http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 155

இதழ் 155
[ ஜூன் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 1
மதங்கேசுவரம் - 1
மயிலைத்திண்டனும் மூன்று ஊர்களும்
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் (தொடர்ச்சி)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 2
இதழ் எண். 155 > கலையும் ஆய்வும்
மயிலைத்திண்டனும் மூன்று ஊர்களும்
மு.நளினி, அர.அகிலா

சங்ககாலந் தொட்டே தமிழ்நாட்டு ஊர்கள் கூற்றம் அல்லது நாடு எனப்படும் வருவாய்ப் பிரிவுகளுக்குள் இணைக்கப்பட்டிருந்தன. அத்தகு பிரிவுகளுள் உறத்தூர்க் கூற்றமும் ஒன்று. அக்கூற்றத்திலிருந்த பல ஊர்களுள் புதுக்குடி, அவந்தியகோவப் பல்லவரையரால் பெருமைக்குரிய ஊராகத் திகழ்ந்தது. மயிலைத்திண்டன் என்றும் அறியப்பட்ட அப்பெருமகனார் உறத்தூர் நாட்டுக் கோனாக விளங்கினார். முதல் ராஜராஜரின் தந்தையான சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்த அவரது அரும்பணிகள் சிலவற்றைச் சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மூன்று ஊர்க் கோயில்களின் கல்வெட்டுகள் பகிர்ந்துகொள்கின்றன.

காவிரியின் தென்கரைச் சிற்றூர்களில் அல்லூரும் ஒன்று. இவ்வூரிலுள்ள முதல் பராந்தகர் கால நக்கன் கோயிலில் (பசுபதீசுவரர்) இரு நந்தாவிளக்குகள் ஒளிரவும் இறைவனுக்கு உச்சிப்போதில் அமுது படைக்கவும் விரும்பிய மயிலைத்திண்டன், வழக்கமாகக் கொடையாளிகள் செய்வது போல் வளமான நிலமளித்தோ, கழஞ்சுகளாய்ப் பொன் தந்தோ, காசுகளை அள்ளிக் கொடுத்தோ அதைச் செய்யாது சற்றுக் கடினமாக வழியை மேற்கொண்டார். அதனால் விளைந்ததுதான் திண்டன் வயக்கல்.

அக்காலத்தே விளைச்சல் காணாதிருந்த நிலங்களைக் கல்வெட்டுகள், ‘பண்டு விளைந்தறியாக் களர்’ என்றும் ‘திடல்’ என்றும் சுட்டுகின்றன. ஊர்ப்பொதுவாக விளங்கிய இத்தகு நிலங்களை விலைக்குப் பெற்றோ, ஊரவையின் ஒப்புதலுடன் கொடையாகப் பெற்றோ, விளையுமாறு பண்படுத்தும் செயல் ‘வயக்கல்’ எனப்பட்டது. இத்தகு வயக்கல்கள் பெரும்பாலும் இறைக் கோயிலுக்கு வழங்கும் நோக்கத்துடனேயே நிகழ்ந்தன.

அல்லூரிலும் அருகிலிருந்த வீரநாராயணபுரத்திலும் இத்தகு களர்கள் சில இருந்தன. அவற்றைப் பண்படுத்தி அல்லூர்க் கோயிலுக்கு வழங்க விழைந்த மயிலைத்திண்டன், சுந்தரசோழரின் 3ஆம் ஆட்சியாண்டின்போது அப்பகுதியில் சிற்றரசராக விளங்கிய கொடும்பாளூர் அரசர் வீரசோழ இளங்கோவேளான பராந்தகக் குஞ்சரமல்லரிடம் வேண்டுகோள் வைத்தார். அரசர் இசைந்து வழங்கிய ஆணையை அல்லூர் ஊரவையிடமும் வீரநாராயணபுரத்து நகரத்தாரிடமும் (வணிகர் குழு) அளித்த திண்டன், களர்நிலத் துண்டுகள் சிலவற்றைக் கொடையாகப் பெற்றார். அவற்றை அக்கால முறைப்படிக் கல்லியும் வயக்கியும் பண்படுத்திக் கோயிலுக்கு வழங்கி, நிலவிளைவில் இறைவனுக்குச் சூலநாழியால் ஐந்து நாழி அரிசி கொண்டு சமைக்கப்பட்ட உணவை உச்சிவேளையில் படையலிடவும் இரவும் பகலும் ஒளிருமாறு இரு நந்தாவிளக்குகள் ஏற்றவும் அறக்கட்டளை அமைத்தார்.திண்டன் வயக்கல் என்ற பெயருடன் அமைந்த அந்நிலத்துண்டுகளின் எல்லைகளைக் குறிக்கும் கல்வெட்டு, சில முதன்மைத் தகவல்களை முன்வைக்கிறது. வயக்கலின் கிழக்கெல்லையாகக் குறிக்கப்படும் பழுவூர் வாய்க்கால், காவிரிநீரைப் பழுவூருக்கு வழங்கிய நீர்வழியாகும். அல்லூருக்கு அருகிலுள்ள இப்பழுவூரிலும் சோழர் காலக் கற்றளி ஒன்று இன்றும் பெருமையுடன் திகழ்கிறது. தெற்கெல்லையாகக் குறிக்கப்படும் சங்கரபாடியார் தோட்ட மதில் அக்காலத்தே தோட்டங்கள் மதில் பெற்றிருந்தமையை உணர்த்தும். சங்கரபாடியார் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டிருந்த குழுவினராவர். திண்டன் வயக்கலின் வடக்கெல்லையாகச் சந்திரமங்கலத்திலிருந்து கிழக்கே ஓடிக் கீழ்ப்பனங்காட்டு நிலங்களை வளப்படுத்திய வாய்க்கால் அமைந்தது. சந்திரமங்கலம் என்ற பெயரே அவ்வூர் பிராமணர் குடியிருப்பாக விளங்கியமையைத் தெரிவிக்கிறது. வயக்கலின் மேற்கெல்லையாகக் குறிக்கப்படும் பிணம் போகும் பெருவழி, அக்காலத்தே இறந்தவர்களைச் சுடவோ, இடவோ அதற்குரிய இடத்திற்கு எடுத்துச் செல்லத் தனிப் பாதை அமைந்திருந்தமையைச் சுட்டுகிறது.

உறத்தூர் நாட்டுக் கோனால் கல்லி, வயக்கி அளிக்கப்பட்ட திண்டன் வயக்கலில் நன்செய்யும் புன்செய்யும் கலந்திருந்தன. கோயிலுக்குத் தரப்பட்டதால் கோயிலில் பூசை செய்வாரே (பட்டுடையார்) இந்நிலத்துண்டுகளை உழுது, விளைவில், திண்டன் குறிப்பிட்ட செயல்களைத் தொடர்ந்து மேற்கொண்டதோடு, எஞ்சியதைத் தங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டனர். கொடையின் நோக்கம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்ற கருத்துடன், ‘இதற்கு நன்கு வேண்டுவார் அடி என் தலை மேலன’ எனத் தெரிவிக்கும் திண்டன், ‘தீங்கு வேண்டுவார் வழி அறுவார்’ என்ற அச்சுறுத்தலையும் முன்வைத்திருப்பதுடன், இச்செயற்பாட்டைக் கண்காணித்து நிறைவேற்றுவது அனைத்து சிவத்தொண்டர்களின் பொறுப்பு என்றும் அறிவித்துள்ளார்.

குழுமணி நாகநாதசாமி கோயிலில் இக்கட்டுரை ஆசிரியர்களால் கண்டறியப்பட்ட சுந்தரசோழரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அக்காலத்தே இப்பகுதிச் சிற்றரசராக விளங்கிய கொடும்பாளூர் வேளிர் ஒற்றிமதுராந்தகனான வீரசோழ இளங்கோவேளாரின் இசைவுடன் நாகமங்கலத்துக்கு அருகிலிருந்த களர்நிலத்தை ஊரவையிடம் பெற்ற மயிலைத்திண்டன், அதைப் பண்படுத்தி மணியன் வயக்கல் எனப் பெயரிட்டு இக்கோயில் இறைவனுக்குப் படையலளிக்கவும் நந்தாவிளக்கேற்றவும் வழங்கிய தகவலைத் தருகிறது. களர் நிலங்களை வளப்படுத்தி வழங்கும் அரும்பணியில் இவர் ஈடுபட்டிருந்தமையை அல்லூர்க் கல்வெட்டுப் போலக் குழுமணிக் கல்வெட்டும் வெளிச்சப்படுத்துகிறது.சோமரசன்பேட்டைக்கு அருகிலுள்ள பெருங்குடி, சுந்தரசோழர் காலத்தில் நந்திவர்ம மங்கலத்துப் பிடாகையாக விளங்கியது. இவ்வூரில் ஒருதள வேசர விமானமாகத் தாம் எழுப்பிய கற்றளியான பெருமுடியீசுவரத்தின் வழிபாடு, படையல், கோயில் ஊழியர்களின் ஊதியம் ஆகியவற்றிற்காக பிரமதேய நிலத்துண்டுகள் சிலவற்றைச் சுந்தரசோழரின் 14ஆம் ஆட்சியாண்டின் போது 200 கழஞ்சுப் பொன் விலைக்குப் பெற்ற மயிலைத்திண்டன், அவற்றுடன் இறைக் கோயிலுக்குரிய விளைச்சலற்ற திடல் ஒன்றையும் 70 கழஞ்சுப் பொன் செலவழித்துப் பண்படுத்தி விளையுமாறு செய்து கோயிலுக்களித்தார்.திருஉண்ணாழிகைப்புறமாகத் திண்டனால் அளிக்கப்பெற்ற இந்த 1 வேலி 5 குழி நிலத்தின் விளைச்சலில் உரிய வரியினங்கள் செலுத்தப்பெற்று எஞ்சிய விளைச்சல் கோயில் பணிகளுக்கு ஆகுமாறு திட்டமிடப்பட்டது. அக்கோயிலில் விளக்கேற்ற திண்டனின் மணவாட்டி காமம்பெருமான் 25 கழஞ்சுப் பொன் தந்தார். விளைந்தறியாத் திடல்களை வளப்படுத்தி வழங்குவதை அறச்செயலாக மேற்கொண்டிருந்த மயிலைத்திண்டன், தாம் எடுப்பித்த திருக்கோயிலுக்கும் அத்தகு நிலமொன்றை அளித்ததுடன் கோயில் சார்ந்த பல்வேறு பணிகளைக் கருத்தில் கொண்டு வளமான நிலத்துண்டுகளையும் வழங்கி மகிழ்ந்துள்ளார்.

வயக்கல் குறித்த கூடுதல் தரவுகளுக்குக் காண்க:
மு. நளினி, ‘விளாகம்’, Kaveri-Studies in Epigraphy, Archaeology and History, 2001.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.