![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 161
![]() இதழ் 161 [ ஜனவரி 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 4: முகட்டில் பொழியும் வெண்மழை மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 田子の浦に うち出でて見れば 白妙の 富士の高嶺に 雪はふりつつ கனா எழுத்துருக்களில் たごのうらに うちいでてみれば しろたへの ふじのたかねに ゆきはふりつつ ஆசிரியர் குறிப்பு: பெயர்: கவிஞர் அகாஹிதோ காலம்: உறுதியாகத் தெரியவில்லை. புறச்சான்றுகளின் அடிப்படையில் கி.பி. 653-655 லிருந்து 707-710 வரை வாழ்ந்திருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவரும் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர்தான். மூன்றாவது பாடலை இயற்றிய கவிஞர் ஹிதோமரோவுக்கு இணையாக ஜப்பானியக் கவிதைக் கடவுளாகப் போற்றப்படுபவர். ஒபிதோ என்பவர் தனது 23வது வயதில் கி.பி 724ல் பேரரசர் ஷோமு என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார் என 2வது செய்யுளில் பார்த்தோம் அல்லவா? அவரது அரசவைக் கவிஞராக இருந்தவர்தான் இவர். இயற்கை வர்ணனைப் பாடல்களுக்காகப் புகழ்பெற்றவர் இவர். ஷோமுவின் காலம் கி.பி 701-756 என்பதால் இவரது காலமும் ஏறக்குறைய இதுவாகத்தான் இருக்கும். கி.பி 724 முதல் 736 வரை இவர் அரசவைக் கவிஞராக இருந்தார் என்ற குறிப்பும் நமக்குக் கிடைக்கிறது. மான்யோஷு தொகுப்பில் இவரது 13 நெடும்பாடல்களும் 37 குறும்பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இன்றைய நரா மாகாணத்தின் உதா நகரின் ஹைபரா யமானொபே என்ற இடத்தில் இவரது நினைவுச்சின்னம் இருக்கிறது. ஆனால் இங்குதான் இவர் புதைக்கப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தப் பாடலின் நினைவாக இதில் வரும் தகோ உரா என்ற இடத்தில் உள்ள ஒரு பூங்காவில் இப்பாடல் பொறிக்கப்பட்ட தூண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ஜப்பானின் கலாச்சாரச் சின்னமாகக் கருதப்படுவது ஃபுஜி மலை. 12,389 அடி உயரத்தில் டோக்கியோவுக்கும் ஓசகாவுக்கும் இடையிலுள்ள ஷிசுவோக்கா மாகாணத்தில் அமைந்துள்ளது. சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் எரிமலை வெடித்தது. இதைப் பழைய ஃபுஜி என்கிறார்கள். அதன் குழம்புகள் ஒன்று சேர்ந்து உருவான புதிய மலைதான் இப்போதிருக்கும் ஃபுஜி. சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முன்னர்க் காலநிலை மாற்றம் காரணமாகப் பழைய ஃபுஜி சரிந்து விட்டதால் புதிய ஃபுஜி மட்டுமே தற்போது இருக்கிறது. இதுவும் ஒரு கனன்று கொண்டிருக்கும் எரிமலையே. கடைசியாக கி.பி 1707ல் டிசம்பர் 16ம் தேதி வெடித்தது. இவ்வெடிப்பிலிருந்து பரவிய சாம்பல் சுற்றுப்புறத்திலிருந்த வயல்களில் படிந்து விவசாயத்தைப் பாழாக்கியதுடன் ஆறுகளில் விழுந்து ஆழத்தைக் குறைத்ததுடன் பல தற்காலிகத் தடுப்பணைகளையும் உருவாக்கியது. அதற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த கனமழை இந்தத் தடுப்பணைகளால் வெள்ளத்தையும் உருவாக்கியது. எனவே, பயிர்கள் அழிவு காரணமாகப் பெரும்பஞ்சம் அந்தப் பகுதியில் உருவானது. அப்போது அந்தப் பகுதியின் பெயர் எடோ. இப்போது டோக்கியோ. ![]() ஃபுஜி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள யமானக்கா எனும் ஏரிக்குச் சுற்றுலாச் சென்றிருந்தபோது என் புகைப்படக்கருவிக்குள் சிறைப்படுத்த முடிந்த ஃபுஜி. இதன் உயரம் காரணமாகச் சுற்றியுள்ள 150 கி.மீ பரப்பளவில் எங்கிருந்து வேண்டுமானாலும் இதைக் காணலாம். இதில் நிலவும் தட்பவெப்பத்துக்கும் உயரமே காரணமாக அமைந்துள்ளது. கடுங்குளிர் காலமான பிப்ரவரியில் -38 டிகிரி செல்சியஸிலிருந்து 0 டிகிரி வரையிலும் கடுங்கோடைக் காலமான ஆகஸ்டில் -4.3 டிகிரியிலிருந்து 17.8 வரையிலும் சராசரியாக இருப்பதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, 10 நிலைகளாக அமைந்துள்ள இதில் மலையேற விரும்புபவர்கள் பனியெல்லாம் உருகி முடிந்திருக்கும் ஆகஸ்டு 2-3வது வாரங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஐந்தாம் நிலை வரை பேருந்தில் செல்லலாம். ஆறாம் நிலையிலிருந்து ஏறத் தொடங்கவேண்டும். எட்டாம் அல்லது ஒன்பதாம் நிலையுடன் இறங்கி விடுபவர்கள்தான் அதிகம். உச்சிவரை செல்பவர்கள் மிகவும் குறைவே. செப்டம்பர் இறுதியில் நிகழும் முதல் பனிப்பொழிவு எல்லா ஜப்பானிய ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகும். இதன் சமச்சீரான கூம்பு வடிவத்தால் ஏற்கனவே அழகாக இருந்தாலும் குளிர்காலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இடைப்பட்ட வசந்த மற்றும் இலையுதிர்காலங்களில் மேற்பாதியில் மட்டுமே இருக்கும் வெண்பனி இம்மலைக்கு மகுடம் வைத்தாற்போல் அழகூட்டுகிறது. எனவே, ஜப்பானின் கவிஞர்களுக்கும் ஓவியர்களுக்கும் இது கருப்பொருளானதில் வியப்பில்லை. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஹொக்குசாய் என்ற ஓவியர் 36 வெவ்வேறு கோணங்களில் இதன் அழகைப் பலகை ஓவியங்களாக வரைந்துள்ளார். இலக்கியங்களில் முதல்முறை இம்மலை இடம்பெறுவது இப்பாடலில்தான். பாடுபொருள்: ஃபுஜி மலையின் அழகு பாடலின் பொருள்: தகோ வளைகுடாவில் உள்ள இல்லத்திலிருந்து வெளியே வந்து கவிஞர் ஃபுஜி மலையைப் பார்த்தபோது பனியால் மகுடம் வைத்தாற்போல் காட்சியளித்த கம்பீரமான ஃபுஜியின்மீது வெண்மழைப்பொழிவு தொடர்ந்துகொண்டிருந்தது. ஹொக்குசாய் 36 கோணங்களில் வரைந்த ஃபுஜியின் பலகை ஓவியங்களில் தகோ வளைகுடாவிலிருந்து தெரியும் ஃபுஜியின் படம் 18வதாக இடம்பெற்றிருக்கிறது. இசு தீபகற்பத்தின் சுருகா விரிகுடாவின் கிழக்கு எல்லையில் இந்தத் தகோ வளைகுடா அமைந்துள்ளது. ![]() ![]() இப்பாடலின் மூன்றாவது அடியில் இருக்கும் ஷிரோதஹே (白妙) என்பது 2- தோகை உலர்த்தும் வரை செய்யுளிலும் தேவதைகள் மலைமீது உலர்த்திய வெண்சிறகுகள் என வந்துள்ளது. இங்கும் மலை முகட்டிலிருந்த பனியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் வெண்பட்டு, வெண்மேகம், வெண்பனி ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்திய உவமையாகும். வெண்பா: செழித்தோங்கு நெய்தல் நிலவூர்த் தகோவின் எழினிகொள் இல்நீங்கிக் காணின் - எழிலார் மிடுக்காய் ஃபுஜியாம் எரிமலையின் உச்சியில் வீழும் தொடர்வெண் பொழிவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |