http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 3

இதழ் 3
[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தலையங்கம்
மத்தவிலாச அங்கதம் - 1
வாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...
கதை 2 - காரி நங்கை
வாருணிக்குக் கலைக்கோவன்
என்றைக்கு விழிப்பது?
கட்டடக்கலை ஆய்வு - 3
கல்வெட்டாய்வு - 2
வல்லமை தாராயோ?
கருங்கல்லில் ஒரு காவியம் - 3
சங்கச்சாரல் - 3
கோச்செங்கணான் யார் - 1
இதழ் எண். 3 > கலையும் ஆய்வும்
கல்வெட்டாய்வு - 2
மா. இலாவண்யா
கல்வெட்டுகள் பல தமிழ் மொழியிலேயே இருப்பதையும், அவை எவ்வளவோ சுவையான தகவல்களை தருகின்றன என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதே போல் தமிழ் தான் என்றாலும் காலத்திற்கேற்ப எழுத்து வடிவங்கள் மாற்றம் கண்டன என்பதையும் தெரிந்து கொண்டோம். நீங்கள் உங்கள் வீட்டருகே உள்ள கோயிலில் கல்வெட்டு படிக்க முயன்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். அருகில் கோயில் இல்லாத நிலையில் சென்ற வாரம் இங்கு கொடுக்கப்பட்ட கல்வெட்டு புகைப்படங்களில் இருந்த சொற்களை படிக்க முயன்றிருப்பீர்கள். அந்தச் சொற்கள் இவை தான்.

1. கோவிராஜகேஸரிவந்மற்கு யாண்டு
2. கோப்பரகேசரிபர்மர்க்கு யாண்டு அஞ்சாவது
3. இரவும்பகல்லும் ஒரு னொந்தா விளக்கு
4. நிலத்துக்கு வடக்கும்

முதன் முதலில் கல்வெட்டு படிக்க முயலும் போது ஆங்காங்கே எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தாலும் அவற்றை கோர்வையான சொற்றொடர்களாக்கி படிக்க சற்று கடினமாகவே இருக்கும்; என்றாலும் முயன்றால் முடியாததும் உண்டோ? கல்வெட்டுகளில் பொதுவாக இருசொற்களுக்குக்கிடையில் இடம் விடப்படாமல் தொடர்ச்சியாகவும், மெய்யெழுத்துக்கள் புள்ளியின்றி க ச என்றும் கொடுக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து படிக்க சொற்கள் சற்று சுலபமாக பிடிபடுவது உங்களுக்கே விளங்கும்.

கல்வெட்டு படிப்பது இன்னுமொரு காரணத்தினாலும் கடினமானதாகும். அது என்னவென்றால் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கற்கள் பொரிந்து கல்வெட்டு எழுத்துகள் ஆங்காங்கு சிதைந்திருக்கும். (அது கூட பரவாயில்லை, கொடுமை என்னவென்றால் பல இடங்களில் கல்வெட்டின் அருமை தெரியாமல், கோயில் திருப்பணி என்ற பெயரிலோ, வேண்டுமென்றேவோ கல்வெட்டுகளை உடைத்து, அல்லது மேலே சிமிண்ட் பூசி மறைத்து எப்படியோ, கல்வெட்டு இருந்த தடயம் இல்லாமல் செய்துவிடுவார்கள்). சில இடங்களில் கல்வெட்டுகள் முழுமையாய் இல்லாமல் துணுக்குகளாய் இருக்கும். நாம் படிக்கும் பொழுது சிதைந்த இடங்களை விடுத்து மற்ற இடங்களை படிக்க முயலவேண்டும். அதிலிருந்தும் செய்திகள் பிடிபடலாமல்லவா.

பிற்காலத்தில் அதாவது ஏறக்குறைய பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வெட்டப்பட்ட கல்வெட்டுகள் படிப்பதற்கு சுலபமானவை. ஏனென்றால் அதற்குப் பிறகு தமிழ் எழுத்துகள் அவ்வளவாக மாற்றமடையவில்லை. கல்வெட்டு எவ்வளவுக்கெவ்வளவு பழைமையானதோ அவ்வளவுக்கவ்வளவு படிப்பதற்கு கடினமானது. இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. அதாவது கல்வெட்டுகளின் காலத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது?

அநேகமான கல்வெட்டுகளில், அக்கல்வெட்டு வெட்டப்பட்ட சமயத்தில் ஆட்சியிலிருந்த மன்னரின் பெயரும் ஆட்சியாண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த மன்னர் எக்காலத்தில் இருந்தார் என கல்வெட்டு குறிப்பிடாது. அதை ஒரு நல்ல சரித்திர புத்தகங்களில் படித்து தெரிந்துகொள்ளலாம். சில மன்னர்களை பெயர் கொண்டு குறிக்காமல் அவர் செய்த ஒரு தீர செயலை வைத்துக் குறிப்பிடுவர். உதாரணமாக 'ஸ்வஸ்திஸ்ர் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரிபன்மர்க்கு யாண்டு' என்று கல்வெட்டு தொடக்கம் இருந்தால் அதை ஆதித்த கரிகாலன் காலத்து கல்வெட்டு என்று அறியலாம். மன்னரைப் பற்றி கல்வெட்டில் குறிப்பெதுவும் இல்லாத நிலையில் நான் முந்தைய பத்திகளில் குறிப்பிட்டுள்ள படி தமிழ் எழுத்துகளின் அமைப்பை கொண்டு கல்வெட்டுக் காலத்தை தோராயமாக யூகித்தறியலாம்.

மன்னரின் பெயர் கல்வெட்டில் இருந்தாலும், அதே பெயரில் பல மன்னர்கள் வெவ்வேறு கால்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்களை வரலாற்று புத்தகங்கள் குறிப்பிடும் பொழுது பெயருக்குப் முன்னாலோ பின்னாலோ 1, 2 என்று எண்களை சேர்த்து குறிப்பிடுவார்கள். உதாரணமாக முதலாம் இராஜராஜன் (Rajaraja I), இரண்டாம் இராஜராஜன் (Rajaraja II) என்று குறிப்பிடுவார்கள். ஆனால் கல்வெட்டில் இராஜராஜன் என்று தான் இருக்கும். இப்பொழுது கல்வெட்டுக் காலத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது. இச்சிக்கலுக்கு விடையளிக்கிறது - மெய்கீர்த்தி.

கீர்த்தி - புகழ். மெய்கீர்த்தி என்பது கல்வெட்டு தொடங்குமுன் அந்த மன்னனின் புகழை, அவன் அடைந்த செல்வங்களை, அவனின் போர் வெற்றிகளை எடுத்துரைப்பது. கீழே கொடுக்கப்பட்டுள்ளவை முதலாம் இராஜராஜன், இரண்டாம் இராசாதிராசனின் மெய்கீர்த்திகள்.

முதலாம் இராஜராஜன் மெய்கீர்த்தி

" ஸ்வஸ்திஸ்ர் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ர்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ர்ராஜராஜ தேவர் "

இரண்டாம் இராஜாதிராஜன் மெய்கீர்த்தி

" ஸ்வஸ்திஸ்ர் கடல் சூழ்ந்த பார் மாதரும் பூ மாதருங் கலை மாதரும் கடல் சூழ்ந்த போர் மாதரும் சீர் மாதரும் அமர்ந்து வாழ நாற்கடல் சூழ் புவியேழும் பாற்கடல் பொற் புகழ் பரப்ப ஆதி யுகமாமென்னச் சோதி முடி புணைந்தருளி அறு சமயமு மைம் பூதமும் நெறி நின்று பாலிப்ப தெந்நவருஞ் சேரலருஞ் சிங்களரு முதலாய மன்னவர்கள் திறை சூழ்ந்துவந் திண்டிச் சேவிப்ப ஊழியூழி யொரு செங்கோ லேழு பாரு மினிதளிப்பச் செம்பொன் வீர ஸிங்ஙாஸநத்து உலகுடை முக்கோக்கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய கோவி ராஜகேஸரிபந்மரான த்ரிபுவந சக்ரவத்திகள் ஸ்ர் ராஜாதிராஜ தேவர்"


மெய்கீர்த்தி அம்மன்னனின் ஆட்சியண்டிற்கேற்ப மாறுபடும். அவன் போர்களில் வெற்றிபெற அடுத்து வரும் கல்வெட்டுகளில் அச்செய்தி இடம்பெறும். பொதுவாக கல்வெட்டுகளிலேயே மன்னனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் குறிக்கப்படவில்லை என்றாலோ, கல்வெட்டில் ஆட்சியாண்டை குறிப்பிடும் பகுதி சிதைந்திருந்தாலோ, மெய்கீர்த்தி கொண்டு ஏறக்குறைய அக்கல்வெட்டின் காலத்தை அறியலாம்.

மெய்கீர்த்தி எழுதும் வழக்கம், சோழ மன்னர்களில் முதலாம் இராஜராஜன் காலத்திலிருந்து தான் தொடங்குகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ளது, முதலாம் இராஜராஜன் தஞ்சை ராஜராஜீசுவரத்தை எடுப்பித்ததைக் கூறும் கல்வெட்டு, அவரின் மெய்கீர்த்தியுடன். இக்கல்வெட்டில் பாதியாவது மேலே குறிப்பிட்டுள்ள இராஜராஜனின் மெய்கீர்த்தி கொண்டு படித்துவிடலாம். முயன்று பாருங்களேன்.

இராஜராஜன் மெய்கீர்த்தி


ஒருமுறை நண்பர்கள் சிலர் சேர்ந்து விளாப்பாக்கம் என்னுமிடத்தில் குன்றின் மேலுள்ள பாறைச் சிற்பச் செதுக்கல்களைக் காணச்சென்றோம். அந்த இடம் இப்பொழுது ஒரு தர்காவாக மாறியுள்ளது. அங்கே ஒரு பாறையில் ஒரு மனிதனின் உருவமும், ஒரு நாயின் உருவமும் செதுக்கப்பட்டிருந்தது. அதற்குக் கீழே ஏதோ எழுத்துகள் செதுக்கியிருக்க, படிக்கலாம் என்று அருகில் சென்றவுடன், தர்காவை சுத்தம் செய்து பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்மணி "அம்மா அம்மா அதை படிக்காதீங்க" என்று தடை செய்தார். ஏன் என்று கேட்க அவர் "அது ஒரு மந்திரம். அதை படிச்சிட்டா அந்த மனுஷன் மனுஷனாயிடுவான், நாய் நாயாயிடும்" என்றாரே பார்க்கலாம். வந்த சிரிப்பை அடக்கிவிட்டு, ஒன்றிரண்டு வரிகள் படித்தோம். அவர் குறிப்பிட்டபடி மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை. அது முதலாம் இராஜராஜன் காலத்திய கல்வெட்டு தான். அதை அவரிடம் எடுத்துச்சொன்னோம். என்ன சொன்னாலும் அந்த அம்மையார் கேட்பதாக இல்லை. அவ்வளவு நம்பிக்கை. என்ன செய்வது இப்படி அறியாதவர்களிடம் புரளிகிளப்பிவிடவென்று சிலர் இருக்கிறார்களே.

(தொடரும்)

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.