http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 3
இதழ் 3 [ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டுக் கதைகள்
முற்றத்திலிருந்து நூற்றியோராவது தடவையாக தனது தமக்கை காரிநங்கை வாயிலுக்குச் சென்று தெருவை நோட்டம் விட்டுவிட்டு வந்ததை கவனித்துக் கொண்டார் உறையூர் நாட்டுக் கிழவர் மாறன் நக்கன். ஹூம் ! என்றதொரு பெருமூச்சு அவரிடமிருந்து கிளம்பியது.
காரிக்கோ உடலெல்லாம் பரபரப்பு. இந்தப் பகுதியிலேயே பெரிய வாத்தியக்காரனாக பார்த்து வைபவத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று முடிவுசெய்து தஞ்சையிலிருந்து பிரம்ம விடங்க வாத்திய மாராயன் குழுவினரை ஏற்பாடு செய்தாயிற்று. மாராயன் கோஷ்டியார் சென்ற நாளிரவே வயலூரை அடைந்திருக்கவேண்டும்! இந்த நொடிவரை அவர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடிவர ஆள் அனுப்பி அந்த ஆளையும் நீண்ட நேரமாகக் காணாததால் அந்த ஆளைத் தேடுவதற்கும் வேறொரு ஆளை அனுப்பியாயிற்று. இனி என்னதான் செய்வதென்று தெரியவில்லை. ஒழுங்காக நமது ஊர் நாயனக்கார கோஷ்டிக்கே சொல்லிவிட்டிருக்கலாம் போலிருக்கிறதே ! பெரிய கையாக வரவழைக்கப்போய் இப்போது தேவையில்லாத பரபரப்பு.. திண்ணையில் அமர்ந்து சாவகாசமாக வெற்றிலை தின்றுகொண்டிருக்கும் பெரிய தமையனார் கிழவரைப் பார்த்துக் கோபம் கோபமாக வந்தது. கொஞ்சமாவது பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாரா மனிதர் ? நேற்று வந்திறங்கியதிலிருந்து ஏதோ ஊரான் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்திருப்பது போலல்லவா பட்டும் படாமல் இருக்கிறார் ? தனது ஒரே தமக்கையின் மகள் கல்யாணம் - இதனைப் பாவம் அவள் ஒண்டியாக எப்படிச் சமாளிப்பாள் என்று எண்ணமெல்லாம் வரவே வராதா இவருக்கு ? இளைய தமையனார் மாறன் கண்டன் இவருக்கு எத்தனையோ மேல் ! ஹூம் - அவரால் இன்று இரவுதான் வயலூருக்கு வந்து சேர முடியுமாம் - மதியம் தகவல் வந்தது. சேடிப்பெண் வைத்துவிட்டுப்போன இஞ்சிக் கஷாயத்தைக் குடித்ததில் தொண்டை சற்று இதமடைந்ததுபோல் தெரிகிறது. கடந்த ஒருவாரமாக கல்யாண வேலையாய் அங்குமிங்கும் அலைந்து வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்ததில் தொண்டைப்புண்ணே வந்துவிட்டது ! ஒரு நடை கிழக்கால் அறைக்குள் சென்று மகளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினாள் காரி. நல்லவேளை - மதியம் வரை இங்கு நின்றுகொண்டு வம்பளந்துகொண்டிருந்த அரமைந்தன் பெண்சாதி ஊரன்சோலை ஒரு வழியாக கிளம்பிவிட்டாள். அவள் இருந்தாலே நமக்கு வேலை ஓட மாட்டேன் என்கிறது - சளசளவென்று ஒரே பேச்சு ! அதோ கிழக்கால் அறைக்குள் வந்துவிட்டது. கதவை அதிக சப்தம் செய்யாமல் திறந்தாள் காரி. உள்ளே அவளுடைய ஒரே மகள் உமா ! மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போனாள் அந்த அன்னை - கண்ணோரம் நீர் திரண்டு விட்டது... "அடிக் கண்ணே ! நாளை இன்னேரம் கல்யாணம் முடிந்து உன்னை புருஷன் வீட்டிற்கு அனுப்பி விட்டிருப்பேனடி ! உன்னைப் பிரிந்து இனி எப்படி இருக்கப்போகிறேனோ..." காரி எல்லாவற்றையும் யோசித்துத்தான் உள்ளுரிலேயே மாப்பிள்ளை பார்த்தாள். அவளுக்கு வெளியூரில் பெண்ணைக் கொடுப்பதில் இஷ்டமில்லை. மாப்பிள்ளை வயலூரானான மகாதேவன். சொத்து பத்துக்குக் குறைவில்லை. மேலும் மாப்பிள்ளைக்கு தாய் தந்தையர் கிடையாதாகையால் உமா கொடுமை புரியும் மாமியாரிடம் அகப்பட்டுக்கொண்டு சிரமப்படுவாளோ என்று அஞ்சவேண்டியதில்லை. புழக்கடைப் பக்கம் சென்று உக்கிராணத்து வேலைகள் எப்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று பார்க்க வேண்டும்... இல்லையேல் கறியமுதுக்கு பதில் வேறு ஏதாவது பதார்த்தம் உருப்பெற்று விடும் ! தானாக வேலைகளை முன்னின்று கண்காணித்தாலொழிய அந்தந்த வேலைகள் சரிவர நடைபெறுவதில்லை என்பது காரியின் திண்ணமான எண்ணம். நல்லவேளை - கோயிலிலேயே திருமணத்தை வைத்துக்கொண்டது நல்லதாகப் போயிற்று - இல்லையேல் நாளை திரளப்போகும் கூட்டத்தை சமாளிக்க முடியாது ! வாயிலில் அரவம் கேட்கவே காரி அங்கு விரைந்தாள். வந்திருந்தது அவளுடைய இளைய தமையாரான உறையூர் நாட்டு வேளார் மாறன் கண்டனாரும் அவர்தம் குடும்பத்தாரும். அனைவரையும் முகமன் கூறி வரவேற்றாள் காரி. அதிகம் வாய்பேசாத தனது பெரிய தமையனைவிட இளைய தமையனாரைத்தான் காரிக்குப் பிடிக்கும். "மன்னிக்க வேண்டும் அம்மா - உறையூரில் சில அவசர வேலைகள் வந்து சேர்ந்துவிட்டன - அதனால்தான் காலையிலேயே வரமுடியவில்லை !" என்று தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட வேளார், தொடர்ந்து "திருமண ஏற்பாடுகளெல்லாம் ஊரெங்கும் தடபுடலாக இருக்கிறதே... ரொம்ப அருமையாக ஒற்றை மனுஷியாய் காரியம் செய்திருக்கிறாய் அம்மா !" என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்தார். காரிக்கு முகமெல்லாம் பல் ! " கோயில் ஏற்பாடுகளெல்லாம் நான் செய்யவில்லை அண்ணா - ஊர்ப் பெருங்குறி மகாசபையின் தலைவர் அழிஞ்சில் கண்டனார் அதைத்தாம் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டார். அவரும் அவருடைய மகள் கண்டன் சாத்தியும்தான் கோயில் வேலைகள் முழுவதையும் கவனித்துக் கொள்கிறார்கள் !" என்றாள் அடக்கமுடன். "வாத்திய கோஷ்டியார்தான் இன்னமும் வந்து சேரவில்லை அண்ணா - அதுதான் கவலையாக இருக்கிறது !" "தஞ்சை வாத்தியமாராயனை அல்லவா அழைத்திருப்பதாகச் சொன்னாய் ? கவலைப்படாதே நான் சென்று விசாரிக்கிறேன். ஆட்களை அழைத்துவர ஆள் அனுப்பியிருக்கிறாயல்லவா ?" "ஆஹா - அதெல்லாம் நேற்று காலையே அனுப்பியாயிற்று !" "சரி, அந்த விவகாரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் - நீ மீதி வேலைகளை கவனித்துக்கொள் !" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் வேளார். காரிக்கு மனிதில் சற்று நிம்மதி பிறந்தது. மாராயன் கோஷ்டியார் எங்கிருந்தாலும் வேளார் அவர்களைக் கண்டுபிடித்து வயலூருக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார் - மனிதர் லேசுப்பட்டவரல்ல ! மீண்டும் பின்கட்டுக்குச் செல்லும்முன் சாவகாசமாய் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டிருக்கும் பெரியவரைப் பார்வையாலேயே ஒரு வெட்டு வெட்டிவிட்டுத்தான் போனாள் காரி. ********* ************************************************************************************** காரியின் இல்லத்திலிருந்து வெளியே வந்த வேளார் நேராக வயலூர்க் கோயிலைக் குறிவைத்து நடந்தார். அவருக்கு தற்போது தஞ்சை அனுப்புவதற்கு நம்பிக்கையான குதிரையாட்கள் தேவை. அதனை ஊர்ச்சபைத் தலைவரிடம்தான் கேட்டுப் பெற்றாக வேண்டும். அவருக்கு எல்லா இடங்களிலுமே செல்வாக்கு சற்று அதிகம். அரசாங்க தனபண்டாரத்தில் உத்தியோகஸ்தர் - அரசருக்கே சற்று நெருக்கமானவர் என்பதால் மட்டும் வந்ததல்ல அது. இயல்பாகவே எல்லா ஊர் வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து "இவரிடம் போனால் காரியம் நடக்கும்" என்ற நம்பிக்கையை அந்தப் பகுதி மக்களிடம் விதைத்தவர் அவர். வழியெங்கும் மாவிலை மற்றும் தென்னங் குருத்துக்களால் வீதிகள் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டார் அவர். ஆங்காங்கே பந்தல்கள் பலவித மலர் அங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிலர் பந்தல்களின் நின்றுகொண்டு வருவோர் போவோருக்கு கருப்பட்டிச் சாறும் பானகமும் நீர்மோரும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். இருக்காதா பின்னே ? மாப்பிள்ளை வீட்டார் , பெண் வீட்டார் இருவருமே ஊர் மக்களுக்கு மிக மிக நெருக்கமானவர்கள். ஆக ஊரே தங்கள் வீட்டு வைபவம்போல் அந்தத் திருமணத்தை பாவித்து வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ததில் ஆச்சரியமில்லைதானே ? அஸ்தமன வேளை நெருங்கிவிட்டதால் வீட்டுப்பெண்கள் வாயிலில் சாணம் கரைத்துத் தெளித்து கோலங்களை வரைந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் மறு நாள் திருமணத்திற்குமாக சேர்த்து பெரிய வண்ணக் கோலங்களாக வரைந்து அதில் சாணக் குண்டுகளை ஆங்காங்கே வைத்து அவற்றுள் பரங்கிப் பூக்களைச் சொருகி அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். யாருடைய கோலம் பெரியது என்பதில் சில இளவயதுப் பெண்களிடையே போட்டியும் இருந்தது. இவற்றையெல்லாம் நிதானமாகப் பார்த்து இரசித்தபடி வயலூர்ப் பெருமானடிகள் திருக்கோயிலை அடைந்தார் மாறன் கண்டர். ஊர்ச்சபைத் தலைவர் அழிஞ்சில் கண்டனாரைப் பார்ப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை. கல்யாண மண்டபத்தருகே பூவலங்கார வேலைகளை நின்று நேரடியாக மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் அவர். "யாரது - உறையூர் நாட்டு வேளாரா ! வரவேண்டும் - வரவேண்டும் !" என்று முகமன் கூறி வரவேற்றார் தலைவர். "என்ன ஏற்பாடுகளெல்லாம் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறதாக்கும் !" "பின் இல்லாமலா ? இது நம் அனைவரின் வீட்டுத் திருமணமும் ஆயிற்றே ! திருக்கோயிலுக்கு வரும் வழியில் ஊர்மக்கள் ஏற்பாடுகளைப் பார்த்திருப்பீர்களே !" "ஆஹா ! நன்றாகப் பார்த்தேன் ! தோரணங்களென்ன பந்தல்களென்ன..." "அது மட்டுமல்ல - இந்த வைபவத்தின் பொருட்டு நான்கு நாட்களுக்கு ஊர்த்திடலில் கூத்தும் ஏற்பாடாகியிருக்கிறது ! நேற்றும் இன்றைக்கும் திருமூல நாயனார் கூத்து - நாளையும் மறுநாளும் கோவண நாடகம்* நடைபெறும் !" * அமரநீதி நாயனார் புராணம் சோழர் காலத்தில் கோவண நாடகம் என்ற பெயரில் நடைபெற்றது. " அட, இந்த செய்தி எனக்குத் தெரியாதே ! மாலையில் சென்று பார்த்துவிட வேண்டிததுதான் !" " நீங்கள் வருவதானால் சொல்லுங்கள் - ஆள் அனுப்புகிறேன். நாம் இருவரும் சேர்ந்தே செல்லலாம் !" "அது கிடக்கட்டும் - வந்த விஷயத்தை மறந்துவிட்டு வேறெதையோ பேசிக்கொண்டிருக்கிறேன் ! தஞ்சையிலிருந்து வாத்திய கோஷ்டியார் இன்னமும் வந்து சேரவில்லையென்று காரிக்கு ஒரே கவலை !" "ஓஹோ - அதனை விசாரிக்கத்தான் நீங்களே நேரே வந்தீர்களா ? அதனைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம் என்று உங்கள் அருமைத் தமக்கையிடம் தெரிவித்து விடுங்கள் ! இப்போதுதான் தஞ்சையிலிருந்து செய்தி வந்தது. மாராயர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கிளம்ப சற்று தாமதமாகிவிட்டதாம் - கோஷ்டியார் இன்று காலை புறப்பட்டுவிட்டார்கள். எப்படியும் இரவு போஜனத்திற்கு அவர்களை எதிர்பார்க்கலாம் ! இரவு மாப்பிள்ளை விட்டார் கொடுக்கும் ஊர்விருந்துக்கு கோயிலில் ஏற்பாடாகியிருக்கிறது....நீங்களும் விருந்துக்கு வரலாமே ?" "ஹா - அதெப்படி ? கல்யாணம் முடியுமும் மாப்பிள்ளை வீட்டில் தண்ணீர்கூட குடிக்கமாட்டோம் நாங்கள் !" என்று சொல்லிச் சிரித்தபடியே கண்சிமிட்டினார் வேளார். "அடேயப்பா - அப்படிப் போகிறதா கதை ? சரிதான், சரிதான் !" என்று அழிஞ்சில் கண்டனாரும் அவருடைய சிரிப்பில் கலந்துகோண்டார். ********* ************************************************************************************** இரவு முதல் ஜாமத்தில் ஊர்த்தலைவர் சொல்லியபடியே வாத்திய கோஷ்டி வந்திறங்கிவிட்டது. கோயில் வளாகத்திலேயே அவர்கள் தங்குவதற்கு சகலவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இரவு விருந்து கோயிலில் கனஜோராக நடந்தேறியது. பாவம் - அழிஞ்சில் கண்டனாரால்தான் அந்த அற்புதமான உணவை நிதானமாக இரசித்து உண்ண முடியவில்லை. கூத்துக்கு நேரமாகிவிட்டபடியால் அவசர அவசரமாக அவர் ஊர்த்திடலுக்கு கிளம்ப வேண்டியிருந்தது. அவர் வந்து சேர்ந்தால்தானே கூத்தை ஆரம்பிக்க முடியும் ! காரிக்கு வாத்திய கோஷ்டியினர் வந்து சேர்ந்துவிட்டதில் பெரிய நிம்மதிதான். என்றாலும் அவளுக்கு உடனே அடுத்த கவலை ஆரம்பமாகிவிட்டது ! அது என்னவெனில் மறுநாள் கோயிலில் நடக்கப்போகும் பெண்வீட்டார் விருந்துக்கு எத்தனை பேர் வருவார்கள், அத்தனை பேர்க்கும் நாம் தயாரிக்கும் உணவு போதுமானதாக இருக்குமா என்பதே ! "தேவைப்பட்டால் கோயில் மடைப்பள்ளியிலேயே உணவு தயாரித்துக் கொள்ளலாம் ! நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் !" என்று வேளார் உறுதியளித்தும் காரிக்கு முழு திருப்தியில்லை. ஒருவழியாக காரியங்களை முடித்துக்கொண்டு காரி படுக்கப் போகும்போது பின்னிரவாகிவிட்டது. கூத்துப் பார்க்கச் சென்ற கிழவரையும் வேளாரையும் காணோம் ! அவர்களை வசைபாடியபடியே உறங்கிப் போனாள் காரி. ********* ************************************************************************************** ஊர்மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பொழுதும் விடிந்தது. அதிகாலை நேரத்தில் காரிவீட்டில் ஏகப் பரபரப்பு. உமாவுக்கு விடியலிலேயே திருமுழுக்காட்டி புத்தாடைகளாலும் நகைகளாலும் அலங்கரித்தனர் ஊர்ப்பெண்டுகள். ஒரு புன்னகையோடு அனைத்தையும் ஏற்றுக்கொண்டாள் உமா. காரிக்கு தன் கண்திருஷ்டியே பட்டுவிடப்போகிறதென்று பயம். அதனால் திருமணம் முடிந்ததும் பிடாரி கோயில் பூசாரியை வரச்சொல்லி மணமக்கள் இருவருக்குமே ஊரார் கண் பட்டுவிடாமலிருக்க திருஷ்டி கழிக்கச் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டாள். கோயிலிலிருந்து மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட மலர்ப் பல்லாக்கு காரியின் வீட்டிற்குமுன் வந்திறங்கியது. உமாவை அதில் மலர் அலங்காரங்களுடன் எழுந்தருளுவித்து பல்லக்கிற்குப் பின் பெண் வீட்டார் ஊர்வலமாகக் கிளம்பினர். ஊர்வலம் மெதுவாகத்தான் செல்ல முடிந்தது. சில வீடுகளில் வயதான பெண்கள் சுண்ணத்தையும் மஞ்சளையும் கரைத்து ஆரத்தி எடுத்தனர். அப்படி எடுக்கப்பட்ட ஆரத்தி தட்டில் காரி பொற்கழஞ்சுகளை இட்டாள். சில பெண்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து பெண்வீட்டார் கும்பலுடன் சேர்ந்து கொண்டனர். ஆக கோயில் நெருங்கிவரவர பல்லக்குக் கூட்டம் மிக அதிகமாகிவிட்டது. அங்கே கோயிலிலோ திருமண ஏற்பாடுகள் மிக மிக விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஒருபக்கம் வேதம் வல்ல அந்தணர்கள் அக்கினி வளர்த்து அதில் சமித்துக்களால் நெய் வார்த்தபடி வேத மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் வாத்திய மாராயர் கோஷ்டி கானமழையே பொழிந்துககொண்டிருந்தனர். இசையில் ஈடுபாடுமிக்க வயதானவர்கள் சிலர் அந்த வாத்திய கோஷ்டியின் பக்கலிலேயே அமர்ந்து இசையமுதத்தைப் பருகிக்கொண்டிருந்தனர். அவர்கள் அப்படி உட்கார்ந்த இடம் கோயில் மடைப்பள்ளிக்குச் செல்லும் பாதையாக இருந்ததால் மடைப்பள்ளிக்கு குறுக்க நெடுக்க செல்வோரின் வசவுகளையும் வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது. பாவம் - கூத்து முழுவதையும் பார்த்துவிட்டுப் படுத்த ஆண்களின் நிலைதான் பரிதாபம் ! இரவு முழுவதும் கண்விழித்ததினால் கண்கள் எரிச்சலால் சிவந்திருந்தன.. என்றாலும் அதிகாலை முதல் மூகூர்த்தமாதலால் குளித்துவிட்டு புத்தாடைகளை உடுத்திக்கொண்டு கோயிலுக்கு வந்துவிட வேண்டியதாகிவிட்டது. அவர்களில் களைப்புமிகுந்த சிலர் கோயில் தூண்களைப் பிடித்துக்கொண்டு ஆங்காங்கே தூங்கி வழிந்ததைக் காணமுடிந்தது. மாப்பிள்ளை திருமண மண்டபத்தில் சகலவித அலங்காரங்களுடனும் எழுந்தருளியிருந்தார். அவரைச் சுற்றிலும் அகில், சந்தனம் மற்றும் சகலவிதமான பரிமள கந்தங்களும்கூடிய இனிய புகை எழுந்துகொண்டிருந்தது. இருவர் கவரிவீசிக்கொண்டிருந்தனர். சற்று தள்ளி திருக்கோயில் திருப்பதியத்தார் பாடிய தேவார கானத்தை இதர இரைச்சலில் ஒருவராலும் சரிவர கேட்க முடியவில்லை. ஒரு வழியாக பெண்வீட்டார் ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. கோயில் மூலப்பருடைய சபையினர் முன்னின்று வரவேற்றனர். உமாவை இருவர் கைத்தாங்கலாக திருமண மண்டபத்திற்கு எடுத்துச் சென்று மணமகன் அருகில் அமர வைத்தனர். மணமகன் - மணமகள் இருவருடைய ஜோடிப் பொருத்தமும் மிக மிக நன்றாக அமைந்திருக்கிறதென்று அனைவருக்குமே பட்டது. மூகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது. வேத கோஷம் உச்ச கதியை அடைந்தது. ஒரு வயதான அந்தணர் பெரிய தங்கத் தாலியை எடுத்துக்கொடுக்க, மாப்பிள்ளையின் சார்பாக கோயில் தலைமை குருக்கள் ஞானசிவன் உமா பட்டாரகியின் கழுத்தில் கட்டுகிறார். எங்கும் வாத்திய முழக்கம் ! "ஹர ஹர மகாதேவா !" என்னும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது ! ஊரே தலைக்குமேல் கரம் குவித்து அந்த தெய்வீகத் தம்பதியினரை வணங்குகின்றனர் ! காரியின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிகிறது. முதலில் அவர்கள் இருவரையும் மனதார ஆசீர்வதிக்கிறாள்.. அப்புறம் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அபச்சாரம் ! அபச்சாரம் என்று முனகியபடியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும் வயலூர் மகாதேவரையும் உமா பட்டாரகியையும் சேவிக்கிறாள் அவள்... ஆம், அவள் மகளான தத்தெடுத்துக் கொண்டது உலகம் முழுவதையும் காத்து இரட்சிக்கும் பரமேஸ்வரியான உமாதேவியை அல்லவா ? (முற்றும்) ********* ************************************************************************************** கல்வெட்டுச் செய்தி ********* ************************************************************************************** குமார வயலூர். திருச்சி - குழுமணிச் சாலையில் அமைந்துள்ள சைவத் திருத்தலம். மகாதேவர் கோயில் பன்னெடுங்காலமாக இருந்தாலும் அருணகிரிநாதர் இங்கு குமரக் கடவுளை பிரபலப்படுத்த - வயலூர் என்னும் பழைய பெயர் குமார வயலூர் என்றாகிவிட்டது ! 1936ல் இத்திருக்கோயிலிலிருந்து 20 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு அதன் சுருக்கங்கள் அவ்வாண்டின் கல்வெட்டு ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டன. திருச்சி மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் மேற்கொண்ட கள ஆய்வின் அறிக்கையில் இந்தக் கல்வெட்டுக்களின் முழுப்பாடமும் வெளியாகியுள்ளது. இந்தக் கல்வெட்டுக்களுள் ஒன்று மிக ஆச்சரியமானது. கோயிலில் இறைத்திருமேனியை எழுந்தருளுவிப்பதும் நிவந்தங்கள் கொடுப்பதும் வழக்கமான நிகழ்வுகள்தான். ஆனால் இவ்வூரில் ஒரு பெருமாட்டி இதனை வித்தியாசமான முறையில் செய்துள்ளார். வயலூரைச் சேர்ந்த சேந்தன் காரி என்னும் அப் பெண்மணி அவ்வூர்த் திருக்கோயிலில் உமா பட்டாரகி படிமத்தை எழுந்தருளுவித்ததுடன் அவ்விறைவியை தம் மகளாக வரித்து இறைவனுக்குத் திருமணமும் செய்து கொடுத்துள்ளார். இறைவிக்கு தினமும் உச்சிப்போது சந்தியில் ஒரு திருவமுது படைக்கக் கொடையாக தமக்கு சீதனமாக வந்த நிலத்தையும் எழுதிவைத்துள்ளார். காரியின் உடன்பிறந்தார் இருவர் அவருக்கு உதவியாக இருந்து இந்த நிவந்தத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். இதிலென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா ? இருக்கிறது ! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - நாம் அனைவருமே இறைவனை வரம் கொடுக்கும் வள்ளலாக பிரார்த்தனைகளை நிறைவேற்றும் பெரியவராக நினைக்கிறோமே தவிர அவரை சற்று அருகே நெருங்கி தந்தையாக, மகனாக, நண்பனாகக் கண்டதுண்டா ? ஆன்மிகத்தில் சற்று உயர்நிலை அடைந்தவர்களுக்குத்தான் அது சாத்தியப்படும். திருமங்கையாழ்வார் பெண்ணாகத் தன்னைக் கருதிக்கொண்டு பெருமாளை நோக்கி மடலனுப்பியிருக்கிறார். பெரியாழ்வார் கண்ணனைத் தன் குழந்தையாகக் கருதி சீராட்டியிருக்கிறார். சுந்தரரால் இறைவனை காதலிக்கே தூதனாக அனுப்ப முடிந்தது... சென்ற நூற்றாண்டின் ஆழ்வானான பாரதிகூட கண்ணனை பல்வேறு வடிவங்களிலும் கோலங்களிலும் நினைத்துப் பாடமுடிந்தது இந்த இறை நெருக்கத்தினால்தான் ! ஆழ்வார்கள் நாயன்மார்கள் மட்டுமல்ல - சில பொதுமக்களாலும்கூட அந்தக் காலத்தில் இத்தகைய உயர்ந்ததொரு பக்தி நெறியில் திளைக்க முடிந்தது என்பது ஆச்சரியமாக விஷயமல்லவா ? இதுவரை நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் இத்தகைய நிகழ்வு இடம்பெறுவது இரண்டே கல்வெட்டுக்களில்தான். அதில் இது ஒன்று. கல்வெட்டு எண் - 151 -19360-37 இடம் - பெருமண்டபத் தெற்கு சாரளப் பக்க நிலைகள் காலம் - பரகேசரிவர்மரின் 15ம் ஆட்சியாண்டு (உத்தம சோழர் காலமாக இருக்கலாம் - கி.பி.984) செய்தி - முன்னரே தெரிவிக்கப்பட்டது கல்வெட்டுப் பாடம் 1. ஸ்வஸ்திஸ்ர் கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு 15ஆவது உறையூர் கூற்றத்து வயலூர் சேந்தன் காரியேன் 2. இவ்வூர் இளநிலத்தில் என்னோடுடப் பிறந்த உறையூர் நாடு கிழவரும் உறையூர் நாட்டு வேளாரும் தங்கள் நிலவோபாதியால் 3. வந்த இ(வ)ள நிலத்தில் இனக்கு ஸ்த்ரிதனமாகத் தர இந்நிலம் பெற்றுடையேநா(ய்) அனுபவித்து வாரா நின்றேன் 4. இவ்வூர் திருக்கற்றளிப் பெருமாளுக்கு உமா பட்டாரகியை அமைத்து என் மகளாராகக் கொண்டு விவ(¡)ஹஞ் செவ்வித்து இப்பிராட்டியார்க்கு 5. நித்தம் 1 திருவமுதுக்கு நாந் உதகபூர்வஞ் செய்து குடுத்த நிலத்துக்கு.... (வரி எண்கள் சுருக்கப்பட்டுள்ளன - கல்வெட்டின் நீளம் காரணமாக முழு கல்வெட்டுப் பாடத்தையும் கொடுக்க இயலவில்லை. முழுப் பாடத்திற்குப் பார்க்க புத்தகம் - தளிச்சேரிக் கல்வெட்டுக்கள், இரா.கலைக்கோவன், பக்கம் 110 - 111) இக் கல்வெட்டு சொல்லும் சமூகச் செய்திகளும் உண்டு. உதாரணமாக அக்காலத்தில் பெண்கள் தமக்கென்று உரிய ஸ்த்ரீதனத்தை தன்னுடைய விருப்பப்படி செலவழிக்கலாம் - அந்த உரிமை அவர்களுக்குப் பூரணமாக இருந்தது என்பது தெரிகிறதல்லவா ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சேந்தன் காரி என்னும் அந்தப் பெருமாட்டியை நினைத்துப் பார்க்கிறேன்... இறைவியை உரிமையோடு தன் மகள் என்று அழைத்ததோடு சீதனமாக தனக்கு வந்த நிலத்தையும் அந்த இறைவிக்கே எழுதிவைத்துவிட்ட அந்தத் தாயை நினைத்து நினைத்து வியந்து போகிறேன் !this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |