http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > கலையும் ஆய்வும்
கந்தன் குடைவரை
மு. நளினி
மதுரை மேலூர்ச் சாலையில், மதுரையின் புறப்பகுதியாக அமைந்துள்ள நரசிங்கத்தில், பெருமாள் குடைவரையின் இடப்புறம், திடீர்க் குடியிருப்புகளின் நெருக்கத்தில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை கிஞ்சித்தும் கவலைப்படாமல் கைவிட்டுவிட்ட நினைவுச்சின்னமாய், இந்தப் பழங்குடைவரை நலங்கெடப் புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை போல முறையான பாதுகாப்பின்றிச் சீர்குலைந்து நிற்கிறது.

பெருமாள் கோயிலின் இடப்புறம் நெளியும் சிறியதொரு சந்தில், 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' எனக் கருதி நடப்பார்க்கும் பாடாய்ப் பட்டபிறகே மேற்கு நோக்கிய இந்த 'லாடன்' கோயிலின் தரிசனம் கிடைக்கிறது. மலையென்றும் பாராமல் நெருக்கியடித்து ஆக்கிரமித்திருக்கும் குடியிருப்புகளின் புழக்கடைக் கோயிலாய் பாதுகாப்பற்ற நிலையில் பாழ்பட்டுப் போயிருக்கும் இந்தக் குடைவரை, மலைச்சரிவின் கீழ்ப்பகுதியில் அடக்கமாய் அகழப்பட்டுள்ளது.

முன்னால் முகப்பும் பின்சுவரிலொரு கருவறையுமாய் அமைந்துள்ள இம்மண்டபக் கோயிலின் நடு அங்கணத்தை அடைய வாய்ப்பாக வடக்கிலும் தெற்கிலும் பிடிச்சுவர்களுடன் கூடிய படிகள் தரையிலிருந்து வெட்டப்பட்டுள்ளன. பக்கத்திற்கு ஐந்து படிகளைக் கொண்டிருக்கும் இவ்வமைப்பின் நடுப்பகுதி சதுரதளமாய் அமைந்துள்ளது. பாறைத் தரையிலிருந்து முதற்படியை அடைய 5செ.மீ. உயரத்திலொரு தளம் இருபுறத்தும் வெட்டப்பட்டுள்ளது. 1.56மீ. உயரமுள்ள பிடிச்சுவரின் முன்புறத்தே அதன் நடுப்பகுதியில், 1.13மீ. அகலமும் 1.60மீ. உயரமும் கொண்ட திருமுன்னொன்று அமைக்கப்பட்டுள்ளது. உபானம், ஜகதி, உருள்குமுதம், கம்பென அமைந்த துணைத்தளத்தின் மேல் உள்ளடங்க எழும் உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்கள் உத்திரம் தாங்குகின்றன. மேலே, வாஜனமும், கூரையின் வெளிநீட்டலாக விளிம்பு தட்டப்பெற்று நன்கு வடிவமைக்கப்பட்ட கபோதமும் காட்டப்பட்டுள்ளன.

இரண்டு தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்ப்பகுதியில் வலக்கையில் உருள்தடியேந்திய ஆண்வடிவமொன்று அர்த்தபத்மாசனத்தில் உள்ளது. இடக்கையால் வயிற்றைத் தொட்டபடி உள்ள அதன் தலையில் தலைப்பாகை சிற்றியது போன்ற அலங்காரம். தோள்களைத் தழுவியிறங்கும் செவிக்குண்டலங்களை இன்னவையென அடையாளம் காணக்கூடவில்லை. குள்ளச் சிறுவடிவமும் பானை போன்ற வயிறும் கொண்டு விளங்கும் இவ்வடிவத்தை கணங்களுள் ஒன்றாய்க் கொள்ளலாம்(1).

இத்திருமுன் கபோதத்தின் இருபுறத்தும் வெளிப்படும் பிடிச்சுவர்களின் தொடக்க மேற்பகுதிகள் யாளித்தலைகளாகவும், தொடர்ந்து நீண்டு வளைந்திறங்கும் பகுதிகள் அவற்றின் துதிக்கைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்துதிக்கைகள் தரையை அடுத்துள்ள கீழ் சதுரத்தளத்தையொட்டி நன்கு சுருண்டுள்ளன.

குடைவரை முகப்பின் கீழ்ப்பகுதியில் பாதபந்தத் தாங்குதளம்(2) அமைக்கும் முயற்சி முழுமையுறாமல் உள்ளது. 1.50மீ. உயரத்திற்கு அமைந்துள்ள இத்தாங்குதளத்தின் மேலுறுப்புகளான பட்டிகையும் கண்டமும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழும் கம்புகளின் தழுவலைப் பெற்றுள்ள கண்டம், இடையிடையே பாதங்களையும் கொண்டுள்ளது. இதன் கீழமைய வேண்டிய குமுதமும் ஜகதியும் முறையாகச் செதுக்கப்படாது, இச்செ.மீ. உயரத்திற்கு ஒரே அமைப்பாக விடப்பட்டுள்ளன. இத்தாங்குதளத்தின் மேலுறுப்பாக 15செ.மீ. உயரத்திற்கு அமைந்துள்ள பட்டிகையின் மேற்பரப்பே முகப்பின் தரையாகியுள்ளது. இத்தாங்குதளத்தையொட்டி, படியமைப்பின் மேற்றளத்திலிருந்து இறங்கும் பிடிச்சுவர்கள் பிரிக்கப்பாடாதிருக்கும் ஜகதி, குமுத அமைப்பில் முடிகின்றன.

முகப்பு6.14மீ நீளமும் 78செ.மீ அகலமும் கொண்டமைந்துள்ள முகப்பு, பாறைச் சுவர்களையொட்டி இரண்டு அரைத்தூண்களும் நடுவில் இரண்டு முழுத்தூண்களும் பெற்று மூன்று அங்கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சதுரம், கட்டு, சதுரமென்ற அமைப்பிலுள்ள இத்தூண்களின் சதுரமுகங்கள் அனைத்திலும் தாமரைப் பதக்கங்கள் வெட்டப்பட்டுள்ளன. அரைத்தூண் சதுரங்களின் கிழக்கு, மேற்கு முகங்கள் பாதியளவிலான தாமரைப் பதக்கங்களைக் கொண்டுள்ளன. முழுத்தூண்களின் மேலமர்ந்துள்ள போதிகைகள் இருபுறத்தும் வளைமுகமாய்த்(3) தரங்கக் கைகளை உயர்த்தி உத்திரம் தாங்க, அரைத்தூண் போதிகைகளின் வளைமுகத் தரங்கக் கைகள் ஒருபுறம் மட்டும் கையுயர்த்தி இத்தாங்கலில் பங்கேற்கின்றன. தரங்கங்களின் நடுவில் அகலமான ஆனால் கொடிக்கருக்கற்ற பட்டை உத்திரத்தையடுத்துக் கூரையையொட்டி முகப்பின் முழுநீளத்திற்கும் வாஜனம் ஓடுகிறது. கூரையின் வெளிநீட்சி கபோதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. முகப்பு அரைத்தூண்களையொட்டிய பக்கச் சுவர்கள் தரைவரை நீள்வதுடன் சரிவின் காரணமாக மேலிருந்து கீழாக நன்கு அகலப்பட்டுள்ளன. இவற்றுள் வடபுறச் சுவரில் கல்வெட்டொன்று வெட்டப்பட்டுள்ளது.

மண்டபம்

6.12மீ. நீளமும் 1.57மீ. அகலமும் பெற்று முகப்பை அடுத்தமைந்திருக்கும் செவ்வக மண்டபத்தின் கிழக்கிச் சுவரின் நடுப்பகுதியில், சுவரிலிருந்து 25செ. மீ. முன் தள்ளிய நிலையில் பிதிக்கமாகக் கருவறையொன்று அகழப்பட்டுள்ளது. அதன் முன் சுவரின் நடுப்பகுதியில் 76செ.மீ. அகலத்திற்கு 1.86மீ. உயரத்திற்குத் திறப்புண்டாக்கி நிலையுடன் வாயிலமைத்துள்ளனர். இவ்வாயிலையடைய மண்டபத் தரையிலிருந்து பிடிச்சுவருடன் அமைந்த மூன்று படிகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றுள் கீழ்படி சந்திரக்கல்லாக உள்ளது. வாயிலின் இருபுறத்தும், கருவறைச் சுவர் இன் கீழ்ப்பகுதியில் உபானம், ஜகதி, செவ்வகச் சில்லிகளுடன் பிரதிவரி, கண்டம், கம்பு, பட்டிகை, மேற்கம்பென அமைந்துள்ள தாங்குதளத்தை அடுத்துச்(4) சுவரெழும்புகின்றது.

இச்சுவரில், வாயிலின் பக்கநிலையொட்டியும் கருவறை முன்சுவர் மண்டபப் பின்சுவருக்காய்த் திரும்பும் திருப்பங்களையொட்டியும் மேற்கம்பிலிருந்து சற்று உள்ளடங்கிய நிலையில், பக்கத்திற்கு இரண்டென நான்கு அரைத்தூண்கள் காட்டப்பட்டுள்ளன. சதுரம், நீளமான கட்டுப்பகுதி, சதுரமென(5) வடிவெடுத்துள்ள இவ்வரைத்தூண்களின் கீழ்ச்சதுரங்கள் மட்டும் தத்தம் நேர்முகங்களில் தாமரைப் பதக்கங்களைப் பெற்றுள்ளன.

இந்த அரைத்தூண்களின் மேற்சதுரங்களில் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ள பூதகணங்கள் 8செ.மீ. உயரத் தளமொன்றில் கால்கள் இருத்தித் தலையை மண்டபக் கூரையில் முட்டியவ்வாறு அமர்ந்துள்ளன(6). வாயிலையொட்டியுள்ள அரைத்தூண்களின் கட்டுப்பகுதியில் சட்டத்தலை வெட்டப்பட்டுள்ளது. இத்தூண்களின் மேற்சதுரங்களின் மேலமர்ந்துள்ள போதிகைகளின் வளைமுகமான தரங்கக் கைகள் உத்திரம் தாங்க, மேலே கூரையையொட்டி ஓடும் வாஜனம், முன் சுவரின் பக்கங்களில் திரும்பி மண்டபத்தின் கிழக்குச் சுவரில் இருபுறத்தும் தொடர்ந்து, வட, தென்சுவர்களிலும் கூரையையொட்டி வளர்ந்து, மண்டப மேற்முகத்தில் கூரையையொட்டிக் காட்டப்பட்டுள்ள வாஜனத்துடன் அய்க்கியமாகின்றது. திரும்பத் தூண்கள் வட, தென்பக்கங்களிலும் தரங்கக் கைகள் நீட்டி உத்திரம், வாஜனம் தாங்குகின்றன.

அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதியில் முக்கால் அளவிலான உருளைத் தூணொன்று செதுக்கப்பட்டு, அதன் பலகை மேல் வடபுறம் மயிலும் தென்புறம் சேவலும் காட்டப்பட்டுள்ளன. தாமரைப் பாதமும் அதன்மீது மூன்று வளையங்களும் அமைய, மேலே உருளை உடல் கொண்டு வளர்ந்து, தாமரைக்கட்டாய் இரு வளையங்கள் பெற்றுப் பின் கலசம், தாடி, கும்பம், பாலி, பலகையென வடிவெடுத்துள்ள இத்தூண்களின் பலகைமீது நிற்கும் மயிலும் சேவலும் கருவறை நோக்கியுள்ளன.

மண்டபப் பின்சுவரான கிழக்குச் சுவரில் கருவறையை அடுத்துள்ள பிரிவுகளில் இருபுறத்தும் கோட்டங்கள் அகழ்ந்து அடியவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன(7). வட கோட்டம் 1.67மீ. உயரமும் 75செ.மீ. அகலமும் கொள்ளத் தென்கோட்டம் 1.70மீ உயரமும் 81செ.மீ. அகலமும் பெற்றுள்ளது. இக்கோட்டங்களின் கீழ்ப்பகுதியை ஒட்டி மண்டபத்தின் வட, தென் சுவர்களில் 1.08மீ. நீளத்தில் 43செ. மீ. அகலத்தில் மேடைபோன்ற தள அமைப்புகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் மீது செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களுள் வடபுறச் சிற்பம் முற்றிலுமாய்ச் சிதைந்துள்ளது(8). இருக்கும் அமைப்புக் கொண்டு பார்க்கையில் இது விலங்கொன்றின் வடிவமாக இருந்ததென ஊகிக்கலாம். தென்புறத்தே கருடாசனத்தில் ஆண்வடிவமொன்று செதுக்கப்பட்டுள்ளது.

கருவறை

கிழக்கு மேற்காக் 1.32மீ அகலமும் தென்வடலாக 1.93மீ நீளமும் கொண்டு செவ்வகமாக அமைந்துள்ள கருவறையின் உயரம் 2.17மீ. கருவறையின் வட, தென்சுவர்களும் கூரையும் வெறுமையாக உள்ளன. வாயிலையொட்டிய பகுதியில் கூரை சற்றே சிதைந்துள்ளது. பின்சுவரையொட்டி, 1.93மீ நீளத்தில் 65செ.மீ. உயரத்திற்குத் தளமொன்று வெட்டப்பட்டுள்ளது. உபானம், உயரமான ஜகதி(9), கம்புகளின் தழுவலில் அமைந்த கண்டம், பட்டிகை என உறுப்புகள் பெற்றுள்ளன. இத்தளத்தின் மீது வடபுறம் முருகனும் அவர் அருகே தென்புறம் தெய்வானையும் அமர்ந்துள்ளனர்.

சிற்பங்கள்

1. அடியவர்கள்

வடபுறக்கோட்ட அடியவர் வலக்காலை நேர்நிறுத்திப் பாதத்தைத் திரயச்ரமாக்கியுள்ளார். இடக்கால், முழங்காலளவில் இலேசாக மடங்கிய நிலையிலிருக்கப் பாதம் கருவறைக்காய்த் திருப்பப்பட்டுள்ளது. இடையில் கோவண ஆடை. உடல் இலேசான இட ஒருக்களிப்பிலிருந்தாலும் முகம் நேர்நோக்கியுள்ளது. வலக்கை இடுப்பிலிருக்க, இடக்கை கருவறைக்காய் நீண்டநிலையில் தாமரை மலர்களைக் கொண்டுள்ளது(10). நீள்செவிகள் வெறுமையாக இருக்க, தலை பின்னோக்கிப் படிய வாரிய நிலையிலுள்ளது.

தென்கோட்ட அடியவர் இடக்காலை நேர்நிறுத்தி, வலக்கால் பாதத்தைக் கருவறைக்காய்த் திருப்பியுள்ளார். இடுப்பில் கச்சம் வைத்துக் கட்டிய கனத்த பட்டாடை. இடக்கை இடுப்பிலிருக்க வலக்கையில் மலர்மொட்டுகள் (10). இவரும் வெறுமையான நீள்செவியினரே. நீளமான தாடியும் உபவீதமாய் வஸ்திர முப்புரிநூலும் கொண்டுள்ள இவருக்குத் த்லைப்பாகை கட்டினாற் போன்ற தலையலங்காரம்.

மண்டபத் தென்சுவரையொட்டிய தளத்தில் கருடாசனத்திலிருக்கும் அடியவர் பட்டாடையணிந்துள்ளார். அரைக்கச்சின் முடிச்சுத் தொங்கல் தரையைத் தழுவியுள்ளது. வலக்காலை மடக்கி முழங்காலும் பாதமும் தரையைத் தொடுமாறு அமைத்து இடக்காலைக் குத்துக்கலாக்கி அமர்ந்திருக்கும் இவரது வலக்கை கருவறை இறைஇணையைப் போற்ற, இடக்கை முழங்கால் மீது இருத்தப்பட்டுள்ளது(11). செவிக்குண்டலங்கள் மகரகுண்டலங்களாகலாம். கழுத்தில் சரப்பளி. தோள்வளைகளும் பட்டைவளைகளும் கைகளை அலங்கரிக்கத் தலையில் முகப்பணிகளோடமைந்த சடைமகுடம். இம்மகுடத்தை மீறிய குழல் கற்றைகள் தோள்களின்மீது தவழ்கின்றன. உதரபந்தம் போல் கட்டப்பட்டுள்ள துண்டு வலப்புறம் முடிச்சிடப்பட்டு, அம்முடிச்சுத் தொங்கலின் பிரிவு அழகுறக் காட்டப்பட்டுள்ளது.

2. கணங்கள்

வாயிலையொட்டியிருக்கும் கணங்கள் இரண்டும் லளிதாசனத்திலுள்ளன. இவற்றின் கருவறைக்கான கைகள் போற்றி நிலையிலிருக்க, கோட்டக் கைகள் வயிற்றின் மீதுள்ளன. உதரபந்தமும் சிற்றாடையும் சடைமகுடமும் கண்டிகையும் குண்டலங்களும் கொண்டுள்ள இவற்றின் தோற்றம் சம்பந்தரின் பாடலடிகளையே நினைவுபடுத்துகின்றன.சுவர்த் திருப்பத் தூண்களின் மீதுள்ள கணங்களுள் வடக்கிலுள்ள வடிவம் இரண்டு கால்களையும் குத்துக்கால்களாக முழங்காலளவில் மடக்கிப் பாதங்களைத் தளத்தின் மீதிருத்தி, கைகளை முழங்கால்களின் மீது தாங்கலாய் வைத்தபடி அமர்ந்துள்ளது. சடைபாரத்துடனுள்ள இதற்கு உதரபந்தம், குண்டலங்கள் உள்ளன. தென்கணம் வடக்கிலுள்ள கணத்தைப் போலவே ஆனால் சற்று இடப்புறச் சாய்வாகத் தலையைக் குனிந்தவாறு சடைபாரத்துடன், செவிகளில் குண்டலங்கள் பெற்று, உதரபந்தமணிந்து காட்சிதருகிறது. குண்டலங்கள் தோள்களில் சரிந்துள்ளன. கழுத்திலுல்ள அணி தெளிவாக இல்லை.

3. இறைஇணைகருவறையுள் இறைவிக்காய்ச் சற்றே ஒருக்களித்துள்ள முருகனும் அவர் தேவியும் சுகாசனத்தில்(12) உள்ளனர். இறைவனின் சிதைந்த வலக்கால் கீழிறங்கியுள்ளது. பாதத்தை இருத்தக் கற்றளம் காட்டப்பட்டுள்ளது. இடக்கால், தளத்தின்மீது கிடையாக, வலத்தொடையில் பாதம் படும் நிலையில் இருத்தப்பட்டுள்ளது. இடையில் பட்டாடை, இடைக்கட்டு. இடக்கை தொடைமீது கடகத்திலிருக்க, வலக்கை மார்பருகே கடகத்திலுல்ளது(13). கைகளில் தோள்வளைகளும் பட்டைவளைகளும் உள்ளன. மார்பில் சன்னவீரும்(14). யிற்றுப்பகுதி சிதைக்கப்பட்டுள்ளதால் உதரபந்தமுள்ளதா என்பதை அறியக்கூடவில்லை. சென்னி சூழ்ந்த உயரமான சடைமகுடம்(15). சடைப்புரிகள் மூன்று இருபுறமும் தோள்களில் தவழ்கின்றன. தோளில் தவழும் குண்டலங்களை இன்னவையென அடையாளப்படுத்தக்கூடவில்லை(16). முகம் பெரிதும் சிதைந்துள்ளது(17).முருகனின் இடப்புறம் அவரைப் போலவே வலக்காலைக் கீழிறக்கி, இடக்காலைக் கிடையாக இருத்தி சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வானையும் பட்டாடை அணிந்துள்ளார். இவரது கால்கள் பெரிதும் சிதைக்கப்பட்டுள்ளன. இவருக்கும் வலக்கால் பாதமிருத்தத் தனித்தளம் தரப்பட்டுள்ளது. சிதைந்துள்ள இடக்கை தொடைமீதமர, வலக்கை கடகத்தில்(18) மலரேந்தியுள்ளது. அழகிய இளமார்பகங்களில் கச்சணிந்துள்ள அம்மையின் செவிகளில் மகரகுண்டலங்கள்(19). கழுத்தைச் சரபளியும் பதக்க மாலையும் அலங்கரிக்கின்றன. தலையில் அணிந்துள்ள சிறிய அளவிலான கரண்ட மகுடத்தை மீறிய சடைப்புரிகள் வலப்புறம் நெகிழ்ந்துள்ளன. இறைவனுக்காய்த் தலையைச் சாய்த்தவாறு குனிந்திருக்கும் தேவியின் முகம் சிதைவுக்காளாகியுள்ளது.

கல்வெட்டும் காலமும்

ஒன்பதாம் நூற்றாண்டினதாகக் கருதத்தக்க எழுத்தமைதியில் அமைந்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு(20), புல்லாரி வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர் புதுக்கிய தகவலைத் தருகிறது. இவர் எதைப் புதுக்கினார் எங்கு புதுக்கினார் என்பதைக் கல்வெட்டுக் கூறவில்லை. எனினும் மண்டப வாயிலருகே உல்ள சுவரில் இக்கல்வெட்டு இருப்பதால், இக்குடைவரை தொடர்பான ஏதோவொரு பகுதியையே இவர் புதுக்கியதாகக் கொள்ளவேண்டியுள்ளது.

குடைவரையின் அமைப்பும் சிற்பங்களின் அலங்கரிப்பும் இப்பணியைக் கி.பி. எட்டாம் நூற்றாண்டினதாகக் கொள்ளுமாறு அமைந்துள்ளன. புதுக்குப் பணிபற்றிப் பேசும் கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டினதாக இருப்பது இக்கருத்துக்கு வலிமை சேர்க்கிறது

முடிவுரை

இறைவன், இறைவி இருவடிவங்களுமே சிதைந்திருந்தபோதும், அவற்றில் சிற்பி விதைத்திருக்கும் கம்பீரமும் நாணமும் குன்றவில்லை. முருகனின் இளநகை அற்புதமானது. பாதுகாக்கப்படவேண்டிய இந்த இறைஇணை, கலையுணர்வற்ற சூழலில் பராமரிப்பிற்ற நிலையில் வருவார்போவாரின் ஒப்பனைகளுக்காளாகி மேன்மேலும் சிதைந்து கொண்டிருப்பது பரிதாபகரமானது.

குறிப்புகள்

1. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும் இதை கணேசரின் புடைப்புச் சிற்பமாகக் காண்கின்றனர். தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, ப. 126, Rock-cut Temple styales, Somaiya Publications Pvt. Ltd., Mumbai, 1998, P.95.

2.இதை, 'There is a high plinth of the kapota bandha type' என்கிறார் கே.வி.சௌந்தரராஜன், மு.கு.நூல், ப.95.

3. 'Angular' என்கிறார் கே.வி.சௌந்தரராஜன், மு.கு.நூல், ப.95.

4. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும், 'பத்மம், வரிமானம், முப்பட்டைக் குமுதம், கண்டம், பிரதி போன்றவை அடங்கிய அதிட்டானம்' என்று பிழையாக எழுதியுள்ளனர். மு.கு.நூல், பக். 127, 95.

5. இந்தச் சதுரப்பகுதியைக் கே.வி.சௌந்தரராஜன் குறிப்பிடவில்லை. மு.கு.நூல், ப.95.

6. 'The ganas are in male-female pair on either side' எனும் கே.வி.சௌந்தரராஜனின் கூற்றுச் சரியன்று. மு.கு.நூல், ப.96.

7. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும், வாயிற்காவலர் என்கின்றனர். மு.கு.நூல், பக். 127, 96.

8. 'கடி அஸ்தமும் விஸ்மய அஸ்தமும் கொண்டுள்ள அடியவர் முழங்காலிட்டு அமர்ந்துள்ளார்' என்று தவறாகக் குறித்துள்ளார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96.

9. பத்மம் என்னும் கே.வி.சௌந்தரராஜன் உபானத்தைக் குறிக்கவில்லை. மு.கு.நூல், ப.96; 'கருவறையின் முகப்பில் வரி, வரிமானத்துடன் கூடிய அதிட்டானம்' இருப்பதாகக் கூறுகிறார். தி.இராசமாணிக்கம். நெல்லைக் குடைவரைக் கோயில்கள், கழக வெளியீடு, சென்னை, 1980, ப.81

10. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும் கையில் மலர் மாலை இருப்பதாக எழுதியுள்ளனர். மு.கு.நூல், ப.127.

11. கடி அஸ்தமும் விஸ்மய அஸ்தமும் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96.

12. அர்த்தபரியங்காசனம் என்கிறார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96; அர்த்தபரியங்காசனம் அர்த்தபத்மாசனத்தைக் குறிக்கும் என்கிறார் வை. கணபதி ஸ்தபதி. சிற்பச் செந்நூல், தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கக வெளியீடு, சென்னை, 1978, ப.59. இறைவனும் இறைவியும் சுகாசனத்திலுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

13. இக்கை கர்த்தரீயிலுள்ளது எனும் சு. இராசவேல், அ.கி. சேஷாத்திரி, கே.வி. சௌந்தரராஜன் கூற்றுகள் சரியன்று. மு.கு.நூல், ப.126, 96.

14. 'A 'V' shaped torque on the chest' என்கிறார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96.

15. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும், கரண்ட மகுடமாய்க் காண்கின்றனர். மு.கு.நூல், ப.126, 96.

16. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும் மகர குண்டலங்கள் என்கின்றனர். மு.கு.நூல், ப.126.

17. இம்முகத்தில் முடிச்சுருள்கள் இருப்பதாக சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும் கூறுவது சரியன்று. மு.கு.நூல், ப.126, 96.

18. கர்த்தரீயிலிருப்பதாக எழுதியுள்ளார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96.

19. கே.வி.சௌந்தரராஜன் பனையோலைக் குண்டலங்கள் என்கிறார். மு.கு.நூல், ப.96; சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும் பெருத்த குண்டலங்கள் என்கின்றனர். மு.கு.நூல், ப.126.

20. SII 14:98.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.