http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 3

இதழ் 3
[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தலையங்கம்
மத்தவிலாச அங்கதம் - 1
வாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...
கதை 2 - காரி நங்கை
வாருணிக்குக் கலைக்கோவன்
என்றைக்கு விழிப்பது?
கட்டடக்கலை ஆய்வு - 3
கல்வெட்டாய்வு - 2
வல்லமை தாராயோ?
கருங்கல்லில் ஒரு காவியம் - 3
சங்கச்சாரல் - 3
கோச்செங்கணான் யார் - 1
இதழ் எண். 3 > இலக்கியச் சுவை
கோச்செங்கணான் யார் - 1
இரா. கலைக்கோவன்
இது டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் முதல் ஆய்வுத்தொடர். 1982 நவம்பர் 'செந்தமிழ்ச்செல்வி' இதழில் தொடங்கி, 1983 மே இதழில் முடிவுற்றது. (அடிக்குறிப்புகள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன)

அத்தியாயம் 1

முற்காலச் சோழப் பெருவேந்தர்களுள் குறிப்பிடத்தக்க சிலருள் முதன்மையானவன் சோழன் கோச்செங்கணான். இப்பெருமகனைப்பற்றிப் பல வரலாற்றுக் குறிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில வரலாற்று ஆய்வாளர்கள் இப்பெருமகனைச் சங்ககாலச் சோழப்பேரரசர்களுள் ஒருவனாகக் கொள்கின்றனர்(1). வேறு ஆய்வாளர் சிலர் நீண்ட செடும் ஆய்வுக்குப் பிறகு கோச்செங்கணான் தமிழகத்தின் இருண்ட காலத்தில் வாழ்ந்த (கி.பி. 300-600) மன்னர்களுள் ஒருவன் என்று வரையறுக்கின்றனர்(2). கோச்செங்கட்சோழனைக் கணைக்கால் இரும்பொறையுடன் தொடர்புபடுத்திக் கூறுவது போலவே, சேரமான் கோக்கோதை மார்பனுடன் தொடர்புபடுத்திப் பேசுவாரும் உளர். அப்பெருமானைச் சைவத்தில் தழைத்த நாயன்மார்களுள் ஒருவனாய்க் கொண்டாடிவரும் அதே நேரத்தில், அவனைத் திருமால் அடியவனாய்ச் சிறப்புப் பெற்றவன் என்று கூறுவாரும் உளர்(3). அவன் எடுப்பித்த எழுபது மாடக்கோயில்களும் சிவபெருமானுக்கா, திருமாலுக்கா அல்லது இருவருக்குமா என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன(4). இவற்றையெல்லாம் வரலாற்று இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு தெள்ளத் தெளிய நடுவு நிலையில் நின்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

கோச்செங்கட்சோழனைப் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு, களவழி நாற்பது, சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பதிக்ங்கள், பெரிய திருமொழி, திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரியபுராணம், திருவானைக்கா புராணம், கலிங்கத்துப்பரணி, மூவருலா போன்ற இலக்கியங்களில் காணலாம். அன்பில் செப்பேடுகளில் கோச்செங்கணான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன(5). இது தவிர திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் கன்னியாகுமரிக் கல்வெட்டுகளும் செங்கணானைக் கரிகாலன் வழித்தோன்றலாகவும், ஒன்பதாம் நூற்றாண்டினனான விசயாலயச் சோழனுக்கு முன்னோனாகவும் இடையில் வைத்துக் கூறுகின்றன(6).

இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள் இவற்றை வைத்து நோக்கும்போது கோச்செங்கணான் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவன் என்பது உறுதியாகின்றது. ஆய்வாளர்களுக்குள் இதில் கருத்து மாறுபாடு இல்லை. அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவனா அல்லது சங்க காலத்திற்குப் பிறகு வாழ்ந்தவனா என்பதே ஆய்வுக்குரிய செய்தியாகும். கோச்செங்கட்சோழன் சங்க காலத்தில் வாழ்ந்தவன் என்று ஆய்வுரை செய்யும் பெருமக்கள் அதற்காக எடுத்துக் கொள்ளும் காட்டுகள் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பும்(7), களவழி நாற்பது ஏட்டின் உரைகாரர் எழுதிய பின்குறிப்புமேயாகும்(8). இவற்றைத் தெளிவாகக் காண்போம்.

"குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத்தானெ". (9)

இப்புறப்பாடலின் அடிக்குறிப்பில் 'சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்று காணப்படுகிறது. இந்த அடிக்குறிப்பு, இப்பாடலைப் பாடிய, புலவர் எழுதியதன்று என்பது, 'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்பதால் அறியப்படும். புறநானூற்றுப் பாடல்களின் கீழ் உள்ள அடிக்குறிப்புகள் பல பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அவை பல இடங்களில் பொருத்தமற்று விளங்குவது கண்கூடு. புறம் 389ஆம் செய்யுளில்,

"ஆதனுங்கன் போல நீயும்
பசித்த வொக்கற் பழங்கண் வீடே
வீறுசால் நன்கல நல்குமதி பெரும"

என வரும் தொடர்களைக் கண்டதும், 'ஆதனுங்கனைக் கள்ளிலாத்திரையனார் பாடிய பாட்டு' என்று அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது(10). இங்கு 'ஆதனுங்கன் போல நீயும்' என வரும் தொடரே, ஆதனுங்கன் உவமைக்காக மேற்கொள்ளப்பட்ட பெயர் என்பதை விளக்குகிறது. இவ்விளக்கத்தைக் கொள்ளாமல் இது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு எனப் பிழையான அடிக்குறிப்பு செய்திருப்பது போலவே, பிழைபட்ட இடங்களும் பொருத்தமற்ற அடிக்குறிப்புகளும் பலவாகும். இத்தகைய அடிக்குறிப்புகளில் ஒன்றாகவே செங்கணானைக் குறிக்கும் அடிக்குறிப்பையும் கொள்ளலாம்(11).

மேலும் பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி அவர்களால் உரை எழுதப்பெற்று, கழகத்தால் வெளியிடப்பட்ட புறநானூற்றுப் பதிப்பில் இப்பாடலின் அடிக்குறிப்பு மாறிக் காணப்படுவது இங்குக் குறிப்பிடத் தகுந்தது. 'இது நல்லேர் முதியனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது' என்று அடிக்குறிப்பு மாறியுள்ளது. இப்பதிப்பின் முன்னுரையில் அவ்வை சு.துரைசாமி அவர்கள், உ.வே.சா அவர்களின் பதிப்புக்கும் தம் பதிப்புக்கும் உள்ள மாறுபாடுகளை விளக்குகையில் தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடியிலிருந்து இம்மாற்றங்களைச் செய்ததாகக் குறிக்கிறார்கள்(12). இப்படிப் பதிப்புக்குப் பதிப்பு மாறும் அடிக்குறிப்புகளைக் கொண்டு ஒரு மாமன்னனின் காலத்தை நிறுவுவது அறிவுடைமையாகாது.

களவழி நாற்பது நூலின் இறுதியில் அதன் பழைய உரையாசிரியர், 'சோழன் கோச்செங்கணானும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்ப்புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று' என்று குறிப்பிடுகிறார்(13).

தமிழ் நாவகர் சரிதையில், கணைக்கால் இரும்பொறையால் பாடப்பட்டதாகக் கூறப்படும் புறநானூற்றின் 74-ஆம் பாடல், 'இது சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணானால் குணவாயில் கோட்டத்துத் தளைப்பட்டபோது, பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு' என்ற அடிக்குறிப்புடன் காணப்படுகிறது(14). இது குறித்து டாக்டர் மா. இராசமாணிக்கனாரவர்களும், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும், தங்கள் நூல்களில் விரிவாகவே குறிப்பிடுகின்றார்கள்(15).

புறநானூற்றின் அடிக்குறிப்பு, 'கணைக்கால் இரும்பொறை சிறையில் இறந்தான்' என்று குறிப்பிடுகின்றது, தமிழ் நாவலர் சரிதையில் அச்செய்யுளின் அடியில், 'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது(16).

ஒட்டக்கூத்தர் தாம் பாடிய மூன்று உலாக்களிலும் இச்செய்தியைக் குறிப்பிடுகிறார்.

"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" (17)

"... பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (18)

"நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்" (19)

இதையே சயங்கொண்டாரும் கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியத்தில்,

"களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"

என்று குறிப்பிடுகிறார்.

இவ்விலக்கியச் சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் பல கருத்துகளைத் தெரிவிக்கின்றன. சேரன் சோழனின் சிறையில் இறந்தான் என்ற புறநானூற்று அடிக்குறிப்பும், சேரன் பொய்கையாருக்கு எழுதிவிடுத்த இப்பாட்டு கேட்டுப் பொய்கையார் களவழி பாட, செங்கணான் சேரனைச் சிறைவிட்டு அரசளித்தான் என்று தமிழ் நாவலர் சரிதையும், சோழன் சேரனைப் பொய்கையார் பாடலுக்கு விடுதலை செய்தான் என்று ஏனைய இலக்கியச் சான்றுகளும் குறிப்பிடுகின்றன. இவற்றில் எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று தெளிவு காண வேண்டும்.


அத்தியாயம் 2

சோழனுடன் போரிட்ட சேரமன்னனின் பெயர் எந்த ஒரு பாடலிலும் கூறப்படவில்லை. பாடல்களின் அடிக்குறிப்புகளில் மட்டுமே அம்மன்னன் கணைக்கால் இரும்பொறை என்று குறிப்பிடப்படுகிறான். அப்படியானால் சோழ வேந்தனுடன் போரிட்டது கணைக்கால் இரும்பொறையா அல்லது வேறு சேரவேந்தனா? வேறு சேரமன்னன் என்றால் அவன் யாராக இருக்க முடியும் என்பதைத் தெளிய வேண்டும்.

சோழன் கோச்செங்கணானும் சேரமன்னனும் பொருத இடம் கழுமலம் என்று களவழி நாற்பதும், குணவாயிற் கோட்டம் என்று தமிழ் நாவலர் சரிதையும், திருப்போர்ப்புறமெனப் புறநானூறும் பேசுகின்றன. இவற்றில் போர் நடந்த இடம் எது என்பதை ஆய்ந்தறிய வேண்டும்.

சேரமன்னர்களின் வரலாற்றை ஆய்ந்தெழுதிய பெருமக்களும் இப்போர் குறித்தும் இதன் முடிவு குறித்தும் குழப்பமான நிலையிலேயே செய்தி தருகின்றனர். பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி அவர்கள் கழுமலத்தில் போர் நடந்ததாகவும் பின் திருப்போர்ப்புறம் என்னும்¢டத்தே தொடர்ந்த போரில் கணைக்கால் இரும்பொறை தோல்வியுறக் குடவாயிற் கோட்டட்தில் சோழனால் சிறைவைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்(20).

துடிசைகிழார் சிதம்பரனார் அவர்களோ, இருவருக்கும் பல போர்கள் நடந்ததாக்வும், அவைகளுள் சிறந்தவை நான்கென்றும் குறிப்பிட்கிறார்(21). அவர் கூற்றுப்படி,

முதல்போர் குணவாயிற் கோட்டத்தில் கி.மு. 45 இல் நடைபெற்றது. சேரன் தோற்றான். இதற்கு ஆதாரமாகத் தமிழ் நாவலர் சரிதையின் அடிக்குறிப்பைக் கொள்கிறார்.

இரண்டாம் போர் சோழ நாட்டு வெண்ணிப் பறந்தலையில் கி.மு. 42 இல் நடைபெற்றது. இதிலும் சேரன் தோற்றான். இதற்கு ஆதாரமாக நற்றிணை முகவுரையைக் காட்டுகிறார்.

மூன்றாம் போர் கழுமலம் என்னும் இடத்தில் கி.மு. 40 இல் நடைபெற்றது. இதிலும் சேர அரசன் தோற்றுச் சிறைபிடிக்கப் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான். இது கேள்விப்பட்டு, பொய்கையார், கடைச்சங்கப் புலவராயும் சோழன் கோச்செங்கணானின் நண்பராகவும் இருந்தமையால், சோழன் வெற்றியைக் குறித்துக் களவழி பாடி அதற்குப் பரிசாக சேரனைச் சிறையினின்று மீட்டார்.

நான்காம் போர், கொங்கு நாட்டில் திருப்பூருக்குப் பக்கத்திலுள்ள (திருப்போர்ப்புறம்) கோயில் வெளி என்னும் இடத்தில் கி.மு. 35 இல் நடந்தது. இதிலும் சேரன் தோல்வியுற்று மீட்டும் சிறைபிடிக்கப்பட்டான். இதுபோழ்துதான், அவன் புறநானூற்றின் 74 ஆம் பாடலான, 'குழவி இறப்பினும்' என்ற பாடலைப் பாடி உயிர் துறந்தான்.

துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடும் இப்போர்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதல் போர் குணவாயில் கோட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுவதற்குத் துடிசைகிழார் அவர்கள் தமிழ் நாவலர் சரிதையின் அடிக்குறிப்பினையே ஆதாரம் காட்டுகிறார்கள். அதே அடிக்குறிப்பில், சேரன் சிறைப்பட்ட செய்தியும், அவன் 'குழவி இறப்பினும்' என்னும் பாடலை அங்கிருந்தே எழுதிப் பொய்கையாருக்கு அனுப்ப, அவர் வந்து சோழனைப் பாடிச் சேரனை விடுதலை பெற்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளன. இதையெல்லான் துடிசைகிழார் அவர்கள் ஏனோ கொள்ளவில்லை.

உறையூர்க் கோட்டையின் கிழக்குப் பக்கத்து வாயிலே குணவாயில் கோட்டம் என்றும் அதுதான் தற்போதைய தாயுமானசுவாமி மலைக்கோயில் உள்ள பகுதி என்றும் துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்(22). உறையூர்க் கோட்டையின் கிழக்குப்பக்க வாயில்தான் குணவாயிற்கோட்டமென்றால், சேரன் சோழன் மீது படையெடுத்து வந்ததாகக் கொள்ள நேரிடும். சேரன் கோட்டை வாயிலருகில் படையுடன் வரும் வரை சோழன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற வினா எழும்! எனவே, குணவாயிற் கோட்டத்தில் போர் நடந்ததாகக் கொள்வது பொருத்தமற்றது.

தமிழ் நாவலர் சரிதை காலத்தால் மிகவும் பிற்பட்டது. புறநானூற்று அடிக்குறிப்புக்கும் தமிழ் நாவலர் சரிதை அடிக்குறிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. புறநானூற்ற்¢ல் குறிக்கப்பட்டுள்ள குடவாயிற்கோட்டம் இதில் குணவாயிற்கோட்டம் என்று குறிக்கப்பட்டுள்ளது. குடவாயிற்கோட்டம் என்பதே குணவாயிற்கோட்டம் என்று தவறாகத் திரித்து எழுதப்பட்டிருக்கலாம் என்று கொள்வதே பொருத்தமானதாக அமையும். இக்குடவாயிற் கோட்டத்துச் சிறையில் இருந்ததாகக் கருதப்படும் சேரன், சிறைய்¢ல் இருந்தபடியே பொய்கையாருக்குப் பாட்டெழுதி அனுப்பியதாகத் தமிழ் நாவலர் சரிதை அடிக்குறிப்பு கூறுவத் எவ்வகையானும் பொருந்தாது. அது சேரமானின் வீரத்துக்கே இழுக்குத்ட் தேடுவதாக அமையும். எனவே தமிழ் நாவலர் சரிதைக் குறிப்பில் கண்டுள்ள செய்திகள் தவறானவை என்று முடிவு கோடலே பொருந்தும்.

இரண்டாவது போர் வெண்ணிப் பறந்தலையில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார் துடிசைகிழார். இதற்கு நற்றிணை முகவுரை ஆதாரம் காட்டப்படுகிறது. நற்றிண்ணயில், பொய்கையார் வரலாறு கூறுமிடத்தில், சோழனுக்கும் சேரனுக்கும் வெண்ணிப்பறந்தலை (கோயில் வெண்ணிவெளியில் போர் நடந்ததாகவும், அப்போரில் சேரமான் தோற்றுக் குடவாயிற்கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, இப்பொய்கையாரே வைணவர்கள் கூறும் பொய்கையாழ்வாரென்று அறியப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது(23). இங்கு இரண்டு செய்திகள் முரண்படுகின்றன.

1. கோயில் வெண்ணி வெளியில் நடந்ததாகக் கூறப்படும் இப்போரில் சேரன் சிறைப்பட்டான் என்று நற்றிணை முகவுரை சொல்கிறது. ஆனால் துடிசைகிழார் அவர்கள் இப்போரை வெண்ணிப்பறந்தலையில் நடந்ததாகக் கொண்டு, அஃதாவது வெண்ணிப்பறந்தலை வேறு, கோயில்வெளி வேறு என்று எடுத்துக்கொண்டு சேரன் தோற்றான் என்று மட்டுமே கூறுகிறார். ஓரிடத்தில் நடந்த போரையே இரண்டு இடங்களில் நடந்ததாகக் கொண்டு இரண்டு போர்களாகக் கற்பனை செய்திருப்பது வியப்புக்குரியது.

2. களவழி பாடிய புலவரும் முதலாழ்வார்களுள் ஒருவரான பொய்கையாழ்வாரும் ஒருவரென்று நற்றிணை முகவுரை குறிப்பிடுவதைக் கொண்டால், பொய்கையாழ்வாரின் காலமும் இப்போர் நடந்ததாகத் துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடும் காலமும் பொருந்தாமல் போகும். எனவே இந்த இரண்டாவது போர்ச்செய்தி குறித்துத் துடிசைகிழார் அவர்கள் கூறும் செய்திகள் பொருந்தி வரவில்லை.

இதே போரைப்பற்றித் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில், திருநறையூர்ப் பதிகத்தில் சோழன் கோச்செங்கணானைப் பாடும்போது,

"வெங்கண்மா களிறுந்தி வெண்ணி யேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச்சோழன்"

என்றும்,

"கவ்வைமா களிறுந்த்¢ வெண்ணி யேற்ற
கழல் மன்னர் மணிமுடிமேல் காகமேற"

என்றும் பாடுவதால், வெண்ணியில் கோச்செங்கணான் பகைவருடன் போரிட்டது உறுதியாகின்றது. இப்போர்¢ல் செங்கணானுடன் போரிட்டுத் தோற்ற, கழல் மன்னரென்றும் விறல் மன்னரென்றும் குறிக்கப்படுபவர் யார்? நற்றிணை முகவுரையின்படி இப்போர் சோழனுக்கும் சேரனுக்கும் இடையே நடந்ததென்று கொண்டால் அச்சேர வேந்தன் கணைக்கால் இரும்பொறைதான் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா? இப்போரில் சேரன் சிறைப்பட்டான் என்று நற்றிணை முகவுரை சொல்கின்றது. ஆனால் திருமங்கையாழ்வார் அது குறித்து ஏதும் தம் பதிகத்தில் குறிப்பிடவில்லை என்பது நினைக்கத்தக்கது.

மூன்றாம் போர் கழுமலத்தில் நடந்ததாகத் துடிசைகிழார் குறிப்பிடுகிறார். இப்போர் நடந்ததைக் களவழி நாற்பது பாடல்களே அரண் செய்கின்றன. கோச்செங்கணானைப்பற்றிக் கூறும் பல நூல்களுள் நேரடியாகக் கோச்செங்கட்சோழனைப் பாடிய பெருமையை உடையது களவழி நாற்பது ஒன்றே. எனவே களவழி நாற்பது தரும் செய்திகளை ஏற்பது ஏற்புடைத்து. இது கோச்செங்கட்சோழன் வஞ்சியரசன் ஒருவன் மீது செய்த போரைப் பாடிச் சோழனைப் புகழும் முகத்தான் எழுந்த நூலாகும். இதில் நாற்பது பாடல்கள் உள்ளன. இவற்றுள் ஐந்து பாடல்களில் செங்கட் சினமால் என்றும்(24), மூன்று மாடல்களில் செங்கண்மால் என்றும்(25), மூன்று பாடல்களில் திண்தேர்ச் செம்பியன் என்றும்(26), பிற பாடல்களில் நீர்நாடன், புனல்நாடன் என்றும் இச்சோழர் பெருமான் குறிக்கப்படுகிறான்.

இந்நூலின் 36 ஆம் பாடலில்,

"காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாம் கீழ்மேலாய்
ஆவுதை கரளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை அட்ட களத்து"

எனவரும் வரிகள் கொள்ளத்தக்கன. 'கழுமலம் கொண்ட நாள்' என்னும் குறிப்பு போர் நடந்த இடத்தையே குறிப்பதென்பது உணரத்தக்கது.

நான்காவது போர் திருப்போர்ப்புறம் (திருப்பூருக்கு அருகிலுள்ள கோயில்வெளி) என்ற இடத்தில் நடந்ததாகவும், சேரன் அங்கும் தோற்றுச் சிறைபிடிக்கப்பட்டான் என்றும், அந்நிலையில்தான் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் 'குழவி இறப்பினும்' என்னும் பாடலைப் பாடித் துஞ்சினான் என்றும் துடிசைகிழார் குறிப்பிடுகிறார். இந்தக் கோயில்வெளிப் போரைத்தான் நற்றிணை முகவுரை வெண்ணிப் பறந்தலைப் போராகக் குறிப்பிடுகின்றது. புறநானூற்று அடிக்குறிப்பு திருப்போர்ப்புறத்துப் போராகக் குறிப்பிடுகின்றது. இம்மூன்று செய்திகளை நோக்க துடிசைகிழார் குறிப்பிட்ட இரண்டாவது போரும் நான்காவது போரும் ஒன்றே என்பதும், பல பெயர்களைக் கொண்ட ஒரே இடத்தில் நடந்ததென்பதும் பெறப்படும். மேலும் இதுவரை கண்ட செய்திகளிலிருந்து சோழன் கோச்செங்கணான் பகை அரசன் ஒருவனுடன் கழுமலத்திலும், வெண்ணி என்னும் கோயில்வெளியிலும் போரிட்டிருப்பது புலனாகின்ரது. இப்போர்களில் சோழனோடு பொருத பகையரசன் சேரவேந்தனே என்பது,

"மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து",

என்னும் களவழி நாற்பதின் 39 ஆம் பாடலால் அறியப்படும். இச்சேரவேந்தன் கணைக்கால் இரும்பொறை என்பதற்கு யாதொரு சான்றும் களவழி நாற்பதில் இல்லை. வென்ற மன்னனைப் பல இடங்களில் பெயர் குறிப்பிட்டுப் புகழும் புலவர் தோற்ற வேந்தனின் பெயரை ஓரிடத்தானும் குறித்தாரில்லை.

உலாப் பாடல் வரிகளும், பரணிப் பாடல் வரிகளும், சோழன் களவழி நாற்பது கொண்டு விடுதலை செய்த மன்னனை வில்லவன், பொறையன், உதியன் என்று குறிக்கின்றனவேயன்றி, 'கணைக்கால் இரும்பொறை' என்று ஓரிடத்தானும் குறித்தில. சோழனோடு போர் செய்த சேரவேந்தன் கணைக்கால் இரும்பொறையா அல்லது வேறு சேர மன்னனா என்பது ஆய்வுக்குரியது.

கோச்செங்கணானைப் பாடிய பொய்கையார் கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னனைப் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இரண்டும்(27), நற்றிணையில் ஒன்றுமாய் இடம் பெற்றுள்ளன(28). களவழி நாற்பது உரைய்¢ல் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், புறநானூற்றுக் குறிப்பே வலியுடையதென்று கொள்ளின், அது பரணி, உலா முதலியவற்றுடன் முரணாமைப் பொருட்டுத் துஞ்சினான் கணைக்கால் இரும்பொறையாகச் சிறைவீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவான் என்று கொள்ள வேண்டும்' என்றும், 'அவ்வேந்தன் கணைக்கால் இரும்பொறையின் வேறாகிச் சோழனால் சிறைப்பட்டவனாயின் அவனை விடுவித்து, களவழி நாற்பது பாடல் பாடப்பட்டதென்று கோடல் அமையும்(29)' என்றும் ஒரு முடிவுக்கு வர முயல்கிறார்கள். இதையே டாக்டர். மா. இராசமாணிக்கனாரவர்கள் தம் சோழர் வரலாற்றில், 'இங்ஙனம் பேரறிஞரையும் (நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்) குழப்பத்திற்கு உட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புக்களைக் கொண்டு கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது(30)' என்கிறார்கள்.


அடிக்குறிப்புக்கள்

1. பிற்காலச் சோழர் வரலாறு - தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பக்கம் 4.
2. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 13.
3. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 127.
4. பல்லவர் சரித்திரம் - பி.தி. சீனிவாச அய்யங்கார், பக்கம் 114.
5. Epigraphica Indica Vol 15, Verse 13, Page 70 (Anbil plates of Sundara chola).
6. ஆழ்வார்கள் காலநிலை - மு. இராகவையங்கார், பக்கம் 40.
7. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் உரை, பக்கம் 184, பாடல் - 74.
8. களவழி நாற்பது - கழகப் பதிப்பு, பக்கம் 4.
9. புறநானூறு - செய்யுள் 74.
10. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் உரை, பக்கம் 582.
11. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 8.
12. புறநானூறு II - அவ்வை சு. துரைசாமி உரை, கழகப்பதிப்பு, பக்கம் 6.
13. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, முகவுரை, பக்கம் 4.
14. தமிழ் நாவலர் சரிதை - கழகப்பதிப்பு, பக்கம் 130.
15. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 9, களவழி நாற்பது - கழகப் பதிப்பு, முகவுரை, பக்கம் 5.
16. தமிழ் நாவலர் சரிதை - கழகப்பதிப்பு, பக்கம் 130.
17. விக்கிரமசோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 28, வரி 27,28.
18. குலோத்துங்க சோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 28, வரி 39,40.
19. இராசராச சோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 2, வரி 35,36.
20. பண்டை நாளைச் சேரமன்னர்கள் - அவ்வை சு. துரைசாமி, பக்கம் 299.
21. சேரர் வரலாறு - துடிசைகிழார் சிதம்பரனார், பக்கம் 138.
22. சேரர் வரலாறு - துடிசைகிழார் சிதம்பரனார், பக்கம் 139.
23. நற்றிணை - கழகப்பதிப்பு, பாடினோர் வரலாறு, பக்கம் 40.
24. களவழி நாற்பது - பாடல்கள் 15,21,29,30,40.
25. களவழி நாற்பது - பாடல்கள் 4,5,11.
26. களவழி நாற்பது - பாடல்கள் 6,22,33.
27. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள்கள் 48,49.
28. நற்றிணை - கழகப்பதிப்பு, செய்யுள் 11.
29. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, முகவுரை, பக்கம் 5.
30. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 8.

(தொடரும்)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.