http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 35

இதழ் 35
[ மே 15 - ஜூன் 14, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆய்வேடுகளின் அருமை
போசளீசுவரம் கோயிலில் புதிய கல்வெட்டு
பைசாசம் - வாசகர் எண்ணங்கள்
பைசாசம் - ஒரு விமர்சனம்
பழுவூர் - 14
உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 7
கோயில்களும் கலைகளும்
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 1
தமிழின் பெருமையைக் குறைசொன்னாரா மதன்?
Links of the Month
சங்ககாலத்து உணவும் உடையும் - 1
இதழ் எண். 35 > தலையங்கம்
ஆய்வேடுகளின் அருமை
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

வரலாறு டாட் காம் தனது மூன்றாம் ஆண்டு நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் வரலாற்றுலகில் அதன் பங்களிப்பை, அதன் பலம் மற்றும் பலவீனங்களை, மேலும் எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம் என்பது பற்றிய யோசனைகளை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வணிகப் பின்புலம் எதுவுமின்றி விளம்பரம் சிறிதுமின்றி உள்ளடக்கத்தின் பலத்தை மட்டும் நம்பி நடைபோடும் நமது மாத இதழின் மிகப்பெரிய சக்தி விடாமல் அதனை வாசித்து வரும் வாசகர்களும் அவர்தம் கருத்துக்களும்தான். வருடத்திற்கு வருடம் வளர்ந்துவரும் உலகளாவிய வாசகர் எண்ணிக்கை, இணைய மாத இதழ் பற்றிய நமது நம்பிக்கையை மெய்ப்பித்துள்ளது. இணையத்தில் பத்திரிக்கை படிப்பது அத்தனை சுலபமான விஷயமாக இல்லாவிட்டாலும் வாசகர்கள் அந்த சிரமங்களைப் பொருட்படுத்தாது தொடர்ந்து படிப்பது நமது முயற்சியில் நமக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது. கண்ணால் காணமுடியாத அத்தனை வாசகர்களையும் நோக்கிக் கைகூப்புகிறோம். உங்கள் பின்னுட்டங்களுக்கு உரிய நேரத்தில் பலமுறை பதிலளிக்க முடியாமல் போவதற்குக் காரணம் கடுமையான நேர நெருக்கடிதான். சொந்த வாழ்வின் கடமைகளிலிருந்து வழுவிவிடாமல், அலுவலகப் பணிகளில் பிழறிவிடாமல் இடையில் அகப்படும் கால் மணி அரைமணி நேரங்களில் வரலாற்றுக்காக உழைப்பது ஒரு இன்ப அவஸ்தை. வாசகர்கள் நமது நிலைமையைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்.

ஆனந்த விகடனின் முன்னாள் உதவியாசிரியரும் தற்போது பிரபலமான தாளிகைக்காரராக (Media person) விளங்குபவருமான திரு. மதன் சென்ற இதழில் வெளியான திரு கமலக்கண்ணனின் பகிரங்கக் கடிதத்தையும் அதனைத் தொடர்ந்து நமது வலைப்பூவில் வெளியான வாசகர் கருத்துக்களையும் மதித்து நமது கேள்விகளுக்கான தன்னிலை விளக்கத்தை ஆனந்த விகடனில் அளித்துள்ளார். இதற்காக அவருக்கும் விகடன் பத்திரிக்கைக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது கருத்துக்களைத் தொடர்ந்து நமக்குக் கிடைத்த வாசகர் கருத்துக்களையும் மதனின் விளக்கத்திற்கான திரு கமலக்கண்ணனின் பதிலையும் இந்த இதழில் காணலாம். தனிப்பட்ட முறையில் யாரையும் எவரையும் காயப்படுத்தாது - காயப்படுத்தும் நோக்கமில்லாது - முற்றிலும் ஆரோக்கியமான முறையில் நடைபெறும் இந்த சுவையான விவாதங்கள் தமிழர்களின் வரலாற்றுணர்வை மேலும் தட்டியெழுப்பும் என்று நம்புகிறோம்.

நிற்க.

தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் வரலாறு சார்ந்த ஆய்வுகள் (Phd / Research) பலப்பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முன்னணி வரலாற்றாசிரியர்களாக விளங்கியவர்களும் விளங்குபவர்களும் ஒரு காலத்தில் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணாக்கர்களாக இருந்தவர்களே என்பதை மனதில் கொள்ளும்போது பல்கலைக் கழக ஆய்வுக் களங்களை "பிற்கால வரலாற்றாசிரியர்களை உருவாக்கும் பட்டறைகள்" என்று அழைப்பதே தகும்.

இன்றைய தேதியில் நிலவும் சூழலில் வரலாற்றாய்வில் ஈடுபடுபவர்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் :
- பல்கலைக்கழகப் பின்புலத்துடன் வரலாற்றுத் துறையில் ஆசிரியர் / துணைப் பேராசிரியர் / பேராசிரியர் பணியில் இருப்பவர்கள்
- பல்கலைக்கழகப் பின்புலமின்றி மற்ற அரசாங்க / தனியார் நிறுவனங்களின் நல்கையுடன் ஆய்வில் ஈடுபடுபவர்கள்
- முற்றிலும் ஆர்வம் காரணமாக கைக்காசை செலவழித்து ஆய்வில் ஈடுபடுபவர்கள்

சுருங்கச் சொல்லின், கல்விச் சுழல் அல்லது பணிச்சூழலின் பாற்பட்டு ஆய்வில் ஈடுபடுபவர்கள் ஒருவகை; தனிப்பட்ட ஆர்வம் காரணமாக ஆய்வில் ஈடுபடுபவர் மற்றொரு வகை. இந்த இரு சாராருமே தொடர்ந்து வரலாற்றுலகிற்கு பல அரிய பெரிய செய்திகளை அளித்தவண்ணம் இருந்திருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

ஒரு துறையில் அல்லது தலைப்பில் புரியப்படும் ஆய்வு என்பது என்ன ?

இதுவரை அந்தக் குறிப்பிட்ட துறையில் அல்லது தலைப்பில் திரட்டப்பட்டுள்ள அத்தனை செய்திகளையும் மனதில் உள்வாங்கிக்கொண்டு தனிப்பட்ட முறையில் நாள்கணக்கில் உழைத்து இதுவரை உலகிற்குத் தெரியாத செய்திகளை வெளியிற் கொண்டுவருவதாம். சிலசமயங்களில் முன்பு எவராலோ புரியப்பட்ட ஆய்வு முடிவுகளை மறுத்துப் புரியப்படும் மறு ஆய்வுகளும் உண்டு. வரலாற்றுத் துறை மட்டுமல்லாது பொதுவாக எல்லாத் துறைகளுக்கும் இந்த வரைவிலக்கணம் பொருந்தும்.

ஒரு உதாரணத்தைக் காண்போம்.

"தென்னகத்தில் கண்ணபெருமான் வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் தலைப்பில் ஒருவர் ஆய்வு புரிய முனைகிறார் என்று எடுத்துக் கொள்ளுங்கள். இவருடைய ஆய்வின் இயல்பு என்ன ?

முதலில் சங்ககாலம்தொட்டு வழங்கிவரும் அத்தனை இலக்கியங்களிலும் கண்ணனைப் பற்றிய செய்திகள் எங்கெல்லாம் விரவி வந்துள்ளன என்பதை அவர் தொகுத்தாக வேண்டும். பின் கண்ணனைப் பற்றிக் குறிப்பிடும் செய்திலகளுக்குப் பல்வேறு உரையாசிரியர்கள் கொடுத்துள்ள பொருட்களை ஆராய்ந்தாக வேண்டும். "நிச்சயமாக இந்தக் குறிப்பு கண்ணனைக் குறிப்பதுதான்" என்பதிலிருந்து "ஒருவேளை இந்தத் தொடர் கண்ணனைக் குறிப்பதாக இருக்கலாம்" என்று ஐயப்பாடு தோன்றும் குறிப்புக்கள் வரை படித்து அலசி ஆராய்ந்தாகவேண்டும். இது எளிதான செயல் அல்ல. ஏனெனில் இன்றைக்கு ஒரு சொல்லை நாம் புரிந்துகொள்ளும் அதே முறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் அந்தச் சொல்லை வழங்கி வந்திருப்பார்கள் என்பது நிச்சயமில்லை.

உதாரணமாக, தொல்காப்பியம் பொருளதிகாரத்தில்

"மாயோன் மேயக் காடுறை உலகமும்"


என்றொரு சொற்றொடர் வருகிறது. இதில் மாயோன் என்று குறிக்கப்படும் தெய்வம் இன்றைக்கு நாம் குறிப்பிடும் திருமாலா அல்லது கண்ணனா (முல்லை நிலத் தொடர்பு) அல்லது வேறு ஏதாவது கடவுளா என்பது பற்றி உறுதியாகச் சொல்வதற்கில்லை. சங்க இலக்கியங்களில் அதிக வேகத்துடன் தலைகாட்டாத கண்ணன் தன் முழுப் பரிமாணங்களையும் சிலப்பதிகார காலத்தில் வெளிப்படுத்திக்கொள்வதை இந்த ஆய்வில் ஈடுபடுபவர் முன்வைத்து விளக்கியாக வேண்டும். அது மட்டுமா ? இதே காலகட்டத்தில் வடநாட்டில் "பாகவத இயக்கம்" என்று சொல்லப்படும் கண்ணன் பக்தி எவ்வாறு வளர்ந்தது என்பதையும் ஆராய்ந்தாகவேண்டும். இந்தியாவில் கிடைத்த மிக மிகத் தொன்மையான கல்வெட்டுக்களில் ஒன்றான கிரேக்கத் தளபதி ஒருவரின் கல்வெட்டு எப்படி வாசுதேவ கிருஷ்ண வழிபாட்டைக் குறிக்கிறது என்பதையும் கிரேக்க வீரர் ஒருவர் கிருஷ்ணனின் பக்தராவதற்கு அந்நாளில் எந்தத் தடையுமில்லை என்பதையும் அவர் விரிவாக விளக்கியாக வேண்டும். இதற்குப் பின் களப்பிரர் காலத்தில் கண்ணன் பக்தி எவ்வாறு இருந்தது என்றும் பின்வந்த பல்லவர் காலத்தில் வடிக்கப்பட்ட மாமல்லபுரத்துக் கிருஷ்ண மண்டபத்தையும் மகேந்திரர் குடைவித்த முராரி விஷ்ணுக்கிருகத்தையும் முராரி என்று கண்ணனைக் குறிக்கும் சொல் திருமாலான விஷ்ணுவுடன் சம்மந்தப்படுத்தப்படுவதையும் அவருடைய ஆய்வில் தெளிவாக்க வேண்டும்.

அப்பப்பா ! பெரிய பணிதான். ஆய்வு என்றால் சும்மாவா ?

மேற்கூறிய தலைப்பில் ஆய்வில் ஈடுபட விழையும் ஒருவரின் மனத்தில் முதலில் உருவாகும் கேள்வி "இதே தலைப்பில் வேறு எவராவது முன்னரே ஆய்வு புரிந்துள்ளார்களா ? அப்படியெனில் அவருடைய ஆய்வு முடிவுகள் என்ன ?" என்பதே. இதற்காக அவர் ஒவ்வொரு பல்கலைக்கழகமாக ஏறி இறங்கியாக வேண்டும் - ஏனெனில் இன்னின்ன பல்கலைக் கழகங்களில் இந்த வருடங்களில் இவர் இந்தத் தலைப்பில் ஆய்வு புரிந்துள்ளார் என்னும் முறைப்படுத்தப்பட்ட தகவல் எங்குமே கிடையாது !! எங்குமே கிடையாதா ? என்று அலறாதீர்கள். ஆம், எங்கும் கிடையாது. அவ்வளவுதான். ஆக அவர் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் நேரில் சென்றாக வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் பல்கலைக் கழகங்களுக்குப் பயணப்படுவது அத்தனை எளிதான செயல் அல்லவே ? என்கிறீர்களா ? அதனை யார் மறுக்கிறார்கள் ? ஆய்வு என்றால் சும்மாவா ?

அந்தோ ! அவருடைய அவலம் இத்துடன் நிற்கப்போவதில்லை. மேலும் கேளுங்கள்.

முதல் பல்கலைக்கழகத்தில் அவர் நேரே சென்று வரலாற்றுத்துறை பேராசிரியர்களைத் தேடிச் செல்வார். அந்தப் பேராசிரியர்களிடம் தம் பல்கலைக் கழகத்திலேயே அதுவரை நடைபெற்ற அத்தனை ஆய்வுகள் பற்றிய ஒரு பட்டியல்கூட இருக்காது என்பது நிச்சயம். "போய் நூலகத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் !" என்பதாகத்தான் பதில் கிடைக்கும். நூலகத்திற்குச் சென்றால் "சங்ககால மனிதர்களின் வாழ்வில் விளையாட்டு", "திராவிட இயங்கங்களின் இலக்கியப் பணி" என்று சம்மந்தமில்லாத தலைப்புக்களில் நான்கைந்து ஆய்வேடுகள் அங்குமிங்கும் சிதறிக்கிடக்குமே தவிர அந்தப் பல்கலைக்கழகத்தில் பற்பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆய்வுகளின் ஒரு பட்டியல்கூடக் கிடைக்காது. வெளியில் சென்று காப்பி சாப்பிடும் அவசரத்தில் இருக்கும் நூலகர் "இங்கே இருப்பதுதான் சார் ஆய்வு ! மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது - வேண்டுமானால் படியுங்கள். இல்லையேல் வீட்டுக்குப் போய்ச்சேருங்கள் !" என்பதாகத்தான் பதில் கொடுப்பார். எத்தனை துறை அறைகளில் ஏறி இறங்கினாலும் - அந்தப் பல்கலைக்கழகத்தின் மூலை முடுக்குளிலெல்லாம் அலசி ஆராய்ந்தாலும் அவர் தேடி வந்த தகவல் அகப்படாது. இவ்வாறாகக் கண்ணபிரானின் மூலங்களைத் தேடி வந்தவர் கடுமையாக தண்டிக்கப்படுவார். ஆய்வு என்றால் சும்மாவா ?

இரண்டு பல்கலைக்கழகங்களில் இத்தகைய அனுபவத்தை அடைந்தவர் விரக்தியடைந்து தானே ஆய்வில் ஈடுபடுவார். Starting from zero என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். அதாவது இதுவரை நடந்த ஆய்வுகளின் சாரங்களையும் முடிவுகளையும் தெரிந்துகொள்ளாமல் முன்பு எவரோ புரிந்த அதே வேள்வியில் இவர் மீண்டும் ஈடுபடுவார். இதனால் கடுமையான உழைப்புச் சேதம் நேரிடுகிறது என்பது மட்டுமல்லாமல் புதிய முடிவுகள் வருவது சாத்தியமற்றது என்பதும் தெளிவு.

இன்னின்ன வருடங்களில் இன்னார் இந்தத் தலைப்பில் ஆய்வு செய்தார் என்னும் சிறு தகவலைத் திரட்டுவது கல்வித்துறைக்கு அத்தனை சிரமமான காரியமா என்ன ? ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பல்கலையிலும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளிவில்தானே ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன ? இந்தச் சிறிய தகவலைத் திரட்டி இணையத்தில் வெளியிட்டுவிட்டால் பல மாணவர்கள் அதனால் பயன்பெறுவார்கள் அல்லவா ?

அட, கிடக்கட்டும் சார், யாருக்கு வேண்டும் கண்ணபிரானும் ஆய்வும் என்கிறீர்களா ?

இன்று அயோத்தியை வைத்து அரசியல் செய்தவர்கள் நாளை மதுராவை வைத்து அரசியல் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? அப்போது கண்ணபிரான் வழிபாட்டின் தோற்றம் எங்கே எப்போது எவரால் உண்டாக்கப்பட்டது என்னும் கேள்வி மிகுந்த சர்ச்சைக்குரிய ஒன்றாக ஆகிவிடுமல்லவா ? குழப்பவாதிகள் உண்டாக்கும் அரசியல் இருட்டில் நேர்மையான ஆய்வுகள் மட்டும்தானே உண்மை ஒளியைப் பாய்ச்சியாகவேண்டும் ?

மிக்க அன்புடன்
ஆசிரியர் குழுthis is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.