http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 155

இதழ் 155
[ ஜூன் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 1
மதங்கேசுவரம் - 1
மயிலைத்திண்டனும் மூன்று ஊர்களும்
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் (தொடர்ச்சி)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 2
இதழ் எண். 155 > கலையும் ஆய்வும்
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 1
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

கல்வெட்டுகளில் திருப்பாச்சில் ஆச்சிராமம் என்றறியப்படும் இன்றைய திருவாசி, சிராப்பள்ளி முசிறிச் சாலையில் 10 கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில்தான் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இறைக்கோயில் மாற்றுரைவரதீசுவர் கோயில் என்ற பெயருடன் விளங்குகிறது. இரு வேறு காலக்கட்டங்களில் உருவான இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ள கிழக்கு நோக்கிய இவ்வாளகத்தின் நுழைவாயில் ஐந்து நிலைக் கோபுரமாக எழுச்சியுடன் அமைந்துள்ளது. கோபுரத்திற்குச் சற்று முன்னிருக்குமாறு நாற்கால் பந்தல்.

கோபுரம்

துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், தரங்கவெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், ஆழமற்ற கூடுவளைவுகளுடன் கபோதம் எனக் கருங்கல் பணியாக அமைந்துள்ள கோபுரக் கீழ்த்தளத்தின் மேல் வளரும் நான்கு காரைத்தளங்களும் ஆரஉறுப்புகளும் கிரீவம் சிகரம் ஆகியனவும் செங்கல் கட்டுமானமாக உள்ளன. கோபுரத்தின் கிழக்கு, மேற்கு முகங்கள் அகன்றும் தென், வடமுகங்கள் சிறுத்தும் அமைவதால், அதற்கேற்பவே ஆரஉறுப்புகளும் சுதையுருவங்களும் உருவாக்கப்படுதல் மரபு. அதை ஒட்டியே மாற்றுரை வரதீசுவரர் கோபுரமும் திசைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்றளங்கள் அளவில் குறுகுவதால் அவற்றை வெறுமையாகக் காட்டாமல் தளக்கூரைகளைத் தாங்குமாறு போல ஆண், பெண் சுதையுருவங்களை அமைத்து அழகூட்டும் இயல்புக்கேற்ப இங்கும் நாற்றிசைகளிலும் அத்தகு அழகுருவங் கள் காட்டப்பட்டுள்ளன.





கூரைதாங்கிகள்

கோபுரத்தின் நான்கு திசைகளிலும் முதல், ஐந்தாம் தளத்திற்கு இடைப்பட்ட மூன்று தளங்களே கூரைதாங்கிகள் கொண்டுள்ளன. கோபுரத்தின் கிழக்குமுகத்தில் இம்மூன்று தளங்களிலுமே தெற்கிலும் வடக்கிலும் ஆண், பெண் இணைகள் கூரைதாங்க, மேற்கில் இந்நிலை மூன்றாம் நான்காம் தளங்களில் மட்டுமே அமைந்துள்ளது. அங்கு, இரண்டாம் தளக் கூரையை வடபுறம் ஆணும் தென்புறம் பெண்ணும் தனித்துத் தாங்குகின்றனர்.

மேற்குமுக இரண்டாம் தளக் கூரையைத் தோள், கைகளால் தாங்கும் ஆண் வடபுறத்தும் பெண் தென்புறத்தும் அமைய, மூன்றாம் தளக்கூரை தாங்கும் இணைகள் செல்வச் செழிப்புடனும் நான்காம் தளக்கூரை தாங்குவோர் எளிய மக்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். கிழக்கில் இரண்டாம் தளக்கூரையை ஆண், பெண் இணைகளும் மூன்றாம் தளக்கூரையை கத்தி, வேல் தாங்கிய இணைகளும் நான்காம் தளக் கூரையை ஊரக இணைகளும் தாங்குகின்றன.

கோபுரத்தின் தென், வடமுகங்களின் இரண்டாம் தளம் தவிர்த்த பிற மேற்றளங்கள். கூரைதாங்கிகளாய் ஒவ்வொரு தளத்திற்கும் ஓர் ஆண், ஒரு பெண் எனத் திசைக்கு இருவரைக் கொள்ள, இரண்டாம் தளத்தில் ஆண், பெண் இணையர். தென்முகத்தில் மேற்கில் இசைக்கலைஞர்களாய் அமைந்துள்ள இணை கிழக்கில் பாம்பாட்டிகளாய்க் காட்சிதர, வடபுறம் மேற்கிணை உருள்பெருந்தடி கொள்ள, கிழக்கிணையில் பெண் கண்ணாடி கொண்டுள்ளார். இவ்விணைகள் தோள்களால் கூரைதாங்குகின்றன.

மூன்றாம் தளத் தெற்கு ஆணும் பெண்ணும் ஒரு கையில் வாளேந்தி, மறு கையால் கூரைதாங்க, வடக்கு ஆணும் பெண்ணும் ஒரு கையை முழங்கால் மீதிருத்தி, மறு கையைப் பதாகத்தில் நிறுத்தித் தோள்களால் கூரை தாங்குகின்றனர். நான்காம் தளத்தினர் இருபுறத்தும் ஒரு கையை முழங்கால் மீதிருத்தி, மறுகையால் அப்பணி செய்கின்றனர்.

ஆரம்

கோபுரத்தின் நான்கு திசைகளிலும் கீழ்த்தள ஆரம் ஆறங்கம் பெற்றமைய, மேற்றள ஆரங்கள் இயல்பான அமைப்பில் உள்ளன. கிழக்கிலும் மேற்கிலும் ஆரச்சுவரால் பிணைக்கப்பட்டனவாய்க் கர்ணகூடங்கள், கர்ணசாலைகள், சாலைகள் அமைய, தெற்கிலும் வடக்கிலும் கர்ணகூடங்கள், சாலைகள் மட்டுமே உள்ளன.

தெற்கு, வடக்கு ஆரச்சாலைகள்

தென்புறம் நான்கு தளச் சாலைகளிலும் சிவபெருமான் இடம்பெற, வடபுறம் தாமரையில் நான்முகன். முதல் தளச் சாலையில் தெற்கில் வீராசனத்தில் தென்திசைக்கடவுளாகப் பின் கைகளில் உடுக்கை, தீச்சுடருடன் முயலகன் மேல் வலக்கால் இருத்தியுள்ள சிவபெருமானின் வல முன் கை சின்முத்திரையில் அமைய, இட முன் கையில் சுவடி. அவரிடம் ஆகமம் கேட்குமாறு சுகபிரும்மர் உட்பட நான்கு முனிவர்கள். வடக்கில் தாமரையில் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்முகனின் பின் கைகளில் அக்கமாலை, குண்டிகை. முன் கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் உள்ளன. இருபுறத்தும் நான்முகனுக்காய் லேசாக ஒருக்கணித்திருக்கும் தேவியர் ஒரு கையை நெகிழ்த்தி, மறு கையில் மலர் கொண்டுள்ளனர்.

இரண்டாம் தளத்தில் தெற்கில் மாணிக்கவாசகரும் உமையும் நோக்க, இறைவனின் ஆனந்ததாண்டவம். சடைமகுடத்தின் வலப்புறம் பிறை துலங்க, பின் கைகளில் உடுக்கை, தீ கொண்டு, வல முன் கையில் காப்பு முத்திரைகாட்டி, இட முன் கையை வேழக்கையாக வீசியுள்ள இறைவனின் வலப்பாதம் முயலகன் முதுகின்மீது. இடப்புற உமை வலக்கையில் மலருடன் இடக்கையை நெகிழ்த்தி நிற்க, வலப்புற வாசகர் சின்முத்திரையும் சுவடியுமாய் ஆடல் காண்கிறார். வடக்கில் முதல் தளம் போலவே கைகளமைத்து சுகாசனத்திலுள்ள நான்முகனின் இருபுறத்தும் அவருக்காய் ஒருக்கணித்துள்ள தேவியரும் சுகாசனத்தில்.

மூன்றாம் தளத்தில் உத்குடியில் வீணை வாசிக்கும் இறைவனின் பின் கைகளில் மான், மழு. அவரது வலப்பாதம் முயலகன் மீது. கீழ்ச்சாலைகளில் உள்ளவாறு போலவே அதே குறிப்புகளும் கருவிகளுமாய் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்முகன் தேவியரின்றித் தனித்துள்ளார்.

நான்காம் தளத்தில் ஆலமர்அண்ணலாய் முயலகனின்றித் தனித்து உத்குடியிலுள்ள சிவபெருமானின் வலப்பாதம் தளத்தின் மீதமைய, வலக்கை சின்முத்திரையில். இடக்கை முழங்கால் மீது. பின் கைகளில் உடுக்கை, தீச்சுடர். தேவியரின்றித் தனித்துச் சுகாசனத்திலுள்ள நான்முகனின் வல முன் கை சின்முத்திரை காட்ட, இட முன் கையில் சுவடி. பின்கைகளில் அதே கருவிகள்.

கர்ணகூடங்கள்

கர்ணகூடங்களில் முதல் தளத் தென்புறத்தே மேற்கில் சிவபெருமான் மான், மழுவுடன் காக்கும், அருட்குறிப்பு காட்டி நிற்க, கிழக்கில் அம்மை முன்கைகளில் அதே குறிப்புகளுடன் பின் கைகளில் மலர்கள் கொண்டு நிற்கிறார். வடக்கில் மேற்குக் கர்ணகூடத்தில் மகிடத்தலைமீது நிற்கும் மர்த்தினி முன் கைகளை காக்கும், கடியவலம்பிதத்தில் இருத்தி, பின் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். கிழக்குக் கர்ணகூடத்தில் சுடர்முடிக் காளி. அவர் பின் கைகளில் அங்குசம், பாசம்.

இரண்டாம் தளத் தென்புறத்தே மேற்கில் பிச்சையேற்கும் பெருமான் வலக்கையால் மானுக்குப் புல்லளித்து இடக்கையில் தலையோடு கொண்டு, நிர்வாணியாய் நிற்கிறார். பின்கைகள் முத்தலைஈட்டி, உடுக்கை பிடித்துள்ளன. இடையைச் சுற்றிப் பாம்பு. கிழக்கில் யானையை அழித்த மூர்த்தி வலக்காலை யானைத் தலைமேல் இருத்தி, ஆறு கைகளுடன் சுழற்சியில் காட்சிதர, வடபுறத்தே கிழக்கிலும் மேற்கிலும் வலத்தோளில் பையுடன் ஒரு கை பதாகம் காட்ட, மற்றொரு கையைக் கடியவலம்பிதமாய்க் கொண்ட அடியவர்கள்.

தென்புற மூன்றாம், நான்காம் தளங்களில் இருபுறத்தும் முனிவர்கள். மூன்றாம் தளத்தில் ஒருவர் சின்முத்திரையும் சுவடியுமாய் நிற்க, மற்றவர் தலைக்கு மேல் கையுயர்த்தி வணங்குகிறார். நான்காம் தளத்தில் இருவரும் வணக்க முத்திரையில். வடக்கில் மூன்றாம் தளக் கிழக்கு, மேற்குக் கர்ணகூடங்களில் ஒரு கையை நெகிழ்த்தி, ஒரு கையில் தாமரை கொண்டுள்ள தேவியர் நான்முகனின் துணைவியராகலாம். நான்காம் தளக் கர்ணகூடங்களில் மேற்கில் வணக்க முத்திரையிலும் கிழக்கில் காக்கும், அருட்குறிப்புகளுடனும் அடியவர்கள்.

ஆரச்சுவர்ச் சுதையுருவங்கள்

முதல் தளத் தென்புற ஆரச்சுவரில் மேற்கில் சுகாசனத்தில் சண்டேசுவரரும் கிழக்கில் கண்ணப்பரும் காட்சிதர, வடக்கு ஆரச்சுவரில் மேற்கில் கலைமகளும் கிழக்கில் அலைமகளும் தாமரையில் முறையே சுகாசனத்திலும் அர்த்தபத்மாசனத்திலும் உள்ளனர். அலைமகளின் பின் கைகளில் தாமரைகள். முன் கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். இட முன் கையில் சுவடி கொண்டுள்ள கலைமகள் வீணைமீட்டுகிறார். அவரது வலப் பின் கை பதாகத்தில். இரண்டாம் தளத் தென்புறத்தே மேற்கில் தலையில் உணவுப் பாத்திரம் ஏந்திய பூதமும் கிழக்கில் அர்த்தபத்மாசன முனிவரும் அமைய, வடக்கில் இருபுறத்தும் கவரிக்காரிகையர். வடக்கு, தெற்கு இருதிசைகளிலும் மூன்றாம், நான்காம் தள ஆரச்சுவர்கள் வெறுமையாக உள்ளன.

கிழக்கு, மேற்குத் தளங்களும் ஆரங்களும்

கோபுரத்தின் கிழக்கு, மேற்குத் தளங்கள் அகலமான பரப்பில் அமைந்துள்ளபோதும், சுதையுருவங்கள் எண்ணிக்கையில் குறைவே. ஆரச்சாலைகள் அனைத்தும் திறப்புகளாக அமைந்து, பக்கத்திற்கொரு காவலரைக் கொண்டுள்ளன. மேற்கில் முதலிரு தள ஆரச்சுவர்கள் சுதையுருவம் கொள்ளாதபோதும், கிழக்கில் இந்நிலை மாறுபட்டுள்ளது.

முதல் தள ஆரம்

மேற்கில் வடக்குக் கர்ணகூடத்தில் சுகாசனத்தில் வராகரும் அவர் இடமுழங்கால் மேலமர்ந்து இருகால்களையும் தொங்கவிட்டு நிலமகளும் அமைய, தென்கர்ணகூடத்தில் முன்கைகள் முழங்கால்கள் மீது நெகிழ நரசிம்மர் யோகாசனத்தில். சாலைக்காய் ஒருக்கணித்துள்ள காவலர்கள் ஒரு கை, ஒரு காலை. உருள்பெருந்தடி மீதிருத்தி, மறு கையால் அச்சுறுத்துகின்றனர். அவர்களையடுத்துச் சங்குகளுடன் பூதர்கள்.

கிழக்கில் தென்கர்ணகூடத்தில் நிற்கும் பிள்ளையாரின் முன் கைகளில் தந்தம், மோதகம். பின்கைகளில் பாசம், அங்குசம். வடக்குக் கர்ணகூடத்தில் கிளி தலைப்பிட்ட தடியுடன் அரசர் போல ஒருவர். இத்திசையின் தெற்கு, வடக்கு ஆரச்சுவர்களில் முறையே வணங்கும் நிலையில் பெண்ணும் அடியவரும் அமைய, கர்ணசாலை போல அமைந்துள்ள ஆரஉறுப்பின் நாசிகையில் தென்புறம் தோள் மேலொன்றும் கையிருத்த ஒன்றுமாய் இரு உருள்பெருந்தடிகளுடன் காவலரும் வடபுறம் ஆறு கைகளுடன் நின்றகோலத்தில் இடக்காலுயர்த்தி, மடியில் இரணியனைக் கிடத்தி, வலக்கைகளுள் ஒன்றால் அவன் தொடையைப் பற்றி அழிக்கும் நரசிம்மர்.

இரண்டாம் தள ஆரம்

இரண்டாம் தளக் கிழக்கில் தெற்குக் கர்ணகூடத்தில் அம்மையப்பரும் வடக்குக் கர்ணகூடத்தில் காக்கும், அருட் குறிப்புகளுடன் சிவபெருமானும் அமைய, சாலைச் சாளரத்தைக் கவரிப்பெண்களின் துணையுடன் உருள்பெருந்தடிக் காவலர்கள் அலங்கரிக்கின்றனர். அவர்தம் வலப்புறத்தே இடமுழங்காலை உயர்த்தி ஊர்த்வஜாநு கரணம் காட்டும் பிள்ளையாரும் வலப்புறம் நான்முகன் இடப்புறம் விஷ்ணு நடுவில் சிவபெருமான் உடல் கொண்ட ஏகபாதமூர்த்தியும் அமைய, இடப்புறத்தே மடியில் இரணியனுடன் இரு கால்களையும் தொங்கவிட்ட அமர்வில் நரசிம்மரும் பின்னால் மயிலுடன் வேலேந்திய முருகனும்.

மேற்குப்புறத்தே தெற்குக் கர்ணகூடத்தில் அமுதக்குடத்துடன் சமபாதத்தில் கருடனும் வடபுறம் இடக்கையை உருள்பெருந்தடிமீது இருத்திய அனுமனும் அமைய, சாலைக் காவலர்கள் ஒரு கை, ஒரு கால் உருள்பெருந்தடிமீது இருக்குமாறு மற்றொரு கையால் வியப்பு காட்டிக் கவரிப்பெண்கள் துணையுடன் நிற்கின்றனர். சாலையின் கிரீவ நாசிகையில் பாம்புடல் மீது சுகாசனத்தில் பரமபதர். அவரது இடத்தொடையில் கையில் மலருடன் தேவி.

மூன்றாம் தள ஆரம்

மூன்றாம் தள ஆரத்தில் மேற்குப்புறத்தே தெற்குக் கர்ணகூடத்தில் வணங்கிய நிலையில் பாம்பின் மீதமர்ந்த முனிவரும் வடக்குக் கர்ணகூடத்தில் அதே நிலையில் அர்த்தபத்மாசன முனிவரும் காட்சிதர, சாலைச் சாளரத்தின் இருபுறத்தும் கைகளில் பூச்சரம் ஏந்திய பெண்களின் துணையுடன் ஒரு கை, ஒரு கால் உருள்பெருந்தடிமீது இருக்குமாறு காவலர்கள். அவர் தம் தென்புறத்தே சிவபெருமானின் ஆனந்ததாண்டவமும் வணங்கிய நிலையில் பதஞ்சலி முனிவரின் உருவமும் அமைய, வடபுறத்தே மாணிக்கவாசகரும் உமையன்னையும் நின்று காண, சிவபெருமானின் வலக்கால் உயர்த்திய ஊர்த்வதாண்டவம். அவரது முன் கைகள் காக்கும், வேழமுத்திரைகளில்.

கிழக்குப்புறத்தே தெற்குக் கர்ணகூடம் பைரவர் கொள்ள, வடக்கில் மத்தளம் வாசிக்கும் நந்திதேவர். சாலைச் சாளரத்தின் இருபுறத்தும் பூச்சரப்பெண்களுடன் உருள்பெருந்தடிக் காவலர்கள். அவர்தம் தென்புறத்தே தேவியர் இருவருடன் சுகாசனப் பிள்ளையாரும் வடபுறத்தே முருகன் தன் தேவியருடனும் உள்ளனர்.

நான்காம் தள ஆரம்

கோபுரத்தின் நான்காம் தளக் கிழக்குமுகத்தில் கர்ணகூடங்களில் சுகப்பிரும்மரும் சிவபெருமானும் அமைய, சாலைச் சாளரத்தின் இருபுறத்தும் உருள்பெருந்தடிக் காவலர்கள். அவர்தம் வடபுறத்தே மாணிக்கவாசகரும் முருகனும் நிற்க, தென்புறத்தே பிள்ளையாரும் சம்பந்தரும். மேற்கு முகத்தில் கர்ணகூடங்களில் கோவர்த்தனகிரி தாங்குபவராகவும் குழலிசைப்பவராகவும் கண்ணன். சாலைச்சாளரத்தின் இருபுறத்தும் திசைக்காவலர்களாய்க் கொள்ளத்தக்க அமரர்கள் துணையுடன் உருள்பெருந்தடிக் காவலர்கள். ஆரச்சுவரில் தெற்கில் கையில் வாளுடன் அரசரும் வடக்கில் இடக்கையில் தலையோட்டுடன் முனிவரும்.

கோபுர கிரீவம்

கிழக்கு, மேற்கு இருதிசைகளிலும் பெருநாசிகைச் சாளரத்தின் இருபுறத்தும் உருள்பெருந்தடிக் காவலர்கள். அவர்களையடுத்துப் பக்கத்திற்கிருவராய் நின்றநிலையில் வணங்கும் முனிவர்கள். அவர்தம் புறத்தே பக்கத்திற்கொரு அமர்நந்தி. கிரீவ கீர்த்தி முகங்களில் சுகாசனத்தில் கிழக்கில் முருகனும் மேற்கில் விஷ்ணுவும். தெற்கில் குன்றின் மீது தனித்தவராய் வலப்பாதத்தைத் தளத்தின் மீதிருத்தி, வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் வடக்கில் அர்த்தபத்மாசனத்தில் தியானமுத்திரையில் முன் கைகளை அமைத்தவராய் நான்முகனும். கிரீவமூலைகளில் அதன் கூரையை முதுகில் தாங்கும் அடியவர்கள்.

கோபுர உட்புறச் சிற்பங்கள்

முதல் கோபுரத்தின் கிழக்கு, மேற்கு வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெற்கு, வடக்கு இருபுறத்தும் திண்ணை அமைய, அதன் மேல் வளரும் தென்சுவரில் தேவியருடன் முருகனும் வடசுவரில் அலங்கார வளைவிற்குள் பிள்ளையாரும் பலகைச் சிற்பங்களாகக் காட்சிதருகின்றனர். மேற்குப் பார்வையில் மயில் நிற்க, அதன் முன் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சன்னவீரம், பட்டாடையுடன் சமபாதத்திலுள்ள முருகனின் முன் கைகள் காக்கும் குறிப்பிலும் கடகத்திலும். இருகைகளே பெற்றுள்ள அவரின் இருபுறத்தும் நிற்கும் தேவியர் ஒரு கையை நெகிழ்த்தி, ஒரு கையில் மலர் கொண்டுள்ளனர். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள் அணிந்துள்ள அவர்தம் இடையில் பட்டாடை. வடசுவரில் மாடவளைவு போன்ற அழகிய அலங்கரிப்பின் உள்ளிருக்குமாறு லலிதாசனத்திலுள்ள பிள்ளையாரும் இருகையினரே. வலக்கை உடைந்த தந்தம் கொள்ள, இடக்கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது. இக்கோயிலிலுள்ள பிள்ளையார் சிற்பங்களில் எழிலும் ஒயிலு மான வடிப்பு இதுவெனலாம். இவ்விரு சிற்பங்களுமே பிற்சோழர் காலத்தனவாகலாம். கோபுரத்தின் மேற்குச் சுவரில் ஒருபுறம் நந்தி யும் மறுபுறம் வணங்கும் தக்கனுடன் வீரபத்திரரும் பின்னாளைய சிற்பங்களாய்ப் பொளியப்பட்டுள்ளனர்.

வெளிச்சுற்றின் முன்விரிவு

இம்முதல் கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடைப்பட்டுள்ள வெளிச்சுற்றின் கிழக்குப்பகுதி தெற்கிலும் வடக்கிலும் விரிந்து தெற்கில் அலுவலகம், அதையடுத்து விமா னம், முகமண்டபம், பெருமண்டபம், முன்மண்டபம் பெற்ற அம் மன் திருமுன் கொள்ள, வடக்கில் ஆயிரலிங்கத் திருமேனியுடன் ஒரு திருமுன்னும் அதற்குச் சற்றுத் தள்ளி ஒன்பான்கோள் மேடையும் உள்ளன. இவற்றிற்கு இடைப்பட்ட நடைப்பகுதியில் இரண்டாம் கோபுர வாயிலைப் பார்த்தவாறு கிழக்கிலிருந்து மேற்காகக் கொடித்தளம், பலித்தளம், நந்தி.



இவற்றுக்கும் இங்குள்ள தென், வடதிருமுன்களுக்கும் இடைப்பட்டுக் கிழக்கு மேற்காக ஆறு வரிசைகளாக வரிசைக்குப் பத்துத் தூண்கள் அமைந்துள்ளன. அவற்றுள் வெளி வரிசைத் தூண்கள் செவ்வகம், நீள்கட்டு, செவ்வகம் என அமைந்து பூ மொட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்குகின்றன. கீழ்ச்செவ் வக விளிம்பில் நாகபடம். சில தூண்கள் கீழ்ச்செவ்வகங்களில் பாலுணர்வுச் சிற்பங்களுடன் உருவாக்கியவர்களின் உருவங் களையும் கொண்டுள்ளன. நடுவிலமைந்துள்ள இரு வரிசைத் தூண்கள் ஒட்டுத்தூண்களாக முதல் வகைத் தூண்களின் முன் னிணைப்பாக நான்முகத் தூண்களைக் கொண்டுள்ளன. அவை அலங்கார பாதம், நான்முக உடல், மேலுறுப்புகள், மதலை கொண்டு உத்திரம், அமர்சிம்மம், போதிகை இடைப்பட்ட மேலிரு உத்திரங்கள் கொண்டு கூரை தாங்குகின்றன. மேல் உத்தி ரங்களின் பக்க, கீழ் முகங்களில் பாலியல் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விதமான சிற்பவடிப்புகள்.

நடுவரிசைத் தூண்களில் தென்மேற்கிலுள்ள மூன்றின் செவ் வகங்களில் இவ்விரிவுப்பகுதியை உருவாக்கிய தலைமைக் கொடை யாளர்களின் உருவச்சிற்பங்களைக் காணமுடிகிறது. முறுக்கு மீசை, ருத்திராக்கமாலை, தோள், கை வளைகள், பட்டாடை, வணங்கிய கைகள் என சதுரத்தின் வடக்கு முகத்தில் விளங்கும் கொடையாளரின் தேவியர் பட்டாடையும் அணிகலன்களு மாய்க் கூப்பிய கைகளுடன் அதே சதுரத்தின் பக்க முகங்களில். மற்றொரு தூணில் கொடையாளரும் அவரது உதவியாளரும் தொழுத கைகளுடன் அமைய, மூன்றாம் தூணில் தலையிலும் கழுத்திலும் ருத்திராக்கமாலைகள் திகழ வணங்கிய கைகயராய் மற்றொரு கொடையாளர்.

அம்மன் கோயில் முன்மண்டபத்தின் வடக்கிலும் இரண்டாம் கோபுரத்தின் இருபுறத்தும் ஆயிரலிங்கத் திருமுன்னின் தென்புறத்தும் படியுடன் கூடிய பெருந்திண்ணைகள் விரிகின்றன. வடபுறத்தே இறைவனின் ஊர்திகள் அமைய, அம்மன் திருமுன் முன்னுள்ள விரிவு இரு வரிசைகளில் வரிசைக்கு மூன்றென ஆறு முச்சதுர இருகட்டுத் தூண்கள் கொண்டு பூமொட்டுப் போதிகைகளுடன் கூரைதாங்குகிறது. பெருநாகபடம் பெற்றுள்ள அத்தூண்களில் ஒன்று தவிர ஏனையவற்றின் கீழ்ச்சதுரங்களில் சிற்பங்கள்.

கிழக்கு வரிசையில் தெற்குத்தூண் சதுரத்தில் முன்கைகளில் வாள், கேடயம் கொண்டு, பின் கைகளில் மழு, பாம்புடன் வீரபத்திரர். அவர் வலப்புறத்தே சிறிய அளவில் வணங்கிய கைகளுடன் தக்கன். வடக்குத்தூண் கீழ்ச்சதுரத் தென்புறத்தே மீனைக் கவ்வியிருக்கும் கொக்கு. வடபுறத்தே அடியவர். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தூணின் இருபுறத்தும் வணங்கிய கைகளுடன் இக்கட்டமைப்புக்குத் துணைநின்ற பேராளர்கள். மேற்கு வரிசைத் தூண் சதுரங்களில் தென்தூண் சதுரம் வெறுமையாக அமைய, பிற இரண்டிலும் வணங்கிய கைகளுடன் இப்பகுதி உருவாகத் துணைநின்ற அறச்சிந்தனையாளர்கள்.

அம்மன் கோயில்

விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முன்மண்டபம் என மேற்குப் பார்வையில் கருங்கல் கட்டுமானமாக அமைந்துள்ள பாலாம்பிகை அம்மன் திருமுன் அதன் வடபுறத்தே கருவறைக்கருகில் சண்டேசுவரிக்கெனத் தனித் திருமுன் கொண்டுள்ளது. தாங்குதளமற்ற நிலையில் தூண்களோ, கோட்டங்களோ அற்ற வெறுஞ்சுவரும் வடிப்பற்ற கபோதமும் வேதிகையும் கொண்டு, ஒருதள வேசரமாகத் திகழும் இத்திருமுன் கிரீவத்தில் நான்கு வெற்று நாசிகைகளும் வேதிகையில் நாற்புறத்தும் நந்திகளும் உள்ளன. கபோதத்திற்கு மேற்பட்டுச் செங்கல் கட்டடமாக உள்ள இத்திருமுன் முன்றிலின் தூண்களிரண்டும் செவ்வகம், நீள் கட்டு, சதுரம் என்றமைந்து தரங்கவெட்டுப் போதிகைகளுடன் கபோதம் தாங்குகின்றன. கொடிக்கருக்குப் பெற்றுள்ள செவ்வகத் தலைப்பில் நாகபடங்கள்.



கருவறையுள் கருங்கல் தளத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், முப்புரிநூல், பட்டாடையுடன் மார்புக்கச்சின்றி சுகாசனத்திலுள்ள சண்டேசுவரியின் வலக்கையில் மழு. மகுடத்தை மீறிய சடை இருபுறத்தும் பரவியுள்ள அவரது இடக்கை தொடைமீது.

இறைவி விமானம்

இருதள வேசரமாக உள்ள இறைவியின் விமானம் சாலை முன்தள்ளலுடன் கபோதபந்தத் தாங்குதளத்தின் மீது எழுகிறது. எண்முகக் குமுதத்திற்குக் கீழ்ப்பட்ட தாங்குதளப்பகுதி சுற்றுத்தரை உயர்த்தப்பட்டதால் பார்வைக்கு மறைய, அடுத்துள்ள வேதிகைத்தொகுதியை ஊடறுத்து முப்புறத்தும் கோட்டங்கள் பெற்றுள்ள விமானச் சுவரைச் சதுரபாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. தென், வடலாக 3. 59 மீ. அகலமும் கிழக்கு மேற்காக 3. 73 மீ. நீளமும் பெற்றுள்ள விமானக் கீழ்த்தளத்தின் சாலைப்பகுதியைத் தழுவும் தூண்களும் சுவர்களின் திருப்பத் தூண்களும் முழுத்தூண்கள் போலமைய, சுவர்த் தூண்கள் சற்றே உருவில் சிறுத்துள்ளன. கட்டு, மாலை இல்லையெனினும் தாமரைக்கட்டுத் தொடங்கிப் பிற மேலுறுப்புகள் நிறைவாய்க் காட்டப்பட்டுள்ள இவற்றின் தாமரை, பலகை, வீரகண்டத்தையடுத்து முப்புறத்தும் கைவிரிக்கும் தரங்கவெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்குகின்றன. வலபி தாமரை இதழ்களால் நிறைந்துள்ளது. விளிம்பும் மேலோட்டமான கூடுவளைவுகளும் பெற்றுள்ள கபோதத்தை அடுத்துச் சாலை முன்தள்ளலுடன் செங்கல் வேதிகை. சுவர்க்கோட்டங்கள் சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களின் மீது கூரையுறுப்புகளும் மேலே சிகரமெனப் பேரளவிலான செங்கல் கபோதமும் தூபியும்.

ஆரம், மேற்றளம், கிரீவம், சிகரம்

விமானக் கீழ்த்தள ஆரம் நான்கு மூலைகளிலும் கர்ணகூடங்களையும் அவற்றின் நடுவில் முன்தள்ளப்பெற்ற சாலைகளையும் பெற, இடைப்பட்டனவாய்ப் பக்கத்திற்கிரண்டு வெற்றுக் குறுநாசிகைகள். சாலையின் மகரவளைவு பெற்ற சிறுநாசிகைகளை நின்றகோல தேவியுருவங்கள் அணிசெய்ய, கர்ணகூடங்களில் மகாராஜலீலாசன மங்கையர். அவர்தம் ஒரு கை முழங்கால் மீது படிந்து அருகிலுள்ள தடிமீதர, மற்றொரு கை மலர் கொண்டுள்ளது. வடமேற்குக் கர்ணகூட மங்கை மட்டும் நின்றகோலத்தில் வலக்கையில் தாமரைமொட்டுடன்.

சாலைத் தேவியர் முன்கைகள் காக்கும், அருள், நெகிழ், கடியவலம்பிதக் கைகளாய் அமைய, பின் கைகளில் தென்னம்மை தாமரை மலர்களும் மேற்கம்மை சங்கு, சக்கரமும் வடக்குத் தேவி அக்கமாலை, தாமரையும் கிழக்கம்மை அக்கமாலை, நீலோத்பலமும் கொண்டுள்ளனர். சாலைப் பிதுக்கத்துடன் ஆரத்தின் பின்னெழும் உயரக்குறைவான இரண்டாம் தளத்தையடுத்து சிகரத்தில் சாலையமைப்புப் பெற்ற பெருநாசிகைகளுடன் கிரீவம் அமைய, மேலே வேசர சிகரமும் தூபியும். கிரீவ வேதிகையில் நந்திகள் அமர, சுவர்களில் எண்திசைக் காவலிகள். கிரீவகோட்டங்களில் தெற்கில் மகேசுவரியும் மேற்கில் வைணவியும் வடக்கில் நான்முகியும் கிழக்கில் கௌமாரியும் சுகாசனத்தில் உள்ளனர். முன் கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டுள்ள அவர்தம் பின்கைகளில் அவரவர்க்குரிய கருவிகள்.

முகமண்டபம்

விமானம் ஒத்த அதே கட்டமைப்பிலுள்ள போதும் அதன் முன்னுள்ள முகமண்டபம் சாலைப்பிதுக்கம் கொள்ளவில்லை. மண்டபச் சுவரில் தெற்கிலும் வடக்கிலும் கோட்டங்கள்.

பிற மண்டபங்கள்

முகமண்டபத்தின் முன்னுள்ள பெருமண்டபமும் முன்மண்டபமும் ஒரே கட்டமைப்பில் உள்ளன. கண்டம், பெருவாஜனம் என அமைந்த துணைத்தளத்தின் மீதெழும் சுவர், தூண்களின் தழுவலோ, கோட்டங்களோ அற்ற நிலையில் கூரையுறுப்புகள் தாங்குகிறது. வலபி, கபோதம் இரண்டுமே வெறுமையாய் அமைய, மேலே வேதிகை. வடக்குச் சுவரில் சாளரம் பெற்ற பெருமண்டபத்தைவிட முன்மண்டபம் சற்றே உயரமாக அமைந்துள்ளது. அதன் முகப்புச்சுவரின் வடபுறம் காணப்படும் தச்சமுழம் என்ற எழுத்துப் பொறிப்பு பொ. கா. 14 அல்லது 15ஆம் நூற்றாண்டினதாகலாம்.

கோட்டச்சிற்பங்கள்

விமான, முகமண்டபக் கோட்டங்களில் தாமரைத்தளத்தில் நிற்கும் இறைவியின் தோற்றங்கள். அனைவருமே மகரகுண்டலங்கள், தோள், கடக, கை வளைகள், சுவர்ணவைகாக்சம், இடைக் கட்டுடனான பட்டாடை பெற்றுள்ளனர். அவர்தம் இடைக்கச்சு அழகிய நடுவளையத் தொங்கலும் அதன் இருபுறத்தும் பட்டைத் தொங்கல்களும் பெற்றுச் சிறக்கிறது. கிரீடமகுடம் பெற்றுள்ள முகமண்டப வடக்குக் கோட்ட அம்மை தவிர ஏனையவர் மார்புக்கச்சற்றவர்களாய்ச் சடைமகுடம் கொள்ள, இவ்வம்மை வல முன் கையில் வாளும் இட முன் கையில் கேடயமும் பின் கை களில் சங்கு, சக்கரமும் கொண்டுள்ளார்.



கருவறையின் மூன்று கோட்டத் தேவிகளும் சரப்பளியுடன் முன் கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டுள்ளனர். உள்ளங்கைகளில் மலர்ப்பதக்கங்கள். வடக்கு அம்மையின் பின் கைகளில் அக்கமாலை, குண்டிகை. மேற்குத் தேவி அங்குசம், மான் கொள்ள, தெற்கர் மலர்மொட்டுக்கள் பெற்றுள்ளார். முகமண்டபத் தெற்குக் கோட்டத் தேவி இதே அலங்கரிப்புகளுடன் முன் கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டு, இடப் பின் கையில் பாசம் பெற்றுள்ளார். சிதைந்துள்ள வலப் பின் கைக் கருவி அங்குசமாகலாம்.

மண்டபங்களின் உட்புறம்

வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய முத்திசைகளிலும் வாயில்கள் பெற்றுள்ள அம்மன் கோயில் முன்மண்டபக் கூரையைக் கீழ்ச் சதுரத்தில் நாகபடம் பெற்ற 8 முச்சதுர இருகட்டுத் தூண்கள் கிழக்கு மேற்காக இருவரிசைகளில் நின்று தரங்கவெட்டுப் போதிகைகளின் மேலான கூரையுறுப்புகள் கொண்டு தாங்குகின்றன. சில சதுரங்களில் கொடிக்கருக்கு, மலர்ப்பதக்கங்கள் என மேலோட்டமான வடிப்புகள்.

இம்மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் மிக மெல்லிய உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் கூரையுறுப்புகளுடன் தழுவும் பெருமண்டப வாயிலும் அதன் இருபுறத்தும் பக்கத்திற்கொன்றாக வாயிற்காவல் பெண்களின் கீர்த்திமுக வளைமாடங்களும் அமைய, வாயிலுக்கு மேலுள்ள வளைவில் யானைத்திருமகள். அவ்வளைவின் இரு மூலைகளிலும் வணக்க முத்திரையில் தேவதைகள். முன்மண்டபக் கிழக்கு வாயில்கள் இப்பெருமண்டப வாயிலின் வடக்கிலும் தெற்கிலுமாய் அமைந்துள்ளன. சிறிய அளவிலான நந்தி அமர்ந்துள்ள முன்மண்டபத்தின் சுவர்களில் அம்மனின் படங்கள். இந்நாளைய அமைப்பில் புடவை உள்ளிட்ட உடையுடன், பின்கைகளில் மலர்கள் பெற்றுள்ள காவற் பெண்கள் ஒரு கையை உருள்பெருந்தடி மீதிருத்தி மற்றொரு கையால் எச்சரிக்கின்றனர்.

வரிசைக்கு இரண்டென இருவரிசைகளில் முச்சதுர இருகட்டுத் தூண்கள் தரங்கவெட்டுப் போதிகைகளுடன் கூரைதாங்கும் பெருமண்டபத்தின் வடக்குத் தூண்களின் நடுச்சதுரம் நாற்புறத்தும் தாமரைப்பதக்கம் கொள்ள, தெற்குத் தூண்களில் இவ்வடிப்பு அழுத்தமாக இல்லை. சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்களால் தழுவப்பெற்ற முகமண்டப வாயிலும் கருவறை வாயிலும் எளிய அமைப்பின. கருவறையில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான பட்டாடை அணிந்தவராய்ப் பின் கைகளில் மலர்களுடன், முன் கைகளில் காக்கும், அருட்குறிப்பு காட்டும் பாலாம்பிகை பெருவடிவினர்.

வெளிச்சுற்று

அம்மன் கோயிலைப் பார்த்தவாறு வெளிச்சுற்றின் தென்பகுதியில் நந்தியும் பலித்தளமும் அமைய, அவற்றின் வலப்புறத்தே தலமரமாக வன்னி. கோயில் திருக்குளம் அன்னமாம் பொய்கை முன்மண்டப வாயிலை அடுத்துத் தென்சுற்றில் சற்றே இறக்கமாக அமைந்துள்ளது. இச்சுற்றின் உள்மதிலையொட்டி மண்ணில் புதையுண்டுள்ள சோழர்காலச் சிற்பம் எழுவர்அன்னையருள் ஒருவரான கௌமாரியாகலாம். சுகாசனத்தில் வல முன் கையில் கடகம் காட்டி, இட முன் கையைத் தொடையிலிருத்தியுள்ள அம்மையின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். கரண்டமகுடம், மார்புக்கச்சு, முப்புரிநூல், தோள், கடக, கை வளைகள், தொடைவரை சுருக்கிய பட்டாடை, இடைக்கட்டு பெற்றுள்ள அவரது பின் கைகளில் அக்கமாலை, சக்தி. மேற்கில் தென்புறத்துள்ள ஒருதள வேசர விமானத்தில் செல்வவிநாயகர். வடகிழக்கு மூலையில் நெற்களஞ்சியம், யாகசாலை.

செல்வவிநாயகர் திருமுன்

துணைத்தளம், தூண்களற்ற சுவர், கபோதம், வேதிகை, கிரீவம், சிகரம் என அமைந்துள்ள செல்வவிநாயகர் விமானத்தின் கிரீவகோட்டங்களில் லலிதாசனத்தில் அவரது சுதையுருவங்கள். வேதிகையின் மூலையில் பூதங்கள். இவ்வொருதள வேசர விமானத்தின் முன்னுள்ள முன்றில் உத்திரத்தின் மேற்கு முகத்தில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு ‘சமரராயர்’ என்ற பெயரைத் தருகிறது (சமாராயர் என்றும் கொள்ளலாம்). இப்பெரியார் இம்முன்றிலை உருவாக்கியவராகலாம்.

கருவறையில் உடைந்த இரு தந்தங்களுடன் பெருந்திருமேனியராய் லலிதாசனத்திலுள்ள பிள்ளையார் நெற்றிப்பட்டம் சூழ்க் கரண்டமகுடம், சரப்பளி, அரும்புச்சரம், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை கொண்டு பின் கைகளில் பாசம், அங்குசத்துடன் இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்க, வல முன் கையில் உடைந்த தந்தம் கொண்டுள்ளார். கருவறைத் தரையில் காணப்படும் இருவரிகளில் அமைந்த சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுத்துணுக்கு, மாற்றுரை வரதீசுவரர் கோயிலுக்கு அளிக்கப்பெற்ற நிலஎல்லைகளைக் குறிக்குமிடத்து விஷ்ணு வழிபாட்டிற்கென அளிக்கப்பட்டிருந்த திருவிடையாட்ட நிலத்தைச் சுட்டுகிறது.

ஆயிரலிங்கத் திருமுன்

முன்விரிவின் வடபுறத்தே வெளிச்சுற்றின் வடகிழக்கில் அமைந்துள்ள ஆயிரலிங்கத்திருமுன் ஒருதள நாகர விமானமும் சற்றே நீளமான முகமண்டபமும் கொண்டுள்ளது. பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், தரங்கவெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டுள்ள அவற்றுள் விமானத்தின் கிரீவமும் சிகரமும் செங்கல் கட்டுமானங்கள். விமானம், முகமண்டபம் இரண்டுமே தெற்கிலும் வடக்கிலும் வெறுமையான கோட்டங்கள் பெற்றுள்ளன. முகமண்டப வாயிலின் மேலுள்ள வளைமாடத்தில் சிவபெருமானும் உமையும் அமைய, இருபுறத்தும் சுதை நந்திகள். கருவறையில் வேசர ஆவுடையாரும் ஆயிரம் சிறு லிங்கவடிவங்கள் பொறிக்கப்பெற்ற வேசரபாணமுமாய் இறைவன் எழுந்தருளியுள்ளார். கருவறை உத்திரத்தில் சோழர்கால எழுத்தமைதியில் காணப்படும் கல்வெட்டுத் துணுக்குகள் மாற்றுரை வரதீசுவரர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட 7 மா நிலத்தைக் குறிப்பதுடன், இறைவனுக்கு உரிமையதாய் இப்பகுதியிலிருந்த மற்றொரு நிலத்துண்டையும் சுட்டுகின்றன.

- வளரும்
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.