http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > ஆலாபனை
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
லலிதாராம்
சில மாதங்களுக்கு முன்னால் டி.ஜே.எஸ் ஜார்ஜ் எழுதிய எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியைப் பற்றிய புத்தகம் வெளிவந்தது. அதற்கு முன்னால் வாந்த எம்.எஸ்-ஐப்பற்றிய இரு புத்தகங்கள் எல்லாம் ஆதி முதல் அந்தம் வரை அவரது புகழை ஓதும் புத்தகங்களாகவே அமைந்திருந்த்தால், இதுவும் அது போல் ஒன்று என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். பின்பு, ஹிந்துவிலும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வந்த விமர்சனங்களைப் படிக்கையில், எம்.எஸ்-இன் வாழ்க்கையை பாரபட்சமின்றி அலசும் ஒரு புத்தகம் என்ற எண்ணம் தோன்றியது. அங்குதான் வந்தது வினை.

ஜார்ஜின் எழுத்துநடை சுவாரசியம் குன்றாமல் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், சுவாரசியமே பிரதானமாய் கருதப்பட்டு பல உண்மைகள் திரித்தெழுதப்பட்டுள்ளது தெளிவாகிறது. பல இடங்களில் சாமர்த்தியமாய் மழுப்பும் ஜார்ஜ், சில இடங்களில் தவறான கருத்துகளுக்கு வலு சேர்க்கிறேன் என்ற பேரில் உளரிக் கொட்டவும் செய்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் அபத்தங்களையெல்லாம் பட்டியிலிட்டு விளக்கினால், அந்த புத்தகத்தைப் போல இன்னொரு 300 பக்க புத்தகம் போட வேண்டியிருக்கும். ஆதலால், அந்த அபத்தங்களில் அதி அபத்தமாய் இருக்கும் சிலவற்றை மட்டும் அம்பலத்துக்குக் கொண்டு வருகிறேன்.

"western observers said, Madras brahmins had preserved their identity more fanatically than their brothers in the north". "A situation rapidly developed where non-tamil musicians had problems getting the all important nods of approval from Mylapore"

விந்திய மலைக்கும் தெற்கிலிருப்பவனெல்லாம் 'மதராஸி' என்று இன்றுகூட வட இந்தியாவில் கருதுகிறார்கள். இப்படியிருக்கையில், ஒரு மேற்கத்தியன், 'மதராஸ் பிரெஸிடென்சி' இருந்த காலத்தில், நாமம் போட்ட ஐயங்காரையும், கேரளத்து நம்பூதிரியையும், ஆந்திரத்து அந்தணனையும், கன்னடத்து பிராமணனையும் சரியாக வேறு படுத்திப் பார்த்தி, தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக மையிலாப்பூர் வாழ் பிராமணன் மட்டும் 'fanatic identity holder' என்று கூறியிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த மேற்கத்தியன் கூறியதை முழுமையாகப் பார்த்தால், "brother in the north" என்று அவன் கூறியிருப்பதிலிருந்து அவன் ஒட்டுமொத்த தென்னிந்தியாவைக் கூறியிருக்கிறான் என்று விளங்கிவிடும். ஆகையால், தமிழன் மற்ற மாநிலத்து இசைக்கலைஞர்களை சரியாக நடத்தவில்லை என்ற வாதம் அப்பட்டமான பொய் என்று தெளிவாகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள இரு வரிகளின் தொடர்ச்சியாய், துவாரம் வெங்கடசாமி நாயுடு மற்றும் சௌடையா என்ற இரு உன்னத வயலின் கலைஞர்கள் புறக்கணிக்கபட்டதாய் புரளிவிட்டுருக்கிறார் ஜார்ஜ்.

ஆந்திராவில் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த துவாரத்தின் இசையை உலகெங்கும் பரப்பி, யெஹுதி மெனுஹினை கவரும் அளவுக்கு தூக்கிச் சென்றது தமிழ்நாடு. 1927-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் ஆண்டு விழாவை ஒட்டிய இசை மாநாட்டில் துவாரம் வாசித்தபின் அவரது புகழ் உச்சாணிக்கொம்பை அடைந்த்து. அந்த சமயத்தில், ஆந்திராவில் ஒரு இசைக்கலைஞர் துவாரத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். "நாயுடு வில்லை சரியாகப் போட அறியாதவர்" என்றெல்லாம் துண்டு பிரசுரம் அடித்தார். இதனால் மனம் நொந்த துவாரத்தைத் தேற்றியவர் சென்னையில் பெரும் இசைவல்லுனராகவும் விமர்சகராகவும் விளங்கிய "C.R.ஸ்ர்நிவாச ஐயங்கார்". தேற்றியதோடு நிற்காமல், சென்னையில் துவாரத்தின் கச்சேரியை ஏற்பாடு செய்து பல ரசிகர்கள், இசைப்பண்டிதர்கள், விமர்சகர்களையெல்லாம் திரட்டி, துவாரத்தின் புகழை நிலைநாட்டினார்.

விஜயநகர் கல்லூரியில் பேராசிரியராக இருந்த துவாரத்தை தமிழ்நாட்டிற்கு வருமாறு பல அழைப்புகள் வந்தன. எதற்கும் மசியாத துவாரத்தை எப்படியாவது வரவழைக்க தமிழ் ரசிகர்கள் சேர்ந்து ருபாய் முப்பத்தியையாயிரம் திரட்டி, திருவல்லிக்கேணியில் 'துவாரம் இல்லம்' அமைத்துக் கொடுத்து அவரை 1954-இல் குடியேற வைத்தார்கள். அந்த இல்லம் இன்றும் துவாரத்தின் சந்ததியினர் வாழும் இடமாக உள்ளது.

கர்நாடக சங்கீதத்தின் ஆஸ்கர் என்று 'சங்கீத கலாநிதி' விருதைக் கூறலாம். கர்நாடக இசையின் ராஜா என்று கூறப்படும் அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு இவ்விருது அவரது 48-ஆவது வயதில் கிடைத்தது. துவாரத்துக்கும், அவரது 48-ஆவது வயதில் இவ்விருது கிடைத்தது. இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, துவாரத்துக்கு என்ன அநியாயம் நிகழ்ந்து விட்டதென்று புரியவில்லை.

மைசூர் சௌடையா, ஒரு கச்சேரியில், "நான் சாதித்ததற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு" என்று பேசியிருக்கிறார். அந்த ஒலிப்பதிவு இன்றும் நம்மிடையில் இருக்கிறது. செம்பை வைத்தியநாத பாகவதர் பாலக்காட்டில் பிறந்த semi-tamil என்பதால்தான் தமிழகம் ஒப்புக்கொண்டது என்ற ஜார்ஜின் கூற்றை அப்பட்டமான பொய் என்று துவாரத்துக்கு எழுதினாற்போல் ஒரு வியாக்கியானம் எழுதமுடியும்.

எம்.எஸ்-இன் தாயார், சண்முகவடிவைப் பற்றிச் சொல்லும்பொழுது, "Her playing was often off-key because of her general weakness". இவர் கூறும் weakness சங்கீத சம்பந்தமாக இருந்தாலன்றி அவரின் வீணை வாசிப்பு off-key-யாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்த weakness உடல் சம்பந்தமானது என்று ஜார்ஜே கூறுகிறார். MS, ஒரு நேர்காணலில், அவரது வீட்டிற்கு பல வீணை கலைஞர்கள் வந்து வாசித்து, சண்முகவடிவின் தலையசைப்பைக் கூட பெரிதாக கருதினர் என்று கூறியுள்ளார். காரைக்குடி சாம்பசிவ ஐயரும், அரியக்குடி ராமானுஜ ஐயங்காரும் சண்முகவடிவின் வீட்டில் பல சங்கீத சம்பந்தமான சம்பாஷணைகள் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றால், சண்முகவடிவு 'off-key'-இல் வாசித்திருப்பாரா என்பது பெரிய கேள்விக்குறியாகிறது.

ஜார்ஜ், சார்பில்லாத முறையில் உண்மையை மட்டும் கூறியிருக்கிறாரா அல்லது, பல வதந்திகளைக் கிளப்பி அதில் குளிர்காய நினைத்திருக்கிறாரா என்பது அவர் எம்.எஸ்-இன் தந்தையைப் பற்றி சொல்லியிருப்பதை மட்டும் படித்தால் தெளிவாகிவிடும்.

"Published data of MS mentions Subramanya iyer as her father"

"Almost anyone with interest in music in madurai, would point out, Madurai Pushpavanam was MS's father"

"There was nothing more than hearsay to link pushpavanam with Shanmughavadivu. For that matter, there was only hearsay about Subramanya iyer too."

"MS herself had gone on record to as saying that Subramania iyer was her father. There the matter should rest and gracefully at that"

மேலிருக்கும் 4 வாக்கியங்களை அடுத்தடுத்தாற்போல் இரு பக்கத்துக்குள் தருகிறார் ஜார்ஜ். ஒருவரைப் பற்றி எழுதும்பொழுது, எது உண்மை என்று ஆராய்ந்து, உண்மையை மட்டும் கொடுப்பது தர்மமாகும். பொழுது போகாமல் பழைய மஞ்சள் பத்திரிகைகளில் படித்த வதந்திகளையெல்லாம் கொடுத்திருப்பது அதி அபத்தம். சுப்ரமண்ய ஐயர்தான் தன் தந்தை என்று எம்.எஸ்-ஏ கூறியுள்ளதாகக் கூறிவிட்டு, அதையே "hearsay" என்று சொல்லும் ஜார்ஜின் புத்திசாலித்தனத்தை எண்ணி எண்ணி வியக்கிறேன். "there the matter should rest" என்று படிப்பவருக்குக் கூறும் ஜார்ஜ், அதைத் தானும் உணர்ந்திருந்தால், வெறும் வதந்தியான "மதுரை புஷ்பவனம்" விவகாரத்தை எழுதியிருக்க வேண்டியதன் அவசியம் என்ன. கொஞ்சம் கூட உண்மையில்லை என்பது தெளிவான பின்னும் வதந்திகளைத் தொகுத்திருப்பது, தந்திரமாய் அவதூறை வாறி இறைக்கும் கேவலமான முயற்சியாகவே எனக்குப்படுகிறது.

அதே போல, சதாசிவம் எப்படியெல்லாம் சகுந்தலை படத்தில், ஜி.என்.பி-இன் பாத்திரத்தைக் குலைத்தார் என்று பரவியிருந்த வதந்திகளை எல்லாம் அடுக்கி, அவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல வேண்டியதன் அவசியமென்ன? வெறும் வாயை மென்று கொண்டு அவல் கிடைக்குமா என்று ஏங்குபவருக்கு தோதாக எழுதினால் புத்தகம் நிறைய விற்கும் என்ற எண்ணத்தில் எழுதியிருப்பாரோ என்னமோ! ஆண்டுவனுக்கே வெளிச்சம்.

GNB-க்கு எம்.எஸ் எழுதிய கடிதங்களைப் பற்றி ஜார்ஜ் குறிப்பிட்டிருப்பது சற்றே சலசலப்பை மக்களிடையில் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பிரபலமானவரைப் பற்றி எழுதும் பொழுது, அவரது வாழ்வின் அனைத்து பரிமாணத்தைப் பற்றியும் எழுத வேண்டியதுதான் தர்மம். உண்மை என்னும் பட்சத்தில், அக்கடிதங்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், எழுதப்பட்ட விதம் உண்மையைக் கூறும் விதமாக இல்லாமல் சர்ச்சையைக் கிளப்பும் விதமாக அமைந்திருப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும். சகுந்தலை படத்தைப் பற்றி எழுதும்பொழுதே, தெள்ளத் தெளிவாய் எம்.எஸ்-ஜி.என்.பி உறவைப் பற்றி பிரஸ்தாபித்திருக்கும் ஜார்ஜ். சம்பந்தமில்லாத இடங்களிலும், அவசியமில்லாத இடங்களிலும் ஜி.என்.பி-யின் பெயரை அடிக்கடி குறிப்பிட்டு, படிப்பவருக்கு மீண்டும் மீண்டும் நினைவுறுத்த முற்பட்டிருக்கிறார்.

உதாரணமாக, எம்.எஸ்-இன் புகழ் தேசிய அளவில் எப்படிப் பரவியிருந்தது என்று விவரிக்கையில், எம்.எஸ், படே குலாம் அலிகானின் இசையை பெரிதும் ரசித்தார் என்று கூறிவிட்டு, அதன் தொடர்ச்சியாய், "GNB, interestingly enough, shared MS's admiration for Bade Ghulam ali Khan" என்ற கொசுறு செய்தியும் தருகிறார். மேலிருக்கும் வாக்கியத்தில் "interestingly enough" என்ற சொற்றொடரை மட்டும் பாருங்கள். "the cat is out of the bag" என்று தெளிவாய் தெரியும். சொல்ல வேண்டியதையெல்லாம் 279 பக்கத்தில் சொல்லிவிட்டு, எம்.எஸ் வாங்கிய விருதுகளைத் தொகுத்து ஒரு உபாங்கம் கொடுக்காமல், எம்.எஸ் கொடுத்த நன்கொடைகளுக்கு ஒரு உபாங்கம் கொடுக்காமல், எம்.எஸ் எழுதிய கடிதங்களுக்கு மட்டும் ஒரு உபாங்கம் கொடுத்திருக்கிறார். முன்னால் சொல்லியிருப்பதைத் தாண்டி ஒன்றும் புதிதாக சொல்லாத பட்சத்தில், தனியாக ஒரு உபாங்கம் எழுதியிருப்பது எதற்காக இருக்கும் என்று ஊகிப்பது அத்தனைக் கடினமல்ல.

MS-ஐப் பற்றிய புத்தகத்தில் சதாசிவத்தின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதியிருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? சமயத்தில், இது எம்.எஸ்-ஐப் பற்றிய புத்தகமா அல்லது சதாசிவத்தின் வாழ்க்கை வரலாறா என்று சந்தேகம் வருமளவிற்கு நீட்டி முழக்கியுள்ளார் ஜார்ஜ். சதாசிவம் சாப்பிட்ட காப்பியைப் பற்றி கவலைப்பட்ட ஜார்ஜ், MS பாடிய காபி ராகத்தை கொஞ்சம் காதில் வாங்கியிருந்தால் புத்தகம் எத்தனையோ நன்றாக இருந்திருக்கும்.

நாம் ஒரு காரியத்தை செய்கிறோம். அதன் பலனாய், ஏதோ ஒன்று நிகழ்கிறது. பல காலம் சென்ற பின் யாரோ ஒருவர் உங்களிடம் வந்து நீங்கள் இப்படி ஒரு பலன் வருமென்று கருதிதான் அந்த காரியத்தை செய்தீர்கள் என்று கூறினால் எப்படியிருக்கும்? அதைப்போலத்தான், மீரா படம் எம்.எஸ்-ஐ தேசிய அளவில் புகழுறச் செய்தது. அதனால், தேசிய அளவில் புகழ் வருமென்ற எண்ணத்தில்தான் எம்.எஸ் அந்த படத்தில் நடித்தார் என்று கூறும் ஜார்ஜின் வாதம் நகைப்புக்குரியது. 'iyerization of MS', 'aryanization of MS ' என்றெல்லாம் ஜார்ஜ் கூறி, MS சுப்ரபாதமும் சஹஸ்ரநாமமும் ரெக்கார்ட் செய்தது தன் பின்புலத்தை மறைக்கத்தான் என்ற கருத்துக்கள் தொனிக்கும் வகையில் சாமர்த்தியமாய் வாழைப்பழத்தில் ஊசியேற்றி இருக்கிறார் ஜார்ஜ்.

இக்கட்டுரையின் தலைப்பை "டி.ஜே.எஸ் ஜார்ஜும் சோமாஸ்கந்தரும்" என்று வைத்திருந்தால், சோமாஸ்கந்தர் எங்கிருந்து முளைத்தார் என்று எப்படி வியப்பளிக்குமோ அதே போல், "MS A life in music" என்ற தலைப்பில் இருக்கும் புத்தகத்தில் "personal life" இருக்கும் அளவில் ஒரு துளிகூட அவரது music-ஐப் பற்றியில்லை. காம்போஜி, சங்கராபரணம், பந்துவராளி, கேதாரகௌளை போன்ற ராகங்களில் காந்தாரத்தில் நின்று கொண்டு நீளமான பல கார்வைகள் கொடுத்து. கொஞ்சம் கொஞ்சமாய் ப்ருகாக்களைப் பெருக்கி, ராகத்தின் பல இடங்களில் மின்னல் வேகத்தில் சஞ்சாரம் செய்து, கேட்பவர் மனதில் விறுவிறுப்பை வளர்த்து மத்யமத்தைத் தொட்டு, உச்சகட்டத்தை அடையும் பொழுது மகுடம் வைத்தது போல பஞ்சமத்தை தொடும் "MS-special" ஆலாபனையைப் பற்றி மூச்சுவிடக்காணும். எம்.எஸ் தனது கச்சேரியில் பக்திக்கு பிரதானம் அளித்தார், சிரமமான சமாச்சாரத்திலெல்லாம் அதிகம் ஈடுபட்டுக்கொள்ளவில்லை, என்ற எண்ணம் பரவலான ஒன்று. இந்த கருத்து அண்மையில் தோன்றியதே அன்றி, தனது இளம் வயதில் கம்பி மேல் நடப்பதற்குச் சமானமான 'ராகம் தானம் பல்லவியை', அன்றைய நாளில் பல்லவிக்கு பிரபலமாக இல்லாத, கேதாரகௌளை, ஹேமவதி, தர்மவதி, மாயாமாளவகௌளை போன்ற ராகங்களில் எல்லாம் பாடினார் என்ற தகவலுக்கெல்லாம் புத்தகத்தின் ஒரு மூலையில் கூட இடமில்லை. "MS blue" "MS Pallu" பற்றியெல்லாம் குறிப்பிட்டவர், MS தனக்கேவுரியதாக ஆக்கிக் கொண்ட பாடல்களைப் பற்றி எங்கேணும் சொல்லுவாரோ என்று தேடினால் ஏமாற்றமே மிஞ்சும்.

MS-இன் இசை முக்கியமா அல்லது எம்.எஸ்-இன் துணைவரின் முதல் மனைவியின் பெயரைத் தவறாக யாரோ குறிப்பிட்டதைப் பற்றி எழுதுவது முக்கியமா? எம்.எஸ் பாடிய சரித்திரப் புகழ் வாய்ந்த "கைலாசபதே பசுபதே உமாபதே நமோஸ்துதே" என்ற பேகடா ராகப் பல்லவியைப் பற்றி எழுதினால் சுவாரஸ்யமாக இருக்குமா அல்லது அபிதகுசலாம்பாள் எப்படி மறைந்தார் என்று பரவியிருந்த வதந்திகளைப் பற்றி எழுதினால் அதிகம் கவிர்ச்சியாக இருக்குமா?

எத்தனையோ புத்தகங்கள் இருக்க, தனக்குத் தேவையான கருத்தைக் கூறும் புத்தகத்தை மட்டும் படிப்பதில், ஜார்ஜ் வல்லவராகத் தெரிகிறார். உதாரணமாக, "hinduism, a religion to live by" என்ற புத்தகத்திலிருந்து "To be arya was to be noble and honourable and to be anarya was to be base and dishonourable" என்று குறிப்பெடுத்துக் கூறுகிறார். இப்படிப்பட்ட ஒரு கருத்தைக் கூறும் புத்தகமா ஹிந்து மதத்தைப் பற்றி சரியான பார்வையைப் படிப்பவனுக்கு அளிக்கும்?

மார்ச் 21-ஆம் தேது கன்னிமரா ஹோட்டலில் மெட்ராஸ் புக் கிளப் ஏற்பாடு செய்த உரையாடலில், "இப்புத்தகம் எம்.எஸ்-இன் சம்மதத்துடன் வெளிவந்ததா?" என்று பலர் கேட்டனர். அதற்கு, அப்படி எல்லாம் அனுமதி வாங்கி எழுதினால் அது தனது எழுத்தில் உள்ள 'credibility' குறையும் வகையில் அமைந்துவிடும் என்றார் ஜார்ஜ். credibility மேல் இத்தனை அக்கறை கொண்ட ஜார்ஜ், சொல்லும் விஷயங்களில் உண்மைக்குப் புறம்பானதைக் கூறும் பொழுதும் அது அவருடைய எழுத்தின் மேல் இருக்கும் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று உணராமல் இருப்பது விந்தையிலும் விந்தை.

இத்தனை குப்பைகள் கொண்ட புத்தகத்தைப் பற்றி ஏன் வேலை மெனக்கெட்டு எழுதவேண்டும் என்ற கேள்வி எழலாம். இந்தியாவின் ஓர் உன்னதக் கலைஞரின் வரலாறு 50 ஆண்டுகள் கழித்து டி.ஜே.எஸ் ஜார்ஜ் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் குறிப்பிட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இதை எழுதுகிறேன். எம்.எஸ்-இன் இசையைப் பற்றி ஜார்ஜ் கூறியிருப்பின் அதற்கு எந்த எதிர்வாதமும் தேவையில்லை. அவரது வாழ்க்கையைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த கர்நாடக இசை வரலாற்றினைப் பற்றியும் பதிவுகள் அபூர்வமானதால், தவறான செய்திகளே உண்மை என்று ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.