http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 2
இதழ் 2 [ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ] இந்த இதழில்.. In this Issue.. |
சென்ற மாதம் எழுதியதை கர்நாடக சங்கீதம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நண்பனிடம் காட்டினேன். படித்துவிட்டு அவன், "எல்லாம் சரிடா, ஆனால் இந்த ஸ்வரம் ஸ்வரம்-னு அடிக்கடி வருதே! அப்படினா என்ன?" என்று கேட்டான். அவனுக்கு பொறுமையாக விளக்கியவுடன் "அட! நம்ப ஸரிகமபதனிஸ!!!, இதை சொல்லவா இவ்வளவு ரவுசு விட்ட?" என்றான். ஆக சங்கீதம் தெரிகிறதோ இல்லையோ எல்லொருக்கும் ஸ ரி க ம ப த நி தெரிந்துதான் இருக்கிறது. இதை இவ்வளவு பிரபலமாக்கிய பள்ளிக்கூட பாடலாசிர்¢யர்களைப் பற்றி இரண்டு வார்த்தையேனும் கூறாவிடில் நான் பெரும்பாவத்திற்கு ஆளாவேன். என் பள்ளிப் பருவத்தில் என் தந்தைக்கு அடிக்கடி மாற்றல் இருந்ததால், பல பள்ளிகள் மாற வேண்டியிருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் சொல்லி வைத்தாற்போல் வருட ஆரம்பத்திலிருந்து கடைசி வரையில் அதே ஸரிகமபதநி-தான். இதில் வேறு இந்த பாட்டு வாத்தியார்களை காலை assembly-யில் பாடச் சொல்லிவிடுவார்கள். mic-ஐ பார்த்தவுடன் இவர்களுக்கு என்னமோ music academy-யில், ரேடியோவில், டிரான்சிஸ்டரில் எல்லாம் கச்சேரி செய்வது போல ஒரு நினைப்பு வந்து விடும். தேசிய கீதத்தைக்கூட ஏதோ சங்கராபரண கீர்த்தனையைப் போல கமகம் பிருகாவெல்லாம் கொடுத்து 5-நிமிடத்துக்குப் பாடுவார்கள். தாலி என்றால் என்னவென்றே தெரியாத இளைஞன் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் இருப்பது போல, இந்த மாதிரி பாட்டு வாத்தியார்கள் எல்லா பள்ளிகளிலும் உண்டு. அப்படி யாரும் எங்கள் பள்ளியில் இல்லை என்று கூறுபவர்களுக்காகவே பார்த்திபன் படமெடுத்து ஸரிகமபதநி புகழை கோபால் பல்பொடி புகழ் அளவுக்குப் பரப்பி விட்டார்.
ஏழு ஸ்வரம், ஏழு ஸ்வரம் என்று அடிக்கடி பல பாடல்களில் வருவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் இருப்பது 12 ஸ்வரங்கள் ( 7-ஐ ஸ்வரம் என்றும், 12-ஐ ஸ்வரஸ்தானம் என்றும் கூறுவர்.). ஸ்வரங்கள் என்னமோ ஸ ரி க ம ப த நி தான் என்றாலும் இதில் ஸா மற்றும் பா-வைத்தவிர மற்ற எல்லா ஸ்வரங்களும் double action கதாநாயகிகள். இந்த 12 ஸ்வரங்களை வைத்துக்கொண்டு வெவ்வேறு விதமான ஸரிகமபதநி-க்களை உருவாக்க முடியுமல்லவா? (various combinations). அப்படி உருவாகும் 72 ஸரிகமபதநி-க்களைத்தான் மேளகர்த்தா ராகங்கள் என குறிக்கிறோம். ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்திலிருந்தும் பல கோடி ராகங்கள் உருவாக முடியும். அந்த ராகங்களுக்கு ஜன்ய ராகங்கள் என்று பெயர். "என்னைய்யா நீ!! ஏதோ கணக்கு பாடம் போல அடுக்கிக்கிட்டே போற? இந்த விஷயமெல்லாம் விளங்கினால்தான் ராகம் எல்லாம் புரியுமா" என்று கேட்டால், அதற்கான பதில், "நிச்சயமாக இல்லை" என்பதாகும். (எனக்கு விஷயம் தெரியும்னு காட்டிக்கொள்ள வேண்டுமில்லையா;-)..) உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு ராகம் எல்லாம் ஒரு அளவுக்கு புரிய ஆரம்பித்தவுடன்தான் இந்த விஷயம் எல்லாம் விளங்கியது. இந்த சமாச்சாரமெல்லாம் புரிந்தால் ரொம்ப நல்லது, அப்படி புரியாவிடினும் பெரிய பாதகமில்லை. இப்பொழுது ஒரு ராகத்தை எப்படி புரிந்து கொள்வதென்று பார்ப்போம். ஒரே ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெவ்வேறு சூழ்நிலைகளில் அமைந்த இரு பாடல்களை எடுத்துக்கொண்டு கவனமாகக்கேளுங்கள். இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாமல் தோன்றினால் ரொம்ப நல்லது. இரண்டும் ஒரே ராகத்தின் இரு பிரயோகங்களை படம் பிடிக்கின்றன என்று அர்த்தம். இப்பொழுது மூன்றாவதாக அதே ராகத்தில் ஒரு பாடலைக் கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில் முன்னால் கேட்ட பாடல்களுக்கும் இந்த பாடலுக்கும் ஒரு ஒற்றுமை தோன்றும். (ஒருநாள் கேட்டுவிட்டு "அட போய்யா எல்லாம் கட்டுக்கதை" என்று சொன்னால் ஒன்றும் செய்ய்ய முடியாது. பொறுமையாக கேளுங்கள். காலப்போக்கில் இந்த "pattern matching" சூட்சுமம் நிச்சயம் கைவர ஆரம்பிக்கும்). பல ராகங்கள் முதல் முறை கேட்கும்போது ஒரே மாதிரிதான் தோன்றும். உதாரணமாக, ஆபேரிக்கும் சுத்ததன்யாசிக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லையெனில் யாரேனும் சங்கீதம் நன்றாய் தெரிந்தவரிடம்போய் கேட்டு விடாதீர். "ஓ!!! இதென்ன பெரிய விஷயம்!!! சுத்தன்யாசில 'ரி' வராது", என்று எதாவது கூறிவைப்பார். ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிடும் (சொந்த அனுபவம் ஐயா!!). முதலில், இரண்டு ராகங்கள் ஒரே மாதிரி இருக்கிறது என்று தெரிந்தாலே 'moral victory'-தான். நிறைய கேட்க கேட்க வித்தியாசம் தானே புரிபடும். சரி இவ்வளவு நேரம் அடிப்படை விஷயமெல்லாம் அலசியாகிவிட்டது .நல்ல உணவிற்கு முன்பு கொஞ்சம் சூப் குடிப்பது போலத்தான் இதெல்லாம். சூப் குடித்தால் நல்லது அதற்காக சூப் இல்லாவிடில் சாப்பிடவே முடியாது என்று எதாவது உண்டா என்ன? அதைப்போலத்தான் இந்த theoretical சமாச்சாரங்களும். இனி மாதம் ஒரு ராகம் என எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் ஆழம் சென்று பார்ப்போம். “இப்பொழுது ரசிப்பது போலவே திரையிசைப்பாடல்களை ரசித்தால் போதாதா? இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது?” என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு "உன்னால் முடியும் தம்பி" படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் கதாநாயகனின் அண்ணி "பொறுப்புள்ள பையனாக வா" என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும்? அதே படத்தில், 'இதழில் கதையெழுதும் நேரமிது' என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா? உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது? அவர்கள் கஷ்டப்பட்டதிற்கு பெரியதாக பாராட்ட வேண்டாம், லேசாக புருவம் உயர்த்திப் பார்த்தால் கூடப்போதும். அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம்!!!!this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |