![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 155
![]() இதழ் 155 [ ஜூன் 2021 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
எனது முந்தைய “பதாமி சாளுக்கியரின் குடைவரைகளும், கட்டுமானக் கோயில்களும்” கட்டுரையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் 2 தேதிகளில் பார்த்து வந்தவற்றைச் சொல்லியிருந்தேன். நீண்டகாலமாகத் திட்ட வடிவிலேயே இருந்த எங்களது பதாமிக்கான பயணம் 31.12.2019 அன்றுதான் செயலாக்கம் பெற்றது. பெங்களூரு நகரத்தின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கிடையில் எங்களுக்கு 2020ஆம் ஆண்டு பிறந்தது. பத்து நண்பர்களுடனான பயணம் அது. உடன் வந்தவர்களில் ஓரிருவர் தவிர மற்றவர் எனக்குப் புதியவர்கள். பெங்களூரு நகரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அங்குலம் அங்குலமாக ஊர்ந்து பதாமி செல்லும் நெடுஞ்சாலையை அடைய வெகுநேரம் ஆனது. நெடுஞ்சாலையிலிருந்த பெட்ரோல் பங்கில் நண்பர்கள் கேக் வெட்டி புத்தாண்டினைக் கொண்டாடினர். பின்னர் எங்களது வேன் பதாமி நோக்கி விரைந்தது. பகல் 11 மணியளவில் பதாமியை அடைந்தோம். KSTDCயின் மயூரா சாளுக்கியா விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடு இருந்தது. குளியலுக்குப் பின் சிறிது நேர ஓய்வு. மயூரா சாளுக்கியா உணகத்தில் மதிய உணவு என்பது எனக்கு ஓர் துன்பியல் அனுபவமானது. உண்விற்குப்பின் திட்டமிட்டிருந்தவாறு பதாமியின் நினைவுச் சின்னங்களைக் கண்டு வரப் புறப்பட்டோம். பயணத்தின் மூன்றாம் நாள் ஐஹொளே பயணம். மாலப்ரபா நதியின் வலது கரைக்கு அருகில் அமைந்துள்ள ஐஹொளே, பதாமியிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் பிற்கால சாளுக்கியர்களால் மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட வட்டவடிவக் கோட்டை இந்நகரத்திற்கு அரணாக அமைந்துள்ளது. ஐஹொளேவில் பொ.கா. 6-8 ஆம் நூற்றாண்டு வரையில் பதாமி சாளுக்கிய, இராட்டிரகூட அரச மரபினராலும், பின்னர் 11ஆம் நூற்றாண்டு வரை மேலைச் சாளுக்கியர், கல்யாணி சாளுக்கிய மரபினராலும் கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றுள் பெரும்பான்மை இந்து மதக் கோயில்களாகவும், ஒருசில சமணக் கோயில்களுடன் ஒரு பௌத்தக் கோயிலும் அடங்கும். இந்துக் கோயில்கள் விஷ்ணு, சிவன், சூரியக் கடவுளர்க்கானவை. சமண பசதிகள் மகாவீரர், பார்சுவநாதர், நேமிநாதர் மற்றும் பிற சமணத் தீர்த்தங்கரர்களுக்கானவை. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குடைவரை ஒன்றும், சமணக் குடைவரை ஒன்றும், பௌத்தக் குடைவரை ஒன்றும் இவற்றுள் அடங்கும். ஐஹொளே அந்நாளில் பெரும் வணிக நகரமாக விளங்கியுள்ளது. கவின்மிகு கோயில்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஐஹொளே “கோயில் கட்டடக்கலையின் தொட்டில்” என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றது. ஐஹொளேவில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுவது துர்கா கோயில் வளாகம் ஆகும். இவ்வளாகம், துர்கா கோயில், சூரிய நாராயணர் கோயில், லட்கான், கோயில் போன்ற கோயில்களை உள்ளடக்கி அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் தான் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இவ்விதழில் ஐஹொளே அருங்காட்சியகம், ஹுச்சிமல்லிகுடி கோயில், இராவண பாடி சிவன் குடைவரை ஆகியவற்றைக் காணலாம். அருங்காட்சியகம்: துர்கா கோயிலுக்கு மேற்புறத்தில் அமைந்துள்ள ஐஹொளே அருங்காட்சியகம் தொல்லியல் அளவீட்டுத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தொன்மையான நினைவுச் சின்னங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன.. ![]() கார்த்திகேயன் ![]() ![]() லஜ்ஜா கௌரி ![]() ![]() ![]() நடுகற்கள்: ஹுச்சிமல்லிகுடி சிவன் கோயில்: ஐஹோளே நகர எல்லையிலிருந்து விலகி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு கரடுமுரடான கப்பிச் சாலையில் பயணித்தால் ஹுச்சிமல்லிகுடி சிவன் கோயிலை அடையலாம். பதாமி சாளுக்கியரால் கட்டப்பட்ட இக்கோயில் மேற்குப் பார்வையாய் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிகரம் ரேகாநாகரமாக அமைந்துள்ளது. விமானத்தில் சுகநாசி அமைந்த முதல் கோயிலாக அறியப்படுகிறது. சுகநாசியில் சிவபெருமானின் அழகிய சிற்பம் காணப்படுகிறது. இக்கோயில் முகமண்டபம், ரங்கமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் நிறைந்திருக்கும் எழிலார்ந்த சிற்பங்கள் சாளுக்கியரின் கலைத்திறனைப் பறைசாற்றுவதாக உள்ளது. அவற்றுள் பறக்கும் மயில்மீது அமர்ந்த கார்த்திகேயனின் சிற்பம் சிறப்பிற்குரியது. ![]() ![]() ![]() சுக நாசிகையில் கரண சிற்பம் ![]() மயில்மீது கார்த்திகேயன் ![]() ![]() ஹுச்சிமல்லிகுடி சிவாலயத்திலிருந்து சிறிது தொலைவு மண் சாலையில் நடந்து சென்றால் இராவணபாடி சிவன் குடைவரையை அடையலாம். இராவணபாடி சிவன் குடைவரை: ஆறாம் நூற்றாண்டில் முற்சாளுக்கியரால் செய்விக்கப்பட்ட சிவனுக்குரிய குடைவரைக் கோயில். மேற்குப் பார்வையாய் அமைந்துள்ள இக்குடைவரை நுழைவாயிலில் பழுதடைந்த தூண் ஒன்றும், தரையில் வீழ்ந்து விட்ட அமலகம் ஒன்றும் நம்மை வரவேற்கின்றன. அத்திறந்த வெளியில் மூன்று சிறிய ஆலயங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் தெற்கே இருக்கும் சிற்றாலயத்தின் பின்புறத்துப் பாறைச்சரிவில் சதுர வடிவ அகழ்வில் சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நன்கு உயர்ந்த பாறைத்தளத்தை அடைய ஏதுவாகப் படிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. குடைவரையின் இருபுறத்தில் சங்கநிதியும், பதுமநிதியும் நம்மை வரவேற்கின்றனர். நுழைவாயிலில் இருபக்கங்களில் வாயிற்காவலர்கள் உள்ளனர். குடைவரையின் முகப்பு இரண்டு நான்முக முழுத்தூண்களாலும், பக்கத்திற்கொன்றாக இரண்டு நான்முக அரைத்தூண்களாலும் மூன்று அங்கணங்காளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குடைவரையின் நன்கு சீரமைக்கப்பட்ட தரைத்தளத்தின் மூன்று பக்கங்களிலும் மூன்று மண்டபங்கள் அகழப்பட்டுள்ளன. வடபுறத்தே உள்ள மண்டபத்தில் முகப்பினையடுத்துள்ள கருவறையில் பத்துக் கரங்களுடன் சிவபெருமான் பார்வதி தேவியுடன் ஆடும் கரண சிற்பம் மிகவும் சிறப்பிற்குரியது. உடன் ஏழுகன்னியர் சிற்பங்களும், கணபதி, கார்த்திகேயன் சிற்பங்களும் உள்ளன. முகப்பு, முகமண்டபம், கருவறையுடன் அமைந்துள்ள கிழக்கு மண்டபத்தின் முகப்பில் இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகிறன. தூண்கள் பாதமின்றி ஏனைய உறுப்புகளுடன் காணப்படுகின்றன. முகமண்டபத்தின் வடக்குச் சுவரில் வராகரும், தென்புறச்சுவரில் மஹிஷாசுரமர்த்தனியும் உள்ளனர். கருவறையில் ஆவுடையுடன் லிங்க பாணமும் காணப்படுகிறது. மண்டபத்தின் இருபுறத்திலும் வாயிற்காவலர்கள் அலங்கரிக்கின்றனர். தெற்கு மண்டபத்தின் முகப்பில் முகப்பில் இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகிறது. முகப்பினையடுத்து கருவறை வெறுமையாகக் காட்சியளிக்கிறது. இம்மண்டபத்தின் கிழக்குச் சுவரின் மேற்குப்புறம் மூன்று அங்கணங்களாகப் பிரித்தவாறு அகழப்பட்டு பணி நிறைவடையாமல் கைவிடப்பட்டுள்ளது. இம்மூன்று மண்டபங்களையும் தரைத்தளத்திலிருந்து சென்றடைய ஏதுவாக தாங்குதளத்தை ஊடறுத்தவாறுச் செல்லும் படிவரிசைகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. ![]() நுழைவாயில் தூணும், அமலகமும் ![]() தென்புறத்து சிற்றாலயம் ![]() பாறை அகழ்வில் இலிங்கம் ![]() நந்தி ![]() இராவணபாடி குடைவரை ![]() குடைவரை முகப்பு ![]() குடைவரையின் உட்புறம் ![]() கிழக்கு மண்டபம் ![]() மகிஷாசுரமர்த்தனி ![]() வராகர் ![]() ![]() ![]() கிழக்கு மண்டபக் கூரைச் சிற்பங்கள் ![]() தெற்கு மண்டபம் ![]() ![]() தெற்கு மண்டபத்தின் முற்றுப் பெறாத பகுதி ![]() வடக்கு மண்டபம் ![]() நடராசர் ![]() ஏழு கன்னியர் (மூவருடன் பார்வதி) - மேற்கு ![]() ஏழு கன்னியர் தொகுதி -கிழக்கு இராவணபாடி குடைவரை சாளுக்கியர் குடைவரைக்கலையின் உச்சத்தினை தொட்ட கலைச் செல்வம் எனலாம். குடைவரையின் சிற்பச் செழுமை ஏற்படுத்திய வியப்பு இன்றுவரை அகலாமல் நிற்கின்றது. இந்த இதழில் பதாமி சாளுக்கியரால் உருவாக்கம் பெற்ற ஒரு கட்டுமானக் கோயிலையும், ஒரு குடைவரையையும் கண்டோம். அடுத்து வரும் இதழ்களின் ஐஹொளேவின் பிறக் கோயில்களைக் காண்போம். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |