![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 50
![]() இதழ் 50 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தேவனார் மகள் அல்லது தேவனார் மகன் என்பது குறித்தும் பல அறிஞர்கள் பலவிதமாக கருத்துக் கூறியிருந்ததை ஆய்வேட்டிற்காகக் கல்வெட்டுகளைப் படித்தபோது பார்த்தேன். இத்தளி தேவனார் மகள் என்பதில், இத்தளி - கல்வெட்டு வெட்டப்பட்டுள்ள கோயிலையும் தேவனர் -அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனையும் சுட்டுவது தெளிவாக இருந்தும் ஏன் அறிஞர்கள் குழம்பிப் போனார்கள் என்பது இப்போதும் புரியவில்லை. பல சான்றுகளுடன் அதை நிறுவவேண்டும் என்பதற்காக இந்தச் சொற்கள் பயின்று வந்துள்ள பல கல்வெட்டுகளைத் தேடிப் படித்து மிகவும் விரிவாக ஆய்வேட்டில் விளக்கினோம். ஓர் அறிஞர் தேவனார் பழுவேட்டரைய அரசர்களுள் ஒருவர் என்று கூறியிருந்ததுதான் மிகத் துன்பம் தந்தது. சிறுபழுவூர் ஆலந்துறையார் கோயிலில் பல புதிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தோம். அவற்றுள் முக்கியமானது அந்தக் கோயிலை அடிகள் பழுவேட்டரையர் மறவன் கண்டனார் காலத்தில் நக்கன் மாறபிரான் என்பவர் கட்டினார் என்ற செய்தியைத் தரும் உத்தமசோழரின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். பழுவேட்டரையர் குமரன் மதுராந்தகனைக் குறிக்கும் உத்தமசோழர் காலக் கல்வெட்டு, கோபுர நிலைக்காலில் இருக்கும் விக்கிரம சோழன் திருவாசல் பற்றிய கல்வெட்டு, அக்கசாலை பற்றிக் குறிப்பிடும் குலோத்துங்கர் காலக் கல்வெட்டு எனப் பல கல்வெட்டுகளை அக்கோயிலில் இருந்து கண்டறிந்தோம். சிற்பங்களுள் சில சிதைந்திருந்தன. எஞ்சியுள்ளவற்றுள் கொற்றவை, அம்மையப்பர், இலிங்கோத்பவர் ச்ிற்பங்கள் உத்தமசோழர் காலத்தனவாகக் காட்சியளித்தன. சிற்றுருவச் சிற்பங்களில் கபோதத்தில் காணப்படும் ஒரு பெண் ஆடும் குடக்கூத்துச் சிற்பமும் திரிபுராந்தகர் சிற்பமும் சிறப்பானவை. கட்டடக்கலை, சிற்பம் இவற்றைத் தனித்தனி இயலாக எங்கள் ஆய்வேட்டில் அமைத்திருந்தோம். இருவருமே கல்வெட்டுகள் அனைத்தையும் படித்திருந்தமையால் அவற்றிலிருந்து அரசியல் செய்திகள், சமுதாயப் பொருளாதாரச் செய்திகள், பண்பாட்டுச் செய்திகள் அனைத்தையும் மிக விரிவாக எழுதி எங்கள் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்தோம். என்னுடைய ஆய்வேட்டிற்குத் தேர்வாளராகக் கல்வெட்டறிஞர் திரு. கே. ஜி கிருஷ்ணன் வந்திருந்தார். தேர்வு முடிந்த பிறகு சிறந்த மதிப்பெண்களை அளித்ததுடன், மிகச் சிறந்த ஆய்வேடு என்று கூறி என் நெறியாளரும் பேராசிரியருமான திரு. எட்மண்ட்ஸைப் பாராட்டினார். தேர்வு முடிந்து மைசூர் செல்லும் வழியில் சிராப்பள்ளி சென்று அவரை நேரில் சந்தித்து ஆய்வேடு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது, உங்கள் பணிக்குப் பாராட்டுகள் என்று அவரையும் வாழ்த்திவிட்டுச் சென்றார் திரு. கே. ஜி. கிருஷ்ணன். நாங்கள் ஆய்வேட்டைச் சமர்ப்பித்த பிறகு எங்கள் நெறியாளர் திரு. எட்மண்ஸ் தம் வேலை காரணமாகச் சிராப்பள்ளி வந்திருந்தபோது அவரைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவர் திரு. எட்மண்ட்ஸிடம் கோயில் ஆய்வின் முக்கியத்துவத்தைக் கூறியதோடு, கோயில் ஆய்வில் எங்களுக்கிருந்த ஆர்வத்தையும் களஆய்வில் நாங்கள் காட்டிய ஈடுபாட்டையும் நெறியாளருக்கு விளக்கி, இவர்களுடைய ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யக் கோயில், கல்வெட்டுகள் இவற்றில் தேர்ந்தவர்களைத்தான் தேர்வாளராக அழைக்கவேண்டும் என்று அவர் கூற, நெறியாளர், கோயிற்கலைத்துறையில் எனக்கு யாரையும் தெரியாது, அதனால், யாரைத் தேர்வாளராக அழைக்கலாம் என்பதை நீங்களே கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். அவரும் தேர்வாளர்களின் பெயர்களைத் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்த தேர்வாளர்களுள் ஒருவர்தான் திரு. கே. ஜி. கிருஷ்ணன். ஆனால், திரு. எட்மண்ட்ஸ் அவரைச் சந்தித்ததோ, தேர்வாளர்கள் பெயர்களை அவர் நெறியாளருக்குக் கூறியதோ தேர்வு முடியும் வரை எங்களுக்குத் தெரியாது. தேர்வு தொடர்பான செய்தி என்பதால், அதை எங்களிடம் கூறாமல் பாதுகாத்திருக்கிறார் என்பதை அறிந்தபோது அவருடைய நேர்மையை எங்களால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. தொடக்கக் காலங்களில் கல்வெட்டுகளைப் படிப்பதில் மட்டுமே ஆர்வம் அதிகம் இருந்தது. பின்னாளில், பல்வேறு ஆய்வுகளுக்காகக் கோயில்களுக்குச் சென்றபோது எங்கள் தேடல் ஏதாவது ஒரு கருத்து பற்றியதாக அமைந்தது. கோயிலுக்குள் நுழைந்தவுடன், அவர் கோயிலுக்கு யார் அழைத்தார்களோ அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். நானும் அகிலாவும் வெவ்வேறு திசைகளில் சென்று எங்கள் தேடலைத் தொடங்குவோம். சான்றாக, குடக்கூத்து பற்றி ஆய்வு செய்தபோது அந்தக் கோயிலில் எங்காவது குடக்கூத்துச் சிற்பம் இருக்கிறதா என்று பார்ப்போம். குடக்கூத்துச் சிற்பங்களை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து பலவாகக் கண்டறிந்தோம். அவர் எங்கள் தேடலை வரவேற்று உற்சாகப்படுத்துவார். சிலம்பின் வரிகளுக்குச் சிற்பச் சான்றுகள் என்ற கட்டுரைக்காகத்தான் குடக்கூத்துச் சிற்பங்களைத் தேடினோம். அதே போல் பொக்கணம் பற்றிய ஆய்வு நிகழ்ந்தபோது கோயிலுக்குள் நுழைந்ததும் இருவரும் தெற்குத் திசை நோக்கியே செல்வோம். கண்டுபிடிப்பு எங்களுடையதாக இருக்கவேண்டும் என்பதற்காகப் போட்டிபோட்டுக் கொண்டு இருவரும் செயல்படுவோம். கிராதார்ச்சுனர் தொடர்பான சிற்பங்கள், கண்ணப்பர் சிற்பங்கள், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள், இராமாயணச் சிற்பங்கள், ஊர்த்வஜாநு, தண்டபட்சம், இலலிதம், சதுரம், விருச்சிகம், ஊர்த்வதாண்டவச் சிற்பங்கள் என்று அந்தக் காலத்தில் நாங்கள் தேடித் தொகுத்து அதன் வழி அவர் பாராட்டைப் பெற்ற சந்தர்ப்பங்கள் பல. இந்தத் தேடல்களால் நாங்கள் பல அனுபவங்களை அடைந்தோம். ஒரே கருத்து அல்லது காட்சி காலந்தோறும் எப்படியெல்லாம் படம்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை அறியவும் ஒரே கருத்தாக இருந்தபோதும் அல்லது ஒரே காட்சியாக அமைந்தபோதும் சிற்பிகள் அவரவர் திறனுக்கும் கற்பனை வளத்துக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப அவற்றை எப்படியெல்லாம் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளவும் எங்களுக்கு இச்சிற்பத் தேடல்கள் உதவின. ஒப்பீட்டு ஆய்வு என்பதை எங்கள் தேடல் வழி நாங்களே உணருமாறும் அதில் தேர்ச்சிகொள்ளுமாறும் அவர் நிகழ்த்திய விவாதங்கள் உதவின. நாங்கள் கூறும் எந்தக் கருத்தையும் உடனே ஏற்றுக் கொள்ளாமல், அதற்குப் பல தடைகளை ஏற்படுத்தி அந்தத் தடைகளுக்கெல்லாம் நாங்கள் விடை கண்டறிந்து சொல்லுமாறு செய்த பெருமை அவருடையதே. இந்த வழிகாட்டல், தேடும்போதே வேண்டிய கருத்துக்களைத் திரட்டும் புதிய அணுகுமுறையை எங்களுக்குக் கற்றுத் தந்தன. ஒரு கருத்துக்காகத் தேடிய நாங்கள் காலப் போக்கில் ஒத்த கருத்துக்களுக்காகவும் ஒரே கருத்தின் பல்வேறு விளக்கங்களுக்காகவும் தேடத் தொடங்கிப் பல ஒப்பீட்டுக் கட்டுரைகளை உருவாக்கி வெளியிட்டோம் என்றால் அதற்குப் பாதை அமைத்தவர் அவர்தான். எங்கள் போக்கில் எங்களைச் செயல்படவிட்டு எந்தக் காலகட்டத்திலும் எங்கள் மீது அவர் கருத்துக்களைத் திணிக்காமல் ஆனால் அதே சமயம் நாங்கள் சரியான ஆய்வுப் பாதையில் தடம் பதிக்குமாறு எங்களை வளர்த்தவர் அவர். முதுநிறைஞர் படிப்பிற்கு பிறகு, எங்கள் வீட்டில், 'நீ ஏதாவது பள்ளிக்கூடத்திற்கு வேலைக்குப் போ' என்றனர். ஆனால், கல்வெட்டாய்வில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழப் பதிந்திருந்ததால் வேலைக்குப் போவதில் நான் ஆர்வம் காட்டவில்லை. அவரிடம் என் உள்ள விழைவைக் கூறினேன். தினத்தந்தி நாளிதழில் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தும் ஓராண்டு காலப் பட்டயப் படிப்புப் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருப்பதாகவும் வீட்டார் அனுமதித்தால் அதில் இடம்பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார். கல்வெட்டுப் படிப்பதற்கு அது சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நான் மிகவும் மகிழ்ந்தேன். 'படிப்பதற்கு அதிகம் செலவாகாது. உதவித்தொகை உண்டு' என்று அவர் கூறியிருந்ததால், பட்டயப் படிப்பில் சேர்வதற்கு எளிதாக வீட்டில் அனுமதி கிடைத்தது. நேர்முகத் தேர்வுக்குச் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியில் துறையின் அலுவலகத்துக்குச் சென்றேன். நேர்முகத் தேர்வுக் குழுவின் தலவைராக இருந்த தொல்லியல்துறை இயக்குநர் திரு. இரா. நாகசாமி என்னுடைய முதுநிறைஞர் பட்டப் படிப்பிற்கான ஆய்வேட்டைப் பார்த்து நன்றாகச் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டினார். திரு. மஜீது மூலமாக என் கல்வெட்டாய்வு ஆர்வத்தை இயக்குநருக்கு அவர் சொல்லியிருந்ததாலும் ஆய்வேட்டில் புதிய கல்வெட்டுகளைப் பாடங்களுடன் பதிவு செய்திருந்தமையைப் பார்த்ததாலும் இயக்குநர் என்னைத் தேர்வு செய்தார். நான் விரும்பிய பாடத்தைப் படிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து அதற்குக் காரணமான அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறினேன். செய்தி இதழில் அறிவிப்பு வந்தமையை அவர் கூறாதிருந்திருந்தால் அந்த ஆண்டு கல்வெட்டு, தொல்லியல் பட்டயப் படிப்பை நான் படிக்கமுடியாமல் போய்ிருக்கும். பட்டயக் கல்வி மதுரையில் இருந்த தொல்லியல் ஆய்வுத்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்டமையால் மதுரைக்குச் சென்று ஓராண்டு அங்குத் தங்கிப் படிக்கவேண்டியிருந்தது ஆய்வு மையச் சூழலைப் பிரிந்து செல்வது மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் நாமும் அவருடன் சென்று மேலும் பல செய்திகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழக்கிறோமே என்று வருந்தினேன். ஆனால், அவர், 'அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது. ஞாயிற்றுக்கிழமைகளில்தானே கோயில் ஆய்வுக்குச் செல்கிறோம். அதுவும் திங்களுக்கு இருமுறைதானே! அந்த இருமுறையும் நீ திருச்சிராப்பள்ளிக்கு வந்து எங்களுடன் ஆய்வில் பங்கேற்கலாம்' என்று கூறியதுடன், 'துறை சார்ந்த அறிஞர்களிடம் கற்கப் போகிறாய். என்னைவிடக் களஆய்வுகளில் அவர்கள் அனுபவம் உடையவர்கள். கல்வெட்டுப் படிப்பது அவர்கள் தொழில். அதனால், நீ நிறையக் கற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நன்கு உழைத்து நிறையக் கற்றுக்கொள்' என்று அறிவுறுத்தினார். அதைக் கேட்ட பிறகே என் மனம் அமைதியானது. மதுரையில் எனக்கு யாரையும் தெரியாது. அதனால், அவரே முயன்று உறவினர் ஒருவர் மூலமாக மகளிர் விடுதியொன்றில் தங்க ஏற்பாடு செய்துதந்தார். அந்த உறவினர் வழி எனக்கு அனைத்துப் பாதுகாப்பும் கிடைத்தது. முதுநிறைஞர் பட்டப்படிப்பின்போது மாணவிகள் தங்கும் விடுதியில்தான் தங்கியிருந்தேன். ஆனால், உடன் வளர்மதியும் இருந்தார். அதனால் வீட்டைப் பிரிந்திருந்தது துன்பமாக இல்லை. மதுரையில், பணியிலிருக்கும் பெண்கள் தங்கும் விடுதியில் தங்க நேர்ந்தமை தொடக்கத்தில் சிறிது துன்பமாகத்தான் இருந்தது. அங்கும் மாணவிகள் பலர் தங்கியிருந்ததால் போகப் போக எல்லாம் சரியானது. நான் மதுரைக்குப் புறப்பட்ட நாளன்று 'நீ படிக்கப்போவது கல்லூரி அன்று. அரசு நிறுவனம். அதனால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும்' என்று தொடங்கி நிறையப் பேசினார். என் மீது அவருக்கு இருந்த அக்கறையும் உலகியலில் அவருக்கிருந்த அனுபவமும் அன்றைய பேச்சாக மலர்ந்தன. அந்தப் பேச்சை என்னால் மறக்கவே முடியாது. ஒரு தந்தைக்குள்ள அக்கறையும் ஓர் ஆசிரியருக்குள்ள பொறுப்புணர்ச்சியும் ஒரு தோழருக்குள்ள நேயமும் அந்த உரையில் மிளிர்ந்தன. இவரிடம் பயிற்சி பெற என்ன தவம் செய்தோம் என்று என்னுள் பெரிதும் நெகிழ்ந்தேன். அன்று இரவு முழுவதும் அவருடைய அறிவுரைகள், வழிகாட்டல்கள் இவையே சிந்தையில் வலம் வந்தன. 'நம்மை நோக்கிப் பல கண்கள் இருக்கும். அதனால், ஆய்வு செய்யுமிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கல்வெட்டுப் படிக்கும் இடத்திற்குப் பல தரப்பட்ட மக்கள் வருவார்கள். யாருடனும் தேவையின்றிப் பேசவேண்டாம். வேலையில் கவனமாக இரு. அதே சமயம் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று அவ்வப்போது கவனித்துக் கொள். கல்வெட்டுப் படிக்கும் ஆர்வத்தில் சுற்றிலும் நடப்பதைப் பார்க்கத் தவறிவிடாதே. படிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாதுகாப்பு. கவனமின்மை ஆபத்தில் கொண்டுவிட்டுவிடும். எச்சரிக்கையோடு இரு. அதற்காக அச்சம் கொள் என்று அர்த்தமல்ல. வள்ளுவர் கூட அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று கூறியிருக்கிறார்' என்று அவர் கூறியதை நெஞ்சில் ஆழமாக நிலைநிறுத்தினேன். அந்த வழிகாட்டல் என்னைப் பல துன்பங்களிலிருந்து காப்பாற்றியது. மதுரைக்குச் சென்ற பத்து நாட்களிலேயே, 'அமெரிக்காவிலிருந்து இரண்டு மாணவிகள் பல்லவர் காலக் கட்டடக்கலையைப் பற்றி ஆய்வு செய்ய மாமல்லபுரத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கட்டடக்கலை பற்றி விளக்க நான் மாமல்லபுரம் செல்கிறேன், உன்னால் வரமுடியுமா?' என்று கேட்டார். கரும்பு தின்னக் கூலியா என்று உடனே கிளம்பிவிட்டேன். 'கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராஜா' பாடல் காட்சியில்தான் மாமல்லபுரம் குடைவரைகளை, ஒருகல்தளிகளை, சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நேரில் பார்க்கப்போகிறோம் என்ற ஆவல் என்னை நிறைத்திருந்தது. மாமல்லபுரத்தில் பகீரதன் தவம் என்றும் அருச்சுனர் தவம் என்றும் இருவிதமாகக் கூறப்படும் சிற்பத் தொகுதியையும் சில குடைவரைகளையும் பார்த்துவிட்டு, ஐந்து ரதங்களைப் பார்க்க வந்தோம். வரும் வழியில் அவ்வப்போது சில கேள்விகளை அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் கூறினார். அவற்றை எல்லாம் கேட்டபோது கட்டடக்கலை தொடர்பாகவும் ஆய்வு செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் விதையாக விழுந்தது. ஐந்து ரதங்களைப் பார்வையிட்டோம். அவர் ஒருகல்தளிகள் பற்றி விளக்கினார். 'இது கட்டடக்கலை வளர்ச்சியின் இரண்டாம்நிலை. நாம் முன்பு பார்த்த குடைவரைகள் கட்டடக்கலை வளர்ச்சியின் முதல் நிலை' என்று கூறியதோடு, 'இந்தக் கட்டமைப்புகளை உருவாக்கியவர்கள் யார் என்பது தொடர்பாகப் பல கருத்துக்கள் இருக்கின்றன. கூ. ரா. சீனிவாசன் போன்ற அறிஞர்கள் பலர் முதலாம் நரசிம்மரும் முதலாம் பரமேசுவரரும்தான் இவற்றைச் செய்தனர் என்று கூற, அறிஞர் இரா. நாகசாமி அந்தப் பெருமையை இராஜசிம்மனுக்கு வழங்கியுள்ளார். இவர்களில் யார் இவற்றை உருவாக்கியவர் என்பதை எந்த அறிஞர் ஆராய்ந்து நமக்குச் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை' என்று வேடிக்கையாகக் கூறினார். அன்று எனக்குத் தெரியாது, கட்டுமானம், சிற்பம், கல்வெட்டு இவற்றின் துணையோடு இந்தக் கட்டடமைப்புகளை நுட்பமாக ஆராய்ந்து, இவற்றை உருவாக்கியவரை பல களஆய்வுகள் செய்து நாங்கள்தான் நிரூபிக்கப்போகிறோம் என்று. எறும்பியூர்க் கோயில் ஆய்வின்போதே கட்டக்கலை பற்றிய அடிப்படைச் செய்திகளை அவர் வழி அறிந்திருந்தபோதும், பழுவூர்க் கோயில்கள் ஆய்வின்போதுதான் கட்டட உறுப்புகளை அடையாளம் காணவும் கால வரிசைப்படுத்தவும் ஓரளவிற்குத் தெரிந்துகொண்டேன். மாமல்லபுரம் பயணம்தான் பல்லவர்களைப் பற்றிய பார்வைக்கு அடிகோலியது. அந்தப் பயணத்தின்போதுதான் பல்லவர் வரலாறு, செப்பேடுகள், பல்லவர் கட்டுமானப் பணிகள் இவை பற்றியெல்லாம் அவர் பலவும் சொல்லிவந்தார். எவ்வளவு நூல்கள் படித்திருந்தால் இந்த அளவிற்குச் செய்திக் களஞ்சியமாக அவர் விளங்கமுடியும் என்று நான் பலமுறை வியந்திருக்கிறேன். அவர் அளவிற்குப் படிக்கவேண்டும் என்று எண்ணி முயன்றபோதும் இந்த நாள்வரை என்னால் அந்த உயரத்தின் தொடக்கத்தைக்கூட தொடமுடியவில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் அவர் நாளும் படிப்பவர். பல துறைகளிலும் படிப்பவர். அடுத்து நான் மதுரைக்குச் சென்றபோது என்னுடைய சக மாணவர்களுடன் மாமல்லபுரத்தில் நான் கண்டது, உணர்ந்தது அனைத்தையும் விரிவாகக் கூறி மகிழ்ந்தேன். மதுரையில் நான் படித்த ஓராண்டு காலத்தில் மதுரையைச் சுற்றிலும் அமைந்துள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ள பல குகைத்தளங்களை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாங்கள் முதலில் பார்த்தது திருப்பரங்குன்றம் குகைத்தளம்தான். ஆய்வுக்களத்திற்குச் செல்வதற்கு முன் எங்கள் ஆசிரியர் திரு. சு. இராஜகோபால் தமிழ் பிராமி எழுத்துக்களை எங்களுக்குக் கற்றுத்தந்திருந்தார். அதனால், அந்தக் கல்வெட்டுகளைப் படிப்பது சற்று எளிதாக இருந்தது. 'அந்துவன் கொடுபிதவன்' கல்வெட்டைத்தான் முதலில் படித்தேன். அடுத்து யானைமலை, மாங்குளம், கொங்கர்புளியங்குளம், அழகர்மலை, திருவாதவூர், கருங்காலக்குடி, விக்கிரமங்கலம் எனப் பல ஊர்களுக்கும் சென்று தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் படித்திருக்கிறோம். அவ்வாறு களஆய்வுகளுக்குச் செல்லும் போதெல்லாம் புதிய கல்வெட்டுகள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்ப்பேன். நான் அவ்வாறு முயற்சி செய்தமைக்கும் அவர்தான் காரணர். அவருடைய தூண்டலும் பாராட்டலுமே எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கு ஏதாவது புதிதாகக் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்கு எங்களைப் பழக்கிவிட்டன. திரு. ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமி கல்வெட்டுகளை மீளாய்வு செய்துகொண்டிருந்தபோது திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டை ஆய்வுசெய்ய வந்திருந்தார். 'இங்கு, 'சிரா' என்ற சொல் தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டிருப்பதாகக் கல்வெட்டுத் தொகுதியில் குறிப்பு இருக்கிறது. அதை ஆய்வு செய்யவேண்டும்' என்று திரு. மகாதேவன் சொன்னவுடன், அவர்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்துதந்தார். அவருக்கு அன்று முக்கியமான வேலை இருந்ததால் அவரால் வரமுடியவில்லை. திரு. மகாதேவன் குழுவில் நான் இடம்பெறும் வாய்ப்புக் கிடைத்தது. கல்வெட்டு வெட்டப்பட்டிருந்த பகுதி மிகவும் உயரத்தில் இருந்தது. கல்வெட்டு உள்ள பகுதியை அடையச் செல்லும் வழி மிகவும் குறுகலானது. அங்குத் தவழ்ந்துதான் செல்லவேண்டும். அனைவரும் தவழ்ந்து சென்று குறிப்பிட்ட அந்தப் பகுதியை அடைந்தோம். எங்கள் குழுவில் இருந்த அனைவரும் அந்தக் கல்வெட்டைத் தேடினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியாகத் தேடினோம். யாருக்கும் அந்தக் கல்வெட்டுக் கிடைக்கவில்லை. ஒரு வேளை, கல்வெட்டுத் தொகுதியில் இடம் தவறாகக் குறிக்கப்பட்டிருக்குமோ வேறு எங்காவது அந்தக் கல்வெட்டு இருக்குமோ என்று எண்ணிய நான் தேட ஆரம்பித்தேன். 'கட்டுணை' என்ற சொல் பல இடங்களில் தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. வேறு சில இரண்டு, மூன்று எழுத்துச் சொற்கள் ஆங்காங்கே இருந்தன. எல்லோரும் அந்தச் சொற்களை ஆய்வு செய்வதில் ஈடுபட்டனர். என்னுடைய தேடல் தொடர்ந்தது. இந்தக் கல்வெட்டு இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது புதியது கிடைக்கிறதா பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தேடியபோதுதான், நாங்கள் சென்ற வழியின் நடுப்பகுதியில் ஒரு சிறிய பாறை இருந்ததைப் பார்த்தேன். அங்குச் சென்று அந்தப் பாறை முழுவதும் தேடியபோது அதுவரை படியெடுக்கப்படாத, 'அகரம் குசலன்' என்ற புதிய கல்வெட்டைக் கண்டறிந்தேன். என் கண்டுபிடிப்பைத் திரு. ஐராவதம் மகாதேவனிடம் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ந்து பாராட்டினார். அவருடைய மகிழ்விற்கு இரண்டு காரணங்கள். ஒன்று களஆய்வில் புதிதாக ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது என்பது. மற்றொன்று, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்ப் பகுதிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டு அதுவரை கண்டறியப்படாததால் இந்தப் பகுதி வாழ் மக்கள் வட்டெழுத்தைப் பயன்படுத்தவில்லை என்றிருந்த அறிஞர்தம் கருத்தை மாற்றியமைக்கும்படி 'அகரம் குசலன்' வட்டெழுத்தில் இருந்தமை. எங்கள் ஆய்வு முடிந்து அவரைச் சந்தித்தபோது 'உங்கள் மாணவி புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்' என்று அவரிடம் கூறி மகிழ்ந்தார். நான் திரு. ஐராவதம் மகாதேவன் குழுவில் இடம்பெற்றுக் களஆய்விற்குச் சென்றதற்கே அவர்தான் காரணம். திரு. ஐராவதம் மகாதேவனுடன் பழகுவதற்கும் அவருடைய அனுபவங்களை, அணுகுமுறையை அறிவதற்கும் வழிகாட்டலைப் பெறுவதற்கும் அந்த வாய்ப்பு உதவியது. ஒரு புதிய கண்டுபிடிப்பை அந்த அறிஞர் எப்படியெல்லாம் மகிழ்ந்து பாராட்டினார் என்பதை இப்போது நினைத்தாலும் பெருமிதமாக இருக்கிறது. திரு.மகாதேவனின் பாராட்டும் மகிழ்வும் எனக்கு அவரைத்தான் நினைவூட்டின. இந்த விஷயத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. 'அகரம் குசலன்' கண்டுபிடிப்பைப் பற்றிய திரு. மகாதேவனுடைய கட்டுரை வரலாறு இதழில் வெளியானபோது எங்களுக்கு வந்த கடிதங்களுள் பல என் முயற்சியைப் பாராட்டி வாழ்த்தியிருந்தன. திரு.மகாதேவன் 2003ல் வெளியிட்ட தம்முடைய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய பெருநூலில் அகரம் குசலன் கல்வெட்டைக் கண்டுபிடித்தவராக என் பெயரைக் குறிப்பிட்டிருந்தமையை இப்போது நினைத்தாலும் உள்ளம் நெகிழ்கிறது. மிகச் சிறு உதவியைக் கூட மிகப் பெரிதாக நினைப்பார்கள் பெரியவர்கள் என்ற வள்ளுவரின் குறளைத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அந்த விஷயத்திலும் அவரும் ஐராவதம் மகாதேவனும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. (வளரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |