http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 50
இதழ் 50 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
இங்கு கூடியிருக்கும் அனைவரையும் வணங்கி என் உரையைத் துவக்குகிறேன். வரலாறு கற்பிப்பதையோ, வரலாற்றாய்வு மேற்கொள்வதையோ முழுநேரத் தொழிலாகக் கொள்ளாத ஒரு குழுவினரால் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் ஒரு நூலின் வரலாற்றை உரைக்கும் இவ்வுரையில், எங்கள் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன்மூலம், எதிர்காலத்தில் இத்தகைய பணியை மேற்கொள்ள விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவையும், தவிர்க்கவேண்டிய தேவையில்லாத சிரமங்களையும், எதிர்நோக்கியிருக்கவேண்டிய சிக்கல்களையும் முன்கூட்டியே அறிவித்து வழிகாட்ட வேண்டியதுதான் முக்கியக் குறிக்கோள். யாரையும் புண்படுத்தவேண்டும் என்பதோ எங்களை எல்லோரும் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதோ எங்கள் நோக்கம் அல்ல என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்திவிடுகிறோம்.
எல்லோருக்கும் ஒரு வரலாறு இருப்பதுபோல், ஐராவதிக்கும் ஒரு வரலாறு உண்டு. 2003 ஏப்ரல் 15. மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் Early Tamil Epigraphy நூல் வெளியீட்டு விழா. வரலாறு.காம் உதயாமாகியிருக்காத நேரம். பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தின் உறுப்பினர்களாகவும், சோழவரலாற்றுப் புதின நேயர்கள் என்ற நிலையிலிருந்து தமிழ்நாட்டு வரலாற்று ஆர்வலர்களாக மாறியிருந்த நேரம். வந்தியத்தேவன் சென்றுவந்த இடங்களுக்கு ஓர் இன்பச்சுற்றுலா சென்றுவிட்டு வந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில்தான் இத்தகைய வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் தொல்லியல் ஆய்வாளர்கள் என்றால், முகமது பின் துக்ளக் திரைப்படத்தில் வரும் பேராசிரியரைப் போன்றுதான் எண்ணிக்கொண்டிருந்தோம். அன்று விழா அரங்கில் மேடையில் அமர்ந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, 'இவர்கள் எல்லாம் யார்?' என்று சுந்தர் பரத்வாஜைக் கேட்டோம். அவரும் மிகப்பொருத்தமானதொரு பதிலைச் சொன்னார். 'திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் வரலாற்றாய்வு உலகில் இவர்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் இந்தமேடை மிகவும் அரிதானது' என்றார். அப்போது பெரும் வியப்பு ஏற்பட்டது. பேராசிரியர் எ.சுப்பராயலு, முனைவர் இரா.நாகசாமி, பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, முனைவர் கொடுமுடி சண்முகம், முனைவர் இரா.கலைக்கோவன், பேராசிரியர் ப.சண்முகம் என அத்தனை அறிஞர்களும் ஒன்று திரண்டு வந்து சிறப்பிக்கிறார்கள் என்றால், மகாதேவன் எத்தகைய சிறப்பு மிக்கவராக இருப்பார் என்று கற்பனை செய்துகொண்டோம். தமிழ்நாடு தொல்லியல் கழகம் என்ற அமைப்பின் அறிமுகமும் அன்று கிடைத்தது. அதன்பிறகு, முனைவர் சு.இராஜவேலு அவர்களின் அறிமுகத்தால், அதே ஆண்டு ஜூலை 19, 20 தேதிகளில் தமிழகத் தொல்லியல் கழகம் வேலூரில் நடத்திய ஆண்டுக் கருத்தரங்குக்குச் செல்ல அழைப்புக் கிடைத்தது. அங்குதான் பேராசிரியர் எ.சுப்பராயலு, பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, புலவர் செ.இராசு ஆகியோருடன் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவர்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் நாங்கள் திளைத்திருந்தாலும், எங்கள் முகம் அவர்கள் மனதில் பதியுமளவிற்கு நாங்கள் எதையும் அப்போது சாதித்திருக்கவில்லை. இரண்டுநாள் கருத்தரங்கின் இரண்டாம் நாளன்று, கள ஆய்வுக்காக வேலூர் அருகிலுள்ள திருமலைக்கு அழைத்துச் சென்றார்கள். திரும்பி வரும்வழியில், அங்கிருந்த ஒரு சமண மடத்தில் திரு. மகாதேவன் அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடைபெற்றது. வரலாற்று அறிஞர்கள் மட்டுமல்லாது, வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் பாராட்டுகிறார்களே என்று மேலும் வியந்தோம். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே அமையும் என்று எண்ணியிருக்கவில்லை. கலைக்கோவன் அவர்கள் கள ஆய்வுகளுக்குச் செல்லும்போது நாங்களும் சேர்ந்துகொண்டு ஆய்வு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டிருந்தோம். கோயில்களிலும் தொலைபேசியிலும் பேசிக்கொள்வதைவிட, கார் பயணங்களில் நாங்கள் உரையாடிக் கொண்டதுதான் அதிகம். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில்தான் திரு. மகாதேவன் அவர்களைச் சந்திக்கவேண்டும் என்ற விருப்பத்தை முன்வைத்தோம். எப்போதும் எங்கள் ஆர்வத்துக்குத் தடைபோடாத டாக்டர், இந்த விருப்பத்தையும் ஊக்குவித்தார். மகாதேவன் இளைஞர்களைச் சந்திப்பதையும் அவர்களோடு உரையாடுவதையும் மிகவும் விரும்புபவர் என்று கூறி, மகாதேவனிடம் நேரமும் வாங்கித் தந்தார். வழக்கம்போல நாங்கள் அவரது இல்லத்தை அடையச் சற்றுத் தாமதமாகிவிட்டது. வெப்பம் மிகுந்த ஒரு கோடைநாளின் மாலை நேரத்தைத் தனது இல்லத்திற்கருகிலிருந்த பூங்காவில் கழித்துக் கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்யலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே அணுகினோம். அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், இவ்வளவு நேரம் உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். வாருங்கள் இல்லத்திற்குச் செல்லலாம் என்றுகூறி அழைத்துச் சென்றார். ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர், தொல்லியல் துறையில் அறிஞர்கள் அனைவரும் வியக்கும் ஓர் ஆளுமை படைத்தவர், எங்களைவிட வயதில் மிக மூத்தவர், நாங்கள் இப்போதுதான் முதல் அடியை எடுத்துவைத்திருக்கும் துறையில், பழம் தின்று கொட்டை போட்டவர் என்று எங்கள் மனதில் ஓர் உருவம் பதிந்திருந்ததால், சற்று மரியாதையுடன் எச்சரிக்கையாகவே உரையாடலை ஆரம்பித்தோம். ஆனால் அவர், ஆரம்பத்திலிருந்தே சற்று நகைச்சுவையைக் கலந்தே பேசிவந்தார். எங்களின் தயக்கத்தைப் போக்கி, இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அப்படிப் பேசுகிறார் என்று எண்ணினோம். ஆனால், போகப்போக, அவரது இயல்பே அப்படித்தான் என்பதை உணர்ந்துகொண்டோம். அடுத்து நிகழ்ந்த சந்திப்புகளின்போது அவரது குழந்தைத்தனம் நிறைந்த மனதை மட்டுமல்லாது, இந்தத் துறையில் அவர் எத்தகைய உயரத்தைத் தொட்டிருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டோம். இத்தனை சாதித்திருந்தும், அனைவரிடமும் எளிமையாகப் பழகும் அவரது குணத்தைக் கண்டு வியந்தோம். பிறகு, 2006ம் ஆண்டு மே மாத இறுதியில் திருக்கோளக்குடி மற்றும் குன்றக்குடி சென்று திரும்பிக்கொண்டிருந்த மற்றொரு கார் பயணத்தின்போதுதான் இந்த எண்ணம் உருவானது. அதற்குமுன்பே மகாதேவனின் பணிப்பாராட்டு மலர் பற்றி உரையாடியிருக்கிறோம் என்றாலும், திட்டம் தீட்டப்பட்டது இப்பயணத்தின்போதுதான். இப்பணிப்பாராட்டு மலரை ஆய்வுலகிலும் பதிப்புலகிலும் அனுபவம் மிக்க ஓர் அமைப்புதான் செய்யவேண்டும் என்று நாங்கள் கருதினோம். எனவே, மகாதேவனுடன் இணைந்து பணியாற்றிய பல அறிஞர் பெருமக்களைக் கொண்ட தமிழ்நாடு தொல்லியல் கழகம் செய்வதுதான் சிறப்பாக இருக்கும் என்று கருதியதால், அவர்களை அணுகினோம். அப்போது அவர்களுக்குப் பல்வேறு பணிச்சுமைகள் இருந்தமையால், இப்பணியை நாங்களே ஏற்குமாறு ஆயிற்று. முதலில் திரு. மகாதேவனின் அனுமதியைப்பெற்று, அவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வறிஞர்களின் கட்டுரைகளைத் தொகுத்து, மகாதேவனைப் பற்றிய கட்டுரைகளையும் இணைத்து, வெளியிட முடிவுசெய்தோம். மகாதேவனும் சம்மதித்தார். முதலில் நாங்கள் திட்டமிட்டது மலர் எப்படி வரவேண்டும் என்றும் யார் யாரிடம் கட்டுரைகள் கேட்பது என்றும் முடிவெடுப்பதற்கு இரண்டு மாதங்கள், அறிஞர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெறுவதற்கு ஒரு மூன்று அல்லது நான்கு மாதங்கள், அச்சடிக்க இரண்டு அல்லது மூன்று மாதங்கள் என மார்ச் 2007ல் வெளியிடுவதென்று தீர்மானித்தோம். அதன்படி மகாதேவனிடம் அனுமதி பெற்று, கட்டுரைகளுக்கான அழைப்பையும், பணிப்பாராட்டு மலர் பற்றிய அறிவிப்பையும் அக்டோபர் மாதத்தில் வெளியிட்டோம். ஆறு மாதங்கள் என்பது ஒரு தரமான நூலை வெளியிட முடியாத அளவிற்கு மிகக் குறுகிய காலம் என்பது எங்களுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. ஆயிரம் ரூபாய்த் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில், டாக்டரிடம் நாங்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, ஏன் உங்கள் நூல்கள் வெளியாக மிகவும் காலதாமதமாகின்றன என்பதுதான். அப்போது அவர் சொன்ன தர அளவுகோல்களைப் பற்றியெல்லாம் ஓரளவிற்குப் புரிந்திருந்தாலும், இந்த ஐராவதிதான் அதை முழுமையாகப் புரியவைத்தது. முதலில் கட்டுரைகளை வேண்டி, அறிஞர்களை அணுகினோம். மகாதேவன் அவர்களிடமே ஒரு பட்டியலை வாங்கி, வெளிநாட்டு அறிஞர்கள், தமிழ்நாட்டுக்கு வெளியே வசிக்கும் அறிஞர்கள், தமிழ்நாடுவாழ் அறிஞர்கள் என வகைபிரித்துக்கொண்டு தொடர்புகொண்டோம். நாங்கள் கட்டுரைகள் வேண்டிய சுமார் ஐம்பது அறிஞர்களில், 80 சதவீதம் பேர் கட்டுரை தர இசைந்தார்கள். எஞ்சியவர்களிடமிருந்து மறுமொழிகள் கிடைக்கவில்லை. முதலில் ஜனவரி 2007 இறுதிவரை கால அளவு நிர்ணயித்திருந்தோம். ஜனவரி இறுதியில் எங்கள் கைக்குக் கிடைத்த கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு. பிறகு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிப்புச் செய்து ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பினோம். அதற்கு விளைந்த பலன் மேலும் ஐந்து கட்டுரைகள். பிறகு இறுதிக்கெடு என்ற பெயரில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு ஏழு கட்டுரைகளைப் பெற்றோம். இருப்பினும், நாங்கள் மிகவும் எதிர்பார்த்த அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேண்டியிருந்தன. சில அறிஞர்கள் மேலும் சில மாதங்கள் கால அவகாசம் கேட்டனர். அடுத்தமுறை மகாதேவனைச் சந்தித்தபொழுது இதைக்கூறி வருத்தப்பட்டோம். 'நீங்கள் இளைஞர்கள். அதனால் எல்லாம் வேகமாக நடைபெறவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். நான் இதை முன்பே எதிர்பார்த்தேன்.' என்றார். பிறகு இராமச்சந்திரனுடன் அவருக்கேற்பட்ட நெருக்கம் எங்களுக்குப் பேருதவி புரிந்தது. ஏன் ஒரேயொரு கட்டுரையை அனுப்புவதற்காக அறிஞர்கள் இத்தனை தாமதப்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. தர விருப்பமில்லாதவர்கள் தங்கள் விருப்பமின்மையை எங்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் தடையாக இருந்தது எது என்பதும் எங்களுக்குப் புரியவில்லை. அப்போது ஒன்று மட்டும் எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஓர் ஆய்வறிஞரின்மீது ஒரே மாதிரியான மதிப்பை எல்லா ஆய்வாளர்களும் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதுதான் அது. அதுவரை நாங்கள் பார்த்திருந்த மகாதேவன் எங்களுக்குப் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தார். அதே பிரமிப்பு எல்லா ஆய்வாளர்களுக்கும் இருக்கும் என்று நாங்கள் எண்ணியதுதான் பிழை. வரலாற்று ஆய்வுலகில் இப்போதுதான் தடம்பதித்திருக்கும் எங்களை ஈர்த்த மகாதேவனின் ஆளுமைக்கும் அவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்ட மற்றும் அவருடன் கருத்தியல் ரீதியாக மோதிக்கொண்ட ஆய்வாளர்களின் மனதில் இருக்கும் மகாதேவனின் பிம்பத்திற்கும் மலையளவு வேறுபாடு இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை. சிந்துவெளி ஆய்விலும் பிராமி எழுத்துரு ஆய்விலும் சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆய்வு செய்த மகாதேவனின் ஆய்வு முடிவுகளையும் ஆய்வனுபவத்தையும் யாராலாவது மறுக்கமுடியும் என்றே நாங்கள் யோசித்திருக்கவில்லை. அதனால் இந்த ஐராவதி மூலம் ஏற்பட்ட அனுபவம் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. இருப்பினும், காலநீட்டிப்புச் செய்துசெய்து, ஜூன் 2008ல் சுமார் 35 கட்டுரைகளைச் சேகரித்தோம். நூலை வெளியிடுவதற்கான தேதியை முடிவு செய்துவிட்டு, லே-அவுட் வேலைகளை ஆரம்பித்தோம். இதுவரை சந்தித்த சிக்கல்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்னுமளவுக்கு இதில் புதிய பல பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. ஒரே மொழியில் அமைந்த ஒரு சாதாரண நூலை அச்சிடுவதற்கும் இருமொழிகொண்ட ஓர் ஆய்வுநூலை வெளியிடுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. வரலாறு.காம் ஒரு நூலைப் பதிப்பிப்பது இதுதான் முதல்முறை. எனவே, அதன் நுணுக்கங்களை அறியாத நாங்கள், பேராசிரியர் மா.ரா.அரசுவின் உதவியை நாடினோம். கட்டுரைகளைத் தட்டச்சு செய்ய ஒரு D.T.P. Operator வேண்டும். மா.இராசமாணிக்கனார் நூற்றாண்டு மலரையும் இன்னபிற நூல்களையும் பதிப்பித்திருக்கும் அவருக்குத் தெரிந்த தட்டச்சு நிறுவனங்கள் இருந்தன. நல்ல தரத்தை எதிர்பார்க்கும் அவரைத் திருப்திப்படுத்தும் அளவுக்குச் சென்னையில் கிண்டி அருகில் ஒரேயொரு D.T.P. Operator மட்டுமே இருந்தார். அவரைத் தொடர்புகொண்டபோது, சமீபத்தில்தான் மைசூரில் வேறொரு நல்ல வேலைக்குச் சென்றிருப்பதாகத் தெரியவந்தது. சாதாரண நூல் என்றால் எங்கு வேண்டுமானாலும் தட்டச்சு செய்துவிடலாம். ஆனால், உலகளாவிய அறிஞர்களின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. இதிலுள்ள மிகப்பெரிய சவால், Diacritical Marks எனப்படும் சிறப்புக்குறியீடுகள்தான். தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதும்போது குறில், நெடில், மெல்லினம், இடையினம், வல்லினம் ஆகியவற்றைப் பிரித்துக் காட்டுவதற்காக அறிஞர்களுக்குள் சில குறியீடுகளை உருவாக்கித் தரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவற்றைச் சரியாகத் தட்டச்சுச் செய்யத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. இதைப் பிழைத்திருத்தம் செய்யப் பல்வேறு சுற்றுக்கள் அமர வேண்டியிருக்கும். அதற்குப் போதிய ஒத்துழைப்புத் தருபவர்களும் இன்றைய அவசர யுகத்தில் மிகக்குறைவு. இத்தகையவர்கள் கிடைக்காத காரணத்தால், அடுத்ததாக, வரலாறு ஆய்விதழை அச்சிடுவதில் அனுபவம் மிக்க டாக்டர் கலைக்கோவன் மற்றும் முனைவர் நளினி ஆகியோரைத் தட்டச்சு செய்துதரக் கேட்கலாம் என்று எண்ணினோம். அவர்களுக்கு இதில் விருப்பம் இருந்தாலும், அவர்கள் அடுத்து முடிக்கவேண்டிய பணிகள் ஏராளமாக இருந்ததால், அவர்களாலும் முடியாமல் போயிற்று. இந்த நிலையில், தன் கையே தனக்குதவி என்று, வரலாறு.காம் ஆசிரியர் குழுவே லே-அவுட் செய்ய முடிவெடுத்தோம். Diacritical Marks ஐக் கையாண்ட அனுபவம் இல்லாவிட்டாலும், கணிணித்துறை நூல்களை வெளியிட்ட அனுபவம் பெற்றிருக்கும் சே.கோகுல் அவர்களின் துணையுடன் லே-அவுட் வேலையை ஆரம்பித்தோம். பிழைத்திருத்தத்திற்கு முழுமையாக உதவுவதாக டாக்டர் கலைக்கோவனும் முனைவர் நளினியும் உறுதியளித்தனர். Microsoft Word என்னும் மென்பொருளிலேயே லே-அவுட் செய்ய ஆரம்பித்தோம். பிறகு அதை PDF ஆக மாற்றுவதாகத் தீர்மானித்திருந்தோம். நாங்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் வசிப்பதால், பணிப்பகிர்வு செய்துகொண்டு வேலை செய்வது சற்றுச் சிரமமாகவே இருந்தது. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்த நேர வித்தியாசமும் தொலைத்தொடர்பில் ஒரு பெரும் சிக்கலாக இருந்துவந்தது. அனைவருக்கும் வசதியான ஒரு நேரம் ஒரு நாளைக்கு சுமார் அரைமணி நேரம் மட்டுமே கிடைத்தது. அமெரிக்காவிலிருப்பவர்கள் பணிமுடித்துத் திரும்பும் நேரம் ஜப்பானில் நள்ளிரவு. இந்தியாவில் வீடுதிரும்பும் நேரம் அமெரிக்காவில் பணிக்குச் செல்லும் நேரம். இதுபோன்ற சிக்கல்களைச் சில தியாகங்களால் வென்றுவிட்டோம் என்றாலும், இவற்றைப் பதிவு செய்வதும் முக்கியம். இப்படி ஒரு நாளைக்குக் கிடைக்கும் மிகக்குறைந்த நேரத்தைப் பயன்படுத்தி மெதுமெதுவாக முன்னேறினோம். அலுவலகத்திலும் இப்பணியைச் செய்வது சிரமம். நண்பர்களுக்கு மடல் அனுப்புவதோ, மின்னஞ்சல் குழுக்களில் அரட்டை அடிப்பதோ வேண்டுமானால் மேலதிகாரிக்குத் தெரியாமல் செய்துகொள்ளலாம். ஆனால், ஒரு நூலை லே-அவுட் செய்வது மற்றும் பிழைத்திருத்தம் செய்வது என்பது அலுவலகத்தில் முடியாத காரியம். வீட்டில் ஓய்வு நேரத்தில்தான் செய்தாக வேண்டும். முழுநேரத் தொழிலாக இல்லாமல், வரலாற்றாய்வை ஆர்வத்தால் மட்டுமே தொடரும் ஆய்வாளர்களுக்கு ஆய்வைவிட ஒரு பெரிய சவால் உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளையும் கவனித்துக்கொண்டு, வரலாற்றாய்வையும் செய்துகொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக மேற்கொள்ளும் தொழிலையும் பார்த்துக்கொண்டு, மூன்று குதிரைகளின்மேல் சவாரி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்த மூன்றையும் சரியாகச் செய்பவர்கள், குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பைப் பெறும் மிகச்சில ஆய்வாளர்களே. மற்றவர்களுக்கு இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்யவேண்டிய சூழ்நிலை. இதில் பெரும்பாலும் பாதிப்படைவது குடும்பத்தினரின் தேவைகள் நிறைவடைவதுதான். இதனால், குடும்பத்தினருக்கு வரலாற்றாய்வின்மீது வெறுப்புத் தோன்றுவது இயற்கையே. இதை ஈடுகட்டும் விதமாக, அலுவலகத்திலிருந்து திரும்பும்போது கிடைக்கும் தொடர்வண்டிப் பயணத்தையும், பேருந்துப் பயணத்தையும் ஓய்வின்றிப் பயன்படுத்திக்கொண்டோம். எனவே, இந்தச் சிக்கலையும், குடும்பத்தினரின் மிகக்குறைந்த குறைகூறல்களுடன் களைய முடிந்தது. அடுத்து எங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை, Fonts எனப்படும் எழுத்துருக்கள். ஒவ்வொரு அறிஞரும் ஒவ்வொரு எழுத்துருவில் கட்டுரைகளை வடித்திருந்தனர். பொதுவாகத் தமிழ்க் கட்டுரைகளுக்குத்தான் இத்தகைய சிக்கல்கள் வரும். ஆனால் இங்கு, ஆங்கிலக்கட்டுரைகளுக்கும் இத்தகைய பிரச்சினை வந்தது. Diacritical Marks-க்கு வெவ்வேறு எழுத்துருக்களும் குறியீடுகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவற்றைத் தரப்படுத்துவதே பெரும் சவாலாக இருந்தது. அதிகநேரம் எடுத்துக்கொண்டதும் இதுதான். அடுத்த சிக்கல், எங்கள் அனைவரின் கணிப்பொறிகளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள். Operating system வேறு, அவற்றின் மொழிகள் வேறு, ஒவ்வொரு மொழி OSம் கொண்டிருக்கும் எழுத்துருக்கள் வேறு, எனப் பலவடிவங்களில் சவால்கள். உதாரணமாக, கோகுலின் கணிப்பொறியில் திருத்தப்பட்ட சிறப்புக் குறியீடுகள் எனது ஜப்பானிய மொழிக் கணிணியில் சரியாகத் தெரியாது. நான் சரி செய்து கோகுலுக்கு அனுப்பும் கோப்புகளில் ஜப்பானிய எழுத்துருக்கள் புகுந்துகொண்டு அவரைத் திறக்கவிடாமல் செய்யும். இதற்காகவென்றே வேறொரு புதுக் கணிணியையும் மென்பொருட்கள் மற்றும் எழுத்துருக்களையும் வாங்க வேண்டியதாகிவிட்டது. இந்தச் சிக்கலும் ஒருவழியாகத் தீர்ந்தது. அடுத்து விதி வேறொரு உருவத்தில் விளையாடியது. லே-அவுட் வேலையில் முக்கியப் பங்காற்றிவந்த கோகுலின் வலது மணிக்கட்டில் திடீரென வலி ஏற்பட்டு, அதை அசைக்கமுடியாமல் போய்விட்டது. கணிணி வேலை மட்டுமின்றி, எந்தவொரு வேலைக்கும் வலதுகை என்பது எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். பணிகள் பாதியிலேயே நின்றன. மீதியை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திகைத்து நின்றோம். தொழில்முறையில் ஒரு Project Manager ஆக இருந்தும், ஒரு பணியை ஆரம்பிக்கும் முன்னர், Risk Mitigation Plan ஐப் பற்றி எப்படிச் சிந்திக்க மறந்தோம் என்று என்னை நானே நொந்துகொண்டேன். ஆனால், இப்படியொரு வடிவில் சிக்கல் வரும் என்று யார்தான் ஊகித்திருக்க முடியும்? வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டநிலையில், நூலை அச்சுக்கு அனுப்ப வேண்டிய நாளும் நெருங்கிக்கொண்டே இருந்தது. இதை எதிர்கொள்வதில் எங்களுக்கிருந்த ஒரேயொரு வாய்ப்பு, கோகுலின் பணியை வேறு யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்வதுதான். புதிய கணிணி மற்றும் மென்பொருட்களைக் கொண்டு நானும், இடதுகையால் முடிந்த அளவு கோகுலும் லே-அவுட் பணிகளைச் செய்துமுடித்தோம். கிருபாவுக்குக் கணிப்பொறியில் அனுபவம் இருந்தாலும், அவரது பணிச்சூழல் மற்றும் வேறு அலுவல்கள் காரணமாக எங்களுக்கு உதவ முடியவில்லை. இப்படி நாங்கள் தயார் செய்த கட்டுரைகளைப் பிழைத்திருத்தம் செய்ய டாக்டர் கலைக்கோவன் அவர்களுக்கு அனுப்பவேண்டும். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இருந்ததால், அதிவேக இணைய இணைப்புக் காரணமாக எங்களுக்கிடையே கோப்புகளையும் படங்களையும் பரிமாறிக் கொள்வதில் சிக்கல்கள் ஏதும் இருக்கவில்லை. ஆனால், அவற்றைத் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்புவதென்றால், சற்றுச் சிரமம்தான். இதற்காகவே டாக்டர் அவர்கள் அகலப்பட்டை இணைய இணைப்புப் பெற வேண்டியிருந்தது. அவ்விணைப்பும் இந்திய அரசு நிறுவனங்களுக்கேயுரிய தாமதத்துடன்தான் கிடைத்தது. அதுவரை எங்களின் கோப்புப் பரிமாற்றத்திற்கு உதவியவர் திரு. செல்வமூர்த்தி அவர்கள். இரவு நாங்கள் அனுப்பும் கட்டுரைகளை டாக்டர் அடுத்தநாள் காலையில் படித்துவிட்டு, அடுத்தநாள் இரவு நாங்கள் யாராவது ஒருவர் தொலைபேசி செய்யும்போது ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வர, நாங்கள் திருத்திக்கொள்வோம். திருத்தியவற்றை அன்றிரவே நாங்கள் அனுப்ப, மீண்டும் அடுத்தநாளும் இதேபோல். ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று மணிநேர சர்வதேச அழைப்புகள், எங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள கான்பரன்ஸ் அழைப்புகள் என, எடுத்த காரியத்தை முடிக்க, சாம, தான, பேத, தண்ட முறைகளான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, ஜூலை மூன்றாம் வாரத்தில் ஐராவதியை ஒரு முழுவடிவத்துக்குக் கொண்டுவந்தோம். ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளி தவறுதல்களையும் எப்படி விடாமல் சரிசெய்கிறார் என்று நேரடியாகப் பார்த்தபோது, டாக்டர் கலைக்கோவனுடைய நூல்கள் பிழைகள் இல்லாமல் எப்படி வருகின்றன என்று அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. மகாதேவனுடைய பிழைதிருத்தும் முறையைப்பற்றி திரு. இராமதுரை அவர்கள் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். முதலில் ஆரம்பத்திலிருந்து படித்துக்கொண்டே வரும் மகாதேவன், ஆறாம் பக்கத்தில் ஏதாவது தவறிருந்தால், அதைச் சரிசெய்துவிட்டு, மீண்டும் முதல் பக்கத்திலிருந்து படித்துக்கொண்டே வருவாராம். பிறகு பத்தாம் பக்கத்தில் பிழையிருந்தாலும், கடைசிப் பக்கத்தில் பிழையிருந்தாலும் இப்படியேதான். இவர்கள் இருவரின் சரிபார்த்தலால், பெரும்பிழைகளற்ற ஒரு நூலாக மலர்ந்திருக்கிறது ஐராவதி. இந்தப் பிழைதிருத்தலின்போது நடைபெற்ற ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ஐராவதியின் இறுதி வடிவத்தை மகாதேவனுக்கு நாங்கள் அனுப்பியபோது மாலை சுமார் ஐந்துமணி. அடுத்தநாள் காலை தொலைபேசி செய்தபோது, முழுவதுமாகத் திருத்தங்களைக் குறித்து வைத்துவிட்டேன் என்றார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். இத்தனை தள்ளாத வயதில், 500 பக்கங்களை எப்படி ஒரே இரவில் படித்து முடித்தார் என்று வியந்தோம். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஏற்பட்ட பக்கவாதத்தால், கண்ணில் சிறுகோளாறு ஏற்பட்டுவிட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்குமேல் தொடர்ந்து ஏதாவது படித்தால், கண் இமைகள் தானாகவே மூடிக்கொள்ளும். பிறகு சற்றுநேரம் தூங்கினாலொழிய அவற்றைத் திறக்கமுடியாது. ஆனால், ஐராவதி அச்சுக்குச் செல்வது தன்னால் தடைபட்டுவிடக்கூடாது என்றெண்ணி, கண் இமைகளை விரல்களால் திறந்தபடி பிடித்துக்கொண்டே, இரவு 2 மணிவரை விழித்திருந்து வாசித்து முடித்திருக்கிறார். நூலில் எத்தகைய பிழையும் வரக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது. எங்களுக்கும் இதில் மேலும் ஈடுபாட்டுடன் உழைக்க உற்சாகமூட்டியது. ஐராவதியை அச்சுக்கு அனுப்பியபிறகு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள், அடுத்தவேலையான வெளியீட்டுவிழா ஏற்பாடுகள் காத்துக்கொண்டிருந்தன. என்னென்ன நிகழ்ச்சிகளை வைக்கலாம், யார்யாரை அழைக்கலாம், யாரை வெளியிட வைக்கலாம் என எங்களுக்குள் எண்ணற்ற மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் முடிவுசெய்தோம். இதிலும் ஏகப்பட்ட தடங்கல்கள் வந்தன. அவற்றை எதிர்கொள்ள பேராசிரியர் மா.ரா.அரசு உதவி செய்தார். முதலில் ரஷ்யத் தூதரகத்துடன் இணைந்த பண்பாட்டு மைய அரங்கத்தை முன்பதிவு செய்தோம். அங்கு விசாரித்தபோது அரங்கம் காலியாக இருக்கவே, முழுத்தொகையையும் கட்டி முன்பதிவு செய்துகொண்டோம். பிறகு அறிஞர்களை ஒவ்வொருவராக நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அழைத்தோம். பிறகு இறுதியாக அழைப்பிதழை அச்சுக்கு அனுப்புவதற்குச் சற்றுமுன் தற்செயலாகத் தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது, 'வேறொரு அரசு நிகழ்ச்சிக்கு அரங்கம் கேட்கப்பட்டிருப்பதால், தங்களுக்குத் தர இயலாது, முன்பணத்தைப் பெற்றுக் கொள்ளவும்' என்ற அதிர்ச்சிச் செய்தி வந்தது. வேறு வழியின்றி, அழைப்பிதழ் அச்சடிப்பை ஒத்திவைத்துவிட்டு, வேறொரு அரங்கத்தைத் தேடினோம். அப்போதுதான் இந்த அரங்கம் எங்களுக்குக் கிடைத்தது. ஒரு திறமையான புகைப்படக் கலைஞரும் எங்களுக்கு அமைந்தார். இந்த நேரத்தில் இராமச்சந்திரனுக்குச் சென்னையில் ஓரிரு வாரங்கள் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் அச்சகம் மற்றும் அழைப்பிதழ் அனுப்புவது தொடர்பான பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்தன. வரலாறு.காம் ஆரம்பித்து நான்காண்டுகள் நிறைவடைவதையும் கொண்டாடவேண்டும் என்று முடிவுசெய்தோம். ஆரம்பத்தில் எங்கள் ஆய்வுலகப் பயண அனுபவங்களையும் எங்களின் கற்றல்களையும், எங்கள் அளவுக்கு வாய்ப்புப் பெறாதவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு.காம், இன்று ஒரு மாத இதழுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டு வளர்ந்துள்ளது. இதில் நாங்கள் கடந்து வந்த பாதையில் இருந்த முட்கள் ஏராளம், தடைக்கற்கள் பலவகையின, எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் எண்ணிலடங்காதவை. இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு மாதம்கூட இடைவிடாமல், தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. வரலாற்றை முழுநேரத்தொழிலாகக் கொள்ளாத பன்முகத்தன்மைகொண்ட ஒரு குழுவிடமிருந்து வரலாற்றுக்கான மாத இதழ் வெளிவருவது இது ஒன்றுதான் என்று நினைக்கிறோம். லாப நோக்கின்றி, யாரிடமும் எந்தவிதமான பொருளுதவியும் பெறாமல், எதிர்ப்புகளைச் சமாளித்து வளர்ந்ததற்காக எங்களை நாங்களே பாராட்டிக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. இருப்பினும், நான்காண்டுகளில் ஆறு சிறப்பிதழ்களும் எழுநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் ஒரு பணிப்பாராட்டு மலரும் வெளியிட்டதற்காக மிகவும் பெருமைப்படுகிறோம். அதேநேரத்தில், இன்னும் நாங்கள் செல்லவேண்டிய இலக்கு வெகுதூரத்தில் இருப்பதை உணர்ந்து தன்னடக்கமும் கொள்கிறோம். ஐராவதம் மகாதேவன் அவர்களின் பணிப்பாராட்டு மலரை வெளியிடும் இந்நேரத்தில் மலரும் இதழ் என்பதால், இதை ஐராவதி சிறப்பிதழாக வெளியிடுகிறோம். எங்களின் இந்த நான்காண்டுகால வளர்ச்சிக்கும், அதற்கு முந்தைய ஓராண்டு அடிப்படைப் பயிற்சிக்கும், இனிமேலும் தொடரும் எங்கள் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்த, இருக்கின்ற, இருக்கப்போகின்ற டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களுக்கு எங்கள் நன்றியைக் காணிக்கையாக்கிவிட்டு, இன்னும் இதுபோல் பல சாதனைகளைப் புரிய ஆய்வுலகப் பெருமக்களின் ஒத்துழைப்பையும் ஆசியையும் வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |