http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 50
இதழ் 50 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
சிதையும் சிங்காரக் கோயில்கள்
1. நிலை குலையும் ஒரு கலைக்கோயில் - IV
(சென்ற இதழின் தொடர்ச்சி...) கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலின் விமானம் மற்றும் முகமண்டபத்தின் தாங்குதளத்தில் அமைந்துள்ள ஜகதி மற்றும் உருள் குமுதத்தில் உள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் காலவெள்ளத்தில் கரைந்துபோன கலைகளையும் அக்கலைகள் வளர்ந்த நிலைபற்றியும் என வரலாற்றுத் தரவுகளைத் தம்மை நாடி வருவோரிடம் பகிர்ந்து கொள்கின்றன. இக்கற்றளியிலிருந்து 1931ம் வருடம் மத்திய தொல்பொருள்துறையினர் 9 கல்வெட்டுகளைப் படி எடுத்து பாடத்தை வெளியிடாமல் சுருக்கத்தை மட்டும் Annual Report of Indian Epigraphy 1931-1932 என்ற புத்தகத்தில் வெளியிட்டிருக்கின்றனர். இப்புத்தகத்தில் இக்கல்வெட்டுகள் யாவும் விமானத்தின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது தவறாகும். எந்தவொரு கல்வெட்டும் சுவரில் வெட்டப்படவில்லை. கல்வெட்டுகள் யாவும் தாங்குதளத்தில் உள்ள ஜகதி மற்றும் குமுதங்களில்தான் வெட்டப்பட்டுள்ளன. இவ்வொன்பது கல்வெட்டுகளில் முதலாம் இராஜேந்திரனின் 3 கல்வெட்டுகளும் முதலாம் குலோத்துங்கனின் 6 கல்வெட்டுகளும் அடங்கியுள்ளன. இனி இக்கல்வெட்டுகள் கூறும் செய்திகளைப் பார்ப்போம். முதலாம் இராஜேந்திரசோழனின் கல்வெட்டுகள் 1. விமானத்தின் வடக்குத் தாங்குதளத்தில் ஆட்சியாண்டு வெட்டப்படாத முதலாம் இராஜேந்திரசோழனின் கல்வெட்டு இம்மன்னனின் மெய்கீர்த்தி மட்டும் கொண்டுள்ளது. 2. விமானத்தின் மேற்கு மற்றும் தெற்கு தாங்குதளத்தில் காணப்படும் இம்மன்னனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டு இவ்வூரின் பெயரை 'இளைச்சிக்குடி' என்ற 'வீரநாராயணபுரம்' என்று குறிப்பிட்டு அங்கு வாழும் நகரத்தார் இக்கோவிலுக்காக இம்மன்னனின் பெயரால் ஒரு நந்தவனம் அமைக்க வரியில்லா நிலங்களை தானமாகக் கொடுத்ததைத் தெரிவிக்கின்றது. 3. இதே பகுதியில் உள்ள இம்மன்னனின் மெய்கீர்த்தியுடன் தொடங்கும் 5-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயிலின் பெயரை கைலாசநாதர் கோவில் என்றும் இக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயர் மற்றும் இருப்பிடம் பற்றி வடகரை இராஜேந்திரசிம்ம வளநாட்டின் மிழலை நாட்டிலுள்ள இளைச்சிக்குடி என்ற வீரநாராயணபுரம் என்று தெரிவிப்பதோடு இம்மன்னரிடம் தேவாரநாயகம் (தேவாரநாயகம் - கோயில்களில் தேவாரங்களைப் பாடுபவர்களை மேற்பார்வையிடுவோர்) என்ற பதவியில் இருந்த நாங்கூர் நாட்டு மறைக்காடன் பதஞ்சலி பட்டாரன் என்பவரிடமிருந்து காசு பெற்றுக்கொண்டு இக்கோயிலில் இருந்த சிவபிராமணர்கள் இக்கோயிலில் மூன்று நந்தாவிளக்கு எரித்தனர் என்று கூறுகின்றது. முதலாம் குலோத்துங்கசோழனின் கல்வெட்டுகள் 1. விமானத்தின் வடக்கு தாங்குதளத்தில் உள்ள முதலாம் குலோத்துங்கனின் 8-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு வருடந்தோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் நடைபெற்ற திருவிடைவிழாவின் செலவினங்களுக்காக இந்நகரத்தார் சில நிலங்களை இக்கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததைத் தெரிவிக்கின்றது. 2. விமானத்தின் வடக்கு தாங்குதளத்தில் உள்ள இம்மன்னனின் 18-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டு, இக்கோயில் சித்திரைவிழாவில் ஐந்து தடவை 'தமிழ்க்கூத்து' நடத்தும் விருதராஜபயங்கர ஆச்சாரியான் என்ற விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றன் என்பவனுக்கு இக்கோயில் நிர்வாகத்தினரும் இவ்வூர் நகரத்தாரும் 'நாகன்மாடி' என்ற ஊரிலுள்ள சில நிலங்களைக் கூத்துக்காணியாக அளித்ததைத் தெரிவிக்கின்றது. 3. விமானத் தெற்குத் தாங்குதளத்தில் தொடங்கும் இம்மன்னனின் 23ம் ஆட்சியாண்டு கல்வெட்டு கைலாசநாதர் என்றழைக்கப்பட்ட இக்கோயிலில் உள்ள சிவபிராமணர்களுக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள ஒரு வணிகருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தெரிவிக்கின்றது. இதன்படி இவ்வணிகரிடமிருந்து பெற்ற நெல் மூலம் வரும் வட்டியைக் கொண்டு இக்கோயிலுக்கு வரும் அபூர்வி-மகேஸ்வரர்களுக்கு உணவளிக்கப்பட்டது. 4. இக்கோயிலின் வடக்கு மற்றும் மேற்குத் தாங்குதளத்தில் அமைந்துள்ள இம்மன்னனின் 36ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூர் வணிகர் ஒருவர் ஒரு நிலத்தை வாங்கி, இவ்வூர் சபையினரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து அந்நிலத்தை வரியில்லா நிலமாக மாற்றி அதை இக்கோயிலில் நடைபெறும் சித்திரை விழாவின்போது வழிபாடு முதலியனவற்றுக்காக தானமாகத் தந்ததைத் தெரிவிக்கின்றது. 5. இக்கோயிலின் வடக்கு மற்றும் மேற்குத் தாங்குதளத்தில் காணப்படும் முதல் குலோத்துங்க சோழனுடையது என்று கருதப்படும் கல்வெட்டு ஒன்று இவ்வூர் நகரத்தார் இக்கோயிலின் தேவகன்மிகளுக்கும் மாகேஸ்வரர்களுக்கும் வழங்கிய ஆணையைக் குறிக்கின்றது. இவ்வாணையில் இக்கோயிலில் ஏழு நாள் நடைபெறும் விழாவிற்கு 'நம்பிநங்கை' என்ற பெயருடைய குளத்திலிருந்து தினசரி 2000 மலர்கள் பறித்து இக்கோயிலுக்கு வழங்க மாகேசுவரர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதில் 'மானம்பாடி' என்ற மாகேசுவரர் குறிப்பிடப்பட்டுள்ளார். 6. விமானத்தின் மேற்குத் தாங்குதளத்தில் காணப்படும் ஆட்சியாண்டு தெரியாத முதல் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று இக்கோயிலின் சிவபிராமணர்கள் மற்றும் ஸ்தானத்தார் ஆகியோருக்கும் இவ்வூர் வணிகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தெரிவிக்கின்றது. இதன்படி இவ்வணிகர் ஆண்டிற்கு 444 கலம் நெல்லுக்கு வட்டியாக 111 கலம் நெல் கொடுப்பதைக் கோயில் விழாவிற்கு நிருவாகத்தினர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் இவ்விழாவில் கூத்து நடத்துவதற்கும் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு உணவளிக்கவும் 'பக்தர்கள் பக்திமடம்' என்ற பெயரில் ஒரு மடம் இருந்ததையும் தெரிவிக்கிறது. கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மைகள் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் காலத்தால் மிகப்பழமையானவை முதலாம் இராஜேந்திரசோழனின் கல்வெட்டுகள்தான். எனவே இக்கற்றளி கடல்கடந்து பல அயல்நாடுகளை வென்ற ஒரே இந்திய மன்னராக வரலாற்றில் காட்சிதரும் முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதலாம். இம்மன்னனின் காலத்தில் இவன் பெயரில் நந்தவனம் ஒன்று இருந்தது என்று கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கோயிலின் தென்கிழக்கே சுமார் 1/2 கி.மீ. தொலைவில் நந்தவனம் என்று அழைக்கப்படும் ஓர் இடம் இன்னும் உள்ளது. இன்று இவ்விடத்தில் சில குடியிருப்புகள் உள்ளன. இக்கோயில் நல்லநிலையில் இருக்கும்வரை இங்கிருந்துதான் மலர்கள் கோயில் வழிபாட்டிற்குச் சென்றதாகக் கூறும் இவ்வூர் முதியவர்கள் இத்தகவல்களை அவர்களின் முன்னோர்கள் கூறியதாகச் சொல்கிறார்கள். கல்வெட்டுகளிலிருந்து இக்கோயிலின் பழையபெயர் கைலாசநாதர்கோயில் என்றும் இவ்வூரின் பெயர் இளைச்சிக்குடி என்ற வீரநாராயணபுரம் என்றும் அறியப்படுகின்றது. இக்கோயிலில் சித்திரைவிழா 7 நாள் விழாவாக மிகப்பெரிய விழாவாக நடத்தப்பட்டுள்ளது. இவ்வேழுநாள் விழாவில் கூத்து நடத்துபவர்களும் பக்தர்களும் கூடியிருந்தனர். இவர்களுக்கு உணவு அளிக்கவும் தங்கி இளைப்பாறவும் பக்தர்கள் பக்தமடம் என்ற மடம் ஒன்று இருந்துவந்தது. தேவாரப்பாடல்கள் முதலாம் இராஜராஜனின் காலத்தில் தொகுக்கப்பட்ட போதிலும் சோழர்கள் காலத்திற்கு முன்பாக இறுதிப்பல்லவர் காலம் தொடங்கியே கோயில்களில் 'திருப்பதியங்கள்' என்ற பெயரில் இசையுடன் பாடப்பட்டன என்று பல கல்வெட்டுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இத்தேவாரம் பாடும் பணியை மேற்பார்வையிட 'தேவாரநாயகம்' என்ற பதவி இருப்பதின் மூலம் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் கோயில்களில் ஒலித்த தேவாரப் பாடல்களின் முக்கியத்துவத்தைஉம் அவசியத்தையும் அறியலாம். ஏழுநாள் விழாவில் தினசரி 2000 மலர்கள் வீதம் 7 நாளைக்கு 14000 மலர்கள் பறிக்கக்கூடிய அளவில் ஒரு பெரிய பரந்த குளம் 'நம்பிநங்கை' என்ற பெயரில் இவ்வூர் நகரத்தார் பராமரிப்பில் இருந்துவந்துள்ளது. இவ்வூர் மக்களால் தமிழ்க்கூத்து விரும்பிப் பார்க்கப்பட்டது. அதனால் இத்தமிழ்க்கூத்து ஏழுநாள் நடைபெறும் விழாவில் 5 தடவை நடத்தப்பட்டது. இலக்கியங்கள் வாயிலாக சங்ககாலத்திற்கு முன்பும் சங்ககாலத்திலும் சங்க மருவிய காலத்திலும் கூத்துக்கள் தொன்றுதொட்டு நடைபெற்று வந்துள்ளன என்பதை அறியலாம். சங்கம் மருவிய காலத்தில் இக்கூத்து சாந்திக்கூத்து, விநோதக்கூத்து என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சாந்திக்கூத்து, சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என உட்பிரிவுகளாகவும் விநோதக்கூத்து குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்துள்ளது. இக்கூத்துக்கள் சோழர்காலத்திலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன என்பதை பல கோயில்களிலுள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இக்கூத்துகளுடன் சாக்கைக்கூத்து, ஆரியக்கூத்து மற்றும் தமிழ்க்கூத்துகளும் நடத்தப்பட்டன. சிறுபழுவூர் ஆலந்துறையார் கோயில், கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில், காமரசவல்லி கார்க்கோடக ஈஸ்வரர் கோயில், திருவீழிமிழலை வீழிநாதர் கோயில், கீரனூர் சிவயோகநாதசுவாமி கோயில், திருவிசலூர் சிவயோகநாதசுவாமி கோயில், நல்லூர் வில்வாரண்யேசுவரர் கோயில், திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலுள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் சாக்கைக்கூத்தைப் பற்றித் தெரிவிக்கின்றன. ஆரியக்கூத்தைப் பற்றித் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், திருவாவடுதுறை கோமுதீஸ்வரர் கோயில், திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், வயிலகம் விசுவநாதர் கோயில் ஆகிய கோயில்களிலுள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தமிழ்க்கூத்து பற்றித் தெரிவிக்கும் கல்வெட்டு மானம்பாடியிலுள்ள இக்கோயிலில்தான் காணக்கிடைக்கிறது. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் தமிழ்க்கூத்து பற்றித் தெரிவிக்கும் ஒரே கல்வெட்டை இக்கோயில் தன்னகத்தே கொண்டுள்ளது என டாக்டர். இரா. கலைக்கோவன் தெரிவிக்கின்றார். இக்கல்வெட்டு இங்கு இல்லாது போயிருந்தால் அல்லது சிதைவுற்றிருந்தால் தமிழ்க்கூத்தினைப் பற்றி இலக்கியத்தில் மட்டும்தான் தெரிந்துகொண்டிருக்கமுடியும். இலக்கியங்களில் குறிக்கப்படும் எத்தனையோ கூத்துக்கள் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டபோதிலும் தமிழ்க்கூத்து இடைச்சோழர் காலம்வரை உயிர் பெற்றிருந்தது என்பதற்கு இக்கல்வெட்டே ஆதாரம் ஆகும். பொது இவ்வூரினை அடுத்து தற்போது சோழபுரம் என்ற ஊர் உள்ளது. தற்போது இவ்வூர் மக்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாய் வாழ்கின்றனர். இவ்வூரில் மூன்று சோழர்காலக் கற்றளிகள் உள்ளன. அவற்றில் காசிவிசுவநாதர் கோயில் என்று அழைக்கப்பட்ட கோயில் முற்றிலும் இடிந்து கற்குவியலாய்க் காட்சியளிக்கின்றது. பைரவர் கோயில் என்று அழைக்கப்பட்ட மற்றொரு கோயில் நீண்டநாட்களாக இடிபாட்டுடன் கிடந்து தற்போது புனரமைப்புப் பணியில் உள்ளது. கைலாசநாதர் கோயில் என்ற மற்றொரு கோயில் ஓரளவு சீர்மையுடன் நின்று வழிபாட்டில் உள்ளது. இம்மூன்று கோயில்கள் கொண்ட சோழபுரமும் மானம்பாடியும் சேர்ந்து சோழர்காலத்தில் ஒரே ஊராக இளைச்சிக்குடி என்ற வீரநாராயணபுரம் என்றழைக்கப்பட்ட மிகப்பெரிய ஊராக வணிகக் கேந்திரமாக இருந்தது. இவ்வூரில் நகரத்தார் என்று அழைக்கப்படும் வணிகர்கள் மிகுதியான அளவில் வாழ்ந்துவந்தனர். அதனால் இவ்வூரில் நகரத்தார் சபையும் ஊர்ச்சபையும் இயங்கிவந்தன. இவ்வூர் வணிகர்கள் பல ஊர்களில் குருக்களாகத் தங்கி வாழ்ந்திருக்கின்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி-கரூர் நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது அல்லூர் என்ற சிறுகிராமம். இவ்வூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் நக்கன் கோயிலில் இருக்கும் இரு கல்வெட்டுகள் வீரநாராயணபுரத்தைப் பற்றிப் பேசுகின்றன. முற்சோழர் காலத்தில் இக்கோயிலில் கண்டராதித்த சோழனின் 3-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வீரநாராயணபுரத்து வணிகர்கள் சிலர் இவ்வூரில் குடிபெயர்ந்து வாழ்ந்து, இந்நக்கன் கோயில் நிர்வாகத்தில் சக்திவாய்ந்த அங்கமாகத் திகழ்ந்ததைத் தெரிவிக்கின்றது. பிற்பாண்டியர்களில் ஒருவரான மாறவர்மர் குலசேகர மன்னனின் 29ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வீரநாராயணபுரத்து வணிகரான பெருமன்னூர்க் கிழவன் முதலி திருவானைக்கா உடையானான விசயவாலன் என்பவர் இக்கோயிலுக்கு வழங்கிய நிலக்கொடையைப் பற்றி விவரிக்கின்றது. மேலும் அக்கால வணிகர்களிடம் பௌத்தமும் சமணமும் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன. பௌத்தமும் சமணமும் நாடு முழுவதும் பரவ இவ்வணிகர்கள் முக்கிய காரணமாய் இருந்தனர். இவ்வணிகர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் இம்மதக் கோட்பாடுகளைப் பரப்பிடவும் வழிபாடு செய்திடவும் பள்ளிகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். மானம்பாடியில் இக்கோயிலுக்கு அருகேயுள்ள காளியம்மன் கோயிலில் தற்சமயம் குடியேறி இருக்கும் ஒரு பெரிய புத்தர்சிலை இங்கு ஒரு பௌத்தப்பள்ளி இருந்ததைச் சுட்டும் ஆதாரமாகக் காட்சியளிக்கின்றது. திரைகடல் ஓடித் திரவியம் தேடிய வணிகர்களும் பறை அறைந்து பாடல்கள் பாடிய இசைவாணர்களும் மேடையேறி நாடகம் நடித்த கூத்தர்களும் நிறைவோடு குழுமியிருக்க தேவாரம் முழங்கப் பல விழாக்கள் கண்ட இக்கோயில் இன்று தான் வளர்த்த கலைகளையும் எல்லாம் இழந்து கட்டுமானமாய் இருந்த கற்களையும் இழந்து, தன் வாழ்வின் கடைசிப் பயணத்தில் இறுதிநாளை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. வேண்டுகோள் கால்களில் மிதிபட சிறு கருங்கல்கூட இல்லாத பூமியான இத்தஞ்சை மாவட்டத்தில் எங்கிருந்தோ, எப்படியோ கற்களை எல்லாம் பாளம் பாளமாய்க் கொண்டுவந்து கற்றளியாக்கி, சிற்றுளி கொண்டு சிந்தை பறித்திடும் சிற்பங்களை வடித்தும் கலை ஓவியம் கொடுத்தும் கட்டப்பட்ட இக்கோயில்கள்தான் எத்தனை விதம்! ஊர்தோறும் கோயில்கள்! எத்தனை விதங்கள்! அதில் எத்தனை விந்தைகள்! இப்பணி முடிக்க எத்தனை முயற்சிகள்! எத்தனை மனித உழைப்புகள்! எத்தனை நாட்கள்! இவையெல்லாம் எதற்காகக் கட்டப்பட்டுள்ளன? மக்களின் அன்றாட வாழ்க்கையில் கோயில்கள் ஓர் அங்கமாய் இருந்து வந்துள்ளது. நம் நாகரிகம், கலாச்சாரம், இறைவழிபாடு, கலைவெளிப்பாடு இவைகளின் அடையாளம்தான் இக்கோயில்கள். ஓர் ஊரில் இருக்கும் கோயில் அங்குள்ளோரின் சொத்து. எத்தனையோ சண்டையில் அகப்பட்டும் வேற்றூ மதத்தின் கொடுமைகளுக்கு ஆளாகியும் இன்று நம்முன் நிற்கின்றது. இதைக்கட்டியவர்கள், கட்ட உதவியவர்கள் ஏன் இக்கிராம மக்களின் முன்சந்ததியராய் இருக்கக்கூடாது? அரசு எத்தனையோ கோயில்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கிப் புனரமைத்து வருகின்றது. எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் எத்தனை நாளாவது? எல்லாக் கோயில்களையும் அரசே புனரமைக்க முடியாது. காரணம் காலமும் நிதியும் ஏற்படுத்திய பற்றாக்குறைதான். எனவே இது நம் கோயில், நம் முன்னோர்கள் கட்டியது என்று நினைத்து தினமும் கோயில்களுக்குச் செல்லுங்கள். பக்தியுள்ளவர்கள் பக்தியோடு செல்லுங்கள். ஆனால் பக்கமே உள்ள கலைச்செல்வங்களைக் கண்டுகளியுங்கள். அச்செல்வங்களைக் காப்பாற்றுங்கள். பக்தியில்லோர் கலைப்பற்றினால் கோயிலுக்குச் செல்லுங்கள். கலைச்சிற்பங்களின் மீதும் கட்டிடத்தின்மீதும் தரையின்மீதும் முளைத்திருக்கும் செடிகொடிகளைப் பிடுங்கி எறிய கோயில் வளாகத்தில் உங்கள் கால் தடயங்களைப் பதியுங்கள். தடயங்கள் தடங்களாகட்டும். பல தடயங்கள் சேர்ந்து வழித்தடங்களாகட்டும். பல வழித்தடங்கள் திருச்சுற்றாகட்டும். கோயில் மலரும். இக்கோயிலைப் பொறுத்தவரை கும்பகோணம் - சென்னை செல்லும் நெடுஞ்சாலைப் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் (ஆந்திர மாநிலத்தவர்) ஓராண்டிற்கு முன்னர் இச்சாலை ஓரம் இருக்கும் இக்கோயிலின் அழகில் மயங்கி இக்கோயிலுக்கு மதில்சுவர் கட்டிக்கொடுத்துப் படர்ந்திருந்த புல்பூண்டுகளை எல்லாம் அகற்றி, நடைபாதை அமைத்து, கோயிலைச் சீரமைத்துள்ளார். ஆனால் இன்றோ! 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்தால் ...' பயன்பட்ட நூல்கள் 1. Annual Report of Indian Epigraph, 1931-32 2. South Indian Inscriptions Vol VII 3. கலைவளர்த்த திருக்கோயில்கள் - டாக்டர் இரா.கலைக்கோவன் 4. சோழர்கால ஆடற்கலை - டாக்டர் இரா.கலைக்கோவன் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |