http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 155

இதழ் 155
[ ஜூன் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 1
மதங்கேசுவரம் - 1
மயிலைத்திண்டனும் மூன்று ஊர்களும்
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் (தொடர்ச்சி)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 2
இதழ் எண். 155 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

தமிழ்நாட்டிலுள்ள முற்சோழர் காலக் கோயில்களுள் மிகச் சிலவே புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் முகமண்டபம் ஒத்த உள்ளழகு பெற்றுள்ளன. 88 செ. மீ. அகலம், 1. 74 மீ. உயரமுள்ள முகமண்டப வாயிலின் நிலைக்கால்களின் கீழ்ப்பகுதியில் வலக்கையில் கவரியுடன் கருவறைக்காய் ஒருக்கணித்த காரிகையர். சடைமகுடராய் நடுத்தொங்கலுடன் பட்டாடையணிந்து தாள்செறியுடன் வடபுறத்துள்ளவர் வலப்பாதத்தைக் கருவறைக்காய்த் திருப்பி, இடப்பாதத்தை நேர்நிறுத்தியுள்ளார். நிமிர்ந்த நெஞ்சராய் லேசான முகச்சாய்வுடனுள்ள அவரது இடக்கை இடுப்பருகே. வலப்புறம் அவருக்காய் ஒருக்கணித்திருக்கும் குள்ளச்சிறு பெண் வலக்கையால் அழகியைப் போற்ற, இடக்கை வயிற்றருகே. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பட்டாடையுடனுள்ள தெற்கு ஆரணங்கின் இடக்கை இறைவனைப் போற்றுகிறது. இடப்புறம் அவருக்காய் ஒருக்கணித்து நிற்கும் குள்ளச்சிறு பெண்ணின் கைகள் வடபுறத்தார் போலவே.

இவ்வழகியருக்கு மேலுள்ள நிலைக்காலின் பகுதிகளும் வாயில் மேல்நிலையும் அழகிய கொடிக்கருக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேல்நிலைக்கு மேலுள்ள கண்டபாதங்களில் கொடிக்கருக்குகளுக்கு நடுவில் வலப்புறம் இரண்டு சிம்மங்களும் இடப்புறம் இணைக்காளைகள், தனிக்காளை என அமைய, மேல்நிலையின் கொடிக்கருக்கு நடுவில் வலஒருக்கணிப்பில் ஆலிலைக் கண்ணன். கரண்டமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சவடி, சன்னவீரம், தோள், கை வளைகள், தாள்செறி பெற்றவராய்ச் சற்றே தலையை உயர்த்தியுள்ள கண்ணனின் இருகால்களும் முழங்காலளவில் மடிந்து பார்சுவப் பாதங்களுடன் விரிய, அவரது இடக்கை மேலுயர்ந்து முஷ்டியில். தலையையொட்டி நீட்டப்பட்டுள்ள வலக்கையின் விரிந்த விரல்கள் ஆலிலை மேல் படர்ந்துள்ளன.

முகமண்டப வாயிலின் இருபுறத்தும் கம்பீரமான சோழக்காவலர்கள் கருவறைக்காய் ஒருக்கணித்துள்ளனர். முகமண்டபக் கிழக்குச்சுவரின் வட, தென்பகுதிகளை அதன் முன்னுள்ள பெருமண்டபத்தின் வட, தென்சுவர்கள் தழுவியுள்ளமையால், முகமண்டபத் தெற்குக் கர்ணபத்தியின் தென்கிழக்கு நான்முக அரைத்தூணும் வடக்குக் கர்ணபத்தியின் வடகிழக்கு நான்முக அரைத்தூணும் அப்பகுதியிலுள்ள தாங்குசிற்பங்களும் பிறவும் கட்டுமானத்தில் மறைந்துள்ளன. கர்ணபத்திகளின் கிழக்குமுகத் தாங்குசிற்பங்கள் தென்புறம் ஆடலரசியாகவும் வடபுறம் தாளப்பெண்ணாகவும் அமைய, தெற்குக் கர்ணபத்தி நான்முக அரைத்தூண் தொங்கலில் இரு அழகிகள்.

தொங்கலின் இடப்புறத்தே சுவஸ்திகத்தில் வலப்பாதத்தைப் பார்சுவமாக்கி, இடப்பாதத்தை அதன் பின் அக்ரதலசஞ்சாரத்திலிருத்தி ஆடியவாறே இடஒருக்கணிப்பில் தோள், கை வளைகளும் தமிழம் கொண்டையுமாய்க் காட்சிதரும் கருவிக்கலைஞரின் கைகளிலுள்ள நீளமான புல்லாங்குழலின் இன்னிசைக்குத் தொங்கலின் வலப்புறத்தே அழகியின் ஆடல். வலப்பாதத்தைப் பார்சுவத்திலும் வலஒருக்கணிப்பிலான பிரமரக சுழற்சியில் இடப்பாதத்தை வலப்புறம் அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி, வலக்கையை அர்த்தரேசிதத்தில் உயர்த்தியுள்ள ஆடலரசியின் இடக்கை பதாகத்தில். தமிழம் கொண்டையும் இடைக்கட்டுடனான சிற்றாடையும் கொண்டுள்ள அவரது முகம் இடச்சாய்வாக உள்ளது.

முகமண்டப வாயிலாகியுள்ள சாலைப்பத்திக்கும் தென், வடகர்ணபத்திகளுக்கும் இடைப்பட்டுள்ள தாய்ச்சுவரில் தென், வடசுவர்களில் உள்ளாற் போலவே பஞ்சரங்கள். பெருமண்டபத் தரை உயர்வால் கிழக்குமுகக் கர்ணபத்திகள், சாலைப்பத்தி ஆகியவற்றின் கண்டபாதங்களும் பஞ்சரங்களின் வேதிபாதங்களும் மறைக்கப்பட்டுள்ளன. கர்ண, சாலைப் பத்திகளின் வேதிபாதச் சிற்பங்களில் சாலைப்பத்தியின் வடக்குப் பாதச்சிற்பம் முற்றிலுமாய்ச் சிதைந்திருக்க, தெற்குப் பாதச்சிற்பமும் தெற்குக் கர்ணபத்தியின் வடக்குப் பாதச்சிற்பமும் ராமாயணக் காட்சிகளாய் மலர்ந்துள்ளன.

உட்புறம்

கிழக்கு மேற்காக 6. 10 மீ. நீளம், தென்வடலாக 4. 31 மீ. அகலம், 2. 70 மீ. உயரம் கொண்டுள்ள முகமண்டபத்தின் கூரையைத் தென் வடலாக இருவரிசையில் அமைந்த சதுரபாதத்தின் மீதெழும் சோழர் காலப் பெருந்தூண்கள் நான்கும் அரைத்தூண்கள் நான்கும் தாங்குகின்றன. அழகிய கொடிக்கருக்குத் தொங்கலும் கட்டும் பெற்ற இந்திரகாந்த உடலுடன் வளரும் அவற்றுள், மூன்றின் கட்டுகளில் கண்களைக் கவரும் சிற்றுருவச் சிற்பங்கள். மேலே தாமரைக்கட்டும் கொடிக்கருக்கு, பூப்பதக்கங்கள், பூங்கொத்துகள் என அழகிய அலங்கரிப்புகளுடன் உருளைவடிவக் கலசம், தாடி, கும்பம் ஆகியனவும் அமைய, எடுப்பான பாலி, அகலமான பலகை, வீரகண்டத்துடன் விளங்கும் இத்தூண்களின் மேல் குளவு, பட்டை பெற்ற தரங்கக் கைகளால் உத்திரம், வாஜனம் தாங்கும் போதிகைகள். வாஜனத்தை அடுத்துப் பூதவரி வலபி. குறுக்கும் நெடுக்குமாக செதுக்கப்பட்டுள்ள 8 செ. மீ. அகலப் பட்டைகளால் கூரை மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளிலும் நாற்புறத்தும் வலபியில் அழகிய பூதவரி.



வாயிற்காவலர்கள்

முகமண்டப வாயிற்காவலர்கள் இருவருமே கரண்டமகுடம், வாத்துக்குண்டலங்கள், சிம்மமுகத் தோள்வளைகள், கைவளைகள், உதரபந்தம், இடைக்கட்டுடன் சிற்றாடை, கிண்கிணிகள் பெற்றுக் கோரைப்பற்களும் நெறித்தபுருவங்களுமாய்க் காட்சிதருகின்றனர். வலக்காலை நேராக ஊன்றி, இடக்காலை அதன் பின் குறுக்கீடு செய்துள்ள தெற்கரின் வலப்பாதம் சமத்திலும் இடப்பாதம் அக்ரதலசஞ்சாரத்திலும் அமைய, இடப்புறம் பாம்பு சுற்றிய மழு. இடக்கை மழு மீதமர, வலக்கை அச்சுறுத்துகிறது. முத்துமாலை, சரப்பளி பெற்றுள்ள அவரது மகுடத்தில் அழகிய முகப்பணிகள். சடைப்புரிகள் இடப்புறம் நெகிழ, உச்சியில் சடைத்திரள். மணிச் சரங்களுடன் பூப்பதக்கங்கள் பெற்றுள்ள அலங்கார முப்புரிநூல் உபவீதமாக உள்ளது. வலமிருந்து இடமாக முப்புரிநூல் பெற்றுள்ள வடக்கரின் கழுத்தில் முத்துமாலை, சவடி. மகுடத்தின் பக்கங்களில் சடைச்சுருள்கள், சடைத்திரள்கள். அருகிலுள்ள மழுவின் மேல் இடக்கை அமைய, அதன் கத்திப்பகுதியில் இடப்பாதம் இருத்தியுள்ள அவரது வலப்பாதம் முகமண்டபத் தரை உயர்வில் புதைந்துள்ளது. இடத்தோள் பின் படமெடுத்த பாம்பு.





தூண் சிற்பங்கள்

முகமண்டப வாயிலையடுத்து முதல் வரிசையிலுள்ள தெற்கு முழுத்தூண், வடக்கு அரைத்தூண், இரண்டாம் வரிசை வடக்கு முழுத்தூண் ஆகியவற்றின் கட்டுகளில் முறையே 6, 5, 5 என்ற எண்ணிக்கையில் சிற்றுருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிற்றுருவச் சிற்பங்கள் உள்ள இடங்களில் தூணின் கட்டுப்பகுதி முத்துச்சரங்களால் சிறு செவ்வகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. தெற்கு முழுத்தூணின் 6 செவ்வகங்களில், மூன்றில் ஆடலும் இரண்டில் கருவிக் கலைஞர்களின் பங்களிப்பும் அமைய, ஒன்றில் குதிரையாக வந்த கேசி அரக்கனைக் கண்ணன் அழிக்கும் காட்சி. வடக்கு அரைத்தூணின் 5 செவ்வகங்களில், மூன்றில் ஆடும் பெண்களும் ஒன்றில் கருவிக்கலைஞரும் மற்றொன்றில் வணங்கிய கைகளுடன் ஆடவர் ஒருவரும் உள்ளனர். வடமேற்கு முழுத்தூணின் 5 செவ்வகங்களில், கண்ணன் பகாசுரனை அழிப்பதும் மற்றொன்றில் ஆடவர் சண்டையிடும் காட்சியும் அமைய, இரண்டில் பெண்களின் ஆடல். ஒன்றில் இடக்கைக் கலைஞர்.





ஆடற்காட்சிகள்

மூன்று தூண்களிலுமாய் 8 ஆடல் நிகழ்வுகள். அவற்றுள் ஏழில் பெண்கள். தண்டபட்ச கரண ஆடவர் வலமுழங்காலை மார்பளவு உயர்த்தியுள்ளார். இடப்பாதம் பார்சுவத்தில். இடக்கையை நெகிழ்த்தி, வலக்கையை முழங்கையளவில் மடக்கி, விரல்களை மார்பருகே விரித்துள்ள அவரது செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். தலையில் சிறுமகுடம். இடையில் சிற்றாடையும் இடைக்கட்டும். அவரது முகநிமிர்வு ஆடலுக்குத் தனி கம்பீரத்தைத் தருகிறது.

ஆடற்பெண்களுள் இருவர் சுவஸ்திகக் கரணக் காரிகைகள். இடப்பாதத்தைப் பார்சுவத்திலும் வலப்பாதத்தை சூசியிலும் இருத்தித் தமிழம் கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடைத்தொங்கலுடன் சிற்றாடை பெற்றாடும் அழகியின் வலக்கை நெகிழ, இடக்கை பதாகத்தில். மற்றொரு சுவஸ்திகர் வலக்கையைப் பதாகத்திலும் இடக்கையை அர்த்தரேசிதத்திலும் கொண்டு முகத்தை வலம் சாய்த்து ஆடுகிறார். ஆடை, அணிகலன்கள் முன்னவரைப் போன்றே.











இடக்கையை வேழமுத்திரையில் மார்புக்குக் குறுக்காக நீட்டி, வலக்கையைப் பதாகத்தில் அமைத்து ஆடும் மூன்று அழகியரில், ஒருவர் லேசான வலஒருக்கணிப்பில் இரு பாதங்களையும் அக்ரதலசஞ்சாரத்தில் இருத்தியுள்ளார். மற்றொருவர் வலப்பாதத்தை சூசியிலும் இடப்பாதத்தைப் பார்சுவத்திலும் நிறுத்தி, முகத்தை இடந்திருப்பி ஆட, மூன்றாமவர் இருபாதங்களையும் பார்சுவத்திலமைத்து, முகத்தை வலம் சாய்த்துள்ளார். மூவருமே சுவஸ்திக ஆடலர் போலவே ஆடை, அணிகலன்கள் பெற்றுள்ளனர். மண்டலநிலையில் பாதங்களை சூசியிலும் அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி ஆடும் அழகியின் வலக்கை பதாகமாக, இடக்கை நெகிழ்ந்துள்ளது. கழுத்தில் சரப்பளி. மண்டலத்திலுள்ள மற்றொருவர் பாதங்களை அக்ரதலசஞ்சாரத்திலும் பார்சுவத்திலும் இருத்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். வலக்கை கடகத்தில்.

கருவிக்கலைஞர்கள்

கருவிக்கலைஞர்கள் அனைவருமே ஆடவர்கள். அவர்களுள் மூவர் இடக்கை இசைக்க, ஒருவர் செண்டுதாளம் கொண்டுள்ளார். மண்டலநிலையில் அக்ரதலசஞ்சாரத்தில் வலப்பாதத்தையும் பார்சுவத்தில் இடப்பாதத்தையும் இருத்தி ஒருவரும் பார்சுவத்தில் வலப்பாதத்தையும் அக்ரதலசஞ்சாரத்தில் இடப்பாதத்தையும் இருத்தி மற்றொருவருமாய்க் காட்சிதரும் இரு இடக்கைக் கலைஞர்களுள், ஒருவர் இசைக்கருவியை வலத்தொடையில் தாங்கலாகக் கொள்ள, மற்றொருவர் அதை மடியில் இருத்தியுள்ளார். தாளங்களுக்கேற்பத் தோள்களில் ஏற்ற, இறக்கம் காட்டும் பின்னவரின் தலைக்குனிவு, கருவியிசையில் அவர் கருத்தோடு இருப்பதைக் காட்டுகிறது. முழு இடஒருக்கணிப்பில் முதுகை நன்கு வளைத்துத் தலையை நிமிர்த்தி இருகால்களுக் கிடையிலுள்ள இசைக்கருவியை இடமுழங்காலில் தாங்கலாக்கித் தாளம் தருகிறார் மூன்றாமவர். தமிழம் கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், முக்கோண இடைத்தொங்கலுடன் சிற்றாடை, சரப்பளி எனத் திகழும் இம்மூவருமே கருவியின் கயிற்றுப்புரிகளுக்குள் இடக்கை இருக்க, வலக்கையால் முழக்கி இசைதருகின்றனர். வலப்பாதத்தைத் திரயச்ரமாகவும் இடப்பாதத்தைப் பார்சுவமாகவும் கொண்டு வலஒருக்கணிப்பிலுள்ள இசைக்கலைஞரின் கைகளில் செண்டுதாளங்கள்.

பிற காட்சிகள்

குதிரை, பறவை வடிவில் வந்த அரக்கர்களைக் கண்ணன் அழிக்கும் காட்சிகள் இரு தூண்களில். சிறுமகுடம், பனையோலைக் குண்டலங்கள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் விளங்கும் கண்ணனின் இடக்கை குதிரையரக்கனின் முகத்தைப் பிடித்திருக்க, வலக்கை அழிக்கும் மெய்ப்பாட்டில் உயர்ந்துள்ளது. இருகைகளாலும் பறவை வடிவ பகாசுரனின் அலகைப் பிரித்து அழிக்கும் காட்சி சிதைந்துள்ளது. இடஒருக்கணிப்பில் வலக்கையைத் தொடையிலிருத்தி, இடக்கையை மடக்கி, இடமுழங்காலை உயர்த்திச் சண்டையிடும் கோலத்தில் நிற்கும் ஆடவரின் இடையில் சிற்றாடை. செவிகளில் பனையோலைக் குண்டலங்கள்.

முகமண்டப உட்கூரைப்பூதங்கள்

முகமண்டப வாயிலுக்கும் முதல் வரிசைத் தூண்களுக்கும் இடைப்பட்ட கூரை வலபியில் 53 பூதங்களும் தூண்களுக்கு இடையிலான கூரையில் 40 பூதங்களும் இரண்டாம் வரிசைத் தூண்களுக்கும் கருவறை வாயிலுக்கும் இடையிலுள்ள கூரையில் 34 பூதங்களுமாய் 127 பூதங்கள் கணப்படையாய் வலபியில் அணிவகுத்துள்ளன. இவற்றுள் சில ஆங்காங்கே சிதைந்துள்ளன. தென்வடலான வலபிகள் ஐந்தும் கிழக்கிலிருந்து மேற்காக 20, 18, 18, 13, 19 என்ற எண்ணிக்கையில் பூதங்கள் கொள்ள, கிழக்கு மேற்கான குறுக்குச் சட்டங்கள் முதல் செவ்வகத்தில் தெற்கில் 8, வடக்கில் 7 எனவும் இரண்டாம் செவ்வகத்தில் தெற்கில் 4, வடக்கில் 5 எனவும் மூன்றாம் செவ்வகத்தில் தெற்கில் 7, வடக்கில் 8 எனவும் கணங்களைப் பெற்றுள்ளன. தென், வடல் வலபிகளில் கிழக்கிலிருந்து மேற்காக நான்காம் வலபியில் உருவாகியுள்ள 13 பூதங்களை அடுத்து 5 பூதங்களுக்கான இடஒதுக்கீடை மட்டுமே காணமுடிகிறது. வடிவங்கள் உருவாகவில்லை. பூதஎண்ணிக்கையில் வலபிகளுக்கு இடையே காணப்படும் இம்மாற்றங்களால் படைப்புக் கூர்மையோ, காட்சித்திறனோ எவ்விதத்தானும் குறைவடையவில்லை. இப்பூதங்களுள் பெரும்பான்மையன ஆடற்கோலத்தில் உள்ளன.

அழகுக் கைகள், ஒற்றைக்கை முத்திரைகள் என நாட்டிய சாத்திரம் பகிர்ந்துகொள்ளும் பல கையமைப்புகளை இங்குக் காணலாம். நான்காய்ச் சிலம்பு உரைக்கும் அவிநயக் களங்களுள் இருத்தல் களத்திலேயே இங்கு ஆடல் நிகழ்கிறது. சில பூதங்கள் சண்டையிடுகின்றன. பெரும்பாலன மனித முகங்களுடன் திகழ, சில விலங்குமுகங்களையும் காணமுடிகிறது. கருவிக்கலைஞர்களாய்க் கண்களை நிறைக்கும் பூதங்களுள் பல நரம்பிசையில் நாட்டம் உள்ளனவாய்ச் சிரட்டைக் கின்னரியுடன் காட்சிதர, ஒற்றையாய்க் காற்றுக்கருவியாம் புல்லாங்குழலுடன் ஒரு பூதம். சில தோற்கருவிகள் இசைக்க, சில செண்டுதாளங்களுடன்.

முகமண்டபக் கூரையின் இந்தப் பூதக்காட்சி உள்நுழைந்து சற்றே தலைநிமிர்வாரை ஏதோ ஓர் ஆடரங்கினுள் இருப்பது போன்ற உணர்வு கொள்ளச் செய்யும். இப்பூதங்களின் முடியமைப்புகள், ஆடை, அணிகலன்கள், மெய்ப்பாடு, உடல்நிலைகள் என ஆராயின் ஓர் ஆய்வேடே அமையும்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.