![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 148
![]() இதழ் 148 [ மார்ச் 2020 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
உடையாளூர். இவ்வூர் கும்பகோணத்திற்குத் தெற்கே சுமார் 6 கி.மி. தொலைவில் சிறுகிராமமாக அமைந்துள்ளது. சோழர்களின் தலைநகர்களில் ஒன்றான பழையாறை என்ற நகரினை ஒட்டி அமைந்துள்ள உடையாளுரை முடிகொண்டான் என்ற ஆறு பழையாறையிலிருந்து பிரிக்கின்றது.
சுற்றிலும் பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் சூழ, மணியோசை ஒலிக்கும் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் மற்றும் கிராமக் கோயில்களும் நிறைந்து பக்தி உணர்வைப் பரப்ப, குளங்களும், குட்டைகளும், தோப்புகளும், சுற்றி மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளும் அடங்கிய கிராமிய மணம் கமழும் கவன்மிகு கிராமமாக உடையாளுர் இன்று காட்சியளிக்கின்றது. இவ்வூரின் வடக்கில் ஊர் எல்லையில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு அருகில் சில குடியிருப்புகளும், தோப்புகளும், வயல்வெளிகளும் உள்ளன. இக்குடியிருப்பை ஒட்டி உள்ள ஒட்டன்தோப்பு என்றழைக்கப்படும் தோப்பில், ஒரு பெரிய சிவலிங்கம், பக்கப் பரிவாரத்தெய்வங்கள் ஏதுமின்றி, மேற்கூரையின்றிக் கல் கட்டடம் இன்றி வெட்டவெளியில் ஒரு பக்கம் சாய்ந்துபோன நிலையில் காட்சியளிக்கின்றது. (தற்போது இச்சிவலிங்கம் நிமிர்த்தி வைக்கப் பட்டுள்ளது.) இந்தச் சாய்ந்துகிடந்த சிவலிங்கம்தான் கடந்த 30 வருடங்களாக நாளிதழ்களிலும் அறிஞர்களின் அறிக்கைகளிலும் அவ்வப்போது வந்து வந்து போகும் செய்தியின் கருவாகக் காட்சியளிக்கின்றது. செய்தி இதுதான்....... "தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய இராஜராஜனின் சமாதிக்கோயில் கும்பகோணம் அருகே உடையாளுர் கிராமத்தில் உள்ளது. இக்கோயில் சீரிழந்து தற்போது வெறும் சிவலிங்கம் மட்டும்தான் உள்ளது. இதற்கு ஆதாரமாய் க்ல்வெட்டும் உள்ளது." சரியான சரித்திரப் பின்புலமற்ற ஆய்வாளர்கள் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரப்பிய ஆதாரமற்ற உண்மையற்ற இப்பொய்யுரைகளைக் கண்டும் கேட்டும் வரலாறு அறியாத இங்குள்ள மக்கள் சிலர் இச்செய்தியினை உண்மையென்று நினைக்கின்றனர். கல்கட்டடம் இன்றி வழிபாடின்றி மழையில் நனைந்து வெயிலில் காய்ந்த இந்தச் சாய்ந்த சிவலிங்கம்தான் நிமிர்ந்த விண்முட்ட விமானம் எழுப்பித் தஞ்சையில் படைத்திட்டுத் தரணியில் தனக்கென்று தனிப்பெயர் ஏற்படுத்திக்கொண்ட இராஜராஜனின் பள்ளிப்படை கோயிலா[சமாதிக்கோயில்]? என்ற வினாவிற்கு விடைதேடும் முயற்சியின் விளைவுதான் இக்கட்டுரை. உடையாளுரில் இராஜராஜன் சமாதி உள்ளது என்று முதன்முதலில் சொன்னவர் குடந்தையைச் சேர்ந்த திரு.சேதுராமன் என்பவர் ஆவார். 1989-ம் ஆண்டு டிசம்பர் மாத தினமணி நாளிதழில் குடந்தை திரு.சேதுராமன் "பள்ளிப்படை கோயில்கள்" என்ற தலைப்பின்கீழ் உடையாளூரில் தற்போது சாய்ந்து கிடக்கும் இச்சிவலிங்கத்தை இராஜராஜனின் சமாதிக்கோயிலில் [பள்ளிப்படை கோயில்] உள்ள கருவறைச் சிவலிங்கம் என்று அனுமானித்துத் தன் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். "கும்பகோணம் அருகே உள்ள உடையாளுர் என்னும் கிராமம் இராஜராஜனின் தீக்ஷா நாமத்தின் பெயரால் சிவபாதசேகரமங்கலம் என்றழைக்கப்பட்டது. இவ்வூரில் உள்ள குலோத்துங்க சோழனது கல்வெட்டில் [கி.பி.1112] சிவபாதசேகரமங்கலதது சிவபாதசேகரரான இராஜராஜதேவர் எழுந்தருளி நின்ற திருமாளிகை என்று குறிப்பிடப்படுகிறது. இராஜராஜன் இறந்தபிறகு அவனது பூத உடல் மீது சிவன் கோயில் கட்டினார்களோ? "எழுந்தருளிநின்ற" என்பதால் சிலையும் எடுத்துப் பூஜித்தார்களோ? [கவனிக்க?] இவ்வூரில் மாகேஸ்வர பெருந்தரிசனத்தாரகிய பாசுபதர் இருந்ததாகவும் இவ்வூர் பாசுபதரின் இருப்பிடமான மாகேஸ்வரஸ்தானம் என்றும் மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது. செய்திகளைத் தொகுத்து நோக்கினால் ராஜராஜன் உடையாளுரில் இறந்து போனான் என்று கொள்ளலாம்.(1) என்று தனது அனுமானத்தையும் தெரிவித்துள்ளார். குடந்தை சேதுராமனின் ஆய்வுக் கட்டுரைகள்-2 என்ற புத்தகத்தில் இவர் "உடையாளுர் இராஜராஜசோழன் அமரரான இடம்" என்ற கட்டுரையில் உடையாளுரில் இருக்கும் பால்குளத்து அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டை ஆதாரமாக வைத்து, "சிவபாதசேகரமங்கலத்தில்[உடையாளுரில்] எழுந்தருளி நின்ற ராஜராஜதேவரான சிவபாதசேகருக்குத் திருமாளிகை இருந்தது. இதன்முன் இருந்த பெரிய திருமண்டபம் ஜீரணித்துவிட்ட்தால் இதனைப் பிடவூர் வேளான் அரிகேசவனான கச்சிராஜன் சார்பாக ஜெயசிங்க குலகால வளநாட்டு குளமங்கல நாட்டு சாத்தமங்கலத்து புகழனிநடன் என்னும் பிடாரன்[தேவரம் ஓதுவார்] திருப்பணி செய்துவைத்தான்" (2) என்றும் தெரிவித்து, "இராஜராஜனின் நினைவாக ஒரு கோயில் கட்டி இருக்கிறார்கள். அவனது அமரத்துவத்தைக் குறிக்கும் வகையில் இராஜராஜனின் உருவச்சிலையை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். இவ்வூரில் இராஜராஜன் இறந்திருக்கவேண்டும். அவனது பூத உடல் மீது கட்டப்பட்ட சிவன் கோயிலின் திருமாளிகையில் இராஜராஜனது திருஉருவச்சிலையை வைத்து வழிபட்டு இருக்கலாம்" (3) என்று தனது அனுமானத்தையும் தெரிவித்துள்ளார். [கவனிக்க: இராஜராஜன் உடையாளுரில்தான் இறந்திருக்கவேண்டும் என்று எந்த ஆதாரமும் காட்டவில்லை. இராஜராஜனின் பூத உடல் மீது சிவன் கோயில் கட்டினார்களா? என்பதற்கும் எந்த ஆதாரமும் காட்டவில்லை. இராஜராஜன் உடையாளுரில் இறந்திருக்கவேண்டும், அவன் பூத உடல் மீது கோயில் கட்டியிருக்கவேண்டும் என்பது திரு. சேதுராமனின் அனுமானங்களே தவிர முடிவான முடிவு அல்ல.] மேலும் அக்கட்டுரையில் "இறுதியில் இவ்வூரின் வடக்கே ஒட்டத்தோப்பு என்ற புஞ்சை வயலில் சாய்ந்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கத்தின் தலைப்பகுதி பாணத்துடன் தெரிகின்றது. ஒருவேளை இவ்விடத்தில்தான் இராஜராஜனின் சமாதிக்கோயில் இருந்ததோ?" (4) என்று சந்தேகத்துடன் வினா எழுப்பியுள்ளார். இவர் தொடுத்த வினாவிற்கு ஆம், இல்லை என இரண்டு பதில்கள்தான் உண்டு. ஆம் என்றால் இராஜராஜன் சமாதிக்கோயில் இங்குதான் உள்ளது என்று மற்ற பள்ளிப்படைக்கோயிலில் உள்ளது போல் உள்ள ஆதாரங்களைக் காட்டி நிறுவவேண்டும். அப்படி ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லையென்றால் இல்லை என்ற விடைதான் வெளிப்படும். ஆனால் இவர் வினாவைத் தொடுத்துவிட்டு அதற்குரிய விடையை ஆதாரத்துடன் தேடாமல், தனது அனுமானத்தையே இதற்கு விடையாக அளித்துக் கீழ்க்கண்டவாறு தனது கட்டுரையை முடித்துள்ளார். "எது எப்படியோ இராஜராஜன் அமரரான இடம் உடையாளூர் என்பதில் அய்யமில்லை" (5) இப்படி முடிக்கப்பட்ட கட்டுரையை எப்படிச் சரியான ஆதாரமாய் எடுத்துக்கொள்ளமுடியும்? திரு. சேதுராமன் எழுப்பிய வினாவிற்கு அவர்தான் விடையளிக்கவில்லை என்றால், இவ்விடம்தான் இராஜராஜன் பள்ளிப்படை உள்ள கோயில் என்று இதுவரை எவரும் விடையளிக்கவில்லை. அதற்குரிய ஆதாரமும் காட்டப்படவில்லை. இப்படியிருக்கும்போது ஒரு வினாவினையே விடையாகக் கருதிக் கற்பனைச் செய்திகள் அவ்வப்போது உலா வந்துகொண்டிருக்கின்றன. திரு. சேதுராமனின் கூற்றான இராஜராஜன் உடையாளூரில் இறந்திருக்கலாம் என்ற அனுமானமே கண், காது, மூக்கு, வாய் என வைக்கப்பட்டு இன்று "இராஜராஜன் சமாதி இதுதான்" என்று உலா வந்துகொண்டிருக்கின்றது. திரு. சேதுராமன் எழுதியுள்ள கருத்தை ஆதாரமாய் வைத்துக்கொண்டு, ஆனந்தவிகடன் தீபாவளி மலர் 2006 மற்றும் 7.11.08 தேதிய தினத்தந்தி நாளிதழிலும் உடையாளூரில் இராஜேந்திரன் தனது தந்தையான இராஜராஜனுக்குப் பள்ளிப்படைக் கோயில் கட்டி வழிபாடு செய்து திருவலஞ்சுழி கோயிலில் தனது தந்தைக்கு முதல் தெவசமும் செய்தான். இதற்கு ஆதாரமாய் உடையாளூரிலும் திருவலஞ்சுழியிலும் கல்வெட்டு உள்ளது என்றும் சில அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். (6) இனி இராஜராஜன் பள்ளிப்படைக்கோயில் இருப்பது உண்மைதானா? திருவலஞ்சுழி கோயிலில் இராஜேந்திரன் தனது தந்தைக்கு முதல் தெவசம் நடத்தினானா? என்பது பற்றிக் கல்வெட்டுகள் துணைகொண்டு ஆராய்வோம். (வளரும்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |