![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 149
![]() இதழ் 149 [ மே 2020 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் சிலமுறை டோக்கியோவுக்குப் பணிநிமித்தமாக வந்திருந்தாலும் ஐந்து வருடங்களாக இங்கு வரும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் இங்கு வரும்போது இந்த ஐந்து ஆண்டுகளில் என்னவெல்லாம் மாறியிருக்கும் என்ற ஒரு குறுகுறுப்பு மனதில் நிறைந்திருந்தது. ஏற்கனவே நன்கு வளர்ந்த நாடு. மேற்கொண்டு வளர்வதற்கு ஏதுமில்லை என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் விதைத்திருக்கும் நாடு. இருப்பினும் டோக்கியோ நகரின் எல்லா இடங்களிலும் ஏதாவதொரு கட்டுமானப்பணி நடந்துகொண்டே இருக்கிறது. அலுவலக வேளைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தொடர்வண்டி யமானொத்தே வழித்தடத்தில் உள்ள நிலையங்களில் கட்டுமானப்பணி நடைபெறாத நிலையங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ஜப்பானிய நிறுவனங்களில் Kaizen என்றொரு வழக்கம் உண்டு. அதாவது ஒரு செயல் (உதாரணமாக, மேலதிகாரிக்கு நாள்தோறும் அறிக்கை அனுப்புதல்) பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி, ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிப் பின்னர் சிறிதுசிறிதாக மாற்றங்கள் செய்து, சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்துத்தான் சார்ந்துள்ள, அனைவருக்கும் ஏற்ற, இயல்பான ஒரு செய்கையாக உருமாறும். அவ்வாறு நன்கு முறைப்படுத்தப்பட்ட செயல் கொஞ்சகாலம் பின்பற்றப்படும். ஆனால் ஆண்டுக்கணக்கில் இப்படியே அதேவடிவில் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடாது. காலமாற்றத்திற்கு ஏற்பப் புதுப்பிப்பதும் முன்னேற்றுவதும் கட்டாயம். இதுதான் அந்த Kaizen என்பது. இந்தப் பழக்கம்தான் ஜப்பானின் ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்திலும் பயணிகளின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்பப் புதிய மாற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது. இப்போது ஒலிம்பிக் போட்டிகளும் நடக்க இருப்பதால் வெளிநாட்டவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் நிறைய முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜப்பானிய மொழியில் இருக்கும் நிலையங்களின் பெயர்களை வெளிநாட்டவர் உச்சரிக்கவும் நினைவில் வைத்துப் பயணம் செய்யவும் கடினமாக இருக்குமே என்று ஒவ்வொரு நிலையத்துக்கும் ஓர் எண்ணை இட்டிருக்கிறார்கள். எண்ணற்ற நிலையங்கள் இருப்பதால் எண்ணிக்கை பல இலக்கங்களில் கூடிக்கொண்டே போகும் என்பதால் அந்தந்த வழித்தடங்களின் பெயர்களின் முதலெழுத்தைச் சேர்த்திருக்கிறார்கள். நிலையங்களில் மட்டுமல்ல தொடர்வண்டிகளிலும் ஏராளமான மாற்றங்கள். ஷின்கான்சென் எனப்படும் அதிவேக வண்டிகள் சுமார் 300 கி.மீ வேகத்தில் செல்லும்போது முன்பெல்லாம் சட்டென்று சன்னலுக்கு வெளியே பார்த்தால் சிறிது தலைசுற்றுவதுபோல் இருக்கும். இப்போது அதிர்வைக் குறைத்து அறையில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். ஜப்பானின் உள்கட்டமைப்பு அதன் தொடர்வண்டி நிலையங்களை ஒட்டி அமைந்திருக்கிறது. நாட்டின் மொத்த நிலப்பரப்பும் 47 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஹொக்கைடோ என்றொரு பெருந்தீவு தனி மாகாணமாகவும் டோக்கியோ என்பது 23 நகராட்சிகளை உள்ளடக்கிய ஒரு பெருநகரமாகவும் ஓஸகா மற்றும் கியோத்தோ ஆகியன அடுத்தநிலை நகரமைப்புகளாகவும் மீதமுள்ளவை 43 தனிமாநிலங்களாகவும் உள்ளன. தற்போது நான் வசிக்கும் இடம் டோக்கியோவின் 23 நகராட்சிகளில் ஒன்றான ஓட்டா நகரின் ஓமொரி (தமிழில் பெருங்காடு) என்ற ஊர். முன்பு உண்மையாகவே காடாகத்தான் இருந்திருக்கவேண்டும். நிறைய மரங்களும் மேடான பகுதிகளும் நிறைந்த ஊர். நமக்கென்று எப்படித்தான் வாய்க்கிறதோ தெரியவில்லை, ஜப்பானின் முதல் தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்ட இடம் என் வீட்டிலிருந்து ஒரு கி.மீ தொலைவில்தான் உள்ளது. 1877ல் மோர்ஸ் என்ற அமெரிக்க விலங்கியல் பேராசிரியர் இந்த இடத்தைக் கண்டுபிடித்தார். கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதி என்பதால் இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான கிளிஞ்சல் சிப்பிகள், பானையோடுகள், சுடுமண் உருவங்கள், கற்கோடாரிகள், மனித, திமிங்கில மற்றும் மான்களின் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் இன்று ஓமொரியிலுள்ள தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுவரும் கிளிஞ்சல் மேடு அருங்காட்சியகத்திலும் அங்கிருந்து நடக்கும் தூரத்திலுள்ள ஷினாகவா வரலாற்றுக்கூடத்திலும் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றின் காலம் கிமு 10ம் நூற்றாண்டுக்கும் கிமு 2ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. Edward Sylvester Morse என்ற விலங்கியல் பேராசிரியர் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து ஜப்பானுக்கு வந்து Brachiopoda பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று கருதியிருந்தார். மே 29, 1877 அன்று கலிபோர்னியாவிலிருந்து கிளம்பி, ஜூன் 18 அன்று கப்பலில் யொகோஹாமா துறைமுகத்தில் வந்து இறங்கினார். (இங்கேதான் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா புகழ் டையமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது). ஜூன் 20ம் தேதி யொகோஹாமாவிலிருந்து டோக்கியோவுக்குத் தொடர்வண்டியில் வந்துகொண்டிருந்தபோது ஓரிடம் அவரது கவனத்தை ஈர்த்தது. இருப்புப்பாதை போடுவதற்காக அகழப்பட்ட மண்சரிவில் சில அடுக்குகள் கிளிஞ்சல்கள் இருந்ததைக் கண்டார். அப்போதே அவரது மனதில் இது நிச்சயம் ஒரு முக்கியமான வரலாற்றுக் களமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. ![]() எட்வர்ட் சில்வெஸ்டர் மோர்ஸ் ![]() மோர்ஸ் தொடர்வண்டியிலிருந்து கண்ட கிளிஞ்சல் அடுக்குகள் 1877 ஏப்ரல் மாதம் டோக்கியோ பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. டாக்டர் மோர்ஸ் ஜப்பான் வந்தபிறகு எதிர்பாராதவிதமாக அவருக்கு டோக்கியோ பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையில் உடற்செயலியல் பிரிவில் பேராசிரியாகப் பணியாற்ற அழைப்பு வந்தது. இது அவருடைய Brachiopoda பற்றிய ஆய்வுக்குப் பேருதவியாக அமைந்தது மட்டுமின்றி, ஜப்பானின் தொல்லியல் வரலாற்றையும் தொடங்கி வைத்தது. ஆம். அவர் தொடர்வண்டிப் பயணத்தில் ஓமொரி அருகே கண்ட கிளிஞ்சல் அடுக்குகளைப் பற்றிய அகழாய்வு நிகழ்த்தத் தேவையான நிதியுதவியையும் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, துறைசார்ந்த அறிஞரின் மேற்பார்வையில் ஜப்பானில் நடத்தப்பட்ட முதல் அகழாய்வும் இதுவேயாகும். 1877ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை பலகட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டன. ம்ம்ம், பரவாயில்லை. இந்த நாட்டிலாவது கீழே அடியில் தோண்டுவதற்கு விரைவாக நிதியுதவியும் பெற்று, மூன்று மாதங்களில் பலகட்ட ஆய்வுகளையும் நடத்த முடிகிறது. இந்த இடத்தின் உரிமையாளருக்கு இழப்பீடாக 50 யென்கள் தரப்பட்டதால் அகழாய்வு பேரளவினதாக இருந்திருக்கவேண்டும் என்று டோக்கியோ பல்கலைக்கழக ஆவணக்குறிப்பு ஒன்று சொல்கிறது. இன்றைக்கு 50 யென்கள் என்பது இன்றைய இந்தியப்பண மதிப்பில் 35 ரூபாய். ![]() இடது கீழ் : மோர்ஸின் ஆய்வறிக்கை இடது மேல் : ஆய்வறிக்கையில் மோர்ஸால் வரையப்பட்ட அகழாய்வு நடத்தப்பட்ட காட்சி வலது : அகழாய்வின்போது கிடைத்த மட்பாண்டங்கள் ![]() ஷினாகவா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அகழப்பட்ட மட்பாண்டத்தின் குறுக்குவெட்டு ஜப்பானிய வரலாற்றில் புதிய கற்காலத்திலிருந்து கி.மு 3ம் நூற்றாண்டு வரை ஜோமோன் காலம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற ஆசிய, ஐரோப்பிய நாடுகளைப்போல் இக்காலத்தில் ஜப்பானில் விவசாயம் செழிக்கவில்லை. ஆனால், மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழத்துவங்கி வேட்டைச் சமூகமாக வாழ்ந்து வந்தனர். மட்பாண்டங்கள் செய்வது இக்காலத்தில்தான் தொடங்கியது. காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தவாறு வேறுபாடுகளுடன் தனித்தன்மையுடன் இவை உருவாக்கப்பட்டன. பின்னாளைய வரலாற்று ஆராய்ச்சிக்கு இவ்வித்தியாசம் பெரிதும் உதவிவருகிறது. ஓமொரியில் மோர்ஸ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இக்காலகட்டத்தைச் சேர்ந்த மட்கலங்கள்தான். பின்னோக்கிய காலவரிசைப்படி இம்மட்கலங்கள் ஹொரினோஉச்சி, கசோரி, அங்கியோ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதுதவிர இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பாக அங்குக் காணப்பட்ட நொறுங்கிய மற்றும் எரிந்த மனித எலும்புகளை வைத்து ஜோமோன் காலத்தில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததையும் கண்டுபிடித்தார். பின்வந்த பல்வேறு வரலாற்றாய்வுகளும் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றன. ![]() காலவரிசைப்படி வழக்கிலிருந்த மட்பாண்ட வகைகள் ![]() ![]() ![]() ![]() ![]() ஜோமோன் காலத்தில் வழக்கிலிருந்த தாவரங்கள், விலங்குகள், தொழில்கள் மற்றும் குடிசைகள் இக்கண்டுபிடிப்புகள் 1879 ஜூலை மாதத்தில் தொகுக்கப்பட்டு அறிக்கையாக டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையால் வெளியிடப்பட்டது. இதன் ஜப்பானிய மொழிபெயர்ப்பு அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அது ஜப்பானியத் தொல்லியல்துறையின் தொடக்கக்காலம் என்பதால் இம்முடிவுகள் அவ்வளவாகப் பயன்படவில்லை. ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மற்ற அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்றாராய்ச்சி முடிவுகளுடன் இணைந்து பெரும்பங்களித்தன. அதன்பிறகு மோர்ஸ் 1882ம் ஆண்டு அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டார். பின்னர் நம் ஊரைப்போலவே, இந்த அகழ்விடமும் பின்வந்த ஆண்டுகளில் மறக்கப்பட்டுவிட்டது. 1929ம் ஆண்டு ஓமொரியில் தற்போதிருக்கும் நினைவிடம் அமைக்கப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்துத்தான் மோர்ஸ் அகழ்ந்த சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அது ஓமொரி தொடர்வண்டி நிலையமாக ஆகியிருந்ததால் அந்த இடம் இருக்கும் நடைமேடையில் மோர்ஸுக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() அகழாய்விடம் ![]() ஓமொரி தொடர்வண்டி நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம் ஜப்பானை மோர்ஸும் மோர்ஸை ஜப்பானியர்களும் எந்த அளவுக்கு நேசித்தனர் என்பதைப் பின்வரும் நிகழ்வுகளைக் கொண்டு அறியலாம். 1923ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கத்தால் டோக்கியோ பல்கலைக்கழக நூலகம் தீக்கிரையாகி அங்கிருந்த நூல்கள் அனைத்தும் எரிந்து போய்விட்டன. இதைக்கேள்விப்பட்ட மோர்ஸ் தான் எழுதிய மற்றும் பயன்படுத்திய எண்ணற்ற புத்தகங்களை டோக்கியோ பல்கலைக்கழகத்துக்கு வழங்குமாறு உடனே உயில் எழுதினார். 1926ம் ஆண்டு ஜப்பானுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த நூல்களை இன்றும் டோக்கியோ பல்கலைக்கழக நூல்நிலையத்தில் EX LIBRIS Edward S. Morse என்ற குறிப்புகளுடன் காணலாம். பின்னர் இதற்கு நன்றிக்கடனாக அவரது ஆய்வுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஷினகவா நகரமும் அவர் பிறந்த போர்ட்லாண்ட் நகரமும் கலாச்சாரப் பகிர்வு நகரங்களாக (Sister cities) அறிவிக்கப்பட்டன. அவர் அகழ்வாராய்ச்சி நடத்திய ஓட்டா நகரமும் அவர் வாழ்ந்த மசாசூசெட்ஸ் மாகாணத்தின் சேலம் நகரமும் கலாச்சாரப் பகிர்வு நகரங்களாக அறிவிக்கப்பட்டன. இன்றும் அவரது சில பானையோடுகளும் எலும்புகளும் சேலம் நகரிலிருக்கும் Peabody Essex அருங்காட்சியகத்திலிருந்து அவ்வப்போது ஜப்பானுக்குக் கொண்டு வந்து காட்சிப்படுத்தப்படுகின்றன. ![]() ![]() ![]() ![]() அகழாய்விடத்தின் நுழைவாயில் ![]() கலாச்சாரப் பகிர்வு நகரங்களாக அறிவிக்கப்பட்டதன் கல்வெட்டு இரண்டாம் உலகப்போருக்குப் பின் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வரலாற்றுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அழிவுக்குப் பின்னான புதுப்பித்தலில் 1950களிலும் 60களிலும் மகத்தான பங்காற்றிய ஜப்பானியத் தலைவர்கள் தொழில்துறை முன்னேற்றம் மட்டுமின்றி வரலாற்றையும் கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தினர். பள்ளியில் பயிலும்போது வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்குப் பள்ளி இறுதியில் ஊக்க மதிப்பெண்கள் வழங்குவது போன்ற செய்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஜப்பானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் இது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |