http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 149

இதழ் 149
[ மே 2020 ]


இந்த இதழில்..
In this Issue..

குரக்குத்துறைக் கட்டுமானம்
அலகறை சேமீசுவரம்
பணிவின் இலக்கணம் - அனுமன்
ஆவுடையார் கோவில் கண்ணப்பர்
வரகுணபாண்டீஸ்வரர் ஆலயம் பள்ளக்குறிச்சி-(உடன்குடிக்கருகில்)
புள்ளமங்கை - தள அமைப்பு
ஓமொரி - ஜப்பானியத் தொல்லியல் அகழாய்வின் பிறப்பிடம்
Thiruppur (near Keeranur)
Thirukkazhippalai (Sivapuri)-1
இதழ் எண். 149 > பயணப்பட்டோம்
பணிவின் இலக்கணம் - அனுமன்
சு.சீதாராமன்
"மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!!"

திருவையாறு என்றாலே என் நினைவில் மேற்கண்ட அப்பரின் கண்டறியாதன கண்டேன் என்ற பாடல் நினவுக்கு வருதல் இயல்பு. இவ்விஷயத்தில் அப்பருடன் போட்டிபோட நான் விழைவதுண்டு! அவர் மட்டும்தான் கண்டறியாதன காண வேண்டுமா? நாம் காணக்கூடாதா? ஐயாறப்பருடன் முறையிடுவேன்! அவர் மானசீகமாகக் கூறுவார்! "கண்களையும் மனதையும் அகலத்திறந்து காத்திருக்கும் எவருமே கண்டறியாதன காணலாம்". அது என்ன? எப்படி அவ்வாறு எம்மைப் பயிற்றுவித்துக் கொள்வது? அவரிடமே கேட்டேன்! சிரித்துக் கொண்டே "முயற்சி திருவினையாக்கும்" என்றார்.

இதனை ஒரு முயற்சியாக நான் அவ்வப்பொழுது மேற்கொள்வதுண்டு! சமீபத்தில் ஓருநாள் நண்பர்களுடன் திருவையாற்றில் அமைந்தது. இன்றும் மார்கழி மாதத்தில் உலகையே திருவையாற்றை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கும் தியாகையரின் சமாதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது!

அங்குள்ள தியாகப்பிரம்ம அதிஷ்டானம் முன்பு ஒரு மண்டபம் உண்டு. அதில் இராமாயணத்தில் இருந்து சில சிற்பங்கள் ஆங்காங்கே எழிலுடன் காண்போரை இனம்புரியா இராமாயண உலகிற்கு அழைத்துச் செல்லும் வண்ணம் பொருத்தப்பட்டு இருக்கும். தியாகப்பிரம்மத்தைத் தரிசித்துவிட்டு இம்மண்டபச் சிற்பங்களை நோக்க மனம் குதூகலமடைந்தது. அதில் ஒரு காட்சி மிகவும் யோசிக்க வைத்தது! அதனைப் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன்!

இக்கட்டுரையில் கம்பனைச் சில இடங்களிலும் வால்மீகியைச் சில இடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்கிறேன்! காட்டப்பட்டுள்ள சிற்பம் தொடர்பாகக் கட்டுரையின் இறுதியில் வால்மீகியின் ஸ்லோகத்தை அத்தாட்சியாகத் தெரியப்படுத்தியிருப்பதில் பேருவகை கொள்கிறேன்!

சுந்தர காண்ட இராமாயணத்தில் ஒரு காட்சி! ராமரைப் பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, பின் வருமாறு சிந்திக்கலானாள்!

"மாய மானின்பின் தொடர்ந்த நாள், 'மாண்டனன்' என்று
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன்
போய், அவன் செயல் கண்டு, உடல் பொன்றினன் ஆகும்;
ஆயது இன்னது என்று அறிந்திலேன்" என்று என்றும் அயர்வாள்

"மாய மானின் பின்னால், என் நாயகனைப் போகவைத்தேன். இலக்குவனை மனம் நோகும்படி ஏசி அனுப்பினேன். அதன் பயன் இராவணன் வீட்டிலே வந்து தங்கும்படி ஆகிவிட்டதே. இப்படிப்பட்ட நான் இனி உயிர் பிழைத்து வாழ்வதை உலகத்தார் ஏற்றுக் கொள்வார்களா? இராமபிரான் அரக்கர் கூட்டத்தை அழித்து என்னைச் சிறை மீட்கும் நாளில், "நீ இனி என் இல்லம் வரத்தக்கவள் அல்லள்" என்று தடுக்கும்போது நான் என் கற்புநிலையை எங்ஙனம் நிரூபிப்பேன்? நான் இறந்து போவதே அறவழிக்கு ஒத்தது. இந்த அரக்கியரும் நன்றாகத் தூங்குவதால், என்னைத் தடுக்க இவர்களால் இயலாது. இதைவிட உயிரைவிட நல்ல நேரம் அமையாது" இப்படி நினைத்த சீதை மலர்கள் நிறைந்த கிளைகள் அடர்ந்த ஒரு குருக்கத்தி மரத்திடை சென்றாள்.

அது சமயம், சமய சஞ்சீவியாய் அனுமன், "ராம், ராம்" என்று இராமபிரானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே, அண்ட நாயகனின் அருள் தூதன் நான் என்று சொல்லிக் கொண்டே, அன்னை சீதாதேவியின் முன் சென்று குதித்துத் தொழுது வணங்கினான்.

"அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால்,
குடைந்து உலக அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பிலர் தவத்தை மேவலால்
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன்".

"தாயே! இராமபிரானது ஆணையால் அடியேன் இங்கு வந்தடைந்தேன். உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சென்று தங்களைத் தேடும்படி அனுப்பிய அளவற்ற பலரில், முற்பிறப்பின் தவப்பயனாய் அடியேன் தங்கள் சேவடியைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன். அன்னையே! தாங்கள் இங்கே இருப்பதை இராமன் அறியவில்லை. உன்னைப் பிரிந்த துக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறான். நான் யார் என்று என் மீது சந்தேகம் வேண்டாம். அதற்கு சரியான அடையாளம் என்னிடம் இருக்கிறது. உன்னிடம் சொல்லி, இராமன் சொல்லி அனுப்பிய சில உரைகளும் உண்டு, அவற்றையும் சொல்லுகிறேன்" இப்படிச் சொல்லிக்கொண்டே சீதையைத் தொழுதான் அனுமன்.

திடீரென்று வந்து குதித்து ஏதோ பேசுகின்ற அனுமனைப் பார்த்துச் சீதைக்குக் கடும் கோபம் ஒருபுறம். ஏனோ மனதில் தோன்றும் கருணை ஒருபுறம். இவன் அரக்கனாக இருக்கமுடியாது. ஐம்பொறிகளை அடக்கிய முனிவன் போலத் தோன்றுகிறான். ஒருக்கால் இவன் தேவனோ? இவன் இனிய சொற்களைப் பேசுகிறான், தூய்மையானவனாகத் தோன்றுகிறான். இவன் அரக்கனோ, தேவனோ, அல்லது குரங்கினத் தலைவனோ, யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும். இவனால் ஏற்படப்போவது நன்மையோ, தீமையோ, எதுவானாலும் ஆகட்டும், என் எதிரில் வந்து இராமன் பெயரைச் சொல்லி, என்னை உருகச் செய்து விட்டானே. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? இப்படி நினைத்துக் கொண்டு சீதை அனுமனை உற்று நோக்குகிறாள்.

"தைரியத்தைக் கேடயம் போல் தரித்த நீ யாரப்பா?" என்று வினவினாள்.

சீதையின் சொற்களைத் தன் தலைமேல் கொண்ட அனுமன், தன் இரு கரங்களையும் தலைக்குமேலாகக் குவித்துக் கொண்டு பேசலானான்: "தாயே! உம்மைப் பிரிந்த பிறகு ஸ்ரீ ராமனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் சூரிய குமாரனான சுக்ரீவன். வானரத் தலைவன் ஆவன். அவனுடைய அண்ணனான வாலி முன்னர் இராவணனைத் தன் வாலில் பிணைத்து எட்டுத் திசைகளிலும் தாவி வெற்றி கொண்டவன். அவனை இராமன் ஒரே அம்பினால் கொன்றான். வாலியின் அரசைச் சுக்ரீவனுக்குக் கொடுத்தான் ஸ்ரீராமன். நான் அந்தச் சுக்ரீவனுடைய அமைச்சன், என் பெயர் அனுமன்" என்றான்.

"சுக்ரீவனுடைய எழுபது வெள்ளம் அளவுள்ள சேனை, இராமபிரான் இடும் கட்டளைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றது. அவற்றில் பல தங்களைத் தேடி நாலாபுறத்திற்கும் விரைந்து சென்றுள்ளன. இழிதொழில் புரியும் இராவணன் தங்களைக் கவர்ந்து சென்றபோது, தாங்கள் அணிகலன்களை ஒரு துணியில் கட்டி நாங்கள் இருந்த ருசியமுக பர்வதத்தில் போட்டீர்கள். இந்தச் செய்தியை நான் இராமனிடம் சொன்னேன். அவர் என்னைத் தனியே அழைத்துத் தென் திசைக்குச் செல் என்று பணித்தார்."

"தங்கள் அணிகலன்களைக் கண்டதும், இராமபிரான் பட்ட பாட்டைச் சொற்களால் சொல்ல முடியாது. நீங்கள் அன்று எறிந்துவிட்டுச் சென்ற அணிகலன்களே இன்று உங்கள் மங்கல அணியைக் காப்பாற்றின. தெற்குப்புறமாகத் தங்களைத் தேடிவந்த இரண்டு வெள்ளம் வானர சேனைக்கு வாலியின் புதல்வன் அங்கதன் தலைவன். அவனே என்னை இலங்கைக்கு அனுப்பியவன். அவர்கள் என்னுடைய வரவை எதிர்நோக்கிக் கடலுக்கு அப்பால் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றான் அனுமன்.

இதைக் கேட்டதும் சீதை மகிழ்ச்சியடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள். "பெரியோருக்குள்ள அனைத்து குணங்களும் கொண்ட அனுமனே! இராமர் எப்படி இருக்கிறார்?" என்றாள்.

"அன்னையே! இராமனின் திருவுருவை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள்" என்று இராமனது திருவடி முதல் திருமுடி வரை வர்ணிக்கலானான். ஒவ்வோர் அங்கத்தையும், அதன் பெருமை அழகு முதலியவற்றைக் கூறி விளக்கினான். இவ்வாறு அனுமன் சொன்ன சொற்களைக் கேட்ட சீதை தீயிலிட்ட மெழுகு போல உருகினாள். அவளை அனுமன் தரையில் விழுந்து வணங்கினான்.

"அன்னையே! இராமபிரான் என்னிடம் சொல்லி அனுப்பிய வேறு சில குறிப்புகளும் உண்டு. சில அடையாளச் சொற்களும் உண்டு. அவைகளைக் கேட்டு முற்றிலும் அச்சம் தவிர்த்து ஆறுதல் கொள்வீர்களாக" என்று சொல்லத் தொடங்குகிறான்.

"காட்டில் வசிப்பது என்பது சிரமம், ஆகையால் நான் திரும்பி வரும்வரை என் அன்னையர்க்குப் பணிவிடை செய்து கொண்டிரு என நான் சொல்லி முடிக்கும் முன்பாக, மரவுரி தரித்துத் தவ வேடத்தோடு சீதை எனக்கு முன்பாக நின்றாள், என்று இராமபிரான் கூறித் தங்களிடம் நினைவுபடுத்தச் சொன்னார்".

சீதை கண்கள் குளமாக "ஆம்" என்று தலைஅசைத்து அவனது கூற்றை ஆமோதித்தாள். மேலே தொடர்க! என்று மேலும் ஆர்வமாய் அனுமனை நோக்கலானாள்!

"மணிமுடி சூட நாள் குறித்து ஆட்சியைத் தந்து, பிறகு கானகம் செல்லத் தந்தையின் உரை கேட்டு, நான் புறப்பட்டுக் கோட்டையைத் தாண்டுமுன்பாகக் கானகம் எங்கே இருக்கிறது, என்று தாங்கள் கேட்டதையும் தங்களிடம் நினைவு படுத்தச் சொன்னார்".

சீதை நினைவு பெற்றவளாக ஆம் என்ற ஆமோதிப்பை தலையசைத்து வெளிப்படுத்தினாள்!

"தேரைச் செலுத்தி வந்த அமைச்சர் சுமந்திரனிடம் தாங்கள் வளர்த்துவந்த கிளிகளையும், நாகணவாய்ப் பறவைகளையும், ஊர்மிளை முதலானோரையும் கவனித்துக்கொள்ளச் சொல்லி அனுப்பியதைத் தங்களிடம் நினைவூட்டச் சொன்னார்".

சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது.

"வேறு எந்த அடையாளச் சொல்லும் தேவையில்லை, என் பெயர் பொறித்த இந்த மோதிரத்தை அவளிடம் காட்டு என்று இந்தக் கணையாழியைக் கொடுத்தார்" என்று சொல்லித் தன் மடியில் கட்டிவைத்திருந்த கணையாழியை எடுத்து மாருதி பிராட்டியின் கையில் கொடுத்தான். அந்தக் கணையாழியைக் கண்டதும், சீதை பெற்ற உணர்வுகளை என்னவென்று சொல்வது, எங்ஙனம் வர்ணிப்பது?

வாழ்நாளையெல்லாம் வீணாக்கியவர்கள், மறுமைப் பயனைத் தற்செயலாய்ப் பெற்றது போல என்பேனா? விலைமதிப்பற்ற ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு அது இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கும்போது கொள்ளும் மகிழ்ச்சி என்பேனா? உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிர் மீண்டும், அந்த உடலை அடைந்தால் மற்றவர் படும் ஆனந்தம் என்பேனா? கணையாழியைக் கண்ட சீதை, புற்றிலிருந்த பாம்பு, தான் இழந்த மாணிக்கத்தை மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தாள். பிள்ளைப் பேறு இல்லாமல் நீண்ட காலம் மலடியாக இருந்தவளுக்குப் பிள்ளைப்பேறு கிட்டிய காலத்து அடையும் மகிழ்ச்சியை அடைந்தாள். கண்ணற்ற குருடனாக இருந்தவனுக்குக் கண் பார்வை கிட்டிய போது அடையும் மகிழ்ச்சியைச் சீதை அடைந்தாள்.சீதை, தன் கையில் வாங்கிக் கொண்ட அந்தக் கணையாழியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். தலைமேல் வைத்துக் கொண்டாள். கண்ணிலே ஒற்றிக் கொண்டாள்; மகிழ்ந்தாள், உருகினாள், உடல் பூரித்தாள், பெருமூச்சு விட்டாள். அடடா! இந்தக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லையே! கணையாழியை முகர்ந்தாள்; மார்பின் மீது வைத்துத் தழுவிக் கொண்டாள்; கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்; மீண்டும் கண்களில் கண்ணீர் பொங்கிவர, நீண்ட நேரம் அந்தக் கணையாழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கணையாழியிடம் ஏதோ பேச விரும்பினாள்; ஆனால் வாயைத் திறக்கவில்லை. மேலே கிளர்ந்து எழுகின்ற விம்மலை அடக்கிக் கொண்டாள். கணையாழியைக் கண்டதும் சீதையின் முக ஒளி பொன்னிறம் பெற்று ஒளிர்ந்தது. ஆம்! இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் பொருட்களைப் பொன்னாக மாற்றும், "ஸ்பரிசவேதி" எனும் ரசவாதப் பொருளே!

சீதைக்கு அந்த கணையாழி, பசியால் துன்புற்றவனுக்குக் கிடைத்த அமுதம் போன்றது. இல்லறத்தாரைத் தேடிவந்த விருந்தினரைப் போன்றது. உயிர்போகும் தறுவாயில் ஒருவனுக்குக் கிடைத்த சஞ்சீவி மருந்து போன்றது. கணையாழியை வணங்கிப் போற்றுவோம்.

"மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு" என்றாள்.

அனுமனைப் பார்த்துச் சீதாபிராட்டி சொல்கிறாள், "உத்தமனே! எனக்கு நீ உயிரைக் கொடுத்திருக்கிறாய். நான் உனக்கு எவ்வகையில் கைமாறு செய்யப் போகிறேன்? நீ எனக்கு உயிர் கொடுத்த வகையில் தாயாகவும், தந்தையாகவும், தெய்வமாகவும் ஆனாய். அருளுக்கு இருப்பிடமானவனே! நீ எனக்கு இம்மைக்கும் மறுமைக்குமான இன்பத்தை அளித்தாய். வலிமைமிக்க மாருதி! துணையற்ற எனக்குத் துன்பம் நீக்கிய வள்ளலே! நீ நீடூழி வாழ்வாயாக! நான் கற்பு நெறியில் களங்கமற்றவள் என்பது உண்மையானால், யுகயுகாந்திரத்திலும், ஈரேழு பதினான்கு உலகங்கள் அழிகின்ற காலத்தும், நீ இன்று போல என்றும் சிரஞ்ஜீவியாக வாழ்வாய்!" என்று வாழ்த்தி அங்கிருந்து வெற்றிலை ஒன்றைப் பறித்து அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார்!

நிற்க! அனுமன் சீதையை சந்தித்த முதல் காட்சி!

வால்மீகி இராமயணத்தில் வால்மீகி அவர்கள் அனுமனை மிகவும் சாதுர்யமானவர் என்று வர்ணித்திருப்பார்

"த்ருதிர் த்ருஷ்டிர் மதிர் தாக்ஷ்யம் ஸ்வகர்மசு நசீததி !"

இந்த நான்கு குணங்களும் யாரிடம் உள்ளனவோ அவர்கள் தம் செயல்களில் எப்போதும் தோல்வி அடைய மாட்டார்கள் என்று கூறுகிறார் வால்மீகி முனிவர்.

த்ருதி, திருஷ்டி, மதி, தாக்ஷ்யம். இந்த நான்கையும் பற்றி வால்மீகி மகரிஷி அளிக்கும் கருத்துக்கள் இவை!

த்ருதி - ஒரு வேலையை ஆரம்பிக்கும்போது இருக்க வேண்டிய குணம் இது. த்ருதி என்றால் நிலைத்தன்மை, உறுதிச்சமநிலை, ஸ்திரத்துவம் என்று பொருள். தைரியம் என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு செயலைத் தொடங்கியபின் தடைகளைக் கண்டு அஞ்சாமல் முன்னேற வேண்டும். ஆரம்ப சூரத்தனம் என்ற சொல்கூட உள்ளது. அது போல் இருக்கக்கூடாது. சிலர் தடைகளுக்கு அஞ்சி வேலையையே தொடங்க மாட்டார்கள். சிலர் வேலையை ஆரம்பித்த பிறகு தடை ஏதாவது ஏற்பட்டால் செயலைப் பாதியில் நிறுத்தி விடுவார்கள். வெகு சிலர் மட்டுமே விக்னங்களை எதிர்த்துப் போராடி வேலையைச் செய்து முடிப்பார்கள். அவர்களே உயர்ந்தவர்கள்! எப்போதும் நாம் உயர்ந்த நிலையை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். அதனால் வேலையைத் தொடங்கியது முதல் மனதிற்கு இருக்கவேண்டிய குணம் த்ருதி..

இரண்டாவது, திருஷ்டி. இதற்கு இரண்டு அர்த்தங்களைக் கூறலாம். ஒருமுகப்பட்ட மனம் என்பது ஒன்று. வேலை முழுமை அடைந்தபின் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே தன் பார்வையில் நிறுத்திக் கொள்வது இரண்டாவது. திருஷ்டி என்ற சொல்லுக்கு ஒருமித்த மனம், வேலையை முழுமையாக தரிசித்தல் என்று இரண்டு பொருள் கொள்ளவேண்டும்.

மூன்றாவது, மதி. மதி என்றால் ஞானம். எந்த வேலையைச் செய்யப் போகிறோமோ அதோடு தொடர்புடைய முழுமையான புரிதல் நமக்கு இருக்க வேண்டும். செயலை எவ்வாறு செய்ய வேண்டும்? ஒருவேளை அதில் ஏதாவது தடங்கல் நேரிட்டால் என்ன ஆகும்? அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது? என்று முன்பாக ஒரு திட்டமிடுதல் அவசியம். அந்தத் திட்டத்தை மீறிப் புதிய தடைகள் ஏற்பட்டால் அப்போதைக்கப்போது சரி செய்து கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதனால் முன்பாகவே அந்த வேலையில் எதிர்ப்படக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பதை அனைத்துக் கோணங்களிலும் யோசித்து அதற்கான தீர்வுகளைக் கூடச் சிந்தித்து வைத்திருக்கவேண்டும். அவ்வாறு வேலைக்குத் தொடர்பாக உள்ள பூரணமான புரிதலை "மதி" என்கிறார்.

பிறகு தாக்ஷ்யம். தாக்ஷ்யம் என்றால் சாமர்த்தியம். இவ்விதம் த்ருதி, திருஷ்டி, மதி, தாக்ஷ்யம் என்ற நான்கும் யாரிடம் இருக்குமோ அவர்கள் கட்டாயம் தம் செயல்களில் வெற்றி பெறுவார்கள் என்று அனுமனிடம் உள்ள குணங்களைப் பற்றி மகரிஷி வால்மீகி அழகாக எடுத்துரைக்கிறார். அனுமனைப் பார்த்துத் தேவதைகள் இந்த வார்த்தைகளைக் கூறியதாக எழுதுகிறார் வால்மீகி.!

சரி, இந்த செய்திகளுக்கும் இந்த கட்டுரைக்கும் உள்ள சம்மந்ததிற்கு வருவோம்! இராமரிடம் கணையாழி பெறும்போது அனுமன் குனிந்து தன் கைகள் மேல் நோக்க, கொடுக்கும் இராமன் கை தரை நோக்க அமைந்திருக்கும்! பொதுவாகவே கொடுப்பவர் கைகள் மேலிருக்க வாங்குபவர் கைகள் கீழிருத்தல் இயல்புதானே? இராமரிடம் வாங்கிய அனுமர் சீதையிடம் கொடுக்கும் போது அனுமன் கைகள் மேலும் சீதையின் கைகள் கீழும் இருத்தல்தானே இயல்பு! ஆனால் அனுமன் உலகையே காத்து ரஷிக்கும் மாஹாவிஷ்ணு பத்தினியான சாஷாத் மாகாலெஷ்மியின் அம்சமான சீதாதேவியின் கைககள் ஏந்தும் பாவத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க அஞ்சினான். எனவே, கொடுக்கும் பாவம் தவிர்த்துச் சீதையின் முன்பு அவர்களே எடுத்துக் கொள்ளும் வண்ணமாய் கணையாழியைக் காண்பிக்கிறான். சீதையே அதனை எடுத்துக் கொள்கிறாள்!

சரி, காட்சியும் கருத்தும் ஒத்துப் போகிறது! அத்தாட்சி வேண்டாமா?! இதோ வால்மீகியின் வரிகளில்.

வால்மீகி இராமாயணம்-சுந்தரகாண்டம்
34வது ஸர்க்கம் மூன்றாவது ஸ்லோகம்

गृहीत्वा प्रेक्षमाणा सा भर्तुः करविभूषणम् |
भर्तारमिव सम्प्राप्ता जानकी मुदिताभवत् || ३||
gṛhītvā prekṣamāṇā sā bhartuḥ karavibhūṣaṇam .
bhartāramiva samprāptā jānakī muditābhavat .. 3..
"அதை தன் கையில் எடுத்து உற்றுப் பார்த்த ஜானகி,
தன் கணவனையே அடைந்து விட்டது போல மகிழ்ந்தாள்".

இந்த ஸ்லோகத்தின் முதல் வார்த்தையான "க்ருஹீத்வா" என்ற சொல்லுக்கு எடுத்துக் கொள்ளுதல் என்பது பொருள். வால்மீகி இராமாமாயணத்தில் கணையாழியைச் சீதை பெறுவதாகச்
செய்யும்படி செய்த இச்செயல் அனுமனின் வினயத்தையும் அளவு கடந்த பணிவையும் வெளிப்படுத்துவதாக அமையும். இக்காட்சியையே இங்குச் சிற்பமாக நாம் காண்கிறோம்!

"புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||"

அனுமனை வழிபட பெரியோர்களால் அருளப்பட்ட ஸ்லோகம்! யாரிடம் என்ன இருக்கிறதோ அதனைத்தானே நாம் அவர்களிடமிருந்து பெறமுடியும்! இந்தச் சிற்பத்தைத் தரிசனம் செய்பவர்கள் ஆஞ்சநேய வழிபாட்டால் கிடைக்கும் புத்தி,பலம்,கீர்த்தி,தைர்யம்,அளவுகடந்த நிதானம்,பூரண ஆரோக்கியம்,முழுமையான உயிர்ப்புத் தன்மை மற்றும் வாக்கு வன்மை பெற்று நீடு வாழ அனுமனைப் பிரார்த்தித்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்!
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.