http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 148

இதழ் 148
[ மார்ச் 2020 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்புரம் எரித்தவர்
உடையாளூர் உண்மைகள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 1
உறையூர்த் தான்தோன்றீசுவரம் கல்வெட்டுகள்
மதுரை சோமு – காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
இதழ் எண். 148 > கலையும் ஆய்வும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 1
பால.பத்மநாபன்
தடங்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படங்கொண் டதொர்பாம் பரையார்த்த பரமன்
இடங்கொண் டிருந்தான் றனிடை மருதீதோ.

(தேவாரம்-சம்பந்தர் 1-32-2)

பொருள்: தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில் அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன், தான் விரும்பிய இடமாகக் கொண்டு உறையும் இடைமருது இதுதானோ? (1)

தமிழகத்தில் கி.பி. 5 –ம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்த சமண, பெளத்த மதப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், சிறுத்துவிட்ட சைவ மற்றும் வைணவ சமயத்தை மீண்டும் பழைய நிலைக்குத் தழைத்தோங்கிடச் செய்யவும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றிப் பக்தியைப் பரப்பினர். இதுவே பக்தி இயக்கமாக மாறியது. இதன் தொடர்ச்சியாய்க் கி.பி. 7-ம் நூற்றாண்டில் அப்பர், சம்பந்தர் என்ற இரு நாயன்மார்களும் கி.பி. 8-ம் நூற்றாண்டில் சுந்தரர் என்ற நாயன்மாரும் தோன்றி ஊர்தோறும் சென்று சிவன்கோயில்களில் சிவபெருமானைப் போற்றிப் பாடல்கள் பாடிச் சைவசமயத்தை வளர்த்தனர்.

இதன் பயனாய் முடங்கியும் மூடியும் மறைத்தும் வைக்கப்பட்டிருந்த சைவக்கோயில்கள் எல்லாம் சிலிர்த்து எழுந்து சிறப்புப் பெற்றுச் சீர்பெற்றன. மதிமயங்கி மதம் மாறியிருந்த மன்னர் பெருமக்களும் மருள்நீங்கி மயக்கம் தெளிந்து மனம் மாறி மதம் மாறி அருள் பெற அடியவர்களை அடிகோலினர். ஏற்கனவே சார்ந்திருந்த மதத்தினரையும் வதம் செய்யத் துணிந்தனர்.

காஞ்சியிலிருந்து தொண்டைமண்டலத்தையும் சோழமண்டலத்தையும் ஆண்ட மகேந்திர பல்லவன் [கி.பி.615-630] (2) என்ற மன்னனை அப்பர் பெருமான் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். மதுரையிலிருந்து பாண்டியநாட்டை ஆண்டுவந்த கூன்பாண்டியன் என்றழைக்கப்ப்ட்ட அரிகேசரி மாறவர்மன் [கி.பி.642-690] (3) என்ற மன்னனைச் சம்பந்தர் பெருமான் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார்.

இதன் பயனாய்ச் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். பெளத்தர்கள் துரத்தப்பட்டணர். சமணப்பள்ளிகள் சில இடிக்கப்பட்டன. சைவக்கோயில்கள் போற்றப்பட்டன. ஊர்தோறும் புதிது புதிதாய்ச் சைவக்கோயில்கள் நிறைய எழுப்பப்பட்டன. நாயன்மார்கள் படைத்திட்ட பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டன.

தடை இல்லாத சைவ வைணவ வளர்ச்சி வீறு கொண்டு எழுந்து விரிவு கண்டது. அதுவரை செங்கல் தளிகளாய் இருந்த கோயில்கள் எல்லாம் என்றும் நிலைத்து நிற்க கற்றளிகளாய் மாறத்தொடங்கின.

பல்லவர்களும் பாண்டியர்களும் இப்பணியைத் தொடங்க, பின்வந்த சோழர்கள் இப்பணியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினர். கி.பி.9-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படத்தொடங்கிய சோழர்களின் வளர்ச்சி கி.பி.13-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை இருந்தது. இவர்கள் காலம் ஆலய வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் என்றே சொல்லலாம்.

ஊர்தோறும் புதிதாய்க் கோயிலை ஏற்படுத்தி, அதனையே மையப்படுத்தி, சூழ இருந்த சமுதாய மக்களின் வாழ்வினை வளப்படுத்தினர். கோயில்களில் புகுத்தப்பட்ட கலைகளை எல்லாம் விரிவுபடுத்திக் கலைகளை வளர்த்துக் கலைக்கோயில்களாக மாற்றம் செய்து காட்சிப்படுத்தினர். ஏற்கனவே அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட பாடல்கள் பெற்ற கோயில்களை எல்லாம் கற்றளியாக்கினர்.

இப்பாடல்பெற்ற கோயில்கள் பெரும்பாலும் காவிரிநதியின் இரு கரைகள் மீதும் தொடர்ச்சியாய் அமைந்திருந்ததால், இக்கோயிலகளில் மலையே இல்லாத சோழநாட்டில், சோழர்கள் விந்தை புரிந்தனர். இப்பாடல்பெற்ற கோயில்களில் சில சிறப்பு அந்தஸ்தும் பெற்றன. மன்னர்களும் அவர்தம் அரசபெண்டிர்களும் அரசு அதிகாரிகளும் இக்கோயில்களைப் பராமரிக்கவும் பூஜைக்கும் விளக்கு எரிக்கவும் நிறைய தானங்களை வழங்கினர். இவ்வாறு சிறப்புப் பெற்ற கோயில்களில் ஒன்றுதான் திருவிடைமருதூர்க் கோயில் ஆகும்.

வடக்கில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸிசைலம் என்ற தலம் "தலைமருது" என்றும் வடமொழியில் மல்லிகார்ச்சுனம் என்றும் தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர் என்ற தலம் "கடைமருது" என்றும் வடமொழியில் புடார்ச்சுனம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் இக்கோயில் அமைந்திருப்பதால், இத்தலம் "இடைமருது" [மத்தியார்ச்சுனம்] என அழைக்கப்படலாயிற்று.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து கிழக்கில் சுமார் 10 கி.மீ.தொலைவில் திருவிடைமருதூர் கோயில் அமைந்துள்ளது. புராண வரலாறு இக்கோயில் காலத்தினை மிகவும் பின்னோக்கிச் சுட்டுவதால், ஆதாரமின்மையால் இக்காலத்தினைக் கணிக்கமுடியவில்லை.

இக்கோயில் பற்றிய வரலாற்றினை ஆதாரத்துடன் தேட முற்படுகையில், இக்கோயில் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் நம்முன் தென்படுகின்றன. இக்கோயில் கல்வெட்டுகள் கி.பி.10 ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்துதான் இக்கோயில் பற்றிய வரலாற்றினைத் தெரிவிக்கின்றன. ஆனால் இலக்கியங்கள் 7-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இக்கோயில் பற்றின வரலாற்றைத் தெரிவிக்கின்றன.

இக் கோயில் பற்றி தெரிவிக்கும் இலக்கியங்கள் வருமாறு: (4)












































































































வரிசை எண் பாடலின் பெயர் ஆசிரியர் பெயர் காலம் பாடல்கள்
1 தேவாரம் அப்பர் கி.பி.7-ம் நூற்றாண்டு [5] 5 பதிகங்கள்
2 " சம்பந்தர் [6] " 6 பதிகங்கள்
3 " சுந்தரர் கி.பி.8-ம் நூற்றாண்டு [7] 1 பதிகம்
4 திருவாசகம் மாணிக்கவாசகர் கி.பி.9-ம் [8] நூற்றாண்டு 5 பாடல்கள்
5 சிவபெருமான் திருவந்தாதி பரண தேவர் [9] " 3 பாடல்கள்
6 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பட்டிணத்தடிகள் கி.பி.10 நூற்றாண்டு[10] 30 பாடல்கள் [10]
7 திருவிசைப்பா கருவூர் தேவர் கி.பி.11 நூற்றாண்டு 10 பாடல்கள்
8 பெரியபுராணம் சேக்கிழார் கி.பி.12 [11] நூற்றாண்டு 4 பாடல்கள்
9 திருப்புகழ் அருணகிரி நாதர் கி.பி.15 [12] நூற்றாண்டு
10 திருவிடைமருதூர் நொண்டி நாடகம் பாரதி அய்யங்கார் 1786-1864 [13] 30 இசைப் பாடல்கள்
11 திருவிடைமருதூர் உலா மீனாட்சி சுந்தரம் பிள்ளை கி.பி19 [14] நூற்றாண்டு 721-கண்ணிகள்
12 திருவிடைமருதூர் பதிற்றுபத்தந்தாதி சபாபதி நாவலர் " [15] 100 பாடல்கள்
13 திருவிடைமருதூர் கலம்பகம் திருஎவ்வளூர் இராமசாமி செட்டியார் "[16]
14 மருதவனப் புராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து 1384 [17] செய்யுட்கள்

கி.பி.7 ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 19 ம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ தொடர்ச்சியாய் எழுந்த இலக்கியங்கள் இக்கோயிலை சுட்டுவது இதன் பெருமையையும் புகழையும் சிறப்பையும் உணர்த்துவதாகும். இவ்வாறு தொடர்ச்சியாய் இலக்கியங்கள் பெற்ற கோயில்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே உள்ளன. அதில் திருவிடைமருதூர்க் கோயிலும் ஒன்று என்பது இதன் கூடுதல் சிறப்பை வெளிப்படுத்துவதாகும்.

மேற்கண்ட இலக்கியங்கள் பெரும்பாலும் பக்தியைப் பரப்பும் பாடல்களாய் இருந்தபோதிலும், தேவாரப்பாடல்கள் ஒருசில இக்கோயிலின் அமைவிடம், இங்கு நடக்கும் விழா, மக்களின் வழிபாட்டு முறை ஆகியவைகளைப் பற்றிச் சொல்கின்றன. இவ்விலக்கியங்களில் காலத்தால் முற்பட்ட கி.பி. 7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த அப்பர், சம்பந்தர் பாடல்கள் இக்கோயிலைப் பற்றிச் சொல்வதால் இக்கோயில் கி.பி.6-ம் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன்னரே தோன்றியிருக்கவேண்டும்.

இன்றைக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இக்கோயில் ஆரம்ப காலகட்டத்தில் செங்கல் தளியாய் இருந்திருக்க வேண்டும்.

இக்கோயில் எப்பொழுது கற்றளியாக்கப்பட்டது? கோயிலின் வளர்ச்சி, இகோயிலிலைச் சூழ இருந்த மக்களின் வாழ்க்கை ஆகியவைகளைப் பற்றி தெரிந்தகொள்ள வேண்டுமெனில் நாம் கல்வெட்டுகளை நாடித்தான் செல்லவேண்டியுள்ளது.

இக்கோயிலிருந்து மொத்தம் 151 கல்வெட்டுகள் நடுவன் அரசால் படியெடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் 30 கல்வெட்டுகள் 1895ம் வருடத்திலும்(18) பின்னர் 12 வருடங்கள் கழித்து 1907ம் வருடத்தில் 121 கல்வெட்டுகளும் படியெடுக்கப்பட்டுள்ளன(19). அவற்றின் பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதிகள் 3, 5, 13, 19 மற்றும் 23 ல் வெளிவந்துள்ளன.

இந்த 151 கல்வெட்டுகளும் இக்கோயிலின் வளர்ச்சி, சுற்றிச்சூழ உள்ள சமுதாய வாழ்க்கை, அது கோயிலோடு மையப்படுத்தியிருந்த விதம், அரசாட்சி, அரசு வரிகள், மக்களின் கொடைத்திறன், அரசு அதிகாரிகளின் அரவணைப்பு, அரண்மனைப் பெண்டிரின் ஆளுமை, சோழமன்னர்களின் சரித்திரம், கிராம சுயாட்சி, கோயில் நிர்வாகம், அதில் பிராமணர்களின் சபை மற்றும் நகரத்தாரின் அதிகாரம் மிகுந்த ஆளுமை, ஊராரின் அதிகாரம் குறைந்த செயல்கள், எரிக்கப்பட்ட நுந்தா விளக்குகள் மற்றும் சந்தி விளக்குகள், இக்கோயிலுக்கு நேரில் வருகை புரிந்த சோழ அரசர்கள், அரசிகள், பாண்டிய மன்னர்கள், உற்சவங்கள், வீதி உலாக் காட்சிகள், இக்கோயில் வளர்த்த ஆடல், பாடல் மற்றும் இசை போன்ற கலைகள், கி.பி.10-ம் நாற்றாண்டிலிருந்து கி.பி.13-ம் நூற்றாண்டு முடிய உள்ள ஊர் அமைப்பு, கோயில் அமைப்பு மற்றும் விரிவாக்கம் போன்ற பிற செய்திகளையும் பற்றி விரிவாகப் பேசி நம் கண்முன்னே படம் பிடித்துக் காட்டுகின்றன.

சோழர்கள் ஆட்சியில் விஜயாலயன் தொடங்கி மூன்றாம் இராஜேந்திரன் முடிய [கி.பி.846-1279] 24 மன்னர்கள் சோழநாட்டை இளவரசனாய், மன்னராய் ஆண்டுள்ளனர். இம்மன்னர்கள் ஒவ்வொருவரும் பரகேசரி, இராஜகேசரி என்று மாறி மாறிப் பட்டம் சூட்டிக்கொண்டனர். விஜயாலயன் பரகேசரி என்றும் இவன் மகன் ஆதித்தன் இராஜகேசரி என்றும் ஆதித்தன் மகன் முதலாம் பராந்தகன் பரகேசரி என்றும் பட்டம் சூட்டிக்கொண்டனர்.

விஜயாலயன், "தஞ்சை கொண்ட கோப்பரகேசரி" என்றும் ஆதித்தன், "தொண்டை நாடு பரவின இராஜகேசரி " என்றும் பராந்தகன், "மதிரை கொண்ட கோப்பரகேசரி" என்றும் இவனின் பேரன் இரண்டாம் பராந்தகனான சுந்தர சோழன், "மதிரை கொண்ட இராஜகேசரி" என்றும் தாம் பெற்ற வெற்றியின் சிறப்பினால் தம்மை அழைத்துக்கொண்டனர்.

பராந்தகனுக்குப்பின் ஆண்ட இவன் மகன் கண்டராதித்தன் இராஜகேசரி என்றும் இவனுக்கு பின் வந்த இவன் தம்பி அரிஞ்சயன் பரகேசரி என்றும் சுந்தர சோழனுக்குப் பின் ஆண்ட கண்டராதித்தன் மகன் உத்தம சோழன் பரகேசரி என்றும் அழைத்துக்கொண்டனர். இவனுக்குப் பின் வந்த இராஜராஜன் தான் பெற்ற வெற்றியினைத் தொடர்புபடுத்தித் தனக்கென்று "மெய்கீர்த்தி" என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டான். இதன் தொடர்ச்சியாய்ப் பின்வந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று மெய்கீர்த்திகளை அமைத்துக்கொண்டனர்.

மெய்கீர்த்திகளுடன் தொடங்கும் கல்வெட்டுகளைக் கொண்டும், தான் பெற்ற வெற்றியின் தொடர்பாகத் தொடங்கும் சிறப்புப் பட்டப் பெயரினைக் கொண்டும் ஒரு கல்வெட்டினைத் தொடர்புடைய மன்னரோடு அடையாளப்படுத்திவிடலாம். இவ்வாறு மன்னர் பெயர் தெரிந்த கல்வெட்டுகளும் பொதுப்பெயரில் அழைக்கப்பட்ட மன்னர்கள் கல்வெட்டுகளும் கீழ்க்கண்டவாறு உள்ளன.

1. பரகேசரி வர்மன் -------- - -- -- --- ---- -- -- -- -- -- --- ----- -27
2. இராஜகேசரி வர்மன் -- ---- ---- --- ----- ---- ----- ------- ---- --10
3 .பராந்தக சோழன் –கி.பி [965 - 953]-- --- ---- ---- -------30
4. உத்தமச் சோழன் -கி.பி[.970-985] - - - - - - - ---- --- 1
5 ஆதித்த கரிகாலன் கி.பி[.964-969]--- --- ---- ---- - ------- -5
6. முதலாம் இராஜராஜ சோழன் -[கி.பி.985-1014]- - --- - 5
7. முதலாம் இராஜேந்திர சோழன்[கி.பி.1012-1044]- - - 4
8. முதலாம் இராஜாதிராஜன்- -[கி.பி.1018-1054] - - - - --1
9 குலோத்துங்க சோழன் --- --- -- ----- ---- ---- -------- --- - 5
10. முதல் குலோத்துங்க சோழன் –[கி.பி.1070-1120] - -- 3
11. விக்கிரமச் சோழன் - கி.பி[.1118-1136]- -- ---- --- ------ 29
12. இரணடாம் குலோத்துங்கன்- [கி.பி.1133-1150]- ---- 2
13. மூன்றாம் குலோத்துங்கன்- [கி.பி.1178-1218] [20]-- - 4
14. திருபுவன சக்கரவர்த்திகள் இராஜராஜன் -- --- --- - - --3
15. கோனரின்மை கொண்டான் -- -- --- --- --- ---- --- -- ----- 5
16. கோப்பெருங்சிங்கன் – [கி.பி.13-ம் நூற்றாண்டின் முற்பகுதி- ---------1
17 குல சேகர பாண்டியன் -[கி.பி.1268-1318]- -[21] ------ 1
18. விக்கிரமப் பாண்டியன் - [கி.பி,1283-1296]---[22] -------1
19. விருப்பாட்ச மகாராஜா –-----14 ம் நாற்றாண்டின் பிற்பகுதி -[23] - - - -- -1
20 . அச்சுததேவராயர் - - [கி.பி.1529-1542]- [24]- - ----1
21. சதாசிவமகாராஜா –[1542-1576]-- -- [25]---- - --- --- -1
22 மனனர் பெயர் இல்லாதது - - - - - - - - - - -- - -- - 9
23 மசிப்படிகள் காணாமல் போனது - - - - - - ----- --- 2
கூடுதல் --- ---- -------- ------- 151

இக் கல்வெட்டுகளில் பரகேசரி அல்லது இராஜகேசரி என்று தொடங்கும் கல்வெட்டினைக் கொண்டு மன்னனை அடையாளப்படுத்துவது அவ்வுளவு எளிது அல்ல.

கல்வெட்டில் உள்ள எழுத்தமைதி, வாசகம், கல்வெட்டில் வரும் செயல், மனிதர்கள் பெயர், அதிகாரிகள் பெயர் மற்றும் இதர அமைப்பினைக் கொண்டு ஓரளவு எம்மன்னனுடையது என்பதை அறிந்திடலாம்.

திருவிடைமருதூர்க் கல்வெட்டுகளில் இரண்டு கோபுரங்களில் உள்ள 4 கல்வெட்டுகள் தவிர மீதியுள்ள 147 கல்வெட்டுகளும் திருப்பணி என்ற பெயரில் 1907–ல் அழிக்கப்பட்டன. இதனால் எழுத்தமைதியை நாம் காண இயலாது. எனவே கல்வெட்டில் உள்ள வாசகம் மற்றும் பொருள் கொண்டு மட்டுமே எம்மன்னனுடையது என அறியும் நிலையில் உள்ளோம். இதன் அடிப்படையில் சரியான மன்னர் பெயர் தெரியாத பொதுப்பெயரில் அழைக்கப்பட்ட மன்னர்களின் கல்வெட்டினை எவருடையது என ஒவ்வொரு கல்வெட்டுகளையும் ஆராய்வோம்.
முதலில் பரகேசரி கல்வெட்டுகளை பார்ப்போம்.

அடிக்குறிப்புகள் ....
1.பன்னிரு திருமுறை –மூலமும் உரையும் –ஜி.ச.முரளி –சதுரா பதிப்பகம் பக்கம்- 57
2.பல்லவர் வரலாறு –மா. இராசமாணிக்கனார் –பக்கம்- 90
3.தமிழ்நாட்டு வரலாறு-முதற் பகுதி-(பல்லவர் பாண்டியர் காலம்) –தமிழ் வளர்ச்சி இயக்கம் -பக்கம் -217
4.திருவிடைமருதூர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு மலர்
5.தமிழ் இலக்கிய வரலாறு- -சி.பாலசுப்பிரமணியன் –நறுமலர் பதிப்பகம் பக்கம்-115
6 தமிழ் இலக்கிய வரலாறு- -சி.பாலசுப்பிரமணியன் –நறுமலர் பதிப்பகம் பக்கம்-113
7. தமிழ் இலக்கிய வரலாறு- -சி.பாலசுப்பிரமணியன் –நறுமலர் பதிப்பகம் பக்கம்-116
8. தமிழ் இலக்கிய வரலாறு- -சி.பாலசுப்பிரமணியன் –நறுமலர் பதிப்பகம் பக்கம்-118
9.பதினொராந் திருமுறை மூலமும் உரையும்- புலவர் பி.ரா,நடராஜன் பக்கம்--486
10. பதினொராந் திருமுறை மூலமும் உரையும்- புலவர் பி.ரா,நடராஜன் பக்கம்-590
11.பெரிய புராண ஆராய்ச்சி-டாக்டர். மா. இராசமாணிக்கணார்
12. தமிழ் இலக்கிய வரலாறு- -சி.பாலசுப்பிரமணியன் –நறுமலர் பதிப்பகம் பக்கம் 204
13, திருவிடைமருதூர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு மலர்—பக்கம்-181
14. தமிழ் இலக்கிய வரலாறு- -சி.பாலசுப்பிரமணியன் –நறுமலர் பதிப்பகம் -பக்கம்-252
15. தமிழ் இலக்கிய வரலாறு- -சி.பாலசுப்பிரமணியன் –நறுமலர் பதிப்பகம் -பக்கம்-258
.16. திருவிடைமருதூர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு மலர்—பக்கம்-185
17. திருவிடைமருதூர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு மலர்—பக்கம் 25
18.ARE 1895
19.ARE 1907
20. சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகள்_ சதாசிவபண்டாரத்தார் எழுதிய "பிற்கால சோழர் சரித்திரம்"
21.பாண்டியர் வரலாறு—ம.இராசசேகர தங்கமணி—பக்கம்-398
22.. பாண்டியர் வரலாறு—ம.இராசசேகர தங்கமணி—பக்கம்—406
23,தமிழகத்தில் விஜயநகர ஆட்சி—அ.சிங்காரவேல்—பக்கம்—49
24.தஞ்சாவூர் நாயக்க வரலாறு—குடவாயில் பாலசுப்பிரமணியன் –பக்கம்-25
25. தஞ்சாவூர் நாயக்க வரலாறு—குடவாயில் பாலசுப்பிரமணியன் –பக்கம்-56

(வளரும்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.