http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 149

இதழ் 149
[ மே 2020 ]


இந்த இதழில்..
In this Issue..

குரக்குத்துறைக் கட்டுமானம்
அலகறை சேமீசுவரம்
பணிவின் இலக்கணம் - அனுமன்
ஆவுடையார் கோவில் கண்ணப்பர்
வரகுணபாண்டீஸ்வரர் ஆலயம் பள்ளக்குறிச்சி-(உடன்குடிக்கருகில்)
புள்ளமங்கை - தள அமைப்பு
ஓமொரி - ஜப்பானியத் தொல்லியல் அகழாய்வின் பிறப்பிடம்
Thiruppur (near Keeranur)
Thirukkazhippalai (Sivapuri)-1
இதழ் எண். 149 > கலையும் ஆய்வும்
குரக்குத்துறைக் கட்டுமானம்
இரா.கலைக்கோவன், மு.நளினி
சிராப்பள்ளித் தொட்டியம் சாலையில் முசிறியிலிருந்து 10 கி. மீ. தொலைவில் காவிரியின் வடகரையிலுள்ள சீனிவாச நல்லூரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது கல்வெட்டுகளில் குரக்குத்துறைப் பெருமானடிகள் என்றழைக்கப்படும் குரங்க நாதரின் கோயில். இந்தியத் தொல்லியல் துறையின் காப்பில் கோபுரம், மதில், சுற்றாலைத் திருமுன்களற்ற பரந்த வெளியில் முற்சோழர் கைவண்ணமான முத்தள நாகர விமானம், இடை நடை, முக மண்டபம் மட்டுமே கொண்டு ஒளிரும் இக்கோயில் சோழர் கட்டமைப்புத் திறனின் உச்சமாய்த் திகழ்கிறது.1

விமானம்

தாங்குதளத்தினும் சற்று வெளித்தள்ளி, கட்டுமானத்தின் நாற் புறத்தும் பரந்து விரிந்திருக்கும் உபானத்தின் மீது கம்பீரமாக எழும் விமானக் கீழ்த்தளம் மட்டுமே கருங்கல் கட்டமைப்பு. கர்ண, சாலைப்பத்திகள் நன்கு முன்னிழுக்கப்பட்டுள்ள இவ்விமானத்தின் இரண்டாம், மூன்றாம் தளங்களும், இரண்டாம் தள ஆரமும் கிரீவம், சிகரம் முதலியனவும் செங்கல்லாலானவை. கீழ்த் தளத்திலும் உத்திரத்திற்கு மேற்பட்ட கூரையுறுப்புகள் செங்கல் பணியாகவே உள்ளன.

தாங்குதளம்

ஜகதி, உருள்குமுதம், பிரதிவரி கொண்டுள்ள பிரதிபந்தத் தாங்கு தளம் விமானத்திற்கு அளவற்ற கவர்ச்சியைத் தருகிறது.2 ஜகதிக்கும் குமுதத்திற்கும் இடையிலுள்ள தாமரைவரியின் இதழ் கள் கீழ்நோக்க, குமுதத்திற்கும் பிரதிவரிக்கும் இடையிலுள்ள தாமரைவரியின் இதழ்கள் மேனோக்கியுள்ளன. வடபுறக் குமுதத் தில் முழுக்காட்டு நீர் வெளியேறும் தூம்பு உள்ளது. ஆலிங்கம், அந்தரி, பிரதிமுகம், வாஜனம் ஆகிய நான்கு அங்கங்களும் தனித்தும் சிறக்கவும் அமைந்துள்ள பிரதிவரி எதிரெதிர் நோக்கும் மார்பளவு யாளிகளால் நிறைந்துள்ளது.

கர்ணபத்திகளின் நேர்முகத்தில் இரண்டு யாளிகளும் பக்க முகங்களில் நான்கு யாளிகளும் அமைய, சாலைப்பத்தியின் நேர் முகத்தில் ஆறு யாளிகள். பத்திகளுக்கிடையே உள்ளடங்கியுள்ள தாய்ச்சுவரின் பிரதிவரித் துண்டுகள் ஒவ்வொன்றும் நான்கு யாளி கள் பெற்றுள்ளன. இந்த யாளிகளில் சில துளைக்கையுடன் வேழ யாளிகளாக, ஏனையன சிம்மயாளிகள். தென்மேற்குக் கர்ணபத்தி யின் நேர்முக யாளிகள் மட்டும் மனிதமுகம் பெற்றுள்ளன.

முகமண்டபப் பிரதிவரியின் வடகிழக்குப் பகுதியில் அடுத் தடுத்துள்ள இரண்டு யானைகளும் அழகான படப்பிடிப்புகள்.3 துளைக்கைகளைச் சுருட்டியுள்ள அவற்றுள் ஒன்று அதை மேலு யர்த்தி நிற்க, மற்றொன்று நெகிழவிட்டுள்ளது. ஒன்றின் கழுத்தில் மணிமாலை. மற்றொன்று கயிற்றுப்புரிகளையே கழுத்துப் பட்டை யாகக் கொண்டுள்ளது. முகமண்டப வாயிலை ஒட்டிய பிரதிவரி யில் தெற்கிலொன்றும் வடக்கிலொன்றுமாய் இரு யானைகள். இரண்டுமே காலுயர்த்திய நிலையில் வாயிலுக்காய் ஒருக்கணித் துள்ளன.4 யாளிவரியின் திருப்பங்களில் காட்டப்பட்டுள்ள மகர தலைகள் கர்ணபத்திகளில் நேர்முகமாகவும் சாலைப்பத்திகளில் பக்கங்களிலும் அமைந்து பிரதிவரியின் பேரெழிலுக்குக் காரண மாகின்றன. அவற்றுள் ஒன்றிரண்டின் கழுத்தில் வீரர்கள்.

துளைக்கையைத் தலைக்கு மேல் சுருட்டியுள்ள மகரங்களின் திறந்த வாயிலிருந்து அவற்றின் கோரைப்பற்களுக்கு இடைப்பட்டு வெளிப்படும் வீரர்களின் உயர்த்திய கைகளில் ஒருபுறம் வாள், மறுபுறம் கிடுகு. கரண்டமகுடம், சிற்றாடை, கைவளைகள் பெற்றுள்ள அவர்தம் கழுத்தில் மெல்லிய ஆரம். சில மகரதலைகளில் மாறுபட்ட வடிவங்கள். ஒன்றில், குத்துக்கால் அமர்விலுள்ள பூதம் கையில் தடி கொண்டுள்ளது. மற்றொன்றில் இரு யாளிகள் போரிடும் காட்சி. தென்பகுதி அந்தரியில் ஓரிடத்தில் மலர்ச்சுருளும் மற்றோர் இடத்தில் மண்டலநிலையில் ஆடவரின் ஆடலும்.

வேதிகைத்தொகுதி, தூண்கள்

பிரதிவரியின் மேலெழும் வேதிகைத்தொகுதியின் பாதங்கள் சிற்றுருவச் சிற்பங்களோ, கொடிக்கருக்குகளோ இல்லாதபோதும் எழுச்சியுடன் திகழ்கின்றன. வேதிகையின் மேலுள்ள துணைக் கம்பையடுத்து வளரும் கீழ்த்தளச் சுவரின் கர்ணபத்திகளை நான் முக அரைத்தூண்களும் சாலைப்பத்திகளை எண்முக அரைத் தூண்களும் தழுவ, தாய்ச்சுவர்த் துண்டுகளை உருளை அரைத் தூண்கள் அணைத்துள்ளன. நான்முகம் தவிர்த்த ஏனைய இரண் டும் செவ்வகப்பாதம் பெற்றுள்ளன. சில தூண்களின் தொங்கலும் கட்டும் சிற்றுருவச் சிற்பங்கள், கொடிக்கருக்குகள் கொள்ள, சில வெறுமையாக உள்ளன. பாலி உள்ளிட்ட தூண்களின் மேலுறுப்பு களும் கொடிக்கருக்கு அழகூட்டல் பெற்றுத் திகழ, எளிய விரி கோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன.

கூரை

வாஜனத் தழுவலில் வெளிப்படும் மதலைகளுடனான வலபி யும் கூரையின் வெளிநீட்டலாய்க் கவியும் கபோதமும் செங்கல் கட்டுமானமாய்க் கருங்கல் கீழ்த்தளத்துடன் நன்கு ஒருங் கிணைந்து பேதமின்றித் தளமுடிவு காட்ட, மேலே பூமிதேசம், வேதிகை.

சுவர்க்கோட்டங்கள்

சாலைப்பத்திகளும் சுவர்த்துண்டுகளும் தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் கோட்டங்கள் பெற்றுள்ளன. சட்டத்தலை உருளை அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள சாலைப்பத் திக் கோட்டங்கள் மேல் எழிலார்ந்த மகரதோரணங்கள். இந்தக் கோட்டங்களில் தெற்கில் மட்டும் விமானக் கால ஆலமர்அண் ணல் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இக்கோட்டத்தையடுத்த இரு புறச் சாலைப்பத்திச் சுவரிலும் மேலிருந்து கீழாக ஆலமர்அண் ணல் தொடர்புடைய காட்சிகள் பக்கத்திற்கு மூன்றெனக் காட் டப்பட்டுள்ளன. கோட்டத் தலைப்பிலுள்ள மகரதோரணம் காளி அரக்கனை அழிக்கும் சிற்பம் கொண்டுள்ளது.

மேற்குச்சாலைக் கோட்டமும் அதை ஒட்டிய சுவர்ப்பகுதிக ளும் வெறுமையாக அமைய, மகரதோரணத்தில் பூவராகமூர்த்தி யின் சிற்றுருவச் சிற்பம். இக்கோட்டத்தில் இருந்ததாகக் கொள் ளத்தக்க அம்மையப்பர் சிற்பம் சிதைந்த நிலையில் தற்போது கரு வறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. வடக்குக் கோட்டத்திலுள்ள சிதைந்த நான்முகன் சிற்பம் விமானக் காலத்ததாகலாம். அதன் மகரதோரணம் இடம்பெயர்ந்த நிலையில் கருவறையில் வைக்கப் பட்டுள்ளது. சுவர்த்துண்டுக் கோட்டங்களில் மேற்கில் கவரிப் பெண்களும் தெற்கில் பிச்சைத்தேவரும் வானவர் ஒருவரும் சிற் பங்களாக, வடக்கில் வணங்கிய நிலையில் ஒருவரும் மலருடன் ஒருவருமாய் அடியவர்கள்.

இரண்டாம், மூன்றாம் தளங்கள்

ஆரஉறுப்புகளற்ற விமானக் கீழ்த்தளத்தை5 அடுத்தெழும் இரண்டாம் தளம் கீழ்த்தள அமைப்பிலேயே கர்ண, சாலைப்பத்தி களின் முன்தள்ளலுடன் உள்ளடங்கியதாய்ச் சுவர்த்துண்டுகள், அரைத்தூண்களின் தழுவல், கூரையுறுப்புகள் பெற்றுக் கபோதத் துடன் திகழ, சாலைப்பத்திகளும் சுவர்த்துண்டுகளும் நாற்புறத் தும் வெறுமையான கோட்டங்கள் பெற்றுள்ளன.6 கபோதம் மீது பூமிதேசம், வேதிகையை அடுத்து நாற்புறத்தும் ஆரச்சுவரால் இணைக்கப்பெற்ற கர்ணகூடங்களும் சாலைகளும் ஆரச்சுவர் நாசிகைகளும் ஆரஉறுப்புகளாய்ச் சூழ்ந்துள்ளன.

ஆரத்திற்கு 85 செ. மீ. உள்ளடங்கி எழும் மூன்றாம் தள அரமி யம் 4 மீ. பக்கமுடைய சதுரமாக, 2. 35 மீ. உயரம் பெற்றுச் செங்கல் கட்டுமானமாக விளங்குகிறது.7 உபானத்தின் மீது நான்முக அரைத்தூண்களின் தழுவலில் எழும் இம்மூன்றாம் தளச் சுவர், கோட்டங்களின்றி நாற்புறத்தும் வெறுமையாக உள்ளது. மேலுறுப்புகள் மட்டுமே பெற்றுள்ள தூண்களின் மீதுள்ள வளைவுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்குகின்றன. வலபி யில், கீழிரு தளங்கள் போலவே மதலைகள். கபோதம், பூமி தேசத்தையடுத்து எழும் கிரீவசுவரின் வெறுமையான நாற்புறக் கோட்டங்களை உருளை அரைத்தூண்கள் தழுவ, கூரையுறுப்பு களின் மேல் நாகர சிகரம். தூய நாகரமான இவ்விமானத்தின் முதலிரு தளங்கள் ஒன்று போல் அமைய, இரண்டாம் தள ஆரம் மூன்றாம் தளத்திலிருந்து தள்ளியமைந்து அனர்ப்பிதமாகி, அம்மூன்றாம் தளத்திற்குச் சுற்றுவழி தந்துள்ளது.

முகமண்டபம், இடைநடை, கருவறை

விமானத்தை ஒத்த கட்டமைப்பில், ஆனால், பத்தியிழுப்பின்றி நேர்க்கோட்டிலுள்ள முகமண்டபச் சுவரை நான்முக அரைத் தூண்கள் தழுவியுள்ளன. அவற்றுள் வடகிழக்கு மூலையிலுள்ள இரண்டு அரைத்தூண்களில் மட்டுமே சிற்றுருவச் சிற்பங்கள். சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ள அதன் தென்கோட்டம் வெறுமையாக அமைய, வடகோட்டத்தில் சற்றே காலத்தால் பிற்பட்ட சிதைந்த ஆலமர்அண்ணல் சிற்பம். அணைவுத் தூண்களற்ற நெடிய கிழக்குச் சுவர்க்கோட்டங்கள் வாயிற்காவலர் சிற்பங்களின்றி வெறுமையாக உள்ளன. முகமண் டபத்தின் வடக்குக் குமுதத்திலும் முழுக்காட்டு நீர் வெளியேறும் தூம்பைக் காணமுடிகிறது. முகமண்டபத்தின் வடக்கு ஜகதியில் முதலிரு கோடுகளுக்கு இடைப்பட்ட அளவு 1. 96 மீ. ஆகவும் இரண்டாம் மூன்றாம் கோடுகளுக்கு இடைப்பட்ட அளவு 1. 12 மீ. ஆகவும் உள்ள, மூன்று கூட்டல்குறிகளுக்கு இடைப்பட்ட தாய்க் காட்டப்பட்டிருக்கும் 3. 08 மீ. நீள நில அளவுகோல் அர. அகிலாவால் கண்டறியப்பட்டது.

விமானத்தோடு முகமண்டபத்தை இணைக்கும் இடைநடை இரண்டுக்கும் இடையில் அதே கட்டுமான அமைவில் நன்கு உள் ளடங்கி ஒன்றியுள்ளது. 93 செ. மீ. அகலம், 1. 91 மீ. உயரம் பெற் றுள்ள முகமண்டப வாயிலின் நிலைக்கால்களின் விளிம்பொட்டி இடைவெளியிட்ட நிலையில் படம் விரித்த பாம்புத்தலைகளெனக் கருக்கணிகள் அழகுற அமைய, அவ்விளிம்பினின்று நிலைக்கால் நோக்கிப் படர்ந்து நுனியில் சுருளும் கொடிக்கருக்குகள் வாயி லுக்குப் பெருங்கவர்ச்சியைத் தருகின்றன. இத்தகு அழகூட்டல் பெற்ற நிலைக்கால் விளிம்புகளைச் சிராப்பள்ளி மாவட்டத்தின் பிற முற்சோழர் கோயில்களில் காணக்கூடவில்லை.

மண்டப உட்கூரையை அகலமான தளத்தின்மீது செவ்வகப் பாதம் பெற்றெழும் நான்கு எண்முகத் தூண்கள் தாங்குகின்றன. அவற்றின் தொங்கல், கட்டுப்பகுதிகள் ஒதுக்கீடாக, நன்கமைந் துள்ள தாமரைக்கட்டுகளும் பாலி, பலகை உள்ளிட்ட மேலுறுப் புகளும் சிறக்க வடிக்கப்பட்டுள்ளன. இரண்டு தூண்களில் அவை அழகிய கொடிக்கருக்கு அலங்கரிப்பு பெற்றுள்ளன. எளிய விரி கோணப் போதிகைகள் உத்திரம் தாங்க, மேலே கூரை. அத்தூண் களுக்கு நேரிருக்குமாறு தென், வடசுவர்களில் பக்கத்திற்கு இரு சதுரம், கட்டு, சதுரம் அமைப்பிலான அரைத்தூண்கள். அவற்றின் மேற்சதுரங்கள் விரிகோணப் போதிகைகளால் உத்திரம் தாங்க, மேலே கூரை.

முகமண்டபத்திற்கும் கருவறைக்கும் இடைப்பட்ட அகலக் குறுக்கமான இடைநடையின் தென், வடசுவர்களின் கிழக்கு முகத்தில் பக்கத்திற்கொன்றாக உள்ள நான்முக அரைத்தூண்கள் கூரை தாங்குகின்றன. கிழக்கு மேற்காக 1. 62 மீ. நீளமும் தென் வடலாக 1. 26 மீ. அகலமும் பெற்ற இந்த இடைநடையின் உயரம் 2. 57 மீ. இதன் தென்சுவரின் கீழ்ப்பகுதியில் கருவறை வாயிலுக்கு அருகில் அகழப்பட்டுள்ள 5 செ. மீ. ஆழச் செவ்வகக் கோட்டம் 72 செ. மீ. உயரம், 41 செ. மீ. அகலம் பெற்று வெறுமையாக உள்ளது.

கிழக்கு மேற்காக 4. 24 மீ. நீளமும் தென்வடலாக 3. 77 மீ. அகலமும் 2. 97 மீ. உயரமும் பெற்றுள்ள முகமண்டபத்தையடுத் துள்ள கருவறையின் வாயில் 94 செ. மீ. அகலம், 1. 91 மீ. உயரம் கொண்டுள்ளது. 2. 50 மீ. பக்கமுள்ள சதுரமாக விளங்கும் கரு வறையின் சுவர்களும் தரையும் வெறுமையாக உள்ளன. கரு வறையின் கூரை கதலிகாகரண முறையில் மேல் நோக்கிக் குறுகி உச்சியில் சதுரக்கல்லால் மூடப்பட்டுள்ளது. கருவறையின் பின்சுவர் ஒட்டியுள்ள பின்னாளைய சந்திரன் சிற்பம் இரண்டு கைகளிலும் நீலோத்பலங்களுடன் சமபாதத்திலுள்ளது. தலையின் இருபுறத்தும் பிறை போன்ற வளைவு.

கருவறைத் தென்சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ள அம்மை யப்பர் சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளது. அம்மையப்பரின் வலப் புறத்துள்ள நந்தியின் கழுத்தில் முத்து, பெருமணிமாலை. கைகள் சிதைந்த நிலையில் அதையொட்டி நிற்கும் அம்மை யப்பரின் அம்மைப்பகுதியில் பட்டாடை. சிற்றாடையுடனுள்ள இறைவனின் இடையில் முத்துக்கள் பதித்த அரைக்கச்சு. அரைக் கச்சின் முடிச்சு வலத்தொடையில் நெகிழ, அதன் மடிப்புத் தொங்கல் இடத்தொடையில் படர்ந்துள்ளது. இருவளைவு இடைக் கட்டும் முத்துக்கள் பதித்த உதரபந்தமும் அழகிய தோள் வளைகளும் பெற்றுள்ள இத்திருமேனியின் மார்பில் தோள்களில் இறங்கி, இடுப்புவரை நீண்டு முதுகுப்புறம் மறையும் பட்டையான மாறுபட்ட சுவர்ணவைகாக்ஷம். கழுத்தில் தொங்கலும் அதன் மேல் இரு வளைவுகளும் பெற்ற மாறுபட்ட சரப்பளி. கழுத்துக்கு மேற்பட்ட பகுதியும் முழங்கைகளுக்குக் கீழ்ப்பட்ட பகுதியும் துண்டாடப்பட்டுள்ளன.

அம்மையப்பரை அடுத்துள்ள மற்றொரு பின்னாளைய சிற்பம் வலக்கையைக் காப்பு முத்திரையிலும் இடக்கையைக் கடியவலம்பிதமாகவும் கொண்டுள்ளது. முகம் முற்றிலுமாய்ச் சிதைந்துள்ள நிலையில் சிற்பத்தை அடையாளப்படுத்த முடிய வில்லை. கருவறையின் வடக்குச் சுவரருகே விமானத்தின் வடக்குச் சாலைப் பத்திக் கோட்டத்தை அலங்கரித்த மகர தோரணம் உள்ளது.

சிற்பங்கள்

குரங்கநாதர் கோயில் சிற்பங்களைக் கோட்டச் சிற்பங்கள், சிற்றுருவச் சிற்பங்கள் என இருவகைப்படுத்தலாம்.

கோட்டச் சிற்பங்கள்

முப்புறச் சாலைப்பத்திகளிலும் அவற்றை ஒட்டிய சுவர்த் துண்டுகளிலும் உள்ள கோட்டங்களில், தெற்கில் மூன்று கோட் டங்களிலும் மேற்கிலும் வடக்கிலும் சுவர்த்துண்டுக் கோட்டங் களிலும் விமானக் காலச் சிற்பங்கள் உள்ளன. வடசாலைக் கோட் டத்திலுள்ள நான்முகன் விமானக் காலத்தவராகலாம்.

தெற்குக் கோட்டங்கள்

இங்குள்ள கோட்டச் சிற்பங்கள் அனைத்துமே சிறப்புக்குரி யவை என்றாலும், சிதைந்திருந்தபோதும் சிறப்பின் உச்சப் படைப் பாகத் திகழ்கிறார் தென்கோட்ட ஆலமர்அண்ணல். வீராசனத்தி லுள்ள இறைவனின் வலப்பாதம் கீழே குப்புறக் கவிழ்ந்து படுத் துள்ள முயலகன் முதுகின் மீதமைய, இடக்கால் சிதைக்கப்பட் டுள்ளது. நுனிகளில் சிரஸ்திரகமாய்ச் சுருட்டப்பட்ட சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, பெருமுத்துக்கள் பதித்த ஆரம், தோள், கை வளைகள், மோதிரங்கள், இடைக் கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் தலையை மண்டையோடும் நெருஞ்சிப்பூக்களும் நெற்றிப்பட்டமும் அலங் கரிக்கின்றன.

பின்கைகளில் அக்கமாலை, சுவடி பெற்றுள்ள பெருமானின் நெற்றியில் மூன்றாவது கண். அகலமான உதரபந்தமும் முப்புரி நூலென மடித்த துண்டும் அணிந்துள்ள அவரது முன்கைகளும் சிதைந்துள்ளன. இறைவனின் பின்னுள்ள மரத்தின் பொந்தில் ஆந்தை. அதன் கிளைகளில் தாவியேறும் அணில். மரத்தின் வலக் கீழ்க் கிளையில் இறைவனின் பொக்கணப்பையும்8 அக்க மாலையும் இருக்க, இடக்கீழ்க்கிளையில் மடித்த நிலையில் இறைவனின் துண்டு. ஆகமம் உரைக்கும் அண்ணலின் முகப் பரப்பில் கருணையும் கனிவும்.

இறைவனின் இருபுறச் சிற்பத்தொகுதிகளும் மேலிருந்து கீழாக மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இடமேல் பிரிவி லுள்ள கின்னரர்களுள் ஒருவர் வீணை இசைக்க, மற்றொருவர் கையில் தாளம். இடைப்பிரிவில் அமர்ந்துள்ள இரண்டு புலிகளுள் முன்னது தூங்க, பின்னது தலைநிமிர்த்தி உறுமுகிறது. கீழ்த் தொகுதியின் சடைமகுட முனிவர் சுவடியேந்தியுள்ளார். வல மேல் பிரிவில் ஆண், பெண் இணையாக இரு பூதங்கள். தலையி லிருந்து கால்வரை போர்த்திய ஆடையை இருகைகளிலும் பிடித்தபடி இலலிதாசனத்திலுள்ள அவற்றுள், முதல் பூதம் சன்ன வீரம், உதரபந்தம் அணிந்துள்ளது. இடைப்பிரிவில் ஆணும் பெண்ணுமாய் இரு சிங்கங்கள். ஆண்சிங்கம் துணையைப் பார்த்து உறும, மூன்றாம் பிரிவின் இளமுனிவர் சுவடியேந்தியுள்ளார்.9

தெற்குச் சுவர்த்துண்டுக் கோட்டங்களுள் கிழக்கில் சடை மகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, பூப்பதக்க ஆரம், பாம்புத்தோள்வளை, முப்புரிநூலென மடித்த துண்டு, இடைப்பட்டையாய்ப் பாம்பு கொண்டு ஆடையற்று நிற்கும் பிச்சையேற்கும் பெருமானின் திருவடிகளில் உயரமான காலணி கள். வல முன் கையில் அவர் கொண்டுள்ள புல்லை உண்ணுமாறு போலத் தாவும் மான். வலப்புறத்தே இடத்தோளில் சாய்க்கப்பட்டுள்ள கவரியின் தண்டை இடப் பின் கை பிடித் துள்ளது. அதைத் தாங்குமாறு போல இடுப்பிலுள்ள பாம்பின் தலை விரிந் துள்ளது. மார்பருகே உள்ள இட முன் கை சிதைந் திருக்க, வலப் பின் கையில் உடுக்கை. அவருக்கு முன்னே இடப் புறத்தே சடைப் பாரம், பனையோலைக் குண்டலங்கள், பதக்கம் பெற்ற ஆரம், இடைக்கட்டுடனான சிற்றாடை, கைவளைகள் கொண்டு நடை பயிலும் பூதத்தின் கைகளில் சிரட்டைக் கின்னரி. இறைவனின் நடையிலும் உடலிலும் வெளிப்படும் நளினம் அப்பர் பெருமான் பாடியுள்ள வட்டணை நடையையே கண்முன் காட்டுகிறது. 10

தெற்குச் சுவர்த்துண்டுக் கோட்டங்களுள் மேற்கில் கோட்டத் தினும் சற்றுப் பெரிய வடிவமாகக் காட்சிதரும் வானவர், கீர்த்தி முகம் பொறித்த கரண்டமகுடமும் கோரைப்பற்களும் கொண் டுள்ளார். பனையோலைக் குண்டலங்கள், சிம்மமுகத் தோள்வளை கள், சரப்பளி, அலங்கார முப்புரிநூல், வளைகள், இடைக்கட்டுட னான சிற்றாடை, அதை இருத்தும் சிம்மமுக அரைக்கச்சு அணிந்து, இரு கைகளையும் மார்புக்காய்க் குறுக்கீடு செய்து பணி வின் விளக்கமாய் நிற்கும் அவரது சடைக்கற்றைகள் இருபுறத் தும் நெகிழ்ந்துள்ளன. தமிழ்நாட்டுக் கோயில்களின் விமானக் கோட்டங்களில் இத்தகு பத்திமை நிறை வானவர் சிற்பங்களைக் காண்பதரிது. 11

மேற்குக் கோட்டங்கள்

மேற்குக் கோட்டங்களில் சாலைக்கோட்டம் நோக்கி ஒருக் கணித்த நிலையில் இளமையும் அழகுமாய் இரு கவரிப் பெண்கள்.12 சிதைக்கப்பட்ட நிலையிலும் முற்சோழர் கலைத் திறம் காட்டும் இவ்விரு நங்கையரும் சோழர் கால ஒப்பனை யாற்றலின் உச்சங்களாகத் திகழ்கின்றனர்.13 தமிழ்நாட்டுக் கோயில் கள் பலவற்றில் கவரிப்பெண்களை மகரதோரணம், தூண்பாதம், தூண்சதுரம், கொடிக்கருக்கு வளையங்கள், சிறு கோட்டங்கள் எனக் கட்டுமானம் சேர்ந்த பல உறுப்புகளில் காண முடிந்தாலும் இங்குள்ளாற் போல் சுவர்த்துண்டுக் கோட்டங்களில் சாலைக் கோட்டச் சிற்பத்திற்கு இணையான அளவில் பேருருப் படைப்பு களாய் யாங்கனும் காணமுடிவதில்லை. கவரிப்பெண்களுக்குக் குரக்குத்துறைச் சிற்பிகள் அளித்துள்ள இணையற்ற இந்தப் பெருமை தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

இருவரின் பாதங்களும் ஒருக்கணிப்பிற்கேற்ப சமத்திலும் திரயச்ரத்திலும் உள்ளன. வெளிக் கைகளைக் கடியவலம் பிதமாகக் கொண்டுள்ள அவர்தம் உள்கைகள் கவரியேந்தியுள்ளன. நன்கு சீவிமுடித்த கூந்தலுடன் அழகிய நெற்றிப்பட்டமும் பூட்டுக் குண்டலங்களும் பெரிய அளவிலான கற்கள் பதித்த ஆரமும் தோள், கை வளைகளும் முத்துக்கள் பதித்த முப்புரிநூலும் பூப் பதக்க அரைக்கச்சும் இடைக்கட்டுடனான ஆடையும் அணிந் துள்ள அவ்விருவருள், தென்மேற்கர் வலக்கையில் ஏந்தியுள்ள கவரி இடத்தோளுக்குப் பின் நெகிழ்ந்துள்ளது. அவர் இடையில் சிற்றாடை. வடமேற்கரின் கவரி அவர் தோளின் பின்புறத்தே இடப்புறம் நெகிழ்ந்துள்ளது.

வடக்குக் கோட்டங்கள்

வடக்குச் சாலைக் கோட்ட நான்முகனின் கால்கள் சிதைந் துள்ளன. சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, முப்புரி நூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான பட்டாடை, தோள், கை வளைகள் பெற்றுள்ள அவர் பின்கைகளில் அக்கமாலை, குண் டிகை. வல முன் கை காக்க, இட முன் கை கடியவலம்பிதத்தில்.

வடக்குச் சுவர்க்கோட்டங்களில் சாலைப்பத்திக்காய் ஒருக் கணித்த இரண்டு ஆடவ அடியவர்கள். சடைமகுடமும் பட்டாடை யும் பெற்றுள்ள அவர்களுள், கிழக்கர் வலக்கையில் மலரேந்தி வலக்காலைச் சற்றே முழங்காலளவில் மடித்துப் பாதத்தைத் திரயச்ரத்தில் இருத்தியுள்ளார். இடக்கால் சமத்தில். சரப்பளி, தோள், கை வளைகள், மகரகுண்டலங்கள் அணிந்துள்ள அவரது இடையாடையை அரைக்கச்சு இடுப்பிலிருத்தியுள்ளது. மலர்கள் ஏந்திய கைகளைக் குவித்துத் தாமரையில் நிற்கும் மேற்கர் பாதங்களை சமத்திலும் திரயச்ரத்திலும் இருத்தித் தோள், கை வளைகள், சரப்பளி, முப்புரிநூல், இடைக்கட்டுடனான பட்டாடை அணிந்து பத்திமையின் சிகரமாக விளங்குகிறார். 14

முகமண்டப வடகோட்டத்தில் சடைப்பாரம், முப்புரிநூல் என மடித்த துண்டு, சரப்பளி, சவடி, தோள், கை வளைகளுடன் வீராசனத்திலுள்ள பின்னாளைய பேரளவிலான ஆலமர்அண்ண லின் நான்கு கைகளும் இடக்காலும் சிதைந்துள்ளன.

சிற்றுருவச் சிற்பங்கள்

குரங்கநாதர் கோயில் சிற்றுருவச் சிற்பங்களைத் தூண் சிற்பங்கள், மகரதோரணச் சிற்பங்கள் என இருவகைப்படுத்தலாம். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான முற்சோழர் கோயில்களில் இத் தகு சிற்றுருவச் சிற்பங்கள் சிறப்பான வடிப்புகளாகப் பார்வைக்குக் கிடைக்கின்றன. சோழர் கால ஆடல், இசைக்கலை, ஒப்பனை யாற்றல், சமூகச் செயற்பாடுகள், வாழ்வியல் நிகழ்வுகள் எனப் பல் துறை சார்ந்த பதிவுகளை இத்தகு சிற்பங்களில் பரவலாகக் காண முடிகிறது.

தூண் சிற்பங்கள்

குரங்கநாதர் சுவர்த்தூண்கள் சிலவற்றின் மாலைத்தொங்கல், கட்டுப்பகுதிகள் சிற்றுருவச் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வான வர் கோட்டத்தை வலப்புறம் அணைத்துள்ள உருளை அரைத் தூணின் மாலைத்தொங்கல் செங்குத்து நிலையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு நிகழ்வு சார்ந்த மூன்று காட்சிகளைப் பதிவு செய்துள்ளது.

மகப்பேற்றுக் கொண்டாட்டம்

இடமிருந்து வலமாக முதல் பிரிவில் பனையோலைக் குண் டலங்கள், சரப்பளி, பட்டாடையணிந்த மூன்று பெண்கள். சடைப் பாரத்துடன் நடுவிலிருப்பவர் கருவுற்ற நிலையில் தளர் நடை யுடன் தன் இருபுறத்தும் கொண்டையுடன் நிற்கும் தோழியர் தோள்களில் கைகளை வைத்தவாறு காட்சிதர, அவரை அணைத் துக் கைத்தாங்கலாக அழைத்துவரும் தோழியரில் வலப்புறத்தார் வலக்கையை மடக்கி மார்பருகே கொள்ள, உடலைச் சற்றே குறுக்கித் தாங்கும் இடப்பெண் இடக்கையை நெகிழ்த்தியுள்ளார்.

நடுப்பிரிவில் அழகிய குத்துவிளக்கு. அதன் இருபுறத்தும் தமிழம்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், முத்துமாலை, பட்டாடை அணிந்த இரு இளநங்கையர் குத்துவிளக்கிற்காய் ஒருக்கணித்துக் கால்களை சுவஸ்திகமாக்கி ஒல்கி நிற்கின்றனர். வலப்பெண் கைகளில் செண்டுதாளம். இளநகையுடன் உள்ள இடப்பெண் கைகளில் எண்ணெய்ச் செப்பு. மூன்றாம் பிரிவில் முக்காலி ஒன்றின்மீது அமர்ந்துள்ள மங்கை தொடையில் தாங்க லாக நிறுத்தியுள்ள நரம்புக்கருவியை இசைக்கிறார். அவரது இடுப்பிலிருந்து தலைவரை நீளும் அந்த இசைக்கருவியின் மேல் நுனியில் இடக்கை இருக்க, கருவியின் கீழ்ப்பகுதியில் வலக்கை.

அதே தூணின் கட்டுப்பகுதியில் இரண்டு காட்சிகள். முதற் காட்சியில் மகவுக்குப் பாலூட்டும் பெண். இரண்டாம் காட்சி யில் மகப்பேற்றைக் கொண்டாடும் பெண்களின் கூத்து. பனை யோலைக் குண்டலங்கள், சரப்பளி, கைவளைகள், பட்டாடை அணிந்தவராய் வலக்கையைத் தலைக்கு அணையாக்கி, இடக் கையால் அருகே படுத்திருக்கும் மகவை அணைத்தபடி பாலூட் டும் இளந்தாய் அழகிய கட்டிலில் படுத்துள்ளார். பின்புறம் முடித்த கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தொடை யளவாய்ச் சுருக்கிய ஆடை என அவரது தலைப்புறம் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ள செவிலி, அத்தாயின் தலையை அன் போடு வருடுகிறார்.

தாயின் கால்புறம் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்துள்ள மூன்று பெண்களில், கட்டிலின் பின்னிருந்தவாறு அன்னையின் கால்களைப் பிடித்துவிடும் முதலாமவர், பாலூட்டும் பெண்ணின் தாயாகலாம். அக்காட்சி கண்டு பூரிக்கும் பிற இருவரும் நெருங்கிய உறவுகள் போலும். அவர்களுள் முதலாமவர் பட் டாடையுடன் வலக்கையைத் தொடையிலிருத்தி இடக்கையை மார்பருகே பதாகமாய்க் கொண்டுள்ளார். பனையோலைக் குண்டலங்களுடன் குத்துக்கால் அமர்விலுள்ள இரண்டாமவர் கைகளை மடித்து மார்பருகே கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டுச் சோழர் காலக் கூத்துக்கலையைப் படம்பிடிக் கும் ஆடற்காட்சியில், மூன்று அரிவையர் பனையோலைக் குண்ட லங்களும் சிற்றாடையும் விளங்க, வெவ்வேறு நிலைகளில் ஆடு வதைக் காணமுடிகிறது. உடலை வில் போல் வளைத்துக் குனித்தல் நடனம் நிகழ்த்தும் முதற்காரிகை வலக்கையைத் தலை மீதிருக்குமாறு உயர்த்தி, இடக்கையைப் பின்புறம் நெகிழ்த்தியுள்ளார். மண்டலநிலை நடுப்பெண் இடப்பாதத்தைப் பார்சுவத்திலும் வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி, வலக்கையைப் பதாகத்தில் கொண்டுள்ளார். இடக்கை அர்த்த ரேசிதத்தில். மூன்றாம் நங்கையின் சிற்பம் தெளிவாக இல்லை.

தொங்கலிலும் கட்டிலுமாய் இணைந்து விளைந்துள்ள இக் காட்சித்தொடர் ஊர்ப்புறத்துக் குடும்ப நிகழ்வையும் அதன் காரண மான களியாட்டங்களையும் கண்முன் நிறுத்துகிறது. கருவுறுதல், மகப்பேறு சார்ந்த சடங்குகளை இத்தனை விரிவான அளவில் படக்காட்சி போலத் தமிழ்நாட்டின் வேறெந்தச் சோழர் காலக் கோயில்களிலும் கண்டதில்லை. மேல்பாடிக்கு அருகிலுள்ள திரு வலம் சிவன்கோயிலின் அரைவட்ட வடிவிலான கல்தொட்டி யின் புறப்பகுதியில் விஜயநகரக் காலப் படப்பிடிப்பாக மகப் பேற்றுடன் தொடர்புடைய சடங்குகள் காட்டப்பட்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தக்கது. 15

கரணக் காரிகை

தெற்கிலுள்ள நான்முக அரைத்தூணின் கட்டும் தொங்கலும் இசை, ஆடற்காட்சியைக் கொண்டுள்ளன. இரு பிரிவுகளாக்கப் பட்டுள்ள தொங்கலில் வலப்புறம் வக்ஷசுவஸ்திகத்தில் கரணக் காரிகையும் இடப்புறம் அவ்வாடலுக்கு இசைநயம் கூட்டும் இடக்கைக் கலைஞரும் பொலிகின்றனர். மண்டலத்தில் கால் களைக் குறுக்கீடு செய்து பாதங்களைத் திரயச்ரமாக்கியுள்ள ஆட லழகியின் வலக்கை நெகிழ, இடக்கை மார்பருகே பதாகம் காட்டு கிறது. வலச்சாய்வாயுள்ள முகம் இடந்திரும்ப, தமிழம்கொண்டை, பட்டாடையுடன் உள்ள அவரது செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். சரப்பளி, தோள், கை வளைகள், கடகவளை, இடைத் தொங்கலுடன் அவரது கழுத்தில் மெல்லிய ஆரம். பெருங் கொண்டையும் சிற்றாடையும் இடப்புறம் பறக்கும் தோள்துண் டும் பெற்று, நீள் வெறுஞ் செவிகளுடன் மண்டலப் பார்சுவத்தில் பாதங்கள் அமைய, தோளின் இடப்புறத்திருந்து தொங்கும் இடக் கையை இயக்கும் ஆடவரின் வலக்கை கருவியை முழக்க, இடது கை இசைக்கருவியின் கயிற்றுப்புரிகளுக்குள் நர்த்தனமிட்டு இசையை ஆடலுக்குத் தக்கவாறு வெளிப்படுத்துகிறது. இது மேடைநிகழ்ச்சி என்பதை உணர்த்துமாறு இருவர் சார்ந்தும் பின்னணியில் மலர்த் தோரணங்கள்.

பூதக்கலைஞர்கள்

செவ்வகத் துண்டாய்ச் செம்மைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப் பகுதியில் வலமும் இடமுமாய்க் குந்திய பூதக்கலைஞர்கள். இடை யில் வலக்காலைத் தளத்திலிருக்குமாறு மடித்து அமர் நிலையில் விருச்சிகக் கரணம் காட்டும் ஆடலர். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், கழுத்தணி, இடைக் கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள மூவருமே நேர் நோக்கிய அமர்வினர். இடஒருக்கணிப்பிலுள்ள முதற்பூதம் செண்டுதாளம் இசைக்க, முப்புரிநூலுடன் வலஒருக்கணிப்பிலுள்ள மூன்றாம் பூதம் இடத்தோளிலிருந்து தொங்கும் மத்தளம் ஒத்த தோலிசைக் கருவியை இரு கைகளாலும் முழக்குகிறது. இடக்காலைத் தேள் கொடுக்கென வளைத்து விருச்சிகம் காட்டும் இடைப்பூதம் உதர பந்தம், முப்புரிநூல், கடகவளை பெற்றுள்ளது. அதன் வலக்கை மார்பருகே அமைய, இடக்கை அர்த்தரேசிதமாக, முகம் இடச் சாய்வாக உள்ளது.

ஆடலும் இசையும்

தென்மேற்குக் கர்ணபத்தியைத் தழுவியுள்ள நான்முக அரைத் தூணின் கிழக்குமுகத் தொங்கலிலும் ஆடல், இசைக் கலைஞர்களின் காட்சிதான். இருவருமே பெண்கள். மண்டலத்தில் வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இடப்பாதத்தைப் பார்சுவத் திலும் இருத்தி, இடஒருக்கணிப்பில் வலக்கையைப் பதாகமாக்கி, இடக்கையை ரேசிதத்தில் வீசியுள்ள ஆடலரசியின் இடைக்கட் டுடனான சிற்றாடை இடைத்தொங்கலும் பெற்றுள்ளது. முகம் வலச்சாய்வாய் இடத்திருப்பத்தில். தமிழம்கொண்டை, பனை யோலைக் குண்டலங்கள் அணிந்துள்ள அவரது உடல்வளைவு கள் ஆடலுக்கேற்ப அழகு காட்டுகின்றன. தொங்கலின் இடப் புறத்தே குழலிசைக்கும் நங்கை, பட்டாடையும் நீள்குழலுமாய் நிற்கிறார். பின்புறம் காட்டி முகத்தை வலப்புறமாய்த் திருப்பிக் குழல் பிடித்திருக்கும் அந்நங்கையின் கொண்டை ஊரகப் பெண் களின் தலையலங்காரத்தை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டிலுள்ள பின்புறம் காட்டும் சிற்றுருவச் சிற்பங்களில் இணையற்ற பேரழ குடன் திகழும் சிற்பமாக இதைக் குறிக்கலாம். இப்பெண்ணின் வலப்புறம் நிற்கும் குள்ளச் சிறுபூதம் செண்டுதாளம் வாசிக்கிறது. பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடையுடன் இடஒருக் கணிப்பிலுள்ள அதன் முகம் குழலிக்காய்த் திரும்பியுள்ளது.

பூதக்குறும்பு

இத்தூணின் இடைக்கட்டில் சடைமகுடம், உதரபந்தம், சிற்றாடை பெற்ற மூன்று பூதங்கள் அமர்ந்துள்ளன. வலஒருக் கணிப்பில் சற்றே வலச்சாய்வாய் உள்ள முதல் பூதம் நடுப்பூதத் தைக் கடைக்கண் பார்வையால் நோக்குகிறது. தோள் வளைக ளோடுள்ள அதன் கைகள் வலப்புறத்துள்ள ஒருமுக முழவை வாசிக்க, இடஒருக்கணிப்பில் அச்சம்நிறை பார்வையுடன் இடச் சாய்வாய் உள்ள மூன்றாம் பூதத்தின் முகம் வலத்திருப்பமாக உள்ளது. பனையோலைக் குண்டலங்களுடனுள்ள அதன் இரு கைகளும் பிடித்திருப்பது வீணையாகலாம். இரண்டிற்கும் இடை யிலுள்ள சுருள்முடிப் பூதம் கடக, கைவளைகள் உள்ள தன் இரு கைகளையும் இதழ்க்கடையில் வைத்து வாயைக் கிழிக்குமாறு போலப் பழிப்பு காட்டுகிறது. மூன்று பூதங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளபோதும் அவற்றுக்குரிய ஆறு கால்களுக்குப் பதிலாக நான்கு கால்களே காட்டப்பட்டுள்ளன. முதல் பூதத்தின் இடக் கால் நடுப்பூதத்தின் வலக்காலாக அமைய, மூன்றாம் பூதத்தின் வலக்கால் அதன் இடக்காலாகியுள்ளது. இது போன்ற கண் மயக் குக் காட்சிகள் சிற்ப அற்புதங்களாய்ப் பாச்சில் அவனீசுவரம் உள் ளிட்ட பல முற்சோழர் கோயில்களில் காணக்கிடைக்கின்றன. 16

மேற்கு நான்முகத்தூணின் இடைக்கட்டில் பூதக்குறும்பு களாய் இரண்டு காட்சிகளும் தொங்கலில் ஆடல் நிகழ்வுகளாய் இரண்டு காட்சிகளும் பதிவாகியுள்ளன. தூண்கட்டின் முதற் படப்பிடிப்பு கண் மயக்குக் காட்சியாக உள்ளது. இரண்டு பூதங் கள் மேலும் கீழுமாகவும் இரண்டு பூதங்கள் பக்கவாட்டிலும் படுத் திருக்குமாறு படைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் நான்கு உடல் களுக்கு இரண்டு தலைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக நேர்த்தியாக இரண்டு தலைகளுக்கேற்ப நான்கு உடல்களைப் பொருத்தமான கிடத்தல் கோலங்களில் காட்டியுள்ள முற்சோழர் சிற்பிகளின் கற்பனையாற்றலும் கைச்செறிவும் வியத்தகு சிறப்பின. வழக்கமாகச் சோழப் பூதவரிகளில் இடம்பெறும் பூதத்தின் பிறப் புறுப்பை வாத்து கவ்வும் காட்சி அடுத்துள்ளது.

சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், உதரபந்தம், கை வளைகள், சிற்றாடையுடன் வலக்காலால் வாத்தை உதைத்தவாறு கண்ணீருடன் கதறும் அப்பூதத்தின் வலக்கை தலை மீதுள்ளது. இடக்கை வாத்தை விலக்கும் முயற்சியில். பூதத்தின் துன்பத்தையோ விலக்க முயற்சிக்கும் அதன் உழைப்பையோ சற்றும் பொருட்படுத்தாத வாத்து, கால்களால் பூதத்தை உதைத்தவாறே தன் செயலில் முனைப்பாக உள்ளது. பொதுவாகப் பிற கோயில்களில் காணப்படும் இத்தகு சிற்பங்களில் வாத்து பூதத்தை உதைக்கும் செயற்பாடு இருப்பதில்லை. அவ்வகையில் இச்சிற்பம் தனித் தன்மையதாக ஒளிர்கிறது. வலபி வரியிலேயே இடம்பெறும் இச்சிற்பம் இங்குத் தூண்கட்டில் காணப்படுவதும் இக்கோயிலின் சிறப்பெனலாம்.

சுவஸ்திகக் கரணங்கள்

அதே தூணின் தொங்கல், பூச்சரங்களால் இரண்டாகப் பிரிக் கப்பட்டு சுவஸ்திகக் கரணக்கோலங்களைப் பதிவுசெய்துள்ளது. இரண்டு பிரிவுகளிலுமே மேற்பகுதியில் மூவரும் கீழ்ப்பிரிவில் இரு பூதஇசைக்கலைஞர்களும் உள்ளனர். முதற் பிரிவின் மேற் பகுதியில் வலப்புற ஆடலரசியின் வடிவம் சிதைந்துள்ளது. தமிழம் கொண்டையும் குண்டலங்களும் கைவளைகளும் பட்டாடையும் பெற்று நடுவிலுள்ளவர் கால்களைக் குறுக்கீடு செய்து சுவஸ்திகக் கரணத்தில் மார்பருகே உள்ள வலக்கையில் பதாகம் காட்டி, இடக்கையை அர்த்தரேசிதமாய் வீசியுள்ளார். அவரின் இடப்புறத்தே இடஒருக்கணிப்பிலுள்ள பெண்கலைஞர் கைகளில் செண்டுதாளம். கீழ்ப்பகுதி பெரிதும் சிதைந்துள்ளதால், அங்குள்ள பூதக்கலைஞர்களின் கைக்கருவிகளை இனங்காண முடியவில்லை.

தொங்கலின் இடப்பிரிவில் உள்ள மூவரில் முதலிரு பெண் களும் வக்ஷசுவஸ்திகக் கரணத்தில் அவிநயிக்கும் அழகிகளாய் வலக்கையை மார்பருகே பதாகமாக்கி, இடக்கையை நெகிழ்த்தி யுள்ளனர். தமிழம்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை பெற்றுள்ள இருவரில் கூடுதலாகச் சரப்பளியும் அணிந்துள்ள முதலாமவர் இடப்பாதத்தைப் பார்சுவமாக்கி வலப் பாதத்தை அதன் முன் குறுக்கீடு செய்து அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தியுள்ளார். முகம் இடச்சாய்வாக இருந்தபோதும் வலத் திருப்பமாக எழில் காட்டுகிறது. முதன்மைக் கலைஞராய்ப் பொலி யும் நடுக்கலைஞர் வலப்பாதத்தைப் பார்சுவமாக்கி இடப்பாதத்தை அதன் முன் குறுக்கீடு செய்து அக்ரதலசஞ்சாரமாக்கியுள்ளார். முகம் இடச்சாய்வில் இடத்திருப்பமாக உள்ளது. மூன்றாவதாக உள்ள ஆடவ இசைக்கலைஞர் இடஒருக்கணிப்பில் ஆடலரசி யர் போலவே கால்களைக் குறுக்கீடு செய்து ஆடியவாறே செண்டு தாளம் இசைக்கிறார். அவரது இடப்பாதம் பார்சுவமாக, வலப் பாதம் அதன் பின் குறுக்கீடு செய்த நிலையில் அக்ரதலசஞ்சாரத் தில். இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள தொங்கலின் கீழ்ப் பகுதிப் பூதங்களில் வலமுள்ளது அமர்நிலையில் இரு கால்களுக்கிடை யில் உள்ள குடமுழவை இயக்க, இடமுள்ளது நின்றவாறே இலைத்தாளம் இசைக்கிறது. பொதுவாக இறையாடல் காட்சி களிலேயே காட்டப்படும் குடமுழவு இங்கு மானுட ஆடலின் தாளக் கருவியாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

அர்த்தரேசிதக் கரணம்

விமானத்தின் வடபுற நான்முக அரைத்தூணின் தொங்கல் இரு பிரிவுகளாகி இரண்டு ஆடற்காட்சிகளைப் பெற்றுள்ளது. முதல் காட்சியில் பனையோலைக் குண்டலங்களும் இடைத் தொங்கலு டனான பட்டாடையும் அணிந்து அர்த்தரேசிதக் கரணம் காட்டும் பெண்ணின் வலக்கை பதாகத்திலும் இடக்கை அர்த்த ரேசிதத்திலும் உள்ளது. வலப்பாதம் பார்சுவமாக, அதன் பின் குறுக்கீடு செய் யப்பட்டுள்ள இடப்பாதம் அக்ரதலசஞ்சாரத்தில் அமைய, உடலை இடஒருக்கணிப்பிலும் முகத்தை வலச் சாய்விலும் காட்டி ஆடும் தமிழம்கொண்டை அழகியின் உடல் மொழி கண்களை நிறைக்கும். ஆடலுக்கு இடக்கைக் கருவியின் இசையால் தாளம் தரும் இடப்புற ஆடவக்கலைஞர் மண்டலப் பார்சுவத்தில் சரப்பளியும் சிற்றாடையுமாய்க் காட்சிதருகிறார். அவரது தோளிலிருந்து தொங் கும் இசைக்கருவியின் கயிற்றுப்புரிகளைக் கலைஞரின் இடக்கை இயக்க, வலக்கை முழவு முகத்தில் கொட்டித் தாளம் தருகிறது.

குழலோடு ஆடல்

இரண்டாம் பிரிவில் பனையோலைக் குண்டலங்களும் சிற்றாடையுமாய் உள்ள ஆடவ இசைக்கலைஞர் சுவஸ்திகத்தில் கால்களமைத்து ஆடியவாறே தம் இரு கைகளிலும் உள்ள இலைத் தாளங்களை இசைக்க, நடுவிலுள்ள குழல்கலைஞரும் இடப்பாதம் பார்சுவத்தில் அமைய, வலப்பாதம் அதன் பின் குறுக்கீடாக அக்ரதலசஞ்சாரத்திலிருக்கக் குழலிசைத்தவாறே வலச்சாய்வாய் முகத்தை இடந்திருப்பி சுவஸ்திகத்தில் ஆடுகிறார். பட்டாடை அணிந்துள்ள அவரது இருகைகளிலும் நீளமான குழல். குழலி சைத்தவாறு ஆடும் காட்சிகள் தமிழ் நாட்டுக் கோயில்களில் அரிதா னவை. உச்சிக்கொண்டையும் மீசை தாடியுமாய் இடப்புறத்துள்ள வர் ஆடல் ஆசிரியராகலாம். அவரது இடக்கை மார்பருகே.

சிவபெருமானின் ஊர்த்வஜாநு

முகமண்டப வடபுற அரைத்தூண்களில் இரு தொகுதிகள் உள்ளன. ஒரு தூணின் கட்டுப்பகுதியில் சிவபெருமானின் ஊர்த்வ ஜாநு கரணமும் மற்றொரு தூணின் மாலையில் சண்டேசுவர அருள்மூர்த்தி சிற்பமும் இடம்பெற்றுள்ளன. வலக்காலை முழங் காலளவில் மடக்கி இடைவரை உயர்த்தியுள்ள சிவபெருமானின் இடத்திருவடி பார்சுவமாக உள்ளது. அவரது வல முன் கை காக் கும் குறிப்பு காட்ட, இட முன் கை அர்த்தரேசிதத்தில். பின் கை களில் உடுக்கை, முத்தலைஈட்டி. சடைமகுடம் மகர, பனை யோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரி நூல், உதர பந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள இறைவ னின் உடல் இடஒருக்கணிப்பில் இருக்க, முகம் இடச் சாய்வில்.

இறையாடலைக் காணுமாறு போல நந்தி இடப்புறம் நிற்க, கீழே இறைவனின் இருபுறத்தும் இசைக்கலைஞர்கள். சடைமகு டத்துடன் இலலிதாசனத்திலுள்ள தாளப்பூதம் இறைவனைப் பார்த்தவாறே செண்டுதாளம் இயக்கச் சடைமகுடம், பனையோ லைக் குண்டலங்கள், சிற்றாடை பெற்றுள்ள முழவுப்பூதம் இரு கால்களுக்கிடையில் இருத்தியுள்ள குடமுழவை முழக்கியவாறே இறைவனை நோக்கியுள்ளது. இச்சிற்பத்தொகுதியில் மேல்புறத் துள்ள தோரணவளைவும் பூத்தொங்கலும் இவ்வாடலை மேடைக் காட்சியாக்கிக் கண்களை ஈர்க்கின்றன.

சண்டேசுவர அருள்மூர்த்தி

இங்குள்ள சண்டேசுவர அருள்மூர்த்தி சிற்பத்தொகுதி சிறப் பானது. தலைதாழ்த்திப் பத்திமையுடன் கைகளைக் குறுக்கீடு செய்து பணிவுடன் மண்டியிட்டுள்ள சண்டேசுவரரின் இடையில் சிற்றாடை. தலைமுடி சடைப்பாரமாய் விரிந்துள்ளது. அவர்முன் சடைமகுடமும் சிற்றாடையுமாய் இருக்கையில் அமர்ந்துள்ள சிவ பெருமானின் முன்னிரு கைகளில் கொன்றைமாலை. தொகுதி யின் மேற்புறத்தே தவப்பேறு செய்த சண்டேசுவரரை வாழ்த்து மாறு வானவர்கள். இந்நிகழ்வு முல்லை நிலத்தில் நிகழ்ந்ததைச் சுட்டுமாறு இறைவன் இருக்கை முன் இரண்டு மான்கள்.

யானையை அழித்த மூர்த்தி

மேற்குத் தூண் மாலைத் தொங்கலில் யானையை அழித்த மூர்த்தி. யானைத்தோல் மீது வலப்பாதம் இருத்தி, இடக்காலை ஊர்த்வஜாநுவாக்கி, முழங்காலால் யானைத்தலைக்கு முட்டுக் கொடுத்தவாறு வலஒருக்கணிப்பிலுள்ள இறைவனின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். சடைப்பாரம், சிற்றாடை, முப்புரி நூல் பெற்றுள்ள அவரது வல முன் கை மார்பருகே. இட முன் கை சூசியில் அமைய, பின்கைகள் உரிக்கப்பெற்ற யானைத் தோலைப் பிடித்தவாறுள்ளன. இறைவனின் இடப்புறம் இட ஒருக் கணிப்பிலுள்ள உமையின் வலக்கை நெகிழ்ந்துள்ளது. கரண்ட மகுடம், சரப்பளி, பட்டாடை அணிந்துள்ள அம்மையின் இடக் கையில் மலர். நிகழ்விடத்தை நீங்குமாறு போலத் திரும்பியுள்ள உமையைத் தொடர்வது போலச் சிறுபிள்ளையாய் முருகன். யானையின் துளைக்கை கொடிக்கருக்கு வளைவுச் சுற்றில் சுழன்றுள்ளது. இவ்வரிய காட்சியைக் கண்களால் பருகுமாறு போலத் தொகுதியின் இடப்புறம் நிற்கும் முனிவரின் வலக்கை நிகழ்வு போற்ற, இடக்கை மார்பருகே.

மகரதோரணங்கள்

விமானத்தின் மூன்று சாலைக் கோட்டங்களின் மேலும் மகர தோரணங்கள் தலைப்பிட்டுள்ளன. அவற்றுள் மேற்குத் தோரணம் சிறக்க அமைந்துள்ளது.

அரக்கனை அழிக்கும் காளி - 1

தெற்குச் சாலைக் கோட்ட மகரதோரணத்தில் கீழே இரண்டு பெருமகரங்களும் மேலே இரு சிறுமகரங்களும் உமிழும் யாளி வீரர்கள் உயிர்த்துடிப்புடன் இருபுற மேல்வளைவிலும் வீரம் காட்ட, இரண்டாம் வளைவாய் நான்கு தோரணத் தொங்கல்கள். ஒவ்வொரு தொங்கலுக்குள்ளும் ஒரு பூதம். கீழ்வளைவில் அரக் கனை அழிக்கும் காளி. அழகிய பதக்க வளையத்தால் இணைக் கப்பட்டுள்ள சிறு மகரங்களின் கழுத்துப் பகுதிக்கு மேல், தோர ணத்தின் நெற்றிப்பொட்டென எழிலார்ந்த கீர்த்திமுகம். வலப் பெரு மகரவாயிலிருந்து வெளிப்படும் யாளி வீரர் மேல் நோக்கி நகர, சிறுமகரம் உமிழும் மூன்று வீரர்கள் அவரை எதிர்கொள் கின்றனர். அனைவர் கைகளிலும் ஓங்கிய வாளும் கேடயமும். அதற்கு நேர்மாறாக இடப்பெரு மகரவாயிலிருந்து மூன்று யாளி வீரர்கள் வெளிப்பட்டு மேல் நோக்கி நகர, சிறுமகரம் உமிழும் ஒற்றை வீரர் அவர்களை எதிர்கொள்கிறார். அவர்தம் கைகளிலும் ஓங்கிய வாளும் கேடயமும். இருபக்க வீரர்களுமே சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், சிற்றாடை அணிந்துள்ளனர். அனைத்து யாளிகளும் அகலத்திறந்த வாயுடன் ஆர்ப்பரிக்க, தோரணத்தின் மேல் வளையம் முழுவதும் போர் முழக்கம்தான்.

நடுவளையத் தொங்கல்கள் நான்கிலும் குந்திய நிலையில் அழகுப் பூதங்கள். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல் அணிந்த அவற்றுள், வலக்கையை முழங் கால் மீதிருத்தி, இடக்கையால் தொங்கலைப் பிடித்துள்ளது இரண்டாவதாக உள்ள பெண் பூதம். அதன் வலமுள்ள பூதத்தின் கைகளும் முழங்கால்கள் மீதே. வலக்கை மட்டும் முஷ்டி முத்திரையில். இடப்பூதங்களில் கீழ்ப்பூதம் இருகைகளையும் முழங்கால்கள் மீதிருத்தி நக்கல் செய்ய, மேல்பூதம் வலக்கையால் அதற்கான பதில் குறிப்பு காட்டி, இடக்கையை முழங்கால் மீதிருத்தியுள்ளது.

கீழ்வளைய வெளிவிளிம்புகளில் வலப்புறத்தே ஓங்கிய கத்தி யும் கேடயமுமாய் ஒரு வீராங்கனை விரைய, இடப்புறத்தே கால் மடக்கிச் சண்டையிடுபவராய்க் கத்தி, கேடயத்துடன் வீரர் ஒருவர். வளைவிற்குள் வலக்காலைத் தரையில் ஊன்றி இடக்காலை உயர்த்தியுள்ள காளியின் எட்டுக்கைகளிலும் கருவிகள். அவரது இட முன் கை மார்பருகே அமைய, ஓங்கிய வலக்கையில் மழு. அம்மையின் எதிரே ஒடுங்கிச் சுருங்கிய பாவனையில் தோற்று வீழ்ந்தவனாய் அரக்கன்.

நிலமகள் ஏந்திய பன்றியாழ்வார்

நான்கு வளைவுகளாக விளங்கும் மேற்குச் சாலைக் கோட்டத் தோரணத்தின் மேல் வளைவில் கொடிக்கருக்கு. இரண்டாம் வளைவு மேலும் கீழும் மகரங்களில் முடிகிறது. பெரு மகரங்களாய் விளங்கும் கீழ்மகரங்களின் தோகை கோட்டத்தை அணைத்துள்ள உருளை அரைத்தூண்களின் மீது படிய, அகலத் திறந்த அவற்றின் வாய்களிலிருந்து வெளிப்படும் யாளிவீரர்கள் கைகளில் வாளும் கேடயமும் கொண்டுள்ளனர். மேல்மகரங் களின் வாய் களிலிருந்தும் இது போல் யாளிவீரர் வெளிப்பாடு. பெருமகரங்களின் கழுத்தில் பக்கத்திற்கொரு பூதம் இருகைகளை யும் உயர்த்தியவாறு மகிழ்வுப் புன்னகையுடன் இவர்ந்திருக்க, மேல்மகரங்கள் இணையுமிடத்திருந்து இறங்கும் பூத்தொங்கல் மூன்றாம் வளைவைப் பக்கத்திற்கிரண்டாகப் பிரித்துள்ளது.

பூச்சரங்களால் சூழப்பட்டுள்ள இந்நான்கு பிரிவுகளிலும் சடைப்பாரம், குண்டலங்கள், கழுத்தாரம், சிற்றாடை பெற்ற அழகிய பூதங்கள். வலப்புறத்தே இலலிதாசனத்திலுள்ள முதற் பூதத்தின் இடக்கை பதாகம் காட்ட, வலக்கை மேலுயர்ந்துள்ளது. முப்புரி நூல், உதரபந்தம் கொண்டுள்ள இரண்டாம் பூதத்தின் வலக்கை கடகம் காட்ட, இடக்கை குடை போல் தொங்கும் கொடிக்கருக்கில். வயிற்றிலும் ஒரு முகம் பெற்றுள்ள மூன்றாம் பூதம் குந்தியவாறு விரல்களால் இதழ்களை விரித்துப் பழிப்பு காட்டுகிறது. இலலிதா சனத்திலுள்ள நந்திமுக நான்காம் பூதம் சிரட்டைக்கின்னரி வாசிக்கிறது.

நான்காம் வளைவாக வரையறுக்கப்பட்டிருக்கும் கீழ்வளை வில் நிலமகள் ஏந்திய பன்றியாழ்வாரின் எழிலார்ந்த படைப்பு. வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரமாக்கியுள்ள அவரது இடமுழங் கால் உயர்த்தப்பட்டுள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்ட லம், பட்டாடை பெற்றுள்ள நிலமகள் இரு கைகளாலும் இறைவ னைத் தொழுதவாறு அவரது உயர்த்திய தொடையில் அமர்ந்துள் ளார். பின்கைகளில் சக்கரம் சங்கு ஏந்தியுள்ள இறைவனின் வல முன் கை தொடைமீதிருக்க, இட முன் கை இறைவியை அணைத் துள்ளது. கரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், கழுத்தாரம், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பில் உள்ள அவரது தலை உயர்ந்துள்ளது. கீழே இடப்புறம் பாம்பரசனும் அவன் தேவியும் ஒருவர் மேல் ஒருவ ராகக் கிடக்க, பாம்பரசனின் கைகளில் வாள், கேடயம்.

அரக்கனை அழிக்கும் காளி - 2

கீழ்ப்பகுதி சற்றே சிதைந்திருந்தாலும் கண்களை நிறைக்கு மாறுள்ளது கருவறைக்குள்ளிருக்கும் மகரதோரணம். கீழே பக்கத் திற்கொன்றாக உள்ள இரு பெருமகரங்களை நோக்கியவாறு மேலே நடுப்பகுதியில் பக்கத்திற்கொன்றாக இரு சிறுமகரங்கள். பெருமகரங்களின் கழுத்தில் இருகைகளையும் உயர்த்திய நிலை யில் பக்கத்திற்கொரு வீரர். அங்காத்திருக்கும் அவற்றின் வாயி லிருந்து வலப்புறத்தும் இடப்புறத்துமாய்ப் பக்கத்திற்கு நான்கென எட்டுப் போர்வீரர்களின் அணிவகுப்பு. அனைவருமே ஓங்கிய வாளும் உயர்த்திய கேடயமுமாய் வெளிப்பட்டுள்ளனர். மகர வாயிலிருந்து வெளிப்படும் நிலையிலுள்ள வீரர்களை அதற் கேற்ற வகையில் சற்றே மடங்கிய கால்களுடன் காட்டியுள்ளமை சிறப்பாகும். சிறுமகரங்களும் வாய்திறந்து பக்கத்திற்கொரு வீரரை வெளிப்படுத்தியுள்ளன. இச்சிறுமகரங்கள் இணையுமிடத்தை மணிப்பதக்கமிட்டுச் சிறப்பித்துள்ளனர். இவ்வீரர் அணிவகுப் புக்கு மேலிருக்குமாறு உள்ள வளைவில் முகமண்டப வாயிலில் காட்டியுள்ளாற் போன்ற பாம்புத்தலைக் கொடிக்கருக்குத் தொடர். இத்தொடரின் இடையில் தோரணத்தின் நெற்றிப்பொட்டாக சிறு மகரங்களுக்கு மேலிருக்குமாறு கொடிக்கருக்கு, மணிவளையப் பதக்கமென நடுவே கீர்த்திமுகம்.

வீரர் அணிவகுப்பிற்குக் கீழுள்ள வளையம் நடுவில் மலர்ப் பதக்கங்கள் பெற்று இருபுறத்தும் முத்துத்தொங்கல்களால் பக்கத் திற்கு மூன்றென ஆறு பிரிவுகள் பெற்றுள்ளது. வலமும் இடமு மாக உள்ள முதல் பிரிவில் அமர்நிலைப் பூதங்கள். இடைப்பிரி வில் யாளிவீரர்கள். பதக்கத்தை நெருங்கும் பிரிவில் சங்கூதும் பூதங்கள். மகரதோரணத்தின் கீழ்வளைவு முத்தாய்ப்பாகப் போர்க் கோலக் காளியைக் கொண்டுள்ளது. ஒரு கையில் வாளும் ஒரு கையில் கேடயமுமாகப் போரில் தோற்றுக் கீழே வீழ்ந்துள்ள அரக்கனின் வயிற்றில் அம்மையின் இடமுழங்கால் அழுந்த, அவன் மார்பை அம்மையின் இடக்கைகளுள் ஒன்று அழுத்து கிறது. பிற கைகளில் குறுந்தடி, வாள், கேடயம் உள்ளிட்ட கருவி கள். இடக் கால் மடிப்பிற்கு ஏற்ப வலக்கால் நீண்டுள்ளது. அம்மையின் தோற்றமே அவரின் வீரப்பெருமிதத்துக்கும் வலிமை நிறை போர் முறைக்கும் கட்டியம் கூறுகிறது. வீரத்தின் உச்சம் காட்டும் இவ் வளைவுக் காட்சியின் இருபுறத்தும் காளியின் பேய்த் தோழர்கள் பனையோலைக் குண்டலங்களும் சிற்றாடையு மாய். வலப்புறத்துள்ள பெண் பேய் இருகைகளையும் வாயருகே கொண்ட நிலையில் இடக்காலை மடக்கி, வலக்காலைப் பின்னோக்கி நீட்டியுள்ளது. இடப்புற ஆண் பேய் வலக்காலை மடக்கி,
இடக்காலைப் பின்னோக்கி நீட்டிய நிலையில் இடக் கையை மார்பருகே கொண்டு, வலக்கையை உயர்த்தி வளையத் தைத் தொட்டவாறு காளியைப் போற்றுகிறது.

படங்கள்குரக்குத்துறை விமானம், முகமண்டபம்விமானத்தின் தெற்கு, மேற்குத் தோற்றம்

கவரிப்பிணாக்கள்

மகப்பேற்றுக் கொண்டாட்டம்வக்ஷசுவஸ்திகக் கரணம்யானையை அழித்த மூர்த்திநீள்குழலிசைக்கு ஆடல்விமான வடக்குச் சுவர்க் கோட்டங்கள்வடக்குக் கோட்ட மகரதோரணம்பிச்சையேற்கும்அண்ணல்வானவர்தெற்குக் கோட்ட மகரதோரணம்மேற்குக் கோட்ட மகரதோரணம்மேற்கு மகரதோரணக் கீழ்வளைவுதெற்கு மகரதோரணக் கீழ்வளைவுமுகமண்டப வாயில்முகமண்டபம்அனர்பித ஆரம்

குறிப்புகள்
1. 1985 முதல் 1994வரை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வர லாற்றாய்வு மைய ஆய்வர்களின் பல்வேறு காலக்கட்ட ஆய்வு களுக்கு உட்பட்ட இக்கோயில் பற்றிய குறிப்புகள் அவ்வப்போது வெளியாகியுள்ளன. The Hindu 15. 7. 1994, T. Shanthi, Kuranganatha Temple at Srinivasanallur - A Study, M.A. Dissertation Submitted to Bharathidasan University, 1994. ஆய்வுக்கு இசைவளித்துத் துணையான திரு. யத்தீஸ்குமார் உள்ளிட்ட தொல்லியல் அலுவலர்கள் அனைவருக்கும் உள மார்ந்த நன்றி. உடனிருந்து உதவிய பேராசிரியர் அர. அகிலா, முசிறி மருத்துவர் தா. அருள்மொழி, திரு. பெ. மாணிக்கம் குடும்பத்தார், திருமதி மு. பி. நந்தினி, அவரது உறவினர்கள் திரு. க. மருதை, திருமதி பாக்கியம் இணையர், திருமதி பரமேசுவரி, கோயில் காவலர் திரு. க. தேக்கன் ஆகியோர் நன்றிக் குரியவர்கள்.
2. பிரதிபந்தத் தாங்குதள விமானங்கள் தமிழ்நாடு தழுவிய அள வில் பலவாக இருந்தபோதும் ஒழுங்கும் கவர்ச்சியும் ஒருங் கிணைவும் மிக்கனவாய்ச் சிலவற்றின் தாங்குதளங்களையே குறிக்கமுடியும். சரியான அளவீடுகளில் அழகுணர்ச்சிக்கு முதன்மையளித்துக் கட்டுமானத்தை மேன்மைப்படுத்தும் வள மான சிந்தனை குரங்கநாதரை உருவாக்கிய சிற்பிகளிடம் இருந் தமையை ஒரு சுற்றுநடையில் உணரமுடிகிறது. கட்டமைப்பு நேர்த்தி பத்திப் பிரிப்புகளிலும் அவற்றுக்கான தூண் தேர்வு களிலும் அமைந்துள்ளாற் போலவே இக்கோயிலின் தாங்கு தளத்திலும் கண்சிமிட்டுவது கண்டுணரத்தக்க சிறப்பாகும்.
3. பிரதிபந்தத் தாங்குதளத்தில் பிரதிமுகங்களாய் யாளிகளோடு யானைகளும் காட்டப்படும் போக்கினைச் சிராப்பள்ளி மாவட்ட முற்சோழர் கோயில்களுள் ஒன்றான தவத்துறை சப்தரிஷீசுவரர் கோயிலிலும் காணமுடிகிறது.
4. இது போன்ற அமைப்பைப் பிற சிராப்பள்ளி மாவட்டக் கோயில் தாங்குதளங்களில் காணக்கூடவில்லை. குரங்கநாதர் கோயிலுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த செதுக்கலாக இதைக் கொள்ளலாம்.
5. ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை உடைய விமானங்களில் கீழ்த்தளம் ஆரம் கொள்ளாமல் இரண்டாம் தளம் ஆரம் பெறும் பாங்கினைப் பல்லவர் கலைமரபிலேயே காணமுடி கிறது. சான்று: மாமல்லபுரம் கடற்கரைத் தளிகள்.
6. கீழ்த்தளம் ஒப்பவே அடுத்த தளமும் கீழ்த்தளம் ஒட்டி உள் ளடங்காமல் எழும் அமைப்பினை முதல் முறையாக இக் கோயில் விமானத்தில்தான் காணமுடிகிறது. பல்லவத் தளி களில் அரும்பாத இப்புதிய உத்தியே தஞ்சாவூர் இராஜராஜீசு வரத்திலும் அதன் வழிப் பிறந்த கங்கைகொண்ட சோழீசு வரத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது.
7. தளக்கட்டுமானம் ஆரத்தினின்று தள்ளியமையும் இது போன்ற அனர்ப்பித விமானங்களில் திருப்பட்டூர்க் கயிலாச நாதர் கோயில் விமானம் மட்டுமே சாந்தாரக் கருவறை பெற் றுள்ளது. ஆனால், அங்கு அனர்ப்பிதமாக உள்ளது முதல்தள ஆரம். குரங்கநாதர் விமானத்திலோ இரண்டாம் தள ஆரம் அனர்ப்பிதமாக அமைந்துள்ளது. ஆரமும் தளமும் இடை வெளியற்று அர்ப்பிதமாக ஒட்டி அமையும் விமானங்கள் சில சாந்தாரக் கருவறை பெற்றுள்ளன. பல்லவர் பகுதியில் காஞ்சிபுரம், உத்தரமேரூர் கயிலாசநாதர் விமானங்கள், சோழர் பகுதியில் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், கங்கைகொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழீசுவரம் விமானங்கள் இதற்குச் சான்றாகும்.
8. பொக்கணம் பற்றிய விரிவான தரவுகளுக்கு: இரா. கலைக் கோவன், பொக்கணம், கலைமகள் தீபாவளி மலர், 1992.
9. கோட்டத்தில் இடம்பெறும் சிற்பம்சார் கதைப்புலங்களை அக்கோட்டம் அமைந்துள்ள சுவர்ப்பகுதியில் கோட்டத் தின் இருபுறத்தும் அமையுமாறு படம்பிடிக்கும் பாங்கைப் பல்லவர் கலைமரபில் பரவலாகக் காணமுடிகிறது. காஞ்சி புரம், திருப்பட்டூர்க் கயிலாசநாதர், இறவாதான் ஈசுவரம் கோயில்களைச் சான்றாகக் கூறலாம். இம்மரபு சோழர் காலத் தில் மிகச் சில கோயில்களில் பின்பற்றப்பட்டது. அவற்றுள் வலஞ்சுழி வாணர், குரங்கநாதர் கோயில்கள் குறிப்பிடத்தக் கன. பொதுவாக ஆலமர்அண்ணலின் அருகே நான்கு முனி வர்கள் இடம்பெறுவது மரபு. ஆனால், குரங்கநாதர் கோயி லில் பக்கத்திற்கொருவராக இருவர் மட்டுமே உள்ளனர். இது போல் ஆறு முனிவர்கள் இடம்பெறும் மாறுபட்ட அமைப்பையும் சில கோயில்களில் காணமுடிகிறது.
10. இது ஒத்த பிச்சையேற்கும் அண்ணலின் சிற்பம் உய்யக் கொண்டான் திருமலை இறைவன் விமானத்தின் தெற்குக் கோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மு. நளினி, இரா. கலைக் கோவன், தவத்துறையும் கற்குடியும், பக். 110 - 111.
11. பாண்டியர், முத்தரையர் குடைவரைகள் சிலவற்றின் கோட் டங்களில் இத்தகு பத்திமைநிறை அடியவர்களைக் காண முடிகிறது. குன்றாண்டார்கோயில் முதன்மைக் குடைவரை, திருமலைக் குடைவரை, குன்றத்தூர் முதல் குடைவரை ஆகிய வற்றைச் சான்றுகளாகக் கூறலாம். மு. நளினி, இரா. கலைக் கோவன், புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், ப. 72; மதுரை மாவட்டக் குடைவரைகள், ப. 32; தென்மாவட்டக் குடைவரைகள், ப. 19. குடைவரை மரபு கற்றளிக் காலத்தும் தொடர்ந்தமைக்குக் குரங்கநாதர் சான்றாகிறது.
12. கவரிப்பிணாக்களைத் தனிக்கோட்டமளித்துச் சிறப்பித்த மாண்பினை இராஜசிம்மர் காலத்திருந்து காணமுடிகிறது. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள், காஞ்சிபுரம் கயிலாச நாதர் கோயில் எனப் பலவிடத்தும் காணப்படும் இம்மரபு பேருருக் கொண்ட களமாகக் குரங்கநாதர் அமைந்துள்ளது.
13. M. Nalini and R. Kalaikkovan, "Makeup of Tamil Dancers from Sangam Age to Cholas", Art in Every Day Life, pp. 31-33.
14. சாலைப்பத்திக் கோட்ட இறைவடிவங்களைப் போற்றி வணங்குமாறு சுவர்த்துண்டுக் கோட்டச் சிற்பங்களை அமைக் கும் பாங்கினைக் குடந்தை நாகேசுவரர், திருப்பழனம் ஆபத்சகாயேசு வரர் கோயில்களில் காணமுடிகிறது.
15. இரா. கலைக்கோவன், கண்கவர் உரலும் கலையெழில் தொட்டியும், தினமணி கதிர், 25. 3. 1990.
16. அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன், பாச்சில் கோயில்கள், ப. 20.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.