவற்றில் முரன்றிய போதும் படியோதி ஒன்றரைக் கழஞ்சுப் பொன்னும் பல்லக்கும் பெற்றனர். யக்ஞம் வல்லாரும் ஒரோ பாஷ்யத்தால் அரைக்கழஞ்சுப் பொன் பெற்றனர். பிரமவல்லாருக்கும் பல்லக்குச் சிறப்பு அளிக்கப்பட்டது. சிதைவினால் தனித் தன்மையதான இக்கல்வெட்டின் முழுத்தகவலையும் அறியக்கூடவில்லை. 16

இது ஒத்த கல்வெட்டுகள் காமரசவல்லி கார்க்கோடக ஈசுவரத்தி லிருந்தும் கோயில் தேவராயன்பேட்டை மத்சயபுரீசுவரர் கோயிலிலிருந்தும் படியெடுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.18 பரகேசரிவர்மரின் இந்நான்கு கல்வெட்டு களையும் எழுத்தமைதி அடிப்படையில் முதல் பராந்தகர் காலத்தனவாகக் கொள்ளலாம்.

இராஜராஜர், இராஜேந்திரர் கல்வெட்டுகள்

கருவறைத் தென்சுவரில் தென்திசைக்கடவுள் கோட்டத்தின் இருபுறத்துள்ள மூன்று துண்டுக் கல்வெட்டுகளுள் இரண்டு, முதல் இராஜராஜரின் திருமகள் போல எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி கொள்ள, மூன்றாம் துண்டு, இக்கோயிலுள்ள இடத்தை உறையூர்க் கூற்றத்துக் கல்பிரமதேயமான18 இராஜாச்ரய சதுர்வேதி மங்கலமெனக் குறிப்பதுடன், இறைவனைத் திருத்தான்தோன்றி மகாதேவராக முன்னிருத்துகிறது.

இக்கோயிலில் தைத்திங்களில் ஒன்பது நாள் நிகழ்ந்த சதையத் திருநாள் விழாவில், முதல் இராஜராஜர் பெயரில் இறைவனுக்கான உலாவரும் செப்புத்திருமேனியாக இங்கிருந்த இராஜராஜ விடங்கரை எழுந்தருளுவித்து அவருக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தப்பட்டது. அது போழ்து நாள்தோறும் ஒரு கல அரிசியென நான்கு நாள்கள் பெருந்திருவமுது படையலானது. இத்திருநாளுக்கு வேண்டுவனவெல்லாம் குறைவுபடாமல் நடத்தும் பொறுப்பு இவ்வூர்த் தண்டலுடைய பணிமகன் திரைமூர் உடையான் தீரன் காளி கண்காணிப்பிலும் சதுர்வேதிமங்கல சபையினர் ஆணைப்படி இக்கோயிலில் ஸ்ரீகாரிய வாரியம் செய்த இவ்வூர் இருபத்து நான்காம் சேரிக் கவுசிகனின் மேற்பார்வையிலும் அமைந்தது. 19 கல்வெட்டு முழுமையாக இல்லாமையால் விழா பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை. இக்கல்வெட்டால் இராஜாச்ரய சதுர்வேதிமங்கலத்தில் 24 சேரிகளுக்குக் குறையாமல் குடியிருப்புகள் இருந்தமை தெரியவருகிறது.

கருவறை மேற்குச்சுவரில் அம்மையப்பரின் வலமும் இடமுமாக இரு துண்டுகளாகக் காணப்படும் முதல் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியுடனுள்ள அவரது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இராஜாச்ரய சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த காச்சுவன் நக்கன் பொன்னானை உடையான் இக்கோயிலில் ஐப்பசித்திங்கள் விஷுத்திருநாளில் இறைவனுக்குத் தேன் உள்ளிட்ட பொருள்களால் முழுக்காட்டுச் செய்யவும் கறியமுது (மிளகு) உள்ளடக்கிய பெருந்திருவமுது படைக்கவும் கொடையளித்தமை கூறுகிறது.20

திருப்பதியக் கல்வெட்டு

இக்கோயிலில் திருப்பதியம் பாடியவர்க்கான வாழ்வூதியமாக ஆதித்தன் நக்கன் என்பார் அரைக்காலே அரைக்காணிச் செய் நிலத்தை 20 கழஞ்சுப் பொன்னுக்குப் பெற்றுக் கோயிலாரிடம் கொடையளித்தார். இந்நில எல்லைகளைக் குறிக்குமிடத்து இப்பகுதிக்குப் பாசனமளித்த திகைத்திறல் வாய்க்காலும் அதன் தோற்றுவாயான சங்கண்வாயும் சுட்டப்பட்டுள்ளன. கல்வெட்டின் எழுத்தமைதி இதைப் பொ. கா. 11ஆம் நூற்றாண்டுப் பொறிப்பாகக் காட்டுகிறது. 21

நிலவிற்பனை

கருவறை, முகமண்டப உட்சுவர்களில் சிதறிக் கிடக்கும் துண்டுக் கல்வெட்டுகளை ஒருங்கிணைத்தபோது நக்கன் கேசுவனும் அவர் உறவுகளான நக்கன் நீலகண்டனும் நக்கன் அத்தனும் இணைந்து தான்தோன்றிப் பரமேசுவரருக்கு ஒரு நிலத்துண்டை 24 காசுக்கு விற்றமை அறியமுடிகிறது.22 இதற்கான நிலவிலை ஆவணம் சபையில் எழுதப்பட்டுள்ளமை நோக்க, அந்நிலம் சபையால் இறையிலியாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

மெய்க்கீர்த்திக் கல்வெட்டுகள்

இரண்டாம் குலோத்துங்கரின் 'பூமன்னு பதுமம்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியின் சில தொடர்கள் மட்டும் உள்ள கல்வெட்டுத் துண்டுகள் மூன்று இங்குள்ளன. முதல் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி சுட்டும் துண்டுக் கல்வெட்டொன்றும் இங்குள்ளது. இது இதே கோயிலில் காணப்படும் மற்றொரு இராஜேந்திரரின் கல்வெட்டிலிருந்து வேறானது.





காலம்

இங்குள்ள கல்வெட்டுகளுள் காலத்தால் பழைமையான நான்கு கல்வெட்டுகளும் சுட்டும் பரகேசரிவர்மர் முதல் பராந்தகராகலாம் என்பதாலும் அவர் கல்வெட்டுகளுள் ஒன்று இரண்டாம் வரகுணரின் கொடையைக் குறிப்பதாலும் இக்கோயில் வரகுணரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக்கு முன்பே இருந்ததென்பது உறுதியாகிறது. இங்குள்ள அம்மையப்பர், வாயிற் காவலர், சண்டேசுவரர், பூதமாலைச் சிற்பங்களும் கபோதக்கூடுகளிலுள்ள கந்தருவர் முகங்களும் பொ. கா. 9ஆம் நூற்றாண்டுக் கலையமைதியில் திகழ்வதால் கோயிலின் காலத்தை 9ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

குறிப்புகள்
1. இரண்டாம் திருமுறை, ப. 551; இரா. கலைக்கோவன், கலை வளர்த்த திருக்கோயில்கள், பக். 140 - 148.
2. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், பாடல் எண் 1762; இரா. கலைக்கோவன், கலை வளர்த்த திருக்கோயில்கள், பக். 165 - 172.
3. இரா. கலைக்கோவன், ஆதித்தசோழனின் தான்தோன்றீசுவரம், தினமணி சுடர், 21. 11. 1982. Encyclopaedia of Indian Temple Architecture, p. 153.
4. ARE 1972 - 73: 352 - 367.
5. 1982இல் நிகழ்ந்த முதல் வாசிப்பின்போது உடனிருந்து உதவிய தமிழ் நாடு அரசுத் தொல்லியல் துறை நண்பர்கள் திருவாளர்கள் அ. அப்துல் மஜீது, இராதாகிருஷ்ணன், எழுத்தர் கிருஷ்ணன், உதவியாளர் நடராசன் ஆகியோர் நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்கள். தினமணி 16. 11. 1982, Indian Express 18. 11. 1982, தினமலர், மாலை முரசு 20. 11. 1982. வரகுணரைச் சுட்டும் இக்கல்வெட்டும் சில துண்டுக் கல்வெட்டுகளும் நடுவணரசின் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டு 1985-86ஆம் ஆண்டு இந்தியக் கல்வெட்டறிக்கையில் (413 - 416) பதிவாயின.
1993இல் வரலாறு ஆய்விதழ் 2ஆம் தொகுதியில் பதிப்பிக்கத் தான்தோன்றீசுவரம் கல்வெட்டுகள் அனைத்தும் இந்நூலாசிரியர்களுள் ஒருவரான பேராசிரியர் மு. நளினியால் மீள்படிப்புச் செய்யப்பட்ட நிலையில் பல திருத்தங்களைக் கொண்டன. வரலாறு 2, பக். 7 - 13.
6. ARE 1985 - 86, Introduction p. 2. திருத்தவத்துறை, திருவெள்ளறை, சிராப்பள்ளி மேற்குடைவரை ஆகிய கோயில்களிலுள்ள இம்மன்னரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும் மன்னரின் கொடைகள் அண்டநாட்டு வேளான் வழி வழங்கப் பட்டமையைக் குறிக்கின்றன.
7. ARE 1972 - 73: 352. மிகச் சிதைந்த நிலையில் படியெடுக்கப்பட்டுள்ள இத்துண்டுக் கல்வெட்டைக் களஆய்வில் காணக்கூடவில்லை. கல்வெட்டின் பாடத்தைத் தந்துதவிய கல்வெட்டியல் துறை நண்பர் திரு. பாலமுருகன் நன்றிக்குரியவர்.
8. இந்தியக் கல்வெட்டறிக்கையில் இக்கல்வெட்டின் பாடப் பொருள் பிழையாகத் தரப்பட்டுள்ளது. 120 பழங்காசுகளையும் அதன் வட்டியையும் பெற்றுக்கொண்ட நந்திவர்ம மங்கல மகாசபை வரகூரின் மென், புன்செய் நிலங்கள், தோப்பு ஆகியவற்றைத் தான்தோன்றீசுவரம் இறைவனுக்கு விற்றதாகவும் இவ்விற்பனை இரண்டாம் வரகுணர் முன் நிகழ்ந்ததாகவும் அது போழ்து நந்திவர்ம மங்கலம் அவர் ஆளுகையில் இருந்ததாகவும் கல்வெட்டறிக்கை கூறுவது சரியன்று. ARE 1985-86, Introduction p. 2.
9. ARE 1985 - 86, Introduction p. 2.
10. மு. நளினி, இரா. கலைக்கோவன், அ. மகேந்திரர் குடைவரைகள், ப. 185; ஆ. பல்லவர், பாண்டியர் அதியர் குடைவரைகள், பக். 128-129; இ. தவத்துறையும் கற்குடியும், ப. 79.
11. வரலாறு 2, பக். 9 - 10. ARE 1972-73: 357. கல்வெட்டறிக்கையில் கொடையாளியின் பெயர் 'சிங்கன் கோவிந்தளாமணி காடம்பரை உடையார்' என்றுள்ளது.
12. கொடும்பாளூர் வேளிரான இம்மன்னர் முதல் பராந்தகசோழரின் 2, 3ஆம் ஆட்சியாண்டுகளில் திருச்செந்துறைக் கற்றளிப் பெருமானடிகள் கோயிலுக்குக் கொடையளித்துள்ளார். அக்கோயிலை எடுப்பித்த சோழப் பேரரசர் அரிஞ்சயரின் தேவியான பூதிஆதித்த பிடாரி இவரது திருமகளாவார். அர. அகிலா, மு.நளினி, இரா. கலைக்கோவன், சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, ப. 51 – 52.
13. மறவம்பூதியாரின் மற்றொரு தேவியான நங்கை கற்றளிப் பிராட்டி திருப்பராய்த்துறை இறைவனுக்கும் பிறிதொரு தேவியான நக்கன் விக்கிரமகேசரியார் திருச்செந்துறை இறைவ னுக்கும் கொடைகள் தந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் தெரியவருகின்றன. SII 8: 581, 615.
14. கோயில், ஊர்க்குளங்களை நீர் வற்றிவிடாமல் பராமரிக்க உரிய ஒதுக்கீடுகள் செய்து நீர்வளம் போற்றிய பாங்கினைப் பல கல்வெட்டுகளில் காணமுடிகிறது. சோழர் காலத்தில் திருஎறும்பியூரில் இப்பராமரிப்பிற்காகவே மாக்குறுணி நெல் என வரியொன்று பெறப்பட்டது. அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன், எறும்பியூர் துடையூர் - சோழர் தளிகள், ப. 61.
15. வரலாறு 2, ப. 11. தான்தோன்றீசுவரம் கல்வெட்டுகள் பதிவாகியுள்ள 1972-73, 1985-86ஆம் ஆண்டுகளின் இந்தியக் கல்வெட்டறிக்கைகளில் இக்கல்வெட்டு இடம்பெறவில்லை.
16. ARE 1972-73: 353, 354. கல்வெட்டறிக்கை குறித்துள்ள மந்திரம், சாஸ்திரம் எனும் சொற்களைக் கல்வெட்டு வரிகளில் காணக்கூடவில்லை. வரலாறு 2, பக். 10 - 11. இக்கல்வெட்டு குறித்த ஐயங்களுக்கு விளக்கம் பெறத் துணைநின்ற மருத்துவர் கி. ச. தேவநாதனுக்கும் விளக்கம் தந்த திரு. மாதவாச்சாருக்கும் உள மார்ந்த நன்றி உரியது. இது குறித்து விரிவான உரையாடல் நிகழ்த்தித் தெளிவு காண உதவியவர் கல்வெட்டுத்துறை நண்பர் முனைவர் சூ. சுவாமிநாதன்.
17. SII 34: 76, 13: 250.
18. முதலாம் இராஜராஜருக்கு முற்பட்ட காலக்கட்டத்தில் தென்கரை பிரமதேயம் நந்திவர்ம மங்கலம் என்றழைக்கப்பட்ட இவ்வூர், இராஜராஜரின் 10ஆம் ஆட்சியாண்டிற்குப் பிறகு இராஜாச்ரய சதுர்வேதிமங்கலமாகப் பெயர் மாற்றம் பெறுகிறது. சோழர் கால இறுதியில் ஜகதேகவீரச் சதுர்வேதி மங்கலமாக அழைக்கப்பெறும் இவ்வூர் இவ்விரு காலக்கட்டங்களுக்கு இடைப்பட்ட சில கல்வெட்டுகளில் (ARE 1908: 463, 473, 476; 1961 - 62: 429) கல்பிரமதேயம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மு. நளினி, இரா. கலைக்கோவன், தவத்துறையும் கற்குடியும், ப. 118.
19. ARE 1972 - 73: 355, 356, 360. வரலாறு 2, பக். 11 - 12.
20. ARE 1972 - 73: 358. 'காச்சுவன் நக்கன் பொன்னானை உடையான்' என்ற கொடையாளியின் பெயரை காச்சுவன் நக்கன் பொன் கொடையளித்ததாகக் கல்வெட்டறிக்கை மாற்றிக் குறித்துள்ளது. வரலாறு 2, ப. 13.
21. ARE 1972 - 73: 361.
22. ARE 1972 - 73: 366. 1985 - 86: 414, 415, 416.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.