http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > கதைநேரம்
இந்தக் கதையைப் படிக்கத்துவங்கியிருக்கும் நேயர்கள் தத்தம் கையிலிருக்கும் காரியங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு உடனடியாக பாண்டிய குலாசனி வளநாட்டு வரகவிர நாட்டு தேவதானமாகிய திருநெடுங்களத்திற்கு* வந்து சேரும்படி கேட்டுக்கொள்கிறோம். அதிக அவகாசமில்லை. ஏனெனில் நெடுங்களம் ஸ்ர்புறக்குடிப் பள்ளியையொட்டிய** குடியிருப்பைச் சேர்ந்த உழுகுடியான*** சேந்தன்காரி விவகாரமானதொரு காரியத்தில் இன்னும் ஒரு நாழிகை நேரத்தில் ஈடுபடப்போகிறான். அதற்குள் நாம் அங்குபோய்ச் சேர்ந்தாக வேண்டியிருக்கிறது.

* கல்வெட்டுக்களில் இப்பகுதி இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது
** பள்ளி - சமணக் கோயில்
*** உழுகுடி - உழவர்


சேந்தன் தனது எளிய குடிசையின் வெளியே வந்து சுக்கில பட்சத்துச் சந்திரன் இருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டான். இன்னும் ஒரு நாழிகை நேரம் கழித்துக் கிளம்பினால் சரியாக இருக்குமா ? இருக்கும். சித்திரைத் திருவிழா முடிந்த களைப்பில் ஊரே உறங்கிக்கொண்டிருக்கிறது.

எதற்கும் கையில் துரட்டியையும் ஒரு வீச்சரிவாளையும் கையில் எடுத்துக் கொள்வோம். எவனாவது இக்கட்டான நேரத்தில் பார்த்துத் தொலைத்தால்.... கடவுளே ! அதுபோல் எதுவும் நிகழக் கூடாது.

பெண்சாதி பொன்னாத்தாள் வயல் வேலை செய்த களைப்பில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். என்றாலும் நடுவில் முழிப்பு வந்துவிட்டால் கைகளால் தன்னைத் தேடுவாள். வயிறு சரியில்லை - வெளிக்கு சென்று வந்தேன் என்று ஏதாவது சொல்லி சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பித்திருக்குமா ? கிளம்பிவிட வேண்டியதுதான்.

மனமில்லாமல்தான் கிளம்பினான். அவனுடைய எளிய வாழ்க்கையில் இதுவரை மனமறிந்து எந்தவொரு தவறான காரியத்திலும் ஈடுபட்டதில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து இன்றைக்கு...! கடவுளே ... என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய் ? திடீரென்று நூற்றைம்பது கழஞ்சுகளுக்கு நான் எங்கே போவேன் ? யாரைக் கேட்பேன் ?

ஒரு அடி நிலத்துக்குக்கூட சொந்தமில்லாதவன் என்பது ஊருக்கே தெரியும். எவன் என்னை நம்பிக் கடன் கொடுப்பான்? வேறு வழியில்லாமல்தான் இப்படிப்பட்ட இக்கட்டில் மாட்டிவிட்டுவிட்ட உன் மடியிலேயே கையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

அதோ - தெருமுனையில் ஏதோ ஆள் அரவம் கேட்கிறது - கூட்டாளி சொக்கன்தானா ? அதற்குள்ளாகவா வந்துவிட்டான் ?

ஆம் அவன்போல்தான் தெரிகிறது !

ஒரு முறை திரும்பி தன் குடிசையைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டான். பொன்னி - என்னை மன்னித்துவிடு ! உனக்குத் தெரிந்தால் சத்தியமாக என்னை இந்தக் காரியத்தில் ஈடுபட விடமாட்டாய்.. அதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு தவறாக காரியத்தில் ஈடுபடப் போகிறேன். வேறு எந்த உபாயமும் எனக்குப் புலப்படவில்லை.

ஆயிற்று... இன்னும் இரண்டுநாள் கழிந்தால் எறும்பியூரிலிருந்து அந்த நாசமாய்ப் போகிற வாணியஞ் செட்டி வந்து நிற்பான். அவனுக்கு உன்னையும் என்னையும் முழுசாக அடிமையாய்த் தருவேனா ? மானமுள்ளவன் எவனாவது அதைச் செய்வானா ?

நம்பவே முடியவில்லை - இதே ஒரு திங்களுக்கு முன்பு எவனாவது நம்மிடம் வந்து "அடேய் சேந்தா ! நீ இன்னும் ஒரு பக்கத்துக்குள் ஒரு பயங்கரமான திருட்டு விவகாரத்தில் ஈடுபடப் போகிறாய் !" என்று சொல்லியிருந்தால் நாம் என்ன செய்திருப்போம் ? அவனை நையப் புடைத்து மண்ணில் புரட்டியிருக்கமாட்டோமா ? ஆனால் இன்றைய நிலைமை ?

மறைந்துவிட்ட அவனுடைய தந்தையான மறவன் சேந்தனாரை நினைக்க நினைக்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எல்லாம் அந்த பாழாய்ப் போகிற கிழவனால் வந்த வினை ! கஷ்ட காலத்தில் அனைவருமே கடன் வாங்குவது வழக்கம்தான். என்றாலும் மூளையுள்ள எவனாவது எறும்பியூர் வாணியஞ் செட்டியிடம் மூன்றே முக்கால் பலிசைக்கு* கடன் வாங்குவானா ? அப்படியே வாங்கினாலும் இப்படியா ஓலையெழுதித் தருவது ? அதுவும் வாணியஞ் செட்டியிடம் ?

* வட்டி

ஒப்பந்தம் இதுதான் : அதாவது வாங்கிய கடனை முதலும் பலிசையுமாய் குறித்த காலத்திற்குள் கட்டப்பட வேண்டியது. அப்படி கட்ட முடியவில்லையென்றால் நிலமில்லாத தானும் தமது வம்சத்தாரும் ஐந்து வருடங்கள் வாணியஞ்செட்டிக்கு அடிமைகளாக* இருக்க சம்மதிப்பது !

* அடிமைப் பழக்கம் அந்நாளில் இருந்ததற்கான குறிப்புக்கள் கிடைத்துள்ளன. ஒரு உதாரணத்திற்கு பார்க்க வரலாறு ஆய்விதழ் 7, பக்கம் 16

இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் முட்டாள்தனமாகக் கையெழுத்திட்டுவிட்டதோடு அதனைப்பற்றி குடும்பத்தாரிடம் கடைசிவரையில் மூச்சு விடாமல் போய்ச் சேர்ந்துவிட்டார் கிழவர். பாவம், அவரைச் சொல்லியும் குற்றமில்லை ! கண்களை மூடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தன்னைத் தனியாக கூப்பிட்டனுப்பினார்தான் - ஒரு வேளை இந்த விஷயத்தை சொல்லதானோ என்னவோ ? - பாழாய்ப் போன இருமல் வந்து ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அவரைக் கட்டிப்போட்டு விட்டது.

வாணியஞ்செட்டி ஏழுநாட்களுக்குமுன் குடிசைவாசலில் வந்து ஓலையை நீட்டியபோதுதான் சேந்தனுக்கு அத்தனை விஷயமும் தெரியும்! அதிலும் அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாதாகையால் சொக்கன்தான் படித்துக் காண்பித்தான்.

முதலும் பலிசையுமாய் சேர்த்து நூற்றைம்பது கழஞ்சுகள் ! எதிர்பாராத அதிர்ச்சியில் ஏறக்குறைய மயக்கமே வந்துவிட்டது சேந்தனுக்கு... குடிசை மூங்கிலைப் பிடித்துக்கொண்டு சமாளித்து நின்றான். தந்தை போய்ச்சேர்ந்து இன்னும் ஆறு திங்கள்கூட ஆகவில்லை. இப்போதுதான் ஒரு வழியாக அந்த இழப்பிலிருந்து சமாளித்து ஒருவழியாக எழுந்து நின்றுகொண்டிருக்கிறோம்...இப்போதா இந்த இடி தலைமேல் விழவேண்டும் ?

அவனுடைய நிலைமையும் பேச்சும் வாணியஞ்செட்டியிடம் எடுபடவில்லை. கொடிய முதலைகூட தன் வாயில் அகப்பட்ட இரையை ஓரொரு சமயம் பரிதாபப்பட்டு விட்டுவிடும் - விடுவானா வாணியஞ்செட்டி ?

இடிந்து போய் நின்றவனை நெடுங்களநாதர் கோயில் உக்கிரணத்தானும்* அவனுடைய உற்ற நண்பனுமான சொக்கன்தான் ஆறுதல் கூறித் தேற்றினான். இந்த இக்கட்டிலிருந்து தப்புவதற்கான உபாயத்தையும் அவன்தான் சொன்னான்.

* உக்கிரணத்தான் - திருக்கோயில் உட்பணியாளன் / பரிசாரகன்

அது உபாயமா அபாயமா என்று இன்னும் ஒரு ஜாம நேரத்தில் தெரிந்துவிடும்.

வரும் கோபத்திற்கு வாணியஞ் செட்டியையே போட்டுத் தள்ளிவிட்டால் என்ன என்று தோன்றுகிறது.. ஆனால் கட்டாயம் மாட்டிக்கொள்வோம். பொன்னி அனாதையாகிவிடுவாள்.

பொன்னி !இதோ உன்னிடம் சொல்லாமல் முதல்முறையாக வெளியே கிளம்புகிறேன். திரும்பி வருவேனோ ? மாட்டேனோ ? கடவுள்தான் அறிவார்... கடவுளா ? அப்படி யாராவது இருக்கின்றார்களா என்ன ? இன்றைய காரியம் வெற்றி பெற்றால் அவர் இருக்கிறார் என்று நம்புவேன். இல்லையேல் கடவுளும் இல்லை, ஒரு புண்ணாக்கும் இல்லை ! எல்லாம் ஏமாற்று வேலைதான் !

"என்ன சேந்தா ! பராக்கு பார்த்துக்கொண்டு நிற்கிறாய் ? ஊரான் எவனாவது எழுந்துவைக்கப் போகிறான்... கிளம்பு!" வந்தவுடனேயே விரட்டுகிறான் சொக்கன். கிளம்ப வேண்டியதுதான் - முன்வைத்தகாலை இனி பின்வைப்பதில்லை.

"சொன்ன தகவல்களையெல்லாம் சரிபார்த்துவிட்டாயல்லவா ?"

"அட, என்மீது நம்பிக்கையில்லையா ? ஸ்ர்பண்டாரத்தின் பக்கலிலேயே* பலமுறை சென்று சுத்தம் செய்திருக்கிறேன் - அமைப்பெல்லாம் நான் முன்பு கூறியபடிதான் ! மாற்றம் எதுவுமில்லை..."

* அருகில்

"பின் கிளம்பு !"

கோட்டான் ஒன்று எங்கோ வெகு தொலைவிலிருந்து கூவியது. சேந்தனுக்கு அடிவயிற்றிலிருந்து பயம் பந்தாய் எழும்பி வாயை அடைத்துக்கொண்டது.


********* **************************************************************************************


கோரைப்பாயில் ஒருமுறை புரண்டு படுத்தார் பரமேஸ்வரக் கங்காணியார்.

தூக்கம் வரவில்லை - எப்படி வரும் ?

மனத்தில் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்தாலும் தூக்கம் வராது. துக்கம் பொங்கிக் கொண்டிருந்தாலும் தூக்கம் வராது. கங்காணியாரின் தூக்கமின்மைக்கு காரணம் முதலாவதாக சொன்னது - எல்லையில்லாத மகிழ்ச்சி !

கடைசியாக மகாதேவர் கண்களைத் திறந்துவிட்டார். ம்ஹூம், மகாதேவரில்லை, தன தான்ய தேவியாகிய இலக்குமி தேவியல்லவா கண்களைத் திறந்திருக்கிறாள் ? பன்னிப் பன்னி எறும்பியூர் மகாதேவரிடமும் நெடுங்களமுடையாரிடமும் சேர்வை செய்ததற்கு பேசாமல் விண்ணகரக் கோயில் எதற்காவது சென்று பெருமாள் சேர்வை செய்திருந்தால் திருமகள் முன்னரே கண்திறந்திருப்பாள் போலிருக்கிறது ! எப்படியோ இப்போதாவது தேவர்கள் மனம் குளிர்ந்ததே - அந்த வகையில் சரிதான் !

"அதன்" மதிப்பு எத்தனையிருக்கும் ? ஐயோ ! நினைக்கவே நெஞ்சு பரபரக்கிறது ! பளபளவென்று ஒளிக்கற்றையை அள்ளி வீசும் அதன் ஜாஜ்வல்யங்கள் கங்காணியாரின் மனக்கண்களில் ஒருமுறை தோன்றி மறைந்தன.

ஆயிற்று. இன்னும் ஒரு சிலநாட்கள்தான் அவரை இந்தப் பகுதிகளில் பார்க்க முடியும். அதற்கப்புறம் சேர தேசமோ பாண்டி தேசமோ கிளம்பிவிடுவார். இனிமேலும் அவர் வெறும் திருக்கற்றளி* ஸ்ர்மாகேஸ்வரக்** கங்காணியில்லை...வேறு பெயரில் - வேறு தொழிலில் - மிகுந்த செல்வந்தராக பெருந்தரக்காரராக - புதிய வாழ்க்கை ! புதிய பயணம் !

* திருக் கோயில்
** ஸ்ர்மாகேஸ்வரர் - கோயில் ஊழியர்களில் ஒரு பகுதியினர்


உற்சாகம் பொங்கி நெஞ்சை அடைக்கிறது - நிதானம் ! நிதானம் ! அதிக மகிழ்ச்சியும் இதயத்தை பலகீனப்படுத்திவிடுமாம் - வைத்தியர் சொல்லியிருக்கிறார். ஆக இப்போதுதான் அதிக நிதானம் தேவை. இல்லாவிட்டால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் வியாதி நம்மை படுக்கப் போட்டுவிடும்.

தனது ஞாபகங்களில் முதல்நாள் நடப்புக்களை மெதுவாக அசைபோட்டார்.

மாலை தளிக்குச் சென்றது. மகாமண்டபத்தில் எதிர்பட்ட கோயில் ஸ்தானபதி அரங்க தேவனார் இன்னும் ஒரிரு நாட்களில் தலைநகரிலிருந்து வருடாந்திர ஸ்ர்காரிய மேற்பார்வை* செய்யும் அதிகாரி சிறுக்கடம்பனூருடையானான வண்டுவராபதி நாடாழ்வான் வரப்போவதாக அறிவித்தது. பழைய வருடக் கணக்குகளை சரிபார்க்க ஸ்ர்பண்டாரத்திற்குள் நுழைந்தது. நேரம் அதிகமாக ஆகிவிட்டபடியால் சொக்கதேவனை விளக்கேற்றிக் கொண்டு வரச் சொன்னது. நான்காம் வருட ஸ்ர்தன நிவந்தப் பைக்குள் பொற்காசுகளுக்கு நடுவில் "அதைக்" கண்டது. அந்த வருடக் கணக்கிலும் - அதற்கு முந்தைய / பிந்தைய வருடப் பொத்தகத்திலும்* "அது" குறிக்கப்படாமல் இருந்தது.சப்தம் செய்யாமல் தன்னுடைய தலைப்பாகையில் அதனை முடிந்துகொண்டது...

தன் வாழ்வின் பொற்கணமான அந்த நேரத்தை மனதில் நிறுத்தி நினைத்து நினைத்து மகிழ்ந்தார் கங்காணியார். ஆஹா !

* கோயில் காரியங்களை சரிபார்க்க தலைநகரிலிருந்து மேற்பார்வை அதிகாரிகள் அவ்வப்போது வருகை புரிந்தனர். கணக்குகள் தவறினாலோ நிவந்தங்கள் சரியாக நிறைவேற்றப்படாமல் இருந்தாலோ சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டம்(Fine) சொல்லும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. ஒரு உதாரணத்திற்கு பார்க்க வரலாறு - இதழ் 1, பக்கம் 32

* பொத்தகம் - கணக்குகள் எழுதிவைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள்

நல்ல வேளை ! இருட்டிவிட்டதால் வேறு ஒருவனும் அந்த சமயத்தில் நேரம் காலம் தெரியாமல் வந்து தொலைக்கவில்லை. வந்திருந்தால் காரியம் அடியோடு கெட்டிருக்கும்.

நாளை மீண்டும் ஒருமுறை அத்தனை பொத்தகங்களையும் சரிபார்த்து எந்தக் கணக்கிலும் வரவில்லையென்று நிச்சயப்படுத்திக் கொண்டுவிட்டால்....காரியம் முடிந்தது. அதற்கப்புறம் நாடாழ்வான் வரும்போது நல்ல பிள்ளையைப்போல் கணக்கயெல்லாம் காண்பித்துவிட்டு - ஓரிரு திங்களில் கிளம்பிவிட வேண்டியதுதான்.

மீண்டும் ஒருமுறை தலைப்பாகையைப் பிரித்து ஆசைதீர அதனைப் பார்த்துக்கொள்ளவேண்டுமென்கிற ஆசை பொங்குகிறது..சிரமப்பட்டு அதனை அடக்கிக் கொண்டார். அதனை பிரிக்கப் போக - சற்றுத் தள்ளி படுத்திருக்கும் அவருடைய மனையாள் எழுந்து வைத்தாளானால்? வீண் வம்பை விலை கொடுத்து வாங்கினாற் போலத்தான் !

கண்கள் இரண்டையும் மீண்டும் ஒருமுறை இறுக்க மூடி தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து பிடிக்க முயன்றார் அவர்.


********* **************************************************************************************


மடைப்பள்ளி* வளாக இருட்டில் சேந்தனும் சொக்கதேவனும் பம்மிப் பம்மி நடந்துகொண்டிருந்தார்கள். புல் தரையாதலால் அதிக சப்தம் எழவில்லை. என்றாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்..தப்பித்தவறி பூச்சி பொட்டு எதிலாவது கால்வைத்துத் தொலைந்தோமானால் ஆபத்துத்தான்.

* கோயிலுக்கான பிரசாத உணவு தயாரிக்குமிடம்

மடைப்பள்ளி தாண்டியதும் கோயிலால் நிர்வகிக்கப்படும் தவசியர் மடம். இன்றைக்கு அதிகப் போக்குவரத்தைக் காணவில்லை. ஒரேயொரு சிவபண்டாரம் மட்டும் கால்களை நீட்டி குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பது மாடப்பிறையில் வைக்கப்பட்டிருக்கும் மெல்லிய இருளில் தெரிந்தது. மடத்திற்குப் பின்னால் சந்திர வெளிச்சத்தில் லேசாகத் தெரிகிறதே - அதுதான் அவர்கள் போகவேண்டிய ஸ்ர் தனப் பண்டாரம் ! தான்யப் பண்டாரமும் அதுதான் என்பதை வெளியே குப்பலாக கொட்டிக்கிடக்கும் நெல்மணிகள் காட்டிக் கொடுக்கின்றன.

பண்டாரத்தின் வாசலில் அன்றைய இரவுக் காவலன் - இருளில் யார் என்று சரியாக அடையாளம் தெரியவில்லை, காலிங்க ராயனானாயிருக்கலாம் - உட்கார்ந்தபடியே உறங்கி விழுந்துகொண்டிருந்தான். அவர்கள் இருவரும் நின்ற இடத்தில் சற்று மர நிழல் விழுந்ததால் சந்திர வெளிச்சத்திலிருந்து தப்பித்திருந்தார்கள்.

இனி இங்கேயே பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். இன்னும் அரை நாழிகை - அல்லது ஒரு நாழிகைப் பொழுதில் காவலன் சிறுநீர் கழிக்கச் செல்லும் கால் நாழிகைக்கும் குறைவான நேரத்தை - இவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோயில் வளாகத்தை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காக காவலன் அருகிலிருக்கும் கோனாரின் தென்னந்தோப்பு வரை சென்றாகவேண்டும். கணபதி வாய்க்காலும் அங்கேதான் ஓடிக்கொண்டிருக்கிறது... வரும்போது கால்களை கழுவிக்கொண்டு வரவேண்டுமே ! எல்லாவற்றுக்குமாக சேர்த்து கால்நாழிகைப் பொழுது நிச்சயம் ஆகும் என்பது சொக்கனின் கணிப்பு.

கால் வலித்ததால் இருவரும் மரநிழலில் சப்தம் செய்யாமல் உட்கார்ந்தார்கள்.

நேரம் நத்தையாக ஊர்ந்துகொண்டிருந்தது. இப்படிப்பட்ட காத்திருப்புக்களின்போது ஒரு நொடி கழிவதுகூட ஒரு யுகம் கழிவதுபோல் தோன்றுவது ஏன் என்றே தெரியவில்லை.

"சொக்கா - உன்னுடைய முன்னேற்பாடுகளையெல்லாம் பார்த்தால் இம்மாதிரியான விவகாரத்திற்கு நீ ரொம்ப நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டாய் என்பதுபோல் தெரிகிறதே ?" என்றான் சேந்தன் மிகத் தாழ்ந்த குரலில்.

அந்த இருட்டிலும் சொக்கன் அவனை முறைப்பது தெரிந்தது. "உள்ளதைச் சொல்லட்டுமா ? ஒருநாள் இல்லை ஒருநாள் இந்தப் பண்டாரத்தை ஒட்டு மொத்தமாக சுருட்டிக்கொண்டு ஓடத்தான் போகிறேன் ! என்ன, அகப்பட்டுக்கொள்ளாமல் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்தாக வேண்டும் - இல்லையேல் வீண் சிறைவாசம்தான் !"

"அடப்பாவி, சிவன் சொத்து குல நாசம் என்பார்கள் ! அந்த வேலையை மட்டும் செய்துவிடாதே ... ஏதோ என் கஷ்டகாலத்திற்காக இந்தப் பாபகாரியத்தை செய்யத் துணிந்தேனேயொழிய மகாதேவர் பண்டாரத்தில் கைவைப்பதற்கு மனதே ஒப்பவில்லை !"

"அட, நானென்ன நாளைக்கே எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவேனா என்ன ? ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னேனப்பா - அத்தனை தைரியம் இன்னும் நமது இரத்தத்தில் வரவில்லை..அப்புறம் நமது வம்சத்திற்கேயல்லவா கள்ளன் வம்சம் என்று பெயர் சூட்டிவிடுவார்கள் !"

"அந்த பயம் இருந்தால் சரி !"

"உஸ் - காவலன் விழித்து அங்குமிங்கும் பார்க்கிறான் - அநேகமாக கிளம்பலாம், இதோ - கிளம்புகிறான் ! அவன் தலை மறைந்ததும் நாம் உடனடியாக வேலையை ஆரம்பிக்க வேண்டும் - தெரிந்ததா ?"

"தெரிந்தது !" - பயத்தில் சேந்தனுக்கு நா உலர்ந்துவிட்டது.

காவலன் கண்களிலிருந்து மறைந்ததும் ஒரே ஓட்டமாக ஓடி பண்டாரத்தின் நிலைக்கதவை அடைந்தார்கள். சொக்கன் இடுப்பிலிருந்து அந்த பெரிய சாவியை அவசர அவசரமாக எடுத்தான்.

இது ஒரு சோதனையாக கட்டம். சொக்கன் செய்து கொண்டு வந்திருந்த மாதிரிச் சாவி பண்டாரத்தின் கதவைத் திறந்தாக வேண்டும்! மிகுந்த சிரமத்தின்பேரில் கோயில் ஸ்தானபதி அரங்க தேவனாரிடமிருந்த சாவியின் வரைபடம் தயாரித்து...

கதவில் நுழைக்கப்பட்ட சாவி சற்று சண்டித்தனம் செய்தது ! ஐயோ, என்ன சோதனை இது ! கதவைத் திறக்க முடியவில்லையென்றால் ஒட்டுமொத்த திட்டமும் பாழாகி...

ஒரு ஆட்டு ஆட்டியதன் பேரில் திறந்துகொண்டுவிட்டது கதவு ! நேற்று இதற்காகவே பணியின்போது சொக்கன் கதவின் சாவித்துவாரத்தில் சற்று எண்ணெய் விட்டிருந்தான் - அது இப்போது பயனளிக்கிறது போலும்.

இருவரும் கும்மிருட்டாகத் தெரிந்த பண்டாரத்திற்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்கள்.

இனி ஒரு நாழிகையோ, இரண்டு நாழிகையோ கழித்து காவலன் மறுபடி எழுந்து தோப்புக்குச் செல்லும் நேரத்தில்தான் வெளியே வர இயலும் !

உள்ளே நுழைந்ததும் இருட்டு அவர்கள் இருவரையும் விழுங்கிவிட்டதுபோல் தெரிந்தது. சொக்கனுக்கு அது மிகவும் பழகிய இடமாதலால் மெதுவாக நெல்மூட்டைகளைத் தாண்டி பின்னறைக்கு சேந்தனை கைப்பிடித்து அழைத்துச் சென்றான். கொட்டிவைத்த நெல்லில் தவறிப்போய் கால்வைத்தால் அந்த அர்த்த இராத்திரி நிசப்தத்தில் நாராசமான ஒரு சப்தம் எழுந்தது. அதனால் பார்த்து அடிமேல் அடிவைத்து இருவரும் நடந்தார்கள்.

ஒருவழியாக தன பண்டார அறை வந்தாயிற்று. ஒரு பக்கம் பெரிய பெரிய பெட்டிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. அத்தனையும் நெடுங்களத்துப் படாரர்* சொத்து ! எண்ணிலடங்காத நகைகள்... பொற்கழஞ்சுகள்... வார்ப்புகள்....

* இக்கோயில் இறைவன் நெடுங்களத்துப் படாரர் , நெடுங்களத்து மகாதேவர் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்

சொக்கன் அனைத்தையும் ஆர்வத்துடன் ஒருமுறை பார்த்துக் கொண்டான். ஆனால் அந்தப் பெட்டிகளில் கைவைப்பது இயலாத காரியம். ஒவ்வொரு பெட்டிக்கும் இரண்டு சாவிகள் உண்டு. ஒன்று மாகேஸ்வரரான பரமேஸ்வரக் கங்காணியாரிடமும் மற்றொன்று...

"என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறாய் சொக்கா ?"

"இல்லை - வருடம் முழுவதும் பஞ்சப் பாட்டு பாடிக்கொண்டிருப்பதற்கு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரே ஒரு பெட்டியுடன் ஊரை விட்டே இரவோடிரவாக ஓடிவிடலாமா என்று தோன்றுகிறது !"

"சொக்கா ! மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறாய் ! நாம் ஏழைகள்தான் - ஆனால் உழைத்துச் சம்பாதிக்கும் பரம்பரையில் பிறந்தவர்கள் ! ஏதோ என்னுடைய போதாத காலத்திற்குத்தான் இங்கே வந்திருக்கிறோமேயொழிய படாரர் சொத்தை அபகரிப்பதற்கு அல்ல ! அதற்கு நான் ஒருபோதும் உடந்தையாயிருக்க மாட்டேன் !"

"சரி, சரி, குரலை உயர்த்தாதே - அதோ அந்த மாடத்திற்கருகில்தான் பொத்தகத்தில் இன்னும் கணக்குவைக்கப்படாத சித்திரைத் திருவிழா நிவந்தங்கள் இருக்கும் ! சிறு சிறு துணிப்பைகளும் அதற்குப் பக்கத்திலேயே ஓலைகளும் இருக்கும் - இருட்டில் தடவிப்பார் ! மிகுந்த சத்திய சந்தனைப்போல் இருக்கும் பொன்னை எண்ணிக்கொண்டிருக்காதே - இருப்பதை அள்ளிக்கொண்டுவிடு !"

மேகம் வானில் விலக சந்திர வெளிச்சம் எங்கிருந்தோ புகுந்து புறப்பட்டு வர - அந்த சிறிய அறை சற்று பிரகாசமாயிற்று. சொக்கன் காட்டிய திசையில் சேந்தன் சிறிய பைகளைக் கண்டான் - கடவுளே ! யார் யார் அளித்த நிவந்தங்களோ !

வாழ்க்கையில் சேர்ந்தார்போல் பத்திருபது பொற்கழஞ்சுகளுக்குமேல் பார்த்தறியாயதவனான சேந்தன் காரி அந்தப் பைகளை ஒவ்வொன்றகக் கவிழ்த்து உள்ளேயிருக்கும் பொன்னை எண்ணத்துவங்கினான்.

"முட்டாளே - என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? பொன்னை எண்ணாதே என்று சொன்னேனல்லவா ? அதிக அவகாசமில்லை !"

"சொக்கா ! நமக்குத் தேவைப்படும் நூற்றைம்பது கழஞ்சுகளுக்குமேல் ஒரு சிறு மாடைகூட எடுப்பதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் ! காவலன் இன்னும் ஒரு நாழிகை அல்லது இரண்டு நாழிகை நேரத்திற்கு நகரப்போவதில்லை - ஆதலால் நமக்கு அவசரம் ஒன்றும் கிடையாது!"

"உன்னைப்போன்றதொரு வெட்டிப்பயலை இந்த வேலைக்குக் கூட்டிக்கொண்டு வந்தேனே!" என்றபடி தலையிலடித்துக்கொண்டான் சொக்கன்.

நான்கைந்து பைகளைப் பிரித்ததில் நூற்றைம்பது பொன் சேர்ந்துவிட்டது. ஜாக்கிரதையாக அதனை மடியில் கட்டிக்கொண்டான் சேந்தன். திருட்டுப் பொன் ! அதுவும் படாரர் சொத்து ! மடி கனத்து வியற்வை விட ஆரம்பித்துவிட்டது அவனுக்கு..


********* **************************************************************************************உற்சாகத்துடன் மறுநாள் பண்டாரத்தை அடைந்தார் பரமேஸ்வரக் கங்காணியார். இரவு நன்கு உறங்காததால் கண்கள் பரபரவென்று தீப்பிடித்ததுபோல் எரிந்தன...ஆனால் அதெல்லாம் கங்காணியாரின் தற்போதைய மனநிலையில் ஒரு பொருட்டே அல்ல.

அவசர அவசரமாக நான்காம் வருட ஸ்ர்தனப் பெட்டியை தூக்க மாட்டாமல் தூக்கி கீழே வைத்தார். அதனைத் தன்னுடைய சாவி கொண்டும் கோயில் மாகேஸ்வரர்களுள் ஒருவரான மனுகுல மார்த்தாண்ட வேளாரிடமிருந்து காலையில் பெற்றுக்கொண்டுவந்த மற்றொரு சாவிகொண்டும் திறந்து அந்த ஆண்டுப் பொத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு வரிவிடாமல் தேடினார்.

தப்பித் தவறி எங்காவது இன்னார் அல்லது இன்னாரின் தேவியார் கொடுத்த இரத்தின - மரகத ஹாரம் என்றொரு வரி தென்பட்டுவிடுமோ என்று அவர் மனம் பரபரத்தது...ஒருமுறைக்கு இரண்டு முறையாக கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்த்தும் நல்ல வேளையாக அப்படியெதுவும் இல்லை ! அப்பாடா - இப்போதுதான் கங்காணியாருக்கு மூச்சே வந்தது !

இது போதாது. இதற்கு இரண்டு வருடப் பொத்தகங்களை முன்பும் பின்பும் கவனித்து தவறுதலாக அதில் இந்த நகை எழுதப்பட்டிருக்கிறதா என்று சர்வநிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் ! இல்லையேல் சிக்கல்தான் ! அடுத்த இரண்டரை நாழிகைப் பொழுதை* இதற்காக செலவழித்து அந்தப் பொத்தகங்களிலும் நகையைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்டு - மதிய உணவுக்காக எழுந்தபோதுதான் அதனை கவனித்தார்.

* 2 1/2 நாழிகை - ஒரு மணி நேரம்

இதென்ன ? இன்னும் பொத்தகத்தில் கணக்கெழுதப்படாத சித்திரைத் திருவிழா நிவந்தங்கள் சற்றே இறைந்தவாரே கிடக்கின்றனவே ? நாம் இவ்வாறு வைக்க மாட்டோமே.. ஒரு வேளை....அடக் கடவுளே ! மூன்று...இல்லை நான்கு பைகள் வெறும் பைகளாக இருக்கின்றன ? உள்ளிருந்த பொற்கழஞ்சுகளைக் காணோம் ? அடக் கடவுளே ! எல்லாம் கூடி வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக இது என்ன சோதனை ?

அவசர அவசரமாக பைகளுக்கு அருகில் கிடந்த நிவந்த ஓலைகளைப் படித்துப் பார்த்தார்... ஒன்றில் அறுபது கழஞ்சுகள், ஒன்றில் நாற்பது, ஒன்றில் இருபது, கடைசிப் பையில் முப்பது - ஆக மொத்தம் நூற்றிஐம்பது கழஞ்சுகள் !

ஐயோ ! திருட்டா நடந்திருக்கிறது ? நம்பவே முடியவில்லையே - நெடுங்களம் ஸ்ர்பண்டாரத்திலா திருட்டு ?

அவருக்கு மூவுலகங்களும் கண்முன் சுழன்றன...தெய்வமே ! ஒரு பக்கம் அள்ளிக் கொடுத்துவிட்டு மற்றொரு பக்கம் சோதிக்கிறாயே ? பேசாமல் நேராக கோயில் ஸ்தானபதிகளிடம் திருட்டு நடந்துவிட்டது என்று சொல்வோமா ? அப்படிச் சொன்னால் யாராவது நம்புவார்களா ? அறைக் கதவு உடைக்கப்படவில்லை - இராக் காவலனும் ஒன்றும் புகார் செய்யவில்லை - காதும் காதும் வைத்தாற்போல் காரியம் நடந்துள்ளது !

அதிலும் ஒரு கள்ளன் பண்டாரம் வரை வந்துவிட்டு - அங்கிருக்கும் அத்தனை பொக்கிஷங்களையும் விட்டுவிட்டு - வெறும் நூற்றைம்பது கழஞ்சுகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா ? நாமே அப்படியொரு செய்தியைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வோம் ? அவனே பண்டாரத்தில் பொய்க் கணக்கு எழுதிவிட்டு திருட்டு அது இது என்று கதையளக்கிறான் என்று கூறமாட்டோமா ?

அதுமட்டுமல்ல - எறும்பியூர் எறும்பீசர் கோயிலிலிருந்து நம்மை நெடுங்களத்திற்கு பணிமாற்றம் செய்தது எதற்காக ? நமது கை சற்று நீண்டுவிட்டதால்தானே ? ஆக நமக்கு ஏற்கனவே இருக்கும் கெட்ட பெயருக்கு இப்போது இப்படியொரு விநோதமான நூற்றைம்பது கழஞ்சு திருட்டைப் பற்றி வெளியில் சொன்னால் என்ன ஆகும் ? முதலில் நமது வேலை கண்டிப்பாக பறிபோகும் ! கெட்ட பெயர் ஊர்ஜிதமாகும் ! சந்தேகம் நம்மீதுதான் என்று பட்டுவிட்டால் நமக்கிருக்கும் சொத்திலிருந்து அந்த நூற்றைம்பது பொன்னும்கூட வசூல் செய்யப்படலாம் ! அந்த நாசமாய்ப் போகிற நாடாழ்வான் வந்து எல்லாப் பணிகளையும் குறைவர நடத்தி வைத்துவிட்டுப் போவான். இத்தனையும் போதாதென்று இப்படியொரு விஷயம் நடந்தது - அதற்கு இன்னவாக நான் தண்டமளித்தேன் என்று கல்வெட்டில் வேறு பொறித்துவைக்கச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. வேறு அவமானம் நமக்கும் நமது பரம்பரைக்கும் வேண்டுமா என்ன ?

பரமேஸ்வரா ! அதிருஷ்டக் காற்று அடித்தாலும் உன்னைப் பிடித்த பீடை உன்னை முழுவதுமாய் விட்டபாடில்லை. பேசாமல் அந்த ஹாரத்தை விற்றுவிடு. கிடைக்கும் பொன்னில் நூற்றைம்பது கழஞ்சுகளை மரியாதையாக சித்திரை நாள் கணக்கில் சேர்த்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடந்துகொள் ! வேறு வழியில்லை - வரவில் நூற்றைம்பது கழஞ்சு நஷ்டம் ! அவ்வளவுதான் !

பெருமூச்சு விட்டபடி எழுந்தார் கங்காணியார்.


********* **************************************************************************************இனி சொல்வதற்கு அதிகம் விஷயமில்லை.

கங்காணியார் தஞ்சைப் பொற்கொல்லரிடம் ஹாரத்தைக் கொண்டு சென்றபோது அது அவர் நினைத்ததுபோல் மரகதமும் இரத்தினக் கற்களும் பதிக்கப்பட்டதல்ல - வெறும் வண்ணக் கற்கள் கொண்டு செய்ததுதான் என்ற இரண்டாவது அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்தது ! நல்லவேளை - ஹாரம் முழுப் பொன்னால் ஆகியிருந்தபடியால் பொன்னுக்கு மட்டும் விலைகொடுக்க சம்மதித்தான் ஆசாரி. அவனிடம் வாதாடி வாதாடி நூற்றியிருபது பொற்கழஞ்சுகளை ஹாரத்துக்கு ஈடாகப் பெறுவதற்குள் கங்காணியாருக்கு உன்பாடு என்பாடு என்றாகிவிட்டது.

மீதிப்பொன் ? அவருடைய கையிருப்பிலிருந்து செலுத்தியாகவேண்டும் ! ஏதோ தன்னுடைய துர்புத்திக்குக் கிடைத்த தண்டனை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார் அவர்.

சேந்தன் பொற்கழஞ்சுகளை வாணியஞ்செட்டிக்குச் செலுத்தி தன்னையும் குடும்பத்தாரையும் காத்துக் கொண்டான். திருட்டு விஷயம் வெளியில் பிரஸ்தாபிக்கப் படாதது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. படாரர் நெருக்கடி நேரத்தில் தனக்குச் செய்த உதவியை அவன் இறுதி மூச்சுவரை மறக்கவில்லை. கூலிபெற்றுக்கொள்ளாத பாடிக் காவலனாய் அவன் தன் இறுதிக் காலம் வரை கோயிலுக்கு உழைத்து ஊராரிடம் பெருமரியாதை தேடிக்கொண்டான். தன்னுடைய கடைசிக் காலத்தில் - தன்னுடைய காவற்பணியை தொடருவோர்க்கு தன்னுடைய இதயம் கனிந்த மரியாதையை கல்வெட்டில் வெட்டுவித்து - வரலாற்றிலும் இடம்பெற்றான்.

எல்லோர் கணக்கும் சரியாக வந்ததுபோல் தெரிகிறதா ? இல்லை, இன்னும் ஒரே ஒரு கணக்கைப் பற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது.

நெடுங்களத்துப் படாரருக்கு வாணியஞ்செட்டியிடமிருந்து வசூல் செய்ய வேண்டிய தொகை நூற்றைம்பது கழஞ்சுகள் இருந்தது. மிகச் சுலபமாக காரியத்தை முடித்துக் கொண்டார் அவர்.

செட்டியின் ஒரே மகனை தீராத நோயில் படுக்கப் போட்டார். முதலில் ஐந்து அல்லது பத்து கழஞ்சு நுந்தா விளக்கு வேண்டுதலில் காரியத்தை முடிக்க நினைத்திருந்தான் செட்டி. விடுவாரா மகாதேவர் ? நோயை உண்டு இல்லையென்று செய்து ஒரு முழு மகா மண்டபத்தையும் செட்டியின் கைங்கரியத்தில் கற்களியாக்கிக்கொண்டுதான் அவனை விட்டார் !

யமகாதகர் என்றால் நெடுங்களத்துப் படாரர்தான். யமனுக்கே காலனாக வந்தவராயிற்றே அவர் !

(முற்றும்)


********* **************************************************************************************


கல்வெட்டுச் செய்தி


********* **************************************************************************************


திருநெடுங்களம்.

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சைவத் திருத்தலம். ஞானசம்மந்தப் பெருமான் தன்னுடைய மிகப் பிரபலமான இடர்களையும் திருப்பதிகங்களை இத்தல இறைவனாகிய நெடுங்களத்தானை நோக்கித்தான் பாடுகிறார். ஒவ்வொரு பதிகமும் "இடர்களையாய் - நெடுங்களம் மேயவனே !" என்று முடியும்.

திருச்சியின் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் இங்குள்ள கோயில்களிலும் சுற்றுப்புறத்திலும் கள ஆய்வுப்பணி மேற்கொண்டபோது இப்பகுதியும் கோயிலும் பல்லவர் ஆட்சியிலிருந்தே மிகச் சிறப்புற்று இருந்தமைக்கு சான்றுகள் கல்வெட்டு வடிவில் கிடைத்தன. இக்கல்வெட்டுக்களில் ஒரு எளிய கல்வெட்டு நம் மனதைக் கவர்கிறது.

கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - வரலாறு ஆய்விதழ் 8, பக்கம் 3

இடம் - பலிபீடத்திற்கு முன்பிருந்த பலகைக் கல்வெட்டு. கல்வெட்டுச் செய்தியுடன் வீச்சரிவாள்கள், குத்து விளக்குகள், துரட்டி ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன.

காலம் - கி.பி.8ம் நூற்றாண்டு

செய்தி - ஸ்ர்புறப்பள்ளியின் சேந்தன் குழுவினரின் காவலில் இப்பகுதி இருந்தது.


1. ஸ்ர்புறக்குடிப்பள்ளி சேந்த
2. குழுவிநார் காவல் இது காத்
3. தார் அடி மேல்லன் கையும் தலையும்


(வரித்தெளிவிற்காக எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன - அடைப்புக்குறிக்குள் அமைந்த எழுத்துக்கள் யூகிக்கப்பட்டுள்ளன)

இதுபோன்ற பாடிக்காவல் கல்வெட்டுக்கள் ஆங்காங்கே கிடைக்கின்றனதான். என்றாலும் இந்தக் கல்வெட்டு வேறு இரண்டு காரணங்களுக்காக சிறப்புப் பெறுகிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ர்புறக்குடிப்பள்ளி என்பது அப்பகுதியில் அமைந்திருந்த சமணக் கோயிலொன்றை குறிப்பதாக இருக்கலாம். இன்றைக்கு கோயில் முழுவதும் அழிந்து பட்டுவிட்ட நிலையில் இந்தக் கல்வெட்டு ஒன்றுதான் அந்தக் கோயில் இருந்ததற்கான ஒரே மெளன சாட்சி. அங்கு சிதறிப்போய்க் கிடைத்திருக்கும் சமணச் சிற்பங்களை இந்தக் கல்வெட்டோடு இணைத்து நோக்கும்போதுதான் கால உளியின் இரக்கமற்ற செதுக்கலில் சில்லாகித் தெறித்து விழுந்துவிட்ட ஒரு புராதானக் கோயிலின் இருப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. கல்வெட்டுக்களின் முக்கியத்துவத்தை உணர்த்த இது ஒரு முக்கிய சான்று.

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது "இது காத்தார் அடி என் தலை மேலன" என்று கூறும் மரபிலிருந்து மாறுபட்டு "காத்தார் அடி மேல்லன் கையும் தலையும்" என்று கூறியிருப்பது. இதற்கு ஒரு காரணம்தான் கொள்ளமுடியும். அதாவது வெறும் இயந்திரத்தனமாக செதுக்கப்பட்ட கல்வெட்டில்லை இது. இதனை வெட்டுவித்தவன் தான் சொல்ல வந்ததை இதயபூர்வமாக அப்படிச் சொல்லியிருக்கிறான். உணர்ந்தவன் வாய்வார்த்தை என்பதால்தான் அது மரபிலிருந்து மாறுகிறது.

குழுவிநார் என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதே என்கிறீர்களா ? அது வேறு ஒன்றுமில்லை. சேந்தன் அவ்வப்போது தன் கூட்டாளிகளையும் பாடிக்காவலுக்கு அழைத்துக்கொண்டான் - அவர்களைத்தான் அவ்வாறு சிறப்புப்படுத்துகிறது கல்வெட்டு. அந்தக் குழுவினரில்...கோயில் உட்கரணத்தான் சொக்கதேவனும்கூட அடக்கம் !

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.