http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 35

இதழ் 35
[ மே 15 - ஜூன் 14, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆய்வேடுகளின் அருமை
போசளீசுவரம் கோயிலில் புதிய கல்வெட்டு
பைசாசம் - வாசகர் எண்ணங்கள்
பைசாசம் - ஒரு விமர்சனம்
பழுவூர் - 14
உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 7
கோயில்களும் கலைகளும்
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 1
தமிழின் பெருமையைக் குறைசொன்னாரா மதன்?
Links of the Month
சங்ககாலத்து உணவும் உடையும் - 1
இதழ் எண். 35 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 7
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி, அதவத்தூர்ச் சாலையில் உள்ள சிற்றூர்களுள் ஒன்று வயலூர். இங்குள்ள பழைமையான சிவன் கோயில் சோழர் கல்வெட்டுகளில் திருக்கற்றளிப் பரமேசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அமரர் கிருபானந்தவாரியாரால் இங்குள்ள பரிவாரக் கோயில்களில் ஒனறான முருகன் கோயில் ஆட்கொள்ளப்பெற்று புகழடைந்தது. அதனால், வயலூர் குமார வயலூராக மாற்றம் பெற்றது. கற்றளி பரமேசுவரர் தமக்குப் பின்னால் இருந்த மகனின் புகழ் வெளிச்சத்தில் மங்கிப்போனார்.

1983 வயலூர்க் கற்றளிப் பரமேசுவரர் கோயில் நிர்வாக அலுவலர் திரு. ஏகாம்பரநாதன், அக்கோயிலில் குடமுழுக்கு நிகழ்த்தவிருப்பதாகக் கூறி, அதுபோழ்து வெளியிட வாய்ப்பாகக் கோயிலின் வரலாற்றை எழுதித் தருமாறு வேண்டியதுடன், எனக்கு உதவும் என்று கூறி அவரிடமிருந்த கோயில் தலவரலாற்றுப் புத்தகத்தை என்னிடம் தந்தார். கோயிலைச் சுற்றிப் பார்த்தபோது, பரமேசுவரர் விமானத்திலும் முகமண்டபத்திலும் சோழர் கல்வெட்டுகள் துணுக்குகளாய்ச் சிதறி இருந்தன. அவற்றுள் சிலவற்றையே அப்போது படிக்க முடிந்தது. மைய அரசின் கல்வெட்டு அறிக்கை உதவியுடன் பிற கல்வெட்டுத் தரவுகளைப் பெற்றேன்.

கல்வெட்டறிக்கையில் வெளியிடப்படும் சுருக்கத்திற்கும் கல்வெட்டுத் தொகுதிகளில் வெளியாகும் பாடத்திற்கும் உள்ள மகத்தான வேறுபாடுகளை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அதனால், கிடைத்த கல்வெட்டுத் தரவுகளே போதுமானவை எனக் கருதினேன். அந்தக் கோயிலில் இருந்த சிவபெருமானின் செப்புத்திருமேனிகளுள் ஒன்று, 'சுந்தர தாண்டவம்' என்ற பெயருடன் விளங்கியது. ஆடல் படிமமான அதை நிருவாக அலுவலர் எனக்குக் காட்டி, அத்தாண்டவம் குறித்து விரிவாக எழுதித்தர வேண்டினார். 'சுந்தர தாண்டவம்' முற்றிலும் புதிய பெயராக இருந்தது. தாண்டவம் பற்றி அறியத் திரு. தண்டபாணி தேசிகரின், 'ஆடவல்லான்', திரு. மயிலை. சீனி. வேங்கடசாமியின், 'இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்', 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' ஆகிய நூல்களைப் படித்தேன். தெளிவு கிடைக்கவில்லை. வயலூர்ப் படிமத்திற்கும் அந்நூல்கள் விவரித்த தாண்டவ விளக்கங்களுக்கும் பொருந்திவரவில்லை. 'சிற்ப ரத்னா' படிக்குமாறு திரு.மஜீது வழிகாட்டினார். அத்துடன் அலுவலக நூலகத்தில் இருந்த இலலித் கலா தொகுதிகளுள் ஒன்றையும் தந்தார். அதில் திரு. இரா. நாகசாமி கொடுமுடியில் உள்ள ஆடவல்லான் படிமத்தைப் பற்றி எழுதியிருந்தார்.

சிற்ப ரத்னா விளக்கும் ஒன்பது வகைத் தாண்டவங்களுள் ஒன்பதாவது வகை ஓரளவிற்கு வயலூர்ப் படிமத்தின் கால் நிலைகளுடன் பொருந்தியது. திரு. சி. சிவராமமூர்த்தியின், 'Nataraja in Art, Thought and Literature' என்ற நூலையும் திரு.மஜீதிடம் பெற்றுப் படித்தேன். அருமையான நூல் என்றாலும் பல குழப்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. இவற்றுள் எந்த நூலும் சுந்தர தாண்டவம் என்ற பெயரில் தாண்டவ வகை ஒன்றைக் குறிப்பிடாமை எனக்கு வியப்பளித்தது. திருமந்திரத்தில் சிவபெருமானின் ஆடலைப் பற்றி நிறைய சொல்லப்பட்டிருப்பதாக எங்கோ படித்திருந்த நினைவு கொண்டு அந்நூலைப் பெற்றுப் படித்தேன். திருக்கூத்து தரிசனம் உட்பட முழு நூலையும் படித்த பிறகும் தெளிவு கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான், பரதரின் நாட்டிய சாத்திரம் படித்துப் பார்க்கும் எண்ணம் வந்தது. சிராப்பள்ளியில் உள்ள எந்த நூலகத்திலும் அந்த நூல் கிடைக்கவில்லை. அரசுவிற்குத் தொலைப் பேசினேன். திரு. வேங்கடசாமியின் நூல்களையே அவர்தான் அரும்பாடுபட்டுப் பெற்றுத் தந்திருந்தார். குறிப்பாக, 'இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்' பேரலைச்சலுக்குப் பிறகே கிடைத்தது. அரசுவின் முயற்சி இல்லை என்றால் இத்தகு அரிய நூல்களை நான் எந்தக் காலத்தும பெற்றிருக்கமுடியாது. எப்படியோ முயன்று சென்னையிலுள்ள அனைத்து நூலகங்களையும் சல்லடையிட்டுச் சலித்து நாட்டிய சாத்திரத்தைப் பெற்றனுப்பினார்.

மனோமோகன் கோஷின் விளக்கவுரையுடன் கிடைத்த அந்த நாட்டிய சாத்திரம்தான் ஆடற்கலை ஆய்வில் என்னைப் பயணப்பட வைத்தது. அருமையான நூல். ஒரு வாரத்தில் முழு நூலையும் படித்து முடித்தேன். பத்து விழுக்காடுகூடப் புரியவில்லை என்றாலும், மீளவும் படிக்கப் படிக்க மலைப்பேற்பட்டதைக் குறிப்பிடவேண்டும். கரணங்கள் பகுதியை விளங்கிக் கொள்ள நூலுடன் குடந்தை சார்ங்கபாணி கோயில் சென்றேன். வரையறைகளைப் படிப்பதும் சிற்பங்களைப் பார்ப்பதுமாகவே ஒரு நாள் சென்றது. ஒரு வாரத்திற்குப் பிறகு தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் சென்று அங்குள்ள கரணச் சிற்பங்களை நூலுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தேன். மெல்ல மெல்லக் கரணக் கதவுகள் திறந்தன. மண் சார் கால் நிலைகள், விண் சார் கால் நிலைகள், அழகுக் கைகள், குறிப்புக் கைகள் எல்லாம் பிடிபட்டன.

தில்லைக்குப் போய்வந்தால் மேலும் தெளிவுகிடைக்கும் என்று வாழ்வரசியுடன் இரு நாள் பயணம் மேற்கொண்டேன். அவர் படிக்கப் படிக்க நான் சிற்பங்களை ஆராய்ந்தேன். மூன்று கோயில்களின் சிற்பங்களுக்கிடையிலும் பற்பல வேறுபாடுகள் இருந்தாலும், அடிப்படையில் ஒன்றுமைக் கூறுகள் இருந்தன. பின்னர் விரிவாக ஆராய வேண்டும் என்ற ஆவலுடன் வயலூர்ப் படிமத்தை அடையாளப்படுத்த முயன்றதில் பயன் கிடைத்தது. பரதர் விளக்கும் 108 கரணங்களுள் ஒன்றான சதுரகரணமாக அது அமைந்தது. அதுவும் இலலிதமும் ஒன்று போல் கால் நிலை பெற்றவை. எனினும் இரண்டையும் வேறுபடுத்த, 'தட்சிணகுட்டிதம்' உதவியது.

ஐந்து மாத கால உழைப்பிற்குப் பிறகு கட்டுரையுடன் வயலூர் சென்றேன். திரு.ஏகாம்பரநாதனிடம் ,'சுந்தர தாண்டவம்' என்ற பெயரில் ஒரு தாண்டவமே இல்லையென்று கூறிக் கட்டுரையை அளித்தேன். 'அப்படியானால் தலவரலாறு கூறுவது பொய்யா' என்று கேட்டார். தலவரலாற்றில் இருந்த எண்ணற்ற பிழைகளையும் பொய்களையும் சான்றுகளுடன் விளக்கியபோது வருந்தினார். வயலூர்த் தலவரலாறு மட்டுமன்று, எந்தக் கோயில் தலவரலாறும் உண்மை பேசுவதில்லை. தலவரலாறுகளை எழுதுபவர்கள் ஆய்வாளர்கள் அன்று. அதனால் அவர்கள், தங்கட்குக் கிடைக்கும் வழங்கு கதைகளுக்கே முக்கியத்துவம் தந்து அதையே வரலாறு போலக் காட்டிவிடுகின்றனர். கல்வெட்டுகளைப் பற்றிய கண்ணோட்டம் உடைய சிலர், அரசு வெளியிட்டுள்ள கல்வெட்டுச் சுருக்கங்களைப் படித்து அவற்றை அப்படியே மொழிபெயர்த்து தங்கள் தலவரலாற்று நூலில் ஓர் இணைப்பாக வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் அந்தக் கல்வெட்டுக் குறிப்புகளோடு தங்கள் கற்பனையாற்றலைத் திறனுக்கேற்ப கலந்து வரலாற்று மயக்கங்களை உருவாக்கத் தயங்குவதில்லை. வயலூர்த் தலவரலாறு மூன்றாம் வகையைச் சேர்ந்தது.

கல்வெட்டுப் பாடங்களை விளங்கவைத்து, நாட்டிய சாத்திரத்தைப் புரியவைத்து, வயலூர்ப் படிமம் சதுர கரணத்தில் உள்ளமையை விளக்கியபோது திரு. ஏகாம்பரநாதன் ஏற்றுக் கொண்டார். அதுநாள்வரை சுந்தரதாண்டவர் என்ற போர்வை போர்த்தியிருந்த சிவபெருமான் அன்று முதல் அதைக் களைந்து சதுர கரணரானார். 'வயலூரில் ஒரு வடிவழகன்' என்ற தலைப்பில் இத்திருமேனி பற்றிய கட்டுரை, 'இளமையில் குரல்' ஜூன் 1983ம் இதழில் வெளியானது. 'கோச்செங்கணான் யார்' என்ற கட்டுரைக்குப் பிறகு அரும்பாடுபட்டு உழைத்து உருவாக்கிய இந்தக் கட்டுரை ஆடற்கலையில் ஆர்வத்தை வளர்த்தது. நிறைய ஆடற்கலை நூல்களைப் படித்தேன்.

பரதார்ணவம், நாட்டிய தர்ப்பணம், அத்ய ரங்காச்சார்யாவின் உரை பெற்ற நாட்டிய சாத்திரம் என்பன அவற்றுள் சில. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் கோயிலின் கரணச் சிற்பங்கள் என் புரிதலுக்குப் பெரிதும் உதவின. கரணங்களைப் பற்றி ஆழமான ஆய்வுக்குள் நுழைந்தேன்.

அப்போதுதான் புகழ் பெற்ற ஆடற்கலைஞர் முனைவர் பத்மா சுப்ரமணியத்தின், 'Bharatha's Art Then and Now என்ற நூல் கிடைத்தது. அதை முழுவதும் படித்தபோது, அந்நூலில் கூறப்பட்டிருந்த பல கருத்துக்களோடு நான் முரண்பட நேர்ந்தது. கரணங்களில் முனைவர் ஆய்வு செய்த கலைஞர் அவர் என்பதால், என் கருத்து முரண்களை எழுதும் முன் மேலும் தெளிவு பெற விரும்பி, நாட்டிய சாத்திரத்தை முழுவதுமாய் மறுமுறை படித்து, மனோமோகன் கோஷ், அத்ய ரங்காச்சார்யா இவர்கள் கருத்துக் கூறல்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தேன். தில்லை, தஞ்சாவூர், குடந்தைச் சிற்பத்தொகுதிகளை மீளவும் பார்த்து வந்தேன். என் கருத்துக்கள் சரியானவை என்ற தெளிவும் உறுதியும் ஏற்பட்டன. 'கரணக்குழப்பங்கள்' என்ற தலைப்பில் கட்டுரையை உருவாக்கினேன். பல அரங்குகளில், அறிஞர் கூ. ரா. சீனிவாசன் உள்ளிட்ட அறிஞர்தம் முன்னிலையில் இக்கட்டுரையைப் படித்துக் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையிறுத்துப் பின் இதன் இறுதி வடிவத்தைச் செந்தமிழ்ச் செல்விக்கு அனுப்பினேன்.

இக்கட்டுரை 1987 செப்டம்பர் முதல் 1988 மார்ச்சு வரை செந்தமிழ்ச் செல்வியில் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழறிஞர்கள், புலவர்கள், வரலாற்றாய்வாளர்கள் எனப் பலர் இக்கட்டுரைத் தொடரைப் படித்து மடல் எழுதினர். திரு. இராம. சண்முகம் நான்கு பக்க அளவில் அருமையான மடல் ஒன்றை எழுதியிருந்தார். அதில் என் உழைப்பையும் நான் தந்திருந்த வரலாற்று, இலக்கியச் சான்றுகளின் தகைமையையும் பெரிதும் பாராட்டியிருந்தார். எனக்கு மனநிறைவு தந்த தொடக்கக் காலக் கட்டுரைகளுள் அதுவும் ஒன்று.

பாழ்பட்டிருந்த முள்ளிக்கரும்பூர்க் கோயிலை வழிபாட்டிற்குக் கொண்டுவந்தால்தான் சீரமைப்பு இயலுவதாகும் என்று தோன்றியதால், நண்பர்கள் மஜீதையும் இரா.இராஜேந்திரனையும் வரவழைத்து உரையாடினேன். இருவருமே என் கருத்தை ஏற்றதுடன், தேவையான ஒத்துழைப்புத் தரவும் தயாராக இருந்தனர். முள்ளிக்கரும்பூர் ஊர்த் தலைவர், இளைஞர் மன்றத்தார் இவர்களிடமும் கலந்து பேசினேன். ஏறத்தாழ 200 ஆண்டுகளாக வழிபாடு நின்று போயிருந்த அந்தக் கோயிலில் மீண்டும் வழிபாடு என்றதுமே ஊர் முழுவதும் கூடிக் கைகொடுத்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் இயக்குநர் பொறுப்பில் அப்போதிருந்த திரு. நடன காசிநாதன் நேரில் வந்து பணியைத் தொடங்கிவைத்தார். இரா. இராஜேந்திரனின் தலைமையில் வந்த நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களுக்கும் மற்றவருக்கும் எட்டரை திரு. செல்வராஜ், பாலசுந்தரம் இருவரும் மதிய உணவளித்துப் போற்றியதுடன் உடனிருந்தும் உதவினர். கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, இடிந்து விழுந்திருந்த பகுதிகள் அகற்றப்பட்டன. கோயிலுக்குள் மண்மேட்டில் புதைந்திருந்த தென்திசைக் கடவுள், தேவி, சிவலிங்கம், கல் சாளரம் இவற்றை மாணவர்கள் அகழ்ந்தெடுத்தனர்.

இடிந்திருந்த விமானத்தை மூடிக் கூரை வேயப்பட்டது. அன்று மாலை நடந்த நிறைவு விழாவில் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேளாளர் திரு. இரா. காளத்தீசுவரன் வழித் தகவல் அறிந்து திருவாவடுதுறை திருமடத்துத் தலைவர் அருள்திரு சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலைப் பார்க்க வருகை தந்தார். அவருடைய வருகையால் ஊர் மக்கள் பரவசமுற்றனர். அகழ்ந்தெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு ஒளிவழிபாடு நிகழ்த்திய அவர், முற்சியெடுத்த அனைவரையும் வாழ்த்திச் சென்றார். கோயிலில் முறையான வழிபாட்டைத் தொடங்க, மாவட்ட ஆட்சித் தலைவரையும் அவர் துணைவியார் திருமதி சாந்தி நடேசனையும் அழைத்தோம். வயலூர் சிவாச்சாரியார் திரு. ஜம்பு குருக்கள் வழிபாட்டை நிகழ்த்த ஒப்புதலளித்தார். 1984 பிப்ருவரித் திங்கள் 19ம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை அந்தத் திருக்கோயிலில் தேவாரப் பதிகங்களின் இன்னிசை முழக்குடன் வழிபாடு தொடங்கியது.

திருமதி சாந்தி நடேசன் குத்துவிளக்கேற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் வழிபாட்டில் கலந்துகொண்டு பெருமைப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி மனநிறைவை அளித்ததுடன் ஊரோடு சேர்ந்து விழா எடுப்பதிலுள்ள துன்பங்களையும் புலப்படுத்தியது. மாவட்ட ஆட்சித் தலைவர் வருகை தந்ததால் அரசுத் துறைகளின் அணைப்புக் கிடைத்தது. ஊருக்கும் பல நன்மைகள் விளைந்தன. பல பயனாளிகள் உதவித்தொகை பெற்றனர். கோயில்வரை வந்து செல்லச் சாலை அமைத்துத் தரவும் ஏற்பாடானது. விளக்கு வசதிகள் கிடைத்தன. ஒரே நாளில் முள்ளிக்கரும்பீசர் சிராப்பள்ளி மக்களுக்கு அறிமுகமானதுடன் தமிழ்நாட்டு மக்களையும் ஈர்க்கலானார். நானும் நண்பர் இராஜேந்திரனும் ஊர்த் தலைவரிடம் கோயிலை நன்கு பராமரிக்குமாறு வேண்டியதுடன், திருப்பணிக்கு அறநிலையத்துறையை அணுகுமாறும் கூறிவந்தோம்.

கோயிலை ஒட்டிய நிலப்பகுதியை நெல்லடிக்கும் களமாக அவர் பயன்படுத்தி வந்தமையால் திருப்பணிக்குத் தயங்கினார். ஊர் மக்களுள், களத்தைப் பயன்படுத்தியவர்கள், அவருடன் இணைந்து கொண்டனர். திருப்பணி நடந்தால் களம் கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைத் தயங்கவைத்தது. நல்லவேளையாக இளைஞர் மன்றத்தார் உதவிக்கு வந்தனர். அவர்களைக் கொண்டு அறநிலையத்துறைக்கு விண்ணப்பிக்கச் செய்தோம். ஆனாலும், என்ன காரணத்தாலோ திருப்பணி நடைபெறவேயில்லை. என்றாலும், வழிபாடு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் பற்றிய கட்டுரை செந்தமிழ்ச் செல்வி 1983 நவம்பர் இதழிலும், தான்தோன்றீசுவரர், புலிவலம் சுப்ரமணிய சுவாமி கோயில், முள்ளிக்கரும்பூர், காட்டழகிய சிங்கர் கோயில் இவற்றில் கண்டறிந்த கல்வெட்டுகள், 'புதிய கல்வெட்டுகள்' என்ற தலைப்பில் செந்தமிழ்ச் செல்வி 1983 டிசம்பர் இதழிலும் வெளியாயின.

மாடக்கோயில்கள் பற்றிய என் ஆய்வு தொடர்ந்தது. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கோயிலுக்குச் செல்வதைக் கடமையாகக் கொண்டேன். ஒரு மாதத்திற்கு இருமுறையாவது களஆய்வு செய்தோம். தொடக்கத்தில் புரியாமல் இருந்த பல விஷயங்கள் பார்க்கப் பார்க்க வயமாயின. ஒரு கோயிலை அடிப்படைத் தெளிவுகளுடன் முழுமையாகச் செம்மையாகப் பார்த்தால் அது தரும் அநுபவம் ஆயிரம் நூல்களைப் படிப்பதினும் பெரிதென்பதை என் களஆய்வுகள் எனக்கு உணர்த்தின.

ஆய்வுசெய்ய வேண்டும், அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் கோயில்களுக்குச் செல்லத் தொடங்கினேன். என்னுடைய ஆய்வு வாழ்க்கையின் முதல் ஐந்தாண்டுகள் அறிந்துகொள்வதிலேயே முடிந்தன. என்றாலும் 1984ல் இருந்தே கோயில்கள் என்னுடன் உறவாடத் தொடங்கியதை உணர்ந்தேன். எனக்கும் கோயில்களுக்கும் இடையே நட்பு மலர்வதை வியப்போடு பார்த்துவந்தேன். எத்தனையோ ஆய்வாளர்களைச் சந்தித்த கோயில்கள்கூட, எனக்காக ஏதேனும் ஒரு இரகசியத்தைக் காப்பாற்றி வந்தமையை ஒவ்வொரு கோயிலிலும் கண்டறிய நேர்ந்தபோது என் பேறை எண்ணி வியந்து பூரித்தேன்.

தேடுவதில் நான் மகிழ்கிறேன். தருவதில் அவை நிறைகின்றன. நான் தட்டித் திறக்காத கதவுகளே என் ஆய்வு வாழ்க்கையில் இல்லை. விடை கிடைக்காத புதிர்களை விட்டுவிடுவேன். காலம், அந்தப் புதிர்களுக்கு எங்காவது ஒரு மூலையில் விடைகளோடு காத்திருக்கும். உண்மையான உழைப்பைக் காலம் மதிக்கும் என்ற நம்பிக்கையில் எனக்கு இன்றளவும் தளர்வில்லை. முன்பெல்லாம் கோயில்களைத் தேடி நான் சென்றேன். வலஞ்சுழியோடு களப் பயணங்களை முடித்துவிடலாமென்று கருதியபோது சீதாராமன், பத்மநாபன் இணைவில் உடையாளூர் உதயமானது. அங்குதான் எத்தனை புதிய தரவுகள்! இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தபோது முதுகலை மாணவி ஒருவருக்காகப் போசளீசுவரம் மறு ஆய்வு. புதிய கல்வெட்டு ஒன்று கிடைத்தது.

இப்போதுகூட, திருப்பரங்குன்றத்திற்குத் தென்தமிழ்நாட்டுக் குடைவரை ஆய்வுகளை முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பயணப்பட்டேன். கமலக்கண்ணன், ராம், இலாவண்யா மூவரும் கொண்ட முதற் பயணம் குடைவரையின் நுட்பங்களை விளக்கியது. நானும் நளினியும் மேற்கொண்ட இரண்டாம் பயணம், முருகப் பெருமானின் அந்தத் திருக்கோயில் எத்தகு சிற்பப் புதையல்களை உள்ளடக்கியுள்ளது என்பதை உணரச் செய்தது. பரங்குன்றத்தை ஆய்வுசெய்து எழுதியுள்ள எந்த வரலாற்றறிஞருக்கும் கிடைக்காத புதையல்கள் எங்கள் பயணத்தில் கிடைத்தன.

பரங்குன்றத்தில முற்பாண்டியர் கால எழுவர் அன்னையர் சிற்பத் தொகுதியை நானும் நளினியும் கண்டறிந்தோம். இதுநாள்வரை வரலாற்றுலகின் கண்களுக்கு வெளிப்படாதிருந்த இந்த அற்புதத் தொகுதி இறையருளால் இப்போது வெளிப்பட்டுள்ளது. வீரபத்திரராய் சிவபெருமானும் விநாயகரும் எதிரெதிர்ச் சிற்பங்களாய் அமைய, இடையில் எழுவர் அன்னையர். பாண்டியர் தலைநகர் அருகிலேயே இந்தப் பெண்தெய்வ வழிபாட்டுப் புதையல் கிடைத்ததை என்னென்று சொல்வது.

முருகன் குடைவரையில் சிவபெருமான் கருவறையின் அருகே கங்காதரர் சிற்பம் உள்ளது. இந்தச்சிற்பத்தைப் பற்றி இக்குடைவரையை ஆராய்ந்த பலரும் எழுதியுள்ளனர். ஆனால், இதன் கீழுள்ள பகுதியில் பகீரதனின் தவக்கோலமும் நாயொன்றின் சிற்பமும் இருப்பதை இவ்வாய்வாளர்கள் கவனிக்கவில்லை. முதன்முறையாக இவற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளோம். பல்லவர் பகுதியில் கங்காதரரோடு சேர்ந்து கிடைக்கும் இந்த நாயின் சிற்பம் பாண்டியர் பகுதியிலும் இருப்பது, கங்காதரர் அமைப்புக்கும் நாய்க்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறது. அறிஞர்கள் மைக்கேல் லாக்வுட், வெங்கட்ராமன், கூ.ரா.சீனிவாசன் இவர்கள் இத்தொடர்பைப் பற்றி ஆராய்ந்துள்ளார்கள். இருப்பினும் தெளிவான கருத்துக்கள் வரவில்லை. பரங்குன்றம் வழிகாட்டுமா என்று காத்திருப்போம்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.