http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 161

இதழ் 161
[ ஜனவரி 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆண்டாள் - கால ஆய்வு
அழுந்தூர் வரகுணீசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 2
தேவடிமையான பரதேசிகள்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 6 (உறைபனி கூட்டும் அழகு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 5 (தனிமையின் வலியறிவார் யார்?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 4 (முகட்டில் பொழியும் வெண்மழை)
இதழ் எண். 161 > கலையும் ஆய்வும்
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
மு.நளினி, அர.அகிலா

வழிபாடு, படையல்

கற்பகவல்லியின் அறக்கட்டளைகள். 1

தம்மை இக்கோயில் இறைவனின் திருமகளாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் முதல் ராஜராஜரின் பெரிய வேளத்துப் பணிப்பெண்ணான நக்கன் கற்பகவல்லி மன்னரின் 21ஆம் ஆட்சியாண்டின்போது (பொ. கா. 1006) இக்கோயிலில் 5 அறக்கட்டளைகளை நிறுவி, அவற்றை நிறைவேற்ற 201 கழஞ்சுப் பொன்னும் 2 மா முக்காணி நிலமும் அளித்தார்.30 அவர் அளித்த பொன்னில் 128 கழஞ்சை இக்கோயில் கலைஞர்களும் பணியாளர்களுமான 22 பேர் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள, 50 கழஞ்சைப் பாச்சில் அமலீசுவரத்துக் கோயில் பணியாளர்களும் கலைஞர்களுமான 4 பேர் கொண்டனர். எஞ்சிய 23 கழஞ்சுப் பொன்னை இவ்விரு தளிகளிலும் இதே பாச்சிலைச் சேர்ந்த மேற்றளியிலும் பணி மேற்கொண்ட இருவர் 20, 3 என்ற அளவில் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

அக்கால வழக்கிலிருந்த கணக்கின்படி ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு ஓராண்டுக்கு ஒரு கலம் நெல் வட்டியாக, இவர்கள் 28 பேரும் 201 கலம் நெல்லைக் கோயிலுக்களந்தனர். கற்பகவல்லி அளித்த நிலத்திலிருந்து ஆண்டுதோறும் 16 கலம் நெல் கோயிலுக்கு வரவானது. இவ்விரு வழிகளிலும் கிடைத்த 217 கலம் நெல் அவர் நிறுவிய ஐந்து அறக்கட்டளைகளுக்கும் முதலானது.

கற்பகவல்லி அளித்த 2 மா நிலம், கல்லி வயக்கிய தென்னூர் 2 மா என்றழைக்கப்பட்டது. அதன் எல்லைகளாக இறைவனுக்கான அப்பச்செய், திணையார் வயக்கல், ஊருக்கமைந்த வழி, தென்னந்தோப்பு ஆகியன அமைந்தன. அம்மையளித்த மற்றொரு நிலத்துண்டு நீர்நிலமான கீழைமுக்காணி எனப்பட்டது. அதற்கான எல்லைகளாகக் கரணன் பங்கும் நக்கன் சோழங்கத்தின் நிலமும் ஊரில் ஓடிய வாய்க்காலும் இறைவனின் நிலத்துண்டொன்றும் அமைந்தன.

பயற்றுப் போனகம்

கற்பகவல்லியின் முதலிரு அறக்கட்டளைகள் கோயில் முதன்மை, உலா இறைத்திருமேனிகளுக்கு நாளும் படைக்கப் பெறும் சிறுகாலைப் போனகஅமுதாக அமைந்தன. உடையார் எனக் கல்வெட்டில் சுட்டப்படும் முதன்மை இறைத்திருமேனிக்கு நாளும் 4 நாழி போனகஅரிசி, 2 நாழி பயறு, நெய், சர்க்கரை கொண்டு போனகஅமுதும் உடன் பொரிக்கறியும் படையலிடப்பட்டன. அதற்கான போனகப்பானை, பொரிக்கறிச்சட்டி இட்ட குயவருக்கும் சமைப்பதற்கு விறகிட்டவருக்கும் நெல்குற்றிய பெண்ணுக்கும் ஊதியமாக உரிய நெல் வழங்கப்பட்டது. பரமவிடங்கதேவர் எனும் பெயரிலிருந்த உலாவரும் திருமேனிக்கும் அது போலவே சிறுகாலைப்போதில் போனகம் வழங்கப்பட்டது. அதற்கான போனகஅரிசி, பருப்பு, நெய், தயிர், பாக்கு உள்ளிட்ட பொருள்களுக்கும் அமுதுக்கான கலங்கள் அளித்த குயவருக்குமாக உரிய நெல் தரப்பட்டது. இவ்விரண்டிற்குமாக ஓராண்டிற்கு 150 கலம், 2 தூணி, குறுணி, 2 நாழி நெல் செலவானது.

கார்த்திகைத் திருநாள்

கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் பிறந்தவர் என்பதால் கற்பகவல்லி அந்நாளில் திருப்பாச்சில் ஆச்சிராமத்து இறைவனுக்கு நெய், பால், தயிர் உள்ளிட்ட ஆனைந்து, தேன் ஆகியன கொண்டு 108 குடங்களால் திருமுழுக்காட்ட அமைத்த அறக்கட்டளை திருப்பிண்டி, திருச்சுண்ணம், தருப்பைப்புல், நூல்சூழ நிறுவப்பட்ட குடம், ஜலபவித்ரத்துப் புடவை, நமனதிரவியம், குடத்தின் கீழிடும் பொருள்கள் எனப் பலவும் கொண்டு உரிய சடங்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. முழுக்காட்டுக்குப் பிறகு பெரும்பயறுடன் கறியமுதும் நெல்லுச்சோறும் தயிர், நெய், பாக்கு உள்ளிட்டனவும் இறைமுன் படைக்க ஒரு பொன் ஒதுக்கப்பட்டது.

முழுக்காட்டு, உணவு ஆகியவற்றிற்குரிய கலங்களை அளித்த குயவர், போனகக்குருத்திடுவார், நெல் குற்றிய பெண், குடத்தை நிறுவியவர், விறகிட்டார், கோமயம் கொணர்ந்தார் ஆகிய அனைவருக்கும் ஊதியமாக நெல் தரப்பட்டது. முதன்மை இறைக்கு முழுக்காட்டும் படையலும் முடிந்ததும் உலாத்திருமேனி திரு வோலக்கம் கொண்டு அப்பஅமுது கொள்ள அதற்குரிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களுக்கும் பாக்கு, வெற்றிலை ஆகியன வழங்கவும் நெல்குற்றும் பெண், மாவிடிப்பவர், அப்பம் சுட்டவர், அதற்கான விறகிட்டவர், படையலிட வேண்டும் சட்டிகள் தந்த குயவர் முதலியோருக்கான ஊதியமாகவும் தேவையான அளவு நெல் ஒதுக்கப்பட்டது.

தைப்பூசம்

தைப்பூசத்தன்று இறைவன் நீராடிப் பெருந்திருஅமுது கொள்ளத் தேவையான ஒருகலம் தூணிப்பதக்குப் போனகஅரிசி, நெய், பருப்பு, பெரும் பயறு, தயிர், மிளகு, உப்பு, பாக்கு, கறியமுது ஆகியவற்றுக்கு நெல் ஒதுக்கப்பட்டது. போனகக்குருத்திடுவாருக்குக் குறுணி நெல்லும் போனகம் இடுவாருக்குத் தூணிப்பதக்கு நெல்லும் நெல்குற்றிய பெண்ணுக்கு 3 குறுணியும் விறகிட்டவருக்கு 5 குறுணியும் என ஊதியமாக நெல் வழங்கப்பட்டது.

அந்நாளில் இறைவன் உச்சம்போது உணவு கொள்கையில் 50 சிவயோகிகளும் 50 தவசிகளும் கோயிலில் உணவருந்த ஓராளுக்கு நாழி உரி என 100 பேருக்கு 1 கலம் தூணிப்பதக்கு 6 நாழி அரிசி ஒதுக்கப்பட்டது. இவ்வுணவைச் சமைத்தவருக்குத் தூணிப்பதக்கு நெல்லும் அதற்கான விறகிட்டவருக்கு 5 குறுணி நெல்லும் நெல்குற்றியவருக்குக் குறுணி 4 நாழியும் இலையிட்டாருக்கு குறுணி 3 நாழியும் கலங்களிட்ட குயவருக்கு 2 தூணியும் கொள்ளுக்கென முக்குறுணியுமாக நெல் தரப்பட்டது. இவ்விழாவன்று தேவர்கன்மிகளுக்கு அளித்த ஒரு கலம் நெல் என இவை அனைத்திற்கும் ஆண்டுதோறும் 8 கலம் 2 தூணி 4 நாழி நெல் செலவானது.

புதுக்குப்பணி

இக்கோயிலிலுள்ள பெரிய திருமண்டபத்தைப் பழுது நீக்கிப் பராமரிக்கவும் உரிய வகையில் புதுக்கவும் ஆண்டுதோறும் 10 கலம் நெல் பயன்படுத்திக்கொள்ள கற்பகவல்லியின் அறக்கட்டளை துணைநின்றது.

கலைஞர்களும் பணியாளர்களும்

நக்கன் கற்பகவல்லியின் கொடைக் கல்வெட்டு முதல் ராஜராஜர் காலத்தில் பாச்சில் திருஆச்சிராமம், அமலீசுவரம், மேற்றளி ஆகிய கோயில்களில் பணியிலிருந்த கலைஞர்களையும் தொழிலர்களையும் பெயர் சுட்டி அறிமுகப்படுத்துகிறது.

திருஆச்சிராமம்

திருவாசி மாற்றுரை வரதீசுவரராக இன்று அறியப்படும் பாச்சில் திருஆச்சிராமத்தில் பொ. கா. 1006ல் 7 கலைஞர்களும் 15 தொழிலர்களும் பணியிலிருந்தனர். நக்கன் அழகியான நக்கன் சோழத்தலைக்கோலி, நக்கன் மோடியான மும்முடிசோழத் தலைக்கோலி, நக்கன் கொற்றமான வீதிவிடங்கத் தலைக்கோலி ஆகிய மூவரும் இக்கோயிலில் ஆடலரசிகளாகத் திகழ்ந்தனர். ஆடல் வல்ல பெண்டிருக்கே அக்காலத்தில் தலைக்கோலிப் பட்டம் வழங்கப்பட்டமையால் இம்மூவரும் ஆடற்கலையில் தேர்ந்திருந்தமை தெளிவாகும். அவர்களுள் மும்முடிசோழமும் வீதிவிடங்கமும் கற்பகவல்லி அளித்த பொன்னில் தலைக்கு 10 கழஞ்சு கொண்டு 10 கலம் நெல் அளக்க, அழகி 5 கழஞ்சுப் பொன்னுக்கு 5 கலம் நெல் அளித்தார்.

நக்கன் அகம், நக்கன் எதிரி, நக்கன் ஆவடுதுறை, நக்கன் மோடி ஆகிய நால்வரும் தேவரடியார்களாகப் பணியிலிருந்தனர். ஆவடுதுறை 5 கழஞ்சும் எதிரி 15 கழஞ்சும் அகம் 7 கழஞ்சும் மோடி 2அரைக் கழஞ்சும் கொண்டு, அதற்கான வட்டியாக நெல் அளந்தனர். கோயில் உச்சவராக விளங்கிய அணுக்கன் பொன்னன் 13 அரைக் கழஞ்சு கொண்டு 13 அரை கலம் நெல்லளந்தார். ஆச்சன் இளம்பெருமான் இக்கோயிலில் காளம் இசைத்தவர். அவரும் கோயிலில் மற்றொரு காளக்கலைஞராக விளங்கிய கந்தருவர் பொன்னையன் தில்லையடிகளும் தலைக்கு 10 கழஞ்சு கொண்டு 10 கலம் நெல் அளந்தனர். மெய்மட்டியாக31 விளங்கிய மற்றொரு கந்தருவரான ஐநூற்றுவன் விழுமியான் 2 கழஞ்சுப் பொன் கொண்டு 2 கலம் நெல் தந்தார்.

கலம் வனைந்து வழங்கிய டக்கன்,32 தெய்யன், கடம்பன் ஆகிய மூவரும் தலைக்கு 1 கழஞ்சு கொண்டு 3 கலம் நெல்லளந்தனர். வண்ணக்குப் பணியிலிருந்த இளங்குவனன் தில்லையழகன் 15 கழஞ்சுப் பொன் பெற்று 15 கலம் நெல்லளிக்க, தச்சுப் பணியாளர் காரி இரவி 3 கழஞ்சுப் பொன்னுக்கு 3 கலம் நெல் தந்தார். இக்கோயிலில் பரிசாரகர்களாக விளங்கிய சிங்கன் பட்டாலகன், சிங்கன் சோழன், சிங்கன் பதியன், நெதிரன் ஐயன், நெதிரன் பரசுராமன், பொன்னன் நெதிரன் ஆகிய அறுவரும் 17 கழஞ்சுப் பொன்னைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு நெல்லளந்தனர்.

பாச்சில் அமலீசுவரம்

கோபுரப்பட்டியிலுள்ள பாச்சில் அமலீசுவரம் கல்வெட்டு களில் அமனீசுவரமாகவும் அவனீசுவரமாகவும் அறியப்படும் சிவத் தளியாகும்.33 பொ. கா. 981க்கு முற்பட்ட இம்முற்சோழர் கோயில் இன்றளவும் சிறப்பான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நக்கன் கற்பகவல்லியின் கொடைப் பொன்னில் 50 கழஞ்சுப் பொன்னை இத்தளிக் கலைஞர்கள் இருவரும் தொழிலர் இருவரும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு ஆண்டு வட்டியாக ஆச்சிராமத் தார் அளித்தவாறே 1 கழஞ்சுப் பொன்னுக்கு 1 கலம் நெல் ஆச்சிரா மத்துக் கோயிலுக்கு அளந்தனர். அமலீசுவரத்து ஆடலரசியான திருவையாறு தலைக்கோலியும் அதே கோயில் கந்தருவரான கணவதி கங்காதிரனும் தலைக்கு 10 கழஞ்சுப் பொன் கொள்ள, அமலீசுவரத்தில் ஆச்சாரியம், பரிசாரகம் இரண்டும் பார்த்த கௌசியன் ஆச்சன் பொன்னன் 25 கழஞ்சுகள் பெற்றார். அக்கோயிலில் விளக்கேற்றும் பொறுப்பேற்றிருந்த குமரன் அம்பலவன் 5 கழஞ்சுப் பொன் பெற்று 5 கலம் நெல் அளந்தார்.

மேற்றளி

முற்சோழர் காலத்தில் பாச்சிலில் எழுச்சியுடன் திகழ்ந்த மூன்று தளிகளுள் ஆச்சிராமம், அமலீசுவரம் போலவே மேற்றளியும் அடங்கும். பல்லவர் காலத் தளியான இக்கோயில் தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தன் பழைமையைப் பெரிதும் இழந்து கல்வெட்டுகளுடன் காட்சிதருகிறது.34 கற்பகவல்லிக் கல்வெட்டில் அவ்வம்மை அளித்த பொற்கழஞ்சுகளைக் கொண்டவர்களுள் இருவர் மேற்றளி உள்ளிட்ட பாச்சிலைச் சேர்ந்த மூன்று கோயில்களிலும் பணியாற்றிய பெருமையுடையவர்கள். நக்கன் குராவியான திருவரங்கத் தலைக்கோலி மூன்று கோயில்களிலும் ஆடல்நிகழ்த்திய கலைஞர். இவ்வம்மை 20 கழஞ்சுப் பொன் கொண்டு வட்டியாக 20 கலம் நெல்லும் அவர் போலவே 3 கோயில்களுக்கும் சோதிடராக விளங்கிய சிச்சல் அரையன் 3 கழஞ்சுப் பொன்னுக்கு 3 கலம் நெல்லும் அளந்தனர்.

பிற அறக்கட்டளைகள்

தொட்டியத்தைச் சேர்ந்த வணிகர் அரையன் பொன்னருளாள தேவன் கோயில் பரிசாரகர்களாக விளங்கிய கௌசிகன் ஆடவலான் திருத்தவத்துறை உடையான் திருச்சிற்றம்பலபட்டன், காசியபன் நாகன் மாகாணியான வீரணுக்கபட்டன் ஆகிய இருவரிடமும் 2 அன்றாடு நற்காசுகளை வழங்கி உச்சிச்சந்தியில் இறைவன் படையல் பெற்றமைகையில் குக்குமச் சட்டிச்சோறு, கறியமுது, பாக்கு, வெற்றிலையளிக்க அறக்கட்டளை அமைத்தார். அதற்கான ஆண்டுச் செலவாக 62 கலம் தூணிப்பதக்கு நெல்லைக் காசு பெற்ற இருவரும் கோயிலுக்களந்தனர்.35

மூன்றாம் ராஜராஜரின் 20ஆம் ஆட்சியாண்டின்போது இறைவன் நாளும் ஆனைந்து ஆடியருள உலக்கிக்குண்டியைச் சேர்ந்த கோவிந்த பட்டன் மகன் பொன்னார் வசவண்ணன் தம் மகன் நலம் நோக்கிப் பசுக்களும் பால், தயிர், நெய் உள்ளிட்ட ஐந்து ஆன்பொருள்கள் கொள்ளக் கலங்கள் 5ம் திருவட்டவடிக்கால் 5ம் வழங்கினார். இக்கொடை பற்றிய கல்வெட்டு ஆண்டார் ஸ்ரீராசராச சம்பந்தர் முன்னிலையில் கோயிலில் பதிவானது. வழங்கிய ஓராண்டுக் காலத்தில் பசுக்கள் உயிரிழந்தமையின், வச வண்ணன், திருவாசிராமத்து வீரசோழ அணுக்கரான கண்ணுடை யான், உமையாண்டானான வளவதரையன், அவர் தம்பியர் தாயிலு நல்லானான பாச்சில்நாட்டு விழுப்பரையன், உத்தமாண்டான் ஆகியோரிடம் 1400 காசளித்து விலைக்குப் பெற்ற 2 மா பனையன் செய் நிலத்தைப் பஞ்சகவிய மயக்கல் என்று பெயரிட்டுக் கோயி லுக்கு வழங்கினார். ஒவ்வொரு மா நிலமும் 100 குழி அளவினது என்பதைச் சுட்டும் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல் வெட்டு, 'தடி இருநூறினால் நிலம் இரண்டு மா' என்கிறது. கொடையளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாக வண்ணக்கப் பங்குக்கு நீரளித்த வாய்க்காலும் மயக்கல் ஒன்றும் உவர்நிலமும் அகளங்க மயக்கலும் சுட்டப்பெறுகின்றன. 36

மூன்றாம் குலோத்துங்கர் காலத்தில் இறைவனைக் காவிரி நீரால் முழுக்காட்ட நாங்கூர் புட்பவனம் ஊரைச் சேர்ந்த விக் கிரம சோழச் செட்டி 50 அன்றாடு நற்காசுகளைக் கோயில் சிவ பிராமணர்கள் நாற்பத்தெண்ணாயிர பட்டன், அகளங்கபட்டன், திருஞானசம்பந்த பட்டன் ஆகிய மூவரிடம் வழங்கினார்.37 பாலை யூரான பரமவிடங்கநல்லூர் நன்செய் நிலங்கள் இக்கோயில் இறைவனுக்கான திருநாமத்துக்காணியாக விளங்கின. எம்மண்டல மும் கொண்டருளிய சுந்தரபாண்டியரின் ஆட்சிக்காலத்தே (பொ. கா. 1256) இறைவனின் பூசை, திருநாள்கள் ஆகியவற்றுக்கும் கோயில் திருப்பணிக்குமாக இவ்வூரின் புன்செய் நிலங்களையும் திருநாமத்துக்காணியாக்கிய இப்பகுதி நாட்டார் அந்நிலங்களை இறையிலியாக்கி ஆவணம் அளித்தனர்.38

பிறகொடைகள்

பரமன் குஞ்சரமல்லனான ராஜசிகாமணிப் பல்லவரையன் 10 கழஞ்சில் இறைவனுக்குப் பொற்பட்டமும் 3 கழஞ்சில் கணவதிக்குப் பொற்பூவும் செய்தளித்தார். கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் 250 கழஞ்சில் தளிகை, 5சாண் நீள நிலைவிளக்கு, எறும்பு காணி ஈச்சோப்பிக்கை ஆகியவற்றைக் கோயிலுக்களித்த அம்மையின் பெயரை அறியக்கூடவில்லை. முதல் ராஜராஜரின் பெரிய வேளத்தைச் சேர்ந்த மற்றொரு பணிப்பெண்ணான சுவஐயாறியான நித்தமாணிக்கம் இறைவன் அமுதுசெய்தருள 140 அரை கழஞ்சு நிறையுள்ள வெள்ளிமண்டை ஒன்றும் வேறு இரு பொருள்களும் வழங்கியுள்ளார். கல்வெட்டுச் சிதைவால் அப் பொருள்கள் இன்னவென்று தெரியவில்லை. துண்டுக் கல்வெட்டொன்றால் கோயிலுக்கு நந்தவனப்புறமாக நிலம் இருந்த செய்தியை அறியமுடிகிறது.39

கோயில்

பாச்சில் ஆச்சிராமத்து இறைவனாக சம்பந்தர் போற்றும் இக்கோயில் இறைவனை சுந்தரரும் ஆச்சிராமத்து அடிகளாகவே குறிப்பிடுகிறார். பதினோராம் திருமுறையில் ஐயடிகள் காடவர் கோனும் பொ. கா 919இல் இவ்வளாகத்தே பதிவான முதல் பராந்தகர் காலக் கல்வெட்டும் பாச்சில் திருவாச்சிராமமாகவே இவ்வூரை அடையாளப்படுத்த, பொ. கா. 16ஆம் நூற்றாண்டுவரை அப்பெயரே நிலைத்திருந்தது. கோயில் இறைவன் பெருமானடிகள், தேவர், மகாதேவர், நாயனார், தம்பிரானார் எனப் பல்வேறு பெயர்களால் கல்வெட்டுகளில் சுட்டப்பெறுகிறார். கோயிலை நிருவகித்தவர்கள் தேவர்கன்மிகள், பட்டுடைப் பஞ்சாசாரியர், மாகேசுவரக் கண்காணிகள், தானத்தார் எனக் காலத்திற்கேற்பப் பெயர் பெற்றனர். முதல் ராஜராஜர் காலத்தில் இக்கோயில் ஸ்ரீகாரியமாக கொற்றமங்கலம் உடையார் விளங்க, மூன்றாம் குலோத்துங்கர் காலத்தில் கோயில் சிவபிராமணர்களாக நாற்பத்தெண்ணாயிரபட்டன் அகளங்கபட்டன், திருஞானசம்பந்தபட்டன், முழுதும் வல்லவபட்டன், ஆகியோர் பணியிலிருந்தனர்.40 மூன்றாம் ராஜராஜர் காலத்தே கோயில் தேவகன்மிகளாகத் திருஞானசம்பந்த பட்டனும் ஐநூற்றுபட்டனும் அமைய, கோயில் மத்யஸ்தர்களாக அம் பலப் பெருமாளும் பொன்னருளாளப் பிரியனும் பொறுப்பேற்றிருந்தனர்.41

சிறப்புச் செய்திகள்

முதற் பராந்தகரின் 19ஆம் ஆட்சியாண்டில் இக்கோயில் அறக்கட்டளைகளை ஆய்ந்த சேந்தன்நக்கன் அதில் குறைபாடு கள் இருப்பது கண்டு கோயில் பதிபாதமூலத்தாரிடமிருந்து 10 கழஞ்சு 3 மஞ்சாடிப் பொன்னைத் தண்டமாகப் பெற்றார். 4 கழஞ்சு 2 மஞ்சாடி நிறையில் இறைவனுக்கிருந்த பொற்பட்டம் ஒன்றுடன் இப்பொன்னையும் சேர்த்து 15 கழஞ்சில் புதியபட்டம் செய்தளிக்கப்பட்டது.42

முதற் குலோத்துங்கரின் ஆட்சிக்காலத்தில் (பொ. கா. 1097) இக்கோயிலிலுள்ள உத்தமசோழன் திருமண்டபத்தில் கோயில் பதிபாதமூலத்தார், மாகேசுவரர், சைவாச்சாரியம் செய்த காசியபன் சிவப்பிராநமூர்த்திபட்டர் ஆகியோர் உடனிருக்கத் தியாகவல்லி வளநாட்டை வகைசெய்த அதிகாரி உலகளந்த சோழ விழுப்பரையர், இக்கோயில் சிவபிராமணர்களை அழைத்து இறைவனுக்கு இரவுச்சந்தியில் திருமுழுக்காட்டிப் போனக அமுது படைக்க ஏற்பாடு செய்தார். கல்வெட்டு முற்றுப்பெறாமையின் பிறதகவல்களைப் பெறக்கூடவில்லை.43

இக்கோயிலில் தம் பெயரில் அமைக்கப்பெற்ற சுந்தரபாண்டியன் சந்தியின்போது நிகழும் திருப்படிமாற்று உள்ளிட்ட நிவந் தங்களுக்காகத் தம் மச்சுனர் அழகப்பெருமாளின் பரிந்துரையேற்று மாறவர்மர் சுந்தரபாண்டியர் பாச்சில் கூற்றத்துப் பொன்னருளாளநல்லூரில் இருபோகம் விளையும் ஒரு வேலி நிலத்தைத் தேவதான இறையிலியாக வழங்கி ஆணை பிறப்பித்தார்.44

பொ. கா. 1483இல் (சர்வதாரி ஆண்டு ஆடித்திங்கள் 5ஆம் நாள்) இக்கோயிலிலுள்ள திருஞானசம்பந்தன் மண்டபத்தில் கூடிய மாகேசுவரர், தானத்தார், ஊரார் ஆகியோர் இவ்வூரைச் சேர்ந்த வணத்திறம்பட்டார் வைத்தியநாதர் மகன் வாசகமாளிகைப் பெருமாளுக்கு இக்கோயில் பொற்பண்டாரக்காணி திருக்கை வழக்கமாக அளித்தனர். சண்டேசுவரரின் ஓலை போல அவரது திருமுகமாக அமைந்துள்ள இக்கல்வெட்டு, சண்டேசுவரர் பாடி வைத்து தருமம் ஆராய்ந்ததாகக் கூறுகிறது.45

பிற்பாண்டியர் காலத்தே இப்பகுதியில் நிகழ்ந்த இசுலாமியர் படையெடுப்பால் இவ்வூரிலிருந்த தென்னந்தோப்புகள் பாழாகியதாகக் கூறும் கல்வெட்டு, கோயில் தானத்தாரும் ஊரவரும் கூடிப் புதிய தென்னைமரங்கள் நடுவது, இறைவன் படையல் ஆகியன குறித்து ஆராய்ந்ததாகவும் அதற்கான வருவாயாகப் பதியிலார், தேவரடியார், கோயில் பணியாளர் தவிர்த்த பிற நத்தமனைகள் மீது ஒரு மனைக்கு ஓராண்டுக்கு இவ்வளவு என வரி விதிக்கத் தீர்மானித்ததாகவும் தெரிவிக்கிறது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் வரி அளவுகளை அறியக்கூடவில்லை.46

பெருமங்கலத்தைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் ஆழ்வான், செந்தாமரைக்கண்ணன் பெரியாண்டான், செந்தாமரைக் கண்ணன் சூரியதேவன், செந்தாமரைக்கண்ணன் சோறுடையான் எனும் நான்கு உடன்பிறந்தாருக்கு பொன்னருளாள நல்லூர் வீரசோழ அணுக்கரான வீதிவிடங்கனிடமிருந்து பெற்ற கிளிமயக்கல் என வழங்கப்பட்ட 4 மா நிலத்தையும் திருமடை விளாகத்து மனைகள் இரண்டையும் கோயில் பட்டுடையார், கணக்கு, ஸ்ரீகாரியம் ஆகியோர் சண்டேசுவரப் பெருவிலையில் விற்றனர்.47

முதல் ராஜராஜர் காலத்தில் ராஜாச்ரய வளநாட்டின் நாடுவகைசெய் அதிகாரியாக இருந்த ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் பாச்சிலிலிருந்த 3 கோயில்களிலுமே கோயில் பணியாளர் வாழ்வூதியத்தில் சில சீர்மைகளைச் செய்தார். பொதுவாகக் கோயில் பணியாளர்களுக்கு நிலமோ அல்லது நெல்லோ 'பங்கு' என்ற பெயரில் ஊதியமாக வழங்கப்பட்டது. பாச்சில் கோயில்கள் மூன்றிலுமே பணியாளர்களுக்கு அவரவர் பணித் தகுதிக்கேற்ப இப்பங்கு நிலமாக வழங்கப்பட்டிருந்தது.

இராஜராஜரின் 11ஆம் ஆட்சியாண்டில் கோயிலின் பல்வேறு தேவைகளுக்காக இப்பணியாளர்களின் நிலப்பங்குகள் குறைக்கப்பட்டன. 'நிவந்தக்காரர் முன்பு ஏற உண்டு வருகின்ற பங்கில் இவர்களுக்குப் பற்றும்படி நிறுத்தி இத்தேவர் ராஜராஜ விடங்கர்க்கே வாங்கி முதலான பங்கு' என்று இச்செயலைக் குறிக்கும் கல்வெட்டு,48 ஊதியக் குறைப்பால் கிடைக்கப்பெற்ற நிலமும் அதன் விளைவும் இக்கோயில் உலாத்திருமேனியான ராஜராஜவிடங்கரின் பெயரில் வரவு வைக்கப்பட்டதாகக் கூறுகிறது.

கற்பகவல்லியின் கல்வெட்டுப் போல இக்கல்வெட்டும் ராஜராஜர் காலத்தில் ஆச்சிராமத்திலிருந்த கலைஞர்களையும் தொழிலர்களையும் பெயர் சுட்டாது, நட்டவர் (நட்டுவர்), கரணர், மெராவியக் கலைஞர், வங்கியக் கலைஞர், குயவர், காவிதி, வண்ணக்கர், பரிசாரகர், நாவிசர், தச்சர் எனப் பணி சுட்டி வெளிச்சப்படுத்துகிறது. நட்டவர், கரணர், குயவர் பங்குகளில் காலும் மெராவியர், வங்கியர், பரிசாரகர் பங்குகளில் அரையும் வண்ணக்கர், தச்சர் பங்குகளில் அரைக்காலும் காவிதிப் பங்கில் மூன்றரை மாவும் நாவிசர் பங்கில் 1 மாவும் குறைக்கப்பட்ட நிலையில், ஒன்றரை வேலி ஏழு மா காணி நிலம் கோயிலுக்குக் கிடைத்தது. இந்நில விளைவான 142 கலம் தூணிப்பதக்கு நெல்லை திருஆச்சிராமத்து ஊரார் கோயில் பண்டாரக்காலான ராஜாச்ரயனால் அளந்து கோயிலுக்களித்தனர். இது கொண்டு ராஜராஜவிடங்கருக்கு நாளும் ஒரு சந்தியில் கறியமுது உள்ளிட்ட திருஅமுது படைக்கப்பட்டது.49 கல்வெட்டின் இறுதி வரிகள் கிடைக்காமையின் எஞ்சிய தரவுகளைஅறியக்கூடவில்லை.

மன்னர் பெயர் அறியமுடியாத சோழர் காலக் கல்வெட்டு இக்கோயிலில் கருவிக்கலைஞர்களாக எண்மர் பணியாற்றியதாகவும் காளம், சங்கு ஊதப் புதிதாக நால்வரைப் பணியமர்த்தியதாகவும் கூறுவதுடன், அவர்கள் நாளும் மூன்று சந்தியும் இறை வழிபாட்டின்போது இசையெழுப்பியதாகச் சொல்கிறது. வண்ணக்குக் கணக்குத் தில்லையழகனுக்குக் கண்காணியாகப் பொன்னையன் தில்லையழகன் இருந்தமை சுட்டும் இக்கல்வெட்டு, அணுக்கன் பொன்னனான ராஜராஜவிடங்கப் பேராச்சன் இக்கோயிலில் இறைத்திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்தாகவும் கூறுகிறது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் திருமேனி இன்னதென அறியக்கூடவில்லை. இக்கல்வெட்டுப் பதிவில் இக்கோயில் இசைக்கலைஞர் தீரன் ஆச்சனும் நட்டவர் கண்டனும் கையெழுத்திட்டுள்ளனர்.50

சிதைந்துள்ள மற்றொரு கல்வெட்டு, திருவாச்சிராமம் இறைவனுக்குத் துடையூர் சபையார் அன்றாடு நற்காசு 5க்குக் கால்வேலி நிலத்தை விற்று, அதற்கான இறைக்காவலாக 20 காசுகள் கொண்டமை கூறுகிறது. இந்நிலத்தின் எல்லைகளாக ஆச்சிராமத்து உவச்சர் பங்கும் துடையூரிலுள்ள கடம்பந்துறை மகாதேவர் தேவதானமான ஸ்ரீகரணவயக்கலும் சூரியன் அம்பலத்தாடி நில மும் துடையூர்ப் பண்டவெட்டியானுக்கு விட்ட நிலமும் திருச் சிற்றம்பல வாய்க்காலும் அமைந்தன. இவ்விற்பனையை முன்னிருந்து நடத்திய துடையூர் சபையோராக தேவர் கதவன், பூதன் வாமனன், திருவரங்கதேவ நாராணன், தாழிஅங்கி ஆகியோர் அமைய, இந்நிலவிலை ஆவணத்தை ராஜாச்ரய வளநாட்டுப் பெருதூரைச் சேர்ந்த மத்தியஸ்தர் முந்நூற்றுவன் பள்ளிகொண்டான் கருணாகரப் பிரியன் எழுதியுள்ளார்.51

துண்டுக்கல்வெட்டுகளுள் ஒன்று பாச்சில் வணிக கிராமத்தார் இக்கோயில் பராந்தகன் மண்டபத்தில் கூடித் தேவூரை இரண்டு பிரிவாக்கி, இரண்டு தண்டிகையாகக் கடமை கொள்ள முடிவு செய்தமை கூறுகிறது. அதே கல்வெட்டு, இக்கோயிலில் முழுக்காட்டு மண்டபம் ஒன்று இருந்தமையைச் சுட்டுகிறது.52 பல துண்டுகளாகச் சிதறியுள்ள வீரராஜேந்திரரின் கல்வெட்டு, அரை வேலி 4 மா நில விற்பனையைச் சுட்டுகிறது. இந்நிலத்தின் எல்லைகளாக விழுப்பரையன், சோழமாராயன் நிலங்கள், இறைவனின் தேவதான நிலம் 4 மா ஆகியவையும் மலையுடையான் மனையும் சுட்டப்பட்டுள்ளன.53

மற்றொரு துண்டுக் கல்வெட்டால் ஆண்டு விளைவாகக் கிடைத்த 52 கலம் ஒரு தூணி நெல் கொண்டு இறைவனுக்கு நாளும் போனகஅமுது படைக்கப் பரிசாரகர் இசைந்தமை தெரியவருகிறது.54 அனசஸரம் அழகியான் இக்கோயிலில் திருப்பூமண்டபம் அமைத்துத் தந்ததாகச் சுற்றுமாளிகையின் தென்புறத்தில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு கூறுகிறது.55 கொடைக் கல்வெட்டு ஒன்றின் இறுதிவரி அக்கொடையைக் காப்பாற்றுவார் அடிப்பொடி கொடையளித்தவரின் தலை மேலன என்கிறது.56

தச்சமுழமும் சதாசேவைக் கல்வெட்டுகளும்

இக்கோயில் வளாகத்துள்ள அம்மன் திருமுன் முன்மண்டபத்தின் மேற்குச் சுவரில் வாயிலுக்கு வலப்புறம் 18ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் தச்சமுழம் என்ற எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது. இது அம்மன் கோயில் மண்டபத்திற்கான கட்டுமான அளவாக இருக்கலாம். இவ்வளாகத்தின் பல பகுதிகளில் 18 அல்லது 19ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் ஒன்றல்லது இரண்டு வரிகளிலமைந்த சதாசேவைக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. சின்னம்பியப்பன், சடையப்பன், ரெங்கன், சின்னம்பி குருசறள் ஆகியோர் பெயர்களை அக்கல்வெட்டுகள் குறிக்கின்றன.

குறிப்புகள்
30. பு. க. 16.
31. நட்டுவத்துக்கு மிருதங்கம் அடிப்பவர் என்கிறது தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, ப. 516.
32. கல்வெட்டுச் சிதைவால் இவர் பெயரின் முதற்பகுதியை அறியக்கூடவில்லை.
33. அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன், பாச்சில் கோயில்கள், பக். 11-37
34. மேற்படி, பக். 38-54
35. பு. க. 1.
36. ARE 1973-1974: 232, 233.
37. பு. க. 8.
38. ARE 1973-1974: 234.
39. ARE 1972-1973: 343, 345, பு. க. 13, துண்டுக் கல்வெட்டு (து. க.), 3.
40. பு. க. 6, 8.
41. பு. க. 4.
42. பு. க. 10.
43. ARE 1972-1973: 346.
44. ARE 1973-1974: 235.
45. பு. க. 7.
46. பு. க. 11.
47. பு. க. 12.
48. பு. க. 14.
49. இது போன்ற பங்குக் குறைப்புகள் முதல் ராஜராஜர் காலத்தே பரவலாக நிகழ்ந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இதே அலுவலர் பாச்சில் அமலீசுவரம், மேற்றளிக் கோயில்களிலும் கலைஞர்கள், பணியாளர்களின் நிவந்தப் பங்குகளைக் குறைத்து அதன் வழிக் கிடைத்த நிலவிளைவு கொண்டு அவ்வக் கோயில்களில் சிறப்பு நிகழ்வுகளை அமைத்துள்ளார். பாச்சில் கோயில்கள், பக். 26-27, 42-43. திருவையாறு வடகயிலாசத்திலும் இத்தகு நிவந்தக் குறைப்புக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது.
50. பு. க. 15.
51. பு. க. 17.
52. து. க. 5.
53. து. க. 7.
54. து. க. 8.
55. பு. க. 5.
56. ARE 1972-1973: 343.
- நிறைவு
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.