http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 155

இதழ் 155
[ ஜூன் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 1
மதங்கேசுவரம் - 1
மயிலைத்திண்டனும் மூன்று ஊர்களும்
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் (தொடர்ச்சி)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 2
இதழ் எண். 155 > இலக்கியச் சுவை
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 2
மா.இராசமாணிக்கனார்


அரசாட்சி

சங்க காலத்தில் ஒவ்வோர் ஊரிலும் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியோர் இருந்து ஊராட்சியைக் கவனித்து வந்தனர். நாட்டின் தலைநகரில் பெரிய நீதிமன்றம் இருந்தது. அஃது ‘அறக்களம்’ என்றும் ‘அறங்கூறு அவையம்’ என்றும் பெயர் பெற்றது. சில வழக்குகளை மன்னனே விசாரித்து நீதி வழங்குவதும் உண்டு. இளைஞனான கரிகாலன் முதியவனைப் போல வேடம் பூண்டு நீதி வழங்கினான் என்று பொருநராற்றுப்படை பேசுகிறது (அடி 187-188). காஞ்சியை ஆண்ட இளந்திரையன் தன் மந்திரச் சுற்றத்தோடே இருந்து முறை வேண்டியவர்க்கு முறையும், மக்கள் குறைகளை விசாரித்து வேண்டியனவும் செய்தான் என்று பெரும்பாணாற்றுப்படை பகர்கின்றது (அடி 443-450). மதுரையில் இருந்த அறங்கூறு அவையத்தார் அச்சம், துன்பம், அவா ஆகியவற்றை நீக்கியவர்; ஒரு சாராரிடம் சினமும் மற்றொரு சாராரிடம் மகிழ்வும் காட்டாதவர்; தம்மைத் துலாக்கோலைப் போல நடுவுநிலையிலே நிறுத்துக் கொண்டவர்; உயர்ந்த கொள்கை உடையவர் (மதுரைக்காஞ்சி, அடி 489-492).

இளந்திரையன் ஆட்சியில் தொண்டைநாட்டுப் பெருவழிகள் வீரர்களால் காக்கப்பட்டன. துறைமுக நகரத்தில் இறக்குமதியான பொருள்கள் வாணிகத்தின்பொருட்டுக் கொண்டுசெல்லப்பட்ட வழிகள் பாதுகாக்கப்பட்டன. கரையோரத்தில் ஆயத்துறைகள் இருந்தன. சில இடங்களில் வீரர்கள் அரணமைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். அந்த அரணுக்குள் போர்க்கருவிகள் இருந்தன. வேட்டை நாய்கள் இருந்தன (பெரும்பாணாற்றுப்படை, அடி 70-82, 117-129). “திரையன் ஆட்சியில் தொண்டை நாட்டில் வழிப்போவாரைக் கொல்லும் ஆறலைகள்வர் இல்லை; இடி இடியாது; பாம்புகளும் கொல்லுதலைச் செய்யா. காட்டில் வாழும் புலி முதலியனவும் துன்பம் செய்யா; ஆதலால் நீங்கள் நினைத்த இடத்தே இளைப்பாறிக் கவலையின்றிச் செல்லலாம்” என்று பரிசில் பெற்ற பெரும்பாணன் வறிய பாணனிடம் கூறியது, திரையனது அறம் மலிந்த ஆட்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் (பெரும்பாணாற்றுப்படை, அடி 39-45). அவன் அறத்திற்கு மாறானவற்றை நீக்குபவன்; அறம் புரிகின்ற செங்கோலன்; நீதிமுறை வேண்டி வருவோரையும் வரவேற்பான்; இன்சொல் கூறுவான்; அவர்கள் வேண்டுவனவற்றை வேண்டியவாறே கொடுப்பான்; நடுவுநிலையில் இருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு உடையவன் (பெரும்பாணாற்றுப்படை, அடி 443-447).

இங்ஙனமே பாண்டி நாட்டிலும் பாலைநில மக்களான ஆறலைகள்வரால் குடிமக்களுக்குத் தீங்கு நேராதபடி நாடுகாவல் வீரர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள் (மதுரைக்காஞ்சி, அடி 310-312). அவ்வீரர்கள் வில்லேந்தியவர்களாய் நாட்டு வழிகளைக் காவல் காத்தார்கள். இவ்வாறே நன்னந்து மலைநாட்டை ஆங்காங்கு இருந்த வேடர்கள் காத்து வந்தார்கள். அவர்கள் கொடிய வில்லையும் கூரிய அம்புகளையும் கொண்டிருந்தார்கள். அம்மக்கள் வழிப்போக்கர்க்கு வேண்டிய வசதிகளைச் செய்தார்கள் (மலைபடுகடாம், அடி 421-427).

அரசனது செங்கோலாட்சியின்கீழ் அவனிடம் பணிபுரிந்தவர் நேர்மையாய்ப் பணிபுரிந்தனர். கரிகாலன் ஆட்சியில் காவிரிப்பூம்பட்டினத்துச் சுங்க அதிகாரிகள் இரவிலும் பகலிலும் சோம்பலின்றித் தங்கள் கடமைகளைச் செய்துவந்தார்கள் (பட்டினப்பாலை, அடி 120-125). கரிகாலன் ஆட்சியில் சோழநாட்டில் புலி முதலிய கொடிய விலங்குகளின் துன்பம் உண்டே தவிரக் குடிகளைக் கலங்கச் செய்யும் பகை வேறு இல்லை (பட்டினப்பாலை அடி 26-28). ‘இவன் தனது இளமைப்பருவத்தைக்கொண்டு முறை வழங்க மாட்டுவனோ’ என்று ஐயுற்ற முதியவர் இருவரைத்தான் முதிய நீதிபதி போல வேடம் புனைந்து வழக்கைக் கேட்டு உவக்கச் செய்தவன் கரிகாலன் என்று பொருநராற்றுப்படை புகல்கின்றது (அடி 187-188). இங்ஙனம் நீதி வழங்கிய சிறப்பினைப் பிற்காலத்தில் தோன்றிய பழமொழிப் பாடலும் கீழ்வருமாறு பாராட்டுகின்றது.

“உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நடைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்”

அரசன் பகைவரை வென்று அவர் திறையாகத் தந்த நகைகளைப் புலவர்க்கு வழங்கினான் (மலைபடுகடாம், அடி 70-72). நல்லியக்கோடன் தன் படைத்தலைவர்கள் கொண்டுவந்த பகைவர் நாட்டுப் பொருட்களைத் தன்னிடம் வந்த ஏழைகட்கும் பாணர் முதலியோர்க்கும் வழங்கினான் (சிறுபாணாற்றுப்படை, அடி 248-249). கரிகாலன் புலவர்க்குப் பின் ஏழடி நடந்து சென்று அவர்க்கு விடைதருதல் மரபு (பொருநராற்றுப்படை, அடி 166).

பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு பொய்யாலே அமிழ்துடன் தேவர் உலகம் கிடைப்பதாயினும் பொய் பேசாதவன்; உலக மன்னவருடன் தேவர்கள் சேர்ந்து போருக்கு வரினும், பகைவர்க்கு அஞ்சிப் பணியாதவன்; தென்றிசையில் மலைகள் நிறையும்படி வாணன் என்ற சூரன் வைத்த சீரிய பொருட்குவியலே கிடைப்பதாயினும், பிறர் கூறும் பழியை வெறுப்பவன்; வறியர்க்குப் பொருளை உதவும் நெஞ்சினன் (மதுரைக்காஞ்சி, அடி 197-205). இப்பெருமகன் ஆட்சி செங்கோலாட்சியன்றோ? மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனுக்கு முன்பு ஆண்ட பாண்டிய மன்னர் எங்ஙனம் நாடாண்டனர் என்பதை அரசியல் நுண்ணறிவோடு கூறியுள்ளது பாராட்டத்தகும். அதனைக் கீழே காண்க.

”பாண்டி நாட்டில் மழைவளம் மிக்கிருந்தது; யாறுகள் இடையறாது நீர்ப்பெருக்கெடுத்து ஒழுகிய வண்ணம் இருந்தன. ஆங்காங்குப் பூம்பொழில்களும் இளமரக் காக்களும் செழித்தோங்கிக் காட்சி இன்பம் நல்கின; உயிர்கள் பசியும் பிணியும் இன்றி உடலுரம் பெற்று எழிலுடன் விளங்கின. அவர் ஆட்சியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஒரு குறைவையும் காணாதவர்கள்; பொய், களவு முதலிய தீயவற்றை அறியாதவர்களாய் வாழ்ந்தார்கள். அப்பெருமக்கள் ஆண்ட ஊழி நல்லூழி ஆகும். அவ்வழியில் வாழ்ந்த மக்கள் நன்மக்கள். இவற்றுக்கெல்லாம் காரணமாய் அமைந்த பாண்டிய மன்னர் உயர்ந்தோர் ஆவர் (மதுரைக்காஞ்சி, அடி 5-23).

ஒரு நாட்டின் செழிப்பும் குடிமக்களின் நல்வாழ்வுமே அரசனது செங்கோற்சிறப்பை உணர்த்தும் அடையாளங்களாகும் என்பதே மாங்குடி மருதனாரது அரசியற் பட்டறிவு கண்ட உண்மையாகும்.

ஓவியம், சிற்பம், இசை, நடனம், நாடகம் என்பவை நுண்கலைகள் எனப்படும். இவற்றோடு இலக்கியக்கலை நெருங்கிய தொடர்புடையது. அவற்றில் வல்லவர் புலவர்; இசைக்கலையில் வல்லவர் பாணர்; நடனக்கலையிலும் நாடகக் கலையிலும் வல்லவர் கூத்தர். இக்கலைவாணர் வறுமை இன்றி வாழ்ந்தால்தான் நாட்டில் இலக்கியம் முதலிய கலைகள் வாழும். கலைகள் நாட்டு மக்களை இன்புறுத்தி நற்பண்புகளை வளர்ப்பவை; நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பவை. எனவே, கலைவாணர் கவலையின்றி வாழ்ந்தால்தான் நாட்டுமக்கள் நல்லறிவு பெற்று வாழ்தல் இயலும். தமிழ்ப்பேரரசரும் சிற்றரசரும் இவ்வுண்மையை நன்கு உணர்ந்தவர் ஆதலின், கலைவாணரை முகமலர்ச்சியுடன் வரவேற்று வேண்டும் உதவிகளைப் புரிந்தனர். இவ்விவரங்களை அடுத்துக் காண்போம்.

- தொடரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.