![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 161
![]() இதழ் 161 [ ஜனவரி 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
விஷ்ணுகதைகள் ஒன்பது கண்டபாதங்கள் விஷ்ணு தொடர்பான புராணக் கதைகளின் படக்காட்சிகளாக உள்ளன. இரணியனை அழிக்கும் நரசிம்மக்கோலம் இக்கோயில் விமானத்தின் இரண்டாம் தள மேற்குச்சாலை நாசிகையிலும் முதல் தளத் தெற்கு, வடக்குச் சாலைகளின் மேற்கு முகத்திலும் இடம்பெற்றுள்ளாற் போலவே விமானத்தின் தெற்குக் கண்டபாதத்திலும் உள்ளது. மேற்குச் சாலைப் படப்பிடிப்பை ஒத்துள்ள இதில், அழகிய பிடரிச் சுருள்களுடன் இடஒருக்கணிப்பில் முகத்தை இரணியனுக்காய்க் குனித்துள்ள நரசிம்மரின் வலக்கால் தரையில். இடக்கால் முழங்காலளவில் மடிந்து இரணியனை வளைத்துப் பிடிக்க, அவரது வல முன் கை இரணியனின் இடக்கையைப் பிடித்துத் தம் இடத்தொடையில் இருத்தியுள்ளது. இட முன் கை இரணியனின் தலை, முதுகை அழுத்தியவாறு மார்போடு சேர்த்துள்ளது. நரசிம்மரின் பின்கைகளில் வாள், சங்கு, சக்கரம் அமைய, ஒரு கை பதாகத்தில். இரு கைகள் இருபுறத்துமுள்ள அரக்கர்களின் தலைகளைப் பற்றியுள்ளன. வலப்புற அரக்கர் வலக்கையை உயர்த்த இடப்புற அரக்கரின் கைகளில் வாள், கேடயம். சிதைந்துள்ள இவ்விருவருக்கும் இடையில் அழிப்பை நிறுத்துமாறு வேண்டும் கைக்குறிப்புடனுள்ள பெண் இரணியனின் தேவியாகலாம். நரசிம்மரின் பிடியில் சிக்கியுள்ள இரணியனின் வலக்கால் தரை தழுவ, இடக்கால் முழங்காலளவில் மடங்கித் துவண்டுள்ளது. மடியில் நிலமகளுடன் இரு முழங்கால்களையும் மடக்கித் தாவியெழும் நிலையிலுள்ள பன்றியாழ்வாரின் பின் கைகளில் சங்கு, சக்கரம். கிரீடமகுடமும் மகரகுண்டலங்களுமாய் இறைவியின் மகுடத்தை முத்தமிட்ட நிலையில், இட முன் கை அம்மையின் இடக்கை பற்றி மார்போடணைக்க, வலக்கை இறைவியின் முழங் கால்களைப் பற்றியுள்ளது. தழுவலில் மகிழ்ந்துள்ள அம்மையின் தலையில் சடைமகுடம். செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். கைகள் தம்மைக் காப்பாற்றிய இறைவனை வணங்கியவாறு. ![]() உலகளந்த பெருமாளாக மகரகுண்டலங்களுடன் வலப்பாதத்தைப் பார்சுவத்தில் ஊன்றி, இடக்காலை விண்ணோக்கி உயர்த்தியுள்ள திரிவிக்ரமரின் இட முன் கை சூசியில். பின் கைகளில் ஒன்றில் வில். மற்றொரு பின் கை வியப்புமுத்திரையில். வல முன் கை கீழே நிற்கும் கருடன் தலை தொட, பின் கைகளில் ஒன்று வாளுடன். மேற்கை தோள்புற அம்புக்கூட்டிலிருந்து அம்பெடுக்கிறது. இறைவனின் உயர்த்திய திருவடியைத் தம் முன்கைகளால் பிடித்தவாறு தாமரையில் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்முகனின் பின் கைகளில் அக்கமாலை, குண்டிகை.4 கீழே விஷ்ணுவின் இடப்புறம் வாமனரும் அவருக்கு நீர்வார்க்கும் மகாபலியும் அமைய, அவர் பின் அதைத் தடுக்கும் சுக்கிராச்சாரியார். வலப்புறம் கருடாசனத்தில் சுக்கிராச்சாரியாரும் அவரைத் தாக்கும் கருடனும்.5 கருடனைத் தடுப்பது போல ஆச்சாரியாரின் வலக்கை உயர்ந்திருக்க, கருடனின் உயர்த்திய இடமுழங்கால் ஆச்சாரியாரின் தோள்மீதழுத்த, இடக்கை அவர் தலைமீது. வலக்கை இடுப்பில். ![]() வாமனராய் மூன்றடி மண் கேட்டு, கேட்டது கிடைத்ததும் பேருரு எடுத்து ஓரடியால் நிலமளந்து, மற்றோர் அடியால் விண்ணளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்ட பெருமாளிடம் தன் தலையைத் தந்தார் மகாபலி. உயர்த்திய திருவடியைத் தலைமீது வைத்துப் பாதாளத்தில் அந்த அரக்க வேந்தரை விஷ்ணு அழுத்திய கதை தமிழ்நாட்டின் மிகச் சில கோயில்களிலேயே சிற்றுருவச் சிற்பமாக இடம்பெற்றுள்ளது. சிராப்பள்ளியில் இச்சிற்பம் லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் காணப்படுகிறது.6 ஆலந்துறையாரில் கண்டபாதச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ள இக்காட்சியில் கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், இடைக்கட்டுடன் பட்டாடை, முடிச்சுத்தொங்கல்களுடன் அரைக்கச்சு பெற்று வலஒருக்கணிப்பிலுள்ள திருமாலின் இடக்கால் தரையிலூன்ற, வலக்கால் உயர்ந்து மகாபலியை அழுத்தியுள்ளது. அழுத்தப்படும் மகாபலியின் உடல்நிலை இரு காட்சிகளாக இரு வடிவங்களால் காட்டப்பட்டுள்ளது. உடல் நிலைகுலைவதை முதல் வடிவத்திலும் கை, கால் முறிந்து மகாபலி கவிழ்ந்திருப்பதை இரண்டாம் வடிவத்திலும் பார்க்கமுடிகிறது. பேருருவினரான இறைவனின் இடத்தோளில் அம்புக்கூடு. இட முன் கையில் வில். பின் கைகள் இரண்டு சுட்டு, வியப்பு காட்ட, ஒரு கையில் கேடயம். வியப்புக்கையின் மேலிருக்குமாறு சங்கு. வலக்கைகளில் முன் கை சக்கரத்தைப் பிடித்துயர, பின் கைகளில் அம்பு, வாள். ஒரு கை மேலுயர்ந்து அம்புக்கூட்டிலிருந்து அம்பெடுக்கிறது. ![]() இப்பேருருக் காட்சியைக் கண்ணுற்று வியந்தவர்களாய்ப் இடப்புறம் வானவர்கள். மேலே முகில்களின் பின் மார்பளவினராயுள்ள ஆணும் பெண்ணும் வலக்கையால் இறைவனைப் போற்ற, பெண்ணின் இடக்கையில் கவரி. கீழே இருக்கையில் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் உத்குடியிலுள்ள ஆடவர் இடக்கையைத் தொடையிலிருத்தி, வலக்கையால் போற்றுகிறார். இருக்கையின் கீழுள்ள இருவரில், குத்துக்காலிட்டுள்ள முன்னவர் மேலவர் போலவே போற்ற, கால்களைக் குறுக்கீடு செய்துள்ள அடுத்தவர் இடக்கையை முழங்கால் மீதிருத்தி, வலக்கையால் போற்றுகிறார். கருடவிஷ்ணு காட்சியில் பார்சுவப் பாதங்களுடன் இட முன் கையை இடுப்பிலிருத்தியுள்ள விஷ்ணுவின் வல முன் கையில் வில். கிரீடமகுடமும் பட்டாடையும் பெற்றுள்ள அவரது பின் கைப்பொருள்கள் சங்கு, சக்கரமாகலாம். இறைவனின் இடப்புறம் கைகளைக் கட்டிய நிலையில் இரு பாதங்களையும் பார்சுவத்திலிருத்தி நிற்கும் கருடனுக்காய்த் தலையை வலம் சாய்த்து முகத்தை இடந்திருப்பியுள்ளார் பெருமான். ![]() நான்கு பாதங்களில் கண்ணன் கதைகள். தன்னைக் கொல்ல வந்த பெண்ணரக்கியாம் பூதனையையும் குதிரையாக வந்த கேசியையும் கண்ணன் அழிக்கும் நிகழ்வுகளும் மருதமரமாகும்படி சபிக்கப்பட்ட குபேரனின் பிள்ளைகளான நளகூபரனையும் மணிக்கிரீவனையும் கண்ணன் உயிர்ப்பிக்கும் கதையும் வடக்கில் படமாகத் திரிவக்ரையின் வளைந்த முதுகைக் கண்ணன் நிமிர்த்துவது தெற்கில். இலலிதாசனத்திலுள்ள பூதனையின் வலக்கை தளத்தில் ஊன்ற, இடக்கை உயர்ந்து வியப்பில். பனையோலைக் குண்டலங்கள், சரப்பளியுடனுள்ள அவரது இடமார்பகத்தை இரு கைகளாலும் பிடித்துப் பாலருந்தும் கண்ணனின் இடையில் சிற்றாடை. கண்ணனின் வலப்பாதம் பூதனையின் வலத்தொடை அழுத்த, இடப்பாதம் இருகால்களுக்கிடையில் அரக்கி நகரமுடியாதவாறு தடையாக ஊன்றப்பட்டுள்ளது. ![]() இடஒருக்கணிப்பில் இடப்பாதத்தை ஊன்றி, வலப்பாதத்தைக் குதிரையின் பின்கால்கள் மீது அழுத்தியவாறு வலக்கை வியப்பு காட்ட, இடக்கையால் குதிரையின் கழுத்தை இறுக்கி அழிக்கும் காட்சியில், மகரகுண்டலங்களும் தோள், கை வளைகளும் சன்னவீரமும் சிற்றாடையும் அழகிய சிறுமகுடமுமாய்க் கண்ணன் மிளிர்கிறார். அவர் கையழுத்தம் தாங்காமல் கேசியின் நாக்கு வெளித்தள்ளியுள்ளது. கண்ணனின் கால்களுக்கிடையில் வாய்திறந்து அலறும் நிலையில் காட்டப்பட்டுள்ள தலை, கேசியின் மனிதவடிவ நிலையாகலாம். கேசியைக் கண்ணன் அழிக்கும் இக்காட்சி முகமண்டபத் தெற்குச் சாலைப்பத்தி அணைவுத் தூணிலும் முகமண்டப உட்புறத்தூண் கட்டிலும் சிற்றுருவச் சிற்பங்களாக இடம்பெற்றுள்ளது. ![]() அதே அணிகலன்களும் ஆடையுமாய் இடஒருக்கணிப்பில் நடக்கும் கண்ணனின் இடக்கை உயர்ந்து அவர் முன்னுள்ள மரத்தின் கிளைகளைச் சுட்ட, வலக்கை சிதைந்துள்ளது. இக்காட்சி மருதமரமாகச் சபிக்கப்பெற்ற குபேரனின் பிள்ளைகளைக் கண்ணன் உயிர்ப்பிக்கும் கதையின் படப்பிடிப்பாகலாம். இந்நிகழ்வும் முகமண்டப தெற்குச் சாலைப்பத்தி அணைவுத் தூண் கட்டில் மீளக் காட்டப்பட்டுள்ளது. ![]() பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடையுடன் கால்களை மடக்கிச் செயலற்று அமர்ந்துள்ள பெண் திரிவக்ரையாகலாம். அவரது வளைந்த முதுகை (கூனை) நிமிர்த்தும் முயற்சியில் தன் இடமுழங்காலைத் திரிவக்ரை முதுகின் கீழ்ப்பகுதியில் அழுத்தி, அவரது கீழ்த்தாடையை வலக்கையால் பற்றித் தலையை மேல் நோக்கி வளைத்தவாறுள்ள கண்ணனின் இடக்கை அம்மையின் இடத்தோளை அழுத்தியுள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடன் பட்டாடை பெற்றுள்ள கண்ணனின் வலக்கால் தரையில். அளவற்ற அன்பும் கருணையும் கண்ணனின் முகத்தைப் பொலிவுறச் செய்துள்ளன. ![]() குறிப்புகள் 4. வரலாறு 2, பக். 34 - 36; வரலாறு 3, பக். 22 - 24. 5. R. Sujatha, A Study of Thirualanduraiyar Temple at Pullamangai with Special Reference to Iconology, Dissertation Submitted to Bharathidasan University, 1994. 6. இக்கல்வெட்டைக் கண்டறிந்தவர் இரா. கலைக்கோவன். - வளரும் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |