http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 161
இதழ் 161 [ ஜனவரி 2022 ] இந்த இதழில்.. In this Issue.. |
பாடல் 5: தனிமையின் வலியறிவார் யார்? மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 奥山に もみぢ踏み分け 鳴く鹿の 声聞く時ぞ 秋は悲しき கனா எழுத்துருக்களில் おくやまに もみぢふみわけ なくしかの こゑきくときぞ あきはかなしき ஆசிரியர் குறிப்பு: பெயர்: கவிஞர் சருமரு காலம்: உறுதியாகத் தெரியவில்லை. பேரரசி கென்மெய் அரசவையில் இவர் கவிஞராக இருந்ததாக ஒரு புதினத்தில் வருகிறது. ஆனால் அது உண்மையா கற்பனையா எனத் தெரியவில்லை. இவரும் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர்தான். 12ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட கமோனோச்சோமெய் என்ற நூலில் இவரது கல்லறை இன்றைய ஷிகா மாகாணத்தின் ஓட்சு நகரில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசி கென்மெய் ஆட்சியில் தலைநகராக இருந்தது ஓட்சு நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் கொக்கின்ஷு என்ற தொகுப்பிலும் இடம்பெற்றிருக்கிறது. கி.பி 759 வரை இயற்றப்பட்ட பாடல்கள் மான்யோஷு என்ற பெயரில் தொகுக்கப்பட்டன எனப்பார்த்தோம். அதன்பிறகு இயற்றப்பட்ட பாடல்கள் கி.பி 920ல் கொக்கின்ஷு என்ற பெயரில் ட்சுராயுக்கி என்ற புலவரின் தலைமையில் தொமொனொரி, மிட்சுனே, தடாமினே ஆகிய புலவர்களால் தொகுக்கப்பட்டன. ஆனால் கொக்கின்ஷுவில் இப்பாடலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்னர் கி.பி 1235ல் பழங்குறுநூறு தொகுதி தொகுக்கப்பட்டபோது எப்படி இவர் பெயர் தெரிந்தது எனத் தகவல் ஏதுமில்லை. காலந்தோறும் படியெடுக்கப்பட்டு வந்த கொக்கின்ஷு தொகுப்பைப் பழங்குறுநூறு தொகுதியைத் தொகுத்த மன்னர் சதாய்யே (இவருக்கு தெய்க்கா என்றொரு பெயரும் உண்டு) வும் படியெடுத்திருக்கிறார். இதுமட்டுமல்ல. கென்ஜியின் கதை, இசேவின் கதைகள் என்ற புதினங்களையும் பழங்குறுநூறு, கொக்கின்ஷு ஆகிய பாடல் தொகுப்புகளின் கையெழுத்துப் படிகளையும் உருவாக்கினார். கி.பி 2010 அக்டோபர் 10ம் தேதி கோபே நகரிலுள்ள கோனான் மகளிர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவிகளால் கொக்கின்ஷுவின் கையெழுத்துப் படி கண்டுபிடிக்கப்பட்டது. தெய்க்கா குறிப்பெழுதி வைத்திருந்த 1,111 பாடல்களும் முழுமையாகக் கொண்ட 429 பக்க நூலாகச் சேதமின்றிக் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் கண்டறிந்தது எப்போது யாரால் படியெடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. பாடுபொருள்: பிரிவாற்றாமையால் அழும் மானின் குரல் பாடலின் பொருள்: மானுடவாசனை அற்ற ஒரு தூரத்து மலையில் உதிர்ந்து கிடக்கும் மேப்பிள் மர இலைகளின் சருகுகளின்மீது நடந்துகொண்டே பிரிந்து போன தன் துணையை மீண்டும் சேரமாட்டோமா என அழும் ஆண்மானின் குரலைத் தனிமையில் ஏங்குபவர்கள் மட்டுமே புரிந்துகொண்டு இலையுதிர்காலம் பிரிந்திருக்கும் காதலர்க்கு எத்தனை கொடியது என்பதை உணரமுடியும். நேரடியாகப் பொருள் புரியும் வண்ணம் இயற்றப்பட்டிருக்கும் எளிமையான பாடல். ஜப்பானிய இலக்கியத்தில் பல இடங்களில் இலையுதிர்காலம் என்பது பிரிவுத்துயரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேப்பிள் மரத்தின் இலைகள் இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் மட்டுமே அழகான அடர்சிவப்பு நிறத்தில் காட்சிதந்து பின் உதிரும். இவ்விலைகளை ஜப்பானிய மொழியில் மொமிஜி எனக்கூறுவார்கள். இந்த மொமிஜி என்ற சொல்லுக்குத் தவளையின் கால்கள் என்ற பொருளும் உண்டு. மேப்பிள் இலையின் வடிவம் விரிந்த விரல்களைக் கொண்ட தவளையின் காலைப் போன்று இருப்பதால் இச்சொல் உருவாகியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். மேப்பிள் சிவப்பு இலைகள் தூரத்து மலை, உதிர்ந்த சருகுகள் ஆகியன சோகத்தைக் கூட்ட உதவுகின்றன. நம் சங்க இலக்கியங்களில் பிரிவுத்துயரால் தலைவனைவிடத் தலைவி வாடும் பாடல்களே அதிகம் உள்ளன. பிரிவாற்றாமை, படர்மெலிந்திரங்கல் எனத் திருக்குறளிலும் பெரும்பாலும் தலைவியே பிரிவுத்துயரை மிகுதியாக அனுபவிப்பதாக உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். குறுந்தொகையில் கருவூர் ஓதஞானியார் எழுதிய கீழ்க்கண்ட 71வது பாடல் இச்சூழலுடன் ஓரளவுக்குப் பொருந்தி வருகிறது. மருந்தெனின் மருந்தே, வைப்பெனின் வைப்பே, அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்பின் கல் கெழு கானவர் நல்குறு மகளே. கற்கள் நிறைந்த காட்டின் தலைவரின் மகளாகப் பிறந்து அழகிய தேமலையுடைய பருத்த இளமார்பகங்களையும் பெரிய தோள்களையும் குறுகிய இடையையும் கொண்ட அவள் எனது காமநோய்க்கு மருந்து தேவைப்படின் மருந்தாகவும் செல்வம் தேவைப்படின் செல்வமாகவும் இருப்பாள். பாடல் இத்துடன் முடிந்து விடுகிறது. பாடற்குறிப்பு எழுதியவர் செலவழுந்தியது என எழுதியிருக்கிறார். இது மட்டும் இல்லாவிடில் தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவன் வாடியதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருக்கும். ஆனால் இப்போது பொருள்தேடப் புறப்படும் முன்னரே தலைவன் தன் நெஞ்சுக்கு இதைக்கூறிச் செல்லாமல் இருந்துவிடுகிறான் எனப் பொருள்படுகிறது. வெண்பா: பிணைசேர ஏங்கும் இரலைபோல் அன்றித் துணையைப் பிரிந்தே இராதார் - இணைஇல் தனிமையில் ஏக்கத்தில் வாடுந் துயரை உணர்வது எங்ஙனம் நன்கு? (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |