![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 35
![]() இதழ் 35 [ மே 15 - ஜூன் 14, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பழுவூர்ப் புதையல்கள்
கண்டன் அமுதனுக்கும் மறவன் கண்டனுக்கும் இடைப்பட்ட காலத்தில் பழுவூரை ஆண்டவர்களாகக் குறிக்கப்பெறும் மூவரில் அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்துத் தேவனார் தெய்வமென்றும், தப்பிலிதர்மனும், விக்கிரமாதித்தனும் பழுவூர் அரச மரபின் கிளை வழியினரென்றும் மெய்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்த இடைவெளிக் காலத்தில் பழுவூரை ஆண்டது யாரென்ற கேள்வி எழலாம். தகுந்த சான்றுகள் கிடைக்கும் வரையில் இந்த இடைவெளிக் காலமான நாற்பத்தோராண்டுகளில் தொடர்ந்து அரசாண்டவர்களாகக் கண்டன் அமுதனையும் மறவன் கண்டனையுமே கொள்ளலாம். இவ்வளவு நீட்சியான அரசாட்சியா என்று வியப்படைய ஒன்றுமில்லை. முதலாம் பராந்தகன் நாற்பத்தேழு ஆண்டுகள் சோழநாட்டை ஆளவில்லையா? முதலாம் குலோத்துங்கன் ஐம்பதாண்டுகள் சோழப் பேரரசனாக விளங்கவில்லையா? அப்படியிருக்க இரண்டு மன்னர்கள் நாற்பத்தோராண்டுகளைப் பகிர்ந்து ஆண்டிருக்கலாம் என்பது எவ்வித்தானும் பொருந்துவதே.
மறவன் கண்டனைச் சுட்டும் கல்வெட்டுகள் சுந்தரசோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டிலிருந்து உத்தம சோழனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுவரை கிடைக்கின்றன. அவனிகந்தர்வ ஈசுவரகிரகம், ஆலந்துறையார் கோயில், மறவனீசுவரம், கோவிந்தப்புத்தூர் கங்கசடாதரர் கோயில் ஆகிய கோயில்களிலிருந்து இம்மனரைக் குறிக்கும் பன்னிரண்டு கல்வெட்டுகள் இதுகாறும் கிடைத்துள்ளன. இவற்றுள் பதினோரு கல்வெட்டுகள் ஏற்கனவே படியெடுக்கப்பட்டவை. இவற்றுள் இரண்டு கல்வெட்டுத் தொகுதி ஐந்திலும், ஐந்து கல்வெட்டுகள் தொகுதி பதின்மூன்றிலும், நான்கு தொகுதி பத்தொன்பதிலும் வெளியாகியுள்ளன. பன்னிரண்டாவது கல்வெட்டு, ஆலந்துறையார் கோயிலின் வடக்குச் சுவரிலிருந்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது. இக்கல்வெட்டுகள் மறவன் கண்டனின் கொடை, ஆட்சிமுறை, வரியமைப்புகளில் இம்மனர் மேற்கொண்ட செயல்முறைகள் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குவதுடன், இம்மனரின் அரசு அலுவலர்கள் சிலரையும் அறிமுகப்படுத்துகின்றன. கோவிந்தப்புத்தூரிலுள்ள இம்மனரின் கல்வெட்டொன்று, இவர் கீழ்ப் பெருந்துணையாகப் பணியாற்றிய மனப்பெருமைசாமி என்பார் அக்கோயிலுக்களித்த கொடையைச் சுட்டுகிறது. இக்கல்வெட்டின் பொருளைப் பிழைபட உணர்ந்துகொண்ட நிலையில், 'விசயமங்கலத்து மகாதேவனார் கோயிலுக்கு இவந்தங்கள் வழங்க மனப்பெருமைசாமி என்னும் ஒருவனைத் தன் சார்பாளனாக மறவன் கண்டன் நியமித்தான்' என்று தவறான விளக்கம் தருகிறார் டாக்டர் பாலாம்பாள். இதே மனப்பெருமைசாமி ஆலந்துறையார் கோயிலிலும் விளக்கொன்றிற்காக ஆடுகளைக் கொடையாகத் தந்துள்ளதைக் கல்வெட்டொன்று எடுத்துரைக்கிறது. மறவன் கண்டனின் மகத்தான பணிகளுள் தலையாயதாகக் கருதப்படுவது ஆலந்துறையார் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த திருப்பணியாகும். இப்பணி குறித்து ஆலந்துறையார் கோயிலின் இரண்டு கல்வெட்டுகள் பேசுகின்றன. "ஸ்ரீ கோயில் எடுப்பிச்ச பழுவேட்டரையன் மறவன் கண்டனார் அருளால் எடுப்பித்த மாறபிரான்" என்னும் கல்வெட்டுவரிகள் இக்கோயிலை மறவன் கண்டனார் காலத்தில் மாறபிரான் என்பார் கட்டிய செய்தியைத் தருகிறது. புதிதாகப் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு இதே செய்தியை இன்னும் விளக்கமாகத் தருகிறது. 1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொப்ப 2 ரகேசரி பம்மக்கு ய 3 ¡ண்டு கூ ஆவது அ 4 அடிகள் பழுவேட்டரைய 5 ர் மறவன் கண்டனா 6 ர் கன்மி அடிகள் அ 7 ருளிச் செய்ய சிறு ப 8 ழுவூர் திருவாலந்து ¨ 9 ற திருக்கற்றளி மேனாய 10 கமாக நின்று செய்வித்த 11 மங்கல நாட்டு மங்கலத்து 12 கவிசியன் நக்கன் மாறபி 13 ரானான நம்பியாரூரன் திருவா 14 லந்துறை மகாதேவர்க்கு 15 மூன்று சந்திக்கும் வைத்த 16 தயிரமுது நாராய நாழி 17 யால் நாடுரி நாடுரிக்கு 18 ம் வைத்த சாவா மூவாப் 19 பேராடு இருபது இது என்று முடியும் இக்கல்வெட்டால் திருவாலந்துறை மறவன் கண்டனால் உத்தம சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டிற்கு முன்னரே கற்றளியாக்கப்பட்ட செய்தி கிடைக்கிறது. திரு. தியாகராசன் இக்கோயிலைக் கட்டியவராகக் கண்டன் அமுதனையும், முழுமைபெறச் செய்தவராக மறவன் கண்டனையும் காட்டுகிறார். 'ஆலந்துறையார் கோயிலை அமுதனாரே கி.பி. 917இல் கட்டியுள்ளார். இவர் கி.பி. 919இல் இறந்துவிடவே கருவறை, அர்த்தமண்டபத்துடன் கோயில் பணி பாதியில் நின்றுவிடுகிறது. இதனைக் கி.பி. 985 இல் பூர்த்தி செய்தி கட்டியவன் மறவன் கண்டன் என்ற செய்தி இக்கோயில் தெற்குச் சுவரில் எழுதப்பட்டுள்லது.' இச்செய்தியின் வாயிலாகத் தியாகராசன் தெரிவிக்கும் மூன்று கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். i) 'ஆலந்துறையார் கோயிலை அமுதனாரே கி.பி. 917இல் கட்டியுள்ளார்' என்று கூறும் திரு. தியாகராசன் அதற்கான சான்றுகள் எதையும் அவருடைய தினமலர்க் கட்டுரையின் எந்தவிடத்திலும் தரவில்லை. பழுவூரிலுள்ள ஐந்து கோயில்களின் அனைத்துக் கல்வெட்டுகளையும் முழுமையாக ஆராய்ந்த நிலையில், ஆலந்துறையார் கோயிலைக் கண்டன் அமுதன் கட்டியதாக எந்தக் கல்வெட்டும் சொல்லவில்லை என்பது தெளிவாகிறது. தியாகராசன் மிகவும் குறிப்பாகக் கோயில் கட்டப்பட்ட ஆண்டையும் கி.பி. 917 என்று அறிவிக்கிறார். கி.பி. 917 முதலாம் பராந்தகனின் பத்தாம் ஆட்சியாண்டாகும். இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள் காலத்தால் பழமையானது முதலாம் பராந்தகனின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு என்ற அடிப்படையில்தான் திரு. தியாகராசன் இக்கோயிலின் காலத்தைக் கி.பி. 917 என்று கணித்திருக்கிறார். இது பொருத்தமாகத் தெரியவில்லை. சம்பந்தரின் பாடல் பெற்ற இத்திருக்கோயிலின் முழு வரலாற்றையும் 'கரைந்துகொண்டிருக்கும் காவியக் கோயில்கள்' என்ற தலைப்பின் கீழ் விரிவாகக் காணலாம். ii) 'இவர் (கண்டன் அமுதன்) கி.பி. 919இல் இறந்துவிடவே கருவறை, அர்த்த மண்டபத்துடன் கோயில் பணி பாதியில் நின்றுவிடுகிறது' என்று திரு. தியாகராசன் கூறுவது சரியன்று. கண்டன் அமுதன் கி.பி. 919இல், அதாவது வெள்ளூர்ப் போரில் இறக்கவில்லை என்பதை முன்னரே கண்டோம். எனவே கண்டன் அமுதனின் மறைவால் ஆலந்துறையார் கோயில் பணி பாதியில் நின்றதாகக் கூறுவது பிழையாகும். iii) 'இதனைக் கி.பி. 985இல் பூர்த்தி செய்து கட்டியவன் மறவன் கண்டன் என்ற செய்தி இக்கோயில் தெற்குச்சுவரில் எழுதப்பட்டுள்ளது' என்ற திரு. தியாகராசனின் கூற்றில் பல பிழைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம். அ) இக்கோயில் மகாமண்டபத்தின் தெற்குச்சுவரில் யானையை அழித்த மூர்த்தி கோட்டத்தின் வலப்புறத்தில் உள்ல பரகேசரிவர்மனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டெனையே தியாகராசன் குறிப்பிடுகிறார். இக்கல்வெட்டில், 'கோயிலைப் பூர்த்தி செய்து கட்டியவன் மறவன் கண்டன்', என்ற செய்தி எங்கும் இல்லை. திருவாலந்துறை மகாதேவர்க்கு மாறபிரான் வைத்த கொடைகளைச் சொல்லும் இக்கல்வெட்டு, 'ஸ்ரீ கோயில் எடுப்பிச்ச பழுவேட்டரையர் மறவன் கண்டனார் அருளால் எடுப்பித்த மாறபிரான்' என்று சுட்டியவரையும் கட்டவைத்தவரையும் மட்டுமே சுட்டிக்காட்டுகிறது. கல்வெட்டில் இல்லாத ஒரு செய்தியை இருப்பதாகக் கூறுவது பெரும்பிழை என்பதுடன், வரலாற்றைத் திசைதிருப்பும் தவறான போக்குமாகும். ஆ) திரு. தியாகராசனின் கூற்றுப்படி இக்கோயில் நிறைவுற்றது கி.பி. 985இல். ஆனால் உண்மை அதுவன்று. ஆலந்துறையார் கோயில் கருவறையின் வடபுறச் சுவரில் நான்முகனுக்கு வலப்புறத்தில் சுண்ணாம்புப் பூச்சுக்குள்ளிருந்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையினர் கண்டுபிடித்த உத்தமசோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுச் செய்தியை முன்பெ கண்டோம். 'அடிகள் பழுவேட்டரையர் மறவன் கண்டனார் கன்மி அடிகள் அருளிச்செய்ய சிறுபழுவூர் திருவாலந்துறை திருக்கற்றளி மேனாயகமாக நின்று செய்வித்த மங்கல நாட்டு மங்கலத்து கவிசியன் நக்கன் மாறபிரான்' என்ற இக்கல்வெட்டு வரிகள் ஆலந்துறையார் கோயில் உத்தம சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டிற்கு முன்பாகவே, அதாவது கி.பி. 979க்கு முன்னரே கற்றளியாக்கப்பட்ட உண்மையை உணர்த்துகின்றன. இக்கல்வெட்டைத் திரு. தியாகராசன் பார்க்கவில்லை என்ற உண்மையும், இக்கோயில் கி.பி. 985இல் கட்டப்பட்டதாகக் கூறும் அவருடைய கூற்றினால் உள்ளங்கைக் கனியாய் உறுதிப்படுகிறது. இ) டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவை, பழுவூர்க் கோயில்களில் முழுமையான அளவில் ஆய்வுகள் நிகழ்த்தி இதுநாள் வரையில் படியெடுக்கப்படாத பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அஞ்சல் வழிக் கருத்தரங்கினர் வெளியிட்ட திரு. தியாகராசனின், 'பழுவேட்டரையர் பள்ளிப்படைக் கோயில்' என்ற கட்டுரையின் அடிக்குறிப்புகள் பகுதியில், 'இவ்வூர்க் கோயிலில் பதினைந்திற்கும் பேற்பட்ட புதிய (இதுவரை படியெடுக்கப்படாத) கல்வெட்டுகளையும் கண்டறிந்து, அவைகளும் படித்து வரப்பட்டன' என்ற செய்தி காணப்படுகிறது. இக்கல்வெட்டுகள் 1987 சனவரி மாதத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டதாகவும் திரு. தியாகராசனே கூறுகிறார். இச்செய்தி உண்மையானால், உத்தம சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டை இவர் ஏன் தம்முடைய தினமலர்க் கட்டுரையில் குறிப்பிடவில்லை. இவருடைய தினமலர்க் கட்டுரை டிசம்பர் 1987-இல் வெளியானது என்பதை நினைவில் இருத்த வேண்டும். சனவரி 1987-இல் இவரால் பதினைந்து புதிய கல்வெட்டுகள் ஆலந்துறையார் கோயிலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உத்தம சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் அவற்றில் ஒன்றாகவல்லவா இருந்திருக்கவேண்டும். அப்படியாயின் மறவன் கண்டன் ஆலந்துறையார் கோயிலைக் கி.பி. 979க்கு முன்னரே கற்றளியாக்கிய செய்தியும் திரு. தியாகராசனுக்குக் கிடைத்திருக்குமே. பின் ஏன் தினமலர்க் கட்டுரையில் கி.பி. 985-இல்தான் மறவன் கண்டன் ஆலந்துறையார் கோயிலைக் கட்டி முடித்ததாக எழுதவேண்டும்? உண்மை இதுதான். திரு. தியாகராசன் உத்தம சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டை, இவருடைய 25-1-1987 கள ஆய்வின் போது காணவில்லை. இக்கல்வெட்டை முதன்முதலில் கண்டறிந்து வெளிப்படுத்திய பெருமை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவைக்கே உரியது. பழுவூர்க் கோயில்களை நன்கு கள ஆய்வு செய்த திரு. எச். ஆ. பாலசுப்பிரமணியம் கூட, இக்கல்வெட்டைத் தம் நூலில் யாண்டும் குறிப்பிடாததே, அவரும் இக்கல்வெட்டைப் பார்க்கவில்லை என்பதை மெய்ப்பிக்கப் போதுமானதாகும்.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |